“தெரியாதுன்னா கேட்டு தெரிஞ்சுக்கணும்.. பழகிக்கணும்.. இப்படி விளக்கு வைக்கிற நேரத்துல தூங்குனா இதெல்லாம் நல்லாவா இருக்கு. வீட்டு பொம்பளைங்க தான் அந்த குடும்பத்துடைய ஆணி வேறு. இப்படி நாமலே பொறுப்பில்லாம நடந்துக்கிட்டா குடும்பம் என்ன ஆகிறது”.
அவரின் வார்த்தையில் மறைமுகமாக பவித்ராவையும் இந்த குடும்பத்தில் ஒருத்தியாக அவர் ஏற்றுக் கொண்டார் என்ற அர்த்தமும் பொதிந்திருக்க. யஷ்வந்தின் இதழிலோ மென்புன்னகை அரும்பியது.
“சரி மா விடுங்க. அவங்களுக்கு நாம எல்லாத்தையும் சொல்லி தருவோம்” என்ற மகளை முறைத்த பரமேஸ்வரி, “எனக்கு வேற வேலை இல்ல பாரு.. அவன் இஷ்டத்துக்கு யாரையோ இழுத்துட்டு வருவான். நான் எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கணுமா.. ஒழுங்கா நான் பார்த்து கட்டுன பொண்ணா இருந்திருந்தா நம்ம பழக்கவழக்கமெல்லாம் தெரிஞ்சிருக்கும்” என்று அதற்கும் பொறுமியவர்.
சாப்பிட்டு முடித்து அமர்ந்திருந்த தன் கணவரை பார்த்து, “நீங்க சாப்பிட்டு முடிச்சிட்டீங்களா.. சரி, கை கழுவுங்க மாத்திரை போட்டுட்டு படுப்போம்” என்று விட்டு அவர் உண்டு முடித்த தட்டையும் தூக்கிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.
அங்கே கண்கள் கலங்க நின்றிருந்த பவித்ராவை பார்த்த நித்யா தன் அண்ணனிடம், “அண்ணா அவங்களையும் சாப்பிட கூப்பிடு” என்றாள் தாழ்ந்த குரலில்.
“ஏன் உன் அண்ணி தான நீயே கூப்பிடு”.
“நீ இருக்கியே” என்று அவள் அவனை முறைக்கவும்.
“இந்து அண்ணியை நாம அண்ணினு தானே கூப்பிடுறோம். அப்போ இனி என் பொண்டாட்டியையும் நீ அண்ணினு தான் கூப்பிடனும்” என்று உரிமை போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தான்.
அவன் பேசுவது தாய் தந்தையின் காதிலும் தப்பாமல் விழுந்தது. ஆனாலும், அவர்களும் மறுத்து பேசாமல் தங்கள் அறைக்குள் சென்று மறைந்ததும், “அண்ணி நீங்களும் வாங்க சாப்பிடலாம்” என்றாள் நித்யா.
முதல் முறை தன்னையும் உறவுமுறை வைத்து ஒரு ஆள் கூப்பிடவும், கலங்கி இருந்த கண்களில் இருந்து முணுக்கென்று கண்ணீர் கீழே இறங்கி விட்டது.
அவள் தன் தாய் பேசியதற்காக தான் கண்ணீர் விடுகிறாள் என்று எண்ணிய நித்யா, “அம்மாவுக்கு விளக்கு வைக்கிற நேரத்துல தூங்குனா பிடிக்காது. இனி கொஞ்சம் கொஞ்சமா நீங்களும் இந்த குடும்பத்துக்கு தகுந்த போல பழகிக்கோங்க” என்று விட்டு தன் அண்ணனை பார்த்தவள், “அம்மா சொன்னது சரிதான். அவங்க இந்த வீட்டுக்கு புதுசா வந்திருக்காங்க. அதனால அவங்களுக்கு எதுவும் தெரியாது. கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வர மட்டும் தெரியுது இல்ல. இதையும் நீ தானே சரியா சொல்லி கொடுத்து இருக்கணும்” என்று தன் அண்ணனையும் குற்றம் சாட்டினாள்.
