காதல் இல்லம் 1 – AY 90
****************
அத்தியாயம் 1
“ ஜானகி தானே நீ?” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் ஜானகி. தன் கண்கள் தான் தன்னை ஏமாற்றுகிறதோ என்று ஒரு நிமிடம் அவளுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஏனென்றால் எங்கோ அமெரிக்காவில் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த ராகவ், சென்னையில் அந்த கல்பனா மாலில் கண் எதிரில் நின்றால் வேறு என்னதான் நினைக்கத் தோன்றும்?
“ ராகவ் அதிகம் மாறவில்லை “ என்பதுதான் அவள் மனதில் தோன்றிய முதல் எண்ணம். தன்னை ஒரு நிலைப் படுத்திக் கொண்டு, ராகவைப் பார்த்து, மெலிதாக சிரித்தாள் ஜானகி. பிறகு, அடைத்துக் கொண்ட தொண்டையை கனைத்து சரி செய்து கொண்டு “ ஓ ! என்னை அடையாளம் தெரிகிறதா, ராகவ்? ஆமாம் ! நீ எங்கே இங்கே ? உன்னை இங்கே பார்ப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை” என்று பதில் கேள்வி கேட்டாள்.
ஒரு நிமிடம் பதிலே கூறாமல், அவளைக் கூர்ந்து பார்த்த ராகவ், “ஏன் – சென்னை உனக்கு மட்டும் தான் சொந்தமா? நான் வரக் கூடாதா? இன்னும் என்னைப் பார்க்க பயமா இல்லை தயக்கமா?” என்று கேட்க, ஜானகியின் முகத்தில் ஒரு நிமிடம் சோகம் பரவியது.
பதில் கூறாமல் நின்ற ஜானகியைப் பார்த்து, ராகவ் சிரித்துக் கொண்டே, “கவலைப் படாதே ! நான் ஒரு வருடமாக இந்தியாவில் தான் இருக்கிறேன். போன மாதம் வரை மும்பையில் இருந்தேன். பிறகு விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு, உன்னைத் தேடி சென்னை வந்தேன். நிறைய இடங்களில் தேடி, நிறைய பேரை விசாரித்து, ஒரு வாரம் முன்பு தான் நீ இருக்கும் இடம் தெரிந்துக் கொண்டு, இங்கு வந்தேன்.
நீ மேனேஜராக வேலை பார்க்கும் சீனியர் சிடிஜன் ஹோமிற்க்குத்தான் முதலில் போனேன். . பயப்படாதே- உன்னை தெரிந்தவன் என்று என்னை நான் காட்டிக் கொள்ளவே இல்லை. உங்கள் சீனியர் சிடிஜன் ஹோமில் எனக்கு தங்க இடம் வேண்டும் என்று காரணம் சொல்லிக் கொண்டு வந்தேன். அங்கு இருந்தவர்,
“மேடமிற்குத்தான் ரூம் பற்றிய விவரம் எல்லாம் தெரியும். அவர் இப்பொழுது சூப்பர் மார்க்கெட் சென்றிருக்கிறார். இன்று அலுவலக நேரம் முடிந்து விட்டது. நீங்கள் நாளை வாருங்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.. நாளை வரை என்னால் காத்திருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதுதான் நான் உன்னை இங்கேயே பார்க்க வந்து விட்டேன் ” என்று வாய் மூடாமல் பேசி முடித்தான்.
நடுவில் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த ஜானகி “என்ன – நீ சீனியர் சிடிஜன் ஹோமில் தங்கப் போகிறாயா? எதற்கு ? உன் குடும்பம் என்ன ஆச்சு? “ என்று கேட்க, ராகவ், பதில் ஒன்றும் கூறாமல், ஜானகியையே மௌனமாக சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு, ஏதோ முடிவுக்கு வந்தவன் போல் தலையை அசைத்துக் கொண்டு,
“எல்லாம் இந்த மாலிலேயே நின்று கொண்டு பேசணுமா? வாயேன் பக்கத்திலே ஏதாவது ஹோட்டல் இருந்தால் அங்கு போய் உட்கார்ந்து பேசலாமே – எனக்கு பசிக்கிறது. காலும் வலிக்கிறது. ஏதாவது டிஃபன் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்” என்று சொல்ல, ஜானகிக்கும் அதுதான் சரியாக பட்டது.
