வெந்து தணிந்த இதயம்-30(2)
நான் உங்கள் AY_84
வெந்து தணிந்த இதயம்-30(2)
ஊரில் அரசல் புரசலாக விசயம் பரவி அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் தெருத்தலைவர்கள் மற்றும் உறவினர்கள் சிலரோடு வந்து, எங்கள் பெண் அந்த தோட்டத்து வீட்டில் தான் இருந்தாளா? அவள் எங்கே? என்று சரமாரியாகக் கேட்டனர்.
ரத்னவேல் பாண்டியன் அசரவில்லை.
“அதெல்லாம் உண்மை இல்ல. உங்கப்பொண்ணு அந்தப்பையன் கூட இப்ப எங்க இருக்காளோ தெரியாது. அவன் கூட உங்கப்பொண்ணு ஓடிப்போயிருச்சியா” என்று பொய் கூறினார்.
“அதெல்லாம் நம்ப முடியாது. மரியாதையா நீங்க எங்கப்பொண்ணு எங்கனு சொல்லுங்க? நாங்களே பேசி அவளுக்கு புரிய வைக்கிறோம். அவளை உயிரோட மட்டும் எங்கக் கையில கொடுத்துருங்க. இன்னும் ரெண்டு நாள்ல அவளுக்கு கல்யாணம் பேசி வச்சிருக்கோம்.” என்றதும்,
“ஓடுகாலிக்கு கல்யாணம் ஒரு கேடா?” என்றார் அந்தப் பையனின் தந்தை.
“உன் பையன் மட்டும் ஒழுங்காய்யா? அவனும் ஓடுகாலி தான்” என்று மல்லுக்கட்டினர் வந்திருந்த கூட்டத்தினர்.
“இங்கப் பாருங்க! நீங்க ரெண்டுபேருமே இப்படி அடிச்சிக்கிட்டீங்கன்னா பஞ்சாயத்து தலைவர்னு நான் எதுக்கு இருக்கேன்? போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவோம். ஓடிப்போன ரெண்டுபேரும் எங்க போயிருக்காங்கனு அவங்க விசாரிக்கட்டும். அவங்க மேலயும் நம்பிக்கை இல்லனா சிபிஐகிட்ட போவோம்.” என்று தன் மேல் நம்பிக்கை வரவழைக்க ரத்னவேல் பாண்டியன் நாடகமாடினார்.
தணிந்த கூட்டமும் நேரே காவல்நிலையம் நோக்கிச் சென்றது. அதன் காரணமாய் காவல் நிலையமே இல்லாத அந்த ஊருக்குள் காவலர்கள் நுழைந்தார்கள். மிக அவமானமாய் உணர்ந்தார் ரத்னவேல் பாண்டியன்.
மறுபக்கம், இந்த வழக்கை சரிவர விசாரிக்க வேண்டும், தங்கள் மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கிழக்குத்தெருக்காரர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதற்கு கொந்தளித்துப்போய் இருந்தார்கள் மேற்குத்தெருக்காரர்கள்.
அச்சமயம் பார்த்து அந்த ஊருக்குள் வந்த மாவட்ட ஆட்சியர் கிழக்குத்தெருக்காரர்களுக்கு சில உத்தரவாதங்களைக் கொடுத்து ஊரை பார்வையிட, அவர்கள் ஊரில் சரியான இடுகாடு கூட இல்லாதது கண்டு அதற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் ரத்னவேல் பாண்டியனை சபித்தார். விரைவில் அவரை ஏதாவது செய்ய வேண்டும் என்று வன்மத்துடன் நினைத்தார்.
பத்ரி கட்சி அலுவலகம் சென்ற வேளையில் யாழினி தனக்கு பசிக்கிறது என்று டைனிங் டேபிள் சென்றாள்.
அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த காதம்பரியை வம்பிழுக்கும் விதமாய் அவளின் அன்னையிடம், “பொன்னிமா காணாமப் போன பரம்பரை நகைங்கல்லாம் கிடைச்சிருச்சி தெரியுமா?” என்றதும், திடுக்கிட்டாள் காது.
“எங்க எப்படி கிடைச்சதாம் யாழினி?” என்று பொன்னி ஆர்வமாக வினவ,
“உங்க தம்பி தான் சொல்ல மாட்டிக்கிறாரே பொன்னிமா. யாரோ இங்க வீட்டுல உள்ளவங்க செஞ்ச வேலையாம். விளையாட்டுக்குச் செய்யப்போய் விபரீதமாகிடுச்சினு சொல்றாரு. இப்ப யாருனு வெளிப்படுத்தி அவங்களை அசிங்கப்படுத்த வேணாம் சொல்றாரு.” என்றதும்,
“அது என்ன திருட்டு பழக்கம் யாழினி? இதை செஞ்சவங்க முகத்திரை கிழிஞ்சா தான் எல்லாருக்கும் ஒரு பயமிருக்கும்.” என்று அவர் தன் தமக்கை ஜெயந்தியை நினைத்துக்கொண்டு பேச, வியர்த்து வழிந்தது காதம்பரிக்கு.
யாழினி அவளை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்த போது கையில் பெட்டியுடன் கீழிறங்கி வந்தார் ஜெயந்தி.
பொன்னியும், அவ்விடம் வந்த சாவித்ரியும் கேட்டதற்கு தான் தனது கணவரிடம் செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
சாவித்ரியும் இப்போதாவது மகளுக்கு நல்ல புத்தி வந்ததே என்று அவரை தடுக்கவில்லை.
ஆனால், பொன்னியின் நினைப்போ வேறு மாதிரி இருந்தது. அவர் நகையை திருடியது தெரிந்து போனதால் தான் அவமானம் தாங்காமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறார் என்று நினைத்துக் கொண்டார்.
அப்போது காதம்பரி வேகமாக தட்டிலேயே கையைக்கழுவ, “என்னடி எப்பவும் நாலு இட்டிலி சாப்பிடுவ? இன்னைக்கு ரெண்டு தான் சாப்பிட்டிருக்க? இது என்ன புதுசா தட்டுல கைக்கழுவுற பழக்கம்?” என்றதும்,
“போங்கம்மா எனக்கு முக்கியமான ப்ராஜெக்ட் ஒன்னுயிருக்கு” என்று வேகமாக தனதறைக்குச் சென்றவள், தனது மெத்தையின் ஜிப்பை திறந்து பஞ்சுகளுக்குள் தான் ஒளித்து வைத்த நகைகளை தேடினாள்.
அவ்வறைக்குள் நுழைந்த யாழினி, “என்ன தேடுற காது? நகைங்களையா? அது தான் பத்திரமா என்கிட்ட இருக்குதே” என்று அதிரடியாய் கூறவும், அவளைக் கண்ட காதம்பரி மின்சாரம் தாக்குண்டாள்.
பின், கையும் களவுமாக பிடிபட்ட அவமானத்தில் கைகளைப் பிசைந்தாள்.
