தோளில் சாயும் நேரம் 06

மழை நீரில் குளித்திருந்த அந்த மஞ்சள் மலர்களுக்குப் பக்கத்தில் கிடந்த கல்லில் அமர்ந்திருந்தன அந்த இரட்டை மைனாக்கள்.

அந்தக் கல்லுக்குப் பக்கத்தில் கிடந்த இன்னொரு கல்லில் சோகமே உருவாகத் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் வர்தனி.

இன்று அதிகாலை விழிக்கும் போதே அவளுக்கு லேசாகத் தலை வலிக்கத் தொடங்கியிருந்தது.

ஏன் இப்படித் தலை வலிக்கிறது என்கிற எண்ணத்தோடு, தலையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டவளால் அந்த வலியைத் தாங்கவே முடியவில்லை.

இதைப் பற்றித் தாத்தாவிடம் சொன்னால் அவர் பதறி விடுவாரோ என நினைத்த வர்தனி, அவரிடம் ஒன்றும் சொல்லாமல் வெளியே வேறு வேலையாகப் போவதாகச் சொல்லி விட்டு, வைத்தியசாலைக்குப் புறப்பட்டு விட்டாள்.

அவளுடைய வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி நடந்து போனால், பேருந்துத் தரிப்பிடம் வரும்.

அதில் வரும் பேருந்தில் ஏறினால் பதினைந்து நிமிடங்களில் வைத்தியசாலையை அடைந்து விடலாம்.

ஆனால் அந்த இடத்தில் பேருந்துக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரும் என்பதால், உள் பாதை வழியாக மற்றோரு பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள் வர்தனி.

காலையில் அப்படி நடந்து செல்வது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விசயம் என்பதால், இப்படி நடந்து போவது அவளுக்குச் சலிப்பைக் கொடுக்கவில்லை.

மாறாக இளங்காலைச் சூரியனின் கதிர்களின் தீண்டலும், மெல்லிய காற்றின் வருடலும் அவளது தலைவலிக்கு ஒரு விதமான நிவாரணிகளாகவே இருந்தன.

வேக நடை இல்லாமல் போய்க் கொண்டு இருந்தவள் முன்னால் வேகமாக வந்து நின்றது அந்த வாகனம்.

பதறிக் கொண்டு விலகிய வர்தனிக்கு இருதயம் வேகமாக அடித்துக் கொள்வது நன்றாகவே தெரிந்தது.

அவள் எப்போதுமே சாலை விதிமுறைகளைச் சரியாகக் கடைப் பிடிக்கும் சிறந்த குடிமகள்.

ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில் கூட வலது புறமாக ஒதுங்கித் தான் நடந்து போவாள்.

அப்படி வலது பக்கமாக ஒதுங்கி நடந்து போய்க் கொண்டிருப்பவளை இடிப்பது போல வேகமாக வந்து நின்ற காரைப் பார்த்ததும் அவள் பதறுவது இயல்பு தானே.

பதறிய நெஞ்சை லேசாக அழுத்தி விட்டபடி, காரை விலத்தி நடக்க முயன்றவளை யாரோ சொடக்கிட்டு நிறுத்த முயல்வது புரிந்தது.

யாராக இருக்கும், யாராக இருந்தால் என்ன இப்படிச் சொடக்குப் போட்டால் நின்று திரும்பிப் பார்க்க வேண்டும் என்று அவசியம் ஏதும் இருக்கிறதா என நினைத்தாள் போலும், அவளுடைய நடை வேகத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

கொஞ்சத் தூரம் கூட நடந்திருக்க மாட்டாள், அதற்குள் அந்தக் கார் அவளைத் தாண்டி வந்து, அவளது பாதையை மறைப்பது போல நிற்க, அதில் இருந்து இறங்கி நின்றான் ஒருத்தன்.

அவனைக் கண்டதுமே முகம் அருவெறுப்பைத் தத்தெடுத்துக் கொள்ளவே, ஒரு கணம் அப்படியே நின்று விட்டாள் விஷ்ணுவர்தனி.

காரை விட்டு இறங்கி நின்றவனோ அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தபடி பக்கத்தில் வர முயல, ஓர் அடி பின்னே நகர்ந்தவளது விழிகள் இப்போது கோவைப்பழம் போலச் சிவக்க ஆரம்பித்திருந்தன.

