அத்தியாயம் – 3
ஒரு சில நாட்கள் கடந்திட ஜானு முன்பு போல் துறுதுறுவென்று துடிப்பாக இல்லாமல், அபியின் நினைவிலேயே வாடினாள், அவளது தாயின் இழப்பிற்க்குப் பிறகு கிடைத்த மிகப் பெரிய ஆறுதலை, இப்போது இழந்துவிட்ட உணர்வு, அவளுக்குப் பள்ளியில் தோழிகள் இருந்தாலும், அபியிடம் ஏற்பட்ட பிணைப்பு போல் அவர்களிடம் எழவில்லை, அவன் தான் அவளுக்கு ஒரு சிறந்த தோழனாகவும் எல்லாமுமாகவும் இருந்தான்….
அவளது தந்தை சண்முகம், மகளின் இந்த மௌனத்தைப் பார்த்து மனம் வருந்தினான், அவன் ஆறுதல் சொல்ல முயன்றபோதும், ஜானு மௌனமாகவே இருந்தாள், அவள் அடிக்கடி தன் கை மணிக்கட்டில் இருந்த அந்த வாட்ச்சைத்தான் எடுத்துப் பார்த்துக் கொள்வாள். அது, மீண்டும் அபி திரும்பி வருவான் என்ற நம்பிக்கையின் ஒரே அடையாளமாக இருந்தது….
நாட்கள் கடக்க, யாரும் எதிர்பாராத விதமாக ஒரு கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்தேறியது. அது சண்முகத்தின் இறப்புச் செய்திதான்…
அது ஒரு வெள்ளிக்கிழமை மாலை. சண்முகம் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் நேரம்…
தான் வேலை செய்யும் துணிக்கடையில் உடன் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் பைக்கில், பின்னால் அமர்ந்து வந்துகொண்டிருந்தான், அந்த க்
கணம் எதிரில் வந்த ஒரு சரக்கு லாரி, கண் இமைக்கும் நேரத்திற்க்குள் நிலை தடுமாறி மோத விபத்து நேர்ந்தது.
சண்முகம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் நீத்தான்…
ஜானுவின் உலகம் இரண்டாகப் பிளந்தது, தாயை இழந்து சில மாதங்களே ஆன நிலையில், ஒரே ஆதரவாக இருந்த தந்தையும் சென்றுவிட்டான், அந்தச் சிறிய வாடகை வீட்டில், ஜானு தனியாக விடப்பட்டாள், கண்ணீரோடு உதிர்க்க வார்த்தைகள் கூட இல்லாமல் அழுது அழுது, அவள் கண்களில் நீரும் வற்றிப்போனது….
தந்தைவழி உறவினர் என்று சொல்லி வந்த ஒரு பெண்மணி தான் ஜானுவுக்குத் துணையாக இருந்தாள், அவள் ஜானுவின் கைகளைப் பிடித்துக்கொண்டு… “என் கூட என் வீட்டுக்கு வந்திடுறியா? நான் உன்னை பத்திரமா பார்த்துகிறேன்.”
எல்லாரையும் இழந்து அனாதையாக நின்ற அந்தச் சிறுமி என்ன செய்வாள்? மாட்டேன் என்றா மறுப்பாள்? வேறு வழியின்றி, சரி என்றுதான் தலையசைத்தாள். அந்தச் சூழ்நிலையில், அவளுக்கு அதுவே ஒரு பெரிய ஆறுதல்…
அந்தப் பெண்மணி, ஜானுவின் உடைகளை ஒரு பைக்குள் வைத்து, அவள் தாயும் தந்தையும் அவளுக்காகச் சேர்த்து வைத்திருந்த சிறிய தொகையையும் எடுத்துக் கொண்டு, வீட்டுச் சாவியை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு, ஜானுவின் கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றாள்….
போகும் அவர்களை, அபியின் அத்தை திலகாவும் பக்கத்து வீட்டில் இருந்த இன்னும் சிலரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர், ஜானுவை எண்ணி மிகவும் பரிதாபப்பட்டனர், ஆனால் அவளுக்கு உதவி செய்யும் மனநிலை தான் யாருக்கும் இல்லை, அவளது உறவுக்கார பெண்மணி பார்த்துக் கொள்வார், என் பிள்ளைகளையே வளர்க்க முடியல, ஊரா பிள்ளையை யார் பார்த்துக் கொள்வது என்ற எண்ணம் தான் அவர்களுக்கு,…
திலகாவிற்கு பிள்ளைகள் இல்லை என்றாலும் ஊரா பிள்ளையை தன் பொறுப்பில் ஏற்றுக் கொள்ளும் பெரிய மனதெல்லாம் இல்லை, வருத்தமான ஒரு பெருமூச்சுடன் தனது வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார். ஜானுவோ, இனி அந்த அத்தைதான் தனக்கு எல்லாம் என்ற நிராதரவான எண்ணத்துடன் அவருடன் சென்றாள்….
