காதல் இதுதானா ? – காதல் 22

காதலாகும் 22:

அவன் முத்தமிட்ட அன்று முழுவதுமே அவள் கண்ணாமூச்சி ஆட்டம் தான் ஆடிக் கொண்டிருந்தாள்.வெட்கம் அலைக்கடலாய் வந்து மோத..அவன் முகத்தைக் காண முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

அவன் முத்தமிட்டதும் இறுதியில் அவன் பேசிச் சென்ற வார்த்தைகளும் திரும்பத் திரும்ப காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

இரவு உணவை முடித்து விட்டு தங்களது அறையில் இருந்தவள் கண்ணாடி முன் நின்று தன் இதழ்களையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

“சரியான முரடன்…!இப்படியா கிஸ் பண்ணுவாங்க…!லிப்ஸே காயம் ஆகிடுச்சு.. இதுல ஹெவன் ஃபீல் இருக்குமாம்..அந்தப் ப்ரியா லூசு வேற சொல்லுது…!”,வாய்விட்டு புலம்பியவள் இதழ்களை வருடி விட்டுக் கொண்டாள்.

‘உன் மனசாட்சியைத் தொட்டு சொல்லு…!ஹெவன் ஃபீல் இல்ல..’,அவளது மனசாட்சி வேறு நேரங்கெட்ட நேரத்தில் முன் வந்து அவளிடம் நியாயம் கேட்க,

மனதின் ஓரம் அவன் ‘சீ..நீ போ..’,என்று அதட்டி அதை உள்ளே தள்ளினாலும் மனத் முத்தமிட்டதை நினைத்து ஒரு குறுகுறுப்பு எழுந்தது என்னவோ உண்மைதான்.

அது மட்டுமா ஞாபத்திற்கு வந்தது…? அவனது கரங்கள் நடத்திய ஊர்வலங்களும் நினைவிற்கு வர..சில்லென்று உடல் முழுவதும் ஒரு தித்திப்பு.

லிப் பாம்மை எடுத்து உதட்டுக்குப் பூசியவள்,” ஆனாலும் முரடன்தான்…!ஸ்வீட் முரடன்…!”,என்று வேறு சான்றிதழ் வழங்கிக் கொண்டாள்.

அவன் கீழே இருக்கிறான் என்று நினைத்து இவள் அத்தனையையும் செய்து கொண்டிருக்க..அவனோ படுக்கையறை கதவில் சாய்ந்தபடி அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.

லிப் பாம்மை பூசிக் கொண்டிருந்தவள் கண்ணாடியில் தெரிந்த உருவத்தில் தூக்கி வாரிப் போட்டவளாய் திரும்பினாள்.

“நீங்க..நீங்க எப்போ வந்தீங்க…?”,குரல் வேறு தந்தியடித்தது.

“நீ முதல் முறை முரடன்ன்னு திட்டும் போதே வந்துட்டேன்…!”,கூறியவன் அடி மேல் அடி எடுத்து வைத்து அவளை நெருங்க..

எச்சில் கூட்டி விழுங்கியவளால் பின்னால் செல்ல முடியவில்லை.

வெகு அருகே நெருங்கியவன்,”ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டேனா…?”,அவனது கட்டை விரல் மென்மையாய் அவளது இதழ்களை வருடி விட்டது.

அவளால் மூச்சுக்கூட விட முடியவில்லை.அப்படியே நின்றாள்.

“இது என்ன…?”,லிப் பாம்மை சுட்டிக் காட்டி அவன் வினவ,

“லிப் பாம்…!லிப்சு..க்கு போட்டால்.. காயம் சரியா..கிடும்…!”,அவனது விரல் செவ்விதழ்களையே தான் வருடிக் கொண்டிருந்தது.எப்படியோ திக்கித் திணறி பேசி முடித்தாள்.

“ஓ…உனக்கு அது தேவைப்படாது…!”,கூறியவன் ஆழ்ந்து அவள் விழிகளை நோக்க. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அடுத்து அவன் செய்த செய்கையில் அவள் புரிந்து கொண்டாள்.