“என்னம்மா கண்ணு சௌக்கியமா..”
என்றவனைக் கொன்று போடும் அளவுக்கு அவளுக்கு வெறி ஏறிப் போனது.

அந்த நேரம் பார்த்து அந்தத் தெருவில் ஆள்நடமாட்டம் வேறு இருக்கவில்லை.

“என்னடி தங்கம்.. பேயறைஞ்ச மாதிரி நிக்கிறாய்.. என்னை இந்த இடத்துல இந்த நேரம் எதிர்பாக்கேலைத் தானே.. ஆனா நான் உன்னை ஒவ்வொரு நாளும் தான் எதிர்பாக்கிறன்.. அப்புடியே உன்னை..”
என வாக்கியத்தை முடிக்காமல், அந்தக் கார்க்காரன் பல்லைக் காட்ட, அவ்வளவு தான் பக்கத்தில் கிடந்த கல்லைக் கையிலே தூக்கியே விட்டிருந்தாள் வர்தனி.

அவள் கல்லைத் தூக்கியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவன் வர்தனியை நெருங்க முயல, கையில் கிடந்த கல்லைக் கார்க் கண்ணாடி மீது விட்டெறிந்திருந்தாள் அவள்.

அவள் அப்படிச் செய்யக் கூடும் என்பதை எதிர்பாராதவனுடைய முகம் சட்டென்று குரூரமாக மாற
“என்னடி திமிரா.. இப்ப இந்த இடத்துல உன்னை எப்புடி நிக்க வைக்கிறன் பார்..”
என்று கொண்டே வேகமாக வந்து, அவளது புடைவையைப் பிடித்திழுத்திருந்தான் அவன்.

மானத்தைக் காக்க வேண்டிப் பெண்மைக்குரிய அச்சத்தில் இருந்து விடுபட்டு, பதிலுக்குச் சுதாரித்துக் கொண்டு அவள் எதிர்வினை காட்டுவதற்குள், அவனை இடித்துத் தள்ளிக் கொண்டு, இன்னொரு கார் வந்து நின்றது.

தன் மானத்தைக் காக்கப் புடைவையைத் தோளில் இருந்து விலகாமல் இறுக்கப் பிடித்துக் கொண்டு நின்றவளும், இன்னொரு கார் வந்து மற்றவனை மோதிய வேகத்தில், நிலை தடுமாறிப் போனாள்.

நிலை தடுமாறியவள் கீழே விழுவதற்கு முன்பாக, இடித்த காரில் இருந்து இறங்கி ஓடி வந்து அவளைப் பிடித்து அணைத்துக் கொண்டான் பிரேமகிருஷ்ணா.

அந்த நேரத்தில் அங்கே அவனைக் கண்டதுமே, ரட்சிக்க வந்த தேவதூதனைக் கண்டது போல அத்தனை பிரகாசம் அவளது முகத்தில்.

பிடிமானமாகப் பிரேமகிருஷ்ணாவின் சட்டையை இறுகப் பிடித்துக் கொண்டவளுக்கு, உண்மையிலும் கண்கள் கலங்கித் தான் போய் விட்டன.

வர்தனி ஒன்றும் நோஞ்சான் இல்லை. அவள் திடகாத்திரமான பெண் தான், தலை வலியில்லாமல் சாதாரண நாளாக இருந்திருந்தால், புடைவையை இழுக்க வந்தவனை நார் நாராகக் கிழித்துப் போடக் கூடிய வல்லமை உள்ள பெண் தான்.

ஆனால் தலை வலியால் அவளால் தன்னைச் சுதாரிக்கவே முடியவில்லை என்பது தான் உண்மை.

அதனால் அந்த நேரத்தில் பிரேமகிருஷ்ணா மட்டும் அங்கே வந்திருக்காது போனால் தன்னுடைய நிலமை என்னவாகியிருக்கும் என நினைத்தவளுக்கு, அந்த நொடியே உடல் லேசாக அதிர்ந்து போனது.

அணைத்திருந்தவனுக்கு அந்த அதிர்வு புரியாமல் போகுமா என்ன?

