வீட்டில் இறங்கியவுடன் ஆரத்தி எடுத்து அவளை உள்ளே அழைத்துச் சென்று சாமியறையில் விளக்கு ஏற்றச் சொன்னார் மரகதம்.
ரஞ்சன் அருகில் இல்லாமல் தன் அறையை நோக்கி செல்ல, அவனை மரகதம் அழைத்தார்.
“ரஞ்சன் கொஞ்சம் இங்க வந்து சேர்ந்து நில்லு”என்றார்.
அவரை திரும்பி கடுமையாக பார்த்தவன், மயூரியை ஏளனமாக கண்டு,
“’ஓடிப்போன மருமகளுக்கு இவ்வளவு மரியாதை போதும்.. ம்மா? நான் வேற கூட நிக்கணுமா?”என்றவன் திரும்ப, மயூரி மரகததிடம் கூறினாள்,
“அத்தை உங்க பையன் ரொம்ப டயர்டா..இருப்பார் பாவம்…நீங்க வாங்க, நாம சாமி கும்பிடலாம். என்ன பொறுத்த வரைக்கும் புருஷன் பொண்டாட்டியோட ஒத்துமையை விட மாமியார்,மருமகள் ஒற்றுமை தான் ரொம்ப.. முக்கியம்”என்றாள்.
அவளைத் திரும்பி முறைத்து விட்டு மாடிக்கு தன் அறைக்குச் சென்றான் ரஞ்சன்.அவன் சென்றதும் இருவரும் பூஜை அறையில் விளக்கேற்றி முடித்து வெளியே வந்தவுடன் மயூரியை டைனிங்கில் இருக்கச் சொல்லி, கிச்சனில் பாலும் பழமும் கொண்டு வர மரகதம் செல்ல, பின்னோடு மயூரியும் சென்றாள்.
வீட்டை சுற்றி பார்த்தவள், “அத்தை எங்க அப்பா பெரிய இடம், பெரிய இடம்னு சொன்னார், ஆனால் நான் இவ்வளவு பெரிய இடத்தை எதிர்பார்க்கல…!ஆமா இவ்ளோ பெரிய வீட்ல நீங்க மூணு பேர், இல்ல இந்த அக்காவோட சேர்த்து நாலு பேர் தான் இருக்கீங்களா?”என்றாள்.
அடுபடியில் இருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியைப் பார்த்து, மரகதம் பின் இருந்த அவரைக் கண்டு புன்னகைக்க, அவரும் புன்னகைத்தார்.
“இல்லமா இவங்க சமையலுக்கு உதவுரவங்க சரளா. இவங்களும் ஆனந்தும் நைட் வீட்டுக்கு போயிடுவாங்க, காலையில தான் ரெண்டு பேரும் வருவாங்க”என்றார்.
“ஐயோ.. அத்தை..! அப்ப நீங்களும் உங்க மகனும் மட்டும் தானா? அதுவும் தனித்தனி ரூம் வேற! கடவுளே…!அப்போ இனிமே நாம மூணு பேர் மட்டும் தானா? ஐயோ அத்தை எனக்கு கொஞ்சம் பயமா இருக்கே”என்றாள் மயூரி சற்று மிரட்சியுடன்
மரகதம் அவள் தலையை பிடித்து ஆட்டி, “எதுக்கு பயம்? அதான் உன் புருஷன் கூட தானே இருக்க போற? ஏசி ரூம் பூட்டி தானே இருக்கும், அப்புறம் என்ன பயம்? உங்க வீட்ல உன் ரூம்ல நீ தனியா தான இருக்க, இப்ப துணைக்கு ரஞ்சன் இருப்பான் பின்ன என்ன பயம்?”என்றார்.
“தனியாக கூட இருந்திடலாம், அந்த ஒட்டகச்சிவிங்கி கூட இருக்குறது தான் பயமே.. “ என்று நாவைக் கடித்து கொண்டு மரகதத்தைப் பார்த்தாள். பின் சிறிய குரலில் “சாரி உங்க பையனோட இருக்க தான் எனக்கு பயம் அத்தை”என்றாள்.