அவளது கைகளைப் பற்றி அழைத்துச் சென்ற அந்தப் பெண்மணியின் முகம், வெளியே சிரித்தது போல் இருந்தாலும், உள்ளே கருநாகம் இருந்தது. யாரை நம்பி அவள் வந்தாளோ, அந்தப் பெண் நல்லவள் இல்லை என்பதை, கொஞ்ச நேரத்திலேயே ஜானு அறிந்து கொண்டாள்.
அந்தப் பெண் அவளை அழைத்துச் சென்றது, தன் வீட்டுக்கு அல்ல அந்த நகரத்தின் பேருந்து நிலையத்திற்குத்தான்!
பயணம் செய்ய வந்திருப்பதாக நினைத்து, ஜானு மௌனமாக நின்றிருந்தாள்.
அப்போது, அந்தப் பெண், “இங்கேயே இரு, வந்துடறேன்” என்று கூறி, தள்ளிச் சென்று பூத்தில் தனியாக யாரிடமோ போன் செய்து பேச ஆரம்பித்தாள்.
தனியாக இருக்கப் பயந்து, அந்தப் பெண்ணின் பின்னாலேயே சென்ற ஜானு, அவள் பேசுவதைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டாள். அந்தப் பெண் போனில் யாரிடமோ தன்னைப் விலைக்குப் பேசியதை ஜானுவின் காதுகள் நம்ப முடியாமல் கேட்டன…
”பஸ் ஸ்டாண்ட்ல தான் இருக்கேன். அந்தக் குட்டியும் இங்கேதான் இருக்கா. நான் சொன்ன பணத்தை வந்து தந்துட்டு, அந்தக் குட்டியை இழுத்துட்டுப் போயிடு. பேசுன காச மட்டும் சரியா எடுத்துட்டு வந்திடனும்,” என்று அவள் கறாராக, மனசாட்சி இல்லாமல் பேசினாள்….
ஜானுவின் உலகம் மொத்தமும் சுழன்றது. தாய் மற்றும் தந்தையின் மரணம் தந்த வலியைவிட, இப்போது அவள் உயிருடன் இருக்கும்போதே விற்கப்படப் போகிறாள் என்ற உணர்வு அவளது பிஞ்சு மனதை நொறுக்கியது…
அந்தப் பெண்மணி போனை அணைக்கும் முன், ஜானுவின் கால்கள் தாமாகவே இயங்கின. இனி ஒரு நொடி கூட இங்கே இருக்கக் கூடாது என்ற பயத்தில் அவள் கண்ணீருடன் அந்தப் பேருந்து நிலையத்தின் நெரிசலுக்குள் புகுந்து, திரும்பிப் பார்க்காமல் ஓடினாள்…
எங்கே செல்ல வேண்டும், யாரிடம் உதவி கேட்க வேண்டும் என்று எதுவும் தெரியவில்லை, உடலெல்லாம் பயத்தில் நடுங்கியது, கண்கள் நீரை விடாமல் உகுத்துக் கொண்டே இருந்தது. ஆனால், அந்தப் பெண்மணியிடம் மாட்டி விடக்கூடாது என்ற பயத்தில், தன் ஓட்டத்தை மட்டும் நிறுத்தவில்லை.
அவளது எட்டு வருட வாழ்க்கையில் சந்தித்த கொடூரங்களில் உச்சம் இது.
