பகுதி 7
“ம்ம்ம்.. அவனோட சொந்த அத்தையே நான்தான். அப்புறம் எப்படி தெரிஞ்சுக்காம இருக்க முடியும்” என்றார் திலகா.
“என்னம்மா சொல்றீங்க” அவ்வுழியர் வியப்பாக கேட்க…
அப்போது.. அங்கு வந்த மேனேஜர் ரூபிணியையும் அவளுடன் வந்தவளையும் மேலே செல்லுமாறு கூற.. இருவரும் முதல் தளத்திற்கே செல்ல.. அவர்களின் பின்னே திலகாவும் சென்றிருந்தார்.
அதேநேரம்.. கடையின் உரிமையாளர் சமாதானம் பேச… அவரது அறைக்கு நால்வரையும் அழைத்துச் சென்று விட..
ரூபிணியுடன் மேலே வந்த அந்த பெண்.. தங்களுடன் வந்த திலகாவிடம்.. மீண்டும் பேச்சை தொடங்கியவள்.
“ஏம்மா நீங்கதான் அவருக்கு அத்தைன்னு சொல்றீங்களே. அப்புறம் ஏன் அவரை எதுவும் கேட்காமல் இருக்கிங்க” என்றாள்.
உடனே திலகா… “ம்க்கும், கேட்டு அவன் அப்படியே, பயந்து திருந்திட்டாலும்” இழுவையாக கூறியவர்…
“ஆரம்பத்துல நல்லாதாம்மா இருந்தான். ஆனா எப்ப பணங்காசு சேர்ந்ததோ, அப்பவே எல்லா கெட்ட பழக்கமும் சேர்ந்துருச்சி. நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பாத்தோம். இதெல்லாம் தப்பு. இப்படியெல்லாம் பண்ணதனு”.
“அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா….. என்ன பெத்தவங்களே என்னை எந்த கேள்வியும் கேக்கல, நீங்க யாரு கேக்குறதுக்கு அப்படின்னு சொல்லிட்டாம்மா. அதனாலயே நாங்களும் எதுவும் கேட்கிறதில்லை” என்றவர்…
“நல்ல வேலை என் பொண்ணு இவன்ட்டருந்து தப்பிச்சிட்டா” என்றார்.
திலகா கூறி கதையை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த அந்த பெண்.. “ஏன் அப்படி சொல்றீங்க” எனக் கேட்க…
“ஆறு மாசமா, பெரிய பெரிய இடத்திலெல்லாம் இவனுக்கு பொண்ணு தேடிட்டு இருந்தாங்க. யாரும் இவன் லட்சணம் தெரிஞ்சி பொண்ணு தரல. கடைசியா எங்க அண்ணன், உன் பொண்ணையாச்சும் கட்டிக் கூடுமா அப்படின்னு வந்து எங்கிட்ட கேட்டான்”.
“நானும், சரி நம்ம அண்ணன் பையன்தானே. கல்யாணமான திருந்திடுவானு நினைச்சு பொண்ணு குடுக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனா என் பொண்ணு, இந்த மாதிரி கேடுகெட்ட பொம்பள பொறுக்கிய கல்யாணம் பண்ணறதுக்கு, நான் கல்யாணமே பண்ணிக்காம கூட இருந்துடறேன் அப்படின்னு சொல்லிட்டா”.
“அதனால இந்த கல்யாணத்துல என் பொண்ணுக்கு விருப்பமில்லைன்னு நானும் எங்க அண்ணன்கிட்ட சொல்லிட்டேன். அதுக்கு இவன் என்னை கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினான்” வராத கண்ணீரை துடைத்தவர்..
“அப்றம் எங்கேயும் பொண்ணு கிடைக்காதுனால.. கடைசில வசதியில்லாத வீட்டு பொண்ணா பார்த்துட்டாங்க. ஏதோ நாங்க பண்ண புண்ணியம் இவங்ககிட்ட இருந்து என் பொண்ணு தப்பிச்சுட்டா. ஆனா அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சோ தெரியல” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.. கதை கதையாக அடித்து விட்ட திலகா.
“ம்ம்ம், அந்த பொண்ணை, ஆண்டவன்தான் இவன்கிட்ட இருந்து காப்பாத்தணும்” பெருமூச்சுடன் கூறியவர்.. ஏதோ ஒரு உடையை வாங்கிக் கொண்டு புறப்பட்டார்.
