ஏதேதோ எண்ணத்தில் உழன்று கொண்டிருந்தவளின் விழிகள் அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த குடும்ப புகைப்படத்தில் நிலைத்தது.
குட்டியாக ஒரு குளியலை போட்டுவிட்டு வேறு உடைக்கு மாறி பூத்துவாளையில் தன் முகத்தை துடைத்துக் கொண்டே வெளியே வந்தவனின் பார்வையில் வரி வடிவமாய் விழுந்தால் அவள்.
அவளின் பின்னோடு வந்து நின்றவன். அவளின் தோளில் இருபுறமும் தன் கரங்களை அழுத்தமாக பதித்தவாறு, “இந்த வீட்டுடைய கிரகப்பிரவேச பங்ஷன்ல எடுத்த ஃபேமிலி போட்டோ இது. அண்ணா கல்யாணத்தப்போ எடுத்த ஃபேமிலி போட்டோல அண்ணியும் கூட இருப்பாங்க. அது ஹால்ல மாட்டி இருக்கோம்” என்றதும் அவளின் விழிகள் இப்பொழுது அவனில் நிலைக்க.
“ஒவ்வொரு விசேஷத்தப்பவும் ஃபேமிலி போட்டோ எடுக்கிறது எங்களுடைய வழக்கம். சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். இப்போ அண்ணாவுக்கு பாப்பா பிறந்த பிறகு இன்னும் ஃபேமிலி போட்டோ எடுக்கல. இப்போ நீ வேற நம்ம வீட்டுக்கு புதுசா வந்து இருக்க இல்ல.. திரும்பவும் எல்லாரும் சேர்ந்து ஒரு ஃபேமிலி போட்டோ எடுத்து அதையும் இதுக்கு பக்கத்துல மாட்டலாம்” என்றான் அவளுடன் நெற்றி முட்டி.
அவளின் கண்களோ அத்தனை எதிர்பார்ப்பும், ஒரு வித ஏக்கமும் என பிரதிபலிக்க. அத்தனையும் தனக்குள் சுருட்டி கொண்டான்.
அவனின் கனிவான பார்வையிலும், அன்பான வார்த்தையிலும் மற்றைய சிந்தனைகள் அனைத்தும் பின்னோக்கி தள்ளப்பட்டு விட்டது.
அவளின் தலை தானாக ‘சரி’ என்பது போல் ஆட.
அவனின் புன்னகையும் விரிந்தது.
“சரி, நான் கொஞ்சம் வெளியில போய் உனக்கு தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரேன். உனக்கு வேற ஏதாவது வேணுமா?”.
“ம்கூம்” என்று மறுப்பாக தலையாட்டினாள்.
அவளின் முகமே அத்தனை கலைப்பாய் காட்சியளித்தது. ஒரே நாளில் எத்தனை விஷயங்களை கடந்து வந்திருக்கிறாள். உடல் சோர்வுடன் மன சோர்வும் சேர்ந்து கொள்ள யஷ்வந்த் வெளியேறியதும் என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையில் அமர்ந்திருந்தவளின் கண்களை சுழட்டியது உறக்கம்.
அப்படியே படுக்கையில் படுத்தவள் உறங்கியும் போனாள். ஒருவித மன நிறைவான உறக்கம் அவளின் விழிகளை தழுவி இருந்தது.
எப்பொழுதும் அவளை ஆட்டி படைக்கும் ஒரு வித அச்ச உணர்வு இப்பொழுது அவளிடம் இல்லை. அவளின் முகமே தெளிவாய் இருந்தது.
*****
“என்ன பரமு எதுக்கு இன்னும் அதையே நினைச்சுக்கிட்டு இருக்க. அதையே யோசிச்சு உன் உடம்பை கெடுத்துக்க போற மா” என்றார் திரு மூர்த்தி.
