வெந்து தணிந்த இதயம்-23
நான் உங்கள் AY_84
வெந்து தணிந்த இதயம்-23
தெர்மோ க்ரோமிக் கோட்டிங் கொடுக்கப்பட்ட மேஜிக் கப் எவ்வாறு காபியின் சூடு ஆற ஆற கறுமை கொண்டு இறுதியில் ஒரு முழு கறுமைக்கு திரும்புமோ அதேபோல் தான் வானக்கோப்பையும் மாலை வேகமாக ஆறிக்கொண்டிருந்தது.
வீட்டுத்தோட்டத்தில் தெய்வானை சோகமாக உலாவிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளின் அருகில் சென்றாள் யாழினி.
அவள் இவளைக் கண்டதும் விலகி நடக்க முயற்சிக்க அவளின் பாதையை மறித்து நின்றவள், “நீ கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்கு தெய்வானை. ஆனா என் பக்க நியாயத்தையும் நீ புரிஞ்சிக்கனும்” என்றாள்.
தெய்வானை அவளின் பொலிவான முகத்தைக் கண்டு இன்னும் கடுப்பானாள்.
“ஹே! உன் கூட பேசல்லாம் எனக்கு விருப்பமில்ல. தள்ளிப்போ” என்று எரிச்சலாகச் சொன்னாள்.
அவள் தன்னை மதிக்கவே போறதில்லை என்ற முடிவுடன், யாழினி தனது விரலில் கிடந்த வைர மோதிரத்தை கழற்றி அவளின் உள்ளங்கையில் வைக்க, அதனைப் பார்த்த தெய்வானை குழப்பமடைந்தாள்.
யாழினியோ அவளுக்கு தெளிவாக சொன்னாள்.
“இந்த மோதிரமும், சஷ்டியும் என்னைக்கும் உனக்கு மட்டும் தான். அதுல போட்டியே இல்ல” என்று தெய்வானையின் வயிற்றில் பனிக்கூழை வார்த்தாள்.
கூட்டைவிட்டு பறந்து போகும் கிளி போல் மனம் படபடத்து வானில் பறந்த தெய்வானையோ, சொல்ல வந்ததை சொல்லி முடித்தது போல் விலகிச் செல்லும் யாழினியை கட்டிப் பிடித்துக் குதித்தாள்.
அவளின் செயல் சிறுபிள்ளைத்தனமாய் தோன்றியது யாழினிக்கு. ஆனால், இன்று காலையில் ரத்னவேல் பாண்டியன் பத்ரிக்கு பார்த்த வரனை அவன் மறுத்தபோது தானும் இப்படி தானே சிறுபிள்ளை போல் மனதிற்குள் குதூகலித்தோம் என்பதை நினைத்துப் பார்த்து பதிலுக்கு தெய்வானையின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டாள்.
கூடவே தெய்வானையிடம், “சஷ்டி மேல இவ்வளவு காதல் வச்சிருக்கியே ஏன் அதை அவன்கிட்ட சொல்லவேமாட்டேனு அடம்பிடிக்கற?” என்று கேட்டதும்,
“எப்படி சொல்ல யாழினி? முன்னாடி தாத்தாவோட சுயரூபம் தடுத்தது. இப்ப சஷ்டி மாமாவோட முன்கோபம் தடுக்குது. ஏன் தான் அவர் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கிறாரோ? நான் பொம்பளை வலிய வலிய போக முடியுமா? அவர் தானே என்னடி முரண்டிட்டு இருக்கனு என்கிட்ட வரனும்? உனக்கு நல்ல ப்ரெண்ட் தான் போ!” என்று சலித்தாள்.
வாய்விட்டு சிரித்த யாழினியோ பதிலுக்கு சலித்தாள்.