திலகா கூறிய அனைத்தையும், கேட்டுக் கொண்டிருந்த ரூபிணி… “ச்சை, சொந்த அத்தையே இப்படி சொல்றாங்கன்னா, இவன் எப்பேர்பட்ட பொறுக்கியா இருப்பான்” என்றாள் தன்னுடன் நின்றிருந்தவளிடம்.
அவளும் “ஆமாண்டி.. நானும்கூட அவன் பேசுனதை பார்த்து.. தப்பு பண்ணி இருக்க மாட்டான்னுதான் நினைச்சிட்டேன். ஆனா இந்தம்மா சொன்னப்றம்தான் தெரியுது, சரியான கேடு கெட்டவனு” என்றவள்.. அடுத்த வாடிக்கையாளர் வரவும் அவர்களை பார்க்க சென்று விட்டாள்.
இங்கே அறைக்கு வந்த இரு சாரரும்.. இன்னுமே வாக்குவாதம் செய்ய…
பைரவன்… “சரி இந்த கடையில சிசிடிவி கேமரா இருக்கில்ல. அதை செக் பண்ணுங்க. யார் தப்பு பண்ணாங்கன்னு தெரிஞ்சிரும்” என்றான்.
“ஆமா போடுங்க...
அப்போதான் போலீஸ்ல ஆதாரத்தோட கம்பளைண்ட் கொடுக்க முடியும்” என்றார் அந்த பெண்மணி.
உடனே, அங்கிருந்த கணினியை உயிர்பித்த கடையின் உரிமையாளர்…. சம்பவம் நடந்த நேரத்தை ஓட்டிக்காட்ட…
கூட்ட நெரிசலில்.. சிறுமி திரும்பி நின்றிருப்பதும், பின்னாலிருந்த ஒருவன் அவளை தவறாக தீண்டுவதும் தெளிவாக தெரிய…அவன் முகம் மட்டும் சற்று மங்களாகவே தெரிந்தது.
அதன்பின் அச்சிறுமி தாயிடம் கூறுவது, அவன் அங்கிருந்து நழுவுவது.. பைரவன் அந்த இடத்திற்கு வருவது.. சிறுமி பைரவரை சுட்டிக் காட்டுவது என அனைத்தும் தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த சிறுமி, தன் பின்னால் இருந்தவன் யார் என திரும்பிப் பார்க்காததால், இவ்வளவு குழப்பம் ஏற்பட்டிருந்தது.
அனைத்தையும் பார்த்த சிறுமியின் தாய்… “மன்னிச்சிடுங்க சார், உண்மை என்னன்னு தெரியாம உங்களை தப்பா பேசிட்டேன்” என்றார் தலை குனிந்து.
கடும் கோபத்திலிருந்த பைரவன், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
“சாரியா... ஏங்க அத்தனை பேர் முன்னாடி என் ஃப்ரண்டை பத்தி கேவலமா பேசிட்டு… இப்போ இங்க யாருக்கும் தெரியாம சாரி சொன்னா.. சரியா போயிடுமா” என கத்திய ப்ரசாந்த்.
“உங்க பொண்ணுக்கு நடந்தது ரொம்ப பெரிய அநியாயம் தான். அதுக்காக நீங்க பண்ணதும் ஒன்னும் நியாயம் கிடையாது” என்றான் கோபமாக.
“நான் பண்ணது தப்புதாங்க.. ஆனா என் இடத்துல நீங்க இருந்திருந்தாலும் இதையே தான் பண்ணி இருப்பீங்க” என்றவர்.. “என் பொண்ணு அழுதுகிட்டே சொல்லவும்.. ஆத்திரத்தில் அப்படி பேசிட்டேன். அதுக்காக வேணா எல்லாரும் முன்னாடியும் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றார்.
உடனே.. “வேண்டாம்”… என்ற பைரவன்.. “நீங்க சொல்றது கரெக்ட்தான். உங்க இடத்தில நான் இருந்தாலும் அப்படித்தான் நடந்திருப்பேன். இனிமே பொண்ணை வெளிய கூட்டிட்டு வரும்போது ஜாக்கிரதையா பாத்துக்கோங்க” என்றான்.
