அத்தியாயம் 2
உடலும் மனமும் முழுக்க முழுக்க வேதனையின் மையப் புள்ளியில் சிக்கியிருந்தாலும் அந்த வெண்பட்டு விரல்களின் ஸ்பரிசம் அவனை சுயநினைவோடு வைத்திருந்தது..
விதுரனின் மனம் அவனின் கடந்த கால நிகழ்வுகளை தூக்கி சுமக்கத் தொடங்கியது.
சிறு சிறு வெண்மேகக் கூட்டத்தில் சிக்கித் திணறும் சூரிய கதிர் வீச்சுகள் போல் விதுரன் அவனின் சப்த நாடியும் ஸ்தம்பித்திருந்த தருணங்கள். தன் வாழ்க்கை மொத்தமும் அவளின் அவரைப் பிஞ்சு பாதங்களுக்கு சமர்ப்பணம் என்ற அக்மார்க் காதல் கொள்கையோடு வாலிப பருவத்தின் முறுக்கில் வலம் வந்த நாட்களை எண்ணிப் பார்க்கத் துடித்தது அவனின் ரணம் நிறைந்த இதயம்.
அந்நாட்களின் வெகுவான நேரங்களில் அவனுக்கு அவள் ஒற்றை நாழி கடைக்கண் பார்வை மட்டுமே போதும். அவன் பிறவியெடுத்த பலன் தீரும் என்று பெருமிதப் பட்டுக் கொள்வான்.
அவனின் ஐந்தரை அடி உயரமும், மனதை கட்டுக்குள் கொண்டுவரும் சாந்தமான விலோசனங்களும், துரு துரு என்று ஓரிடத்தில் நிற்காத கால்களும், பர பர என்று ஏதேனும் ஒன்றை யோசிக்கும் மூளையும் என அனைத்துமே அவள் வசம் தான்.
யார் அவள்?.. அதோ வருகிறாளே மொத்த சாலையையும் குத்தகைக்கு எடுத்தாற் போல் நட்ட நடுவில் சிவப்பு நிற தாவணியில் வெள்ளை நிறப் பூக்களை அள்ளித் தெளித்து, அதற்கு துளியும் சம்மந்தம் இல்லாத நீல நிற ரவிக்கையை அணிந்து, எண்ணெய் தேய்த்த கூந்தலில் இரட்டை ஜடையை நீல நிற ரிப்பன் கொண்டு இறுக்கிக் கட்டியவாறு, கையில் இரண்டு நோட்டு புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து இறுக்கிப் பிடித்து பாவாடை தடுக்கி விடுமோ என்று பயந்தவாறே தரையை பார்த்து நடந்து வருகிறவளிடம் இரண்டு வருடங்களாக மனதை பறிகொடுத்து, அவள் பாதச் சுவடுகளை தன் கரம் கொண்டு தாங்கும் நேரத்திற்காக காத்திருக்கிறான் விதுரன்.
வீதியெங்கும் மனிதத் தலைகள். பயந்த சுபாவம் கொண்ட பதுமை இவள். நிமிர்ந்து பார்க்கவே பல மணித் துளிகள் எடுத்துக் கொள்வாள். பார்க்கும் நொடியில் விலோசனங்கள் விரிந்து கொடுக்கும். கோலி குண்டு கண்களுக்குள் இவள் தீட்டும் மையோ தவம் கிடக்கும் எப்போது இவள் விரல் என்னைத் தீண்டும் என்று.
எண்ணி எண்ணி உதிர்க்கும் வார்த்தைகள் அவள் உதடுகளுக்கே எட்டாது.. இதழ்களை அசைக்காமல் வரும் பேச்சுக்கு அவள் அன்புக் கூட்டம் அடிமை. கணக்கிட்டு பேசும் வார்த்தைகள் ரௌத்திரத்தில் மட்டும் எண்ணில் அடங்காமல் வரும். வேற்று மத கொள்கையில் வளர்க்கப்பட்ட துளசி மாடம் இவள்.
இவளிடம் பணிவும்,துணிவும் பாய் போட்டு உறங்கும். தாய் தந்தை இருவரும் பச்சிளம் வயதில் பறிபோய்விட, சித்தி, சித்தப்பாவின் ஆதரவில் ஆளாகி நிற்கும் இளமாஞ்செடி இவள்.
இந்த இளமாஞ்செடியை வேரோடு எடுத்து தத்தம் தோட்டத்தில் வைத்துக் கொள்ள பலர் போட்டா போட்டி போட்டாலும் இச்செடியோ அசைந்து கொடுப்பதாய் இல்லை.
