அத்தியாயம் 8
“எனக்கு தேவைப்பட்டதை நீ கொடுத்தா தான, உனக்கு தேவைப்பட்டதை நான் தர முடியும். ஆம் ஐ கரெக்ட்? உன் ப்ரெக்னன்சி கன்பார்ம் ஆகட்டும், உன் அம்மாவை பார்க்க போகலாம். இங்க நீ சரியா நடந்துக்கிட்டா தான் அங்க உன்னோட அம்மாவுக்கு அடுத்த ஆபரேஷன் நடக்கும்.
நான் யார்கிட்டேயும் இவ்வளவு பொறுமையா பிசினஸ் பேசுனதில்ல. உன்கிட்ட பேச வேண்டிய நிலைமைல இருக்கேன்” மிதுன் பேசப் பேச நதியா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
ஒருவேளை நான் இந்த ஒரு வருஷத்துல ப்ரெக்னன்ட் ஆகலைன்னா என்ன பண்ணுவீங்க? கோபமும் கலக்கமும் கலந்த குரலில் அவள் கேட்டிட,
“உன்னோட அம்மா உனக்கு உயிரோட கிடைக்க மாட்டாங்க” இதழ் வளைத்து கேலியாகச் சிரித்தான்.
“என்னோட அம்மாவை பார்க்கணும்னு தான சொன்னேன். அவங்களை கூப்பிட்டு ஓடிடுவேனா?” அம்மாவை அப்படி சொல்லி விட்டானே என்ற ஆதங்கத்தில் அவள் நியாயம் கேட்க,
“ஏய்.. என்ன என் முன்னாடியே வாய்ஸ ரைஸ் பண்ற. என்னை பார்த்தா உனக்கு இளிச்சவாயன் மாதிரி தெரியுதா. உன்னோட அம்மா ஆபரேஷன், ஹாஸ்பிடல் செலவு, அவங்க மெயின்டனன்ஸ், உனக்கு தண்டமா இங்க மூணு வேளை சாப்பாடு இதுக்கெல்லாம் எவ்வளவு செலவாகுது தெரியுமா? உன்னால என்னோட டைம் எவ்வளவு வேஸ்ட் ஆகுது தெரியுமா?
“நான் யார் கூடவும் என்னோட ரூமை கூட ஷேர் பண்ணதில்ல. உன் கூட என் பெட்டையே ஷேர் பண்ணியிருக்கேன். நீ பண்ற டார்ச்சருக்குலாம் இதுவரைக்கும் உன்னைக் கொல்லாம பொறுமையா இருக்கேன். இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் உனக்கு நான் விளக்கம் கொடுத்துட்டு இருக்கேன்.
“எப்படி எப்படி.. நான் இவ்வளவும் பண்ணா, அக்ரிமெண்ட் முடியுற வரைக்கும் குழந்தை பிறக்கலன்னா என்ன பண்ணுவ அப்படின்னு நக்கலா கேட்கிற. சிம்பிள் அங்க உன்னோட அம்மாவை கொன்னுட்டு, இங்க உன்னையும் கொன்னுடுவேன்.
“நான் பிசினஸ்காக எத்தனை கொலை பண்ணியிருக்கேன் தெரியுமா? தேவையில்லாம நீயும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துராத. சோ இப்போ கிளம்புன மாதிரி குட் கேர்ளா நைட் சீக்கிரம் குளிக்கணும். அலாரம் வைக்கிறேன்னு சொல்லி என் உயிரை வாங்கக் கூடாது. உடம்பு முடியலைன்னு படுத்துக்கக் கூடாது. இந்த வீட்ல இருக்கவங்க விஷயத்துல தேவையில்லாம இண்டர்ஃபியர் ஆகக்கூடாது. முக்கியமா நான் எழுப்புனா டக்குனு முழிச்சிரனும். இல்லனா அன்னைக்கு ஷவர் ல நிக்க வைச்ச மாதிரி நிக்க வச்சிடுவேன். ஓகே?” அவன் குரூரமாய் புன்னகைத்து அவள் கன்னத்தில் தட்டிச் சென்றிட, அவள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள்.
அவ்வளவுதான் என்னுடைய வாழ்க்கை இந்த வீட்டிலேயே முடிந்துவிடும் போல என நினைத்து பயந்தாள். இருந்த கொஞ்ச மன நிம்மதியும், உற்சாகமும் பறந்தோட, இறுக்கமான முகத்தோடு இருந்தாள்.
