நிழல் – 5

பெங்களூரின் காலை நேரக் கல்லூரி வளாகம், பவித்ராவின் கண்களுக்கு ஒரு பிரம்மாண்டமான புதிய உலகமாகத் தெரிந்தது. அந்த கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த அகலமான நடைபாதைகளும், வரிசையாக நின்றிருந்த அசோக மரங்களும் ஏதோ ஒரு மலைப்பிரதேசத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வைத் தந்தது. பனி மூடியிருந்த புற்களின் மீது மாணவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, எங்கும் ஒரு புதிய தொடக்கத்திற்கான சுறுசுறுப்பு தென்பட்டது.

​பவித்ரா தன் தோளில் இருந்த பையை இறுகப் பற்றிக் கொண்டாள். அவளுக்குள் ஒருவித நடுக்கம் இருந்தது. புதிய மனிதர்கள், புதிய பாடங்கள்—எல்லாவற்றையும் விடத் தன் கடந்த காலம் தெரியாத ஒரு சூழலில் தன்னைத் தான் எப்படிக் கையாளப் போகிறோம் என்ற பயம் அவளை வாட்டியது.

“பவி! இதான் நம்ம டிபார்ட்மென்ட் ப்ளாக்… செமயா இருக்குல?” என்று ஆர்த்தி வியப்போடு காட்டினாள். பவித்ரா மெல்லத் தலையசைத்தாள். எந்தவித உற்சாகமும் இன்றி இருந்த பவித்ராவை கண்ட ஆர்த்தி, “என்ன பவி… உன் முகத்துல சந்தோசத்தையே காணோம்… நீ நெனச்ச அளவுக்கு காலேஜ் இல்லையோ…!” என்று சிறு ஐயத்துடன் கேட்டாள்.

இல்லை என்று தலையசைத்த பவித்ரா, “அப்படியெல்லாம் இல்ல ஆர்த்தி… காலேஜ் ரொம்ப நல்லா இருக்கு…. ஆனா.. எனக்குதான் கொஞ்சம் பயமா இருக்கு… புது இடம்ல அதான்… கொஞ்சம் தயக்கமா இருக்கு…” என்று பவித்ரா கூறினாள்.

“இவ்வளவுதானா…. அதெல்லாம் பழகிடும் பவி. நாமதான் இப்போ எம்.டெக் சீனியர்ஸ்! யாரைப் பார்த்தும் பயப்படத் தேவையில்லை,” என்று ஆர்த்தி அவளைத் தட்டிக் கொடுத்தாள்.

​இருவரும் வராந்தாவில் நடந்து செல்லும்போது, பவித்ராவின் கண்கள் அனிச்சையாகத் தன்னைச் சுற்றியிருப்பவர்களைப் பார்த்தன. லீலாவிடம் பேச முடியாத அந்த ஏமாற்றம் இன்னும் அவளது அடிமனதில் ஒரு பாரமாக இருந்தது. தன்னை சுற்றி  அவ்வளவு மாணவர்கள் இருந்தும், லீலா தன்னுடன் பேசாத அந்த தனிமை, பவித்ராவிற்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வைத் தந்தது.

வகுப்பறைக்குள் நுழைந்த பவித்ராவும், ஆர்த்தியும் ஜன்னலோரம் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தனர். சில வினாடிகளிலேயே வகுப்பறைக்குள் நுழைந்த பேராசிரியர், தன்னை தானே மாணவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு பாடங்களை கற்பிக்க ஆரம்பித்தார்.

மாணவர்கள் மெல்ல பாடங்களுக்குள் மூழ்க ஆரம்பித்தனர். பவித்ராவும் தன் மனநிலையை மெல்ல மாற்றிக் கொண்டு பாடங்களை கவனிக்க ஆரம்பித்தாள். 

பேராசிரியர் கரும்பலகையில் ஏதோ வரைபடங்களை வரைந்து தீவிரமாகப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பவித்ராவும் கவனத்தைச் சிதறவிடாமல் குறிப்புகளை எடுக்க தன் பேனாவை பையினுள் இருந்து எடுக்க முயன்றாள்.

அப்போது தனது பைக்குள் கையை விட்டு பேனாவைத் தேடியவளின் விரல்களில், அந்த இரண்டு சிவப்புப் படிக இதயங்கள் (Crystal Keychain)தட்டுப்பட்டன. ஒரு கணம் அவளது கை அப்படியே நின்றது. அதை வெளியில் எடுத்துப் பார்த்தாள் பவித்ரா. 