இவர்களுக்கிடையே எந்த ஒரு பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளாமல் அமைதியாக உண்டு முடித்து எழுந்த சேரனை வம்பிழுக்கும் பொருட்டு, “என்னண்ணா நீ ஒண்ணுமே சொல்லாம அமைதியா போற” என்ற யஷ்வந்தை பார்த்து பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன், “என்னத்த சொல்ல.. கல்யாணம் பண்ணிட்ட.. இனி அதை மாத்த முடியாது. நம்ம குடும்ப பழக்க வழக்கத்தையாவது ஒழுங்கா சொல்லிக் கொடுடா. அப்புறம் தினம் தினம் அம்மாகிட்ட அர்ச்சனை வாங்குறதே அந்த பொண்ணுக்கு வேலையா போயிடும். என்னமோ எல்லாம் நல்லா நடந்தா சரி” என்று விட்டு கை கழுவி வந்தான்.
“அடுத்த வாரம் போய் கூப்பிட்டு வரலாம்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க” என்று விட்டு தன் அறைக்கு சென்று விட்டான் சேரன்.
நித்யாவின் ‘அண்ணி’ என்ற அழைப்பிற்கு தான் அவள் தடுமாறி நிற்கிறாள் என்பதை உணர்ந்த யஷ்வந்த், அவளுக்கு சற்று அவகாசம் கொடுத்து மீண்டும் அவளை பார்த்தவன், “வா சாப்பிடலாம்”.
அவன் அழைப்பிற்கு அடுத்த நொடி அவன் அருகில் அமர்ந்திருந்தாள் பவித்ரா.
அவளுக்கும் தனக்குமாக இரு தட்டுகளில் இட்லியையும், சட்னியையும் வைத்தவன் உண்ண தொடங்கினான்.
தனக்கென ஒரு குடும்பம்.. தனக்கென இத்தனை உறவுகள்.. நினைக்கவே பவித்ராவிற்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
நினைக்க நினைக்க தெவிட்டவில்லை.
உணவை உண்ணாமலே அவளின் வயிறும், மனமும் நிறைந்த உணர்வு.
“எனக்கு பசிக்கல” என்றாள் நா தழுதழுக்க.
அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “மனசு நிறைஞ்சு போயிட்டா வயிறு பசிக்காத போல தான் இருக்கும். கொஞ்ச நேரம் ஆனா மறுபடியும் பசிக்கும் ஒழுங்கா சாப்பிடு” என்றவன் அவள் புறம் நன்கு சாய்ந்து கிசுகிசுப்பாக, “நான் வேணும்னா ஊட்டி விடவா?” என்றதும் பதறி அடித்துக் கொண்டு மறுப்பாக தலையசைத்தாள்.
அதன் பிறகு அவளும் மறுக்காமல் உண்டு முடிக்கவும்.
அவளின் முகமே அத்தனை பிரகாசித்தது. அவளின் நிறைவு அவனையும் தொற்றிக் கொள்ள.. அவன் இதழிலும் உறைந்த புன்னகை.
******
“எல்லாம் பேசி முடிச்சாச்சு இந்த விஷயத்துல என்ன பண்றதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. நீ இப்படி வாட்டமா இருந்து உன் உடம்ப கெடுத்துக்காத பரமு” என்ற கணவனின் அனுசரணையில் முகம் மலர்ந்த பரமேஸ்வரி, “அண்ணனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலங்க. இந்த விஷயத்துல என்ன முடிவு எடுக்கிறதுன்னும் ஒன்னும் புரியல” என்றார் தலை சுற்றி போய்.
சலிப்பான பெருமூச்சை வெளியேற்றியவர், “இந்த விஷயத்துல அடுத்து என்ன செய்ய.. எனக்கும் ஒண்ணுமே யோசிக்க முடியல”.