நதியா எப்போதும் எதையோ பறிகொடுத்தவள் போல் இருந்திட, ‘நானா ரோபோ.. இப்போ நீதான் ரோபோ மாதிரி சுத்திட்டு இருக்க. இருந்தாலும் என்னோட ரேஞ்சுக்கு உன்னைலாம் ரிவேன்ஜ் எடுக்கிற நிலைமையா ஆகிடுச்சே. வான்டடா வந்து மாடிக்கிட்ட. என்ஜாய்’
உள்ளுக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டான் மிதுன்.
அன்று மகள் வீட்டிலிருந்து மிதுன் வீட்டிற்கு வந்திருந்தார் ருக்மணியம்மாள். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட, பெரியவர் சக்கரவர்த்தி தன்னுடைய தம்பி மதிவாணன், தங்கை மேகலா இருவரையும் ஆளாக்கி, அவர்களுக்கு தேவையானதை செய்து, சொத்துக்களையும் பிரித்துக் கொடுத்தார்.
அவர் தன்னுடைய தங்கை மேகலாவை, நண்பன் சிவாவிற்கு திருமணம் செய்து வைத்தார். சிவாவும் இதே தொழில் தான் செய்கிறார். சக்கரவர்த்தி, சிவாவிற்கு இடையில் தொழில் போட்டி உண்டு, ஆனால் பகை இல்லை. இருவரில் யார் முதலிடம் பிடித்தாலும் மற்றவருக்கு பாராட்டைச் சொல்லி, அதைக் கடந்து சென்றுவிடுவர்.
ஆனால் சக்கரவர்த்தியின் தம்பி மதிவாணன் அண்ணனுடன் இருந்து தொழில் பழகி, அண்ணன் தந்த பணத்தில் தொழில் தொடங்கி, அவர் கூடவே இருந்து, அண்ணனை விட பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். சக்கரவர்த்தியின் மற்ற தொழில் பகைவர்களும் மதிவாணனுக்கு தூண்டுதலாக இருந்திட, அவர்களின் சதிவலையில் சிக்கிய சக்கரவர்த்தி உயிரிழந்தார்.
மிதுன் அவனுக்கு மிகவும் பிடித்த விஷுவல் கம்யூனிகேஷன் தான் படித்தான். அவனுக்கு பிசினஸ் மேல் நாட்டமில்லை. அதனால் சக்கரவர்த்திக்கு பிறகு அவரது பிசினஸ் அப்படியே முடங்கிவிடும் என்றுதான் நினைத்தார்கள்.
சக்கரவர்த்தி இழப்பு அவரது குடும்பத்திற்கு பேரிழப்பாக அமைந்தது. அதுவும் மிதுனுடைய சித்தப்பா தான் அவனது அப்பாவின் மரணத்திற்கு காரணம் என்று தெரியவர, அந்த துரோகத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அது வரை ஒரே குடும்பம், உறவுகள் என்று இருந்தவர்கள் இரு துருவங்களாகிப் போனார்கள்.
அப்பாவை எப்படி விபத்தில் சாகடித்தார்களோ, அதே போல அவனுடைய சித்தாப்பாவிற்கும் விபத்தை ஏற்பாடு செய்தான். அவரது மரண செய்தி வந்ததும் மிதுன் நேரடியாகச் சென்றது அவனுடைய பாட்டியிடம் தான்.
“பாட்டிமா.. தொழில்ல அப்பாவோட முதலிடம் தான் வேணும்னு சித்தப்பா அவர்கிட்ட கேட்டிருந்தா, அவரே கொடுத்திருப்பார். அதுக்கு ஏன் அவரைக் கொல்லனும்? அந்த அளவுக்கு அவர் என்ன பெரிய தப்பு பண்ணினார். எங்களுக்கு அப்பா வேணும்னு ஏன் சித்தப்பா நினைக்கவே இல்ல.
“இப்போ உங்க ரெண்டாவது பையனும் உயிரோட இல்ல. நான் அவரையும் இல்லாம பண்ணிட்டேன். ஒவ்வொரு நிமிஷமும் எங்க அப்பாவைப் போல எங்களையும் அவர் ஏதாவது செஞ்சுடுவார்னு பயந்துகிட்டே வாழ முடியாது. என்னை மன்னிச்சுடுங்க” அவரின் கைகளைப் பற்றி முகம் புதைத்து அழுதான்.
