அகல்யாவின் டிபார்ட்மென்ட்டில் அந்தப் பரபரப்பான மதிய நேரம்…
ஹேமா தன் இருக்கையில் சாய்ந்து கொண்டு ஆகாஷின் நினைவலைகளில் மிதந்து கொண்டிருந்தாள். ஆனால் அகல்யாவோ, ஆகாஷ் கேண்டீனில் தன்னைத் திரும்பிப் பார்க்காத அந்த ஒரு நொடியை நினைத்து, மனதுக்குள் ஒரு பெரிய போர்க்களத்தையே நடத்திக்கொண்டிருந்தாள்.
“ஏய் அகல்யா… நிஜமாவேடி, அந்த ஆகாஷோட அந்த சிரிப்பு, அவன் காபி குடிக்கும்போது அந்த விழி இருக்கே… அப்படியே சில்லுன்னு ஒரு காதல் சூர்யா மாதிரியே இருந்தான்ல!” என ஹேமா ஜொள்ளு விடாத குறையாகக் கவிதை பாடத் தொடங்கினாள்.
அகல்யா தன் கணினித் திரையை வெறித்துப் பார்த்தபடி, “ஆமா… சூர்யா! இன்னும் கொஞ்ச நேரம் போனா அவனுக்கு ஜோதிகாவையும் நீயே கண்டுபிடிச்சுடுவ. வேலையைப் பாருடி ஹேமா!” என எரிச்சலோடு கத்தினாள்.
ஹேமா விடாமல், “ஏன்டி எரியுற? நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? அவன் சிரிக்கும்போது அந்தத் தாடையில ஒரு குழி விழுது பாரு… ஐயோ! அதைப் பார்க்குறதுக்குனே நான் அந்த Cafeteria பக்கமே ஒரு பத்து தரம் போவேன் போலிருக்கே!” என அவளை இன்னும் உசுப்பேற்ற,
அகல்யாவுக்கு இப்போது உண்மையிலேயே பற்றிக்கொண்டு வந்தது. “ஏய்! அந்தப் பையன் ஏதோ பாவம்னு வேலைக்கு வந்திருக்கான். அவனைப் போயி இப்படி சைட் அடிக்கிறியே… உனக்கு அறிவிருக்கா? அவனப் பார்த்தா ஒரு நல்ல வீட்டுப் பிள்ளை போல இருக்கு. அவனை உன் பேச்சால கெடுத்துடாத!”
“அச்சச்சோ… மேடம்க்கு எவ்வளவு அக்கறை?” ஹேமா கிண்டலாகச் சிரித்தாள். “இருந்தாலும் அகல்யா, அவன் என்கிட்ட எவ்வளவு ஸ்வீட்டா பேசினான் பார்த்தியா? நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க ஹேமா-னு அவன் சொன்னப்போ… என் மனசுக்குள்ள ஒரு ஆயிரம் வயலின் வாசிச்ச மாதிரி இருந்ததுடி!”
“ஆயிரம் வயலினா? அறுந்து போயிடப் போகுது பாரு! அவன் எல்லார்கிட்டயும் அப்படித்தான் பேசுவான். நீ என்னவோ உன்கிட்ட மட்டும் தான் ஸ்பெஷலா பேசுன மாதிரி சீன் போடாத,” என அகல்யா தன் கோபத்தை அடக்க முடியாமல் பொரிந்து தள்ளினாள்.
ஹேமா அகல்யாவின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். “ஏன்டி… அவன் என்கிட்ட பேசுனது உனக்கு ஏன் இவ்வளவு பத்திக்குது? உனக்கு அவன் மேல எதாவது…” என இழுக்க,
“எனக்கு ஒன்னும் இல்ல! அவன் ஒரு மங்குனி. மழையில நனைஞ்சுட்டு வந்தப்போவே எனக்குத் தெரியும், அவன் ஒரு லூசுன்னு. அவனைப் போய் நீ இப்படிப் புகழ்றது எனக்குப் பிடிக்கல, அவ்ளோதான்!” என அகல்யா மழுப்ப அதே நேரம் மேஜை மீது இருந்த போன் அலறியது.