அணைப்பில் கிடந்தவளது தோளில் மெல்லி அழுத்தம் கொடுத்தவன், தன்னைடைய கார்க் கதவைத் திறந்து அவளை உள்ளே அமர வைத்தான்.

வர்தனிக்குத் தொல்லை கொடுக்க வந்திருந்த அந்த மற்றைய கார்க்காரன், மெல்ல எழுந்து கை காலை உதறிக் கொண்டு, கடுங் கோபத்தோடு கிருஷ்ணாவின் பக்கம் திரும்பினான்.

சூடான அலுமினியப் பாத்திரத்தின் மேல் நீர் பட்டது போல புஸ் என்று கோபமும் வடிந்து போனது அந்தக் கார்க்காரனுக்கு.

“டொக்டர் நீங்களோ.. நான் வேறை யாரவோ எண்டு தான் கோபமாத் திரும்பினான்.. சொறி டொக்டர் நடு ரோட்டுல நிண்டு கதைச்சிட்டம் போல..”

“அப்புடியா கதைச்ச மாதிரித் தெரியேல்லையே..”

“அச்சோ டொக்டர்.. கதைச்சுக் கொண்டு தான் நிண்டம்.. அந்தப் பிள்ளை நான் கல்யாணம் கட்டப் போற பிள்ளை தான்..”

“ஓ.. அப்போ முந்தநாள் கிளினிக் கூட்டிட்டு வந்த பிள்ளை யாரு மிஸ்டர் பிரதாபன்..

“அது.. அது அத்தையிந்த பிள்ளை..”

“சரி தான் மிஸ்டர் பிரதாபன்.. பாத்துப் பத்திரமாப் போயிட்டு வாங்கோ..”

“ஓம் ஓம் டொக்டர்.. இதுல நிண்ட பிள்ளைய அதுக்குள்ள காணோமே..”

“அவங்க எப்பவோ போயிட்டாங்க.. நானும் கிளம்புறன்..”
என்று கொண்டே அவனைக் கடக்க முயன்ற பிரேமகிருஷ்ணா, தன்னுடைய சப்பாத்துக் காலால் அவனுடைய காலை மிதிக்கவும் மறக்கவில்லை.

“ஐயோஓஓ..”
என்று அந்தப் பிரதாபன் கத்த,
“என்னாச்சு.. அப்போ விழுந்ததுக்கு இப்போ தான் கத்தலா..”
எனச் சாதாரணமாகக் கேட்டுக் கொண்டே, தன்னுடைய காருக்குப் போன பிரேமகிருஷ்ணா மீது அந்தப் பிரதாபனுக்குத் துளியும் சந்தேகம் வரவில்லை.

அதற்கான காரணம், பல்லொன்றை அடைக்க அரசாங்க வைத்தியசாலைக்குப் போய் அவதிப் பட்டவனுக்கு, ஆபத்பாந்தவனாக உதவி செய்த பல் மருத்துவர் பிரேமகிருஷ்ணா தான்.

காரின் உள்ளே அமர்ந்த பிரேமகிருஷ்ணா, காரைச் சட்டென்று கிளப்பிக் கொண்டு போய், வேறொரு சந்தில் நிறுத்தி விட்டு, வர்தனியின் பக்கம் திரும்பிப் பார்த்தான்.

அவளோ அவனொருவன் அங்கே இருக்கிறான் என்கிற எண்ணமே இல்லாமல், தெருவை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“வர்தனி..”
என மூன்று முறை அவனுக்கும் நோகாமல் பெயருக்கும் நோகாமல் அவளை அழைத்துப் பார்ததவனோ, அவளிடம் இருந்து அசைவு இல்லாமல் போகவும் அவள் தோள் தொட்டு மெல்ல உலுக்கினான்.

அவனது உலுக்கலுக்குப் பலன் இருந்தது, கனவில் இருந்து திடுக்கிட்டு முழிப்பது போலத் திடுக்கிட்டுப் போய் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.

அவளது பார்வையைத் தாங்கிக் கொண்டவன்
“என்னாச்சு.. அந்தத் தெரு கொஞ்சம் மோசம்.. சத்தம் போட்டாக் கூட டக்குனு யாருமே வர மாட்டாங்க..”
என்றவனுக்கு, அவன் யார் உன்னோடு ஏன் அப்படி நடந்து கொண்டான் எனக் கேட்கத் தோன்றவில்லை.

