தோளில் சாயும் நேரம் 08

இளங்காலைப் பொழுதில் பறவைகளின் கீச்சிடும் சத்தம் காதுகளைத் தீண்டிச் செல்ல, மெல்லிய தென்றல் காற்று திறந்திருந்த சாளரத்தின் வழியே உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.

பறவைகளின் சத்தத்தில் மெல்லக் கண்களை மலர்த்தி எழுந்து கொண்ட பிரமேகிருஷ்ணா, சோம்பலை முறித்துக் கொண்டு, சுவர்க்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான்.

நேரம் காலை ஏழுமணி என்பதைத் தெளிவாக அறிவித்துக் கொண்டிருக்கவே, நெற்றியை நீவி விட்டபடியே எழுந்து வெளியே சென்றவனை, ஆருதியின் பாடல் சத்தம் தான் வரவேற்றது.

வீட்டுக்கு முன்னால் புடைவையால் கட்டப்பட்டிருந்த ஏணைக்குள் இருந்து, கையை அப்படியும் இப்படியும் அசைத்து ஏதோ பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள் குட்டி.

குழந்தைக்கு உச்சரிப்புத் தெளிவாக இல்லாத காரணத்தினால், அவள் என்ன பாடல் பாடுகிறாள் என்பதை, நெருக்கமானவர்கள் தவிர வேறு யாராலும் கண்டு பிடித்து விட முடியாது.

‘முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா..’ என்ற மழலைக் குரலில், ஆருதியின் தலையைக் கோதி விட்டபடியே குளியலறைக்குள் புகுந்து கொண்டான் பிரேமகிருஷ்ணா.

வழமையாக எழும் நேரத்தை விடவும் இரண்டு மணி நேரம் தாமதமாக எழும்பி விட்டிருந்ததன் காரணம் அவனுக்குத் தான் தெரியும்.

நல்ல வேளை இன்று போயா விடுமுறை என்பதால், பணிக்குச் செல்ல வேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவில்லை.

இல்லையென்றால் ஏழு மணிக்கு எழுந்தவன், குளித்து முடித்து உணவு உண்டு எப்படி எட்டு மணி வேலைக்குச் சென்றிருக்க முடியும்.

குளியலறைக்குள் புகும் போதே, இயல்பாக நேற்றைய நினைவுகள் அவனை வட்டமிடத் தொடங்கியிருந்தன.

பல் சிகிச்சை அறையினுள் அந்த டென்டல் செயாரில் சாய்வாகப் படுத்திருந்த வர்தனிக்கு நேராக, அவளுடைய பற்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டி, அந்த வெண்ணிற மின்குமிழ்களை ஒளிர வைத்தான் கிருஷ்ணா.

அதுவரை அவனுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளோ, முகத்தில் வெளிச்சம் மோதிய முயல்குட்டி போலச் சட்டென்று கையால் கண்ணை மறைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டாள்.

வழமையாக வரும் பற்சிகிச்சை பெறுபவர்களது, பற்களைச் சோதனை செய்வதற்காக, அவர்கள் உள்ளே வரும் முன்னரே கைகள் இரண்டுக்கும் கையுறைகளை அணிந்து விடுவான் கிருஷ்ணா.

ஆனால் இப்போதோ அவனுடைய கரங்கள் கையுறையின் பக்கம் செல்லவில்லை என்பது அவனே அறியாத உண்மை.

கண்கள் கூச முகத்தைக் கையால் மறைத்தபடி முகத்தைத் திருப்பியவளது கரத்தை விலக்கி, அவளது முகத்தை நேராக்கியவன் அவள் விழிகளைப் பார்த்தான்.

அவளுக்கு இப்போது முகத்தில் அடித்த வெளிச்சம் பழக்கமாகி விட, மெல்ல விழிகளை மலர்த்தியவள், பதிலுக்கு அவனுடைய விழிகளைப் பார்க்க, சில நொடிகள் நீடிக்கத் தான் செய்தன அந்தப் பார்வைப் பரிமாற்றம்.

என்னடா இது ஒரு ஆணை இப்படிப் பார்க்கிறேனே என்பது போலச் சட்டென்று பார்வையை விலக்கிய வர்தனியின் விழிகள் அங்குமிங்குமாக அலைபாய, அவனோ பார்வையை விலக்கிக் கொண்டானில்லை.