ஒருவகையில் பார்த்தால் இந்த ஒத்தச் செடிக்கு காவல் காரனே இந்த துள்ளித் திரியும் காளை.
அடிப் பிரதட்சணம் செய்வது போல் ஒருவழியாய் சாலையை கடந்து பள்ளி வாளகத்திற்குள் நுழைந்தாள். பள்ளிப் படிப்பு முடித்து வாங்கிய மதிப்பெண் சான்றிதழை பெருமிதத்தோடு எடுத்து பார்த்து ரசித்து சிரித்தாள்.
அவளைப் பின் தொடர்ந்த விதுரனோ அவளிற்கு அருகில் சென்று நின்றான்.
“ஹாய் மீரா” என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் வெறும் காற்றுதான் வந்தது.. சப்தம் குரல் வளையை விட்டு வந்த பாடில்லை. முயற்சி செய்தான்.
“ஹா…ஹா….ய்” ஒருவழியாய் இழுத்துப் பேசினான். அவனைப் பார்த்ததும் மிகச் சாதாரணமாய் “வாடா நல்லவனே! இப்ப கண்ணு தெரியுதா உனக்கு? ஏன்டா ரிசல்ட் அப்ப ஸ்கூல் வராம ஒரு மாசம் கழிச்சு வந்து நிக்கிற?..போ நான் உன் கூட பேசமாட்டேன்ப்பா” முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளோடு சத்யாவும் சேர்ந்து கொண்டான். “ஆமா மீரா சாருக்கு வெட்டி முறிக்கிற வேலை..அதான் வரல” அவன் கோபத்தையும் சேர்த்துக் கொண்டான்.
“டேய் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. அப்பத்தா ஊர்ல திருவிழா அதான்..”
“உன் பரிட்சை மார்க்க விட திருவிழா முக்கியமா என்ன?” சத்யா கோபத்தை தொடர்ந்தான்
“நல்ல மார்க்க வாங்கனும்னு வாங்கனும்னு அம்மா வேண்டுதல் வச்சுருந்துச்சுடா”
“ஓ அதான் நீ ஸ்கூல் செகண்ட் வந்தியா” இடையில் சேர்ந்து கொண்டாள் கவிதா
“ஆமா.. ஆமா.. இருக்கும் இருக்கும்” மீரா கூறினாள்
“அய்யோ மொத்தமா சிக்கிட்டேனே..” என்று தலையில் கை வைத்து தரையில் அமர்ந்தான்… பார்க்கவே ரொம்ப வேடிக்கையாய் இருந்தது. அனைவரும் சத்தமாக சிரித்தனர்.
இறுதியாய் வந்த குகனோ “அப்பறம் மச்சி ஸ்கூல் செகண்டு வந்ததுக்கு ஊர கூட்டி வச்சு உங்கம்மா அழுதாங்களாமே அப்படியா”
“புரியல மச்சி என்ன சொல்ற” விதுரன் வினவ
“அதான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரலைனு அழுதாங்களாமே அப்படியா” என்றான்
அவன் கிண்டலடித்து பேசுகிறான் என்று புரிந்து விதுரனோ “எங்கம்மா அதுக்கு அழுவுல மச்சி…”
“பின்ன எதுக்குடா அழுதாங்க”
“இப்படி காமெடிங்கிற பேர்ல மொக்கை போடுற ஃப்ரண்ட்ஸ் வச்சுருக்கியேனுதான் எங்கம்மா அழுதுச்சு மச்சு” என்று குகனின் இடுப்போடு சேர்த்து ஒரு மிதி மிதிக்க புற முதுகு காட்டி கீழே விழுந்து எழுந்து ஓடிய குகனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.
இடைவிடாது சிரித்துக் கொண்டிருந்த மீராவை கண் சிமிட்ட மறந்து பார்த்தான் விதுரன்.
“அய்யோ கொல்றாளே சிரிச்சு” விதுரனின் மனம் சுருண்டது காதல் போதையில்
அதைக் கவனித்த சத்யாவோ தன் குரலால் செருமினான்
“டேய் விதுரா கசாப்பு கடைக்காரன் பார்த்தான் மவனே நீ கைமா தான்.. மரியாதையா போய் வந்த வேலையை பாரு”
“என்ன வேலை மாப்ள”
“சுத்தம்.. இவளை பார்த்தாலே எல்லாத்தையும் மறந்து தொலைஞ்சறான். ஆனா பரிச்சையில மட்டும் எப்படி நல்ல மார்க் வாங்கனானு தெரிலை” என்று வாய்க்குள் புலம்பிவிட்டு சத்தமாக சொன்னான்
நீ ஸ்கூல் செகண்ட் வந்ததுக்கு உனக்கு பரிசு தராங்கடா இவனே… அத வாங்கத்தான் நம்ம எல்லாரும் வந்துருக்கோம் ஞாபகம் இருக்கா?”
