உன்னில் சிறையாகிறேன் – 14

மை தீட்டும் மான்விழியில் எனை இட்டுக் கொண்டவளே …!

மலர் சூடும் கார்கூந்தலில் எனை ஏந்திக் கொண்டவளே…!

உன் கொலுசின் ஓசையிலே என்னுயிரை சிறையிட்டவளே…!

மீளவும் மனமில்லை, 

மீண்டாள் வாழவும் ஆசையில்லை…!

 

உன்னில் சிறையாகிறேன் – 14 

அக்னியின் வீடு வந்து விஷயத்தை அறிந்து கொண்ட திலீபன் போகும் போது சும்மா போகவில்லை. அக்னிக்குத் திருமணம் ஆகிவிட்டது என்ற செய்தியை ஒரு காட்டுத் தீ போலப் பரப்பிவிட்டிருந்தான். 

அதுவும் சாதாரணமாக அல்ல, ‘திருவாசகம் ஐயாவின் ஆசீர்வாதத்துடன்’ என்று சேர்த்துக் கொண்டதால், யாரும் அதை வதந்தி என்று ஒதுக்கவில்லை.

வீட்டின் அலுவலக அறையில் இருந்த அக்னிக்கோ வேலையே ஓடவில்லை; திலீபன் எதையாவது உளறித் தள்ளி விடுவான் என்பது அவனுக்குத் தெரியும்.

“ஏன் அந்த லூசுப் பயலை வீட்டுக்கு வரவழைத்தோம்?” என்று தன்னையே நொந்து கொண்டான். 

சற்றுநேரம் கழித்து, அக்னியின் போன் இடைவிடாது ஒலிக்கத் தொடங்கியது.

அவனது நெருங்கிய நண்பர்கள், தொழில் சார்ந்த ஆட்கள் என ஒவ்வொருவராக அழைத்து வாழ்த்துச் சொல்லத் தொடங்கினர்.

​”வாழ்த்துகள் அக்னி, கல்யாணத்தை இவ்வளவு ரகசியமா முடிப்பீன்னு எதிர்பார்க்கல”

​”என்ன மச்சான் பிசினஸ்ல தான் அதிரடி காட்டுவேன்னு பார்த்தா, கல்யாணத்துலயுமா”

“பேச்சுலர் பார்ட்டி தான் மிஸ் ஆயிடுச்சு, வெட்டிங் பார்ட்டி பெருசா செலிபிரேட் பண்ணனும், ஏற்பாடு என்னோடது மச்சான். மறக்காம தங்கச்சியோட வந்திரு.”

என ​அக்னிக்குத் தலை சுற்றியது, அதுகூட பரவாயில்லை,

வெளிநாட்டிலிருந்து ஒரு பிஸ்னஸ் பட்னர் போன் செய்ய,

“இப்ப என்ன நீயும் என் மேரேஜ்க்கு வாழ்த்து சொல்லனுமான்னு” அக்னி கேட்டு வைக்க,

“என்னது உனக்கு மேரேஜ் ஆகிடுச்சா? எனிவே கங்ராஸூலேஷன் அக்னி, ஹேப்பி மேரேஜ் லைஃப்” என்று வாழ்த்துச் சொல்ல தலையில் அடித்துக் கொண்டான். 

நேரம் ஆக ஆக கோபம் தலைக்கேறி   திலீபன் மீது கொலைவெறியாக மாறியது, அதன் விளைவாக அவனைத் தேடி ஆபீஸூக்குச் சென்றான் அக்னி. 

ஆனால் திலீபன் அக்னிக்குத் தன் விசுவாசத்தை நிரூபிக்க, அக்னியின் வீட்டு வாசலில் இரண்டு பெரிய வாகனங்கள் நிறைய ஆட்களைக் கொண்டு வந்து வீட்டை நிறைத்தன. 