“சஷ்டியை சொல்ற. உன் பத்ரி மாமாவை எடுத்துக்கோ, சுத்த தத்தி. கல்யாணம் முடிஞ்சதுக்கப்பறம் கட்டில்ல கட்டிப்பிடிச்சி உருள்றதை மட்டுமே புருச லட்சணமா பண்ணிட்டு இருக்கார். பொண்டாட்டியை ஒரு சினிமாவுக்கு கூட்டிட்டு போனோம், பிடிச்சதை வாங்கிக் கொடுத்தோம், சர்ப்ரைஸ் பண்ணோம்னு ஒன்னும் கிடையாது.” என்று வெதும்பவும்,
“இந்த குடும்ப ஆண் வாரிசுகளுக்கே உள்ள குணம் போல இது. நாம தான் இவங்களை மாத்தனும்” என்று யாழினியுடன் கரம் கோர்த்தாள் தெய்வானை.
அச்சமயம் அங்கு வந்த ஜெயந்தி இருவரையும் சந்தேகமாகப் பார்த்தார்.
கூடவே, “இங்க என்ன பண்ற தெய்வானை? யாருக்கூட பேசனும்னு ஒரு அறிவு வேண்டாம். நாளைக்கு உனக்கு தாலிப்பெருக்கு. ஞாபகம் இருக்கு இல்ல? வா வந்து கையில மருதாணி வச்சிக்கோ. இந்த முறையாவது நல்லா சிவக்குதானு பார்க்கலாம்” என்றதும், யாழினிக்கு கண்ணால் ஜாடை காட்டிவிட்டு தாயின் பின்னேயே ஓடினாள் தெய்வானை.
வீட்டிற்குள் நுழைந்ததும் அவர் அவளை காது, கவியின் அறைக்கு அழைத்துச் செல்ல, “இவளுங்களா எனக்கு மெஹந்தி வச்சிவிடப் போறாளுங்க?” என்று வாயைப் பிளந்தாள் தெய்வானை.
“நாங்க நல்லாவே வைப்போம். வந்து நம்பி உட்காரு. இப்ப அவசரத்துக்கு உனக்கு வெளிய யாரும் கிடைக்க மாட்டாங்க. சோ, பெரியம்மா எங்களைத் தான் உனக்காக புக் பண்ணியிருக்காங்க” என்றதும், அலட்டிக்கொள்ளாமல் இரு கைகளையும் ஆளுக்கொருவரிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்தாள்.
அவர்கள் அதை போட்டு முடிக்கும்போது இரவு எட்டு மணியாகிவிட்டது. ஜெயந்தி ஆசை மகளுக்கு தானே தன் கையால் ஊட்டிவிட்டு அவளின் இரவு உணவை முடித்துவைத்தார்.
எப்போதும் போல் அவளை தேடிவந்து தலையில் மல்லிக்கைப்பூ சரத்தை சூட்டிவிட்ட பார்வதி, சஷ்டி வீட்டிற்கு திரும்பி விட்டதையும் அறிவிப்பாகச் சொல்லிவிட்டு செல்ல, உடனே அவனைக் காண அவனின் அறைக்குச் சென்றாள்.
அப்போது அவன் யாரிடமோ அலைபேசியில் தான் அரிசி ஆலை விசயமாக வெளியூர் சென்றிருந்தது வெற்றியில் முடிந்தது என்று சொல்லிக் கொண்டிருக்க, முழங்கையால் கதவை தள்ளினாள்.
கண்களில் அனலை கக்கியவள் இன்று நாணிக்கொண்டே உள்ளே நுழைவதை கண்டு சஷ்டிக்கு அதிர்ச்சி.
ஆனாலும் யாழினி சொல்லியபடி, அவளை நெருங்கியிருந்து தான் மாற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டு தெய்வானையின் வழியிலேயே செல்லலானான்.
இரு கைகளிலும் மருதாணி கோலமிட்டிருந்தவள் அவனுடன் கண்களால் காதல்மொழி பேசிக்கொண்டே உள்ளே வர, அவளின் சுங்குடி பாவாடையின் நாடா கதவின் கொக்கியில் சிக்கி அதன் முடிச்சி விடுபட்டது. பாய்ந்து முழங்கைகளால் பாவாடையை தடுத்தி நிறுத்தினாள் தெய்வானை.