“அழாத கண்ணா.. நீ பண்ணது தப்பில்ல. ‘அநீதிக்கு எதிரா போரிடுறதும், தப்பு செஞ்சவனை தண்டிக்கிறதும் தர்மம்’ அப்படின்னு கிருஷ்ண பகவானே சொல்லியிருக்கார். நல்வழில போ. உன் பாதையில நிக்கிற கயவர்களோடு போராடு, முடியலைன்னா அழிச்சிடு. உனக்கு கடவுள் துணையிருப்பார்” இரண்டு மகன்களை இழந்த வேதனை மனதிலிருந்த போதும், பேரனுக்கு ஆறுதலும், ஆதரவும் தந்து தேற்றினார் அவனுடைய பாட்டி.
சித்தப்பா இறந்த பிறகு, அவரது குடும்பத்தையும் ஒதுக்கினான் மிதுன். மதிவாணனுக்கு ராஜீவ், அகிலன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதோ மிதுனின் முதன்மை எதிரியே ராஜீவ் தான். தன்னுடைய தந்தையின் மரணத்திற்குக் காரணமான மிதுனைப் பழிதீர்க்க, சரியான தருணத்திற்காகக் காத்திருக்கிறான். தொழிலில் மிதுனின் முதலிடத்தைப் பெற அவன் எவ்வளவோ போராடுகிறான்.
ராஜீவ், அகிலன் இருவரும் அவர்களது அப்பா கம்பெனியில் இருந்தாலும், அகிலனுக்கு மிதுனுடன் மோதுவதில் விருப்பமில்லை. சிறுவயதில் இருந்தே அவர்கள் ஒன்றாக இருந்தபோதும், பிரிந்தபோதும் அவனுக்கும் மிதுன் மேல் ஒரு மரியாதை கலந்த அன்பு எப்போதும் உண்டு.
அகிலன் புத்தி சொன்னால் ராஜீவ் கேட்கமாட்டான். வேறு வழியில்லாமல் அண்ணன் செய்வதை வேடிக்கை பார்க்கிறான். தொழிலில் அவன் தரும் சிக்கல்களை மிதுன் எளிதாக சமாளித்து விடுவான் என்பதால் அகிலனும் கண்டுகொள்வதில்லை.
சக்கரவர்த்திக்கு மதிவாணன் மூலமாக ஆபத்து வரப்போகிறது என்ற தகவல் மேகலா கணவர் சிவாவிற்கு முன்கூட்டியே தெரிந்த போதிலும், மதிவாணன் அப்படி செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில் அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, சக்கரவர்த்தியிடம் போய் சொல்லவில்லை. “உன் தம்பி உன்னை கொல்ல முயற்சி செய்கிறான்” என்று அவருடைய நண்பன் எப்படி அவரிடம் சொல்ல முடியும்.
ஆக இந்த திட்டத்தில் அத்தையின் கணவருக்கும் பங்கிருக்கிறது என்று நினைத்து, மேகலா, சிவா குடும்பத்தையும் ஒதுக்கி வைத்தான் மிதுன். அவர்களுக்கு இரண்டு மகள்கள் பெரியவள் ஸ்ருதி, சின்னவள் தாரா. போதாக்குறைக்கு ஸ்ருதி, ராஜீவ் இருவரும் கல்லூரி படிக்கும்போதிருந்தே காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்கள்.
ருக்மணி மட்டும் மேகலா வீட்டிற்கு அடிக்கடி செல்வார். அங்கு சில நாட்கள் தங்கி விட்டு வருவார். அவர் தன்னுடைய எல்லா பேரக்குழந்தைகளையும் ஒன்று போலத்தான் நினைக்கிறார். மகன்கள் இறந்து போக, குடும்பங்கள் இப்படி சிதறிப் போய் இருக்கிறதே என்று அவருக்கு எப்போதும் கவலை உண்டு. ஆனால் அதற்காக யாரையும் வற்புறுத்த முடியாதே.
மிதுனும் தன்னுடைய பாட்டியை வற்புறுத்துவதில்லை. வீட்டில் எல்லோருக்கும் ஒரு தனி காரும், ஒரு பாடிகார்டும் உண்டு. பாட்டியை பாதுகாப்புடன் மேகலா வீட்டிற்கு அனுப்பி வைப்பான், அழைத்து வரச் செய்வான்.
ராதா மாமியாரிடம் அன்பாகத் தான் நடந்து கொள்வார். ஆனால் ராதாவிற்கு பிடிக்காததை அவர் செய்தால், கோபத்தில் ஒரே வார்த்தை உங்கள் மகனால் தான் கணவரை இழந்து நிற்கிறேன் என்று அவரை காயப்படுத்தி விடுவார்.