“எப்படி பார்த்தாலும் தாலி கட்டி தான் கூப்பிட்டு வந்திருக்கான். நடந்தது கல்யாணம் இல்லைன்னு ஆகிடாது. வேற வழியே இல்ல அந்த பொண்ண ஏத்துக்கிட்டு தானே ஆகணும். ஆனா, அந்த பொண்ணு யாரு என்னனு தெரியலையே” என்றார் சற்று தயக்கத்தோடு.
“அதான் சொன்னானே ஏதோ அனாதை ஆசிரமத்தில் இருந்து கூப்பிட்டு வந்தேன்னு.. அப்புறம் எப்படி எதுவும் தெரியும். இனி நம்ம குடும்பத்துக்கு தகுந்த மாதிரி அந்த பொண்ண மாத்திக்க வேண்டியது தான்”.
அவருக்கு ஆமோதிப்பாக தலையசைத்தார் பரமேஸ்வரி.
என்ன தான் மகன் செய்த காரியம் இவர்களுக்கு அறவே பிடிக்கவில்லை என்றாலும், திருமண பந்தம் என்பது எத்தனை புனிதமானது. அப்படியே உதறிவிட்டு செல்ல முடியாதே.
உறவுகளின் மதிப்பையும், பந்தத்தின் தூய்மையையும் உணர்ந்தவர்களுக்கு அத்தனை இலகுவில் அவளை வேண்டாம் என்று கூறவும் மனம் வரவில்லை. எனவே, ஏற்றுக்கொள்ள முடிவு செய்து விட்டனர்.
“அவன் மேல நிறையவே நம்பிக்கை வச்சிருந்தேன். சட்டுனு அவன் இப்படி மொத்த நம்பிக்கையையும் உடைச்சிட்டு வந்து நிக்கவும், என்னால தாங்க முடியல” என்றார் கண்ணீர் எட்டிப் பார்க்க துடிக்கும் கண்களோடு.
அவரின் கையை ஆதூரமாக பற்றி கொண்ட திருமூர்த்தி, “விடு பரமு, இப்படி நடக்கணும்னு இருந்திருக்கு. அதான் நடந்திருக்கு. உன் மகனுக்காகவாவது இதை நாம ஏத்துகிட்டு தான ஆகணும். நல்ல வேளை, உன் அண்ணனுக்கு நிச்சயமான வாக்குறுதி எதுவும் நாம கொடுத்துடல” என்று சந்தோஷப்பட்டு கொண்டார்.
*****
இருவரும் உண்டு முடித்து அறைக்குள் நுழையவும். அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன், “அம்மா பேசுனதை நினைச்சு ஒன்னும் கவலைப்படாத. சீக்கிரமே அவங்களும் உன் மனச புரிஞ்சுப்பாங்க என்னை போலவே” என்றான் அவளின் நெற்றி முட்டி.
“ம்ம்” என்றவளுக்கு இன்று ஏனோ அத்தனை சங்கடமாய் இருந்தது.
அவனின் அருகாமை வேறு நேற்றை போல் இல்லாமல் இருக்க. அவனின் நெருக்கம் இவளுக்குள் பலவித உணர்வுகளை உயிர்த்தெழ செய்ய. ஒவ்வொரு நொடியும் அவன் அருகில் திண்டாடிக் கொண்டிருந்தாள்.
அவளின் காது மடல் அருகே குனிந்தவன், “இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் ஞாபகமிருக்கா” என்றான் கிசு கிசுப்பாய்.
இத்தனை நேரமும் அவளுக்குள் உழன்று கொண்டிருந்த பரிதவிப்பினை வார்த்தைகளால் உருவகித்து விட்டான். அவனின் முகத்தை எதிர் நோக்கவே அப்படி ஒரு கூச்சம்.
“என்ன மேடம் சைலன்டா இருந்து தப்பிச்சிடலாம்னு பாக்குறீங்களா” என்றவனின் இறுக்கம் கூட. அவளின் தவிப்பும் கூடியது தான் மிச்சம்.
“இன்னைக்கு நமக்கு செகண்ட் நைட்டா இருந்தாலும், முறைப்படி இன்னைக்கு தானே நமக்கு பர்ஸ்ட் நைட்” என்றதும் மறைக்க முயன்றும் முடியாமல் சிரித்து விட்டாள்.