அதற்கான பதிலை அவளாகத் தான் சொல்ல வேண்டும் என நினைத்தான் போல, அவளைக் கேள்வி கேட்டுத் தோண்டித் துருவாமல், சில நொடிகள் அவளைத் தான் அமைதியாகப் பார்த்திருந்தான்.

அவள் வாயைத் திறக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தவன்
“எங்க போக வேணும்.. வீட்டயா இல்லாட்டிக்கு..”
என்று கேள்வியாக நோக்க, வைத்தியசாலை போக வந்ததை மறந்தவளாக
“வீட்ட..”
என்றாள் எழும்பாத குரலில்.

மீண்டும் அவள் பக்கம் திரும்பியவன், அவளுடைய தோள் பக்கத்தைச் சுட்டிக் காட்ட, என்னவென்பது போலப் பார்த்தவளுக்கு, ஊசி குத்திய இடத்தில் புடைவை கிழிந்து இருப்பது தெரிந்தது.

தோளில் கை வைத்துக் கொண்ட வர்தனி, மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவளது அந்தப் பார்வையில்
“நான் வெளியால நிக்கிறன்..”
என்று கொண்டே பிரேமகிருஷ்ணா இறங்க, இறங்கும் அவனை இனம்புரியாத ஒரு பார்வையோடு, புடைவையைச் சரிப்படுத்திக் கொண்டாள் அவள்.

மீண்டும் வந்து காரில் ஏறிக் கொண்டவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல், வர்தனி நன்றி சொல்ல, நன்றி எல்லாம் எதற்கு என்று எந்த விதமான பிகுவும் செய்யாமல், சிறு தலையசைவில் அவளது நன்றியை ஏற்றுக் கொண்டான் அவன்.

அவன் காரை இயக்கிச் செலுத்த ஆரம்பித்ததுமே, வர்தனியின் விழிகள் அவன் மீது யோசனையோடு படிந்தன.

தான் பார்ப்பது அவனுக்குத் தெரியாது என்கிற ரீதியில் தான் அவள் அவனைப் பார்த்து வைத்தாள்.

ஆனால் அந்தப் பல் வைத்தியனுக்கு எல்லாப் பக்கமும் கண் போல
“நான் டியூட்டிக்குப் போக இன்னும் சரியா அரை மணி நேரம் இருக்கு.. ஏதாவது சொல்ல வேணுமோ..”
என்று அவள் பக்கம் திரும்பாமலேயே கேட்டான்.

ஒரு கணம் திடுக்கிட்டுப் போய்ப் பார்வையைத் திருப்பிக் கொண்டவள், பிறகும் என்ன நினைத்தாளோ தெரியவில்லை,
“ஓம் சொல்ல வேணும்.. ஆனா இன்டைக்கு இல்ல.. எனக்கு நீங்கள் இன்னொரு நாள் நேரம் குடுக்க முடியுமா..”
என்று சொல்ல, ஒரு நொடி அவளைத் திரும்பிப் பார்த்து விட்டுப் பார்வையைச் சாலையில் பதித்தபடி
“ஆருவையும் கூட்டிக் கொண்டு வரட்டுக்குமோ..”
என்று கேட்டான்.

ஒரு நொடி தயங்கியவள் மெல்ல
“ஆரு வந்து சொல்லுற வாக்கியங்களை அப்புடியே திருப்பிச் சொல்லுற பிள்ளை.. நான் சொல்லுறது அவளுக்கு மனப் பாடமாப் போயிரும்.. ஒரு தடவை மட்டும் ஆரு இல்லாமல் வர முடியுமோ..”
என்று உள்ளே போய் விட்ட குரலில் கேட்க, அவளைப் பார்க்காமலேயே 
சரியென்று தலையை ஆட்டினான் பிரேமகிருஷ்ணா.

டியூட்டி தவிர குழந்தை இல்லாமல் பிரேமகிருஷ்ணா எங்குமே செல்வதில்லை என்பதோடு, யாருடைய வேண்டுகோளுக்காகவும் குழந்தையை அவன் விட்டுச் செல்வதில்லை என்பது அவனை நெருங்கியவர்கள் மட்டுமே அறிந்த உண்மை.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page