காதல் இல்லம் – அத்தியாயம் 4

                                             காதல் இல்லம் – AY 90.

அத்தியாயம் 4

******** 

காசிநாதன் அவருக்கு நல்ல டிகிரி காஃபி எல்லாம் கொடுத்து விட்டு தலையில் போட்ட குண்டு இதுதான். அது என்னவென்றால்   அவர் தன் மகன் வெங்கடேசனுக்கு ஜானகியை திருமணம் செய்து தரும்படிக் கேட்டுக் கொண்டதுதான். அதுக்கு மேலெ அவர் சொன்னது -. 

“சாமி ! உங்களுக்கு ஆச்சரியமாகவும் இருக்கும் – அதிர்ச்சியாகவும் இருக்கும்.  எனக்கும் உங்களுக்கும் என் பையன் வெங்கடேசன் அவ்வளவு சரியான பையன் இல்லை என்றுத் தெரியும். ஏன் – ஊர் முழுக்கவே அவன் குணம் தெரியும் தான். ஆனால் அன்னிக்கு உங்க பெண் ஜானகியைப் பார்த்தவுடனேயே இவள் தான் என் பையனை திருத்த முடியும் என்று நிச்சயம் பண்ணி விட்டேன். உங்க பெண் ரொம்ப சாமர்த்தியம் மட்டுமில்லை – ரொம்ப பொறுமைசாலி என்று கூட நான் அவளிடம் பேசியதில் தெரிந்துக் கொண்டேன். 

அதனால் தான் ஜானகி தான் வெங்கடேசனுக்கு சரியான மனைவியாக இருப்பாள் என்று தீர்மானம் செய்தேன். எனக்குத் தெரியும் – என் பையனைப் பற்றித் தெரிந்த உங்களுக்கு  ஜானகியை அவனுக்குக்  கல்யாணம் பண்ணித் தர கட்டாயம் மனசு வராது என்று. ஆனால் நான் சும்மா உங்க பெண்ணைக் கல்யாணம் பண்ணித் தரும்படி கேட்கப் போவதில்லை. நீங்க என்கிட்டே கடன் வாங்கியிருக்கிறீர்கள். 

நீங்க இருக்கும் நிலமையில் வட்டி கட்டக் கூட கஷ்டம் என்றும் எனக்குத் தெரியும். இந்த நிலையில் மொத்தப் பணமும் நீங்கள் உங்கள் வாழ்நாளில் உங்க சம்பாத்தியத்தில் கட்டாயம்  திருப்ப முடியாது என்பது உங்களுக்கும் தெரியும் – எனக்கும் தெரியும். அதனால்தான் இதற்கு நான் ஒரு வழி சொல்லலாம் என்று இருக்கிறேன். 

இதைப் பாருங்க – நான் நேராகவே சொல்கிறேன். உங்க பெண் ஜானகியை என் பையன் வெங்கடேசனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுங்க. நான் உங்க கடனை ரத்து செய்து விடுகிறேன். கல்யாணச் செலவு எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க உங்க மகளைப் பத்திக் கவலைப் பட வேண்டாம். என் மத்த பசங்களும் கல்யாணத்திற்கு முன் பெரிசா ஆட்டம் போட்டவங்க தான். ஆனால் இப்போ அவங்க எல்லோருமே தன் பெண்டாட்டிக்கு சலாம் போட்டுண்டு நல்ல பிள்ளையாக இருக்காங்க. அதனால் வெங்கடேசனும் நிச்சயம் மாறிடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. 

இதைப் பத்தி உங்க பெண் கிட்டேயும் கலந்து பேசி நல்ல முடிவோடு வாங்க. நான் உங்களை பயமுறுத்தறேன்னு நினைக்கக் கூடாது. ஆனால் நான் கடன் கொடுத்தவன். என் பணம் திரும்பி வரதும் எனக்கு முக்கியம்தான். பெண்ணை கொடுக்க விருப்பமில்லைன்னு சொல்லிட்டா நான் ஏத்துப்பேன். ஆனா அதுக்கு அப்புறம் கடனை எப்படி திரும்ப வாங்கறதுன்னு யோஜிக்க ஆரம்பிப்பேன். உங்களுக்குத்தான் தெரியுமே நான் எப்படி கடனை வசூலிப்பேன் என்று – இப்ப நீங்க கிளம்பலாம், சீக்கிரம் நல்ல சேதியோடு வந்து பார்ப்பீங்ன்னு நான் நம்பறேன்” என்று சொல்லி கையைக் கூப்பினார். 