தன் உள்ளங்கைகளுக்குள் அடங்கிக் கிடந்த அந்த இதயங்கள் அவளிடம் ஏதோ சொல்ல துடிக்க ஆரம்பித்தன. அந்த இதயங்களை ஒவ்வொரு முறை அவள் பார்க்கும் போதும் வார்த்தைகளால் வருணிக்க முடியாத ஒரு உணர்வு அவளுக்குள் ஏற்பட்டது.

மகிழ்ச்சி, சோகம், பயம், கோபம் என எல்லாவிதமான உணர்வுகளும் ஒன்றாக சேர்ந்து பவித்ராவின் இதயத்தை தாக்க ஆரம்பித்தது. தாங்க முடியாத வலியை அனுபவித்த பவித்ராவின் கண்கள் தன்னை அறியாமல் கலங்க ஆரம்பித்தது. 

கண்ணீர் இமைகளை மீறும் முன் சுதாரித்துக் கொண்ட பவித்ரா, மீண்டும் அந்த இதயங்களை தன் பையிக்குள் புதைத்துவிட்டு பாடங்களில் கவனம் செலுத்த முற்பட்டாள். ஆனால், அவளால் முடியவில்லை. 

அவள் கண்களுக்குள் அந்த இதயங்கள் நிழலாடிக் கொண்டே இருந்தன. அவளது மனம் அந்த இதயங்களை சுற்றிக் கொண்டிருந்தன. ‘இது யார் கொடுத்தது..? ஏன் எனக்கு அந்த கீசெயின பார்க்கும் போதெல்லாம் கண் கலங்குது..?’ இவ்வாறு எண்ணிக் கொண்டே தன் பார்வையை அந்த ஜன்னல் வழியாக கல்லூரி வளாகத்திற்குள் அலையவிட்டாள். அந்த சமயம் தூரத்தில் இருந்த விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து, சிவா அவளை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தாள் பவித்ரா.

அவனை கண்டதும் தன் பார்வையை கூர்மையாக்கியவளுக்கு, ‘இவன்.. நேத்து அந்த பார்க்ல உட்காந்திருந்தவன் தான..! இங்க என்ன பண்றா..? இவன் ஏன் நம்மள ஃபாலோ பண்றான்..? ஃபாலோ பண்றானா.. இல்ல.. கோ-இன்சிடென்டா..?’ என்ற கேள்விகள் எழ ஆரம்பித்தன. 

அவளது சிந்தனை கலைவதற்குள், ஆர்த்தி அவளது கையைத் தட்டினாள். “பவி! என்ன வெளியே பார்த்துட்டு இருக்க? ப்ரொஃபசர் உன்னையே பார்க்குறார்…”

பவித்ரா சட்டென்று நிலைக்குத் திரும்பினாள். பின்பு சில வினாடிகள் கழித்து, மைதானத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தாள். அங்கே சிவா இல்லை! அவனை கண்டு அவ்வளவு நேரம் குழம்பிக் கொண்டிருந்த பவித்ராவுக்கு அவன் அங்கே இல்லை என்ற உணர்வு ஒருவித வெறுமையை அளித்தது. 

‘என்ன இது.. அவன் இங்க இல்லன்னதும்.. ஒருமாதிரி கஷ்டமா இருக்கே..! இவன் ஏன்.. என் மனசுக்கு நெருக்கமா தோணுறான்..? ஒருவேலை… அவனுக்கு நம்மள தெரியுமா..? தெரிஞ்சா.. பக்கத்துல வந்து பேசலாமே..! ஏன்.. தூரமா நின்னு… பாத்துக்கிட்டே இருக்குறான்..?’ என்ற கேள்விகளுடன் அவன் இல்லாத அந்த இடத்தை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா. 

அதன் பிறகு அந்த நாள் முழுவதும் சிவா தன்னை எங்கு சென்றாலும் பின்தொடர்வதை கவனித்தாள். அவனை தான் பார்ப்பது தற்செயலாக நடக்கவில்லை என்று தெரிந்ததும் பவித்ராவிற்கு கோபம் வந்தது.

அவன் யார் என்று மீண்டும் மீண்டும் யோசித்த பவித்ரா, சென்னையில் தான் அனுபவித்த அதே தலைவலியே மீண்டும் உணர ஆரம்பித்தாள். 

நண்பகல் 12.30 மணி, 

சூரியன் உச்சந்தலையில் ஏறித் தகித்துக் கொண்டிருக்க, பெங்களூரின் அந்த இதமான காற்று மட்டும் ஏனோ தற்காலிகமாகத் தன் திசையை மாற்றிக் கொண்டது போலத் தோன்றியது. வகுப்பறையின் ஜன்னல்கள் வழியாகத் தெரிந்த அந்தப் பரந்த வானம், தங்க நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது. 