சரளா சிரித்தபடி, “நல்ல வாலு.. வாயாடி..தான் கிடைச்சிருக்கா..மா உங்களுக்கு மருமகளா! இனிமே இந்த வீடு கலகலன்னு இருக்கும்” என்று கூறி சிரித்தார்.
“ஏன் டி சரளா..அவ என் புள்ளையை கிண்டல் பண்றா உனக்கு சிரிப்பா?”என்று அவரும் உடன் கண்டிப்பது போல கூறி சிரித்தார்.
மரகதம் புன்னகைக்க மயூரிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எந்த வீட்டில் இப்படி மருமகள் முதல் நாளே தன் மகனை வேடிக்கையாக கிண்டல் செய்தால் அமைதியாக உடன் புன்னகைப்பார்? அதிலும் அந்த சரளாவின் பேச்சு அவர்கள் இருவரின் நெருக்கத்தைப் பறைசாற்றியது.
ஒரு சமையல்கார பெண்ணிடம் இவ்வளவு நெருக்கமும் சுதந்திரமும் இருந்தால், தன்னிடம் எவ்வளவு அன்பாக இருப்பார் என்று மனம் நிம்மதி அடைந்தது மயூரிக்கு.
மொத்தத்தில் மயூரி சும்மாவே ஆடுவாள், சலங்கை வேறு கட்டி விட்டால் கேட்கவும் வேண்டுமா? புன்னகையுடன் மீண்டும் கேட்டாள்
“அப்படி இல்லைங்க அத்தை… நானும் நிறைய உயரமான பசங்களை பார்த்திருக்கேன். ஆனா இவ்வளவு உயரம்… நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க பெருமையா தான் சொல்றேன், உங்க மகன் வாக்கிங் ஸ்டிக்க வச்சு நடக்கும் போதே இவ்வளவு உயரம்னா நேரா நடந்தா எப்பாடி..!”’ என்றாள் ஆச்சரியத்துடன்.
“‘உனக்கு ஏன் அவன் உயரத்திலயே… கண்ணா இருக்கு?” என்றார் அவள் கன்னத்தைச் செல்லமாய் கிள்ளி மரகதம்.
“ஒண்னும் இல்ல அத்தை நம்ம கிட்ட இல்லாததை பார்த்தா நமக்கு பொறாமை வரணும் இல்லையா? ஆசை வரணும், அதுதான சிம்பிள் லாஜிக்”என்றாள் சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு.
“ நீ ஒண்னும் அவ்வளவு குள்ளம் இல்லையே”என்றார் மரகதம்.
“குள்ளம் இல்லை தான்.. ஆனால் உயரமும் இல்லையே”என்றாள்.
“உனக்கு என்னம்மா செஞ்சு வச்ச சிலை மாதிரி எல்லாமே அளவா அழகா இருக்க, உயரம் எல்லாம் ஒரு விஷயம் இல்ல” என்று சரளா அவளின் முகத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.
மரகதம் பெருமையுடன் அவளைக் காண, ஏதோ ஞாபகம் வந்தது போல, “அத்தை ஒரு கண்டிஷன் சொல்லணும்”என்றாள் அவசரமாக.
மரகதம் ஆச்சரியமாக “என்னம்மா?”என்றார் சற்று தீவிரமாக.
“உங்க மகன் கிட்ட சொல்லுங்க, என்கிட்ட எத பேசுறதா இருந்தாலும் ஒரு அஞ்சு அடி தள்ளி நின்னு பேசணும். அப்படி இல்லைன்னா உட்கார்ந்து பேசணும். இந்த கண்டிஷனை ஸ்ட்ரிக்ட்டா பாலோ பண்ணனும்..இல்லைனா எனக்கு கெட்ட கோபம் வந்துரும் பாத்துக்கங்க” என்றாள் கராராக.
