வெந்து தணிந்த இதயம்-26

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்-26

 

இரவு யாழினி தன் அறைக்குள் வந்ததும், சிகரெட் பிடித்தபடி இருக்கும் தன் கணவனை கோபமாகப் பார்த்தாள். 

 

மூக்கில் காற்றடித்தபடியே, அவனருகில் சென்று சிகரெட்டை பிடிங்கியெறிந்தாள்.

 

அவன் முறைத்துப் பார்த்ததும், “குழந்தைக்கு இது நல்லதில்ல” என்றாள் மிடுக்காக. 

 

அவனோ எரிச்சல் பட்டான். அவளால் தாங்க முடியவில்லை.

 

சுற்றி வளைக்காமல், “நான் கர்ப்பமா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா?” என்றாள்.

 

பத்ரி அப்படி நினைக்கவில்லையென்பதால் அவளை அருகில் இழுத்து கட்டியணைத்துக் கொண்டான்.

 

யாழினிக்கு அது போதவில்லை. அவன் வார்த்தைகளுக்காக காத்திருந்தாள்.

 

ஆனால், அவனின் அணைப்பு இறுகிக்கொண்டே போனதும், “பார்த்து குழந்தைக்கு ஏதும் ஆகிடாம” என்று பதறி விலகினாள்.

 

அவன் மீண்டும் எரிச்சலடைந்தான். 

 

“உன்னை என்கிட்ட இருந்து காப்பாத்தவே இந்தப்புள்ள வந்திருக்கு போலடி?” என்று புலம்பினான். 

 

அப்போது தான் அவனின் கவலைக்கான காரணம் புரிந்தது அவளுக்கு. தன்னை விலகியிருக்க முடியாத காரணத்தினால் தான் தன் கணவன் இஞ்சி தின்ற குரங்கை போல் முகத்தை வைத்திருக்கிறான் என்பதை அறிந்ததும், தானே முன்வந்து அவனை இறுக்கிக்கொண்டாள். 

 

அவள் உடலின் கதகதப்பிலேயே சுகமாக உறங்கினான் பத்ரி.

 

மறுநாள் காலை வெக்காளியம்மன் கோவிலுக்கு குடும்பத்தோடு பொங்கல் வைக்கச் சென்றபோது, பத்ரியிடம் புலம்பியபடியே வந்தார் ரத்னவேல் பாண்டியன்.  

 

“இந்த கிழக்குத்தெருக்கார க்ரூப்புக்கு தலைவன் ராஜரத்தினம் இருக்கானே? ஒருநாள் பொங்கல் வைக்க அனுமதி கேட்டா ரொம்பத்தான் துள்ளுறான். உங்க கோவிலுக்குள்ள எங்களுக்கு வர அனுமதி கொடுங்க, நாங்க கொடுக்கறோம்னு ‌சொல்றான். எவ்வளவு நெஞ்சழுத்தம் பாரு அவனுக்கு? தேர்தல் வேற பக்கத்துல வந்திருச்சேனு தான் பொறுத்துப்போறேன் பத்ரி. இல்ல? அவனை பொலிபோட்டிருப்பேன். இப்ப வேற வழியில்லாம அவங்க ஆளுங்க வாரத்துல ஒரு நாள்‌ திங்கட்கிழமை மட்டும் நம்ம கோவிலுக்குள்ள வர அனுமதி கொடுத்திருக்கேன். நம்ம ஆளுங்கல்லாம் கொஞ்சம் சலசலத்தானுங்க. எல்லாரையும் அம்மன் பேரைச் சொல்லி பயமுறுத்தி வச்சிருக்கேன்.” என்றதும், அவரை பெருமிதமாகப் பார்த்தான் பத்ரி.

 

கோவிலுக்கு வந்ததும் அன்றைய நாள் நினைவில் தன் கணவன் சஷ்டியைப் பார்த்தாள் தெய்வானை. அவனோ தேமெவென்று இருந்தான். 

 

தெய்வானைக்கு சஷ்டி தன்னுடன்‌ கட்டிலில் கூடுகிறானே தவிர நேரில் முகம் கொடுத்துப் பேசி சிரிக்க மாட்டேன் என்கிறானே என்று ஏக்கமாக இருந்தது. கோவிலில் யாழினியை அனைவரும் தாங்குவதைக் கண்டு தானும் கருவுற மாட்டோமா என்று வேறு ஏங்கினாள்.

 

பொங்கல் வைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது தங்கள் குழந்தைகளுக்கு முடியிறக்க வந்திருந்த ஒரு தம்பதியினர் அடுப்பில் தீயை மூட்டி பொங்கல் வைக்க, அவர்களின் மூன்று குழந்தைகளும் தள்ளிப்போய் விளையாடிக் கொண்டிருந்தனர். 

