வெந்து தணிந்த இதயம்-16(1)

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்-16(1)

 

“ஆமா உன் குடும்பம் பத்தி நீ எங்களுக்கு சொல்லியே ஆகனும். நீ கோவில்ல வீடியோ போட்டு காமிச்ச விசயம் எல்லாம் முன்னாடியே நடந்துருக்குன்னா ஏன் நீ எங்கக்கிட்ட முன்னாடியே சொல்லல? எதுக்காக எங்க குடும்பத்தை அத்தனை பேர் முன்னாடியும் தலை குனிய வச்ச? நான் கூட உன்னை நல்லப்பொண்ணுனு நினைச்சேன் யாழினி. உன்கூட என் பொண்ணுங்களையும் பழகவிட்டேன். ஆனா‌ நீ‌ என் கணிப்பு தப்புன்னு நிரூபிச்சிட்ட.” என்று பொன்னி ஆதங்கமாய் சொல்ல,

 

சாவித்ரியோ, “இதுல தெய்வானை என்ன தப்பு பண்ணினானு சொல்லு யாழினி? சின்ன வயசுல இருந்தே நாங்க தான் பத்ரியை அவ மனசுக்குள்ள கொண்டு வந்து உட்கார வச்சோம். அவளும் அவன் தான் தனக்குனு பல கனவுகளோட திரிஞ்சா. நீ நடந்ததை முன்னாடியே சொல்லியிருந்தா அந்தப் பொண்ணை நாங்க மணவறை வரை ஏத்தி அவமானப்பட விட்டிருக்க மாட்டோம் இல்ல? பொண்ணுக்கு பொண்ணே எதிரினு நீ நிரூபிச்சிட்ட.” என்று குற்றம் சாட்டினார்.

 

ஆனால், யாழினி விரக்தியாக சிரித்தாள்.

 

“நீங்கல்லாம் என்னை இப்படி நிற்க வச்சி கேள்வி கேட்கறது எனக்கு சந்தோசம் தான். ஆனா நான் முன்னாடியே உங்கக்கிட்ட சொல்லியிருந்தா உங்கப்புள்ளையோட எனக்கு கல்யாணம் நடந்திருக்குமா சொல்லுங்க? உங்க வீட்டுக்காரர் அதை செய்ய விட்டிருப்பாரா?” என்றதும் பார்வதியும், சாவித்ரியும் தலை குனிந்தார்கள்.

 

“அதான் நான் எங்க வச்சி உண்மையை சொன்னா எனக்கு நியாயம் கிடைக்குமோ அங்க வச்சி சொன்னேன்” என்றதும் பொன்னிக்கும் அவளின் பதில் சரியென்று பட்டது.

 

மேலும், யாழினி உணர்ச்சிப்பெருக்கில் கொந்தளித்தாள்.

 

“தெய்வானை உங்க பேத்தின்ன உடனே அவ இடத்துல நான் வந்தது உங்களுக்கு தப்பா தெரியுதே, ஆனா இப்படியொரு நிலைமையை உருவாக்கினது யாரு? உங்கப் புள்ள பத்ரி. உங்கத் தம்பி பத்ரி. ஆனா அவரை யாரும் வெறுக்கலை இங்க. அவரை‌ யாரும் இப்படி சுத்தி‌ நின்னு கேள்வி கேட்கலை. ஏன்னா அவர் ஆம்பள. அவர் என்ன செஞ்சாலும் சரி. இதே உங்க பேத்தி தெய்வானை மேல ஒருத்தன் இந்த மாதிரியெல்லாம் கை வச்சிட்டு, வேற ஒருத்தி கழுத்துல தாலி கட்டப்போனா சும்மா விட்டுடுவீங்களா நீங்க? வெட்டிப் போட்டுட மாட்டீங்க? ஆனா, நான் போலீஸ் ஸ்டேசன் எதுக்கும் போகாம அவரை மன்னிச்சி கல்யாணம் மட்டும் தான் பண்ணியிருக்கேன். நீங்கல்லாம அதுக்கு சந்தோசப்படனும். அதை விட்டுட்டு என்னை வில்லி மாதிரி நிற்க வச்சி கேள்வி கேட்கறீங்க” என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினாள்.

 

ஜெயந்தியோ‌ விடாமல், “எல்லாம் சரிதான்னே வச்சிக்குவோம். உன் அம்மா கதை என்ன ஆச்சின்னு சொல்லு?” என்று கேட்டதும்,

 

“அது வந்து.. அது வந்து…” எனத் திணறியவள், “என் அம்மாவுக்கு உடம்பு இப்ப பரவாயில்ல. ஆனா அவங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாததனால இங்க வரல. சீக்கிரமே அவங்க என்னை ஏத்துக்குவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றதும்,

 

ஜெயந்தி நம்பாமல், “இது உண்மைங்கிறதுக்கு என்ன ஆதாரம்?” என்றார்.