டிஸ்ப்ளேவில் மனோஜின் பெயர் மின்னியதும், அகல்யாவின் முகம் ஒரு நொடியில் சுருங்க, “இந்த மங்கூஸ் மண்டையன் இப்போ எதுக்கு கூப்பிடுறான்? நிம்மதியா ஒரு நிமிஷம் பேச விடமாட்டானே!” எனப் புலம்பிக்கொண்டே அவனது அறைக்கு சென்றாள்.
பேசி முடித்துவிட்டுத் திரும்பியவள், அப்படியே பிடித்து வைத்த பிள்ளையார் போல, கண்கள் விரிய தன் இருக்கையில் அமர்ந்தாள்.
அவளது முக மாற்றத்தைக் கண்டு பதறிய ஹேமா, “ஏன்டி அகல்யா.. என்னாச்சு? அந்த மனோஜ் என்ன சொன்னான்?” என அவளை உலுக்கினாள்.
அகல்யா மெதுவான குரலில், “அடியே.. அந்தப் ஆகாஷ் பக்கி என்னை மொத்தமா மாட்டி விட்டுட்டாண்டி!” என்றாள்.
“என்னாச்சுன்னு சொல்லுடி முதல்ல!”
“புதுசா வந்த CEO என்னை உடனே ரூமுக்கு வரச் சொல்றாராம்… அந்த மங்கூஸ் யார்கிட்ட என்ன போட்டு கொடுத்தான்னு தெரியல, விஷயம் CEO வரைக்கும் போயிடுச்சு. நான் காலையில அந்தப் ஆகாஷ்கிட்ட பேசினது எதாவது வெளிய தெரிஞ்சு இருக்குமோ?” என அகல்யா உடல் நடுங்கக் கேட்டாள்.
அவளைச் சமாதானப்படுத்த முயன்ற ஹேமா, “விஷயம் அவ்வளவு தூரம் போயிடுச்சா? சரி விடுடி, நீதான் எதையும் போல்டா சமாளிப்பியே… போய்ப் பாரு என்னன்னு.”
“இல்லடி… மனசுக்குள்ள ஏதோ பயமா, படபடப்பா இருக்கு. ஏதோ தப்பா நடக்கப்போற மாதிரி ஒரு ஃபீல்,” என அகல்யா தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள்.
“ஏய் பயப்படாதடி! இன்னைக்கு உன் Birthday தானே? அதை ஒரு காரணமா வச்சுப் பேசி எதாவது சமாளிச்சுக்கோ. பிறந்தநாள் அதுவுமா உன்னை யாரும் திட்ட மாட்டாங்க,” என ஹேமா ஐடியா கொடுக்க.
சிறிது நேரம் அப்படியே அமைதியாக இருந்த அகல்யா, சட்டெனத் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள். அவளுக்குள் இருந்த அந்தத் துணிச்சல் வெளியே வர..
“சரி விடு! எவ்வளவோ பார்த்தாச்சு… இதுல என்ன இருக்கு? மிஞ்சி மிஞ்சிப் போனா இந்த வேலையை விட்டுத் தூக்குவான், அவ்ளோதானே? இந்தச் சோப்பு டப்பா கம்பெனில வேலை செய்யறதுக்கு பதிலா வெளிய வேற எங்கயாவது போய்க்கலாம். பாத்துக்கிறேன்!” என ஒரு வீராவேசமான முடிவோடு எழுந்து நின்றவள், CEO அறையை நோக்கிச் செல்லும்போது அவளது ஒவ்வொரு அடியிலும் ஒரு பயம் கலந்த வேகம் இருந்தது.
“அடக்கடவுளே! அந்தப் பக்கிப் பயலை நம்பி எல்லாத்தையும் கொட்டினேனே… அவன் இப்படி முதுகில் குத்துவான்னு கொஞ்சம் கூட நினைக்கலையே! இந்த வாய் இருக்கே… இதுதான் எல்லாத்துக்கும் காரணம். எதைக் கண்டாலும் தானா போய் வம்பை விலைக்கு வாங்குது. ஏற்கனவே மூணு கம்பெனியில இப்படிப் பேசித்தான் வேலை போச்சு. இந்தச் சோப்பு டப்பா கம்பெனியிலாவது ரெண்டு வருஷம் ஓட்டிட்டோமேன்னு பார்த்தா, இங்கேயும் அதே விதியா?” என மனதிற்குள் தன்னைத்தானே நொந்து கொண்டாள். ஹாஸ்டல் ஃபீஸ் செலவு என ஆயிரம் கவலைகள் அவள் கண் முன்னே நிழலாடின.