இதை எதிர்பாராத சஷ்டி ஓடி வந்து அவளுக்கு உதவ, அவன் பாவாடையின் நாடாவை கட்டும்வரை அவனை வாயைப் பிளந்து பார்த்தாள் தெய்வானை.
அவளின் அந்த மிரண்ட பாவனையில் அவனின் ரத்தம் சூடாகியது. உடனே கதவை மூடி தாழிட்டான். அதில் அவள் நெஞ்சம் படபடத்து நிற்க, அவளைத்தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.
பின், மெதுவாக அவளை கட்டிலில் இறக்கி விட்டு மென்மையாக அவளின் மீது பரவி, மருதாணி சிவப்பதற்கு முன் அவளை சிவக்க வைத்தான்.
அவனின் இந்த மாற்றத்தை நம்ப முடியாமல் பார்த்தவள் தன் நாணத்தை ஓரம் கட்டிவைத்து கைகளில் இருக்கும் மருதாணியைப் பற்றிக்கூட கவலைபடாமல் அவனை தன்னுள் புதைத்துக்கொண்டாள்.
அவன் அவளை அனுவனுவாக கையகப்படுத்திய போது அவனின் மென்மையிலும், நிதான அணுகுமுறையிலும் அவன் மேல் பித்தானாள் தெய்வானை.
காமன் விடும் மலர்க்கணைகளில் மூழ்கிப்போனவர்கள் காலையில் எழுந்தபோது மருதாணி அவன் முகத்தில் ஆங்காங்கே திட்டுகளாய் அப்பியிருந்தது.
சந்தன நிற மெத்தையிலும் மருதாணி கோலம் தான்.
அவள் வெட்கத்தில் போர்வையால் தன்னை சுற்றிக்கொண்டு பாத்ரூம் செல்ல, சஷ்டி இரவில் நடந்ததை நினைத்து புன்னகை முகமாக தன் தலையை தட்டிக்கொண்டான்.
ஆண்கள் வெட்கப்படுவது கூட அழகு தானோ என்று தோன்றும், தற்போது அவனைக் கண்டால்.
குளித்து முடித்து தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு வந்த தெய்வானை அவனிடம் வெட்கப்பட்டுக்கொண்டே, “நான் காபி போட்டு கொண்டுவர்றேன்” என்று கீழே சென்றாள்.
அவளைப் பார்த்த பார்வதி, “இப்படி நெத்தியில குங்குமம் கூட இல்லாமயா கீழ வருவ?” என்று கடிய,
“ஐயோ! என் நிலைமை புரியாம இவங்க வேற” என்று இன்னும் நெளிந்தாள் தெய்வானை.
குங்குமம் எடுத்து அவளின் நெற்றியில் தீற்றிவிட்டவர், நேற்றிரவு அவள் அவளறையில் அல்லாமல் சஷ்டியின் அறையில் தூங்கினாள் என்பதால் அவர்களின் இல்லற வாழ்க்கை இனியாவது செழிக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிவிட்டு, தெய்வானையிடம் தான் தற்போது பூஜையறையில் தாலிப்பெருக்கிற்காக செய்யும் ஏற்பாடுகளை காட்டி, அவளையும் சஷ்டியையும் விரைவில் கிளம்பி வரச்சொன்னார்.
சரியென்றவளும் காபி கலக்கச் சென்றாள்.
அவள் காபிகோப்பையுடன் வரவேற்பறையை கடந்தபோது காதுவும் கவியும், “ஏய் தெய்வாக்கா நில்லு! உன் கையைக் காட்டு. மருதாணி எப்படி சிவந்திருக்குனு பார்க்கலாம்” என்று கேட்க, அவள் கைகளைக் நீட்டினாள்.
அங்கே மருதாணி வைத்த தடம் தான் இருந்தது.
“என்னது இது? உனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல?” என்றவர்கள் தங்கள் கைகளை காண்பிக்க, சிறிய கோலமென்றாலும் அவர்களுக்கு அது கருஞ்சிவப்பில் பிடித்திருந்தது.
