காதலாகும் 23:
நாட்கள் அழகிய கவிதையாய் விற்றுத் தீர்ந்தன…!
மனம் நிறைய நிறைய காதலை சுமந்து கொண்டு அவள் அவனை விலக்கித் தள்ளிக் கொண்டிருக்க..அவனோ மோகத்தாலும் தாபத்தாலும் அவளை நெருங்க துடித்துக் கொண்டிருந்தான்.
விஸ்வேஷ்வரனின் பார்வை வேத வர்ஷனின் மேல் இருந்து கொண்டேதான் இருந்தது.இருந்தாலும் பெண்களை விற்று பணம் சம்பாதிக்கும் அவனது ஈனச்செயலை விஸ்வேஷ்வரனால் கண்டறிய முடியவில்லை.அவன்தான் எதிலுமே நேரடியாக தலையிடவில்லையே…
பெண்களை சுமந்து கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் கூட தொழில் சம்பந்தமான பொருட்களை சுமந்து செல்கிறது என்ற போர்வையின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்ததினால் அவ்வளவு சீக்கிரம் யாராலும் அதைக் கண்டறிய முடியவில்லை.
இதற்கிடையில் கல்லூரியில் படிக்கும் இரண்டு பெண்களை காணோம் என்று அன்று திவ்யா சொன்னது வேறு அவ்வப்போது நினைவுக்கு வந்து கொண்டேயிருந்தது. பெற்றோர்களும் புகார் கொடுக்கவில்லை. வேறு எந்த ஆதாரங்களும் இல்லை எனும் போது விசாரணையை கொண்டு செல்வது என்பது அவனுக்கு குழப்பமாகத்தான் இருந்தது.
புகார் அளித்தால் விசாரிக்கலாம்..புகார் எதுவும் வரவில்லை எனும் போது அதில் மூக்கை நுழைப்பது வேறு பல விஷயங்களை கிளறி விடும் என்பதால் அவன் அமைதி காத்தான்.மற்றபடி அவனுக்கு பயமெல்லாம் இல்லை.கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மற்ற மாணவர்களுடைய படிப்பு வீணாகக் கூடாது என்ற எண்ணத்தில்தான் அமைதியாய் இருந்தான்.
இப்படியாக நாட்கள் விரைந்து கொண்டிருந்த சமயத்தில்தான் ஒரு கொலை கேசுக்கான விசாரணை அவனிடம் வந்தது.கொலையா..? தற்கொலையா…? என்று கண்டுபிடிப்பதில் நாட்கள் ஓடிக் கொண்டிருக்க. வீட்டில் அவன் செலவழிக்கும் நேரம் வெகுவாக குறைந்திருந்தது.
முழுதாக இரண்டு மாதங்கள் கடந்துதான் அது கொலை என்று கண்டறியப்பட்டு. குற்றவாளி பிடிக்கப்பட்டான். அந்தளவிற்கு தலைவலியை அனைவருக்கும் அந்த கேஸ் தந்திருந்தது.
எப்படியோ விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியவனுக்கு உடலெல்லாம் அசதியாய் இருந்தது.அதை விட..மனம் பெரும் சோர்வில் இருக்க..தன் மனப்புழுக்கத்திற்கு வடிகாலாய் அவன் உடல் தன்னவளின் நெருக்கத்தை எதிர்பார்த்தது.
அவள் அவகாசம் கேட்டு இன்றோடு மூன்று மாதங்கள் ஓடியிருக்க..அவள் பதில் என்னவாக இருக்கும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்குள் முளைவிட்டது.அவனது உணர்வுகள் வேறு வெகு நாட்களுக்குப் பிறகு அவளை கேட்டு இம்சிக்க, ‘இன்னைக்கு இதுக்கு ஒரு ஃபுல்ஸ்டாப் வைக்கிறேன்….’,நினைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தவனை வரவேற்றது என்னவோ ரகுவரனும் கலாவதியும் தான்.
