மனைவியை கோபித்துக் கொள்கிறானே தவிர வீட்டிற்கு வந்த பிறகு அவளை அத்தனை பத்திரமாய் பார்த்துக் கொள்கிறான்.. மீனுவுக்கும் ஆசையாக இருக்கிறது ..மகளை தன் வீட்டில் கொண்டு போய் வைத்து பார்த்துக் கொள்வதற்கு ..கயலிடம் கெஞ்சி கூத்தாடி மருமகனிடம் அனுமதி கேட்டு வாங்கிக் கொண்டு அங்கே அழைத்து சென்று விடுகிறார்..
மித்ராவும் அமிர்தனும் இல்லாத வீடு அவனுக்கு வெறிச்சோடி வெறுமையாய் காட்சியளிக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாமியார் வீட்டில் சென்று தங்கி குழந்தையை கொஞ்சி விட்டு தான் வருகிறான்.. அவன் போகும் போதெல்லாம் தன் பெற்றவர்களையும் அழைத்துப் போய் வருகிறான்.. கயலை விட மாறன் தான் தன் பேரன் மீது உயிரையே வைத்து இருக்கிறார்..
மீனு தன் ஆசைப்படி,அவர்களின் அனுமதியின் படி ஐந்து மாதம் வரை மகளையும் பேரனையும் வைத்து பிரியத்துடன் பார்த்து தான் அனுப்பி விடுகிறார். பேரன் இங்கு வந்த பிறகே கயலுக்கும் மாறனுக்கும் முகத்தில் சிரிப்பு வருகிறது.. அதற்கு எதிர்ப்பதமாய் அங்கு மீனுவுக்கும் சக்தி வேலுவுக்கும் முகத்தில் சோகம் குடி கொண்டு விடுகிறது ..
மீனு புலம்புகிறார்.. “எழுந்ததிலிருந்து தூங்கும் வரை அவன் முகத்தில் சிரிப்பு மட்டும் தான் இருக்கும் .. அடம் செய்யாமல் சமர்த்துப் பிள்ளையாய் இருப்பான்..அதுவும் அமீர் என்று கூப்பிட்டாலே கலகலவென சிரிப்பான்.. தினமும் அவன் முகத்தில் கண் விழித்து விட்டு இப்பொழுது அவன் இல்லை என்றால் எப்படி இருக்க போகிறோமோ தெரியவில்லை.. “
சக்தி மனைவியை தேற்றுகிறார் .. “நம் சம்பந்திங்களை பாருடி.. ஒரே ஒரு பிள்ளை வைத்திருந்தாலும் அவங்க பேரப் பிள்ளையை நம்மிடம் அனுப்பி வைத்து விட்டு வெறுமையாக இருக்கிறார்கள்.. நமக்கு இன்னும் மூன்று பெண்கள் இருக்கிறார்கள் கவலைப்படாதே..”
ஆனாலும் கயலுக்கு தான் மனம் தெளியவில்லை. ” என்ன இருந்தாலும் அவர்களுக்கு சொந்தம்.. நமக்கு இரவல்தான் .இவன் மட்டும் இல்ல நம்ம மூணு பெண்களுக்கும் கல்யாணம் ஆனாலும் பிரசவம் பார்த்தாலும் அது நம்ம பேரப்பிள்ளைங்க இல்லைங்க.. இரவல் பேரப்பிள்ளை தான்.. நமக்கென்று ஒரு ஆண் பிள்ளை இல்லாமல் போய் விட்டது ..நானும் ஒவ்வொரு குழந்தையை சுமக்கும் போதும் ,இது ஆண் குழந்தையாக இருக்காதா என்று ஏங்கி போவேன் ..இந்த கடவுளுக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லை .. “என்று மனம் உடைந்து அழுகிறார்..
அவர் பேசிக் கொண்டிருப்பதை அரவிந்த் கேட்டதும் வருத்தப் படுகிறான் ..தன் மனைவி ஏன் ஆண் குழந்தைக்கு தவித்தாள் என்று அவனுக்கு இப்பொழுது தான் புரிகிறது ..எல்லாவற்றிற்கும் தன் மாமியார் தான் காரணம் என்று புரிகிறது.. இதை மனதில் வைத்துக் கொள்ள முடியாமல் மாமியாரிடம் நேராக கேட்டே விடுகிறான்..