முன்னால் எதையும் பார்க்காமல் ஓடிக் கொண்டிருந்தவள், சட்டென்று யார் மீதோ இடித்து “அம்மா!” என்ற அலறலுடன் கீழே விழுந்தாள்…
”ஏய்! பார்த்துமா,” தன் மீது இடித்துக் கீழே விழுந்த ஜானுவைத் தூக்கி விட்டார் மாணிக்கம்… ”என்னம்மா இப்படியா ஓடி வருவது? அடி எதுவும் பட்டுடுச்சாமா?” என்று கேட்டார் கனிவுடன்…
அவளால் பதில் சொல்ல முடியவில்லை, விம்மலும் பயமும் அவளது குரலை அடைத்தன, தன் மீதான அக்கறையைக் கண்டதும், அவள் அழத் தொடங்கி விட, மாணிக்கத்த்தின் அருகில், தன் ஐந்து வயது மகளைக் கையில் பிடித்தபடி நின்ற அவரது மனைவி சாரதா… “என்னாச்சும்மா,… பலமா அடிப்பட்டுடுச்சா?” என்று குனிந்து, அவளுக்குக் காயம் எதுவும் பட்டுவிட்டதோ என்ற அக்கறையில் வினவினார்…
அந்தப் பெண்ணின் கரிசனமான கேள்விகளும், தாய்க்குரிய வாஞ்சையும், தன் தாயையே நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஜானுவுக்கு அளிக்க,.. “அம்மா!” என்று சாரதாவின் இடையைக் கட்டிக் கொண்டு பெரிதாக அழத் தொடங்கி இருந்தாள்…
மாணிக்கமும் சாரதாவும் திகைத்தாலும், அந்தச் சிறுமியின் துயரத்தின் ஆழத்தை உணர்ந்து கொண்டனர். அவளை அணைத்துக்கொண்ட சாரதா, மெதுவாக அவள் தலையை வருடிவிட்டபடி,… “என்னாச்சும்மா உனக்கு? ஏன் இப்படி அழற?” என்று கேட்டார்…
அவளோ பதில் சொல்லும் நிலையில் இல்லை, தேம்பி தேம்பி அழுதாள், தன் மகளைக் கையில் பிடித்தபடி நின்றிருந்த மாணிக்கம், தண்ணீர் போத்தலை எடுத்து மனைவியிடம் நீட்டியபடி, “முதல்ல குடிக்க வை சாரதா” என்று சொல்ல,..
மெல்ல ஜானுவை விலக்கி, அவளை நீரைப் பருக வைத்த சாரதா, அருகிலிருந்த இருக்கையில் அவளை அமர வைத்து, “என்னமா ஆச்சு? யார் கூட வந்த நீ?” என்று கேட்டார்…
”அ.. அது…” என்றவளுக்குக் கண்ணீர் நிற்காமல் வடிந்தது, அழுகை நின்றிருந்தாலும், அவள் மனதில் உறைந்திருந்த பயத்தால் விம்மல் நிற்கவில்லை, அந்தச் சூழலில் அவளைக் கடத்தி விற்க முயன்ற பெண்மணி எந்த நிமிடம் வேண்டுமானாலும் வந்துவிடலாம் என்ற பயம் அவள் கண்களில் நீராகத் தேங்கி நின்றது….
”போதும்டா போதும்… பயப்படாத, நாங்க உங்க பக்கத்துலதான் இருக்கோம்,” அவள் எதனாலோ பயப்படுகிறாள் என்பது புரிந்த மாணிக்கம் அவளுக்கு ஆறுதலாகக் கூறினார்…
மாணிக்கத்தின் உறுதியான வார்த்தைகளும், சாரதாவின் தாய்ப்பாசமும், அநாதையாக நின்றிருந்த அந்தச் சிறுமிக்குக் கிடைத்த மிகப்பெரிய பாதுகாப்பு. ஜானுவிற்க்கு மெல்ல தைரியம் வர, தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே அவர்களுக்குப் புரிய வைத்தாள்…
மாணிக்கமும் சாரதாவும் அவளது கதையைக் கேட்டு அதிர்ந்து போயினர், அந்த நேரம் பார்த்து ஜானுவை விற்கத் துணிந்த பெண்ணும், அவளைத் தேடி அங்கே வந்துவிட, அவளைப் பார்த்துப் பயந்தாள் ஜானு. அவள் உடல் மீண்டும் நடுங்கத் தொடங்கியது…
அந்தத் தம்பதியிடம், “இவங்கதான் அது!” என்று அழுகுரலில் கூற, மாணிக்கமோ கோபமாக, “பிள்ளையைக் கடத்தி விக்கப் பார்க்கிறியா? இரு! இப்போவே போலீஸைக் கூப்பிடுறேன்!” என்று சீறினார்…
பயந்து நடுங்கிய அந்தப் பெண்ணோ, சத்தம் எழுப்பினால் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்து, விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடியே விட்டாள்….
அவள் ஜானுவிற்கு உறவுக்கார பெண்மணி எல்லாம் இல்லை. அந்த ஊரில் அனாதைப் பிள்ளைகளைத் தேடிச் சுற்றிக் கொண்டிருந்தவள், ஒரு மோசக்காரியிடம் இருந்து அன்று ஜானு முழுமையாக மீட்கப்பட்டாள்.
