தூவானம் -10

 

அலுவலகத்தின் மூன்றாவது மாடியின் ஒரு மூலையில் இருந்த Cafeteriaவின் பாலகானியில் அமர்ந்திருந்த அகல்யாவும் அவளது தோழி ஹேமாவும் தீவிரமான “கிசுகிசு” படலத்தில் இருந்தனர். வெளியில் பெய்த மழையின் ஈரம் இன்னும் அகல்யாவின் கூந்தலில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்தாலும், அவள் முகம் ஏதோ ஒரு புது உற்சாகத்தில் மின்னிக் கொண்டிருந்தது.

“என்னடி சொல்ற? அப்போ அந்த ஆளு வண்டில ஏறினதுல இருந்து ஆபீஸ் வர்ற வரைக்கும் உன்னையே சைட் அடிச்சிட்டு வந்தானா?” என ஹேமா தன் கண்ணாடியைச் சரி செய்தபடி கிண்டலாகக் கேட்டாள்.

பின் பக்க நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த அகல்யா, “அப்படியும் சொல்ல முடியாதுடி… ஆனா மனுஷன் நல்லா சைட் அடிச்சான். அதுவும் அவன் என்னைப் பார்க்கும்போது, அப்படியே நம்ம ஹரிஷ் கல்யாண் மாதிரியே இருந்தான்டி! அந்த சிரிப்பு, அந்த ஸ்டைல்… பார்க்கப் பார்க்கப் பார்த்துகிட்டே இருக்கலாம் போல ஒரு ஃபீல்,” என்று சொல்லிக்கொண்டே அவள் கண்கள் மேலே பார்க்க, அப்படியே பகல் கனவில் மூழ்கத் தொடங்கினாள்.

அவளைத் தட்டி எழுப்பிய ஹேமா, “ஓ! கதை அப்படிப் போகுதோ? அதான் மேடம் அவருக்கு டீ, போண்டா எல்லாம் உங்க சொந்த காசுல வாங்கிக் கொடுத்தீங்களா? ஒருவழியா பெண் பார்க்கும் படலம் முடிஞ்சுது… அடுத்தது எப்போ முகூர்த்தம்? பத்திரிக்கை அடிச்சிடலாமா?” என கிண்டலுடன் வாரினாள்.

படக்கென்று சுதாரித்த அகல்யா, “ஹேய் வாய மூடுடி குரங்கு! ஏதோ கொஞ்ச நேரம் பேசினோம் அவ்ளோதான். ஆனா ஹேமா… அவன் கிட்ட பேசினதுல எனக்கும் ஒரு நல்ல ஆறுதலா இருந்தது. அதும் இல்லாம மழை பெஞ்சா டீ, பஜ்ஜி, போண்டா சாப்பிடறது நம்ம வழக்கம் தானேடி? கூட இருக்கிறவங்களுக்கு வாங்கிக் கொடுக்காம சாப்பிட முடியுமா?” என நியாயம் பேசினாள்.

ஆனால் ஹேமா சிரிப்பை நிறுத்திவிட்டு கொஞ்சம் சீரியஸாக அகல்யாவின் பக்கம் குனிந்தவள். “நீ அவனுக்குப் போண்டா வாங்கிக் கொடுத்தது இருக்கட்டும்… அவன் உனக்கு அல்வா கொடுக்காம இருக்கிற வரைக்கும் பார்த்துக்கோடி!”

அகல்யா திடுக்கிட்டு, “ஏன்டி… ஏன் இப்படிச் சொல்ற?” என்றாள்.

“பின்ன என்னடி? புதுசா வந்தவன் யாருன்னு தெரியல, எந்த டிபார்ட்மென்ட்னு தெரியல… அவன்கிட்ட போயி நம்ம கம்பெனிப் பத்தியும், அந்த மங்கூஸ் மண்டையன் மேனேஜர் பத்தியும் இல்லாதது பொல்லாததை எல்லாம் சொல்லி வச்சிருக்க. ஒருவேளை அவன் யாருகிட்டயாவது இதையெல்லாம் சொல்லிட்டா? பிரச்சனை உனக்குத் தாண்டி வரும்!”