மரகதம் புரியாமல் “ஏன்மா ஏன் அப்படி சொல்ற?” என்று சிறு வியப்புடன் கேட்க,
“’புரியாமல் பேசாதீங்க, அவர் பக்கத்துல நின்னு பேசினா எனக்கு அண்ணாந்து பார்த்து கழுத்து வலி வந்துடும். சீரியஸ்னஸ் புரிஞ்சு பெரிய மனுஷனா நடந்துக்க சொல்லுங்க உங்க மகனை..!”என்றாள் வெகு சீரியஸாக.
மரகதமும் சரளாவும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தனர், இருவரின் கண்களில் இருந்தும் கண்ணீரே வந்துவிட்டது. மரகதம் சிரிப்பதைப் ரசித்துப் பார்த்தவள், வாசலில் நிழலாடுவதைக் கவனித்து திரும்பிப் பார்க்க, அங்கே அவளின் கணவன் அவளையும் அவன் தாயையும் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
மயூரியின் பார்வையைத் தொடர்ந்து மரகதமும் சரளாவும் காண அவர்கள் இருவரும் திடுக்கிட்டனர்.
சரளாவோ சட்டென அடுக்களையின் ஒரு ஓரமாக வெளியே செல்ல இருந்த வாயிலின் மூலம் ‘அம்மா கடையில ஏதோ வாங்க சொன்னிங்களே’ என்று கூறிவிட்டு சரளா ஓட..
மரகதம் சமைக்கும் காய்களை ஆராய்வது போல் ஒளிந்து கொண்டார்.
மயூரிக்கு இருவரின் செயலிலும் ஆச்சரியம். சரளா சமையல் பெண் என்றாலும், மரகதம் ஒளிவதைக் கண்டு ஆச்சரியமடைந்தாள்.
‘ஏன் இந்த வீட்டில் சிரிப்பதற்குக் கூட இவன் அனுமதி வேண்டுமா?’ என்று எண்ணம் ஓட,
அவள் அவனை நேராக உற்றுப் பார்த்தபடி அமர்ந்த இடத்தை விட்டு இறங்கவே இல்லை. அவனும் முறைத்துக் கொண்டே அவன் தாயை அழைத்தான், அவள் மேல் இருந்த பார்வையை அகற்றாமல்…
மயூரியும் ‘நான் உனக்கு சளைத்தவள் இல்லை’ என்று கால்களை ஆட்டியபடி அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ம்மா…நான் ஆபீஸ் கிளம்புறேன்.. “என்றான்.
“‘என்னடா சொல்ற? இன்னைக்கு தான் கல்யாணம் பண்ணி இருக்க, தாலி கட்டி ரெண்டு மணி நேரம் கூட முழுசா முடியல அதுக்குள்ள ஆபீஸ் கிளம்புறேன்னு சொல்ற?’ என்றார் அவனை நிமிர்ந்து பார்த்து மரகதம்.
“’ஆமா இப்போ வீட்ல இருந்து..என்ன பண்ண சொல்றீங்க? உங்க மருமகள் ஓடிப் போகாமல் காவல் காக்க சொல்றீங்களா?”என்றான் அவளை ஏளனப் பார்வை பார்த்தபடி ரஞ்சன்.
“ரஞ்சன் என்ன பேசுற நீ?’ என்றார் மரகதம் பரிதவிப்புடன்.
அவன் இளக்காரமாக அவளைக் கண்டு ஏளனமாக புன்னகைக்க, மயூரி அவனின் மன ஓட்டம் புரிந்தவளாக,
“அத்தை விடுங்க அவர் போகட்டும். அதான் அப்பவே சொன்னேனே மாமியார் மருமகள் ஒற்றுமை தான் முக்கியம்”என்றவள்.
கீழே இறங்கி மாமியார் அருகே வந்து ரகசியம் போல், “அதோட அவர் இருந்தா நம்ம மிலிட்டரி கேம்ப்ல மாதிரி ரூல்ஸ் ஃபாலோ பண்ணனும், இல்லைனா ஜாலியா இருக்கலாம்” என்றாள் அவனுக்கு கேட்கும்படியாக.