“என்னால இதை ஜீரணிக்கவே முடியலங்க. அதுவும் நம்ம யஷ்வந்தா இப்படின்னு நினைக்கும் பொழுதே நெஞ்சை அடைக்கிற போல இருக்கு. எல்லாருக்கும் என்ன பதில் சொல்றது.. இந்த வருஷத்துக்குள்ள யஷ்வந்துக்கு கல்யாணம் முடிஞ்சிடும்னு நம்ம குலதெய்வ கோவிலில் சாமி ஆடி சொன்னாங்க. நாமலும் சந்தோஷமா அவனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சோம். கடைசியில அவன் கல்யாணம் இப்படி ஆகிப் போயிடுச்சே” என்றவருக்கு மித மிஞ்சிய வருத்தமே இருந்தது.
“அதான் பண்ணிக்கிட்டு வந்துட்டானே.. இனி அதை பத்தி பேசி மட்டும் என்ன ஆகிட போகுது?”.
“அதுக்காக இதை அப்படியே விட சொல்றீங்களா?”.
“வேற என்ன பண்ண முடியும்”.
“சரி, ஐயனார் அண்ணா கோவில் போயிருக்காரு. ஒரு வாரம் கழிச்சு குடும்பமா வரோம்னு சொல்லி இருக்காங்க. அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?”.
“எனக்கும் அதே யோசனையா தான் இருக்கு பரமு. அவர் கேட்டதும் கோவிலுக்கு போயிட்டு வாங்க மேற்கொண்டு பேசுவோம்னு சொல்லிட்டோம். இப்போ இந்த நேரம் பார்த்து இவன் இப்படி பண்ணிட்டான். இப்ப அவர் வந்தார்னா அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே” என்றவாறு தன் கைகளை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தார் திருமூர்த்தி.
“நம்மள இப்படி ஒரு நிலைமையில நிறுத்திட்டானேங்க இவன். அதுவும் அந்த பொண்ணு யாரு என்னன்னு கூட தெரியல. இப்படி ஏதோ ஒரு பொண்ண இழுத்துக்கிட்டு வந்து இருக்கானே” என்ற பரமேஸ்வரியின் புலம்பல் மட்டும் நின்ற பாடில்லை. நினைத்து நினைத்து தன் மகனின் செயலை வைத்து புலம்பி தள்ளிவிட்டார்.
அய்யனார் பரமேஸ்வரியின் பெரியப்பா மகன். அண்ணன் முறை.. உடன்பிறந்த அண்ணன் இல்லாவிட்டாலும், அண்ணன் ஸ்தானத்திலிருந்து பரமேஸ்வரிக்கு அனைத்தையும் எடுத்து செய்வது அவர் தான்.
அதனாலேயே அவர் மீது உடன் பிறந்த அண்ணனை போல் அத்தனை பாசம் பரமேஸ்வரிக்கு.
யஷ்வந்திற்கு பெண் பார்க்கும் விஷயம் தெரிந்ததும் அவராக முன்வந்து திருமண பேச்சை எடுக்கவும், பரமேஸ்வரிக்குமே அத்தனை திருப்தி தான்.
இப்படி எல்லாம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை. அய்யனார் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவில் செல்ல இருப்பதாக கூறவும். கோவில் சென்று விட்டு திரும்பியதும் திருமண பேச்சை பற்றி பேசிக்கொள்ளலாம் என்று பேசி வைத்திருந்தனர்.
ஆனால், இப்பொழுது என்ன பேச என்று விழி பிதுங்கி போய் அமர்ந்திருக்கின்றனர்.
திருமூர்த்திக்கும், பரமேஸ்வரிக்கும் தெய்வ பக்தி அதிகம். விரதங்கள், பூஜை புனஸ்காரங்கள் என ஒன்று விடாமல் அத்தனை பய பக்தியோடும், சுத்தபத்தமாகவும் பார்த்து பார்த்து செய்பவர்கள்.
மேலும், சொந்த பந்தங்களுக்கும் மதிப்பும், மரியாதையும் கொடுப்பவர்கள். ஏதேனும் ஒரு விசேஷம் என்றால் அனைவரையும் அழைத்து ஒன்று கூடி தான் செய்வார்கள்.
அனைவரிடத்திலும் அத்தனை இணக்கமாக பழகக் கூடியவர்கள். யஷ்வந்தின் இத்தகைய செயலில் இப்பொழுது எப்படி மற்றவர்களுக்கு பதில் கூறுவது என்ற எண்ணமே அவர்களை வெகுவாக பாதிப்படையச் செய்தது.
