வெந்து தணிந்த இதயம்-28
நான் உங்கள் AY_84
வெந்து தணிந்த இதயம்-28
பத்ரவேல் பாண்டியன் கதவைத் திறந்ததும் தன் தந்தையைக் கண்டு அதிர்ச்சியானான்.
“என்னப்பா இந்த நேரத்துல வந்து கதவை தட்டுறீங்க?” என்று பதறினான்.
அவர், “முக்கியமான விசயம் பத்ரி. நீ இப்ப வெளியப்போறது மாதிரி இருக்கும்” என்றதும், எதுவும் புரியாமலேயே முகத்தை கழுவிவிட்டு உடையை மாற்றிக்கொண்டு வந்தான்.
அவனுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து வந்தாள் யாழினி.
வரவேற்பறையில் கோபமாக தன் நண்பர்கள் இருவருடன் உட்கார்ந்திருந்தார் ரத்னவேல் பாண்டியன்.
பத்ரியிடம், “நீ கொஞ்சம் திருமங்கலம் வரைப் போய் ஒரு காரியம் பண்ணனும்” என்றார்.
அவன் ஒன்றும் விளங்காமல், “என்ன காரியம்னு கொஞ்சம் புரியுற மாதிரி சொன்னீங்கன்னா..” என்று தயங்கினான்.
அவர் ஆத்திரமாக நிலைமையை எடுத்துரைத்தார்.
“எப்பவும் போல இந்த காதல் எழவு தான் பத்ரி என் கழுத்தறுக்குது. இதோ நம்ம மேற்கு தெருக்கார அருணாச்சலம் இருக்காரே, இவரோட பையன் கிழக்குத்தெருக்கார நடேசன் பொண்ணை கூட்டிட்டு ஓடிட்டானாம். ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி இவரு அவன் ஓடின விசயம் தெரிஞ்சு சொல்லவும் தான் நான் நாலாப் பக்கமும் ஆளனுப்பி தேட ஆரம்பிச்சேன். ஆனா வேறவிதமா ரெண்டும் திருமங்கலத்துல ஒரு பஸ்ல மாட்டிக்கிச்சுங்க. அதுக போன பஸ்ல ஒரு பொம்பளை செயினைக் காணோம்னு கத்தியிருக்கு. உடனே பஸ்ஸை டிரைவர் போலீஸ் ஸ்டேசனுக்கு விட்டிருக்காரு. அங்க அவங்க விசாரிச்சதுல இதுக வீட்டை விட்டு ஓடினது தெரிஞ்சிருக்கு. உடனே எனக்கு போனைப் போட்டு உங்க ஊரு விசயம் தான்யானு காதும் காதும் வச்ச மாதிரி சொல்லிட்டாப்பள. இப்ப அதுக ரெண்டும் நாங்க மேஜர், காலைல எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சி பாதுகாப்பு கொடுங்கனு அங்க உட்கார்ந்திருக்குங்க. பைத்தியங்க. நம்ம ஆள்பலம், அதிகார பலம், ஜாதி பலம் எங்க வரை பாஞ்சிருக்குனு தெரியாம. இப்ப நான் போன் பண்ணி விசயத்தை சொல்லவும் அருணாச்சலம் இங்க கிளம்பி வந்திருக்காரு. இவரு விசயம் ஊருக்குள்ள தெரிஞ்சா என் மானம் மரியாதையெல்லாம் போயிரும், ஜாதிக்கலவரமாகிப் போகும்னு பயப்படுறாரு. எப்படியும் அந்தப் பொண்ணோட அப்பன் வார்டு மெம்பர்னால ஊரை கூட்டி வச்சி அந்தப் பொண்ணை இவர் பையன் தலைல கட்டப் பார்ப்பான். அதான் என்ன பண்றதுனு ஒன்னாப்பேசி முடிவெடுத்துட்டு இருக்கோம். வெளிய தெரிஞ்சா எப்படியும் ஊர்ல பத்து தலையாவது உருளும். என்ன ஆனாலும் சரி. அந்த ஓடுகாலி கழுதை கழுத்துல இந்த கூறுகெட்டவன் தாலி கட்ட மட்டும் விட்ரக்கூடாது பத்ரி. ஒன்னு அவளை வெட்டனும். இல்ல அவனை வெட்டனும். இல்ல ரெண்டுபேரையுமே வெட்டிப் போட்டுட்டு ஊர் மானத்தை காப்பாத்தனும். நம்ம ஜாதிப்பெருமைய காக்க நான் கூட இந்த தியாகத்தை செய்வேன். ஆனா நீ எலெக்சன்ல நிற்கறியேனு தான் கொஞ்சம் நிதானிக்கிறேன். நம்ம கையில கரைபடாம செய்யறதுக்கு ஆளுங்க இருக்காங்க தான். ஆனா எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் செய்யக்கூடாது இல்ல? அப்பறம் பத்ரி, நீ இப்ப என்ன பண்றன்னா அதுகளைப்போய் நைசாப்பேசி மொத போலீஸ் ஸ்டேசன்ல இருந்து ஊருக்கு கூட்டிட்டு வா. அந்தப் பொண்ணை நம்ம தோட்டத்து வீட்டுல அடைச்சி வை. இவர் மகனை நம்ம நெல்லு குடவுன்ல கையக்காலை கட்டி அடைச்சி வைப்போம். நாளைக்கு காலைல பஞ்சாயத்து கூட்டாமலேயே இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்.” என்றதும், உடனே சரியென்று தன் அறைக்குள் சென்று கார் சாவியைத் தேடினான் பத்ரி.