 

சரியாக அங்கே வந்த ரத்னவேல் பாண்டியன், “இங்க என்ன மீட்டிங் நடக்குது? எல்லாரும் அவங்கவங்க ரூமுக்கு போங்க. பார்வதி நீ என் ரூமுக்கு வா” என்று கோபமாக கத்திவிட்டுப் போனார்.

 

உடனே அனைவரும் அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.

 

தன்னறைக்கு வந்த தன் இளைய மனைவியிடம் தாம் தூமென குதித்தார் ரத்னவேல் பாண்டியன்.

 

“என்ன நினைச்சிட்டு இருக்கான் உன் புள்ள? உனக்காக பாவம் பார்த்து, பாவம் பார்த்து அவன் இப்ப என் தலைக்கு மேல ஏறி உட்கார்ந்துட்டான். அவன் ரூம்ல தான் அந்த வீடியோ ரெகார்ட் ஆகியிருக்கு. அவன் அதை பார்த்ததும் என்ன செஞ்சிருக்கனும்? யாருக்கும் தெரியாம டெலீட் பண்ணியிருக்கனும். அப்படி செஞ்சானா? அது வெளியானா நம்ம அண்ணனோட மானம் தான் போகும்னு கவலைப்பட்டானா?” என்றதும், கடைசி வார்த்தைகளை பிடித்துக்கொண்டார் பார்வதி.

 

“அண்ணனா? யாருக்கு யாருங்க அண்ணன்? அந்த பத்ரி என்னைக்காவது சஷ்டியை தன் தம்பியா நினைச்சிருக்கானா? எதுக்கெடுத்தாலும் போட்டி. இதுக்கெல்லாம் காரணம் நீங்க தாங்க. ஆண்வாரிசு வேணும்னு ஆசை ஆசையா என்னை கல்யாணம் பண்ணிட்டு வந்து, அந்த பத்ரி பிறந்ததும் என்னையும் என் புள்ளையையும் கைக்கழுவிட்டீங்க. போதாக்குறைக்கு ஜாதகம் அதுஇதுனு சொல்லி என்னை இன்னொரு புள்ளை பெத்துக்க விடாம பண்ணிட்டீங்க. உங்களுக்கு ராத்திரி கட்டிலுக்கு நான் வேணும். கரிச்சிக்கொட்ட என் புள்ள வேணும். ஆனா ஊர்ல முதல் மரியாதையெல்லாம் உங்க முதல் பொண்டாட்டிக்கும், உங்க முதல் புள்ளைக்கும் தான். என்னங்க நியாயம் இது? அதை‌ விடுங்க. என் புள்ளைக்கு நீங்க இதுவரை என்ன செஞ்சிருக்கீங்க சொல்லுங்க? அவன் இத்தனை வருசத்துல விரும்பி ஆசைப்பட்டது ஒன்னே ஒன்னு தான். அது அந்த தெய்வானையைத் தான். நான் அதை உங்கக்கிட்ட சொன்னேனா இல்லையா? அப்பவும் முதல் உரிமை பத்ரிக்கு தான். நீங்க பத்ரியை எலெக்சன்ல நிக்க வச்சி எம்.எல்.ஏ, எம்.பி எதுவேணா ஆக்கிக்கோங்க. ஆனா எனக்கு என் புள்ள சந்தோசம் தான் முக்கியம். இப்ப நீங்க அவனை ஏதாவது சொன்னீங்கன்னு தெரிஞ்சது என்னை உயிரோடயே பார்க்க மாட்டீங்க சொல்லிட்டேன் ஆமா.” என்றவர் ஆவேசமாக மூச்சு வாங்க, மிரண்டுவிட்டார் ரத்னவேல் பாண்டியன்.

 

எப்போதும் தலையணை மந்திரம் போட்டு தன்னை சேவகம் செய்யவைக்கும் மனைவி தற்போது தற்கொலை முடிவை கையிலெடுத்திருப்பது அவருக்கு திகிலைத் தந்தது. அயர்ந்து தலையில் கை வைத்தார்.

 

“அந்த ராமாயணக் கதையை கேட்டாவது நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணாம இருந்தேனா? விதி! அந்த தசரதன் கைகேயிக்கு வரத்தை கொடுத்து அவதிப்பட்ட மாதிரி உனக்கு புள்ளை வரத்தைக் கொடுத்து நான் அவதிப்படுறேன்.” என்று நொந்துகொண்டே வெளியேறினார்.

 

தொடரும்…

 

நெக்ஸ்ட் ஒரு மஜாவான பதிவை வாசிக்கறதுக்கு முன்னால லைக், லாகின், கமெண்ட் அன்ட் உங்க ப்ரெண்ட்ஸுக்கு ஸ்டோரி லின்க் ஷேர் பண்ணிட்டு போங்க தங்கோம்ஸ்:) 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,868 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page