ஹேமா சொன்ன அந்த வார்த்தைகள் அகல்யாவின் தலையில் இடி போல இறங்கியது. அவள் முகம் சட்டென எள்ளு வெடித்தது போல் மாறவும், “ஆமால! நான் இத யோசிக்கவே இல்லையே டி. ஏதோ ஒரு ஃப்ளோல அவன்கிட்ட மேனேஜர் மங்கூஸ்னு சொன்னதுல இருந்து எல்லாத்தையும் உளறிட்டேன்!” எனப் பதறினாள்.

ஆனால், அடுத்த நொடியே அவனது அந்த வசீகரமான கண்கள் அவள் நினைவுக்கு வந்தன. “ஆனாலும் ஹேமு… அவன் கண்களைப் பார்த்தா அப்படித் தெரியலடி. அந்தப் பார்வையில் ஒரு நேர்மை இருந்தது. அவன் கண்டிப்பா என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டான்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு,” எனத் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

அந்தச் சமயத்தில்தான், அவளது அதே ஹரிஷ் கல்யாண் லுக் கொண்ட ஆகாஷ், கையில் சில கோப்புகளுடன் அவள் இருக்கும் திசையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.

அகல்யா தன் பயத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, மீண்டும் தன் பழைய துறுதுறுப்புக்குத் திரும்பினாள். தூரத்தில் கோப்புகளுடன் நடந்து வரும் ஆகாஷைப் பார்த்ததும், அவள் உள்ளுக்குள் ஒரு சின்ன மின்னல் வெட்டியது.

தன் நாற்காலியில் இருந்து சற்றே எகிறி குதித்து, அவன் அருகில் ஓடி சென்று, “என்ன பாஸ்… ஒரு வழியா ஜாயின் பண்ணியாச்சா? அந்த மங்கூஸ் மண்டையன் கிட்ட இருந்து தப்பிச்சு இங்க வந்துட்டீங்க போல!” என ரகசியக் குரலில் கேலி செய்தாள்.

ஆகாஷ் ஒரு மர்மப் புன்னகையை உதிர்த்துவிட்டு, “யெஸ்… ஜாயின் பண்ணிட்டேன். அப்புறம், அப்படியே ஒரு காபி குடிக்கலாம்னு வந்தேன்,” என்றான். தான் இப்போது CEOவின் PA என்ற விவரத்தை அவன் சொல்லவில்லை, அவளும் அவன் கையில் இருந்த ஃபைல்களைப் பார்த்து ஏதோ வேலை செய்ய வந்திருக்கிறான் என்று மட்டும் நினைத்துக் கொண்டாள்.

சட்டெனத் தன் பக்கத்தில் இருந்த ஹேமாவை இழுத்து, “ஹேய் ஹேமு, இவர்தான் நான் சொன்ன அந்த ஆகாஷ்…!” என அறிமுகப்படுத்தினாள்.

அகல்யா அறிமுகப்படுத்தி முடிப்பதற்குள், ஹேமா அப்படியே சிலையாக உறைந்து போயிருந்தாள். ஆகாஷின் லுக்கையும், அவனது கார்னிஷ் செய்யப்பட்ட சிரிப்பையும் பார்த்த ஹேமா, உலகத்தையே மறந்து விட்டாள்.

“ஹலோ ஆகாஷ்… ஹேமா… ஐ மீன்… நான் தான் ஹேமா…” எனத் தடுமாறியவள், அவனை அப்படியே விழுங்குவது போலப் பார்த்தாள்.

“நிஜமாவே நீங்க ரொம்ப ஹேண்ட்ஸமா இருக்கீங்க… உங்க கண்ணு… உங்க முடி… வாவ்!” என ஹேமா ஜொள்ளு விடத் தொடங்க, ஆகாஷ் அசடு வழிந்தான்.

