அத்தியாயம்- 5

பாகம் – 5. கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சு.

அம்மாடி தங்கச்சி என் பொண்டாட்டி பயந்து கொண்டே இருந்தா.. யாருமே தெரியாதவர்கள் இல்லாமல் எப்படி காட்டுவது என்று.. இனி இந்த ஹாஸ்பிடலில் தான் காட்ட வேண்டும் ..நீ இருக்கிறாய் என்கிற தைரியத்தில் .”

எந்த நேரத்தில் அவன் சொன்னானோ அவள் பிரசவம் வரையுமே புவனா தான் துணையாக இருக்கிறாள்..

மித்ராவுக்கு அவள் கேட்காமலேயே நிறைய செய்து கொடுக்கிறான்.. அவளுக்கு அது ஒரு பழக்கம். ஏதாவது பொருளை எடுத்தால் கை தவறி கீழே போட்டு உடைத்து விடுவது ..அதே மாதிரியே போனை இரண்டு முறை உடைக்கவும் பிரசவ நேரத்தில் புதிதாக ஒரு ஃபோன் வாங்கி கொடுக்கிறான்.. யாரிடம் பேசுகிறாளோ இல்லையோ தினமும் புவனாவிடம் மணிக்கணக்கில் பேசுவாள்..அவளுமே உணவு முறையிலிருந்து பழக்க வழக்கம் வரை நிறைய டிப்ஸ்கள் கொடுக்கிறாள்..

சில சமயங்களில் அரவிந்ந் மனைவியை கடிந்து கொள்கிறான்..” வயிற்றில் பிள்ளையை வைத்துக் கொண்டு மணிக் கணக்கில் போன் பேசாதே.. குழந்தை வெளியே வரட்டும் ..அதன் பிறகு உன் இஷ்டத்திற்கு இருக்கலாம்.. “

“குழந்தை பிறந்து விட்டால் அப்படி எல்லாம் இருக்க முடியாதுங்க .வெளியே வந்தால் அவனை தான் கவனிக்க வேண்டும் .அதனால் தான் ஆசை தீர இப்பொழுது எல்லாவற்றையும் அனுபவித்துக் கொள்கிறேன் .. “

“வேணும்னா பாரேன்..  பிறந்ததுமே உன்னுடைய பிள்ளையும் போனை கையில் வைத்துக் கொண்டு பார்க்கப் போகிறான் .. “

“சொல்ல முடியாதுங்க இந்த காலத்து புள்ளைங்க எல்லாம் அப்படித்தானே இருக்கு .. “என்கிறாள்..

புவனாவிடம் இப்படி பேசுவதை அரவிந்தால் எதுவும் செய்யத்தான் முடியவில்லை.. அவளை பகைத்துக் கொள்ளவும் முடியாது ..ஹாஸ்பிடலில் அவள் இருப்பதால்தான் நிறைய உதவிகள் கிடைக்கிறது.. போன நேரத்திற்கு டாக்டரிடம் காட்டும் படியான டோக்கன் வரிசையை ஏற்படுத்தி வைத்திருந்தாள்.. பிரசவம் ஆகும் வரையும் அவள் துணைக்கு நிற்பாள் என்று வேறு வழியில்லாமல் அவளை பொறுத்துக் கொள்கிறான்..

இவன் என்ன சொன்னாலும் இருவருமே பிரிவது போல் இல்லை..   கூடப்பிறந்த சகோதரிகள் மாதிரிதான் இருவரும் பழகுகிறார்கள்.. இவளும் வாரம் ஒரு முறை புவனாவை கூப்பிட்டு வைத்து விருந்து கொடுக்கிறாள்..