கல்பனா மாலில் கிடைக்காத பொருளே கிடையாது என்றே சொல்லலாம். அதனால் அங்கு எப்பொழுதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் , அவள் வேலை பார்க்கும் சீனியர் சிடிஜன் ஹோமிலிருந்து நிறைய பேர் கல்பனா மாலில் தான் தங்களுக்கு அன்றாடம் வேண்டிய பொருட்களை வாங்குவது வழக்கம். பொருள் ஒன்றும் வேண்டாம் என்றாலும் கூட, ஒரு க்ரூப்பாக சேர்ந்துக் கொண்டு, மாலை வாக் போல் கல்பனா மால் வந்து விட்டு, அங்கு இருக்கும் வேலன் காப்பி ஹவுஸில் ஒரு காப்பியும் குடித்து விட்டு போவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் கண்ணில் பட்டால், ராகவ் யார் என்று அவர்களுக்கு விவரிக்க வேண்டி வரும். அந்த நேரம், ஜானகி இருந்த மனநிலையில் அவளால் யாரிடமும் சகஜமாக பேச முடியும் என்று தோன்றவில்லை. அதனால் ஹோட்டலுக்கு போவது சரியானதாகவே பட்டது ஜானகிக்கு. பக்கத்தில் தான் துர்கா பவன் ஹோட்டல் இருக்கிறது. அந்த ஹோட்டலுக்கு வருபவர்கள் குறைவு. அதனால் உட்கார்ந்து பேச சௌகர்யமாக இருக்கும் என்ற நினைப்பில், ராகவிடம், “சரி போகலாம் ! நீ ஏதாவது சாப்பிடு. எனக்கு காஃபி மட்டும் போதும்” என்று சொல்லிக் கொண்டே முன்னே நடந்தாள்.
“இந்த வயதிலும் இவள் என்ன அழகு? இன்னும் அந்த ‘விசுக் விசுக்” என்று நடக்கும் நடையும் மாறவில்லை” என்று நினைத்துக் கொண்டே அவள் பின்னால் நடந்தான் ராகவ். கூப்பிடு தூரத்தில் இருந்த ‘துர்காபவன்’ ஹோட்டலை அடைந்து, ஓரத்தில் காலியாக இருந்த டேபிளில் உட்கார்ந்து கொண்டார்கள். அந்த நேரம் அந்த ஹோட்டலில் அதிகம் கூட்டம் இல்லை என்பதே ஜானகிக்கு நிம்மதியாக இருந்தது.
சர்வர் வந்துக் கேட்டதும், ராகவ் தனக்கு ஒரு ரவா மசால் தோசையும், இரண்டு பிளேட் போண்டாவும் ஆர்டர் செய்தான். “ஏன் எனக்கு ஆர்டர் செய்தாய்” என்பது போல் பார்த்த ஜானகியைப் பார்த்து சிரித்துக் கொண்டே
“உனக்குத் தான் போண்டா ரொம்பப் பிடிக்குமே? இப்போ எதுக்கு வேண்டாம்னு சொல்லறே? ஒரு பிளேட் தானே சாப்பிடு” என்று சொல்ல, ஜானகியின் மனதில் அந்த பழைய இன்பமான நாட்கள் ஞாபகம் வந்தது, அதே நேரம் இவ்வளவு வருடங்களில் ராகவும் அதிகம் மாறவில்லை – அதே மாதிரி அவன் சிரிப்பும் – அதாவது அவன் சிரிக்கும் பொழுது அவன் கண்களும் சிரிக்கும் விதமும் – மாறவில்லை என்ற நினைப்பும் அவளுள் வர, அப்படி நினைப்பதே தவறு என்பது போல் தலையை ஆட்டிக் கொண்டாள். ராகவ் அவள் மனதில் ஓடும் எண்ணங்களை அறிந்து கொண்டு விடுவானோ என்ற அச்சமும் அவளுள் எழுந்தது என்பதும் உண்மைதான்.
ராகவை முதன்முதலாக பார்த்த நாள் அவள் ஞாபகத்திற்கு வந்தது. அன்று அவள் சமையல் எல்லாம் முடித்துவிட்டு, பள்ளிக்கு நேரமாகிவிட்டதே என்று அவசர அவசரமாக தயாராகிக் கொண்டிருந்தாள். அந்த நேரம், மூளை சரியில்லாத அவள் தம்பி, அக்காவை தொந்திரவு செய்ய வேண்டாமே, என்று தானே எழுந்திருக்க, அப்படியே கீழே விழுந்து விட்டான். ஒரு நிமிடம் ஜானகி பதை பதைத்துப் போய் விட்டாள். பிறகு, சமாளித்துக் கொண்டு, அவனை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கூட்டி வந்தாள்.
ஆட்டோ ஓட்டுனர் திரும்பிப் போக அவசரப் பட்டதால், தம்பியை கஷ்டப்பட்டு கீழே இறக்கி விட்டு, அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பினாள். நடக்க முடியாமல் தவிக்கும் தம்பியை எப்படி ஆஸ்பத்திரியினுள் கூட்டிச் செல்வது என்று யோசித்த பொழுது ஆஸ்பத்திரி வராந்தாவில் இருந்த வீல்சேர் அவள் கண்ணில் பட்டது. வீல் சேரை எடுத்துக் கொண்டு வர தம்பி கையை விட்டால் அவன் கீழே விழுந்து விடுவான், என்பதால் யாராவது உதவிக்கு வருவார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.