இதைப் பார்த்ததும் அகல்யாவிற்க்கு எங்கிருந்தோ ஒரு பொறாமைத் தீ பற்றிக்கொள்ள, “ஏய்! என்னடி இப்படிப் பார்க்குற? கண்ணு அங்கேயே ஒட்டிக்கும் போல… கொஞ்சம் தள்ளி நில்லுடி!” என ஹேமாவை இழுத்து அப்புறப்படுத்தினாள்.

ஆகாஷின் பக்கம் திரும்பி, “பாஸ்… இவ அப்படித்தான், யாராவது புதுசா வந்தா இப்படித்தான் வாய் பிளப்பா… நீங்க அவளைக் கண்டுக்காதீங்க,” என்றாள் ஒருவித உரிமையுடன்.

ஹேமா விடாமல், “அகல்யா… இவரைப் பார்க்க அப்படியே ஹீரோ மாதிரி இருக்காருடி. இவருக்கு ஏன் காபி? நான் ஸ்பெஷல் ஜூஸ் கொண்டுவரேன்,” என ஆகாஷின் கை அருகே போக முயல, அகல்யா குறுக்கே புகுந்தாள்.

“வேணாம்! அவருக்கு காபி போதும், அதையும் நானே வாங்கித் தாரேன். நீ போய் உன் சீட்ல உட்காருடி கொரங்கு!” என அவளைத் துரத்த…

ஆகாஷ் இதையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். லண்டனில் ஆயிரம் பேர் தனக்குக் கீழ் வேலை பார்த்தாலும், அகல்யா தன் மேல் காட்டும் இந்தப் பொசசிவ் குறும்பு அவனுக்குப் புதிதாக இருந்தது. “என்ன அகல்யா… உங்க பிரண்ட் ரொம்ப ஆர்வமா இருக்காங்க போல?” என அவன் வம்புக்கு இழுக்க,

அகல்யா முறைத்தபடி, “ஆர்வமா? அதுக்கு பேரு ஆர்வக்கோளாறு! நீங்க ஜாக்கிரதையா இருங்க பாஸ். சரி வாங்க, நானே உங்களுக்குக் காபி வாங்கித் தாரேன்…” என அவன் சட்டையைப் பிடித்து இழுக்காத குறையாக கேண்டீன் நோக்கித் தள்ளிக் கொண்டு சென்றாள்.

ஆவி பறக்கும் மூன்று காபி கோப்பைகள் நடுவே இருக்க, அந்த வட்ட வடிவ மேஜையைச் சுற்றி ஒருபுறம் ஆகாஷ் ரிலாக்ஸாக அமர்ந்திருக்க, அவனுக்கு இருபுறமும் அகல்யாவும் ஹேமாவும் போட்டி போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

“நிஜமாவே சொல்றேன் ஆகாஷ்… உங்க வாய்ஸ்ல ஒரு Base இருக்கு தெரியுமா? RJ மாதிரி அப்படியே கணீர்னு இருக்கு!” என ஹேமா தன் முகத்தை கைகளால் தாங்கியபடி, கண்களில் காதல் மின்ன ஆகாஷைப் பார்த்து பிளர்ட் செய்யத் தொடங்கினாள்.

ஆகாஷ் காபியை ஒரு சிப் குடித்துவிட்டு, “அப்படியா? இதுவரைக்கும் யாரும் என்கிட்ட இப்படிச் சொன்னதில்லையே ஹேமா,” என அவளைப் பார்த்து மென்மையாகச் சிரிக்க.

இதைப் பார்த்த அகல்யாவுக்குக் காபித் தொண்டையில் சிக்கியது. “ஹலோ… இங்க பாரு ஹேமா! அவர் காபி குடிக்க வந்திருக்காரு, உன்னை ஆராய்ச்சி பண்ண வரல. அது என்ன குரல்ல பேஸ்? மழையில நனைஞ்சு வந்திருக்காரு, அதான் அப்படி இருக்கு. போடி அங்க!” என அகல்யா எரிச்சலோடு கூற.

