நிழல் – 4

காலை சூரியன் பெங்களூரின் மரங்களுக்கு இடையே மெல்ல எட்டிப்பார்த்தபோது, அந்த குளுமையான காற்று விடுதியின் ஜன்னல் வழியாக உள்ளே பாய்ந்து பவித்ராவின் முகத்தை மெல்லத் தழுவியது.

புதிய இடம், புதிய படுக்கை, புதிய சூழல் – இவை அனைத்தும் சேர்ந்து பவித்ராவிற்கு ஆழ்ந்த தூக்கத்தைத் தரவில்லை. இரவு முழுவதும் அரைகுறை விழிப்புடனேயே கிடந்தவள், காலை ஆறு மணிக்கே முழுவதுமாக விழித்துக் கொண்டாள்.

அவள் கண்கள் திறந்ததும் முதலில் தேடியது தன் மொபைல் போனை. கட்டிலுக்கு அருகில் இருந்த சிறிய மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த போனை எடுத்தவள், வாட்ஸ் ஆப்பை திறந்து பார்த்தாள்.

அவள் அனுப்பிய மெசேஜ் இப்பொழுதும் சிங்கிள் டிக்கில் இருந்தது. ‘என்ன இவ.. ஆன்லைன் கூட வராம இருக்குறா..? என்ன ஆச்சு இவளுக்கு..?’ என்று எண்ணிக் கொண்டே, அவளுடைய எண்ணிற்கு மீண்டும் முயற்சித்தாள். அப்பொழுதும் அவள் எண் ஸ்விட்ச் ஆஃபில் இருக்க, அவளுடைய கவலை அதிகமானது.

பவித்ராவின் முகம் வாடியது. கோபமும் கவலையும் கலந்த ஒரு பெருமூச்சை விட்டவள், காலை கட்  செய்துவிட்டு வாட்ஸ் ஆப்பை  திறந்தாள். மீண்டும் தன் தோழி லீலாவிற்கு மெசேஜ் அனுப்பினாள்.

“லீலா..! கால் மீ.. ஐ ஆம் வொரியிங்க் அபௌட் யு..”

அந்த சமயம், பக்கத்தில் இருந்த படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த ஆர்த்தி தூக்கம் கலைந்து எழுந்தாள். “என்ன பவி..? இவ்ளோ சீக்கிரம் எழுந்திருச்சுட்ட..?” என்று கேட்டவாறு படுக்கையில் எழுந்து அமர்ந்தாள் ஆர்த்தி.

பவித்ராவின் வாடிய முகத்தை கண்ட ஆர்த்தி, “என்ன ஆச்சு…? உன் ஃப்ரெண்ட் கிட்ட பேச முடியலையா..?” என்று கேட்டாள். ஆம் என்று மெல்ல பவித்ரா தலையசைத்தவள், “லீலா ஃபோன்.. ஸ்விட்ச் ஆஃப்லேயே இருக்கு.. அதான் கொஞ்சம் கவலையா இருக்கு..” என்று கவலையாக கூறினாள்.

இதை கேட்டதும் ஆர்த்தி, “ரிலாக்ஸ்.. மே பீ.. அவ ஃபோன் ஏதாவது பிராப்ளம் ஆகிடுக்கலாம்.. இதுக்கலாமா கவலைபடுவாங்க..! நீ உன் மத்த ஃப்ரெண்ட் இல்ல அவங்க வீட்டு நம்பர் இருந்தா கால் பண்ணி பாரு..” என்று கூறிக் கொண்டே எழுந்தவள், “பேசிட்டு சீக்கிரம் வா.. நா உனக்கு குளிக்க தண்ணி பிடிச்சுவைக்கிறே..” என்று கூறியவாறு வாளியை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

ஆர்த்தியின் வார்த்தைகள் பவித்ராவிற்கு சிறிது ஆறுதல் அளித்தன. இருப்பினும், லீலாவிற்கு என்ன ஆனது என்ற கவலை அவளை வாட்டியெடுத்தது. லீலாவின் நிலையை பற்றி யாரிடன் கேட்டு தெரிந்துகொள்வது என்று புரியாமல் குழம்பி தவித்தாள்.

அந்த சமயம், அவளது ஃபோன் அலற, திரையில் அவளது தாயின் முகம் தெரிந்தது. தனது செல் போனை சமாதானம் செய்து காதுக்கு கொடுத்தவள், “ஹலோ அம்மா..” என்று பேச ஆரம்பித்தாள்.