அவள் ஓடிய பிறகுதான் சாரதா சற்று அமைதியானார். “நல்ல வேலையா இந்தப் பொண்ணு நம்ம கண்ணுல பட்டா, இல்லனா என்னாகிருக்கும்?” என்று பயந்தவர், அழுது கொண்டிருந்தவளின் கண்ணீரைத் துடைத்து விட்டு, “உனக்கு சொந்தக்காரங்க கூட யாருமில்லையாமா?” என்று கேட்டார்…
அவள் இல்லை என்று பாவமாகத் தலையசைத்தாள். வேறு யாரும் இல்லை என்ற உண்மை, சாரதாவின் மனதை மிகவும் உலுக்கியது. அவளை ஆழ்ந்து பார்த்தபடி, அவளது கன்னத்தை வாஞ்சையாக வருடிவிட்டவர், உணர்ச்சிவசப்பட்டு, “அப்போ எங்க கூட வந்திடறியா?” என்று கேட்டார்.
இதைக் கேட்ட, மாணிக்கம் அதிர்ந்து மனைவியைப் பார்த்தார்…
ஜானுவோ, நிராதரவான நிலையில் இருந்ததால், மீண்டும் தன்னை ஒரு மோசமான சூழ்நிலையில் சிக்க வைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் மிரண்டு விழித்தாள்.
சாரதா ஜானுவின் பயத்தைப் புரிந்துகொண்டு… “பயப்படாதமா, நாங்க அந்தப் பொம்பளை மாதிரி இல்ல, உன்னை நல்லபடியா பார்த்துகிறோம். இங்கே பாரு, உன்கூட விளையாட தங்கச்சி பாப்பா கூட இருக்கா” என்று தனது மகளைக் காட்டி கூற, ஐந்து வயதான அந்தச் சிறுமியை ஜானு மலங்க மலங்கப் பார்த்தாள்…
சிறுமி, அவளை தன் அக்கா என்று நினைத்து, “அக்கா!” என்று புன்னகையுடன் அழைக்கவும், ஜானுவின் இதழ்களும் விரிந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் முகத்தில் தெரிந்த குழந்தைச் சிரிப்பு அது….
”நம்ம ரிது மாதிரியே இருக்காங்க. நம்ம பொண்ணா நாமளே இவளை வச்சுக்கலாமே!” என்றார் சாரதா ஏக்கத்துடன்…
”எனக்குப் பிரச்சனை இல்ல சாரதா, ஆனா.. இந்தப் பொண்ணு யாருன்னே நமக்குத் தெரியல, நாளைப் பின்ன ஏதாவது பிரச்சனை வந்துட்டா என்ன பண்ணுறது?” என்றார் மாணிக்கம் யோசனையுடன், அவரது மனதில் நியாயமான பயம் இருந்தது….
சாரதாவின் கண்கள் கலங்கின… “அவளைப் பெத்தவங்க உயிரோட இல்ல, அவளுக்கு வேண்டியவங்க யாரும் இல்லை, அப்படி இருந்திருந்தா இந்தப் குழந்தைக்கு இப்படியொரு நிலை வந்திருக்குமா?” ஜானுவை எண்ணிக் கலங்கியவர்,.. ”அந்தக் கடவுளுக்கு என்ன கோபமோ தெரியல, நம்ம பொண்ணு ரிதன்யாவை நம்ம கிட்டருந்து பிரிச்சுகிட்டாரு, இப்போ இந்தப் பொண்ணு நம்ம கண்ணுல பட்டிருக்கான்னா என்ன அர்த்தம்? அந்தக் கடவுள் நம்ம பொண்ணை இந்தப் பொண்ணு மூலமா அனுப்பி இருக்காருன்னு தானே அர்த்தம்? உங்களுக்கே தெரியும் இப்போ வரைக்கும் என்னால என் பொண்ணோட இழப்புல இருந்து முழுசா மீண்டு வர முடியல, இந்தப் பொண்ணு நம்ம கூட இருந்தா என் மனவலி குறையும்னு தோணுதுங்க, என் ரிதுவா இவ என் கூட இருக்கணும்னு ஆசைப்படுறேன்,” என்று சாரதா கண்கலங்கி கூறிட, மனைவியின் கண்ணீரை கண்டு தவித்துப் போனார் மாணிக்கம்…..
அவருக்கு வேறு எந்த யோசனையும் எழவில்லை, தன் மனைவியின் வலியே அவருக்குப் பெரிதாகப் பட,.. “சரி சாரதா… இந்தப் பொண்ணை இனி நம்ம பொண்ணா வளர்க்கலாம்,” என்று உறுதியுடன் தலையசைக்க, சாரதாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை….
ஜானுவிடம் குனிந்தவர், அவளது கன்னத்தை வருடி நெற்றியில் முத்தமிட்டு, உணர்ச்சிப் பெருக்கோடு, “ரிது… ரிதன்யா!” என்று அழைத்தார். அந்த நொடியிலிருந்து, ஜானுவின் பழைய வாழ்க்கையும் துயரமும் முடிந்தது, அவளது புதிய வாழ்வில் ஜானு ரிதன்யாவாக மாறினாள்…