“எல்லாரும் சீக்கிரம், இன்னும் மூணு மணி நேரத்துல இந்த வீடே ஜொலிக்கணும், அக்னி சாரோட வெடிங் ரிசப்ஷன் இன்னைக்கு நைட்டே நடக்கணும்” என்று ஆர்ப்பரித்தான்,

​சத்தம் கேட்டு வெளியே வந்த அருவி அதிர்ந்து போனாள், வாசலில் பெரிய எழுத்துக்களில், 

“அக்னியன் மகிழருவி  இல்லறப் பயணம் இனிதே தொடங்கட்டும்” என்று பேனர் கட்டிக் கொண்டிருந்தார்கள், ​அருவி பதறியபடி திருவாசகத்திடம் ஓடினாள்,

“தாத்தா, வந்து  பாருங்க அந்தத் திலீப் என்னென்னமோ பண்றார்,  உங்க பேரனுக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சா அவ்ளோதான், இன்னைக்கி ருத்ரதாண்டவம் ஆடப்போறார்” என்றாள் அருவி

​திருவாசகம் நிதானமாகச் சிரித்தார், 

“திலீப் எதைச் செஞ்சாலும் என் அனுமதி இல்லாம செய்ய மாட்டான், அருவி. நீதான் அக்னியோட பொண்டாட்டின்னு எல்லாருக்கும் சொல்ல இதுதான் வழி. நீ போய் அழகா ரெடியாகி தயாரா இரு, மத்ததை நான் பார்த்துக்கறேன்.”

மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிய அக்னிக்கு, வீட்டின் நுழைவு வாயிலிலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது: வீடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, 

ஒரு திருமண மண்டபம் போலக் காட்சியளித்தது, போர்டிகோவில் திலீபன் இருப்பதை பார்த்த அக்னி ​ காரிலிருந்து இறங்கிய வேகம், அவன் எவ்வளவு கோபத்தில் இருக்கிறான் என்பதைப் பறைசாற்றியது, நேராகத் திலீபனை நோக்கிச் சென்றான்,

​”திலீப், என்னடா பண்ணி வச்சிருக்க, யாரைக் கேட்டு இந்த மாதிரி கோமாளித்தனம் பண்ணிட்டு இருக்க,  யாரு உனக்கு பர்மிஷன் கொடுத்தது” என்று அவன் சட்டை காலரைப் பிடிக்கப் போனான்,

​ஆனால் அதற்குள் அங்கே ஒரு பெரிய விஐபி கும்பல் வந்துவிட்டது, 

“வாழ்த்துகள் அக்னி” என்று பூங்கொத்துகளை நீட்டினர், அத்தனை பேர் முன்னிலையிலும் கோபப்பட முடியாமல் அக்னி பற்களைக் கடித்தான்,

​”சார் கோபப்படாதீங்க. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சிரிங்க நான் சொல்லல சார் தாத்தா சார் தான் சொன்னார், ஸ்மைல் ப்ளீஸ்” என்று திலீபன் சொல்ல அக்னி பல்லைக் கடித்தான்,

இவன் தான் இப்படி கோபக் கணலோடு இருக்கிறானென்றால் இவனைப் பெற்ற தகப்பன் வாசிதேவன் எரிமலைக் குழம்பென கொதித்துக் கொண்டிருந்தார்,

அவருடைய பிசினஸ் பார்ட்னர் மற்றும் நட்பு வட்டாரம் என விஷயம் அறிந்து தங்களின் வாழ்த்துக்களை பரிசுப் பொருட்களாக எடுத்துக் கொண்டு நேரில் வந்த வண்ணமே இருந்தனர். 

“என்னப்பா மாப்பிள்ளையே நீதான்? நீயே இன்னும் ரெடியாகாம இருந்தா எப்படி? போப்பா சீக்கிரமா போய் டிரஸ் மாத்திட்டு வாப்பா. உனக்கான டிரஸ் எல்லாமே மேல உன் ரூம்ல இருக்கு. மறுக்காம போட்டுட்டு வா,” என்ற தாத்தாவை 

‘பேசாம கொன்று நாமே விடலாமா’ என்னும் ரீதியில் முறைத்தான், அப்போது அங்கு வந்தார் வாசுதேவன்.

“டேய் அக்னி, என்னடா இது? நீ மேரேஜ் பண்ணு, என்னமோ பண்ணிட்டு போ, அதுக்கு நான் தான் கிடைச்சேனா? என்னோட பிஸினஸ் பார்ட்னர்ஸ், க்ளோஸ் பிரண்ட்ஸ்ன்னு எல்லாரும் வந்திருக்காங்க, 

அவங்களை எல்லாம் எதுக்கு இன்வைட் பண்ணின? உன்னால என் பிரஸ்டீஜே போச்சு,” என்று பொரிந்து தள்ளினார். அக்னி தாத்தாவை முறைத்தான்.