ஹேமா அவளைக் கண்டு கொள்ளவே இல்லை. “இருக்கட்டும் அகல்யா… மழையில நனைஞ்சா எல்லாருக்கும் சளி தான் பிடிக்கும், ஆனா ஆகாஷுக்கு மட்டும் அது ஸ்டைலா மாறுது பார்த்தியா? அதான் கிளாஸ்!” என்றவள் மீண்டும் ஆகாஷ் பக்கம் திரும்பி,

“ஆமா ஆகாஷ்… நீங்க எதுக்காக இந்த கம்பெனிக்கு வந்தீங்கன்னு தெரியல, ஆனா நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் இந்த கேண்டீனே Brightஆஹ் தெரியுது,” என அடுத்த அஸ்திரத்தை வீசினாள்.

ஆகாஷ் அந்தப் புகழ்ச்சியை ரசித்தபடி, “தேங்க்ஸ் ஹேமா! நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க,” என்று சொல்ல, அகல்யாவுக்குப் புகைச்சல் அதிகமானது.

“டேய் ஆகாஷ்… இவளை ரொம்ப ஏத்தி விடாதீங்க, அப்புறம் ரூம் போட்டுப் பேசுவா!” என மனதிற்குள் வெதும்பியவள்…

“ஹான் அப்புறம் ஹேமா, நீ ஏதோ வேலை இருக்குன்னு சொன்னியே? கிளம்புறியா?” என அகல்யா அவளைத் துரத்தப் பார்த்தாள்.

“வேலை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்டி… இப்படி ஒரு அழகான கம்பெனி கிடைச்சா யாராவது விடுவாங்களா?” என ஹேமா கண்ணடிக்க, ஆகாஷ் வாய்விட்டுச் சிரித்துவிட்டான்.

அகல்யா விடாமல், “அழகான கம்பெனியா? என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? நாங்க ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் ஒன்னா தான் வந்தோம், அப்போ எல்லாம் நீ வரல… இப்போ வந்து நடுவுல புகுந்துட்டு…” என உரிமைப் போர் நடத்த

ஆகாஷ் குறும்பாக அகல்யாவைப் பார்த்து, “ஏன் அகல்யா… ஹேமா என்கிட்ட பேசினா உங்களுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுது? நீங்கதானே எனக்கு மாஸ் சர்டிபிகேட் கொடுத்த, மறந்துட்டியா? ” எனக் கேட்க, அகல்யா அப்படியே ஒரு நிமிடம் திருதிருவென விழித்தாள்.

“அது… அது வந்து… நீங்க பாவமேன்னு தான் பாஸ் சொன்னேன்! இவ உங்களை ரொம்ப சைட் அடிக்கிறா, அதான் வார்னிங் கொடுத்தேன்,” என மழுப்பலாகச் சொல்லிவிட்டு, மேஜைக்கு அடியில் ஹேமாவின் காலை மிதித்தாள் அகல்யா.

“ஆஹ்! என்னடி மிதிக்கிற?” என ஹேமா கத்த,

“ம்ம்ம் ஒன்னும் இல்ல, எறும்பு கடிச்சிருக்கும், எழுந்து போ!” என அகல்யா தன் பெரிய உருண்டை கண்களை இன்னும் பெரிதாக்கி, ஹேமாவை முறைத்தபடி சொன்னாள்.