“என்ன கன்னம் இப்புடி வீங்கி இருக்கு..”
என்று கொண்டே அவளது தாடைப் பக்கத்தை மெல்லப் பற்றிப் பார்த்தவன், அவளது கீழ்க் கொடுப்புப் பல்லை மெல்லப் பரிசோதித்தான்.

அதுவரை அடங்கியிருந்த வலி மீண்டும் முணுக் முணுக்கெனத் தொடங்க ஆரம்பிக்க, வர்தனியின் விழிகள் மெல்லக் கலங்கத் தொடங்கி விட்டிருந்தன.

“ஒரு அஞ்சு நிமிஷம் தான்.. இனி வலிக்காது.. ஒரு சின்னத் துவாரம் தான் இருக்கு.. அதை அடைச்சால் சரி ஆயிடும்..”
என்று கொண்டே அவளது கீழ்ப் பக்கப் பல்லுக்கு மேலே ஏதோ ஒரு திரவத்தை ஸ்பிரே செய்யவும், சட்டென்று தோன்றிய வித்தியாசமான சிறு வலியில் சட்டென்று அவனது கரத்தை இறுகப் பிடித்து விட்டாள் வர்தனி.

“இப்ப முடிஞ்சிரும்.. அவ்வளவா வலிக்காது..”
என்று கொண்டே அவன் வேலையில் மும்முரமாகி விட, அவன் சொன்னது போல அதற்குப் பிறகு அவளுக்கு வலிக்கவேயில்லை.

பல்வலி மட்டுப் பட்ட பின்னர் தான் அவளுக்கு ஒரு விசயமே கருத்தில் பட்டது.

எப்போதும் இறுக்கமான அழுத்தமான குரலில் பேசும் கிருஷ்ணாவின் குரல் இப்போது இறுக்கத்தைத் தொலைத்து இதத்தைத் தத்தெடுத்திருந்தது தான் அது.

அதோடு அவளுக்கு அவனது அருகாமை வெறுப்பையோ எரிச்சலையோ கொடுக்கவில்லை என்பதை அவளாலேயே உணரக் கூடியதாக இருந்தது.

அன்றைக்கு அந்தப் பிரதாபனிடம் இருந்து எந்த சீனும் இல்லாமல் தன்னைப் பாதுகாத்ததற்கு பிறகு, கிருஷ்ணா பற்றி நேர்மறையாக மட்டுமே உணர்கிறாள் அவள்.

“ஓகே.. அவ்வளவு தான் வேலை முடிஞ்சுது..”
என்றவனது குரல் அவளை நடப்புக்குக் கொண்டு வரவே, கன்னத்தின் மீது கைவைத்து அழுத்திப் பார்த்தபடியே எழுந்து கொண்டவள், புடைவை தடுக்கி விழப் போனாள்.

அவளையே தான் பார்த்திருந்தவனும் அவள் புடைவை தடுக்கி விழப் போகிறாள் என்பதை உணர்ந்து, சட்டென்று எட்டி அவளைப் பிடித்துக் கொள்ள, அவனுடைய கைவளைவுக்குள் நின்றிருந்தாள் அவள்.

அவனுடைய சட்டை வாசம் நாசி தீண்டிச் செல்லவே, நன்றாக இழுத்து வாசம் பிடித்தவள், அவனுடைய முகம் பார்க்காமலேயே
“சொறி.. சாறி கீழ எங்கயோ கொழுவீட்டுது அது தான்..”
என்று கொண்டே மெல்ல விலகினாள்.

அவளிடம் இருந்து கைகளை விலக்கிக் கொண்டவன் தன்னுடைய தலையை அழுந்தக் கோதியபடி பார்வையைத் திருப்பிக் கொண்டு விட்டான்.

மற்றப் பெண்கள் போல் இல்லாமல் இவளிடம் ஏதோ ஒரு விசயம் அவனை ஈர்க்கிறது என்பது தான், அவன் மெல்ல மெல்ல உணரும் ஒரு விசயமாக இருக்கிறது.