“என்ன அத்தை இப்படி பேசுறீங்க.. நான் உங்களுக்காக பையன் மாதிரி இல்லையா. பையன் மாதிரி என்ன.. நான் உங்க மகன்தான் ..என்னிடம் என் அம்மா எப்படி இருப்பாங்களோ ..அதே மாதிரியே நீங்களும் இருக்கலாம்: எப்பொழுது வேண்டுமானாலும் அங்கே வரலாம் ..அதே மாதிரி இவங்களுக்கு பார்க்க வேண்டும் என்ற ஆசையாய் இருந்தால் உடனே அனுப்பி விடுகிறேன்.. ஏன் அழறீங்க .. “மாமியாரை சமாதானம் செய்கிறான்..
அவனுக்கு அவர் அழுவதை பார்த்ததும் ஏதோ ஒரு மாதிரி ஆகி விடுகிறது.. ‘இதற்காகத்தான் என் மனைவி ஆண் குழந்தை என்று பிடிவாதம் பிடித்தாளோ…, என்ற கோணத்தில் யோசிக்கிறான்..
மித்ராவிடம் அன்று இரவு பேசவும் செய்கிறான் .. “ஆமாங்க எங்க ல பெண் குழந்தைகளை வரிசையாய் பார்த்ததால் தான் எனக்கு ஆண் பிள்ளை கேட்டேன்..” அதை சொல்வதற்குள் அவளுக்கு ஏனோ வியர்த்துக் கொட்டுகிறது ..
“ஏன்டி உடம்பு நல்லா இல்லையா.. ஏன் ஒரு மாதிரியாக பேசுகிறாய் … “அரவிந்த அதற்கு மேல் அவளிடம் ஆண் குழந்தை பெண் குழந்தையை பற்றி பேச்சே எடுக்கவில்லை. அமிர்தனுக்கு ஒரு வயது ஆகி விடுகிறது .. கோலாகலமாய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு ஆகிறது.. இவன் பிறந்த நாள் என்பதற்குள் மித்ராவின் அடுத்த தங்கை மயூரிக்கு திருமணம் ஆகி விடுகிறது..
பிறந்தநாளுக்கு நேரில் சொல்வதற்காக மாமியார் வீட்டுக்கு செல்கிறான்.. மயூரி மாதமாக இருக்கவும். இப்பொழுது மீனுவும் சக்திவேலும் மகளை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் ..அங்கு தன் மகன் வந்ததைக் கூட பெரிது படுத்தாமல்..அவன் அன்று நடந்ததை எண்ணி சிரித்துக் கொள்கிறான்..
ஆனாலும் அவர்கள் சொன்னது மாதிரி இரவல் தானே.. இருக்கும் வரை சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்று இப்படி இருக்கிறார்களோ என்னவோ என்றும் யோசிக்கிறான்..
இதை திரும்பவும் அன்று இரவு மனைவியிடம் பேசவும் அவளுக்கு கோபம் வருகிறது.. ” நீங்க ஏங்க எங்க அம்மா வீட்டையே கவனிக்கிறிங்க.. உங்களுக்கு இதுல என்ன ஒரு ஆனந்தம்..என் அம்மா வீட்டில் ஆண் குழந்தை இல்லை என்று உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியோ .. ” இப்படி சொன்னதுமே அவனுக்கு சுருக்கென்கிறது.