“ஹான் ஆமா மச்சான் இப்பதான் ஞாபகம் வருது… சரி வா போலாம்” என்றவன் மீராவைப் பார்த்து வெட்கப்பட்டான்
“கடவுளே.. அல்லா! இது எங்க போய் முடியப் போகுதோ உனக்குத்தான் வெளிச்சம்… மீரா வீட்டுக்கு தெரிஞ்சு கண்டிப்பா மாப்ளை கைமா தான்” என்றான் சத்யா…
பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி அடைந்த அனைத்து மாணவர்களும் மற்றும் ஆசிரியை பெருந்தகைகளும் ஒன்று கூடியிருந்த அவ்வேளையில் பள்ளியின் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற
மாணவ,மாணவியருக்கு பாராட்டுகளுடன் கூடிய பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
முதல் பரிசு ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூற்று இருபத்தி ஒன்பது மதிப்பெண் பெற்ற வணிகவியல் பாடத்தைச் சேர்ந்த கோமதிக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது பரிசு ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூற்று இருபத்தி நான்கு மதிப்பெண் பெற்ற கணிதப் பாடத்தைச் சேர்ந்த நம் விதுரனுக்கு வழங்கப்பட்டது.
மூன்றாவது பரிசு ஆயிரத்து நூற்றி இரண்டு பெற்ற வரலாறு பாடப் பிரிவைச் சேர்ந்த பவித்ராவிற்கு வழங்கப்பட்டது.
மற்ற மாணவர்கள் அனைவரும் பரிசு வாங்கிய மாணவ மாணவியரை கரகோஷம் எழுப்பி வாழ்த்தினர். விதுரன் வாங்கிய பாராட்டை பார்த்த அவன் தாயார் லீலா ஆனந்தக் கண்ணீரை இறைத்து மகிழ்ந்து போனார்.
பரிசு வாங்கிய விதுரனின் கண்கள் என்னவோ முதலில் தேடியது அவன் உயிரான காதலியைத்தான். தேடினான் சுற்றும் முற்றும். கடைசி வரிசையின் ஓரத்தில் அமர்ந்திருந்த மீராவை கண்டு கொண்டான்.
அவன் கால்கள் நேராய் அவளிடம் சென்றது. கையில் அவன் வாங்கிய பரிசை அப்படியே அவள் கைகளில் கொடுத்தான். ஒரு நொடி செயலிழந்தாள் தாரகை.
“ஹே விதுரா என்னடா ஆச்சு உனக்கு?”
“இந்தா மீரா முதல்ல இத பிடி” கைகளில் திணித்தான். பரிசை திறந்து பார்க்கச் சொன்னான். பிரித்தவள் சற்று ஆடித்தான் போனாள்
அதில் இருந்தது ரொக்கப் பரிசு ரூபாய் பத்தாயிரம்.
“இது உனக்குத்தான் மீரா. உன்னோட ஹயர் ஸ்டடீஸ்க்கு வச்சுக்கோ”
கண்களில் இருந்து சுரந்த உமிழ்நீரை விதுரனின் தாய் லீலா துடைத்து விட்டார். என்னமா அழுதுட்டு இருக்க. வாங்கிக்கோ உன் படிப்புக்கு இது உதவும்”
அழுதவள் லீலாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள் “ரொம்ப நன்றிம்மா.. இந்த உதவியை நான் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்”
விதுரன் காதல் கரைபுரண்டு அவளைப் பார்க்க, மீராவோ நட்புடன் அவனைக் கருணைக் கடலாய் பார்த்தாள்..
காதல் ஒருபுறம்
நட்பு மறுபுறம்
இதில் யார் மனம் குளிரும்
யார் மனம் வெதும்பும்..
இருவர் மனமும் வேறு வேறு மனநிலையை மனநிறைவாய் எட்டியிருந்தது.
மன நிறைவாய் தனக்கு கிடைத்த பணத்தை வாங்கி வீட்டிற்குச் சென்றாள் மீரா. அப்பணத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து சித்திக்கு உதவிட அவர்கள் வைத்திருக்கும் உணவகத்திற்குச் சென்றாள்.
அவள் வைத்திருந்த பணத்தை முன் தொகையாக கொடுத்து கல்லூரியில் சேர்ந்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டிய பதுமையோ துள்ளி குதித்து உலா வந்தாள். தன் வேலைகளை முடித்து விட்டு சித்தியுடன் வீடு திரும்பிய மீராவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