அறையின் கதவு முன்னே நின்றபோது அகல்யாவிற்கு அடிவயிறு கலங்கியது, மெதுவாகக் கதவைத் தட்டிவிட்டு, ஒரு ஆட்டைப் போலப் பம்மிக்கொண்டு உள்ளே சென்றவள் அப்படியே உறைந்து போனாள்.
கம்பீரமான அந்தச் சுழல் நாற்காலியில், மிகத் தீவிரமான முகபாவனையுடன் சித்தார்த் அமர்ந்திருக்க, அவனது கைக்கெட்டும் தூரத்தில்… இதோ இவன்! காலையில் கேப்ல அவளிடம் போண்டா சாப்பிட்ட அதே ஆகாஷ், ஒரு கையாலாகாத அப்பாவியைப் போல, அசடு வழிந்து கொண்டு நின்று கொண்டிருந்தான்.
அகல்யாவின் ரத்தம் ஒரு நிமிடம் உறைந்தது. “அடப்பாவி! இவன் CEOவோட PAவா? அப்போ காலையில இருந்து நான் கம்பெனியைப் பத்தியும், மேனேஜரைப் பத்தியும் இவன் கிட்டயேவா கழுவிக் கழுவி ஊத்தினேன்? இது தெரியாம அவனுக்குப் போண்டா வேற வாங்கிக் கொடுத்தேனே… இவன் இப்போ எல்லாத்தையும் அந்தப் புது பாஸ் கிட்டப் போட்டுக் கொடுத்துட்டு வேடிக்கை பார்க்குறானா?” என அவளுக்குள் ஆத்திரம் பொங்கியது.
சித்தார்த் வேண்டுமென்றே தலையைக் குனிந்தபடி ஏதோ ஒரு ஃபைலைத் தீவிரமாகப் பார்ப்பது போலப் பாவனை செய்ய, அகல்யா மெதுவாக ஆகாஷின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினாள். அவளது கண்கள் கோபத்தில் சிவந்து, அவனை அப்படியே எரித்து விடுவது போலப் பார்த்தன.
ஆகாஷோ, அவளது அந்தப் பயத்தையும் கோபத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவளது நிலையைப் பார்த்ததும் அவனுக்குச் சிரிப்பு முட்டியது.
அகல்யா அவனைப் பார்த்து, “எல்லாத்தையும் சொல்லிட்டல்ல? இப்போ என்னைப் பழிவாங்கத்தான் இங்கே வரவச்சியா?” என்பது போலக் கண்களாலேயே திட்டினாள்.
ஆகாஷ் சிறிதும் கலங்காமல், தன் புருவங்களை உயர்த்தி, “என்ன… கண்ணுல இவ்வளவு கோபம்? பாஸைப் பார்த்ததும் பயம் வந்திடுச்சா?” எனச் சைகையிலேயே கேட்டான்.
அகல்யா தன் பற்களைக் கடித்தபடி, “எல்லாத்தையும் போட்டுக்கொடுத்துட்டு இப்போ என்ன சிக்னல் வேண்டி கிடக்கு? உன் வேலையை நீ செஞ்சுட்ட… இப்போ அவர் என்னை வேலையை விட்டுத் தூக்கப் போறார், சந்தோஷமா?” என வெடிப்பது போல ஒரு பார்வையை வீசினாள்.
ஆகாஷ் அவளது அந்த அதிர்ச்சி கலந்த அழகை ரசித்தபடி மேலும் ஒரு குறும்புச் சிரிப்பை உதிர்த்தான்.
அகல்யா மெதுவான குரலில், “சார்…” என்று அழைத்தாள். அது சித்தார்த்தின் காதில் விழவில்லை போலத் தெரியவே, தன் பயத்தை எல்லாம் தொண்டைக்குள் விழுங்கிவிட்டு சற்றே சத்தமாக, “சார்!” என்றாள்.
சித்தார்த் இப்போது நிமிர்ந்து பார்த்தவன், “யெஸ்?” சுருக்கமாகக் கேட்க,
“சார்… நீங்க வரச் சொன்னதா மேனேஜர் மனோஜ் சொன்னாரு,” என இழுத்தாள்.
சித்தார்த் ஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்துவிட்டு, “உன் நேம் என்ன?” என்று கேட்டான்.