ஜானகியின் தந்தைக்கு என்ன பதில் சொல்லுவது என்றுகூட தெரியவில்லை.  ஜானகியை வெங்கடேசனுக்கு மணம் முடிக்க அவர் மனம் கொஞ்சம் கூட ஒப்பவில்லை. ஆனால் இந்தத் திருமணம் நடக்கவில்லை என்றால் காசிநாதன் தன்னைக் கடனுக்கு நெருக்குவார் என்பதும் அவருக்குத் தெரியும், ஆனால் என்ன செய்தாலும் கடன்  வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவது இப்போதைக்கு முடியாத காரியம் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

 ஜானகி ராகவை மணம் முடிக்க விரும்புவதும் அவருக்கு ஓரளவு தெரியும். தன் பெண் ஜானகியை பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். குடும்பம் தான் அவளுக்கு முக்கியம் என்பதும் அவருக்குத் தெரியும். அவர் குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கோவிலில் சென்று உட்கார்ந்து விட்டார், கோவில் கர்ப்ப்கிரகம் மூடி பட்டரும் கோவிலை விட்டு சென்ற பிறகும் கூட அவர் அங்கேயே உட்காந்திருந்தார். 

பசி தாகம் எதுவுமே தெரியவில்லை அவருக்கு. தன்னால் குடும்பத்துக்கு ஒரு உபயோகமும் இல்லை என்று நினைத்து நினைத்து மனம் நொந்துபோய் விட்டார் அவர். எல்லோரையும் விட்டு விட்டு எங்கேயாவது ஓடிப் போய்விடலாமா என்று கூட அவருக்கு யோஜனை வந்தது,. அவர் ஓடிப்போனாலும், கடன் இருப்பது அப்படியேதான் இருக்கும். அதனால் அந்த யோஜனையை கைவிட்டார் அவர்,  

ரொம்ப நேரம் தந்தையைக்  காணாததால் ஜானகியும் ராகவும் அவரைத் தேடி கடைசியில் அவர் கோவிலில் இருப்பதைக் கண்டு பிடித்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். பித்து பிடித்தவர் போல இவர்கள் என்ன கேட்டாலும் பதிலெ சொல்லாமல் வந்த தந்தையின் நிலமையைப் பார்த்து ரொம்பப் பயந்துப் போய்விட்டாள் ஜானகி,. வீட்டுக்கு வந்ததும் அவரை வற்புறுத்தி உணவு உட்கொள்ள வைத்தார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்று கேட்டதற்கு, அவர் கண் கலங்கி  விக்கி விக்கி அழத் தொடங்கி விட்டார்.

 பிறகு, அழுகையின் ஊடே திக்கித் திணறி எல்லா விவரங்களையும் கூறினார். விவரங்களைக் கேட்ட ஜானகியும் ராகவும் ஒரு நிமிடம் விக்கித்துப் போய் விட்டார்கள். என்ன வெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தார்கள அவர்கள். அதுவும் ராகவ் இன்னும் இரண்டொரு நாளில் ஜானகியின் தந்தையிடம் தான் ஜானகியை மணக்க விரும்புவது  பற்றி பேசி விடவேண்டும் என்று  முடிவே செய்திருந்ததால் இந்த விஷயம் அவனைப் பெரிதும் பாதித்தது. ராகவ் ஜானகியின் தந்தையிடம்  

“ஸார் ! நான் மாசாமாசம் பணம் அனுப்புகிறேன். கொஞ்ச கொஞ்சமாக கடனை அடைத்து விடலாம். அவரிடம் கொஞ்சம் அவகாசம் கேளுங்கள” என்று சொன்னதற்கு ஜானகியின் தந்தை 

“ராகவ் ! பெரியதனக்காரர்  இதெல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டார்.அவருடைய ஒரே லட்சியம் என்னுடைய் பெண் ஜானகியை அவர் பையனுக்கு திருமணம் செய்வதுதான். அதனாலேயே எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. ஜானகி மாத்திரமே இருந்தால், பெரியதனக்காரர் எக்கோடோ கெட்டுப் போகட்டும், என்று நான் இந்தக் கல்யாணத்திற்கு மறுத்து விடுவேன். 

