பகுதி 6
“பைரவா, இன்னிக்கு நீ பொண்ணை போய் பாத்துட்டு வந்துடுறியா” பரமசிவம் மகனிடம் கேட்க…
“இல்லப்பா, இன்னைக்கு நான் ஃப்ளவர் டீலர்ஸை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. அதனால என்னால போக முடியாது” என்றான் அவன்.
“அந்த வேலையை இன்னொரு நாள் பாத்துக்கலாம் பா. ஏன்னா, பொண்ணு இன்னும் உன்னோட போட்டோவ கூட பாக்கலையாம். அதனால நீ இன்னைகக்கே பொண்ணை பாத்துட்டு வந்துரு. ரெண்டு பேரும் நேரில பார்த்துட்டா… திருப்தியா இருக்கும்னு அவங்க மாமா சொன்னாரு” என்ற தகப்பனிடம்..
“சரிப்பா” சலிப்பாக கூறியவன்.. “நீயும் வா போயிட்டு வந்துடுலாம். நான் மட்டும் தனியா போனா, ஏதாவது நினைச்சிக்க போறாங்க” என்றான்.
“அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க பைரவா. நான் அன்னைக்கே சொல்லிட்டு தான் வந்தேன். நீ வருவன்னு… அதுவுமில்லாம அம்மா வேற இன்னிக்கு ஜோசியரை போய் பாத்துட்டு, கல்யாண தேதியை குறிச்சிட்டு வந்துருவோம்னு சொல்லிட்டா.. அதனால நாங்க அங்க போறோம். நீ மட்டும் போயிட்டு வந்துரு, நான் பொண்ணோட அப்பாவை கூப்பிட்டு, தகவல் சொல்லிடுறேன்” என்றவர்,
பெண்ணின் தந்தைக்கு அழைத்து, பைரவன் வருவதை பற்றி கூறியிருந்தார்.
கந்தசாமி… “தப்பா எடுத்துக்காதீங்க சம்பந்தி.. பொண்ணு வீட்ல இல்லை. அவ வேலை செய்ற கடையில ஆஃபர் போட்டிருக்குன்னு, சீக்கிரமாவே கிளம்பி போயிட்டா. நீங்க கோவிச்சுக்கலைன்னா மாப்பிள்ளையை அவ கடைக்கு போய் பாக்க சொல்லிறீங்களா” என்றார் தயக்கமாக.
“அப்படியா சம்மந்தி… சரி, அப்போ பையனை கடைக்கே போக சொல்றேன்… நீங்களும் பொண்ணுகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க” என்றவர், அழைப்பை துண்டித்திருந்தார்.
“பைரவா… ரூபிணி காலையிலேயே சீக்கிரம் கிளம்பி வேலைக்கு போயிடுச்சாம். நீ அவங்க கடைக்கு போய் பாத்துட்டு வந்துடுப்பா.. கடையோட பேரு வேலன் டெக்ஸ்டைல்ஸ்” என்றார்.
“இது வேறயா”.. என நினைத்தவன்.. தன் நண்பன் ப்ரசாந்தை அழைத்தான்.
“சொல்லு மச்சி”… என்றவனிடம்…
“டேய், ஆஃபிஸ் கிளம்பிட்டியா”… எனக் கேட்க..
“இன்னும் இல்ல டா.. இன்னிக்கு ஆபீஸ் போக கொஞ்சம் லேட் ஆகும். உன் தங்கச்சி அவங்க அம்மா வீட்டுக்கு போகணும்னு சொல்லியிருக்கா. அதான் அவளை கொண்டு போய் அங்க விட்டுட்டு, அதுக்கப்புறம் ஆஃபிஸ் போலான்னு இருக்கேன்” என்றான்.
“ஓ!… சரிடா நீ பாரு” என பைரவன் அழைப்பை துண்டிக்க செல்ல…
“ஹலோ ஹலோ… மச்சி, என்ன விஷயம்டா சொல்லு” என்றான் ப்ரசாந்த்.
“அது ஒன்னும் இல்லடா” பைரவன் கூற…
“ஏய் என்னன்னு சொல்லுடா” என்றான் அவன்.