மெல்ல குனிந்தவன் மென்மையாய்.. மிக மென்மையாய் அவளது இதழ்களை சிறை பிடித்தான். இம்முறை மென்மை.. மென்மை மட்டுமே அவனது முத்தத்தில்.

முதல்முறை அவன் முத்தமிட்டதில் இருந்தே அவள் இன்னும் வெளிவரவில்லை.அதற்குள் இன்னொரு இதழ் யுத்தம்.அதுவும் மெதுவாக.. இதமாக.. பதமாக…!

முரட்டுத்தனமான அந்த இதழ் முத்தம் அவளது உணர்ச்சிகளைத்தான் தூண்டி விட்டது.ஆனால்.. மென்மையான இந்த இதழொற்றல் அவள் உயிர் வரை பாய்ந்து ஆட்டம் காணச் செய்தது. இதயத்தை மயிலிறகால் வருடும் மென்மையான உணர்வு.

அந்தத் தருணம் அவள் வீழ்ந்துதான் போனாள்.. அந்த ஆண்மகனிடம்.

உயிரை உருக்கி உறிஞ்சுவது போல மென்மையாக முத்தமிட்டவனின் காலடியில் சென்று சரணடைந்தது அவளது காதல் இதயம்.அதன் விளைவு..அவள் அவளையும் அறியாமல் அவனுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தாள்.

காலையில் முத்தமிட்ட போது கூட விதிர்த்து போய் அப்படியே இருந்தவள்..இப்பொழுது அவனது மென்மையான செய்கையில் அவனுடன் ஒன்றினாள்.அவளது மாற்றத்தை அவனும் கண்டு கொண்டான்.

வன்மை அல்ல.. மென்மை தான் பெண்ணவளை ஈர்க்கிறது என்பதை புரிந்து கொண்டவனின் இதழோரம் ரகசிய புன்னகை உதயமானது.

அவன் முத்தமிட்டு விலகிய போது அவள் முழுமையாக அவன் வசம் ஆகியிருந்தாள்.அவளது இதயம் என்னும் கோட்டைக்குள் அவன் அரசனாய் முடி சூட்டிக் கொண்டான்.

“யாழ்வி..!”,

“ம்..”,

“எனக்கு நீ வேணும்…!”, வெட்கத்தை விட்டு அவன் தன் தாபத்தை வெளிப்படுத்தி விட..அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

அவனை விட்டு விலகிச் சென்று ஜன்னலோரம் நின்றாள்.அவன் விடவில்லை.அவனது சூடான மூச்சுக்காற்று அவளது பின்னங்கழுத்தில் உரசும் நெருக்கத்தில் அவளுடன் உராய்ந்தான்.

“இந்த முத்தம் மட்டும் இல்ல.. மொத்தமா நீ வேணும் போல இருக்குது…!”,வேட்கையுடன் அவனது உதடுகள் அவளது பிடரியில் முத்தமிட்டது.

‘எனக்கு நீ வேண்டும் என்றால்.. இங்கு நீ என்பது நானா.. இல்லை என் உடலா…?’,அவள் மனதில் கேள்வி எழுந்தது.

அவனுடைய காதலை அவன் வெளிப்படுத்தாமல் கட்டிலில் அவனுடன் ஒன்ற முடியாது என்பதை அவள் மிகத் தெளிவாக புரிந்து கொண்டாள்.

“நீங்க என்னை லவ் பண்றீங்களா…?”,திரும்பி அவன் முகம் நோக்கியவள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வியை கேட்டே விட்டாள்.

இந்தக் கேள்விக்கு விடை பெறாமல் அவளால் அவனுடன் இழைய முடியாது.அவள் அவனை காதலிக்கிறாள்.. அது உறுதி…!அதே அளவு காதலுடன்தான் அவன் தன்னை கேட்கிறானா என்று தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.

அவனோ..அவளது காதல் இதயத்தை ஈட்டியால் குத்தி காயப்படுத்துவதைப் போல ஒரு பதிலை கூறி வைத்தான்.