“இவ்ளோ தானா இல்ல இன்னும் வேற ஏதாவது பண்ணி வச்சிருக்கீங்களா, கேட்டீங்க இல்ல, என்னால தான் அவரோட பிரஸ்டீஜை போச்சாம், இதுக்கெல்லாம் காரணமே நீங்க தான், உங்களை….” என்று பாய்ந்து வந்தவனை தடுத்து தாத்தா,

“இப்ப பேசவோ சண்டை போடவோ நேரமில்ல அக்னி, இப்பவே எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்திடுவாங்க பங்ஷனும் ஸ்டார்ட் ஆகிடும், 

இப்ப நீ மட்டும் மாப்பிள்ளை மாதிரி ரெடியாகி வரலைன்னா, பங்ஷனுக்கு வந்த எல்லாருகிட்டயும் அக்னிக்கு இந்த பங்ஷன்ல விருப்பம் இல்லன்னு சொல்லி திருப்பி அனுப்பிடுவேன்” என்று மிரட்டினார் திருவாசகம்.

“பொய் சொல்லிடுவேன்னு மிரட்டினா கூட பரவாயில்ல, உண்மையை சொல்லிடுவேன்னு என்னை மிரட்டுறதைப் பார்த்தா தான் எனக்கு டென்ஷன் அதிகமாகுது. 

“போறேன், போய் மாப்பிள்ளை மாதிரி ரெடியாகி வர்றேன். பங்க்ஷன் முடியட்டும், அப்புறமா உங்களை கவனிச்சுக்கறேன்,” என்று கூறி விறுவிறுவென படியேறினான் அக்னி.

அவன் சொன்னது போலவே அடுத்த சில நிமிடங்களில் மாப்பிள்ளை போல தயாராகி வந்தான். கம்பீரத் தோரணத்தோடு வந்தவனை கண்டு அவனிடம் வந்தார் தாத்தா.

“டேய் அக்னி, நீ தனியா வர்றதுக்கு இது ஒன்னும் உன்னோட பிஸினஸ் சக்ஸஸ் ஆன பார்ட்டி இல்ல, இப்ப நடக்கிறது அருவிக்கும் உனக்குமான வெட்டிங் ரிசப்ஷன் பார்ட்டி, 

நீ மட்டும் தனியாக வந்தால் பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? போய் அருவியையும் கூட்டிட்டு வாப்பா. இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து ஜோடியாக வந்தா தான் எல்லாரும் பார்க்க நல்லா இருக்கும்” என்றார்.

“தாத்தா இன்னைக்கி நீங்க பண்றதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு அனுபவிப்பீங்க, உங்கள சும்மா விடமாட்டேன்” என்று கூறிய அக்னி மீண்டும் படிகளில் ஏறி சென்றான்,

“டேய், நான் யார் தெரியுமா? உனக்கே தாத்தாடா. எங்கிட்டயே பாயுறியா? இப்பதான வலையில சிக்கி இருக்கிற. இனிமே தான் உனக்கிருக்குதுடா,” என்று சிரித்தபடியே வந்தோரை வரவேற்கச் சென்றார் திருவாசகம். 

மகிழருவியின் அறை வாசல் வரை வந்த அக்னி கதவைத் தட்டாமல் நின்றான். 

“மேடத்தை அழைச்சிட்டுப் போக தி கிரேட் அக்னி தான் வரனுமா, அவளா வரமாட்டாளா, இந்த தாத்தா குடுக்கிற இடத்துல தான் இவ ஓவரா ஆடுறா, 

“இருக்கட்டும் இருக்கட்டும், நாளைக்கே இவ ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்டுறேன்,” என்று அக்னி கர்ஜிக்கும் போதே கதவு திறக்கப்பட்டது. 

அடர் நீல நிறத்தில் வேலைப்பாடுகள் மிகுந்த உடையில் தேவதையின் நகலென வந்தாள். மை தீட்டிய அவளது கண்கள் அக்னியைப் பார்த்த திகைப்பில் விரிந்தது. 

அறைவாசலில் அக்னியை எதிர்பாராத மகிழருவி அதிர்ந்தாள், பின்பு சுதாரித்துக் கொண்டாள், 

“நீ… நீங்க இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டாள். 

“ஓ அதுவா  மேடத்தை அழைச்சுட்டு போக தான் வந்தேன், இப்படியே வர்றீங்களா இல்லன்னா சிவப்பு கம்பளம் விரிச்சு அழைச்சுட்டு போகனுமா” என்று நக்கலடித்தான், 

“அது உங்க விருப்பம் மிஸ்டர் அக்னி, நீங்க எப்படி கூப்பிட்டாலும் எனக்கு ஓகே தான்” என்று நக்கலாக பதிலளித்தாள், கடுப்பானான் அக்னி, 

“உனக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா, என் பேரைச் சொல்லுவ? நான் யாருன்னு உனக்கு இன்னும் தெரியலல…” என்று அக்னி அவளின் மிக அருகில் வந்து எச்சரிக்கும் தொனியில் பேசினான்.