“இல்ல மச்சி, அப்பா பொண்ணை பார்த்துட்டு வர சொன்னாரு. தனியா போக ஒரு மாதிரி இருக்குடா.. அதான் நீயும் வரியான்னு கேக்க கூப்பிட்டேன்” என்னவனிடம் …
“ஏண்டா சண்டியரே.. எவனயாவது அடிக்கணும்னா ஒத்தை ஆள போய் நிப்ப. ஆனா இப்ப கட்டிக்க போற பொண்ண பார்க்கறதுக்கு துணை தேடிட்டு இருக்க” என்றான் கேலியாக.
உடனே கோபமடைந்த பைரவன்.. “டேய் என்ன நக்கலா… அதான் நீ வரல இல்ல, அப்புறம் எதுக்கு, கேள்வி வெங்காயம் கேட்குற…. நானே பார்த்துக்கிறேன் வை ஃபோனை” என்றான்.
“சரி சரி.. டென்ஷனாகாத மச்சி.. நான் வரேன்” ப்ரசாந்த் கூற..
“இல்லடா நீ தங்கச்சியோட போயிட்டு வா, நான் பாத்துக்குறேன்” எனக் கூறினான் பைரவன்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. மதியம் வந்துகூட அவளை கூட்டிட்டு போயிப்பேன். நான் வரேன் நீ வெயிட் பண்ணு” என்ற ப்ரசாந்த், மனைவியிடம்… பைரவனின் திருமண வேலைக்காக வெளியில் செல்ல வேண்டியுள்ளது. அங்கு சென்று வந்த பிறகு உன்னை அழைத்துச் செல்கிறேன். ஒருவேளை வர தாமதமானால் நீயே சென்றுவிடு என கூறிவிட்டு, வேகமாக நண்பனை தேடி புறப்பட்டான்.
********
வேலவன் டெக்ஸ்டைல்ஸ்…
ஸ்டாக் கிளியரன்ஸ் சேல் என மூன்று நாட்களுக்கு.. தினமும் காலை 8மணி முதல் 10மணி வரை மட்டும் அனைத்து ஆடைகளுக்கும் 65 சதவீதம் தள்ளுபடி.. என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று முதல் நாள் என்பதால் மக்கள் கூட்டம் அங்கு அலைமோதி கொண்டிருந்தது.
கடையின் பணியாளர்கள் அனைவரும் பம்பரம் போல் சுழன்று வேலை செய்து கொண்டிருக்க.. ரூபிணியும் மின்னல் வேகத்தில் பில் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது… அங்கு பணி புரியும் நந்தினி.. “ரூபி, வாடி போய் சாப்பிட்டு வந்துரலாம். லேட் ஆச்சுன்னா கூட்டம் அதிகமாயிடும் அப்புறம் சாப்பிட போக முடியாது” என அவளை அழைக்க..
“இருடி, பரமேஸ் வரட்டும், அவளை மாத்திவிட்டு வந்துடறேன்” என்ற ரூபிணி..
பரமேஸ்வரி வரவும்… “பரமேஸ் ஒரு பத்து நிமிஷம் பில் போடுடி. நான் போய் சாப்பிட்டு வந்துடறேன்” என அவளை அமர வைத்துவிட்டு சென்றாள்.
உணவு வழங்கும் இடத்திற்கு சென்று, தங்களுக்கு தேவையானதை வாங்கி வந்த இருவரும்.. பேசிக்கொண்டே உணவருந்த…
“அப்புறம் என்ன ரூபி, மாப்பிள்ளைகூட டெய்லியும் போன்ல பேசுறியா” என்றாள்.
“அட நீ வேற ஏண்டி, நான் இன்னும் அவரை பார்க்கவே இல்லை. அப்புறம் எப்படி போன்ல பேச” என்றவளிடம்…
“ஏன்டி, அன்னைக்கு பொண்ணு பாக்க வரும்போது மாப்பிள்ளை வரலையா” எனக் கேட்டாள்.
“ஆமாடி, எதோ வேலை இருக்குன்னு கிளம்பி போயிட்டாராம். அதனால வரலை. ஆனா வந்து பாப்பாருன்னு சொன்னாங்க” என்றவளின் அலைபேசி இசைக்க..
அதை எடுத்தவள், “சொல்லுங்கப்பா” என்றாள்.
“அம்மாடி, மாப்பிள்ளை இன்னிக்கி உன்னை பார்க்க கடைக்கு வருவாருமா. அவர் வர்ற நேரம் வேலை அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காம, ஒரு ரெண்டு வார்த்தை பேசி அனுப்பு” என்றார்.