“சரி சார்… மறுபடியும் நான் பேசுனதுக்காக உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் சார்” என்றவர், தன் மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
அவர்கள் சென்றதும், அந்த வீடியோவை தனக்கு பகிருமாறு கடைகாரரிடம் கேட்டு வாங்கிய பைரவன், கண்கள் சிவக்க கடையிலிருந்து புறப்பட்டான்.
அவனுடனே சென்ற ப்ரசாந்த்.. “பைரவா.. டேய் எங்கடா போற, நாம இன்னும் பொண்ணை பார்க்கவே இல்லடா” என்றான்.
“எப்படிடா பார்க்க சொல்ற.. இப்படி அசிங்கப்பட்டு… அந்த பொண்ணு முன்னே போய் நின்னா, அவ என்னை என்ன நினைப்பா” என கேட்டான் அவன்.
“டேய், அந்த ஓனருக்குதான் எல்லாம் உண்மையும் தெரியுமே. அவர் வந்து சொன்னா அந்த பொண்ணு நம்பும்டா.. நம்ம போய் அந்த பொண்ணை பார்க்கலாம் வாடா” என்ற ப்ரசாத்திடம்…
“இல்லடா, எனக்கு இப்போ மைண்ட் சரியில்லை. அவளை இன்னொரு நாள் பாத்துக்கலாம் வா” என்றான் பைரவன்.
“சரிடா, ஆனா இந்த ப்ளோர்ல தான் இருக்காங்களானாவது பாருடா. அப்போதான், இந்த விஷயத்தை பத்தி அவங்ககிட்ட பேசலாமா வேணாமான்னு முடிவு பண்ண முடியும்” என்ற நண்பனின் வார்த்தைகிணங்க, அந்த தளம் முழுவதிலும் உள்ள பணியாளர்களை பார்த்தவன்.. “இங்க இல்லடா” என்றான்.
“அப்போ இதைபத்தி நீயா அவங்ககிட்ட எதுவும் சொல்லாத. ஒருவேளை அவங்களா தெரிஞ்சு கேட்டான்னா பாத்துக்கலாம்” என்றவன், நண்பனை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.
சிறிது நேரம் அமைதியாக வாகனத்தை இயக்கிய ப்ரசாந்த், “எதுக்குடா அந்த சிசிடிவி ஃபுட்டேஜ் வாங்குன” என பைரவனிடம் கேட்க..
“பப்ளிக் ப்ளேஸ்னுகூட பாக்காம ஒரு சின்ன பொண்ணை இப்படி அப்யூஸ் பண்ணவன், சான்ஸ் கிடைச்சா இன்னும் என்னென்ன வேலை பண்ணுவான். அவனை அப்படியே விட்டா நல்லாவா இருக்கும். அதுவுமில்லாம அவன் பண்ண தப்பால, நானும் பாதிக்கப்பட்டிருக்கேனே… அதுக்கெல்லாம் இவனை வச்சு செய்ய வேண்டாம். அதுக்குத்தான் இந்த வீடியோவை வாங்கிட்டு வந்திருக்கேன்” என கண்கள் சிவக்க கூறியவன், வீடியோவை எடிட் செய்து, அவனது புகைப்படத்தை மட்டும், தன் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பியிருந்தான்.
“மச்சி, இந்த ஃபோட்டோல இருக்கறவனை.. எங்க எப்போ பார்த்தாலும் சரி, ஆளை லாக் பண்ணிட்டு.. இம்மீடியட்டா எனக்கு தகவல் கொடுங்கடா” என்ற குறுந்தகவலையும் பகிர்ந்தான்.
நண்பனின் செயல்களை பார்த்துக் கொண்டிருந்த ஃப்ரசாந்த்.. “மச்சி இதெல்லாம் நமக்கு தேவையில்லாததுடா. பேசாம இந்த வீடியோவை போலீஸ்ல காட்டி, அவனை அரெஸ்ட் பண்ண சொல்லிடலாம்டா” எனக் கூற..
ப்ரசாந்த்தை எரித்து விடுவது போல் பார்த்தவன்… “ இதுவே நமக்கு தெரிஞ்ச பொண்ணுங்க யாருக்காவது நடந்திருந்தாலும் இதையேதான் சொல்லுவியா” என்றான்.