அந்த சமயம், மதிய உணவு இடைவேளைக்கான மணி அடித்ததும் எப்போது என காத்துக் கொண்டிருந்த ஆர்த்தி, “”பவி! சீக்கிரம் வா… இன்னைக்கு கேண்டீன்ல ஸ்பெஷல் மெனு இருக்கும், கூட்டம் வர்றதுக்குள்ள போயிடலாம்” என்று உற்சாகமாக அழைத்தாள். 

சிதறிக் கிடந்த புத்தகங்களை கவனித்த பவித்ரா, “ஆர்த்தி, உன் புக்ஸ் எல்லாம் எடுக்காம போற..?” என்று கேட்க, “அதெல்லாம் இங்க தான் இருக்கும்.. வந்து பாத்துக்கலாம்.. நீ வா..” என்று கூப்பிட்ட ஆர்த்தி, பவித்ரா பதிலளிக்கும் முன்பே முன்னால் ஓடிவிட்டாள்.

அவள் இவ்வாறு உற்சாகமாக ஓடியதை கண்ட பவித்ரா, மென்மையான புன்னகையுடன் சிதறிக்கிடந்த புத்தகங்களை மெல்ல அடுக்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள். தலைவலி இப்போது அவளை இம்சிக்கத் தொடங்கியிருந்தது. கைகளால் நெற்றியை அழுத்தியபடி வராந்தாவில் நடந்தவள், சட்டென்று நின்றாள்.  

அவளுக்குச் சில அடி தூரத்தில், அதே மரத்தடியில் அமர்ந்திருந்த சிவா, இப்போது அவளது வகுப்பறைக்கு அருகிலேயே ஒரு தூணில் சாய்ந்து கொண்டு அவளையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் பவித்ராவின் பொறுமை எல்லை மீறியது. காலையிலிருந்து அவன் தன்னைத் தொடர்வதும், தூரத்திலிருந்து கவனிப்பதும் அவளுக்குப் பெரும் எரிச்சலைத் தந்தது. அந்தத் தலைவலியின் வேகம் அவளது கோபத்தை இன்னும் அதிகமாக்கியது.

வேகமாக அவனை நோக்கி நடந்தாள் பவித்ரா. அவனை நெருங்கிய பவித்ரா, “என்ன நெனச்சுக்கிட்டு இருக்குற மனசுல..? எதுக்காக இப்படி என்ன டார்ச்சர் பண்ற..?” என்று எரிமலையாக வெடிக்க ஆரம்பித்தாள். 

அவள் திடீரென இவ்வாறு கத்த ஆரம்பித்ததும் திகைத்து நின்றான் சிவா. இவள் தன்னிடம் தான் பேசுகிறாளா..? என்று புரியாத சிவா சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தான். அங்கே இவர்கள் இருவரையும் தவிர, வேறு யாருமில்லை. 

“என்ன திருதிருன்னு முழிக்கிற..? நா உன்கிட்டதான் பேசிக்கிட்டு இருக்குறே..? எதுக்காக காலையில இருந்து.. என்ன ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்குற..? என்ன வேணும் உனக்கு..?” என்று மேலும் கோவத்தில் அவனிடம் சண்டைக்கு நின்றாள் பவித்ரா.

அவளது கோவத்தை எவ்வாறு சரிசெய்வது என்று புரியாத சிவா, “அது.. நா.. வந்து..” என்று திணற ஆரம்பித்தான். அந்த சமயம் ஆர்த்தியின் குரல் அவர்களை திசை திருப்பியது. 

“ஹேய் பவித்ரா.. சீக்கிரம் வா.. இல்லேனா சாப்பாடு காலியாகிட போகுது..” என்று ஆர்த்தி அழைத்ததும், பவித்ரா மீண்டும் சிவாவின் முகத்தை பார்த்து முறைத்தாள். 

“இனிமேல்.. என் பின்னாடி உன்ன பாத்தே..” என்று எச்சரிக்கும் வித்தத்தில் கூறிவிட்டு சென்றாள் பவித்ரா. பவித்ரா சென்றதும் சிவாவின் இதழில் புன்னகை ததும்ப ஆரம்பித்தது. 

மேலும் சிவா அந்தத் தூணில் சாய்ந்தபடி, துள்ளித் குதித்துச் செல்லும் பவித்ராவையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவளது அதே கோபம், அதே துடிப்பு… அவள் நினைவுகளை இழந்திருந்தாலும் அவள் மாறவே இல்லை என்பதை அழுத்தமாக காட்டியது. அவனது நினைவுகள் மெல்ல மூன்றரை வருடங்களுக்குப் பின்னோக்கி அவனை கடந்தகால நினைவுகளுக்குள் அழைத்து சென்றன. 