“சரிப்பா, ஆனா நான் அவரை பார்த்ததே இல்லையே, எப்படி கண்டுபிடிக்கிறது” என்றவளிடம்…
“அவருக்கு உன்னை தெரியும்மா, உன்னோட போட்டோவை பார்த்திருக்காரு. அதனால அவரே உன்னை தேடி வருவாரு” என கூற….
“ஓகே.. நான் பாத்துக்கிறேன் ப்பா” என்றவள், அலைபேசியை வைத்திருந்தாள்.
“என்னடி என்ன சொன்னாரு உங்கப்பா” என்ற நந்தினியிடம்..
“என்னை பார்க்க அவர் இன்னைக்கு கடைக்கு வராரான்டி” என்றாள்.
“ஹே சூப்பர் டி, அப்போ ஆள் எப்படி இருக்காருன்னு நாங்களும் பார்க்கலாம்” என்ற தோழியிடம்…
“அவர் வரும்போது கண்டிப்பா பாக்கலாம். இப்ப சீக்கிரம் சாப்பிட்டு வா, லேட்டா போனா பரமேஸ் திட்டுவா” என்ற ரூபிணி வேகமாக உணவை முடித்து கொண்டு, அவளது இடத்திற்கு செல்ல…
“ரூபிணி, ஃபர்ஸ்ட் ஃப்ளோர்லயும் கூட்டம் அதிகமா இருக்கு. அதனால நீ அங்க பில் போடு. நான் பரமேஸை கீழ பாத்துக்க சொல்லிடுறேன்” என்றார் மேனேஜர்.
‘சரி’ என்றவள், தரைதளம் செல்லாமல்.. முதல்தளத்தில் தன் வேலையை தொடர்ந்தாள்.
நேரம் முடிந்ததால் கூட்டம் குறைந்திருந்தாலும்.. பில் போடுபவர்கள் கூட்டம் மட்டும் சற்றும் குறையாமல் இருக்க..
அப்போது சரியாக கடைக்குள் நுழைந்தான் பைரவன்.
“மச்சி, சிஸ்டர் எந்த ப்ளோர்னு தெரியுமாடா”..
“எந்த ஃப்ளோர்னு தெரியாதுடா. ஆனா பில் போடற வேலை செய்றான்னு சொன்னாங்க. போட்டோ பாத்திருக்கேன், தேடி பாப்போம் வா” நண்பனை அழைத்துக் கொண்டு க்ரவுண்ட் ஃபுளோரில் இருக்கும் பில் கவுண்டரை நோக்கி சென்றிருந்தான்.
தரைத்தளத்தின் கடைசி பகுதியில் பில் கவுண்டர் அமைக்கப்பட்டிருக்க… கூட்டத்தை கடந்து இருவரும் நகர…
அப்போது 15 வயது மதிக்கத்தக்க சிறுமியை, யாரோ ஒருவன் தவறான தீண்டியிருந்தான்.
பயந்து அழுத சிறுமி, தன் தாயிடம் கூற.. அதை பார்த்த அயோக்கியன் நைசாக அங்கிருந்து சென்றிருந்தான்.
யாரது என்ற தாய் கோபமாக கேட்டதும்.., தாயின் பின் நின்று அவள் கைநீட்டிட.. சரியாக அப்போது அந்த இடத்திற்கு வந்து நின்றான் பைரவன்.
“டேய், அயோக்கிய ராஸ்கல்.. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா.. இப்படி பண்ணுவ, நீ எல்லாம் மனுசனே கிடையாதுடா” என்ற அப்பெண்மணி, பைரவனை மானாவாரியாக தூற்ற..
ஒன்று புரியாமல் நின்றிருந்த பைரவன்.. “மேடம் என்ன பேசுறீங்க நீங்க, எனக்கு ஒண்ணுமே புரியல” என்றான் அவன் கோபமாக.
ஆனால் அவனைவிட கடும் கோபமாக நின்றிருந்த அப்பெண்மணி.. “ஏண்டா, பொறுக்கி நாயே.. என் பொண்ணு மேல கை வைச்சிட்டு, இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறியாடா.. சின்ன பொண்ணுடா அவ.. அவகிட்ட போய்.. ச்சீ நீ எல்லாம் என்ன ஜென்மமோ” என கேட்க..