அப்போது பார்த்து யாழினியும் தனது அறையைவிட்டு வர, இரட்டையர், “யாழினிக்கா உங்க கையை காட்டுங்க” என்றார்கள்.
அவளும் நேற்றிரவு அவர்கள் தனதறைக்கு வந்து வைத்துவிட்ட கோலத்தை, “இதோ” என்று காண்பித்தாள்.
ஆனால், அவளின் கையிலும் மருதாணி சரியாகப் பிடிக்கவில்லை.
“என்னக்கா உங்க கையிலயும் மருதாணி பிடிக்கவே இல்ல” என்று அதிருப்தியடைந்தார்கள்.
பொன்னியோ, “ஹேய்! என்னடி இது மருதாணி பிடிக்கலைனா என்ன இப்ப? ஒருத்தருக்கு பித்த உடம்பா இருக்கும். இன்னொருத்தருக்கு இருக்காது. இது ஒரு பிரச்சனையா?” என்று மகள்களை அடக்கினார்.
அதன்பின் கலைந்த கூட்டம் தாலிபெருக்கிற்கு தான் ஒன்று கூடியது.
சுற்று வட்டாரத்தில் தங்களின் அந்தஸ்திற்கு இணையான குடும்பத்தைச் சேர்ந்த சுமங்கலி பெண்கள் சிலரையும் இந்நிகழ்விற்கு அழைத்திருந்தார் பார்வதி.
அவர் இந்நிகழ்விற்காக பூ தேங்காய் பழத்தட்டுகள், தங்க குத்துவிளக்குகள், வெள்ளியில் செய்த சந்தன குங்குமச் சிமிழ்கள், தங்கத் தாலிச்சங்கிலி என்று அழகுற அடுக்கி வைத்து தெய்வானை சஷ்டி உட்காருவதற்காக இரு சிறிய வெள்ளி முக்காலிகளையும் போட்டார்.
தெய்வானை அன்று அவள் திருமணத்திற்கு செய்த அலங்காரத்தைக் காட்டிலும் இன்று அழகின் ஸ்வரூபமாக இருந்தாள். நெற்றி வகிட்டில் இடும் குங்குமமும் ஒரு பெண்ணுக்கு தனி அழகு தானோ?
தலை நிறைய மல்லிகை சரங்கள், நேர்த்தியான பட்டுப்புடவைக்கட்டு, பார்வதி அவளுக்கு அளித்திருந்த வைர ஆபரணங்கள் என்று தனது ஒவ்வொரு அசைவிலும் காண்போர் கண்களை சிறையெடுத்தாள்.
அதிலும் அவள் கிளம்பி நின்ற கணத்தில் சஷ்டி அவளின் நெற்றியில் இட்ட முத்தமிருக்கிறதே, அது தான் அவளின் கொள்ளை அழகுக்கு செட்டிங் மிஸ்ட் போல.
ஜெயந்திக்கோ மகளின் அத்துனை அழகையும் காண கண்கள் போதவில்லை. வந்தவர்களிடமெல்லாம் மகளின் அழகைப் பற்றிய புராணம் தான்.
அச்சமயம் பார்த்து தெய்வானையின் அருகில் வந்தமர்ந்த சஷ்டி காதம்பரி, கவிதாம்பரியிடம் ஏகபோகமாக மாட்டிக்கொண்டான்.
அவன் முகத்தில் ஆங்காங்கே திட்டுத் திட்டாக தெரிந்த மருதாணி சிவப்பைக் கண்டு இரட்டையர், “அடடா! தெய்வானை அக்கா கை சிவக்காம போனதுக்கான காரணம் இப்ப தானே தெரியுது. ஆமா மருதாணியே வைக்காத உங்க முகம் எப்படி சஷ்டி மாமா சிவந்துச்சி?” என்று கேட்க, சுற்றி நின்ற பெண்கள் அடக்கமாட்டாமல் சிரித்தனர்.
அது அவனுக்கு இன்னும் சங்கடத்தை உண்டு பண்ணியது.