அவர்கள் பேசியதனைத்தையும் ஒற்றுக்கேட்ட யாழினிக்கோ ஏதோ அபசுருதி காதில் ஒலித்தது. நடக்கவிருக்கும் தவறை அவள் தடுத்து நிறுத்த முயன்றாள். தன் கணவனை அங்கு செல்ல வேண்டாம் என்று தடுத்துப் பார்த்தாள். ஆனால், எதுவும் பலிக்கவில்லை.
பத்ரவேல் பாண்டியன் தன் தந்தையின் வாக்கை வேதவாக்காக கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
அறையில் அமர்ந்து யோசித்தபடியிருந்த யாழினி ரத்னவேல் பாண்டியன் தனது நண்பர்களுடன் என்ன பேசுகிறார் என ஒற்றுக்கேட்க முயன்றாள்.
ஆனால், அவர்கள் ரகசியமாக கிசுகிசுத்ததில் ஒன்றிரண்டு வார்த்தைகள் தான் அவள் காதில் விழுந்தன. அதற்கே விதிர்த்து நின்றாள்.
அடுத்த மூன்று மணி நேரம் கழித்து அறைக்குள் வந்தான் பத்ரி.
அவன் தன் சட்டையை கழற்றி ஆணி ஸ்டாண்டில் மாட்டிவிட்டு அவள் விழித்திருப்பதைக் கண்டு கழுத்தில் மீசையால் கூச, அவள் அதனை தடுத்தாள்.
“தயவுசெஞ்சு அந்தப் பொண்ணையும் பையனையும் விட்ருங்க. உங்கப்பா அந்தப் பையனையும் பொண்ணையும் கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு. அவங்க ரெண்டுபேரும் பாவம். இந்த ஊர்க்காரங்க கௌரவத்துக்காக என்ன வேணா பண்ணுவாங்க. தயவுசெஞ்சு அவங்களை தப்பிக்க வச்சிருங்க. ஏதாவது பாதுகாப்பான இடத்துல கொண்டுபோய் விட்டிருங்க” என்று கைகளைக்கூப்பி கெஞ்சினாள்.
அவனோ வெகுண்டான்.
“இங்கப்பாரு யாழினி, நீ பயப்படுற மாதிரி எல்லாம் இங்க எதுவும் நடக்கப்போறது கிடையாது. அவங்களை பிரிச்சி மட்டும் தான் வைக்கப் போறாங்க. நல்ல புத்தி சொல்லி அவங்கவங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போறாங்க. ரெண்டு வீட்டுக்கார பசங்களும் ஊர் கட்டுப்பாட்டை மீறுன குற்றத்துக்கு அபராதம் கட்ட சொல்லுவாங்க. அவ்வளவு தான். ஆமா இந்த ஊர்க்காரங்க அவங்களை ஏதாவது பண்ணிருவாங்கனு சொல்றியே? நானும் அதே ஊர்க்காரன் தாங்கிறதை மறந்துறாத!” என்று எச்சரித்தான்.
உண்மை தான். ஆனால், அவள் மனம் அவனை அரக்கனாய் கருதவில்லையே. கறுப்பு வெள்ளைப் பக்கங்களுக்கு மத்தியில் அவன் ஒரு சாம்பல் நிறக்கோடு என்று தான் அவனை எடைப்போட்டிருந்தாள் யாழினி.
திடீரென அவன் முழுமையாக கறுப்பு பக்கத்திற்கு சென்று விடுவானோ என்ற பயம் வந்தது அவளுக்கு.