“பவித்ரா.. எப்படிமா இருக்க.. நைட் நல்லா தூங்கினயா..? படுக்கை எல்லாம் வசதியா இருந்தத..? இல்லேன்னா சொல்லுமா.. அப்பாகிட்ட சொல்லி.. வார்டன் கிட்ட பேசி.. ஒரு நல்ல ரூமா மாத்திக்கலாம்..” என்று அக்கறையாக பேச ஆரம்பித்தார்.

“அம்மா.. நா நல்லாதான் இருக்கே.. எனக்கு இங்க எந்த பிரச்சனையும் இல்ல..” என்று பவித்ரா கூறியதை கேட்டு பெரு மூச்சு விட்டார் கமலா.

மேலும் அவர், “சரிமா.. நல்லா சாப்பிடு.. உடம்ப பாத்துக்கோ.. உனக்கு ஏதாவது பிரச்சனையினா உடனே சொல்லு..” என்று தன் மகளிடம் அடுக்கடுக்காக அறிவுரைகளை பொழிந்து கொண்டிருந்தார் கமலா.

அனைத்திற்கும் சரி என்று தலையசைத்த பவித்ரா, தன் தோழியை பற்றி கேட்க ஆரம்பித்தாள். “அம்மா.. லீலா அங்க வந்தாளா..? அவ ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு.. நா இங்க வந்ததுக்கு அப்பறம் என்னால அவ கிட்ட பேச முடியல.. அவள நீங்க பாத்தீங்களா..?” என்று கேள்விகளை அடுக்கினாள் பவித்ரா.

“இல்லையேமா.. நா அவள பாக்கவே இல்லையே.. நீ இங்க இல்லாததால அவளும் இங்க வரதில்ல..” என்று கூற, பவித்ராவின் கவலை அதிகமானது.

‘லீலா.. அங்கையும் வரலையா..அம்மா சொல்றது சரிதான்.. நா இல்லாத வீட்டுக்கு அவ ஏன் வர போறா.. ஆனா.. அவ ஃபோன் ஏன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு.. அவளுக்கு என்ன ஆச்சு..?’ என்ற கேள்விகளை அவள் மனம் ஓயாமல் எழுப்பிக் கொண்டிருக்க, மறுமுனையில் தன் மகளின் குரல் கேட்காமல் சற்று பதட்டமானார் கமலா.

“ஹலோ பவிமா.. லைன்ல இருக்கியா..?” என்று தன் தாயின் குரல் கேட்ட பவித்ரா, “ஹா.. இருக்கே.. அம்மா.. லீலாவோட அம்மா நம்பர்.. உங்களுக்கு தெரியுமா..?” என்று கவலையுடன் கேட்டாள்.

“இல்லமா.. எனக்கு தெரியாது.. நீ கவலைபடாம இரு.. லீலா.. இங்க வந்தா நா அவள பேச சொல்றே..” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார் கமலா.

கமலா போனை வைத்ததும், பவித்ரா தன் படுக்கையிலேயே சிலையென அமர்ந்திருந்தாள். எங்கும் செல்லப் பிடிக்கவில்லை, எதையும் பார்க்கப் பிடிக்கவில்லை. தன் தோழிக்கு என்ன ஆனது என்ற கவலை அவளை வாட்டி எடுத்தது.

அந்த சமயம், “பவி.. என்ன பண்ணிட்டு இருக்க..? டைம் ஆச்சு, கிளம்பு! லேட்டா போனா மெஸ்ல ப்ரேக்ஃபாஸ்ட் காலியாகிடும்…” என்று ஆர்த்தி ஈரத் தலையைத் துடைத்தபடி உள்ளே வந்து அவளைத் துரிதப்படுத்தினாள். தன் கவலையை ஆர்த்தியிடம் மறைக்க முயற்சித்தபடி, இயந்திரத்தனமாகக் குளிக்கச் சென்றாள் பவித்ரா.

தன் மகளின் கவலையான குரல் இணைப்பை துண்டித்த பிறகும் கமலாவின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவருக்கு எதிரே அமர்ந்திருந்த பாலமுருகன், கையில் செய்திதாளுடன் தேநீரை ருசித்து பருகிக் கொண்டிருந்தார்.