அவன் அவளை முறைத்து விட்டு சட்டென விலகி ஆபீஸிற்கு கிளம்பினான். மனதிற்குள் அவள் கூறியது ஒலித்தது, ‘மிலிட்டரி கேம்பா..’’ என்று அவளைக் கருவிக்கொண்டான்.
மயூரி அவன் சென்றதைக் கண்டு வாயைக் கைகளால் பொத்தி புன்னகைக்க, மரகதம் அவளை பரிதாபமாக பார்த்தார்.
அவருக்கு மகனின் பிடிவாதமும் அவனின் கோபமும் நன்றாக தெரியும். அவனை காலையில் இருந்தே மயூரி எதிர்த்து பேசுவதும் அவன் அமைதியாக விலகிச் செல்வதும் அவர் கவனித்துக் கொண்டே இருந்தார். மகன் இவ்வாறு அமைதியாக செல்பவன் அல்ல என்றும் அறிந்தவர்,
அவனின் அமைதி புயலுக்கு முன் வரும் அமைதி என்பதையும் அறிந்திருந்தார். அந்த புயல் கண்டிப்பாக மயூரியை வாரிசுருட்டி வீசப்போவதையும் அறிந்திருந்தார். ஆதலால் அவர் மயூரிக்கு மகனின் குணத்தை,அவன் அவளை வலிக்கச் செய்யும் முன் உணர்த்திட துடித்தார்.
அவளின் அருகில் சென்றவர் அவள் தோளைப் பற்றி,
“’மயூரி அவனை ரொம்ப சீண்டாதம்மா, அவன் உன் மேல ஏற்கனவே கோபமாய் இருக்கான். நீ கல்யாணம் வேணாம்னு வீட்டை விட்டு வெளியே போனதுக்கே உன்ன சும்மா விட மாட்டான். அதைத்தான் ஒவ்வொரு வார்த்தையிலும் உன்னை வலிக்கும்படி பேசுகிறான். ஆனால் நீ அவனை மென்மேலும் கோபப்படுத்துற, அதனால அவன் உன்னை என்ன செய்யப் போறானோன்னு பயமா இருக்கு, நீ தான் பார்த்து நடந்துக்கணும்’ என்று அவள் தாடையைப் பற்றி பரிதவிப்புடன் கூறினார்.
மயூரி அவர் கைகளைப் பற்றி, “அத்தை நீங்க சொல்றது எனக்கு புரியுது. நீங்க பயப்படாதீங்க எனக்கு தெரிஞ்ச வரைக்கும் கண்டிப்பா உங்க பையன் என்னை கொலை பண்ணிற மாட்டார். அதனால நீங்க பயப்படாதீங்க” என்றாள் கேலி புன்னகையுடன்.
அவள் தலையில் செல்லமாக தட்டி, “’ஆனா உன்ன கொல்ற அளவுக்கு கோபத்தோட வார்த்தையால தாக்குவான், அதுக்கு நீ தயாராக இருக்கணும்”என்றார்.
“’வார்த்தையாலதான அத்தை? அதுல நம்மள அடிச்சுக்கவே முடியாது, கவலையே படாதீங்க”’ என்றாள் இல்லாத காலரைத் தூக்கி விட்டபடி.
மரகதம் அவளின் முகத் தெளிவைக் கண்டு மகிழ்ந்தாலும் மனதினுள் அவளுக்காக கடவுளை பிரார்த்திக்கத் தான் செய்தார்.
ரஞ்சன் மதியம் உணவிற்கு வரவில்லை, இரவு எட்டு மணி ஆனபோதுதான் வந்தான். அதற்குள் இரவு உணவை முடித்திருந்த சரளா கிளம்பி விட, மரகதமும் மயூரியும் ரூமில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
வெளியே கார் சத்தம் கேட்டு ரஞ்சன் வந்துவிட்டதைக் கூறிவிட்டு மரகதம் மயூரியுடன் வர,உள்ளே வந்த ரஞ்சன் மயூரியை ஏளனப் பார்வை பார்த்தான். திரும்பி ஆனந்திடம்
“கந்தசாமி கிட்ட நாய் எல்லாத்தையும் அவிழ்த்து விடச் சொல்லிவிட்டு நீ கிளம்பு” என்றவன் திரும்பி தன் அறையை நோக்கி மேலே சென்றான்.