“வாங்க அத்தை…வாங்க மாமா…!”,அவர்களை வரவேற்றவன் குளித்து விட்டு வருவதாக கூறிவிட்டு மாடியேறினான்.
யாழ்வியை கையிலேயே பிடிக்க முடியவில்லை. திருமணத்திற்குப் பிறகு முதன் முறையாக தனது பெற்றவர்கள் தன் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்..அந்த சந்தோஷத்தில் திரிந்தாள்.அவள் அம்மாவை அமர வைத்து தான் கற்றுக் கொண்ட நள பாகங்களை அவரிடம் காட்டினாள்.
குளித்து விட்டு இரவு உடையை அணிந்தபடி கீழே வந்தவன்..சோபாவில் அமர்ந்திருந்த ரகுவரனைக் கடந்து சமையலறைக்குச் செல்ல சங்கடமாக இருக்கவும் அவரருகில் அமர்ந்தான்.
“அப்புறம் மாப்பிள்ளை.. வேலையெல்லாம் எப்படி போகுது…?”,இருவரும் அரசியல் தொழில் என்று பேச ஆரம்பித்து விட..யாழ்வியும் அவளது அன்னையும் சமையலறையில் இருந்தனர்.
அவனால் யாழ்வியின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை.மாமனார் பேச்சு வார்த்தையில் பிடித்து வைத்துக் கொண்டார்.
இரவு உணவாக இடியாப்பம்..கடலைக் கறி..சப்பாத்தி என தயாராகியிருந்தது. பரிமாறும் போதுதான் அவளைப் பார்த்தான்.இடையிடையே அவளை நிமிர்ந்து பார்த்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை அவள் கவனித்து விட்டாள்.
யாரும் அறியாமல்,’என்ன…?’,என்று வினவ,அவளை ஒரு மாதிரி ஏக்கமாக பார்த்தவன் ஒன்றும் பேசாமல் உணவில் ஆழ்ந்தான்.
அந்தப் பார்வை அவளை என்னவோ செய்தது.
“இன்னொரு சப்பாத்தி வைம்மா…!”,தந்தையின் குரலில் கவனம் அவர் புறம் திரும்ப அவள் அந்தப் பார்வையை மறந்தும் போனாள்.
சாப்பிட்டு விட்டு மாமனாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவன் உறக்கம் வருவதாக கூறிவிட்டு அறைக்குள் சென்று விட்டான். எப்படியாக இருந்தாலும் அவள் அறைக்குள்தானே வருவாள் என்ற எண்ணம் அவனுக்கு.
நேரம் விரைந்து கொண்டிருந்ததே தவிர அவனது மனையாள் வந்த பாடாக இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் கீழேயே இறங்கி சென்று விட்டான்.
கீழே இருக்கும் அறையில் அவளது பெற்றோர்களுடன் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தாள். இவன் வந்து எட்டிப் பார்க்கவும் கலாவதி அவசர அவசரமாக எழுந்து நின்றார்.
“இல்ல..பரவாயில்லை…! படுங்க அத்தை..”,என்றவன் யாழ்வியை நோக்கி,”நேரமாச்சு… படுக்க வரலையா…?”,என்றான்.
“இல்லை…இன்னைக்கு நான் அம்மா அப்பா கூட படுத்துக்கிறேன்…! நீங்க போய் தூங்குங்க…!”,அவள் கூறி விட அவனுக்கும் ஏமாற்றம் தான்.
இருந்தாலும் ‘சரி’ என்று விட்டு வந்து விட்டான்.
அன்று அவளது வீட்டிலிருந்து அவளை அழைத்து வந்ததே அவனுக்கு சற்று குற்றவுணர்வாகத்தான் இருந்தது. தன்னுடைய சுய நலத்திற்காக அவளது ஆசைகளை நிராகரிக்கிறோமோ என்று எண்ணிக் கொண்டேதான் இருந்தான்.எனவே,இன்று பெற்றோர்களுடன் படுக்கிறேன் என்று சொன்னவுடன் மறுக்கத் தோன்றாமல் ‘சரி’ என்று தலையாட்டி விட்டு வந்து விட்டான்.