“தெரியல…!உன்னை லவ் பண்றேனான்னு ஐ டோன்ட் நோ…!பட்.. இந்த உணர்வுகள் எனக்குப் பிடிச்சிருக்கு…! இத்தனை வருஷம்..இந்த மாதிரியான உணர்வுகள் எனக்குள்ள இருந்ததா அப்படிங்கறதே சந்தேகம் தான்…!உன்னைப் பார்த்த பிறகுதான்.. இந்த உணர்வுகளையே நான் உணர ஆரம்பித்தேன்.என்னுடைய உணர்வுகளை உன் அழகும்..உன் நெருக்கமும் மட்டும்தான் தட்டி எழுப்புது… !நீ வேணும்ங்கிற இந்த தாபத்தையும் மோகத்தையும் இதுக்கு முன்னாடி நான் அனுபவித்ததே இல்லை…!ஐ ஆம் ஜஸ்ட் கோயிங் மேட் வித் யுவர் தாட்ஸ்…யூ ஆர் கில்லிங் மீ…!”, ஏதேதோ பிதற்றியவனின் கண்களில் அப்பட்டமாய் மோகம் மின்னியது.

பெண்ணவள் மொத்தமாக உடைந்து போனாள். உயிர்க் காதலில் மூழ்கி நீ எனக்கு வேண்டும்’ என்று கேட்டிருந்தால் தயங்காமல் தன்னை கொடுத்திருப்பாள்.ஆனால்..இவன் கேட்பதோ..காமத்திலும்.. மோகத்திலும்…!

இதயம் சுக்கு நூறாய் உடைந்து போக.. அவளது காதல் ஓலமிட்டுக் கதறியது.சிறு இதழ் முத்தம் ஆனாலும் அதை காதலோடு பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை உடையவள் அவள். இப்பொழுது அவன் மொத்தமாக வேண்டும் என்று கேட்கிறான்.. அதுவும் காமத்தில்..அவளால் எப்படி தன்னை கொடுக்க முடியும்…?

‘அப்போ..இவ்ளோ நேரம் முத்தமிட்டது கூட காதலினால் இல்லையா…?என் மேல இருக்கிற மோகத்தால தான் முத்தமிட்டாரா…?’,ஏனோ இப்பொழுது அவன் முத்தமிட்ட இதழ்கள் அவளுக்கு கசந்தது.

சற்று முன் மனதில் முகிழ்த்திருந்த அவன் மீதான காதல் அவளைப் பார்த்து சிரிப்பதைப் போல் அவளுக்கு ஒரு உணர்வு.

‘உன் அழகும்..நெருக்கமும் என்னைப் பைத்தியக்காரனாக்குதுன்னு புலம்பறானே..உன் காதல் என்னைப் பைத்தியக்காரனாக்குதுன்னு புலம்பியிருந்தால் சந்தோஷமா என்னைக் கொடுத்திருப்பேனே…’,அவள் மனம் கதறித் துடித்தது.

வாய் விட்டுக் கதற வேண்டும் போல் எழுந்த உணர்வை வெகு சிரமப்பட்டு அடக்கினாள்.அவன் முன்பு தன் ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை.அணை மீறி வழியத் துடித்த கண்ணீரை இமை சிமிட்டி அடக்கியவள்,”எ..எனக்கு கொஞ்சம் டைம் வேணும்…!”, ஒருவாறாக கூறி விட்டாள்.

அவனுக்குப் பொறுமை இல்லை போலும்.அவளை சமாதானப்படுத்துகிறேன் என்று மேலும் அவள் மனதை ரணமாக்க ஆரம்பித்தான்.

“எதுக்கு டைம் வேணும் யாழ்வி…? பொதுவா அரேன்ஜ் மேரேஜ்ல கல்யாணம் பண்ணிக்கறவங்களுடைய வாழ்க்கை செக்ஸ்ல தானே ஆரம்பிக்குது…!அதுக்குப் பிறகுதான் அவங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வருது…!நாமளும் ஏன் நம்ம வாழ்க்கையை அப்படி தொடங்க கூடாது…?”,அவளுக்கு காதைப் பொத்திக் கொண்டு கத்த வேண்டும் போல் இருந்தது.