 

சிறிய குழந்தையை சேர்த்துக் கொள்ளாமல் இரு பெரிய‌ குழந்தைகளும் தனித்து விளையாட‌, சிறிய‌ குழந்தை தானாக வழி தெரியாமல் சென்று ஒரு புதைகுழிக்குள் மாட்டிக்கொண்டது.

 

அப்போது ஓடிப்பிடித்து விளையாடிய பெரிய குழந்தைகளில் ஒன்று தெய்வானையின் மீது வந்து விழ, குழந்தை என்றும் பாராமல் தள்ளிவிட்டாள்.  

 

அவர்களின் அம்மா, “ராட்சசி” என்று முனகிக்கொண்டு குழந்தைகளிடம், “ஏய்! தள்ளி அந்தப்பக்கம் போய் விளையாடுங்க‌” என்று சத்தமிட்டார்.

 

தெய்வானை “ச்சே! என்னை தொட்டுடுச்சிங்களே” என்று குடத்தில் பொங்கல் செய்ய பிரத்யேகமாக கொண்டு‌வரப்பட்ட நீரை இறைத்து கையைக் கழுவினாள்.

 

சாவித்ரி கோபமாக அவளையேப்போய் கிணற்றில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வரச் சொல்ல, முகத்தை ஒரு முழத்திற்கு தூக்கி வைத்துக்கொண்டு சென்றாள். 

 

அச்சமயம் அவளின் காதோரம் குனிந்த சஷ்டி, “நல்ல வேளை நீ உண்டாகலை” என்றதும் தெய்வானை சமைந்து விட்டாள்.

 

பின், அக்கம் பக்கம் பார்த்து கண்களை துடைத்துக்கொண்டு தண்ணீர் எடுக்கச் சென்றாள். அது பத்ரியின் கண்களில் பட்டதும் சஷ்டியை முறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். 

 

மறுபக்கம் ஜெயந்தி யாழினியை முறைத்துக் கொண்டிருந்தவர் தனது வன்மத்தை கொட்டினார்.

 

“பத்ரி நீ மட்டும் இந்த தேர்தல்ல தோத்த? அப்பறம் இருக்கு சில பேருக்கு.” என்று யாழினியை பயமுறுத்தினார்.

 

அவள், ‘ஆத்தி! நம்ம புருசன் மட்டும் தேர்தல்ல ஜெயிக்கலைனா மொத்த குடும்பமும் நம்மளை படையல் போட்டிரும் போலயே?’ என்று கிலி கொண்டாள்.

 

பத்ரி அவளிடம் வந்தவன், “என்ன போன தடவை அடுப்பை பத்த வச்சதுமே உனக்கு சாமி வந்துச்சி. இன்னைக்கென்னமோ கமுக்கமா உட்கார்ந்திருக்க?” என்று கேட்டதும், 

 

‘என்னது இன்னைக்கும் நான் சாமியாடனுமா? அடப்போங்கயா! நானே மசக்கையில டயர்டா கிடக்கேன். என்னைப்போய் சாமியாட சொல்லிட்டு’ என்று மனதிற்குள் புலம்பியவள் பொசுக்கென்று அவன் மேலேயே வாந்தியெடுத்து வைத்தாள்.‌ 

 

பத்ரி தனது கைகளால் அதனை தாங்கியபோது யாழினிக்கு அவன் மீதான மொத்தப் பிணக்கமும்  பொங்கலில் இட்ட வெல்லமாய் கரைந்து போனது. அவன்பால் அன்பில் உருகி நின்றாள்.  

 

மறுபுறம் தெய்வானை சஷ்டி கூறியதை யோசித்துக்கொண்டே நடந்தபோது தள்ளியிருந்த புதைகுழியில், பொங்கல் வைக்கும் அந்த தம்பதியின் கடைசி குழந்தை மூழ்கி கொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போனாள். 

 

உடனே எதைப்பற்றியும் யோசியாமல் உள்ளே சென்றவள் குழந்தையை தூக்க முயல, அவளின் கால்களும்‌ உள்ளே மாட்டிக்கொண்டு விட்டன.

 

தங்களை காப்பாற்ற‌ யாரும் வரவில்லையென்றால் சிறிது ‌நேரத்தில் தாங்கள் இருவரும் மூழ்கிவிடுவோம் என்றவள் பயந்து அலற, அவளின் குரல் யாரின் காதிலும் விழவில்லை.