” ஏன்டி நான் பெற்ற மகன் மாதிரி உரிமையுடன் தானே இருக்கிறேன்.. இப்படி சொல்கிறாய்..என் மனம் விட்டு பேசும் ஒரே ஆள் நீதான். எதுவாக இருந்தாலும் நான் உன்னிடம் தான் பகிர்ந்து கொள்கிறேன்… சாதாரணமாக தானே உன்னிடம் இதைப் பற்றி பேசினேன் .. நீ ஏன் இப்படி குத்தி காட்டுகிறாய் .. “
” இல்லை எப்பொழுது பார்த்தாலும் இரவல் பிள்ளை நிஜம் பிள்ளை என்கிறீர்களே ..அந்த வார்த்தையை கேட்டாலே எனக்கு கோபமாக
வருகிறது.. “
“சரி சரி அது என்னமோ உனக்கு இப்படி பேசினாலே கோபம் வருகிறது.. நான் இனிமேல் உன்னிடம் இந்த டாபிக்கை எடுக்க மாட்டேன் ..நீ முந்தி மாதிரி இல்லடி.. என்னிடம் எத்தனை பிரியமாய் இருப்ப.. இப்பொழுது நான் ஏன் உன்னிடம் வந்து பேசுகிறேன் என்றே எண்ணிக் கொள்கிறாய்.. ஏதாவது பேச்சு எடுத்தாலும் விழுந்து பிடுங்குகிறாய்.. நானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன் ..அப்படி நான் என்னதான் தவறு செய்தேன் என்று சொல் ..நான் திருத்திக் கொள்கிறேன்.. இதற்கு மேல் உன்னிடம் நான் ஒரு வார்த்தை பேசுகிறேனா என்று பார்.. “
சொன்னவன் கோபமாய் திரும்பிப் படுத்து விடுகிறான்.. எப்பொழுதும் இப்படி கோபமாய் இருந்தால் கொஞ்சி சமாதானம் செய்யும் மித்ரா இரண்டு மூன்று நாட்களாகியும் அவனிடம் பேச மறுக்கிறாள்..பிறகு அவனே வந்து அவளை சமாதானம் செய்கிறான்..
“நான் சும்மா விளையாட்டுக்கு தானே பேசினேன் ..ஏன் இப்படி கோபித்துக் கொள்கிறாய்.. நாளைக்கு பிள்ளைக்கு முதல் பிறந்தநாள்.. அதற்குள் நமக்குள் எவ்வளவு சண்டை.. நம்ம இரண்டு பேரும் சண்டையே போட்டுக் கொள்ளக் கூடாதுடி..”
” ஆமாம் இதே தான் பிரசவம் சமயமும் சொன்னீங்க.. இப்பொழுதும் இதே தான் சொல்கிறீர்கள் ..அவனுக்கு கல்யாணம் ஆகி அவன் பேரக்குழந்தை வந்தாலும் நம்ம கதை இப்படித்தான் இருக்கும் போல.. ” என்கிறாள்.
” இல்லடி நம்ம சண்டையெல்லாம் நகர்த்தி வைத்து விடுவோம்.. இப்பொழுதைய சிந்தனை எல்லாம் இவனுடைய பிறந்த நாளை எப்படி கொண்டாடுவது என்று தான்.. யாரும் கொண்டாடாத அளவிற்கு நாம கோலாகலமாய் கொண்டாட வேண்டாமா..” ஆசையாய் பேசுகிறான்..
அவளும் இதில் இணைந்து கொள்கிறாள்..அவர்கள் கல்யாணத்திற்கு செய்யாத செலவுகளை மகனின் முதல் பிறந்த நாளுக்கு செய்கிறார்கள்.ஊரையே கூட்டி தடவி புடல் விருந்து வைத்து வந்த குழந்தைகளுக்கெல்லாம் பரிசுகள் கொடுத்து விளையாட்டுகள் வைத்து,பிறந்த நாளை முடிக்கவே மனம் இல்லை ..
சண்டை போட மாட்டேன் என்று இருவரும் சொன்னாலும் எப்படியாவது சண்டை வந்து விடுகிறது.. அமிர்தனை பற்றி பேசினாலே மித்ராவுக்கு கோபம் வருகிறது.. அரவிந்துக்கு எதுவுமே புரியவில்லை..
அன்று இரவு வாயை பிளந்து கொண்டு அசந்து தூங்கும் தன் குழந்தையின் தலை முடியை கோதியவன் ஹாஸ்பிடலில் ஆரம்பித்த அதே டாபிக்கை ஆரம்பிக்கிறான் ..
