வெந்து தணிந்த இதயம்-31

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்-31

 

தன் தாத்தா இது போல் இன்னும் எத்தனை குடும்பம் வைத்திருக்கிறாரோ என்று மனதுள் நினைத்த யாழினி, வெளியிலும் அதையே சொன்னாள். 

 

“இது மாதிரி உன் தாத்தாவுக்கு நூறு குடும்பம் இருக்கலாம். எல்லாரும் இப்படி வந்தா என்ன செய்யுறது?” என்றாள்.

 

அதில் வெகுண்டுபோன காதம்பரி, “உங்களுக்கு மரியாதை கொடுத்து பேசுறேனு ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்காதீங்க யாழினிக்கா. என் தாத்தா தன் வாழ்க்கையில காதலிச்சது என் துரையோட அம்மாவை மட்டும் தான். என் தாத்தாவோட அப்பா, அதான் என் கொள்ளுத்தாத்தா வஜ்ரவேல் பாண்டியன் ஜாதி அது இதுனு சொல்லி என் தாத்தா தலையில என் பாட்டியை கட்டி வச்சிட்டாரு. துரையோட அம்மாவுக்கும் அவங்க வீட்டுல வேற ஒரு கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணியிருக்காங்க. ஆனா அவங்க கடைசி வரை கல்யா‌ணமே வேணாம்னு இருந்திருக்காங்க. என் கொள்ளுத்தாத்தாவால ஊரைவிட்டேப் போனவங்க, மறுபடியும் பத்ரி மாமாவும், சஷ்டி மாமாவும் பிறந்த பின்னாடி தான் ஊருக்கு வந்திருக்காங்க. அவங்க வருகையை கேள்விப்பட்டதும் என் தாத்தா அவங்களை இன்னும் தான் மறக்கலைனு சொல்லி தன் கூட வாழ வச்சிருக்காரு. அதுவும் தோட்டத்து வீட்டுல வச்சி குடும்பம் நடத்தியிருக்காரு. அவங்க காதல்ல பிறந்தவரு தான்‌ என் துரை. என் தாத்தா முதல் முதலா காதலிச்சது என் துரையோட அம்மாவைத் தான். அப்ப அந்த பரம்பரை நகைங்கல்லாம் எனக்கு தானே சொந்தம்?” என்று மூச்சுவிடாமல் அனைத்தையும் சொல்லியதும்,

 

“உன் துரையோட குடும்பம் ஏன் அந்த தோட்டத்து வீட்டை காலி பண்ணாங்களாம்?” என்று தனது அடுத்தக் கேள்வியை தீவிரமாகவேக் கேட்டாள் யாழினி.

 

காதம்பரி அதற்கு துரையின் புராணத்தை பாடினாள்.

 

“என் தாத்தா ஊர் உலகம் தாலிக்கட்டி குடும்பம் நடத்தினா அவரை மதிக்காதுனு துரையோட அம்மாவை தோட்டத்து வீட்டுல கொண்டு வந்து வச்சி வாழ்ந்திருக்காரு. ஆனா என்‌‌ துரைக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கல. விவரம் தெரிய ஆரம்பிச்சப்போ ஸ்கூல் ரெகார்டுல எல்லாம் அப்பா பேருக்கு பதிலா தன் தாத்தா பேரு இருக்கறதைப் பார்த்து கொதிச்சிப் போயிருக்காரு. தன் அம்மாவையும் இந்த தகாத வாழ்க்கை வேணாம்னு சொல்லி தனியா கூட்டிட்டுப் போய் வாழ்ந்திருக்காரு. அதுக்காக அவரு பல பட்டினி போராட்டம்லாம் நடத்தியிருக்காரு. இப்ப தனக்கு சேர வேண்டிய மரியாதையை மீட்டெடுக்கவும், தனக்கான இனிஷியலுக்காகவும் தான் என் தாத்தா மேல கோபப்பட்டு அவரை எதிர்த்து தேர்தல்ல நிற்கிறாரு.” என்றதும்,

 

“ஒருவேளை‌ அவர் தன் அப்பாவை பழிவாங்க உன்னை லவ் பண்ற மாதிரி நடிச்சி ஏமாத்தினா?” என்று பத்ரி சொன்னதையே தானும் சொன்னாள் யாழினி.