 

மிகுந்த எடையால் தன் உடல் உள்ளே புதைய‌ புதைய குழந்தையை‌ தனது தோளின் மேல் தூக்கி வைத்தவள், “நான் மூழ்கினாலும்‌ குழந்தையை‌ யாராவது பார்த்து காப்பாத்தனும் வெக்காளியம்மா” என்று மனமுருக வேண்டினாள்.

 

அப்போது அவ்விடம் வந்து சேர்ந்தான் பத்ரி. 

 

தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள கிணறு நோக்கி வந்திருந்தவன் தெய்வானையும் குழந்தையும் மூழ்குவது கண்டு நிதானமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு முதலில் தள்ளி நின்று குழந்தையை தன்னிடம் தூக்கிப்போடச் சொன்னான்.

 

அவளும் சற்று எம்பி தூக்கிப்போட புதைகுழிக்குள் விழாமல் தாங்கிக்கொண்டவன், அவளைக் காப்பாற்ற அங்கிருந்த ஒரு  மரத்தில் கட்டப்பட்டிருந்த சேலையை‌ அவிழ்த்து வந்து அவளை ஒருமுனையை பிடித்துக்கொள்ளச் சொன்னான்.

 

அவளும் அதுபோலவே செய்ய, மறுமுனையில் அவன் செய்த‌ பலமான முயற்சியில் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே வந்தாள்.

 

முழுவதுமாய்‌ அவள் புதைகுழியிலிருந்து வேளியேற, குழந்தையின் பெற்றோர்களும் அதனை‌த் தேடி வந்து விட்டனர்.

 

அவர்கள் பத்ரியின் மூலம் உண்மை முழுவதையும் தெரிந்துகொண்டு‌, “அந்த‌ வெக்காளியம்மன் தான்மா உங்களை இங்க அனுப்பியிருக்கா” என்று சொல்லி தெய்வானையைப் பார்த்து கும்பிடவும், கோவிலில் அடித்த மணியோசையில் அவளுக்கு மெய் சிலிர்த்தது.

 

அவர்களின் குழந்தையை வாங்கி கன்னத்தில் முத்தமிட்டுக் கொடுத்தாள்.

 

அவள் கிணற்று நீரால் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு உடல் முழுவதும் நனைந்து வருவதைப் பார்த்து‌‌ அனைவரும் பதறி என்னவென்று‌ கேட்க, அவர்களிடமும் நடந்ததை சொன்னான் பத்ரி. 

 

உடனே தாவி ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டான் சஷ்டி.

 

தானும் அவனை இறுக்கியணைத்துக் கொண்டவள், “நான் ஒரு குழந்தையை சாகவிடற அளவுக்கு மோசமானவ இல்ல மாமா” என்று கதறினாள்.

 

“தெரியும் தெய்வா. நீ மோசமானவ கிடையாது. என் தெய்வா என்னைக்குமே தெய்வம் தான்‌” என்று அவளின் கண்களில் முத்தமிட்டான் அவன்.

 

அப்போது ரத்னவேல் பாண்டியன் தெய்வானையை முறைத்துப் பார்ப்பதை கண்டு, அவர் அவளை திட்டுவதற்குள் தான் முந்திக்கொண்டார் ஜெயந்தி.

 

“உனக்கு அறிவிருக்கா தெய்வானை? எப்பேர்ப்பட்ட குடும்பத்துல பிறந்துட்டு ஒரு கிழக்குத்தெருக்கார குழந்தையைப்போய் தொட்டிருக்க? இந்தத் தீட்டு நீ கங்கையில போய் குளிச்சாலும் போகாது. போய் தாத்தாக்கிட்ட மன்னிப்பு கேளு” என்றதும்,

 

“முடியாதும்மா. நான் செஞ்சது தப்பு கிடையாது. அப்படி நான் செஞ்சது நீங்க தப்புனு நினைச்சீங்கன்னா என்ன தண்டனை வேணா கொடுங்க, நான் ஏத்துக்கறேன்.” என்று திண்ணமாய் கூறினாள்.

 

சஷ்டியும் அவளுக்கு ஆதரவாய் பேசினான். 

 

“தெய்வானைக்கு ஏதாவது தண்டனை கொடுக்கறதுனா எனக்கும் சேர்த்தே கொடுங்க. ஏன்னா இதே காரியத்தை நானும் செய்ய தயங்கமாட்டேன்” என்று முன் வந்து நின்றான்.

 

ரத்னவேல் பாண்டியனுக்கோ‌ அவர்கள் இருவரின் திமிரான பேச்சைக்கேட்டு நாடி நரம்பெல்லாம் கோபத்தில் புடைத்தன.