“இது எப்படிடி இவனுக்கு இத்தனை அழகா சுருள் சுருளா முடி இருக்கு..எனக்கும் இல்லை ,உனக்கும் இல்லை . “இதை சொல்லி வாய் மூடுவதற்குள் பெரிய யுத்தம் ஒன்று ஆரம்பமாகிறது.. இத்தனைக்கும் அவன் சிரித்துக் கொண்டுதான் சொல்கிறான்..
அவன் சொன்னதுமே மித்ரா கையில் சூலம் இல்லாமலேயே பத்திரகாளியாய் மாறுகிறாள்..
“அப்படி என்றால் என்னை சந்தேகப் படுகிறீர்களா.. நான் அப்படிப் பட்ட பெண்ணா.. “வாய் விட்டு அழுகிறாள்..
“சீச்சி நாயே என்ன பேச்சு பேசுகிற . உன்னை போய் நான் சந்தேகப்படுவேனா.. நான் சும்மா விளையாட்டுக்கு தானே பேசுகிறேன் ..என் அம்மாவிடமும் கிண்டலுக்கு இப்படித்தான் சொன்னேன் .. அதற்கு அம்மா என் கொள்ளு தாத்தாவோட கொள்ளு தாத்தாவுக்கு இப்படித்தான் இருக்கும் என்றது ..நான் சிரித்துக் கொண்டேன்..”
நம் குழந்தைகள் நம்மை பிரதி எடுப்பது போலவே இருக்க மாட்டாங்க ..நம்முடைய மூதாதையர்களின் அடையாளங்கள், குணங்களையும் கொண்டு தான் வருவாங்க ..அதெல்லாம் கடவுளின் செயல் …நீ ஏன் இந்த வார்த்தையை சொன்னாய் ..நான் உன்னை அப்படியா வைத்திருக்கிறேன்.. என்றாவது உன்னை சந்தேகப்பட்டு பேசி இருக்கிறேனா. உன் மீது உயிரை வைத்திருக்கிறேன். என்னை பார்த்து இப்படி சொல்லி விட்டாயே..” அவனுக்கு ஒரே வருத்தம்.. இந்த வார்த்தைக்காக மனைவியிடம் சண்டை போடத் தொடங்குகிறான்..
அவனின் கோபத்தைக் கண்டு மித்ரா பயப்படுகிறாள்..” இல்லைங்க நீங்கள் சொன்ன வார்த்தையை கேட்டதும் எனக்கு கோபம் வந்து விட்டது. அதனால் தான் ஏதோ அறிவு கெட்டத் தனமாய் இப்படி பேசி விட்டேன்.. சாரிங்க மன்னிச்சிடுங்க..” கெஞ்சுகிறாள்..
” நானும் உன்னை கவனித்துக கொண்டே தான்டி இருக்கிறேன்..உன் மனதில் என்னைப் பற்றி ஏதோஒரு தவறான பிம்பம் இருக்குதுடி.. அதனாலதான் நான் எது பேசினாலும் கோபித்துக் கொள்கிற.. இவன் உனக்கு மட்டும் பிள்ளை கிடையாது எனக்கும்தான் .அவனைப் பற்றி பேசினாலே என்னவோ உனக்கு மட்டும் தான் உரிமை அதிகம் என்பதைப் போல நீ சத்தம் போடத் தொடங்குகிறாய்.. எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.. இனி இப்படி செய்தாய் நான் உன்னையும் அவனையும் விட்டு ஒதுங்கி விடுவேன் புரிந்து கொள்.. ” என்றதும் அழுத படியே அவன் கால்களில் விழுகிறாள் ..
“தெரியாம செஞ்சிட்டேங்க. இனிமே இப்படி எல்லாம் பேச மாட்டேங்க ..என்னை விட நீங்க தான் அவன் மேல் உயிராக இருக்கீங்க ..அது எனக்கு தெரியும்ங்க..”
” தெரிந்தும் ஏன் இப்படி பேசுகிறாயே.. எனக்கு என்ன இருந்தாலும் வருத்தமாக தான்டி இருக்கிறது.. “
அரவிந்த் வருத்தப்படுகிறான் இப்படியே போனால் என்ன ஆகப்போகிறதோ..
தொடரும்.