 

ஆனால், சண்டைக்கோழியாய் விடைத்தாள் காதம்பரி. 

 

“அவரு ஒன்னும் எனக்கு லவ் டார்ச்சர் கொடுத்து என் பின்னாடி சுத்தல. நான் தான் அவர் போல்ட்னஸ் அன்ட் மேனரிசத்துல அட்ராக்ட் ஆகி அவர் பின்னாடி சுத்தினேன். என் அப்பா இந்த ஊர் ஜாதிக் கலவரத்துல தான் வெட்டுப்பட்டு செத்தாரு. அதிலேயே எனக்கு இந்த ஜாதி அமைப்புகள் மேல வெறுப்பு வந்திருச்சி. என் தாத்தாவோட கொடுங்கோலாட்சிய தைரியமா எதிர்த்து போராடுறதால தான் நான் அவரை விரும்ப ஆரம்பிச்சேன். அவரு ஒன்னும் நம்ம பணத்துக்காக ஆசைப்படல. அவரு அவரோட உரிமையை நிலை நாட்ட தான் நினைக்கிறாரு. அதான் நான் அவருக்கு சேர வேண்டிய பரம்பரை நகைகளை எடுத்து வச்சிக்கிட்டேன்.”

 

“அப்ப அவர் சொல்லி நீ அதை எடுக்கலையா?” என்று யாழினி விழிகளை பெரிதாக்கவும், இல்லையென்று மறுத்தாள் காதம்பரி.

 

“அப்போ அவரோட அம்மா மேல உன் தாத்தாவுக்கு காதல் இருந்ததுனு சொல்றியா?”

 

“ஆமா.”

 

“அது உண்மைனா அவரோட அம்மா இந்த மாதிரி உன் தாத்தா மத்தவங்க முன்னாடி கேவலப்படுறதை விரும்ப மாட்டாங்க தானே?” 

 

“ஆமா அதான் துரை அவரு‌ அம்மா சொன்னாங்கனு இப்பல்லாம் என்னை விலகியே இருக்காரு. பார்த்தாலும் முகம் கொடுத்து பேசுறதில்ல. இந்த பாவப்பட்ட குடும்பத்துல பிறந்துட்டு பலனை நான் அனுபவிக்கிறேன்.” என்று அழுதாள் காதம்பரி.

 

“கவலைப்படாத காது. உங்க கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி அவர் உன் மேல தனக்கு காதல் இருக்குனு ப்ரூவ் பண்ணனும்” என்றாள் யாழினி.

 

“உண்மையாவா யாழினிக்கா?” என்று மகிழ்ந்துபோன காதம்பரி, “எப்படி ப்ரூவ் பண்ணனும்?” என்று சந்தேகமாய் கேட்டாள்.

 

“உன் துரையை இந்த தேர்தல்ல அவர் தாக்கல் செஞ்ச வேட்பு மனுவை வாபஸ் வாங்கச் சொல்லு. அதுக்கப்பறம் நான் அவர் உன்னை உண்மையாத்தான் விரும்பறாரு, உன் தாத்தாவை பழி‌வாங்க இல்லைனு ஒத்துக்கறேன்.” என்றதும், காதம்பரியின் சந்தோசம் மொத்தமும் வடிந்தது.

 

“ஒருவேளை அவர் அப்படி வாபஸ் வாங்கி நிரூபிச்ச பின்னாடி நீங்க உங்க வாக்கை மீறிட்டீங்கன்னா?” என்று புருவத்தை உயர்த்தினாள்.

 

“என் வயித்துல இருக்க என் குழந்தை மேல சத்தியம் பண்ணினா என்னை நம்புவியா‌ காது?” என்றதும், உடனே அவளை நம்பியவளாக கட்டியணைத்துக் கொண்டாள் காதம்பரி.