ஆனால் ஜானகிக்குப் பிறகு மனம் பேதலித்துப் போன அவள் தம்பி இருக்கிறான். அவனை கவனித்துக் கொள்ளவும் நான பணம் செலவு செய்ய வேண்டும்.   கடன் வாங்கிய பணமும் 3 லட்சத்துக்கும் மேல். அதை உடனே திருப்பிக் கொடுக்க என்னிடம் எந்த  வழியும் இல்லை.  

ஜானகி விஷயம் இல்லாமல் இருந்தால் பெரியதனக்காரர்  கடனை கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுக்க ஒத்துக்கொள்வார். நாமும் வாயைக் கற்றி வயிற்றைக் கட்டி திருப்பிக் கொடுத்து விடலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போ நிலமை மாறி விட்டதே – நான் என்ன பண்ணுவேன்” என்று திரும்பவும் அழ ஆரம்பித்து விட்டார். 

அழுது அழுது அலுப்பு தாளாமல் அவர் அப்படியே உறங்கிவிட்டார். மற்றவர்களும் உறங்கி விட ஜானகி வேலைகளை முடித்துவிட்டு வந்தபோது ராகவ் அவர்கள் வீட்டு வெளித் திண்ணையில் தலையைக் குனிந்துக் கொண்டு ஏதோ ஆழ்ந்த யோஜனையில்  இருப்பதைப் பார்த்தாள்.  அவனை அப்படி பார்க்கும் போது அவளுக்கு மனசு ரொம்ப பாரமாகி விட்டது, அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். 

இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. இருந்தாலும்  இருவர் மனதிலும் ஒடும் எண்ணங்கள் ஒன்றாகத்தான் இருந்தது என்பது இருவருக்குமே புரிந்தது. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த ஜானகி ராகவை ஆழ்ந்து நோக்கிவிட்டு சொன்னாள் 

“ராகவ் ! நான் சொல்வதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும்.  நான் அப்பா வந்து விஷயம் சொன்னதிலிருந்து யோஜித்துக் கொண்டிருக்கிறேன்,. முதலில்  உலகமே இருண்டுப் போய் விட்டது போல்தான் இருந்தது எனக்கு.  உங்களை விட்டு வேறே யாரோடும் வாழமுடியாது என்று இறைந்துக் கத்த வேண்டும் போல் இருந்தது. இப்பொழுது கூட நாம் இருவரும் மணம் செய்து கொண்டு இங்கிருந்து சென்று விட முடியும். 

உங்களுக்கு வேலை இருக்கிறது. நாம இருவரும் குடித்தனம் நடத்த  அது போதும். ஆனால் திருமணம் ஆன பின் நாம் எவ்வள்வு நாட்கள் மகிழ்சியாக இருக்கமுடியும். குற்ற உணர்வு நம்மை மகிழ்ச்சியாகத்தான்  வாழ விடுமா? அதற்கு அப்புறம் இந்தக் குடும்பம் என்ன ஆகும். இவ்வளவு நாட்கள் எங்களுக்காகவே வாழ்ந்த என்னோட அப்பாவின் நிலமை என்னஆகும். 

கடனைக் கட்ட முடியாமல் ஊரார் முன் கூனிக் குறுகி அவர் வாழ்வாரா? இல்லை தற்கொலைக்கு தள்ளப்படுவாரா? அதன் பின். என் தம்பியின் வாழ்க்கை. அவனை நினைத்தால்தான் எனக்கு ரொம்பக் கவலையாக இருக்கிறது. எல்லாவற்றிர்கும் மற்றவர்களை எதிர்பார்க்கும் அவனை யார் பார்த்துக் கொள்வார்கள். இதெல்லாம் யோஜித்து நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். “ 