அன்றைய இரவு யாருக்குமே பசி இல்லை. ஆனாலும், அப்படியே படுக்க முடியாதே..
வெகு நேரம் கழித்து கலை இழந்த முகத்தோடு அறையிலிருந்து வெளியே வந்த பரமேஸ்வரி அனைவருக்குமாக தேங்காய் சட்னி மட்டும் செய்தவர், இட்லியை ஊற்றி வைத்தார்.
பவித்ராவிற்கு அத்தியாவசிய தேவைக்காக இரண்டு சுடிதார் செட்டும், பிரஷ், சோப் என முக்கியமானதை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்த யஷ்வந்த் நேரே சமையலறை சென்று, “என்னம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” என்றவாறு சமையலறையின் மேடை மீது ஏறி அமர்ந்தான்.
இது எப்பொழுதும் அவர்களின் வீட்டில் அன்றாடம் நடக்கும் வழமை தான். பெரும்பாலும் பரமேஸ்வரி சமைக்கும் பொழுதுகளில் அவருடன் சமையல் மேடையில் அமர்ந்து கொண்டு ஏதாவது வளவளத்து கொண்டே இருப்பான் யஷ்வந்த்.
இன்றும் வழமை போல் அவன் செய்ய. அவருக்கு தான் அதை ஏற்க முடியவில்லை.
மூக்கு விடைக்க அவனை முறைத்து பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டார்.
தன் தாயின் சுட்டெரிக்கும் பார்வையில் மேடையில் இருந்து இறங்கியவன் அறைக்கு சென்று விட்டான்.
அறைக்குள் நுழைந்தவனின் விழிகள் பவித்ராவை தேட. கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவளை கண்டவன், அவளின் உறக்கம் கலையாதவாறு மெதுவாக தான் வாங்கி வந்த பொருட்களை டேபிளின் மீது வைத்துவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
நேற்று எத்தனை பேசியிருந்தாள்.
எவ்வளவு உணர்வுகள் அவளின் முகத்தில் தோன்றி மறைந்தன..
எப்படிப்பட்ட வலிகளை எல்லாம் இப்பெண் கடந்து வந்திருக்கிறாள் என்பதை எண்ணும் பொழுதே அவனின் உள்ளம் அவளின் பால் மெழுகை போல் உருகியது.
இவளிடத்தில் வேறொரு பெண் இருந்திருந்தாலும் தான் இப்படித்தான் செய்திருப்போமா என்ற கேள்விக்கெல்லாம் விடை தேட அவன் மனம் முனையவில்லை.
அந்த நொடி, அவளை அப்படி காணவும் அவனுக்கு அவளை அவனுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
செய்து கொண்டான்.. அதை தவிர்த்து அதைப் பற்றி பெரிதாக சிந்திக்க முனையவில்லை.
ஒருவேளை, அவள் மீது தனக்கு காதலோ..
காதலா என்று எண்ணும் பொழுதே அவனின் இதழில் மெல்லிய புன்முறுவல், மனதின் ஓரத்தில் கொஞ்சமாய் மழைச்சாரல் நனைத்தது.
அதற்கும் பதில் இல்லை.
அவளின் முகத்தையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டு அவன் தனக்குள்ளேயே சிந்தனையில் இருக்கவும்.
அவனை சோதிக்கும் விதமாக அவளின் காதுக்கடியில் அடங்காத சுருட்டை முடி கற்றை அவளின் முகத்தில் தவழ்ந்து அவனை சோதித்துப் பார்த்தது.
உறக்கம் கலைந்தவளின் விழிகள் முதலில் அதிர்ந்து.. பிறகு, ஆராய்ந்து.. அதன் பின் சுதாரித்து என அவளின் விழிகளில் ஒருவித நிம்மதி உணர்வு படர்ந்தது.
அவளின் உணர்வுகள் அனைத்துமே அவனுக்குள் தப்பாமல் ஊடுருவியது.
“எப்ப வந்தீங்க?” என்றவாறு அவள் எழுந்து அமரவும்.