 

அன்று மாலை தன் காதலி பிரத்யுஷாவிற்காக கால் கடுக்க காத்திருந்துவிட்டு கோபமாக வீடு திரும்பினான் வெய்யோன்.

 

அவனைப்போலவே தானும் வீடு திரும்பிய பத்ரவேல் பாண்டியனுக்கு முகத்தில் ஈயாடவில்லை. தேர்தல் வேலைகளில் தன்னைக் காட்டிலும் மும்முரமாக இருந்த தர்மதுரை ஏன் திடீரென்று தனது வேட்புமனுவை திரும்பப்பெற்றான் என்று பெரும் குழப்பத்தில் இருந்தான்.

 

அவனை கண்டதும் ஆர்வமாக நெருங்கிய சாவித்ரி, பொன்னியின் உபயத்தால், பரம்பரை நகைகளை குறித்து கேட்டார்.

 

“என்ன பத்ரி நம்ம பரம்பரை நகைங்கல்லாம் திரும்ப கிடைச்சிருக்கு. நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே? உங்க அப்பாக்கிட்டயாவது சொன்னியா? ஆமா அதெல்லாம் எடுத்தது வேற யாருமில்ல, நம்ம வீட்டுல இருக்கற ஒருத்தர் தான்னு சொன்னியாமே? அது யாரு பத்ரி?” என்றதும்,

 

“ம்மா இப்படியெல்லாம் உங்கக்கிட்ட சொன்னது யாரு?” என்று சினந்தான் அவன்.

 

“பொன்னி தான்டா. நான் ஜெயந்தி உன் மாமா ஊருக்கு போயிட்டாளேனு வருத்தப்பட்டுட்டு இருந்தப்ப, அவ தான் வந்து சொன்னா. யாழினி தன்கிட்ட இது மாதிரி சொன்னதாகவும், அப்ப தான் ஜெயந்தி பெட்டியை எடுத்துட்டு கிளம்பினதாவும் சொன்னா. ஆமா ஜெயந்தி தான் நகைங்களை எடுத்து வச்சிருந்தாளாடா?” என்று கேட்டதும், பத்ரிக்கு தலை சுற்றியது. 

 

ஏற்கனவே தானொரு குழப்பத்தில் வந்து கொண்டிருந்தால் யாழினி வேறு இங்கு பெரிய குழப்பம் ஒன்றை செய்து வைத்திருக்கிறாளே என்று தலையைப் பிடித்தான்.

 

உடனே மனம் தாளவில்லை தாய்க்கு. 

 

“தலை வலிக்குதா பத்ரி? நான் போய் உனக்கு இஞ்சி தட்டி டீ போட்டு எடுத்துட்டு வரவா? நீ ரூம்ல போய் ரெஸ்ட் எடு” என்று ஓடினார்.

 

உடனே அவரிடமிருந்து தப்பித்தவன் போல் தனதறைக்குச் சென்றான் பத்ரி.

 

அங்கு தலைவாரிக் கொண்டிருந்தவளை நெருங்கி, “யாழினி காலைல நீ பொன்னியக்காக்கிட்ட என்ன சொன்ன? பரம்பரை நகைங்கல்லாம் கிடைச்சிருச்சி சொன்னியா? ஏன் அப்படி சொன்ன? இல்ல நீதான் அதெல்லாம் எடுத்து வச்சிருந்து ஜெயந்தி அக்காவை பழிவாங்க இப்படி பொய் சொன்னியா?” என்று ஆத்திரமாகக் கத்தியதும்,

 

அசராமல் அவனை நெருங்கி அவனின் கழுத்தில் தன் கைகளை மாலையாகக் கோர்த்தவள், “உஷ்!” என்றாள் கண்களை பெரிதாக்கி.

 

பின், “அது வந்து நீங்க கோபப்படக்கூடாது. உடனே போய் உங்க அப்பாக்கிட்ட சொல்லக்கூடாது. உங்கக்கிட்ட நான் ஒரு உண்மையை மறைச்சிட்டேன்.” என்று சொன்னதோடு காணாமல் போன பரம்பரை நகைகளையும் அவனிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.