 

“நீங்க ரெண்டு பேரும் இனி பெரிய வீட்டுல இருக்கக்கூடாது. இந்த நிமிசம் உங்க ரெண்டு பேரையும் நான் வீட்டை விட்டு விலக்கி வைக்கிறேன்” என்றார் தடாலடியாக.

 

பார்வதியும் ஜெயந்தியும் அவரின் ஆவேசப் பேச்சால் தங்களின் பிள்ளைகளை நினைத்து கலங்கி நிற்க, சஷ்டி, “நானே இங்கயிருந்து வெளிய போறதுக்கான நாளைத்தான் பார்த்துட்டு இருந்தேன். நான் இதே ஊர்ல புது அரிசி ஆலை ஒன்னு ஆரம்பிக்கப்போறேன். இந்நேரம் அது உங்கக் காதுக்கும் வந்திருக்கும். அதுக்கான ஏற்பாடுகளையெல்லாம் சுதந்திரமா செய்ய எனக்கு உங்க கட்டுப்பாட்டுலயிருந்து வெளியப்போறது தான் நல்லது.” என்று அவரின் முடிவிற்கு அவன் தலை வணங்க, தாய்மார்கள் தான் துடித்துப் போனார்கள்.

 

பொங்கல் வைத்து வீட்டிற்கு வந்ததும் தெய்வானை சஷ்டியின் ஆணைக்கிணங்க‌ தனது உடைமைகளை பெட்டிக்கட்ட, அந்த வீட்டை தன் மகள் தான் ஆளுவாள் என்று எதிர்பார்த்து ஏமார்ந்து போன ஜெயந்தியோ, “அந்த கிறுக்கன் சஷ்டி வேணா இந்த வீட்டைவிட்டுப் போகட்டும் தெய்வானை. நான் உனக்காக தாத்தாக்கிட்ட பேசுறேன். நீ அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இங்கேயே இரு” என்றதும், அவரை துச்சமாக‌ப் பார்த்தாள் தெய்வானை.

 

“உண்மையாவே நீங்க தான் என்னை பெத்தீங்களாம்மா? ச்சே! ஒரு தாயே மகளோட வாழ்க்கையை கெடுக்கற கொடுமையை இங்க தான் நான் பார்க்கறேன். நீங்க தான் அப்பாவை தவிக்க விட்டுட்டு உங்க அப்பா வீட்டுல கிடக்கறீங்கன்னா என்னையும் அதே மாதிரி கிடக்க சொல்றீங்களா? எனக்கு என் புருஷன் தான் முக்கியம். அவரைப் பிரிஞ்சு வாழ்ற வாழ்க்கை எதுவும் எனக்கு தேவையேயில்ல.” என்றதும்,

 

“என்னடி நீ இப்படி பேசுற? அந்த சஷ்டியை தான் உனக்கு பிடிக்காதேடி?” என்று குமுறினார் ஜெயந்தி.

 

“அது உங்க கற்பனைம்மா. நான் அவரை என் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே விரும்ப ஆரம்பிச்சிட்டேன். சஷ்டி மாமா மாதிரி ஒரு புருஷன் கிடைக்க ஒருப்பொண்ணு கொடுத்து வச்சிருக்கனும். என்னை என் புருசன்‌ கூட வாழ விடுங்கம்மா, ப்ளீஸ்” என்று கைகளைக் கூப்பினாள்.

 

தன் மகளின் பேச்சில் ஸ்தம்பித்து நின்றார் ஜெயந்தி.

 

“நானா உன் வாழ்க்கையை கெடுக்கறேன்? நான் உனக்காகத் தான்டி என்‌ வாழ்க்கையையே தியாகம் பண்ணியிருக்கேன். உன் நலனுக்காக ஒவ்வொரு நிமிசமும் யோசிச்சிட்டிருக்க என்னையே நீ எடுத்தெறிஞ்சிப் பேசிட்டல்ல?” என்றதும்,

 

“அதாம்மா நானும் சொல்றேன். உங்க வாழ்க்கையை நீங்க வாழுங்க. என் வாழ்க்கையை நான் வாழறேன்” என்று மகள் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வெளியேறவும், ஜெயந்திக்கு வாழ்க்கையே சூன்யமானது.

 

சஷ்டியின் அறையிலோ பார்வதி அவனை வெளியேப் போகவேண்டாம் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். அவன் அவரின் பேச்சை கேட்பதாய் இல்லை.