ஆனந்த் மயூரியிடமும் மரகதத்திடமும் புன்னகையுடன் விடைபெற்றான்.
மேலே ஏறிச் செல்லும் கணவனை நோக்கிய மயூரி தன் மாமியாரிடம் கேட்டாள்,
“அத்தை உங்க மகன் ஏன் இப்படி படத்துல வர வில்லன் மாதிரியே நடந்துக்கிறார்?’ என்றாள்.
“ம்ம்.. அத அப்புறம் ஆராய்ச்சி பண்ணுவோம்..’அவன் பிரெஷ் ஆகிட்டுதான் கீழே வருவான்..வா நீயும் பிரெஷ் ஆகு.. “என்று அவள் கைபிடித்து உள்ளறைக்கு அழைத்துச் சென்றார் மரகதம்.
அவர் அலமாரியில் இருந்து ஒரு புது புடவையையும் ஒரு நகைப்பெட்டியையும் எடுத்தார். புடவை சாதாரண சிபான் சேலை தான், மெல்லிய ஜர்தோசி வேலையுடன் கரு நீல சேலை அழகாக இருந்தது.
அதனை அவளிடம் கொடுத்து, ‘”குளிச்சிட்டு இந்த சேலையை மாத்திக்கிட்டு வா”’ என்றார்.
அவள் குளியலறை சென்று உடைமாற்றி வர, இரண்டு சரம் மல்லிகையுடன் ரூமிற்குள் வந்தார் மரகதம். அவளுக்குத் தலைப்பின்னி பூவை வைத்தவர் நகை பெட்டியை எடுக்க, அதனை தடுத்தாள் மயூரி.
“‘அத்தை நைட் நேரத்தில் படுக்கப் போகும்போது எதுக்கு இது? உள்ள வைங்க” என்றாள்.
“சும்மா இருமா இது பரம்பரை நகை, என் மாமியார் என்கிட்ட கொடுத்தார், நான் உன்கிட்ட கொடுக்கிறேன். நீ உன் மருமக கிட்ட கொடுக்கணும்”என்றார் பெருமிதமாக.
ஆனால் மயூரி மீண்டும் மறுத்துவிட்டு, “அத்தை ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க, இன்னைக்கு இருக்க மன நிலைமைக்கு நான் இதை போட்டுட்டு போனா இதை வைத்தே உங்கள் அருமை மகன் என்னை பழி வாங்குவார். எனக்கு தெரிஞ்சு..எப்படா என்னை அவமானப்படுத்தலாம்னு இருக்கார். உங்க மகன் பத்தி நான் உங்களுக்கு சொல்லணும்னு அவசியம் இல்ல. ப்ளீஸ்.. இன்னைக்கு வேணாம், இது எனக்கு தானே? பின்னாடி போட்டுக்கிறேன்” என்றவள் நெற்றியில் குங்குமத்தை வைத்தாள். திரும்பி வந்து அவர் முன் நின்றவள்.
“அத்தை நான் உங்க பையன் கிட்ட இருந்து எந்த சேதாரமும் இல்லாமல் உங்களை மறுபடி வந்து உயிரோட பார்க்கணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க “ என்று அவரின் காலில் விழுந்து எழுந்தாள்.
அவர் புன்னகையுடன், “அதெல்லாம் ஒண்னும் ஆகாது, நீ எதையும் சமாளிப்பங்கிற தைரியம் எனக்கு இருக்கு, வா சாப்பிட போலாம்” என்றவாறு வெளியே வர,
ரஞ்சன் டைனிங் ஹாலை அடைந்திருந்தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவன் ஒரு நிமிடம் மயூரியைக் கண்டு வியந்தான். அவர்கள் சிரித்துக் கொண்டே வருவதைக் கண்டவன் மயூரியின் பால் போன்ற முகத்தில் சற்று லயிக்கத் தான் செய்தான்.