 

அவன், “ஓ! அப்ப இதை நீ தான் எடுத்திருக்க இல்ல? என்கிட்ட இல்லவே இல்லனு சாதிச்சிட்ட?” என்று வெறுப்பாய் கேட்க, 

 

“நான் எடுத்திருப்பேனு நினைக்கிறீங்களா?” என்றவளின் பளிங்கு முகம் அவனின் இதயத்தை உலுக்கிப் போட்டது.

 

மீண்டும் நிதானமாகி அவள் மேல் முழு நம்பிக்கை கொண்டவனாக, “சரி, யார் எடுத்தது சொல்லு?” என்று கேட்டதும், புன்னகை முகமானாள் யாழினி.

 

அந்த மகிழ்ச்சியுடனே எக்கி அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள்.

 

முகத்தை பின்னால் நகர்த்தியவனோ, “மூடை மாத்தாதடி. இதை யார் எடுத்து வச்சிருந்தா, உனக்கெப்படி கிடைச்சதுனு சொல்லு? பொன்னி அக்காக்கிட்ட வேற இந்த வீட்டுல உள்ள ஒருத்தர் தான் எடுத்து வச்சிருந்திருக்காங்கனு பீடிகை போட்டிருக்க” என்றதும்,

 

“அது வந்து நான் சொல்வேன்‌. பட் உடனே நீங்க தாம்தூம்னு குதிக்கக்கூடாது” என்று நிபந்தனை விதித்தாள்.

 

“மறைக்க மறைக்க தான் டென்சனாகுது. ப்ளீஸ் யாருனு‌ சொல்லு?” என்று அவசரப்பட்டான்.

 

“அது‌ வந்து நம்ம காதம்பரி தாங்க. அவ தான்‌ எடுத்துருக்கா.” என்று ஆரம்பித்து எதற்கு எடுத்தாள், அதை தான் எப்படி கண்டுகொண்டாள் என்று தர்மதுரை விசயத்தையும் சேர்த்து அனைத்தையும் தன் கணவனிடம் ஒப்பித்தாள்.

 

உடனே‌ அவன்‌, “இந்தக் காது கழுதைக்கு எவ்வளவு தைரியம்? என்னவொரு காரியம் பண்ணிட்டா?” என்று விஸ்வரூபம் எடுக்க, 

 

“பார்த்தீங்களா? பார்த்தீங்களா? கோபப்படுறீங்க? அப்ப நீங்க மாறினதா சொன்னதெல்லாம் பொய் தானா? இதான் நான் சொல்லத் தயங்கினேன். ஏற்கனவே செஞ்ச தப்பை இப்பவும் செய்யாதீங்க.” என்று சொன்னதும், 

 

“நீ என்னை புரிஞ்சு வச்சிருக்கது இவ்வளவு தானா?” என்று தன் பங்கிற்கு கேட்டான் பத்ரி. 

 

“அப்ப நீங்க எதுக்கு கோபப்பட்டீங்க?”

 

“அது வந்து நகையை திருடினதுக்கு கோபப்பட்டேன்.” 

 

“அது அவளுக்கும் சொந்தம் தானேங்க?”

 

“ம், சொந்தம் தான்‌. ஆனா திருடுறது தப்பான செயல் தானே மேடம்?” என்றதும், தலை குனிந்தாள் யாழினி. 

 

ஆனாலும், அவனிடம் தோற்க அவள் மனம் சம்மதிக்கவில்லை. 

 

“நான் திருடினதால தானே என்னை சுத்தி சுத்தி வந்தீங்க?” என்று கண்ணடித்தாள்.

 

“இந்த நிலைமைல மூடை ஏத்தாதடி. அப்பறம் உனக்கு தான் சிக்கல்.” என்று அவளின் சிவந்த இதழை வருடியவன், தனது இன்னொரு குழப்பம் தீர்ந்த மகிழ்ச்சியில் தான் கொண்டு வந்த இனிப்பை அவளுக்கு ஊட்டிவிட்டான்.