அவர் அருகில் தயங்கியபடி சென்ற கமலா, “என்னங்க.. நம்ம பவி பேசுனா.. அவ லீலாவ பத்தி கேட்டா.. லீலா ஃபோன் .. நேத்துல இருந்து ஸ்விட்ச் ஆஃப்ல இருக்குதாம்..” என்று மென்மையான குரலில் கூறினார்.

“அதுக்கு என்ன இப்போ..?” என்று கரகரபான குரலில் கேட்ட பாலமுருகனின் கண்கள் செய்திதாளிலேயே நிலைத்திருந்தது. “இல்ல.. நா போய்.. அந்த பிள்ள லீலாவ பார்த்து பேசிட்டு வரட்டா..?” என்று கமலா கேட்டதும் அவரை முறைத்து பார்த்தார் பாலமுருகன்.

“இல்ல.. பவி ரொம்ப கவலைபடுறா.. இப்போதான் அவ சரியாகி, ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வந்துருக்குறா.. திரும்பவும்.. எதாவதுனா..” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே அவரது பேச்சை திரையிட்டு தடுத்தது பாலமுருகனின் அதிகாரக் குரல். “அதெல்லாம் உன் மகளுக்கு ஒன்னும் ஆகாது.. போய்.. உன் வேல என்னவோ.. அத மட்டும் பாரு.. அத விட்டுட்டு.. வேற ஏதாவது உன் மகளுக்காக வேல பாத்துகிட்டு இருந்த.. கொன்னுடுவே..!” என்று மிரட்டிவிட்டு எழுந்து சென்றார்.

இதை கேட்ட கமலா, தன் மகளுக்காக வாயை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தார். தன் கணவனின் மிரட்டலில் உறைந்து போன கமலா, கண்ணீரைத் துடைத்தபடி சமையலறைக்குள் தஞ்சம் புகுந்தார். தன் மகளின் வாழ்க்கையில் விளையாடும் இந்த மர்ம நாடகத்தில் தன்னால் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க முடிகிறதே என்ற ஆதங்கம் அவரை வாட்டியது.

அதே நேரம், லீலா தன் இருண்ட அறைக்குள், உடைந்து சிதறிக் கிடக்கும் தன் மொபைல் போனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் இரவு முழுவதும், அழுது வீங்கியிருந்தன. அவளது நினைவலைகள் நேற்று நடந்த அந்த கசப்பான சம்பவத்தை நோக்கிப் பின்னோக்கிச் சென்றன.

பவித்ரா பேருந்து ஏறிச் சென்ற சில மணி நேரங்களில், பாலமுருகன் லீலாவின் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் லீலாவின் தாயிடம், “அம்மா.. பவித்ரா.. இப்போதான் ஒரு பெரிய விபத்துல இருந்து தப்பிச்சு வந்துருக்கா.. பழைய நினைவுகள் எதுவும் வர கூடாதுன்னும்.. அப்படி வந்தா.. அது அவ உயிருக்கே ஆபத்துன்னு டாக்டர் சொல்லிறுக்காரு.. அதுக்காகத்தான்.. இப்போ நா பவித்ராவ.. பெங்களூர் அனுப்பிருக்கே.. இத நானும் உங்க பொண்ணுக்கு எவ்வளவோ புரிய வைக்க ட்ரை பண்ணிட்டே.. பட் நாங்க சொல்றத கேட்காம.. அந்த சிவாவ பத்தி நா சொல்லியே ஆவேன்னு உங்க பொண்ணு லீலா நிக்கிறா.. கொஞ்சம்.. உங்க பொண்ணுகிட்ட சொல்லி.. நீங்களாவது புரிய வையுங்கமா.. என் பொண்ணு உயிர.. காப்பாத்தி கொடுங்கம்மா..” என்று தன் கைகளை கூப்பி, வேண்டினார் பாலமுருகன்.

தன் தோழி பழைய நினைவுகளை மீட்க பெங்களூர் சென்றிருக்கும் நிலையில் இவ்வாறு அவர் பொய் கூறுவது, லீலாவிற்கு கோவத்தை தூண்டியது. “ஏன் அங்கிள்.. இவ்வளோ பச்சையா பொய் சொல்றீங்க..? அவ பெங்களூர் போனதுக்கு காரணமே.. அவளோட பழைய நினைவுகள் திரும்பி வரணும்னு தான்.. அவ எல்லாத்தையும் மறந்திருந்தாலும்.. இங்க இருந்தா.. அத நடக்க விட மாட்டீங்கன்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கு.. அதான் அவ இங்க இருந்து போய்ட்டா…” என்று லீலா கூறியதும், பாலமுருகன் அவளை முறைத்துப் பார்த்தார்.