 

கணவன் மனைவி இருவரும் அவ்வீட்டை விட்டு வெளியேறியபோது ரத்னவேல் பாண்டியன் ஆணவமாக தனது மீசையை‌ முறுக்கி விட்டுக்கொண்டார். பார்வதி‌‌ எவ்வளவு மன்றாடியும் அவர் தன்னிலையிலிருந்து இறங்கி வரவில்லை.

 

யாழினிக்குமே அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுவது கடினமாக இருந்தது. 

 

“அவங்களை நீங்கப்போய் தடுங்களேன்” என்று பத்ரியிடம் பரிதவித்தாள்.

 

அவனோ,‌ “உன் வேலையை மட்டும் பாரு.” என்று அசட்டையாக சொன்னான். 

 

சஷ்டியும் தெய்வானையும் அங்கிருந்து கிளம்பிய அடுத்த கணம் தனது தந்தையின் அறையிலிருந்தார் ஜெயந்தி.

 

“அப்பா முன்னாடி சஷ்டியை மட்டும் தான் வெறுத்துட்டு இருந்தீங்க. இன்னைக்கு என் பொண்ணையும் சேர்த்து வெறுத்துட்டீங்களாப்பா? தெய்வானை சின்னப் பொண்ணுப்பா. உங்க வளர்ப்பு. அவளுக்கு என்ன தெரியும்? வெளியப்போய் என்ன கஷ்டமெல்லாம் படப்போறாளோ? எனக்கு அவளைப் பத்தி நினைச்சாலே நெஞ்செல்லாம் பதறுதுப்பா” என்றதும்,

 

“இதுக்கு காரணம் நான்னு நினைக்கறியா ஜெயந்தி? ம்ஹூம், அந்த யாழினி தான் இதுக்கெல்லாம் காரணம்” என்று குரூரமாய் சொன்னார் ரத்னவேல் பாண்டியன்.

 

ஜெயந்தி, “அப்ப அவளை வீட்டை விட்டு விரட்டுங்கப்பா. ஏன் என் பொண்ணை விரட்டுறீங்க?” என்று மூக்கு விடைக்கக் கேட்டதும்,

 

“நான் அதுக்கு முயற்சிக்கலைனு நினைக்கறியா ஜெயந்தி? அவளை இந்த வீட்டை விட்டு விரட்ட நான் போட்ட திட்டமே வேற. இப்ப நீ மனசு உடைஞ்சு நிற்கறதால உன்கிட்ட மட்டும் சொல்றேன். நான் நம்ம காணாமப்போன அந்த பரம்பரை நகைங்களை மாதிரியே டூப்ளிகேட் ஒன்னு செய்யச் சொல்லி நம்ம மாணிக்கத்துக்கிட்ட சொன்னேன். அதை அந்த யாழினி ரூம்ல வச்சி அவ தான் அதை திருடினானு பெரிய பழியாப் போட்டு பஞ்சாயத்துல அவளை நிறுத்தி ஊர் முன்னிலைல இந்த வீட்டை விட்டு விரட்டலாம்னு நினைச்சேன். ஆனா எதிர்பாராதவிதமா குழந்தை உண்டாகி என் திட்டத்தை நாசம் பண்ணிட்டா. இந்த சமயத்துல அவ என்ன பண்ணினாலும் பத்ரி அவளை‌ மன்னிச்சு ஏத்துக்கற நிலைமைல தான் இருக்கான்.” என்றதும், கையறுநிலையில் தன் தந்தையைப் பார்த்தார் ஜெயந்தி.

 

“ஆனா அவனை அப்படியே‌ அந்தக் குழந்தைப் பாசம் கட்டிப்போட்டுட விடக்கூடாது ஜெயந்தி. அதுக்கு நாம அந்தக் குழந்தையை இந்த மண்ணுல வரவிடக்கூடாது.” என்றதும், ஜெயந்தியின் மனதில் அந்த விஷ விதை விழுந்தது.

 

“வராதுப்பா. அந்த குழந்தை இந்த உலகத்துக்கு வராது. அது என் பொறுப்பு” என்று வாக்கு கொடுத்தார். 

 

அவரை தூண்டிவிட்ட மகிழ்ச்சி ரத்னவேல் பாண்டியனின் கண்களில் மத்தாப்பாய் தெறித்தது. 

 

மறுநாள் விடியல் பொழுதில் அவ்வீட்டிற்குள் நுழைந்தார் சுலேக்கா.

 

தொடரும்…

 

ஹார்ட்டீன் அழுத்துங்க, 

கமெண்ட் பண்ணுங்க,

ஸ்டோரி லிங் ஷேர் பண்ணுங்க தங்கோம்ஸ்:)
 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,880 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page