 

யாழினியோ, “உங்க அப்பா பத்தி யோசிச்சீங்களா? அவரை எப்படி சமாளிக்கப்போறீங்க?‌ அதை யோசிக்காம நம்ம காதுவுக்கு பொய்யான நம்பிக்கை கொடுக்கறது வேஸ்ட் தானே?” என்றதும்‌, 

 

“சரி தான் யாழினி. இவ்வளவு பேசுற நீ அதையும் யோசிச்சு வச்சிருப்பியே. என்னன்னு சொல்லு?” என்றதும், 

 

வாய்விட்டு சிரித்தவள்,‌ “அதுவந்து உங்க அப்பாவுக்கு அவரோட பழைய காதலை ஞாபகப்படுத்தனுங்க. அப்படி பண்ணினா அவர் நிச்சயம் இனி எந்தக் காதல் கல்யாணத்துக்கும் நோ சொல்ல மாட்டார்.” என்றதும், 

 

“எப்படி?” என்றான்‌ அவன்.

 

“அதான்‌ தர்மதுரை இருக்காருல்ல? அவரோட அம்மாவை உங்க அப்பா முன்னாடி நிறுத்தனும்.” 

 

“அப்படி நிறுத்தினா?”

 

“அவங்க பழைய காதல் மலரும். காதுவுக்கும் துரைக்கும் கல்யாணம் நடக்கும்.”

 

“ஆனா அது இப்ப வேணாம் தெய்வானை. நான் தேர்தல்ல ஜெயிச்சிட்டதா எலெக்சன் கமிஷனர் அறிவிச்ச பின்னாடி பண்ணலாம். ஏன்னா அப்ப தான் அப்பா ரொம்ப சந்தோசமா இருப்பாரு.” என்றதும், அவனின் புத்தி சாதூர்யத்தை மெச்சுவது போல் பார்த்தாள் யாழினி.

 

அதன் பின், ஒரு வாரம் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தான் பத்ரி. தான் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டாலும் தனது கட்சியை சேர்ந்த அண்டை தொகுதி வேட்பாளர்களுக்காக ஓடியோடி உழைத்தான். 

 

முதலமைச்சர் கூட ஒருமுறை பிரச்சாரம் செய்ய வந்தபோது அவனை கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டிவிட்டு போனார். அதன் பின் ஒருவாரம் கழித்து மற்ற தொகுதிகளில் எல்லாம் தேர்தல் நடக்க, பத்ரியின் குறிஞ்சிகுளம் தொகுதியில் மட்டும் அவன் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டது. 

 

அந்த சுப நிகழ்வை தன் அடியாட்கள் முதற்கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார் ரத்னவேல் பாண்டியன்.

 

அதற்கு மறுநாளே அவர்களின் மவுசு கூடி பக்கத்து ஊரில் பள்ளிக்கூடம் ஒன்றை திறப்பதற்காக பத்ரியும், ரத்னவேல் பாண்டியனும் அழைக்கப்பட்டிருந்தார்கள். 

 

ரத்னவேல் பாண்டியன் தலைமையாசிரியரின் வேண்டுகோளால் அவர் அறைக்குள் சென்றபோது யாரையும் அவரை பின் தொடராமல் பார்த்துக்கொண்டான் பத்ரி.

 

ரத்னவேல் உள்ளே சென்றவர் இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது பழைய‌ காதலியை சந்தித்தார்.

 

அவரைக் கண்டதும், “லக்ஷ்மி நீ எங்கம்மா இங்க?” என்று அதிர்ச்சியாகக் கேட்டார்.