“அகல்யா…” மிக மெல்லிய குரலில் பதில் வந்தது.
“ஹோ! நீதான் அந்த அகல்யாவா?” என்ற சித்தார்த், சட்டெனத் திரும்பி ஆகாஷைப் பார்த்து ஒரு கண் ஜாடை காட்டினான். ஆகாஷோ ஏதுமறியாத ஒரு கற்சிலையைப் போல வினயமாக நின்றிருந்தான்.
அகல்யாவின் மனசாட்சி இப்போது ஆகாஷை ஒரு வழி செய்து கொண்டிருந்தது, “அடப்பாவி மங்குனிப் பயலே! நீதான் அந்த அகல்யாவானு கேக்குற அளவுக்கு எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டியா? கேப்ல போண்டா சாப்பிட்டதுக்கு இன்னைக்கு என் தலையில தேங்காயை உடைக்கப் பார்க்குறாயேடா ! இன்னைக்கு இவன் நம்மளை டிஸ்மிஸ் பண்ணாம விடமாட்டான் போலயே!”
பயத்தில் நாக்கு உலர்ந்து போக, “சாரி சார்! அப்போ…. “எனத் தழுதழுத்தாள்.
அவளது பதற்றத்தை கவனித்த சித்தார்த், “என்ன சாரி? இதோ இதை முதல்ல பிடி…” என்றவன், தன் கையை அசைத்து ஆகாஷிடம் அந்த கவரை அவளிடம் கொடுக்குமாறு சைகை செய்தான்.
ஆகாஷ் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல், மிகவும் அமைதியாக அந்தக் கடிதத்தை அகல்யாவிடம் நீட்டினான்.
அகல்யாவின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. “அடேய் பாவி! Terminate Letter நீயே உன் கையில கொடுக்குறியா? என்ன ஒரு வில்லத்தனம்டா உனக்கு! உனக்கு டீ வாங்கித் கொடுத்ததுக்கு எனக்கு TC வாங்கித் கொடுத்துட்டயே! எல்லாம் என் நேரம்டா… இன்னைக்கு உன் கையாலயே என் சாவு மணி அடிக்கப்பட்டுடுச்சு!” எனத் தன்னுள் ஓலமிட்டபடி அந்தக் கடிதத்தை வாங்காமல் சிலையாக நின்றாள்.
அவளது திகைப்பைப் பார்த்த சித்தார்த், அதிகாரக் குரலில், “டேக் இட்!” என்றான்.
வேறு வழியின்றி, கைகள் நடுங்க அந்தக் கடிதத்தைப் பற்றிக் கொண்டபோது, அவளது விரல்கள் நடுங்கின. கண்களில் கண்ணீர் திரையாக முட்டி நிற்க, உலகம் மங்கலாகத் தெரிந்தது. “எல்லாம் முடிந்தது” என்ற ஏமாற்றத்துடன், அந்த அறையை விட்டு வெளியேற மெதுவாகத் திரும்பினாள்.
“ஒரு நிமிஷம்!” சித்தார்த்தின் கணீர் என்ற குரல் அறையை அதிர வைத்தது.
போன உயிர் திரும்பி வந்தது போல, அகல்யா சட்டெனத் திரும்பினாள். கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, ஏங்கிய கண்களுடன் அவனைப் பார்த்தாள்.
“ஒரு லெட்டர் கொடுத்தா அதுல என்ன இருக்குன்னு படிக்காமலே போறீங்களே? இது என்ன பொறுப்பு? நான் இங்க கதை சொல்லவா உங்களைக் கூப்பிட்டேன்?” என சித்தார்த் இப்போ கொஞ்சம் அதட்டுவது போலக் கேட்கவும்…
அகல்யாவின் மனதிற்குள் ஒரு பக்கம் கோபம் கொப்பளித்தது. “வேலையே போயிடுச்சு, இதுல மட்டும் என்ன இருக்கப் போகுது? ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்க்கவா நான் இங்கே நிக்கிறேன்? மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு மாசச் சம்பளத்தைக் கொடுத்து நாளைக்கு வராதேன்னு எழுதியிருப்பான்,” என நினைத்தவாறு, ஆவேசமாக அந்தக் கவரைத் திறந்தாள்.
அந்த கடிதத்தைப் படித்த அடுத்த நொடி…
🌧️தூறல்கள் தொடரும்…