அவளை தன் புறம் திருப்பியவன், “என்னடி சிரிக்கிற?”.
“இப்போ என்ன நேத்து போலவே இன்னைக்கும் செலப்ரேட் பண்ணனும் அதானே” என்றாள் கள்ளப் புன்னகையோடு.
அவளுக்குள் ஊடுருவும் பார்வை பார்த்தவன், “ஹலோ நேத்து நடந்தது வேற கதை. நேத்து நீ யாரோ.. ஆனா, இன்னைக்கு என் பொண்டாட்டி. நேத்து போல இன்னைக்கும் உன்னை உட்கார வச்சு சொற்பொழிவு ஆற்றுவேன்னு எதிர்பார்க்காத. எனக்கும் கல்யாணத்தை பத்தி சில கனவுகள் எல்லாம் இருந்துச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் அமைய போற வாழ்க்கை எப்படி இருக்கணும்னு நிறையவே யோசிச்சு வச்சிருந்தேன்” என்றவாறு அவளின் தோளை சுற்றி தன் இரு கரத்தையும் மாலை போல் கோர்த்துக் கொண்டான்.
“நம்ம லைஃப் எப்படி ஸ்டார்ட் ஆகி இருந்தாலும் அப்படியே ஒரு ப்ளோல அடுத்தடுத்த ஸ்டெப்புக்கு கொண்டு போயிடலாமே.. வெயிட் பண்ணி டைம் எடுத்து என்ன ஆக போகுது. அதோட இதெல்லாம் லைஃப்ல ஒன் டைம் கிடைக்கிற மொமெண்ட். என்னால வேஸ்ட் பண்ண முடியாது. நம்ம வாழ்நாள் முழுக்க இது நமக்கு அத்தனை மெமரிஸை கொடுக்கும். என்ன ரெண்டு பேரும் சேர்ந்து மெமரிசை கிரியேட் பண்ணலாமா” என்றான் கிசுகிசுப்பாக.
அவனின் வார்த்தைக்கு அவளின் முகம் செவ்வண்ணம் பூசிக்கொள்ள.
“ஐயோ! இப்படி கேட்டா நான் என்னத்த சொல்ல” என்றவாறு அவனின் மார்பில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
“என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ற டி. சே எஸ் ஆர் நோ” என்றவனின் கரங்களோ அவளில் உரிமையாய் தன் பயணத்தை துவங்க.
“ம்ம்” என்ற முணங்களோடு அவனின் கைகளுக்குள் பாகாய் உருகி கரைந்து கொண்டு இருந்தாள் செவ்வண்ணமாய் சிவந்திருந்த பாரிஜாதம்.
இருவரையும் அந்த மௌன நிலை வேறு உலகத்திற்கே இட்டுச் செல்ல. அவளில் கோடி அச்சாரங்களை பதித்து தகிக்கும் உணர்வுகளை இளைப்பாறவும், அடுத்தடுத்து என இட்டுச் செல்லவும், நொடியும் தாமதிக்காது அவளுள் முக்குளித்து கொண்டிருந்தவனின் தொடுகையில் பல வண்ணமாய் மலர்ந்து போனாள் பாரிஜாதம்.
இதயத்தின் மெட்டுக்கலோடு உணர்வுகளும் ரீங்காரமிட, உணர்ச்சியின் வேகத்தையும் அறிந்து கொண்ட நொடி அது..
அவளின் உணர்வுகளுக்கும் உணர்வு கொடுத்து, இடைப்பாற இடமும் கொடுத்து, மூச்சுக்காற்றை கூட கூசி சிலிர்க்கச் செய்து அவளை மொட்டவிழ்த்து மலர்த்தி என அவளுக்குள் உணர்வு சங்கமத்தையே அரங்கேற்றி இருந்தான் யஷ்வந்த்.
துயில் கொள்ளும் நேரம் எல்லாம் தூங்கா இரவாகி போக, பொழுது புலரவே இருவரின் விழிகளும் அசதியில் ஓட்டிக்கொண்டது.