“இப்போ தான். உனக்கு மாத்திக்க டிரஸ் வாங்கிட்டு வந்து இருக்கேன் இந்தா” என்றவாறு அவளிடம் ஒரு பையை திணித்தவன், “இதை மாத்திக்கிட்டு வா சாப்பிட்டு வந்து தூங்கலாம்”.
அதனைத் தொடர்ந்து அவன் வாங்கி வந்த உடையுடன் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டவள். சற்று நேரத்தில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வேறு உடைக்கு மாறி வெளியே வந்தாள்.
அவளையும் அழைத்துக் கொண்டு அவன் ஹாலிற்கு வரவும். அங்கே ஏற்கனவே அனைவரும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.
“என்னம்மா கூப்பிட்டு இருக்கலாம்ல” என்றவாறு இயல்பாய் அவர்களை நெருங்கியவன் அங்கே வீற்றிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு சற்று தள்ளி நின்றிருந்த பவித்ராவை பார்த்து, “ஏன் அங்கேயே நின்னுட்ட.. வா சாப்பிடலாம்” என்றான் தன் அருகில் இருக்கும் இருக்கையை கண்களால் காண்பித்து.
அவளோ தயங்கி தயங்கி அவர்களை நெருங்கவும்.
திருமூர்த்தி எதுவுமே பேசவில்லை.
பரமேஸ்வரி அவளை நிமிர்ந்து அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தாரே தவிர்த்து எதுவும் கூறவில்லை.
அந்த ஒற்றை பார்வையே அவளை அங்கேயே நில் என்பது போல் எட்ட நிறுத்தியது.
அவரின் பார்வையை உணர்ந்து சற்று தள்ளியே நின்று விட்டவள், “எனக்கு பசி இல்ல.. இப்போ தானே எழுந்தேன். நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன். நீங்க சாப்பிடுங்க” என்று விட்டு சற்று தள்ளி நின்று கொண்டாள்.
யஷ்வந்திற்கு நடப்பது அனைத்தும் புரிந்தது. ஆனாலும், அனைத்தும் ஒரே நாளில் அப்படி ஒன்றும் மாறிவிடாதே. இதை எல்லாம் கடந்து தானே ஆகவேண்டும். அவர்களுக்கான அவகாசத்தையும் கொடுக்க வேண்டும் அல்லவா.
“விளக்கு வைக்கிற நேரத்துல இப்படி தூங்கினா வீடு விளங்குன மாதிரி தான்” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு அவளை முறைத்துக் கொண்டே கூறினார் பரமேஸ்வரி.
அவரின் வார்த்தையில் பவித்ராவிற்கு தான் ‘ஐயோ’ என்று ஆகிவிட்டது.
“டிராவல் பண்ணதுல கொஞ்சம் டயர்ட் ஆகிட்டாமா அதான்..” என்று அவளின் சார்பாக பேசி இருந்தான் யஷ்வந்த்.
“இழுத்துகிட்டு வந்தா மட்டும் போதாது. நம்ம குடும்பத்துக்குனு ஒரு பாரம்பரியம் இருக்கு. நடைமுறை, பழக்கவழக்கமெல்லாம் இருக்கு. அதை எல்லாம் சொல்லிக் கொடுக்கணும். இப்படி உங்க இஷ்டத்துக்கு நடந்துக்க இது ஒன்றும் சத்திரம் கிடையாது. இந்த வீட்ட கோவில் மாதிரி தான் நானும் அப்பாவும் பார்க்கிறோம். எங்களுக்கு அப்புறம் நீங்களும் அப்படித்தான் அதை வச்சிருக்கணும்” என்றவரின் பார்வை இப்பொழுது அழுத்தமாக பவித்ராவில் படிந்தது.
அவரின் வார்த்தையை வைத்து அவர் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பது பவித்ராவிற்கு சற்றும் விளங்கவில்லை.
இப்பொழுது தான் அவருக்கு பதில் உரைக்க வேண்டுமா இல்லையா என்று கூட விளங்காமல் மருண்ட விழிகளோடு நின்றிருந்தாள்.