மேலும் அவள் பேச ஆரம்பிக்கும் முன்பே ராகவ் அவளை கைகளால் நிறுத்தி தானே பேச ஆரம்பித்தான். “ ஜானு !உன்னை எனக்குத் தெரியாதா? நீ வேறுமாதிரி யோஜித்திருந்தால் தான் நான் ஆச்சரியப் பட்டிருப்பேன்.  அதுவும் தவிர  நீ யோஜித்தது போலவே தான் நானும் யோஜிச்சேன், 

‘நாம்’ என்பது நானும் நீயும் மட்டுமல்ல –‘நாம்’ என்பது நானும், நீயும் மற்றும்   நம் குடும்பமும் சேர்ந்ததுதான். அதனால் நாம் எடுக்கும் எந்த முடிவும் நம் குடும்பத்தைப் பாதிக்கக்கூடாது என்று  நானும் உன்னைப் போலவே  நினைக்கிறேன். அதனால் நீ எடுக்கும் அதே முடிவைத்தான் உன் நிலையில் நான் இருந்தாலும் என் நிலையில் நீ இருந்தாலும்  எடுத்திருப்போம். 

ஆனால் ஒன்றே ஒன்று தான் எனக்கு உறுத்துகிறது. நீ அந்த தறுதலை பொறுக்கி வெங்கடேசனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போவதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “ ராகவ் வாயால் தைரியமாகப் பேசினானே தவிர அவன் கண்களில் அவனே அறியாமல் கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது. 

அதே மாதிரி ஜானகியும் அவளையும் அறியாமல் கதறி அழத் தொடங்கினாள். இருவரும் அழுது அழுது தங்களைத் தேற்றிக் கொண்டனர். அதன் பிறகு காரியங்கள் வேகமாக நடந்தன. ஜானகி சம்மதம் சொன்னதை முதலில் நம்பக்கூட இல்லை அவள் தந்தை. அவள் திரும்பவும் சொன்ன பிறகும் அவர் மனதில்  மிகுந்த வேதனையுடன் தான் பெரியதனக்காரர் காசிநாதனிடம் கல்யாணத்திற்கு சம்மதம் கூறினார். 

பிறகு என்ன = வெங்கடேசனுடம் ஜானகி கல்யாணம் விமரிசையாகத்தான் நடந்தது.  பெரியதனக்காரர் தான் சொன்னபடியே கடனை ரத்து செய்து கடன் பத்திரத்தை ஜானகியின் தந்தையிடம் திருப்பிக் கொடுத்து விட்டார், ஜானகியின் தந்தை கல்யாணம் முடிந்து அவளை புகுந்த வீடு  அனுப்புவதற்கு முன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டு, 

“ஜானகி எனக்குத் தெரியும் நம்ம குடும்ப நன்மைக்காகத்தான் நீ இந்த கல்யாணம் செய்து கொண்டாய் என்று – ஆனால்  நீ முயன்றால் வெங்கடேசனைத் திருத்தி ராணி போல வாழலாம்,. பெண்கள் நினைத்தால் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை, அதனால் சீக்கிரமே நீ மாப்பிள்ளையோடு உன் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழறதை நான் பார்க்கணும்” என்று வாழ்த்தி அனுப்பினார். 

அவள் புகுந்தவீட்டிற்கு கிளம்பும் முன்பு ராகவன் அவளைப் பார்த்த பார்வையில் காதல்  இன்னும் மறையவில்லை. ஆனால் அதையும் மீறி வேதனையும் தெரிந்தது. அவளுக்குத் தெரியும் அந்த வேதனை அவளை பிரியப் போவதால் மட்டும் இல்லை அவள் வெங்கடேசனுடன் வாழப் போகும் நரக வாழ்க்கைக்கும் தான். 

ஜானகி மட்டுமல்ல ராகவன் உட்பட எல்லோருமே வெங்கடேசனுடன் அவள் வாழப் போகும் வாழ்க்கை தான் நரகமாக இருக்கும் என்று நினைத்துக் கவலைப் பட்டார்கள் – ஆனால் அவர்களுக்குத் தெரியாது அவள் புகுந்த வீடே அவளுக்கு நரக வேதனை தரப் போகிறது என்று. 

சரி ! அடுத்த அத்தியாயத்தில் ஜானகியின் புகுந்த வீட்டில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமா? 

*********

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page