அப்பொழுது அங்கு வெள்ளை உடையில் ஒருவர் தென்பட அவரை பணியாள் என்று நினைத்து “ தம்பி தம்பி இங்க பாரு – அந்த வீல் சேரை எடுத்துண்டு இங்கே வா. என் தம்பியை உள்ளே கூட்டிண்டு போகணும்” என்று உரக்க கத்தினாள். அந்த வெள்ளை சட்டை அணிந்தவரும் ஒரு நிமிடம் அவளை கூர்ந்து நோக்கிவிட்டு ஒன்றும் பேசாமல் அந்த வீல் சேரை எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தார்.
ஜானகியிடம் ஒன்றும் பேசாமல் அவள் தம்பியைத் தூக்கி வீல்சேரில் வைத்து, வீல்சேர் ஸ்டிராப்பை மாட்டிய பிறகு, விடுவிடுவென்று வீல்சேரை ஆஸ்பத்திரிக்கு ஓட்டிச் சென்றார். அவர் நடைக்கு ஈடு கட்ட முடியாமல் ஜானகியும் ஓட்டமும் நடையுமாக அவனைப் பின்தொடர்ந்தாள்.
அதற்குள் வீல்சேர் விசிட்டர்ஸ் ஹாலினுள் நுழைந்தது. அந்த வெள்ளை உடை அணிந்தவர் ஜானகியை பார்த்து, “ இங்கு கொஞ்ச நேரம் காத்திருங்கள். உங்க நம்பர் வந்தவுடன் உள்ளே கூப்பிடுவார்கள் ” என்று சொல்லிவிட்டு எதிரே இருந்த அறைக்குள் நுழைந்து விட்டார்.
ஜானகிக்கு ஒருபக்கம் தான் செய்ததை நினைத்து சிரிப்பாக வந்தாலும் மறுபக்கம் பயமாகவும் இருந்தது. யோசித்துக்கொண்டே இருக்கையில் ஒரு நர்ஸ் வந்து அவளிடம் “ டாக்டர் உங்களை உள்ளே கூப்பிடுகிறார் “ என்று கூறிவிட்டு. அவளே தம்பியின் வீல்சேரைத் தள்ளிக்கொண்டு அறையினுள் நுழைந்தாள். ஜானகியும் அவளை பின்தொடர்ந்து உள்ளே சென்றாள்.
உள்ளே நுழைந்தவளுகு ஒரே திகைப்பு. ஏனென்றால் டாக்டர் சீட்டில் இருந்தது அந்த வெள்ளை உடை அணிந்த மனிதர் தான். அப்பொழுது ஜானகிக்கு அந்த டாக்டர் தான் ராகவ் என்பதும், அவனால் அவள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்பதும் தெரியவில்லை. ஆனால் ராகவ் முகத்தில் அவளைப் பார்த்தவுடன் எந்த மாற்றமும் தெரியவில்லை.
ஆனால் ஜானகிதான் “ மன்னிக்கவும் டாக்டர் ! நான் உங்களை தப்பாக நினைத்து விட்டேன் “ என்று கூற ஆரம்பித்தவுடன், ராகவ் அவளை கையமர்த்தி உட்காரச் சொல்லிவிட்டு, அவள் தம்பியை பரிசோதிக்க ஆரம்பித்து விட்டான்.
பிறகு நர்சிடம் “ இந்தத் தம்பிக்கு எக்ஸ்ரே எடுக்கணும். எக்ஸ்ரேரூமுக்கு அழைச்சுண்டு போய் உடனே எடுத்துண்டு வாங்க” என்று சொல்ல, நர்ஸ் அவர்களை எக்ஸ்ரே ரூமிற்கு கூட்டிச்சென்று எக்ஸ்ரே எடுக்க ஏற்பாடு செய்தாள். எக்ஸ்ரே வில் பார்த்தபோது எலும்பு முறிவு என்று ஒன்றும் பெரிதாக இல்லாததால் மருந்து கொடுத்து இன்னும் ஒரு வாரத்தில் வந்து பார்க்கவும் என்று சொல்லி டாகடர் ராகவ் அவர்களை அனுப்பி விட்டான்..ஆனால், அந்த நேரம் ஜானகிக்கு என்னவோ அந்த டாக்டர் தன் தம்பியை சீக்கிரம் பார்த்து அனுப்பி விட்டதாகத்தான் தோன்றியது
அதோடு அந்த சந்திப்பு முடிந்து விட்டதாகத்தான் நினைத்திருந்தாள் ஜானகி . ஆனால் விதி வேறு விதமாக நினைத்திருந்ததே? முதல் முறை ஆஸ்பத்திரியில் சந்தித்த பிறகு இரண்டாவது முறை ராகவை சந்தித்தது அவள் நினைவில் வந்து அவள் வயதான முகத்திலும் சிவப்பை உண்டாக்கியது. ராகவைப் பற்றிய நினைவுகள் வரிசையாக அவன் நினைவில் வந்து சென்றது. ராகவை பற்றிய நினைவுகள் மட்டுமல்ல – அதனுடன் கூட, அவள் வாழ்க்கையே அவள் கண் முன் ஒரு சினிமா போல் விரிந்தது.