“உடன போகாமல் ஒரு பத்து நிமிஷம் இருந்திட்டு போறது நல்லம்.. உள்ள ஈயம் வைச்சு தான் அடைச்சிருக்கு இனிப் பயமில்ல.. ஆனாக் கன்னம் நல்லா வீங்கியிருக்கு..”
என்று கொண்டே, அடுத்து இருந்த அவனுடைய தனியறையில் அவளை அமர வைத்து விட்டு, அங்கே உள்ளே கிடந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து ஐஸ்கட்டி எடுத்துக் கொண்டு அவளிடம் வந்தவன்,
அதை ஒரு சுத்தமான பருத்தித் துணிக்குள் வைத்து, அமர்ந்திருந்தவளது கன்னத்திற்கு மெல்ல ஒத்தடம் கொடுத்தான்.

அந்த அபூர்வமான அழகான காட்சியை மட்டும் அப்போது ரகு பார்த்திருந்தால் அவ்வளவு தான் மயக்கம் போட்டுத் தான் விழுந்திருப்பான்.

‘என்னடா கிருஷ்ணா கன்னத்துல வீக்கம் போக ஐஸ் ஒத்தடம் எல்லாம் குடுக்கிறாய்.. வருங்கால வீட்டுக்காரியில இப்பவே லவ்ஸோ..’

‘லூசு மாதிரிக் கதைக்காத ரகு.. இது ஒரு பேஷன்டுக்கு ஒரு டொக்டர் செய்ற சேவை..’

‘எது இப்புடி உங்கட பிரைவசியான அறைக்குள்ள கூட்டி வந்து கதிரையில இருக்க வைச்சு.. உங்கட திங்ஸை யூஸ் பண்ணி இப்புடிக் குளோசப்ல நிண்டு கன்னத்தைப் புடிச்சு ஒத்தடம் குடுக்கிறதோ.. கையில குடுத்தால் அந்தப் பிள்ளையே தனக்கு ஒத்தடம் குடுக்குமோ..’

‘நீ முதல்ல வெளியால போ..’

‘அது தானே உண்மையைச் சொன்னால் உனக்குப் புசுபுசெண்டு கோபம் வந்திருமே..’
என்று இப்படித் தான் அவர்களுடைய பேச்சு வார்த்தை இருந்திருக்கும்.

ஆனால் இங்கே அந்த ஜோடியை யாருமே தொந்தரவு செய்ய வரவில்லை.

ஜோடியா? ஆம் ஜோடியே தான் சீக்கிரமாவே ஜோடியாகப் போகிறவர்கள்.

கிருஷ்ணா பக்கத்தில் வந்து கன்னத்தைப் பற்றி ஒத்தடம் கொடுக்கத் தொடங்கிய போதே கண்களை மூடி விட்டிருந்தாள் வர்தனி.

வீங்கிப் போய் ஒரு மாதிரி சௌகரியம் இல்லாமல் இருந்த கன்னப் பக்கம், இப்போது சில்லென்று அத்தனை நன்றாகத் தான் இருந்தது.

அதோடு அவனுடைய அருகாமை அவளுடைய இதயத்தின் வேகத்தை அதிகரிக்கச் செய்தது என்பதுவும் உண்மை.

ஆனாலும் தன்னுள், வரும் பேஷன்டுக்கு இது போல வலிகள் இருந்தால் இப்படித் தான் உதவி செய்வாராக இருக்கும் என எண்ணிக் கொண்டாள் அவள்.

அவன் ஆண்களை மட்டுமே தான் உள்ளே எடுக்கும் பெண்களை அண்டவும் விடாத விசுவாமித்திரன் என்பது அவளுக்குத் தெரியாதே.

சில நிமிடங்கள் அப்படியே கரைந்தோட
“இப்போ பரவாயில்லயா..”
என்றவனது குரல் காதுகளை வருடிச் செல்லவே, மெல்லக் கண்மலர்களை மலர்த்தி அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு, அவனுடைய பார்வையில் முகம் சிவந்தே போய் விட்டது.

‘ப்பா.. என்ன பார்வைடா அது.. மனசுக்குள்ள என்ன நினைக்கிறன் எண்டுறதைக் கண்டுபிடிக்கிற மாதிரியே இருக்கே..’
என நினைத்தவள் தலையைக் கவிழ்ந்து விட்டாள்.

அதற்கு மேலும் அவளைச் சோதிக்க விரும்பவில்லையோ, அல்லது அடுத்த பேஷன்டைப் பார்க்க வேண்டிய தேவையோ தெரியவில்லை, சிறு தலையசைப்போடு வெளியே போய் விட்டான் கிருஷ்ணா.