அவன்தான் அவளது அருகாமையில் படுத்து பழகி விட்டானே. உறக்கம் வர மறுத்தது. புரண்டு புரண்டு படுத்தவன் எப்படியோ உடல் அசதியில் நடு இரவுக்குப் பிறகு உறக்கத்தைத் தழுவியிருந்தான்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. விஷ்வாவுக்கும் விடுமுறை..பெற்றோர்களும் வந்திருக்கிறார்கள் என்று வீட்டில் அசைவ உணவு சமைத்திருந்தார்கள். மீன் வாங்கி வருவதற்காக தனது கணவனைத்தான் எழுப்பச் சென்றாள். ஆனால்..அசதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்ப மனம் வராமல் அப்படியே திரும்பி விட்டாள்.
அவளுக்கும் தெரியுமல்லவா.. கடந்த இரண்டு மாதங்களாக அவனுக்கு வேலை நெட்டி முறிக்கிறது என்று…!அவளது தந்தை ‘நான் சென்று எடுத்து வருகிறேன்’ என்றபடி கூடையைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டார்.
அவர் மீன் வாங்கி வந்து கொடுக்க..தாயும் மகளும் அதை சுத்தம் செய்யும் பணியில் இறங்கி விட.விஸ்வேஷ்வரன் அப்பொழுதுதான் உறக்கம் கலைந்து எழுந்து வந்தான்.
“எழுந்துட்டீங்களா மாப்பிள்ளை…”அவனிடம் சம்பிரதாயமாக முறுவலித்தவர் சமையலறையை நோக்கி குரல் கொடுத்தார்.
“அம்மா யாழ்வி…! மாப்பிள்ளை எழுந்துட்டார் பாரு…!காபி போட்டு கொண்டு வா …!”,
சமையலறையில் இருந்து வெளியே வந்தவள்,”ரொம்ப நேரமாகிடுச்சு…!காபி குடிக்கறதுக்கு சாப்பிடலாமே…?”,அவனிடம் தான் வினவினாள்.
வழக்கம் போல் ஷர்ட் வடிவிலான இரவு உடைதான் அணிந்திருந்தாள்.பேபி பிங்க் என்பார்களே அந்த நிறம்.அவளது வெண்மை சருமத்திற்கு வெகு எடுப்பாக இருந்தது. கலைந்த கூந்தலுடன்.. பொட்டு கூட வைக்காமல் நின்றிருந்தவளின் பேரழகு எப்பொழுதும் போல் அப்பொழுதும் அவனை ஈர்க்க அள்ளிப் பருகுவதைப் போல் அவளை பார்த்து வைத்தான்.
அவளுக்குத்தான் ஒரே சங்கடமாக போய்விட்டது.
‘அப்பாக்கு முன்னாடி இது என்ன பார்வை…?’, அவள் மனம் போலியாய் கோபம் கொண்டாலும் முகம் என்னவோ வெட்கத்தில் சிவந்துதான் போனது.
“சாப்பிடத்தான் வேணும்…!நீதான் தர மாட்டேங்கிறாயே…?”, ஒரு மாதிரிக் குரலில் அவன் கூற.. அவன் எதைக் கூறுகிறான் என்று அவளுக்குத் தெரியாதா..?அமைதி காத்தாள்.
“மாப்பிள்ளை எதைக் கேட்கிறாரோ..அதைக் கொடுக்க வேண்டியதுதானே ம்மா…?”,அவளது தந்தை வேறு விவரம் புரியாமல் குறுக்கே புகுந்தார்.
அவள் அவஸ்தையுடன் நெளிய..அவன் உதட்டோரம் குறும்புப் புன்னகை உதயமானது.