அவளும் நிமிர்ந்து அவனைப் பார்க்க, சட்டென சுயநினைவுக்கு வந்தவன் முகத்தைத் திருப்பிச் சாப்பிட அமர்ந்தான்.
மரகதம் அடுக்களையிலிருந்து உணவுகளை எடுத்து வர, அவனும் அமைதியாக உணவை உண்டு முடித்தவன் ஏதும் சொல்லாமல் மாடி ஏறிச் சென்று விட்டான்.
மரகதம் அவளை மாடிக்குச் செல்லுமாறு கூறிவிட்டு அவர் அறைக்குச் சென்றார்.
மரகதம் செல்லும் வரை தான் பார்த்துக் கொள்வதாக அவருக்குத் தைரியம் சொன்னவளின் தைரியம் மாடி ஏறும்போது காணாமல் போயிருந்தது.
தயக்கத்துடன் மாடி ஏறியவள் ரஞ்சனின் அறை வாயிலில் கதவைத் திறக்கலாமா..? இல்லை தட்டலாமா..? என்று தயங்கி நின்று இருந்தாள்.
அவன் ரூம் வாயிலில் உரிமை ஏதும் இல்லாமல் நிற்பது.. யாசகம் கேட்பது போல் மயூரிக்குத் தோன்றியது. கீழே சென்று சோபாவில் படுக்கலாமா என்று தோன்றியது, ஆனால் காலையில் மாமியாரோ வேறு யாரோ பார்த்தால் என்ன செய்வது?
ரஞ்சனே தன்னைக் கேலி செய்ய மாட்டானா என்ற எண்ணம் தோன்றியது. ‘வம்பாகத் திருமணம் செய்தவன் அவன் தானே?’ என்ற எண்ணம் அவளைக் கதவைத் தட்ட கையை உயர்த்தத் தூண்டியது.
அவள் கைகள் கதவை நெருங்கவும்,அவன் கதவைச் திறக்கவும் சரியாக இருந்தது. அவளை ஒரு ஏளனப் புன்னகையுடன் கண்டவனைச் சற்று தயக்கத்துடன் பார்த்தவள், பின் உள்ளே சென்றாள்.
அவள் உள்ளே செல்ல வழி விட்டவன்,அவள் பின்னே கதவைத் தாளிட்டுவிட்டு உள்ளே வந்தான். அறையைச் சுற்றி நோக்கியவள் அமைதியாகக் கட்டிலின் அருகே சென்று நின்றாள்.
“என்ன இவ்வளவு பெரிய வீடு, இந்த சுகத்தை எல்லாம் விட்டு ஓட பார்த்ததை நினைச்சு வருத்தப்படுறியா? “என்று கேட்டான்.
அவனின் வார்த்தை மனதில் குத்தினாலும், “ஹலோ.. மிஸ்டர் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? எங்க வீட்ல எனக்கு தனி ரூம் ஏசி எல்லாம் இருக்கு” என்றாள்.
அவன் ஏளனமாக உதட்டைச் சுழித்து தலையைச் சரித்து அவளைப் பார்க்க, அவளுக்கு அவனின் முகம் மனதின் ஆழத்தில் பதிந்தது. ‘சிரித்தால் நன்றாகத்தான் இருப்பான்’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டாள்.
அவளின் பார்வையில் லேசாக தடுமாறிய இதயத்தைத் நிலைப்படுத்தியவன்,
“ஏய்.. இந்த பார்வை ஆசை வார்த்தை சரசங்கள்..எல்லாம் உனக்கும் எனக்கும் நடுவுல எதுவும் இல்லை புரிந்ததா? ஓடிப் போனவள் தானே நீ? உன்னை வாழ்க்கை முழுக்க வாழ விட மாட்டேன்டி. நீ வெளிய தான்.. ரஞ்சனோட மனைவியா இருப்ப, ஆனா இந்த ரூமுக்குள்ள உனக்கும் எனக்கும் ஒண்னும்… இல்ல. என்னோட நகம் கூட உன் மேல படாது. நீ வாழ்க்கை முழுக்க இந்த வீட்டுக்குள்ள ஒரு கைதியா இருக்க போற, கைகளில் விலங்கு மாட்டாத கைதி..! உன்னை ஒரு குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கிச் சாக வைக்கிறேன் பாரு.. டி..!’’ என்றான் பற்களைக் கடித்தபடி அவளை முறைத்து.