அவன் சென்ற பின்னர் தான், அவளுக்கு மூச்சே லேசானது போன்றதொரு உணர்வு.

மெல்லப் பெருமூச்சு விட்டபடி அந்தக் கதிரையில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு, சில நாட்களாகத் தொடர்ந்த பல்வலியோடு ஏற்கனவே பிடித்து ஆட்டிய தலைவலியும் சேர்ந்து, போதாக்குறையாகப் பல்வலியால் இரண்டு தினங்களாகத் தூக்கமில்லாமல் போனது எல்லாம் சேர்த்து, இப்போது அவளது கண்களைக் கௌவ முயன்றன.

போதாக் குறைக்கு அறையின் மிதமான குளிரோடு, மெல்ல நாசியை வருடும் ஏதோ ஒரு வாசனை எனக் கண்கள் சொக்கவே தன்னை மறந்து மெல்லக் கண்ணயர்ந்து போனாள் வர்தனி.

அன்றைக்குப் பிரதாபனிடம் இருந்து பாதுகாத்து அவளை அழைத்துப் போனவன், எந்தப் பந்தாவும் இல்லாமல் அவளை அவளுடைய வீட்டு வாசலில் இறக்கி விட்டு, அவள் உள்ளே போகும் வரை, காரில் இருந்து பார்த்து விட்டே போனான்.

அதுவே அவன் மீது மரியாதையை வைப்பதற்கும் நம்பிக்கையை வைப்பதற்கும் போதுமானதாக இருந்தது.

ஏனென்றால் அவள் கடந்து வந்த ஆண்களின் குண வடிவங்கள் எதுகுமே அத்தனை ஆரோக்கியமானதாக அவளுக்கு இருந்ததில்லை.

ஆனால் முதன் முதலாக ஒரு ஆணின் ஒரு செயல், சட்டென்று நெஞ்சத்தில் ஒட்டிக் கொண்டதால், அழகான குண வடிவத்துக்கு இலக்கணமாகிப் போனான் அவன்.

ஒரு சிலரை எவ்வளவு காலமாகப் பழகினாலும் சில செயல்களால் பிடிக்காமல் போகும், ஆனால் ஒரு சிலரை ஒரு செயலிலேயே பிடித்துப் போய் விடும்.

இப்போது வர்தனிக்குக் கிருஷ்ணாவை அந்த ஒரு செயலிலேயே பிடித்துப் போய் விட்டது.

பிடித்தம் வேறு காதல் வேறு அல்லவா? எல்லாப் பிடித்தங்களும் காதல்களாக மாறுவதும் இல்லை, பிடித்தங்கள் இல்லாமல் காதல்கள் மலருவதும் இல்லை.

பார்க்கலாம் இந்தப் பிடித்தம் வெறும் பிடித்தமாகவே இருக்கிறதா அல்லது பிடித்த காதலாக மாறுகிறதா என்பதை.

ஏதேதோ எண்ணங்களைத் தாண்டிக் கண்ணயர்ந்து போன வர்தனியிடம் இருந்து வந்த சீரான மூச்சுக்காற்றே அவள் அயர்ந்து தூங்குகிறாள் என்பதை நன்கு பறைசாற்றிக் கொண்டிருந்தது.

வெளியே சென்றிருந்த பிரேமகிருஷ்ணாவுக்கு தொடர்ந்து நான்கு பேஷன்ட்ஸ் வந்ததால், அவனால் நகரக் கூட முடியவில்லை என்பதோடு, சிறிது நேரம் அமர்ந்து விட்டு வர்தனி போயிருப்பாள் என்கிற எண்ணத்திலும் அவன் தன் வேலைக்குள் மூழ்கி விட்டிருந்தான்.

ஆனால் அவளோ இங்கே அவனுடைய அறைக்குள், தன்னை மறந்து ஆழ் துயிலில் ஆழ்ந்திருந்தாள்.

பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கின்றவர்கள் இல்லாத இடத்தில், ஆழ்ந்த நித்திரை சாத்தியப்படாது என்பது தானே உண்மை.

ஆழ்ந்த தூக்கம் சாத்தியப்படுகிறது என்றால், அது பாதுகாப்பு உணர்வத் தரும் நபர் இருக்கும் இடம் என்று தானே அர்த்தம்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page