மூன்றரை வருடங்களுக்கு முன்பு, 

அது ஒரு தனியார் கல்லூரி. சென்னையில் மிகவும் பிரமாண்டமான, பணம் செழித்தவர்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி அது. அந்த கல்லூரியின் வாயிலில் பல கனவுகளோடு நின்றிருந்தான் சிவா. தன்னை போன்ற ஆதரவற்றவர்களுக்கு எட்டா கனியாக திகழந்த அந்த கல்லூரியில் தன் மதிப்பெண்ணினால் மட்டுமே இடம் பிடித்திருந்தான் சிவா. 

கனவுகளை கண்களில் சுமந்து கொண்டு அந்த கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த சிவாவை ஒரு குரல் அழைத்தது. “ஹே.. இங்க வா..” வளாகத்தின் ஒதுக்குப்புறமான ஒரு மரத்தடியில், சில சீனியர் மாணவர்கள் புதிய மாணவர்களை ராகிங் செய்து கொண்டிருந்தனர். 

தயங்கியபடி அவர்கள் முன் சென்று நின்றான் சிவா. அவர்கள் சொல்லும் வேடிக்கையான, சில சமயம் எல்லை மீறிய கட்டளைகளுக்கு அந்த புதிய மாணவர்கள் கூட்டம் கீழ்ப்படிந்துக் கொண்டிருந்தது. 

அவனை நெருங்கி வந்த ஒரு சீனியர் மாணவன், “நீயும் நியூ ஸ்டூடண்ட் தான..? இங்க என்ன நடந்துகித்து இருக்கு.. நீபாட்டுக்கு கண்டுக்காம போற..?” என்றவன் சிவாவின் பதிலுக்கு காத்திருக்கவில்லை. 

“சட்டைய கழட்டிட்டு.. இந்த மரத்த சுத்தி குரங்கு மாதிரி ஓடி வித்த காட்டு..” என்று அவன் கட்டளையிட, சற்று தயங்கினான் சிவா. இதனால் கோபம் கொண்ட அந்த சீனியர் மாணவன், சிவாவின் சட்டையை கழற்ற முற்பட்ட போது, சிவா அந்த சீனியர் மாணவர்களை தடுக்க முடியாமல் திணறி நின்றான். அந்த சமயம் சிவாவின் சட்டையை கழற்றிக் கொண்டிருந்த சீனியர் மாணவனின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்தது.

அந்த கல்லூரி வளாகமே ஒரு வினாடி ஸ்தம்பித்தது. சிவா மெல்ல தன் தலையை திருப்பிப் பார்த்தான். அந்த புதிய மாணவர்கள் நின்று கொண்டிருந்த கூட்டத்தின் நடுவே, பவித்ரா கண்களில் அனல் தெறிக்க நின்று கொண்டிருந்தாள். 

அடித்ததோடு நிற்காமல், அவள் நேராகச் சிவாவிடம் வந்தாள். அடி வாங்கிய சீனியரை விட, சிவாவைத்தான் அவள் ஆவேசமாகப் பார்த்தாள்.

“ஏன்டா! அறிவு இருக்கா உனக்கு? அவங்க என்ன செஞ்சாலும் மரமாட்டம் அப்படியே தான் நிப்பியா? நீ என்ன அவங்களுக்கு அடிமையா? ஒருத்தன் உன் சுயமரியாதையை தொடுறான்… நீ என்னன்னா வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற? உன்னை மாதிரி ஆளுங்க இருக்குறதுனாலதான் இவங்களுக்கு இவ்வளவு திமிர்!” என்று சிவாவைச் சராமாரியாகத் திட்டினாள்.

அன்று… அந்த நிமிடம்… தன்னைத் திட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் தைரியத்திலும், அவளது விழிகளில் தெரிந்த அந்த நியாயத்திலும் தன் இதயத்தைத் தொலைத்திருந்தான் சிவா. 

இந்த நினைவுகளிலிருந்து மீண்ட சிவாவின் புன்னகை இன்னும் அகலமானது. “நிலா.. நீ உன் நினைவுகள தொலச்சுருக்கலாம்.. ஆனா.. இப்பவும் நீ என் நிலா தான்..” என்று மெல்ல தனக்குள் முணுமுணுத்தவாறே தன்னை விட்டு தூரமாக சென்ற பவித்ராவை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் சிவா. 

 

                                                                                                                        -நிழல்கள் தொடரும்… 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page