அந்த நேரத்தில் வாஷ்ரூம் சென்றவள் அலைபேசியில் சஷ்டிக்கு அழைப்பு விடுக்க, அவளை ஏமாற்றாமல் ஏற்றான்.
அவனிடம் நடக்கும் விசயங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்தவள், விரைவாக சென்று அந்தப் பையனையும் பெண்ணையும் காப்பாற்றச் சொன்னாள்.
அதன்பின் தான் அவளின் பதற்றம் மட்டுப்பட்டது.
அசதியில் கண்ணயர்ந்தவளை மறுபடியும் ரத்னவேல் பாண்டியன் வந்து கதவை தட்டி எழுப்பிவிட்டார்.
என்னவென்று விசாரித்த பத்ரியை அவசர அவசரமாக கையுடனே வரவேற்பறைக்கு இழுத்துச் சென்றார்.
யாழினிக்கு ஒருவேளை சஷ்டி மாட்டிக்கொண்டானோ என்று பயமாக இருந்தது.
நகத்தை கடித்தபடியே சஷ்டிக்கு அழைப்பு விடுத்தாள்.
ஆனால், “நாட் ரீச்சபிள்” என்ற பதிவேற்றக்குரலே கேட்டது.
அவள் சோர்ந்து போனபோது சஷ்டியே அவளை அழைத்தான்.
அவன் கர்ப்பமாக இருக்கும் அவளிடம் எப்படி இந்த துர்சம்பவத்தை சொல்வது என்று முதலில் தயங்கினாலும், அவளின் ஆர்வத்தில் தயக்கத்தை கைவிட்டான்.
அவளிடம் தான் அங்கு செல்வதற்கு முன்பே எல்லாம் கைமீறி போய்விட்டது என்று நிலைமையை விவரித்தான்.
யாழினி அலைபேசியை அணைத்துவிட்டு ஆத்திரத்துடன் வெளியே வந்தபோது, ரத்னவேல் பாண்டியன் பத்ரியின் முன்னிலையில் யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.
“ஏன்டா நீங்க செய்யலைனா வேற யாருடா செஞ்சிருப்பா? நான் ஒருத்தன் பஞ்சாயத்து தலைவன்னு எதுக்குடா இருக்கேன்? நீங்க இப்படி ஆளாளுக்கு முடிவு எடுக்குறதுக்கா? அந்த அருணாச்சலம் பயலை என் மூஞ்சிலேயே முழிக்க வேணாம்னு சொல்லு. அவனுக்கு மட்டும் தான் மானம் ரோசம் எல்லாம் இருக்காமா? அவசரப்பட்டுட்டானேடா. மறுபடியும் மறுபடியும் நாங்க இல்லைனு சொல்லாதீங்கடா. அந்தப் பொண்ணை வீட்டோட வச்சி கொழுத்தினது நீங்க இல்லாம வேற யாருடா? நாளைக்கே விசயம் வெளிய தெரிஞ்சா ஊர் தலைவங்கற முறையில போலீஸ் என்னை தானேடா முதல்ல விசாரிப்பானுக? தேர்தல்ல நிற்கற என் புள்ளைய வேற நான் இழுத்துவிட்டு பெரிய தப்பு பண்ணிட்டேனேடா” என்று கத்தி தீர்த்துக் கொண்டிருந்தார்.
பத்ரி அலைபேசியில் அவர் பேசி முடித்ததும் அவருடன் தோட்டத்துவீட்டிற்கு செல்வதற்காக தன்னறைக்குச் சென்று கிளம்பினான்.
யாழினி அவனிடம் தனது ஆத்திரத்தை கொட்டப்போன சமயம் வெளியே ரத்னவேல் பாண்டியன் உச்சஸ்தாயில் கத்துவது கேட்டது. உடனே அனைவரும் வெளியே ஓடிவந்துப் பார்த்தனர்.
அவரின் அந்த கூச்சலுக்குக் காரணம் அந்த பெரிய வீட்டின் சுற்றுச்சுவர் முழுவதிலும் பத்ரியை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் தர்மதுரையின் புகைப்படம் தாங்கிய சுவரொட்டிகள் ஒரு இடம் விடாமல் ஒட்டிப்பட்டிருந்தது தான்.
வேண்டிமென்றே அவர் குடியிருக்கும் அந்த சாலை முழுவதும் தர்மதுரையின் சுவரொட்டிகள் இருப்பதைக் கண்டு, அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் கிழித்தெடுத்துக்கொண்டு வரச்சொல்லி குரலின் டெசிபலைக் கூட்டி உத்தரவிட்டார்.