மேலும் தொடர்ந்த லீலா, ”நீங்க என்ன தடுத்தாலும்.. நா சிவாவ பத்தின உண்மைகள மட்டுமில்ல… இந்த ஆக்சிடென்ட்க்கு காரணம்.. உங்க புள்ள கௌதம் தான்னும்.. சொல்லிதான் ஆவேன்..” என்று அவள் கூற, கோவமடைந்த லீலாவின் தாய் அவளை கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

தன்னை இதுவரை அடித்திராத தாய் இவ்வாறு அறைந்ததை கண்ட லீலா அதிர்ந்து போனாள். “என்னடி.. விட்டா.. ரொம்ப ஓவரா பேசிக்கிட்டு இருக்குற..? தப்பு நடந்துருச்சு.. அத சரி பண்ணுறத விட்டுட்டு.. பிரச்சனைய பெருசு பண்ணிக்கிட்டே போற… எவ்வளவு பெரிய மனுஷன்.. அவரு தான் பொண்ணுக்காக கெஞ்சிக்கிட்டு இருக்குராரு.. நீ திமிரெடுத்து போயா பேசுற.. அப்பா இல்லாத பிள்ளன்னு செல்லம் கொடுத்தது தப்பா போச்சு.. சொல்லாதன்னா.. சொல்லாத.. புரிஞ்சுதா..?” என்று கொந்தளித்தார்.

அவர் கோவத்தை சிறிதும் பொருட்படுத்தாத லீலா, “நீங்க எவ்வளவு அடிச்சாலும் சரி.. என்ன கொன்னே போட்டாலும் சரி,.. நா பவி கிட்ட உண்மைய சொல்லிதா ஆவேன்.. அவளுக்கு.. சிவாவ பத்தி தெரிஞ்சுதான் ஆகணும்..” என்று அழுதவாறு கூறி, தன் மொபைல் போனை அவள் எடுத்தாள்.

வெடுக்கென்று பிடுங்கிய லீலாவின் தாயார் அதை தரையில் எறிந்தார். அந்த மொபைல் சுக்கு நூறாக சிதற உறைந்து போனாள் லீலா. “அம்மா.. ஏம்மா இப்படி பண்ற..? அன்னைக்கு என்ன நடந்துதுன்னு உனக்கு தெரிஞ்சா.. நீயே பவிகிட்ட உண்மைய சொல்லன்ணும்னு துடிப்ப.. இவங்களெல்லாம் நம்பாத.. இவங்க ரொம்ப மோசமானவங்க..” என்று கத்த ஆரம்பித்தாள்.

அவளுக்கு பதில் எதுவும் கூறாத லீலாவின் தாய், பாலமுருகனிடம் உறுதியளித்தார். “நீங்க போங்க.. என் பொண்ணு உங்க பொண்ணுகிட்ட பேச மாட்டா..” என்று கூறியதும், “நா பேசிதான் ஆவேன்..” என்று மீண்டும் கூறினாள் லீலா.

அவள் பக்கம் திரும்பிய லீலாவின் தாய், “நீ இன்னொரு தடவ பவிகிட்ட பேசுன.. என்ன உயிரோடயே பாக்கமாட்ட..” என்று எச்சரிக்க, அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியாமல் அழுது கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் லீலா. அவள் இவ்வாறு அறைக்குள் அமைதியாக சென்றதை கண்ட பாலமுருகன் குரூரமாக சிரித்தார். லீலாவை அடக்கியதை நினைத்து பெரு மூச்சு விட்டவாறு அங்கிருந்து எழுந்து சென்றார் பாலமுருகன்.

அவர் சென்றதும், லீலாவின் தாய் கண்கலங்க ஆரம்பித்தார். தன் மகளை இந்த மோசமானவர்களிடம் இருந்து காப்பாற்ற நினைத்து அடித்ததை எண்ணி அழ ஆரம்பித்தார். ஏனெனில் அவருக்கு நன்கு தெரியும் பாலமுருகன் அங்கு வந்தது, பவித்ராவிற்காக தன்னிடம் கெஞ்சுவதற்காக இல்லை.. லீலாவிற்காக தன்னை எச்சரிக்கை செய்ய என்று…

                                    -நிழல்கள் தொடரும்..…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page