மனதில் காதல் இல்லாமல் மெத்தையில் கட்டிப் புரளலாம் வா என்று அழைக்கிறான் அவளது காதல் கணவன்.அவன் கூறுவது போல் பல பேருடைய வாழ்க்கை அப்படி ஆரம்பித்திருந்திருக்கலாம். ஆனால்,அந்த பத்தோடு பதினொன்றாக இந்த யாழ்வி இருக்க மாட்டாள்…சிலிர்த்து நிமிர்ந்தவள்,

“ப்ளீஸ்…”,என்று மட்டும்தான் கூறினாள். அவன் சற்று இறங்கி வந்தான்.

“ஓகே..உனக்குத் தேவையான டைமை எடுத்துக்கோ…!பட்..நான் ரொம்ப நாள் காத்திருப்பேன்னு மட்டும் நினைக்காதே…! உன்னைப் பக்கத்துல வைச்சுக்கிட்டு இனிமேலும் சாமியார் மாதிரி கை கட்டிட்டு வேடிக்கை பார்க்க முடியும்ன்னு எனக்குத் தோணல…!”,அத்தனையும் கணவன் மனைவியிடம் பேசும் வார்த்தைகள்தான். என்ன..இதைக் காதலுடன் சொல்லியிருந்தால்.. அவள் உருகிக் குழைந்திருப்பாள்..அவன்தான் காமத்தோடு சொல்கிறானே…?

அவன் சென்று படுத்து விட..இங்கு இருந்தால் நிச்சயம் வெடித்து விடுவோம் மனம் உரைக்க.. குளியலறையில் தஞ்சம் புகுந்தாள் மங்கை.

அவனைச் சொல்லியும் குற்றமில்லை. அவன் வளர்ந்த சூழல் அப்படி.மனதில் காதலே இருந்தாலும் அவனால் வெளிப்படுத்த முடியாது..வெளிப்படுத்தவும் தெரியாது…!தனிமையில் முரட்டுத்தனமாகவே வளர்ந்து பழக்கப்பட்டவனின் உணர்வுகளும் முரட்டுத்தனமாகவே இருந்தன.

‘ஐ லவ் யூ பேபி..’என்று மூச்சுக்கு முன்னூறு முறை காதலை வெளிப்படுத்தவெல்லாம் அவனுக்குத் தெரியாது.ஆனால், துரதிருஷ்ட வசமாக அவனது மனையாள் அதைத்தான் விரும்பினாள்.

காதல் என்றால் வெளிப்படுத்த வேண்டும் என்றாள்.அவளுக்காக அவன் தவிக்கிறான்..அவள் வேண்டும் என்று விரக தாபத்தில் உருகுகிறான். இதுதான் காதலா…?என்றால்..ஆம்..அவன் பாஷையில் இதுதான் காதல்.

ஆனால்..அவளோ இல்லை என்றாள். நெரிசல் மிகுந்த சாலையில் ஒருவர் கையைப் பிடித்துக் கொண்டு இன்னொருவர் நடப்பதுதான் காதல் என்றாள் அவள்.மார்கழி மாத அதிகாலைப் பனியில் குளித்து விட்டு நடக்கும் போது சில்லென்று ஒரு சாரல் உடலைத் தாக்குமே..அதுதான் காதல் என்றாள் அவள்.

கட்டிலறையில் போராடி காமத்தை வென்று வருவதுதான் காதல் என்று அவன் கூறினால்.. இல்லை. பட்டும் படாமல் நெற்றிப்பொட்டில் வைக்கும் ஈர முத்தம் தான் காதல் என்று அவள் கூறுகிறாள்.

இவ்விருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு காதல் என்ன பாடு பட போகிறதோ..தெரியவில்லை…!

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page