ஆனால் ஹேமாவோ, “யானை மிதிச்சாலும் நான் இங்கிருந்து நகர மாட்டேன்” என்பது போல ஆகாஷையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆகாஷிற்கு நிலைமை நன்றாகப் புரிந்தது. அகல்யாவின் இந்த பொறாமை சும்மா வராது. முதல் சந்திப்பிலேயே, அந்த மழையிலேயே அவள் மனதிற்குள் தான் குடியேறிவிட்டோம் என்பதை அவளது ஒவ்வொரு அசைவும் சொல்லாமல் சொல்லியது. அவளை இன்னும் கொஞ்சம் சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டவன், வேண்டுமென்றே தன் கவனத்தை ஹேமாவின் பக்கம் திருப்பினான்.

“நிஜமாவே ஹேமா… நீங்க சொல்றது சரிதான். இந்த ஆபீஸ்ல இவ்வளவு கலகலப்பானவங்க இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை,” என ஆகாஷ் சொல்ல, ஹேமா “இன்னும் நிறைய இருக்கு ஆகாஷ், நான் சொல்றேன்!” என அவனது கையைத் தொடாத குறையாக நெருங்க.

இதற்கு மேல் பொறுத்தால், ஹேமா அவனை வீட்டுக்கே கூட்டிட்டுப் போய்விடுவாள் என்று பயந்த அகல்யா, சட்டென எழுந்துவள். “பாஸ்! போதும் பேசி முடிச்சது… எங்களுக்கு டைம் ஆயிடுச்சு. இங்கேயே உட்கார்ந்து இருந்தா அந்த மங்கூஸ் மண்டையன் கிட்ட நல்லா வாங்கிக் கட்டுவோம். நீங்க வந்த வேலையைப் பாருங்க… நாம அப்புறம் மீட் பண்ணலாம்,” என அதிகாரமாகச் சொல்ல..

ஆகாஷ் ஒரு மெல்லிய சிரிப்புடன் அவளைப் பார்க்க, அகல்யா விடாக்கப்படியாக ஹேமாவின் கையைப் பற்றித் தரதரவென இழுக்கத் தொடங்கினாள்.

“வாடி இங்க… அவரே வேலையைத் தேடி வந்திருக்காரு, நீ என்னன்னா குடும்பம் நடத்திட்டு இருக்க!” என இழுத்துச் செல்ல, ஆகாஷ் அவளது அந்த அதிகாரத் தோரணையை ரசித்துக் கொண்டே அமர்ந்திருந்தான். அவளது ஒவ்வொரு தவிப்பும் அவனுக்குக் கவிதையாகத் தெரிந்தது.

ஹேமாவை இழுத்துக் கொண்டு சில அடிகள் சென்ற அகல்யாவுக்குள் ஒரு ஏக்கம். அவன் இன்னும் தன்னையேதான் பார்த்துக் கொண்டிருப்பானா? என்ற கேள்வி அவளைத் துளைத்தது. ஒரு எதிர்பார்ப்புடன், மிக மெதுவாகத் தன் தலையைத் திருப்பிப் பார்த்தாள்.

ஆனால் அங்கே ஆகாஷ் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அவனது மொபைலில் ஒரு அழைப்பு வர, அவன் தலையைத் திருப்பிக் கொண்டு போனில் ஆழ்ந்துவிட்டான்.

அகல்யாவின் முகம் சட்டென வாடிப்போனது. ‘சே! நாம இவ்வளவு தூரம் கத்திக்கிட்டுப் போறோம், ஒரு தரம் கூட நிமிந்து பார்க்கலையே… ஒருவேளை அவனுக்கு நம்ம மேல விருப்பம் இல்லையோ? சும்மா டைம் பாஸ்க்கு பேசினானா?’ என்ற எண்ணம் அவள் மனதை ஒரு கணம் பாரமாக்கியது.

தனது அந்தப் பெரிய கண்கள் பனிக்க, ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு மீண்டும் முன்னே நடக்கத் தொடங்கினாள். அவளுக்குத் தெரியாது… ஆகாஷ் போனில் பேசிக் கொண்டிருந்தாலும், அவனது மனது முழுவதும் அவளது அந்தத் திரும்பிப் பார்க்கும் அழகைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது என்று!

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page