“ஏன் இப்படி செஞ்ச?” என்ற யாழினி அதட்டவும்,
“நீங்க என்ன ஒழுங்கா? என்னை கேள்வி கேட்கறீங்க? இங்க வந்தது ஒன்னும் உங்க அம்மா இல்லைனு எனக்கு நல்லாவேத் தெரியும். நீங்க இங்க வந்த புதுசுல ஒருநாள் நைட்டு யாருக்கும் தெரியாம பால்கனில நின்னு போன் பேசினதையெல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தேன். உங்க அம்மாவை பார்த்துக்கச் சொல்லி யாருக்கிட்டயோ கிழவி கிழவினு கூப்பிட்டு சொல்லிட்டு இருந்தீங்க. இங்க வந்திருந்ததோ வயசானவங்க. அதுவும் திடமா இருந்தாங்க. நீங்களும் அவங்களை வாய் தவறி எங்க முன்னாடியே மூனு தடவை கிழவினு சொல்லிட்டீங்க. உங்க அம்மா பத்தின விசயங்களை நீங்க மறைக்கறதுக்கு பின்னாடி ஏதோ பெரிய ரகசியம் ஒன்னு ஒளிஞ்சிருக்கு. அதான் நீங்க வேற யாரையோ உங்க அம்மானு சொல்லி கூட்டிட்டு வந்திருக்கீங்க. இவ்வளவு தில்லுமுல்லு வேலைகளையும் நீங்க செஞ்சிட்டு என்னை கேள்வி கேட்கறீங்களா? இங்கப்பாருங்க, இந்த நகை விசயத்தை நீங்க வீட்டுல யார்கிட்டயாவது சொன்னீங்க? நான் உங்களைப் பத்தி சொல்ல வேண்டியிருக்கும்!” என்று மிரட்டினாள்.
யாழினியோ அவளின் நெஞ்சழுத்தமான பேச்சில், விக்கித்து நின்றிருந்தாள்.
ஆனாலும், காதம்பரியை அவளால் அப்படியே விட்டுவிட முடியாதே!
“சரி, நான் இதை யார்கிட்டயும் சொல்லல. ஆனா நீ ஏன் நகைங்களை எடுத்து வச்சிருந்தனு மட்டும் காரணம் சொல்லு?” என்று இறங்கி வந்தாள்.
உடனே, குரலின் ஸ்ருதியை கூட்டினாள் காதம்பரி.
“அது என் தாத்தாவோட சொத்து. இந்த வீட்டு மருமகளுக்கு சேர வேண்டியது. அது எனக்கு சேர வேண்டியது. அதான் நான் எடுத்தேன்.” என்று நெஞ்சை நிமிர்த்தினாள்.
“உனக்கு சேர வேண்டியதா? என்று குழம்பினாள் யாழினி.
காதம்பரியோ எரிச்சலடைந்தாள்.
“ஆமா, எனக்கு சேர வேண்டியது தான். பத்ரி மாமாவை கல்யாணம பண்ணிக்கிட்டா நீங்க மட்டும் தான் அவர் மருமகளா? அவருக்கு பொறந்தவரை கல்யாணம் பண்ணிக்கப் போற நானும் அவர் மருமக தான்.” என்றதும்,
“காது நீ என்னம்மா சொல்ற? நீ யாரை கல்யாணம் பண்ணிக்கப்போற?” என்றாள் இன்னும் குழப்பமாக.
ஏனெனில், அந்த ஓவியத்தை வைத்து அவள் தர்மதுரையை அல்லவா விரும்புவதாக நினைத்திருந்தாள்.
அப்போது தான் காது அந்தப் பெயரை உச்சரித்தாள். “தர்மதுரை”
யாழினி எதிர்பார்த்த பெயர் தான் என்றாலும், “யார் அவரு? அவர் உன் தாத்தாவோட பையன்னா அவரு ஏன் இந்த வீட்டுல இல்ல?” என்றதும், கொந்தளித்து கத்தினாள் காதம்பரி.
“எப்படி இருப்பாரு? இந்த வீடு தான் தோட்டத்து வீட்டுல பிறக்கற பிள்ளைகளுக்கு இனிஷியல் கூட கொடுக்காதே” என்றதும், அதிர்ந்துப் பார்த்தாள் யாழினி.
தொடரும்…
யாரெல்லாம் இந்த ட்விஸ்ட் எதிர்பார்த்தீங்க? சொல்லிட்டுப்போங்க தங்கம்ஸ்;)
அப்பறம் லைக், கமெண்ட், ஸ்டோரி லிங் ஷேர் செய்ய மறந்துடாதீங்க:)