யாழினி எக்கி நின்று அந்த சுவரொட்டிகளில் இருந்தவனின் புகைப்படத்தை பார்த்தாள். அவனை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு அவளுக்கு.
அது? அது? நேற்றிரவு சுலேக்கா காதம்பரி வரைந்ததாகச் சொல்லி நீட்டிய ஓவியத்தில் இருந்த நபர் தான் என்று பிடிபட்டதும், திகைத்துப் போனாள்.
அனைத்து சுவரொட்டிகளும் கிழித்தெடுத்து வரப்பட்டதும் அவற்றை ஒன்றாகப் போட்டு தீ மூட்டினார் ரத்னவேல் பாண்டியன். இன்னொரு காதல்கதை தீயில் வெந்துபோகப் போவதற்கான அறிகுறி தான் இதுவோ? என்று கலங்கினாள் யாழினி.
பத்ரியும் ரத்னவேல் பாண்டியனும் தோட்டத்து வீட்டை காணச்சென்றபோது யாழினி ஸ்டோர் ரூமிற்கு சென்றாள்.
நேற்றிரவிலிருந்தே பரிதவிப்பும் மன உளைச்சலுமாக இருந்தவள் இந்த அக்கிரமத்தை வேறு யாரிடமாவது கொட்டினால் மனம் சற்று லேசாகும் என்று சுலேக்காவை சந்தித்தாள்.
அவரோ அவள் கூறவருவதை கேட்கும் முன் தன் கையில் வைத்திருந்த அவளின் அன்னை வசந்தியின் இளமைக்கால புகைப்படத்தை காண்பித்து அதற்கு விளக்கம் கேட்டார்.
இதற்கு மேலும் அவரிடம் மறைத்துப் பயனில்லை என்று தன் அன்னையின் கடிதம் மூலமாக தான் அறிந்த உண்மை அனைத்தையும் அவரிடம் சொன்னாள் யாழினி.
மேலும், தற்போது ரத்னவேல் பாண்டியனிடம் சிக்கி சின்னாபின்னமான காதல் ஜோடிகள் பற்றியும் புலம்பித் தவித்தாள்.
சுலேக்காவோ இடிந்து தலையில் கைவைத்தபடி உட்கார்ந்திருந்தார்.
முகம் கறுத்துப் போயிருந்தவர், “நீ பெரிய தப்பு பண்ணிட்ட யாழினி. பெரிய தப்பு பண்ணிட்ட. உன் அம்மா அவ்வளவு தூரம் எச்சரிக்கை செஞ்சிருந்தும் நீ இங்க வந்திருக்கக்கூடாது. உன் வாழ்க்கையை நீயே இப்படி பாழடிச்சிட்டியே” என்று மனம் தாளாமல் குமுறினார்.
யாழினியோ ஆத்திரத்தில் வெடித்தாள்.
“என் அப்பாவை என் தாத்தாவே கொலை பண்ணின விசயத்தை கேள்விபட்ட பின்னாடியும் என்னால எப்படி நிம்மதியா இருக்கமுடியும் கிழவி? என் அம்மா இப்ப பைத்தியம் பிடிச்சு உட்கார்ந்திருக்கதுக்கும் இவர் தான் காரணம். நான் இதையெல்லாம் புத்தரா மன்னிச்சு விடனுமா? எனக்கு அந்தளவுக்கு ஒன்னும் இதயத்தை கருணையால படைக்கலை ஆண்டவன்.” என்றவள் கத்த,
“பைத்தியக்காரி! உன் அப்பாவை கொன்னது இந்த ரத்னவேல் பாண்டியன்னு யாருடி சொன்னா? உன் அப்பாவை கொன்னது இவரு இல்ல. ஆனா இதே ஜாதிவெறி பிடிச்சி மிருகமா மாறின ஒரு கூட்டம் தான் கொன்னது. உண்மை தான் யாழினி” என்றவர் இவ்வளவு நாள் அவள் தாய் வசந்தியும், அவரும் மறைத்து வந்திருந்த அந்த கொடூர சம்பவங்களை வேண்டாவெறுப்பாய் நினைவு கூர்ந்தார்.
தொடரும்…
கதையின் அனைத்து முடிச்சிகளும் இனி ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும் தங்கோம்ஸ். இதுவொரு போட்டிக்கதைனால உங்க கமெண்ட்ஸ், ரிவீவ்ஸ் தான் எனக்கு வெற்றியை கொடுக்கும். பேஸ்புக்லயும் இங்கயும் லைக், கமெண்ட் பண்ண மறந்துடாதீங்க தங்கோம்ஸ்:)