“நல்லா கேளுங்க மாமா…! நான் ஆசைப்படற சாப்பாட்டை மட்டும் தர மாட்டேங்கிறா…?”,அவன் மேலும் அவரை ஏற்றி விட,
“என்னம்மா இது…? வெளியில போய் வேலை செய்திட்டு வர மனுஷனுக்கு வாய்க்கு ருசியா அவரு கேட்கிறதை சமைச்சு கொடும்மா…!”,மகளிடம் கூறியவர் மருமகனிடம் திரும்பி,
“உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க மாப்பிள்ளை…!நான் கலாவை சமைச்சு தர சொல்றேன்…!”,அவர் கூற அவனுக்கு புரையேறி விட்டது.
‘இப்போ என்ன பண்ணுவ…?’, யாழ்வி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினாள்.
“அய்யோ..இல்லை மாமா…!அது உங்க பொண்ணால மட்டும்தான் தர முடியும்…!”,அவசர அவசரமாக கூறியவன் இதற்கு மேலும் விட்டால் இவர் பேசிக் கொண்டே இருப்பார் என்ற எண்ணத்துடன்,
“யாழ்வி..எனக்கு சாப்பிடு எடுத்து வை…!” என்றபடி எழுந்து கொண்டான்.
அவனுக்கு பரிமாறிவிட்டு அவள் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள். மீன் இப்பொழுதுதான் சமைக்கிறாள் என்பதால் தாயைக் கேட்டு கேட்டு ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டாள்.
சமைத்த உணவு வகைகளை டைனிங் டேபிளில் வைத்து அழகு பார்த்தவளுக்கு ஒரு சம்படா தேவைப்பட்டது.அது சமையலறையின் மேல் கப்போர்டில் இருக்கவும்..எட்டி எட்டி அதை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
ஸ்டூலை போட்டு ஏறி எடுத்து விடலாம்தான். ஹாலுக்கு சென்று ஸ்டூலை எடுத்து வர ஒரு சோம்பேறித்தனம்.எனவே,கையை எட்டி எடுத்து விடலாம் என்று எக்கி கொண்டிருந்தவளின் இடையை இரு வலிய கரங்கள் பற்றித் தூக்கின.
‘அய்யோ…’,என அலறப் போனவள் அந்தக் கரங்களுக்கு சொந்தக்காரன் தன்னவன் தான் என்பதை உணர்ந்து கொண்டு கத்தாமல் வாயை மூடினாள்.
முகத்தை மட்டும் திருப்பி அவனை பார்க்க.. அவனோ கண்களாலேயே ‘எடு..’ என்று சைகை செய்தான்.
வெற்றிடையில் அழுந்தப் பதிந்த அவனது கரங்கள் அவளுக்குள் இம்சையை தோற்றுவிக்க..அவஸ்தையாய் நெளிந்தபடியே மேலிருந்து சம்படாவை எடுத்து முடித்தாள்.
‘கீழே இறக்கி விடுங்க…!’,அவள் மீண்டும் முகத்தைத் திருப்பி அவனை நோக்க..அவன் மெதுவாக.. மிக மெதுவாக அவளை கீழே இறக்கி விட்டான்.அவளது பின்னுடல் மொத்தமும் அவனது மேனியில் உரச..இருவருக்குமே உணர்வுகள் தீப்பிடித்துக் கொள்ளும் நிலை.
திரும்பி நின்றிருந்தவளின் பின்னங்கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டவனின் கரங்கள் அவளது வயிற்றுப் பகுதியில் கோலம் போட..பெண்ணவளோ கூசி சிலிர்த்தாள்.
பின்னங்கழுத்தில் புதைந்த உதடுகள் முத்தம் வைத்துக் கொண்ட காது மடலை நோக்கி நகர..முன்னிருந்த கரமோ மேலும் முன்னேறியது.அவள் அணிந்திருந்த ஷர்ட் அவனுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது.
அவளால் நிற்கவே முடியவில்லை.கால்கள் தொய்ந்து சரிய..கீழே விழ இருந்தவளை தன்னுடன் சேர்த்து இறுக்கினான்.அது மேலும் அவளுக்கு அவஸ்தையைத்தான் அளித்தது. உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் இருந்த தன்னவனின் நிலை அப்பட்டமாய் அவளுக்குப் புரிய..அவளது மேனியில் ஒரு நடுக்கம்.