“மேடம் நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டி பேசுறிங்க. என் ஃப்ரண்டு அப்படிப்பட்ட ஆள் கிடையாது” என சிபாரிசு செய்தான் ப்ரசாந்த்.
“எவன்டா செஞ்சு தப்பா ஒத்துக்குவிங்க” என்றவர்.. மேலும் இவர்களை தறைகுறைவாக பேச..
சுற்றியிருந்தவர்கள் அனைவரும் இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதில் சில ஆண்கள் பைரவனிடம் சண்டைக்குச் செல்ல.. கோபக்கார பைரவன் அமைதியாக இருப்பானா என்ன.
தன் மேல் சுமத்தப்பட்ட வீண்பழியினால் ஆத்திரமடைந்தவன், அவர்களை அடித்து துவைத்திருந்தான்.
அப்போது முதல் தளத்திலிருந்த ரூபிணி.. “என்னடி கீழ ஏதோ சத்தம் கேக்குது. வா போய் பாப்போம்” என வந்தவள், சற்று தொலைவாக நின்று, பைரவனின் அவதாரத்தை.. பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கைகலப்பு ஏற்பட்டதினால் கடையின் நிர்வாகிகள் வந்து சமரசம் பேச.. கடையின் ஊழியர்கள் அனைவரும் அதனை பார்வையிட்டு கொண்டிருந்தனர்.
ரூபிணி.. “என்னடி பிரச்சனை” அங்கிருந்த சக ஊழியரிடம் கேட்க.. நடந்தது முழுவதையும் கூறியவள்…
“அவர் இல்லவே இல்லைன்னு சொல்றார். ஆனா, அந்த அம்மா நம்பவே மாட்டிக்குது…. எனக்கும் கூட அந்த சாரை பார்த்தா, அப்படி பண்ணியிருப்பார்னு தோணலடி” என்றாள்.
அதேநேரம், அருகிலிருந்த பெண்மணி ஒருவர்.. “அட நீ வேற ஏம்மா.. அவன் அப்படிப்பட்ட ஆள்தான். சரியான பொம்பள பொறுக்கி.. சாயந்திரம் ஆனா போதும் புட்டிய எடுத்துக்கிட்டு, குட்டியை தேடி போயிருவான்” என்றார்.
உடனே அந்த பெண், “உங்களுக்கு இவரை தெரியுமா” என்று கேட்க..
“ஏன் தெரியாம.. நல்லா தெரியும். சரியான குடிகாரன், ஊருக்குள்ள ஒருத்திய விடுறதில்ல. இந்த வடிவேல் படம் ஒன்னு வருமே.. அதுல வடிவேலு காலையில் பக்திமானா இருந்துட்டு, சாயந்திரம் குடிகார வேஷம் போடுவாரே.. அதே மாதிரிதான் இவனும். காலையில நல்லவனா இருப்பான். சாயங்காலமானா… கஞ்சா, சரக்கு, பொண்ணுன்னு இருப்பான்” என்றார்.
அதை கேட்ட ரூபிணி.. “ச்சீ, இப்படியுமா இருப்பானுக” என எண்ணிக் கொண்டவள், முகத்தை சுளிக்க..
அதை பார்த்த மகிழ்ந்த அப்பெண்மணி.. “இதுல இன்னொரு கொடுமை என்னன்னா.. இவனுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் நடக்கப் போகுதாம்…. பாவம் அந்த பொண்ணு” எனக் கூறினார்.
“அது எப்படி மா.. இவனைப் பத்தி.. எல்லா விஷயமும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க” என அவ்வுழியர் கேட்க…
“ம்ம்ம்.. அவனோட சொந்த அத்தையே நான்தான். அப்புறம் எப்படி தெரிஞ்சுக்காம இருக்க முடியும்” என்றார் திலகா.
ஆம், திலகாதான் அந்த பெண்மணி.
ரூபிணியை சந்தித்து பைரவனை பற்றி தவறாக கூறி.. திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவளை தேடி வந்தவருக்கு… தேங்காய் நார் போல் இப்படி ஒரு விஷயம் கிடைத்துவிட.. அதையே கயிறாக திரிந்திருந்தார்.
தொடரும்….
ஹாய் வாசகர்களே.. ஸ்டோரி எப்படி இருக்குன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