இதெல்லாம் பார்க்க அவனுக்கு கோபம் தான் வருகிறது.. ஜாடை மாடையாக சொல்லி பார்க்கிறான் .. “அவள் நமக்கு எந்த உதவியும் செய்யவில்லை..அதை முதலில் புரிந்து கொள் .. என்னவோ புவரை அந்த ஹாஸ்பிடலில் இருப்பதால்தான் நீ நலமாக இருப்பதாக எண்ணிக் கொள்ளாதே..அங்கு அவள் இல்லை என்றாலும் நான் அங்கேயே தான் உனக்கு டிரீட்மெண்ட் எடுத்து இருப்பேன் .. என்னமோ உனக்காக  உயிரை கொடுப்பது போல நீ இப்படி செய்கிறாய்.. “

அதற்கு மித்ராவும் எதிர்த்து பதிலடி கொடுக்கிறாள்.. ” எனக்கு புவனா இதெல்லாம் செய்யவில்லை என்றாலும் நான் இப்படித்தான் செய்வேன்.. ஏனென்றால் நாங்கள் சின்ன வயதிலிருந்து எப்படி பழகி வருகிறோம் என்று உங்களுக்கு தெரியாது தானே.. அதனால் தான் இப்படி சொல்கிறீர்கள்.. “

” நாங்கள் இரண்டு பேரும் ஒரே தட்டில் சாதம் போட்டு சாப்பிடுவோம் தெரியுமா..அவளுடைய உடையை நான் அணிந்து கொள்வேன்.. அதே மாதிரி தான் அவளும் ..என்னுடையதை எடுத்துக் கொள்வாள்.. என் வீட்டிலும் அவள் வீட்டிலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.. எதற்காக இதை எல்லாம் சொல்கிறேன் என்றால் நாங்கள் பழகிய  பழக்கம் உங்களுக்கு புரிய வேண்டும் என்றுதான்.. “

“அப்படியா தினமும் இதே மாதிரி கூப்பிட்டு வைத்து விருந்து படைத்துக் கொண்டிருடி..இனிமேல் நான் உங்கள் இரண்டு பேரை பற்றியும் எதுவும் பேச மாட்டேன்..”

“நீங்கள் இப்படி பேசியது தெரிந்தாலே அவளும் அதற்கு மேல் இங்கே வர மாட்டாங்க..அவள் சரியான ரோசக்காரி..  வேலையை விட்டு கூட நின்று விடுவாள் தெரியுமா .. “

“என்னடி இப்படி எல்லாம் மிரட்டுகிறாய்..ஐயையோ எனக்கு ஏன்பா இந்த பாவம் ..நான் எதுவும் பேசவில்லை. நீதான் அளவுக்கு மீறி நடந்து கொள்கிறாய்..இல்லா விட்டால் ஏன் இப்படி எல்லாம் பேச போகிறேன்.. இனிமேல் உனக்கு குழந்தை பிறக்கும் வரை நான் புவனாவைப் பற்றி எதுவுமே பேச மாட்டேன் போதுமா..” என்று கோபமாக வெளியேறுகிறான்..

போகும் போது , “ஏன் தான் புவனாவை சந்தித்தோமா என்று இருக்கிறது.. என்னமோ எனக்கு மனதிற்கு சரி என்றே படவில்லை .. மனைவியிடம் காதில் விழும் படியே சத்தமாய் புலம்பிய படி செல்கிறான்..

‘என்னமோ தெரியல புவனாவைப் பார்த்தாலே இவருக்கு ஆகாத மருமகள் கைப்பட்டால் குற்றம் ..கால் பட்டால் குற்றம் என்ற கதையாகி விட்டது.. புவனா அப்படி என்னதான் செய்தாளோ..இவர் என்னவாவது செய்து விட்டு போகட்டும் .. நான் என் முடிவில் இருந்து பின் வாங்க மாட்டேன்.. நான் இவ்வளவு காலமாக அவளை விட்டு பிரிந்து இருந்ததே பெரிது .. இனிமேல் தான் நாங்கள் சாகும் வரை நட்போடு இருக்கப் போகிறோம்.. எப்படியும் என் புருஷன் பிரச்சனை தான் செய்யப் போகிறார்.. அதை சமாளித்து தான் ஆக வேண்டும்.., என்று தனக்குள் சிரித்துக் கொள்கிறாள்…

புவனாவை பார்க்கும் நேரம் மட்டும்தான் அவனுக்கு கொஞ்சம் கோபம் வருகிறது.. மற்றபடி தன் குடும்பத்தோடு சந்தோஷமாய் தான் இருக்கிறான்.. இதில் கயலும் அவனும் பேச ஆரம்பித்தால் தான் கலகலப்பான சண்டையில் நேரம் ஓடுவதே தெரியாமல் ஓடுகிறது.. இருவரும் பேச ஆரம்பித்ததுமே எங்கே இருந்தாலும் மித்ரா ஓடிவந்து அவர்களது மீட்டிங்கில் கலந்து கொள்கிறாள்..