உடனே.. “ சாரி மச்சி, உன்னபத்தி தெரிஞ்சும், நான் இதை சொல்லியிருக்க கூடாது தான்” என்றவன், அமைதியாக வாகனத்தை ஓட்டினான்.
*********
“அண்ணே, இப்போதான்.. ஜோசியரை போய் பாத்து கல்யாண தேதியை குறிச்சிட்டு வந்தோம். வர வைகாசி 15.. நாள், ரொம்ப நல்லா இருக்குனு ஜோசியர் சொல்லிட்டாரு. அதனால நாங்களும் அன்னைக்கே கல்யாணத்தை வெச்சிடலாம்னு நினைக்கிறோம். நீங்க என்ன சொல்றீங்க” லட்சுமி.. பெண்ணின் தந்தையிடம் கேட்க..
“எனக்கும் சம்மதம் தான்ங்க. ஆனா இன்னும் ஒன்றரை மாசம் தான் டைமிருக்கு. அதுக்குள்ள கல்யாண வேலை எல்லாம் முடிச்சிட முடியுமான்னு தான் யோசிக்கிறேன்” எனக் கூறினார் கந்தசாமி.
“அட என்ன ண்ணே நீங்க.. இப்படி சொல்லீட்டிங்க, என் பையன் ஊருக்கெல்லாம் கல்யாண ஏற்பாடு பண்ணறான். அவன் கல்யாண வேலையை பண்ண மாட்டானா. அதெல்லாம் பத்தே நாள்ல கூட ஏற்பாடு பண்ணிடுவான் ண்ணே. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க” என்றார் அவர்.
“அதுக்கில்லை.. நாங்களும் கொஞ்சம் பணம் ஏற்பாடு பண்ணனும், சொந்தங்களுக்கு எல்லாம் பத்திரிக்கை வைக்கணும். அதற்கான நேரமாவது வேணும் இல்லையா. அதுக்காக தான் சொல்றேன்” கந்தசாமி வெளிப்படையாகவே அனைத்தையும் கூறி விட..
“அண்ணே அதுதான் அன்னைக்கே உங்ககிட்ட தெளிவா சொல்லிட்டு வந்தோமில்ல. நீங்க எதுவும் பண்ண வேண்டாம்னு. அப்புறம் எதுக்கு இதெல்லாம் யோசிக்கிறீங்க…. நீங்க எதுவும் பண்ண வேண்டாம். எல்லாம் நாங்களே பாத்துக்குறோம். இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு தேவையான பத்திரிகையும் சேர்த்து அடிச்சு குடுத்துறோம். நீங்க உங்க சொந்தக்காரங்களுக்கு எல்லாம் பத்திரிக்கை கொடுக்கற வேலையை மட்டும் செய்ங்க, போதும்” என்றார்.
அவர் பேசியதை கேட்டு மனம் நிறைந்த கந்தசாமிக்கு, பேச வார்த்தைகளை வரவில்லை.
“எவ்வளவு பணம் இருந்தாலும், பொண்ணு வீட்ல வரதட்சனை வாங்குறவங்களுக்கு மத்தியில், எதுவும் வேணாம்னு சொல்ற, உங்கள் மாதிரி நல்ல மனுசங்க இருக்க வீட்டுல, என் பெண்ணு வாழ போறதை நினைச்சா, ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. என் பொண்ணு ரொம்ப குடுத்து வச்சவதான்” என கண்கலங்கினார் கந்தசாமி.
“அண்ணே என்ன ண்ணே, பெரிய பேச்செல்லாம் பேசிகிட்டு… பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். அதை விடுங்க…. உங்களுக்கு அந்த தேதில கல்யாணம் வைக்கறதுல எந்த பிரச்சனையும் இல்லைதான” என்றார்.
உடனே.. “உங்களுக்கு சம்மதம்னா எங்களுக்கும் பரிபூரண சம்மதம்தான்” என்ற கந்தசாமி.. இதே வாயால் “இந்த திருமணத்தில் தங்களுக்கு சம்மதம் இல்லை” என கூறுவார் என்று அவரே எண்ணியிருக்க வாய்ப்பில்லை.
தொடரும்….
ஹாய் வாசகப் பெருமக்களே.. கதையை படிப்பவர்கள் அதன் நிறை குறையை கமெண்டில் பதிவு செய்யவும்..