​அருவி சற்றும் அஞ்சாமல் அவனது கண்களை நேராகப் பார்த்தாள், 

“நீங்க யாரு? திருவாசகம் ஐயாவோட பேரன் அவ்வளவு தானே,” என்று கூறிவிட்டு மெல்லிய புன்னகையுடன் அவனைத் தாண்டிச் செல்ல முயன்றாள்.

​அக்னி சட்டென்று அவள் கையைப் பற்றி இழுத்தான், 

“என்னைப் பத்தி இன்னும் உனக்கு சரியா தெரியல, நாளைல இருந்து தான் நான் யாருன்னு உனக்கு காட்டுறேன்டி, தாத்தாவுக்காகவும், அந்த திலீபன் பண்ண வேலையாலயும் தான் நான் இப்போ அமைதியா இருக்கேன், இதுக்கு மேல  இருந்தா…” என்று அவன் பேசும் போதே இடைபுகுந்தாள்,

“இருந்தா என்ன பண்ணுவீங்க அக்னி” என்று இடைமறித்தாள் அருவி,

“என் கையைப் பிடிச்சு இப்படி இழுக்கிறது தான் உங்க வீரமா? நீங்க யாருன்னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. கீழே எல்லாரும் நமக்காகக் காத்துட்டு இருக்காங்க. வாங்க போகலாம்” என்று வெடுக்கென கூறியவள்,

அவன் கையைப் பிடியில் இருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு, யாழினியை கையில் ஏந்தியவாறு கம்பீரமாக நடக்கத் தொடங்கினாள் மகிழருவி.

அக்னிக்கு ஆத்திரம் ஒருபுறம், அவளது அந்தப் புதிய தன்னம்பிக்கையைக் கண்டு வியப்பு ஒருபுறம் எனத் தடுமாறினான்.

வேறு வழியின்றி, அவள் இணையாக நடக்கத் தொடங்கினாள்.

​இருவரும் படிக்கட்டுகளில் இறங்கி வருவதைப் பார்த்த திலீபன், 

“அடேங்கப்பா மேட் ஃபார் ஈச் அதர் ன்னா இதுதான் சார்” என்று அக்னியிடம் பெருமையாகச் சொல்ல,

“அப்படி சொல்லு, ஜோடிப் பொருத்தம்ன்னா இப்படியல்ல இருக்கணும்,” என்று வாயாறப் புகழ்ந்த திருவாசகம் அவர்களைப் பார்த்து திருப்தியாகச் சிரித்தார். 

வாசுதேவனோ, தன் கௌரவம் அடிபடுவதாக நினைத்துத் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டே அக்னியைத் தீயாக முறைத்துக் கொண்டிருந்தார்.

 

​இருவரும் ஒன்றாக இணைந்து நின்ற போது, கேமராக்களின் அவர்களின் மேல் வெளிச்சம் மின்னியது, அக்னி செயற்கையான புன்னகையைத் தன் முகத்தில் ஒட்டிக்கொள்ள முயன்றான், 

அருவியோ இங்குள்ள சூழல் புதிது என்பதால் தர்மசங்கடத்துடன் நெழிந்தாள். அதை பார்த்த அக்னி,

​”ரொம்ப நடிக்காதேடி” என்று பற்களைக் கடித்தபடி அக்னி முணுமுணுக்க, 

“நீங்களும்தான் மிஸ்டர் அக்னி, உங்க சிரிப்பு ரொம்ப மொக்கையா இருக்கு, கொஞ்சம் நேச்சுரலா சிரிக்க ட்ரை பண்ணுங்க” என்று அருவி அவன் காதருகே சென்று கிசுகிசுத்தாள்.

​அந்தக் காட்சி பார்ப்பவர்களுக்கு இருவரும் காதல் மொழி பேசிக் கொள்வது போலத் தோன்ற கேலி கிண்டல் செய்து சிரித்தனர், 

அக்னியன் மகிழருவியின் யின் வெட்டிங் பார்ட்டியில் என்ன நடக்கும்?

தொடர்ந்து  வாசிப்போம்  வாங்க

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page