அன்று நதியாவிடம் ருக்மணி பேசியது ராதாவுக்கு பிடிக்காது போக, இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் அவர் கிளம்பி மகள் வீட்டிற்குச் சென்று விட்டார். கோபித்துக் கொண்டு செல்லவில்லை. மேலும் பிரச்சனையை வளர்க்க வேண்டாம், ராதாவின் கோபத்தை அதிகமாக்க வேண்டாம் என்று நினைத்து சென்றிருந்தார்.
இரவு எல்லோரையும் இண்டர்காமில் அழைத்து ஹாலுக்கு வரச் சொன்னார் ருக்மணி. “நாளைக்கு வீட்ல சுமங்கலி பூஜை பண்ணனும். நம்ம வீட்ல பூஜை பண்ணி ரொம்ப வருஷம் ஆகிடுச்சுல. இந்த வருஷம் நம்ம வீட்ல ரெண்டு மருமகளுங்க இருக்காங்க. அதான் பண்ணலாம்னு நினைக்கிறேன்” பாட்டி தன் விருப்பத்தை தெரிவித்திட,
“பண்ணுங்க பாட்டி, நல்ல விஷயம் தான” சம்மதம் சொன்னான் மிதுன்.
“எல்லாரும் அவங்கவங்களுக்கு வேண்டியவங்கள காலையிலேயே போன் பண்ணி கூப்பிடுங்க. நான் உங்க மேகலா அத்தையை கூப்பிடட்டுமா?” குடும்பத்தை ஒன்று சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் பாட்டி கேட்க,
“அதான.. என்னடா திடீர்னு உங்க பாட்டி பூஜை அது இதுன்னு பேசுறாங்களேன்னு பார்த்தேன். பேரனுங்க நல்லா இருக்கணும்னு பூஜை பண்ணல. மகளை இங்க வர வைக்கணும்னு பூஜை பண்ணுறாங்க போல” ராதா மாமியாரின் மனம் நோகும்படி பேசினார்.
“பாட்டிமா.. பங்க்ஷனுக்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க பண்ணிடலாம். மத்தபடி அவங்க யாரும் வேணாம். அது முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும். நீங்க கோச்சுக்காதீங்க” மிதுன் பொறுமையாக சொன்னதால், அவனின் மனமறிந்து பாட்டியும் சரியென்றார்.
“நதியா.. நாளைக்கு ஒரு நல்ல புடவையா கட்டிக்கோ. நீதான் மூத்த மருமகளா எல்லா பூஜையும் செய்யணும்” என்று பாட்டி சொல்ல, மிதுனோடு சேர்ந்து மொத்த பேரும் அதிர்ச்சியானார்கள்.
“இதுக்கு முடியாதுன்னு சொல்லிடாதப்பா” பாட்டி முன்னெச்சரிக்கையாய் சொல்லிட, “சரி பாட்டி உங்க இஷ்டம் போல பண்ணுங்க” என்றுவிட்டு அறைக்குச் சென்றான் மிதுன். மற்றவர்களும் தங்கள் அறைக்குச் சென்றபின்,
ரூபிணி ராதாவிடம் சென்று, “என்ன அத்தை இதெல்லாம். நான் தான இந்த வீட்டு மூத்த மருமகள். அந்த பாட்டி ஏன் நதியாவை பூஜை பண்ண சொல்றாங்க?” எரிச்சலுடன் கேட்க,
எவளோ ஒருத்தியை இந்த வீட்ல பூஜை பண்ண விடுவேனா. நீதான் நாளைக்கு பூஜை பண்ற. பூஜை ஆரம்பிக்கும் போது சொன்னா தான் அவங்க தடுக்க முடியாது. நீ ஒண்ணும் கவலைப்படாத. எப்பவும் இந்த வீட்டுக்கு நீதான் மூத்த மருமக” ஆறுதலாகப் பேசி அவளை அறைக்கு அனுப்பினார் ராதா.
“நாளைக்கு பூஜை பண்றதால நைட்டு ரெண்டு பேரும் தனித்தனியா படுத்துக்கோங்க” பாட்டி நதியாவைத் தனியாக அழைத்துச் சொல்லி சென்றிட,
அறைக்குள் சென்றதும், “சார்.. பாட்டிமா நம்ம ரெண்டு பேரையும் இன்னைக்கு மட்டும் விலகி இருக்க சொன்னாங்க” நதியா பயந்தவாறு சொல்லி முடித்ததும் மிதுன் சத்தமாகச் சிரித்தான்.
❤️🔥மோகம் தீர்ப்பாள்❤️🔥