அவளுக்கு அம்மாவும் பிள்ளையும் எலியும் பூனையுமாய் அதே சமயம் ஜாலியாகவும் சண்டை போட்டுக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.. அதற்குமே கயல் மகனிடம் வம்பு செய்கிறார்..

“டேய் உன்னுடைய மனைவி நானும் நீயும் என்ன பேசுகிறோம் என்று ஒட்டு கேட்பதற்கு எப்படி  வேகமாய் ஓடி வர்றா பாருடா..இது ஒரு பிழைப்பாடா..”

கொஞ்சமா பயப்படாமல் அவள் காதல் விடுமாறு தான் பேசுவார் .. மித்ராவும் அவர் பேசுவதை பற்றி கவலைப்படாமல் பதில் கூறுவாள்..

“அத்தை நீங்கள் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்வது எனக்கு சிரிப்பாக இருக்கிறது .. “

“. ஏதே நாங்க  சண்டை போட்டுக் கொள்வது உனக்கு சிரிப்பா இருக்கா.. அப்படின்னா நீதான் இவனுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாயா .. “அவர் எதைப் பேசினாலுமே மித்ராவுக்கு கோபம் வரவில்லை..

அவரும் வேண்டுமென்றே தான் விளையாட்டுத் தனமாய் பேசுகிறார் ..தன் மாமியார் இப்படித்தான் என்று புரிந்து கொண்டதால் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது..

“ஆமாம் அம்மா நல்லவேளை இவள் உன்னை பற்றியும் என்னைப் பற்றியும் நன்கு புரிந்து இருப்பதால்தான் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது. இல்லா விட்டால் நடுவில் இவளும் நின்று கத்திக் கொண்டிருப்பாள்..

கயலுக்கு மருமகள் எல்லாவற்றிலும் விட்டுக் கொடுத்துப் போவதே ஒரு சந்தேகம் தான்.. அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் கேட்டும் விடுகிறார் …

“ஏம்மா நான் இப்படி உன்னை சொல்கிறேனே.. உனக்கு கோபமே வரவில்லையா..”

“இல்லங்க அத்தை நானும் என் கடைக்குட்டி தங்கை மோனியும் இப்படித்தான் சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் இரண்டு பேருமே எதற்காகவும் விட்டுக் கொடுத்துக் கொள்ள மாட்டோம்..அது எப்படி என்றால் மண்டையை உடைத்துக் கொண்டாலும் நாங்களே ஒருவருக்கொருவர் உடைத்துக் கொள்வோம் ..வேறு யாரும் இடையில் வரக்கூடாது.. “

“என்னடி இது ஊர் உலகத்துல இல்லாத புதுசா இருக்கு என்று கூட என் அம்மா கிண்டல் செய்வார்கள்.. என்னுடைய தங்கை மோனியை நான் ரொம்ப மிஸ் செய்து கொண்டு இருந்தேன் அத்தை.. நீங்க வந்த பிறகுதான் எனக்கு மோனியை பார்ப்பது போலவே இருந்தது.. “

“அப்படியாடி செல்லம் நான் உன் தங்கை மாதிரி அவ்வளவு சின்ன பெண்ணாகவா இருக்கிறேன் .. ” என்று கயல் வெட்கப்படுகிறார்..

” ஐயோ அத்தை நான் அப்படி சொல்லவில்லை. அவளுடைய கேரக்டரும் உங்களுடைய கேரக்டரும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று சொன்னேன். நீங்கள் என்ன இருந்தாலும் பாட்டி பாட்டி தான். ” என்று சொல்லி விட்டு சிரிக்கிறாள்..