ஹாலில் தனது அம்மா அப்பா இருக்கிறார்கள் என்ற நினைவில் முயன்று தன்னை நிதானத்துக்கு கொண்டு வந்தவள், “இது என்ன..கிட்சன்ல போய்…”அவள் தடுமாற,
“அப்போ..நம்ம பெட் ரூம்ன்னா உனக்கு ஓகே வா…?”,கேட்டவனின் கரங்கள் தனது அழுத்தத்தைக் கூட்ட உதடுகளோ உணர்ச்சி மிகுதியில் அவளது காது மடலை கடித்து வைத்தது.
அவளால் தாங்கவே முடியவில்லை.கரங்களும் உதடுகளும் மாறி மாறி யுத்தத்தை தொடர..வெளியே வேறு பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள..எப்படியாவது அவனை விலக்க வேண்டும் என்ற நினைப்பில்,”ச..சரி…!”,என்று முணுமுணுத்தாள்.
அவளது ஷர்ட்டை சற்று பின்னிழுத்து பிடரியில் நச்சென்று முத்தம் வைத்தவன்,”பீ ரெடி ஃபார் தி நைட்…!” காதோரம் கிசுகிசுப்பாக உரைத்தவனின் சீறலான மூச்சுக்காற்றே அவனது தாபத்தைக் கூறியது.
அவளது மேனியில் பதிந்திருந்த கரங்களுக்கு வேகமாக அழுத்தம் கொடுத்தவன் பட்டென்று அவளை விட்டு விலகிச் சென்று விட்டான்.அவளுக்குத்தான் நிலைக்கு வர நிமிடங்கள் பிடித்தது.
எப்படியோ நேரம் விரைய அவள் ஒரு மார்க்கமாகத்தான் சுற்றிக் கொண்டிருந்தாள்.அப்போதைக்கு அவனை விலக்குவதற்காக சரி என்று சொல்லி விட்டாளே தவிர இரவை நினைத்து அவளுக்குப் பயம்தான்.
அவள் அவனை உயிர் நிறைய நிறைய காதலிக்கிறாள் தான்..ஆனால்,அவன் அவளை காதலிக்கவில்லையே…?காதல் இல்லாமல் எப்படி அவனுடன் ஒன்றுவது.. மனம் வேறு விடாப்பிடியாய் தடுத்தது.அதையும் மீறி தாம்பத்திய பாடத்தை எண்ணி அடி வயிற்றில் குறுகுறுப்பு மூழ..அவளது நிலையை அவளாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.
அவன் வேண்டும் என்கிறோமா..இல்லை வேண்டாம் என்கிறோமா அவளுக்கே அது தெரியவில்லை.அவனது தொடுகையும் கிசுகிசுப்பான குரலும் அதற்கு மேல் அவள் மனதில் இருக்கும் அவன் மீதான காதலும்..அவனுடன் ஓருயிராய் கலந்து விடச் சொல்லி அவளை ஓயாமல் இம்சித்தது.
இன்னொரு மனமோ.. ‘வேண்டாம்… இன்று ஆரம்பித்தால் அது தொடர்கதையாகி விடும்…!அவன் மனதில் காதல் இல்லாமல்..வெறும் காமத்துக்காக மட்டுமே உன்னுடன் கூடுகிறான்… இந்த நினைவே உன் மனதைக் கொன்று விடும்…இது வேண்டாம்…!’என்று அறிவுறுத்தியது.
மண்டையைக் குழப்பி யோசித்தவள் இறுதியாக ஒரு முடிவிற்கு வந்திருந்தாள்.என்ன நடந்தாலும் சரி..காதல் இல்லாமல் கட்டிலில் என்னால் அவனுடன் இணைய முடியாது.. மனதிற்குள் முடிவெடுத்தவள் அதில் உறுதியாக இருந்தாள்.
தொடரும்…