அவனை உற்றுப் பார்த்தபடி அவன் கூறியதைக் கேட்டவள், கைகளின் இடைவெளியில் ஒரு கொட்டாவியை விட்டுவிட்டு,
“அவ்வளவுதானா? வேற எதுவும் இல்லையே?” என்றவள் விறுவிறுவென சென்று கட்டிலின் நடுவில் இரண்டு தலையணையை வைத்துவிட்டு படுத்து விட்டாள்.
ரஞ்சன் தான் திகைத்து விட்டான். ‘இவள் என்ன டிசைன்?’ என்று ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. அவன் கூர்மையாக அவளைப் பார்த்துக் கொண்டு நிற்க, தலையை மட்டும் தூக்கியவள்,
“ஹலோ மிஸ்டர் ரஞ்சன்… ப்ளீஸ் லைட் ஆஃப் பண்ணிட்டு படுங்க” என்றாள்.
ரஞ்சன் பற்களை நறநறவென கடித்தவன், அவன் அறையில் இருந்த பால்கனியில் சென்று நின்று ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தான்.
அவனின் காலடித்தடம் விலகுவதை உணர்ந்தவள், திரும்பிப் பார்த்து புன்னகைத்தவள் சந்தோஷப்பட்டுக் கொண்டவள். நினைத்து கொண்டாள்..
‘நாம கூட பெரிய போராட்டம் பண்ணனும்னு நினைச்சா, அவரே நான் சொல்ல வேண்டியதை முழுசா சொல்றாரு. கடவுள் இருக்காருடி மய்யூ’ என்று புன்னகைத்தவள், பால்கனியில் தெரிந்த அவனின் பக்கவாட்டு முகத்தைப் பார்த்தபடியே உறங்கியும் போனாள்.
சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவனுக்கு ஆச்சரியம்தான். அவள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளின் அமைதியான முகத்தைக் கண்டவனுக்கு லேசாக மனம் இளகத்தான் செய்தது.
அவளை இப்போதுதான் நன்றாக எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் பார்க்கிறான். அவன் மனமும் ஏனோ தடுக்கவில்லை. அவளின் நீள் வட்டமான முகமும், பார்லருக்குச் செல்லாமலே வளைந்திருந்த புருவங்களும், அந்தப் பெரிய விழியைக் காத்து நின்ற இமைகளும், சற்றுச் சப்பையான மூக்கும் அதன் கீழ் அந்த இதழ்களும் அவன் விழிகள் அங்கே வந்து நின்றது.
‘எவ்வளவு பேசுகின்றன அந்த இதழ்கள்? தன்னையே எதிர்த்துப் பேசுகின்றனவே!’ அவைகளுக்கு அதற்கான தண்டனையைத் தரும் விதத்தை எண்ணியவன்’ சட்டென சுதாரித்தான். ‘தான் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்? இவளைத் தண்டிப்பதற்காக தானே திருமணம் செய்தோம்? இப்போது தன் எண்ணங்களுக்கு என்னவாயிற்று?’ என்று ஆச்சரியப்பட்டவன்,
அமைதியாக வந்து அவள் தலையணை வைத்திருந்த விதத்தைக் கண்டபடியே மறுபுறம் வந்து படுத்துக்கொண்டான். அவளுக்கு முதுகு காட்டித்தான் படுத்தான், ‘அவள் முகத்தைப் பார்த்துப் படுக்க அவனுக்குப் பிடிக்கவில்லை’ என்று கூறுவதை விட ‘பயமாக இருந்தது’ என்றே கூற வேண்டும்.