கைம்பெண் என்பதால் தள்ளி நின்றிருந்த பொன்னி தன் பிள்ளைகளை அதட்டினார்.
“என்னங்கடி இது இங்கிதம் இல்லாம” என்று திட்டி, அவர்களை தன்னோடு சமையலறை அழைத்துச் சென்றார்.
பார்வதியும் ரத்னவேல் பாண்டியனும் தம்பதி சமேதராக நின்று சஷ்டிக்கு தாலிக்கொடியை எடுத்துக் கொடுக்க, அவன் அதனை தெய்வானையின் கழுத்தில் பெருமிதமாக அணிவித்தான்.
தாலியைப் பிரித்துக் கோர்த்ததும், அனைவரும் தெய்வானைக்கு குங்குமம் வைத்து ஆசீர்வதித்தனர்.
முன்பே ஜெயந்தி யாழினியிடம், நீ அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரித்துவிட்டுப் போயிருந்ததால் அவளும் வெளியே வரவில்லை.
வந்திருந்த பெண்மணிகளில் சிலர் சாவித்ரி பொன்னியுடன் சமையலறையிலேயே நிற்பதை கண்டு, “எங்க உங்க மருமகளை காணோம்? அவளுக்கு தாலிப்பெருக்கி போடலையா? ஒருவேளை வேண்டாத மருமகள்னு விட்டுட்டீங்களோ?” என்று குத்தலாகக் கேட்டதும்,
“இல்ல அப்படியெல்லாம் இல்ல.” என்று மழுப்பலாக சிரித்தார் சாவித்ரி.
“அப்ப தெய்வானைக்கூடவே அவளுக்கும் எல்லா சடங்குகளையும் பண்ண வேண்டியது தானே? பார்வதி மதினிகிட்ட கேட்டப்போ அவங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லைனு சொல்லிட்டாங்க. பெரியவருமே மையமாத்தான் தலையசைச்சாரு. நீங்க உடனே நம்பிக்கையான ஆள் ஒருத்தரை அனுப்பி தாலிக்கொடி வாங்கிட்டு வரச் சொல்லுங்க மதினி.” என்றதும்,
மறுக்க முடியாமல் ஏற்கனவே பத்ரிக்கு மனைவியாகப் போகிறவளுக்கென்று தான் பார்த்து பார்த்து வாங்கிய தாலிக்கொடியை லாக்கரில் இருந்து எடுத்து வரச்சொன்னார் தன் பெயர்த்தி காதம்பரியை. அவளும் எடுத்து வரச் சென்றிருந்தாள்.
அந்நேரத்துக்குள் வேலையாளின் மூலம் யாழினியை அழைத்திருந்தவர், அவள் அங்கே வந்ததும் அவளின் வெறுங்கழுத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டார்.
ஆற்ற மாட்டாமல், “நம்ம பரம்பரை நகைங்க இந்த நேரத்துல இருந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும். என்ன செய்ய? நம்ம நேரம் அப்படி இருக்கு.” என்று வருத்தப்பட்டு தன் கழுத்துச்சங்கிலி ஒன்றை அவள் கழுத்தில் அணியவும்,
“விடுங்கம்மா. அதைப்பத்தி பேசி இப்ப என்ன ஆகப்போகுது? நம்ம யாழினி இயற்கை அழகி. பாருங்க இந்த சாதாரண புடவையிலேயே எவ்வளவு அம்சமா இருக்கான்னு. ஆனா, அந்த நகைங்களை திருடினவன் மட்டும் கிடைச்சான் அவன் கைக் காலை ஒடைச்சி அடுப்புல வச்சிருவேன்” என்று ஆவேசமாகக் கூறவும், கையிலிருந்த தாலிக்கொடிப் பெட்டியை தவறவிட்டாள் காதம்பரி.
தொடரும்…
ஹார்ட்டின் அழுத்தவும், கமெண்ட் பண்ணவும் மறந்துறாதீங்க தங்கோம்ஸ்:)