“மித்ரா சீக்கிரமாகவே என் பேரனை பெற்றுக் கொடும்மா.. நான் அவனோடு விளையாட வேண்டும் ..இவன் கூட சண்டை போட்டு எனக்கு போர் அடித்து விட்டது.. அதுவும் இல்லாமல் நாங்கள் பேச ஆரம்பித்ததுமே நீயும் ஓடி வந்து விடுகிறாயா ..அதன் பிறகு எங்களுடைய சண்டையில் கண்டினியூ இல்லாமல் போய் விடுகிறது. எதற்கும் நீ கொஞ்ச நாளைக்கு ஒளிந்து இருந்து நாங்கள் சண்டை போடுவதை பாரு .. நீ நோட்டம் விடுவதால் எங்கள் பிரைவசி கெடுகிறது..

“போங்க அத்தை போடுவது சண்டை.. இதில் ரகசியம் என்ன வேண்டிக் கிடக்கிறது..இதெல்லாம் முடியாது.நேரடி ஒளிபரப்பாக பார்த்தால் தான் இது நன்றாக இருக்கும் .. “

கயலும் அரவிந்தனும் அத்தனை ஒற்றுமை என்றாலும் மாறன் தாமரை இலை தண்ணீராக தான் இருக்கிறார்.  மனைவியிடம் கூட அதிகம் பேசாமல் ஒட்டாமல் ,அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று ..ஆனாலும் மித்ராவுக்கு மாமா இல்லா விட்டால் கை ஒடிந்தது போல் ஆகிறது ..

தோட்ட வேலைகள் என்றால் அவருக்கு உயிர். முழு தோட்டத்தினையும் அவர் தான் கவனித்துக் கொள்கிறார்.. ஒவ்வொ ரு செடியிடமும் போய் நின்று பேசிக் கொண்டு ஆசையாய் தடவிக் கொடுத்து அதை வளர்த்து விடுகிறார்..

மித்ராவுக்கு அவர் செய்வதைப் பார்க்க சிரிப்பாக வருகிறது.. ‘இது என்ன மனிதர்களிடம் பேசாமல் உயிர் இல்லா அஃறிணைகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று..  அதை மாறனிடம் கேட்டும் விடுகிறாள்..

“யாரம்மா சொன்னது இதுங்களுக்கெல்லாம் உயிர் இல்லை என்று .. ரோஜாச் செடியை காட்டி  இருக்கிறானே என் செல்லக் குட்டி.. நான் ஒரு நாள் தாமதமாக வந்தாலும்  இவன் உடனே லேசாக வாடத் தொடங்கி விடுவான் ..இவனுக்காகவே தான் நான் காலையிலேயே எழுகிறேன் தெரியுமா.. நீயும் இதே மாதிரி காலையில் வந்து இந்த பூச்செடிகள் செடிகளை ஆசையாய் தொட்டுப் பார்த்து விட்டு போ.. உன்னிடமும் இதுங்க பேசுங்க..” என்கிறார் ..

இது எல்லாமே மித்ராவுக்கு புதிதாக இருக்கிறது.. “மாமா என்னமோ சொல்றீங்க . ஆனா எனக்கு எதுவும் புரியல .. “

“அப்படி என்றால் நான் நாளைக்கு  காலையில உன்னை வந்து சீக்கிரமா எழுப்பி விடுகிறேன்.. நீ வந்து பாரு..”

“சரி மாமா நீங்க சொல்வதற்காக வருகிறேன் .. “

அவளுக்கும் தோட்டம் கவனிப்பதில் கொஞ்சம் ஆர்வம் இருந்ததால் மாமனார் பேச்சை தட்டாமல் வருகிறாள்.. அவர் சொன்னது போலவே சில செடிகளுக்கு தண்ணீர் விட்டு அதை  ஆசையுடன் தடவி விட்டு வரவும் மறுநாள் ஏகப்பட்ட ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன ..

விடியற் காலையில் அரவிந்த்தின் அறைக்கதவை மாறன் ஒருவித பதட்டத்துடன் சந்தோசக் குரலுடன் தட்டுகிறார் ..

கண்ணே விழிக்க முடியாமல் எழுந்தவன் அப்பாவை பார்த்ததும் பதறிப் போகிறான்..

ஏன் என்ன ஆச்சு.?

தொடரும்..

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page