 

தலையில் நரைமுடிகள் அருவிகளாய் ஓட நின்றிருந்தவர், “பரவாயில்லையே என் பேர் கூட ஞாபகம் இருக்கே உங்களுக்கு. எங்க என்னை மறந்துட்டீங்களோனு நினைச்சேன்” என்று கண்ணீர் வடித்ததும்,

 

“உன்னை நான் எப்படிமா மறப்பேன்?” என்றவர், “நம்ம துரைக்கு இன்னும் என் மேல கோபம் போகலை இல்ல? அவனுக்கு என்ன வேணுமோ செய்ய நானில்லையா? ஏன் அவன் எதையுமே ஏத்துக்க மாட்டேங்கிறான்? என்னை அவமானப்படுத்த பத்ரிக்கு எதிரா தேர்தல்ல நின்னான். அப்பறம் அவனாவே போட்டியில இருந்து விலகினான். அவனை புரிஞ்சிக்கவே முடியல என்னால.” என்று எரிச்சலாய் சொன்னார்.

 

“அவன் உங்க பணம் காசு எதையும் கேட்கலைங்க. இனிஷியலைத் தான் கேட்கறான்.” என்றதும்,

 

“அவனை மாதிரியே புரியாம பேசாத லக்ஷ்மி. விதி‌ நம்மளை நீயும் நானும் காதல் ஜோடிகளா வானத்துல பறந்தப்பவே பிரிச்சிருச்சி. இனி நாம ஒன்னு சேரவும் வாய்ப்பில்ல, துரை என் மகனாகவும் வாய்ப்பில்ல. அதை‌ இத்தோட விட்டிரு. என்னால சில விசயங்கள்ல இருந்து வெளிய வர முடியாது. ஆனா, நம்ம துரைக்கு தூரத்துல இருந்தே எல்லா நல்ல காரியமும் என்னால நடத்திப் பார்க்க முடியும்.”

 

“ஏன் கிட்டத்துல இருந்தே நீங்க நடத்திப் பார்க்கலாமே?” 

 

“விளையாடுறியா? நம்ம உறவை உறுதிப்படுத்தாம இது எதுவும் சாத்தியமே கிடையாது லக்ஷ்மி” என்றதும், 

 

“சாத்தியம் தாங்க. என் கழுத்துல நீங்க தாலி கட்டலைனாலும் உரிமையா நம்ம துரைக்கு பக்கத்துல நின்னு கல்யாணம் நடத்தி வைக்கலாம். உங்க பேத்தி காதம்பரியை அவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு.” என்றதும், பேச்சு மூச்சற்றுப்போனார் ரத்னவேல் பாண்டியன்.

 

அதிர்ச்சியில் வார்த்தைகள் அனைத்தும் குளிர்சாதனப்பெட்டி நீராய் உறைந்து போயின அவருக்கு.

 

“நம்ம சந்தோசத்தை தான் என் அப்பா அம்மாவும், உங்க அப்பா அம்மாவும் கெடுத்தாங்க. இப்ப அதே மாதிரி நம்ம புள்ளை சந்தோசத்தை நாம கெடுக்க வேணாங்க. மனசார விரும்பற அவங்க ரெண்டுபேரையும் சேர்த்து வைப்போம். நம்ம துரைக்கு இப்பவாவது ஒரு நல்ல அப்பாவா இருந்து அவன் ஆசையை நிறைவேத்தி வைங்க. இல்லைனா அவன் நாம நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு கெட்டவனா மாறிடுவான்.” என்று கைகளைக் கூப்பி கெஞ்சினார்.

 

ரத்னவேல் பாண்டியன் இன்னும் அசையாமல் நின்றிருந்தார்.

 

“உங்களுக்கு தெரியுமா? அன்னைக்கு‌ மணப்பந்தலுக்கு நெருப்பு வச்சது துரை தான். என் அம்மா‌ கழுத்துல தாலி கட்டாம ஊர் பொண்ணுங்க கழுத்துல தாலியேறுறதுக்கு மட்டும் தாலி எடுத்து கொடுக்கப்போறாரா அந்த பெரிய மனுசருனு கோபம், வீம்பு, அகங்காரம். காதம்பரி அவனுக்கு ஒரு படி மேலப்போய் அவனை கட்டிக்கப்போறோம்னு நம்பி உங்க பரம்பரை நகைங்களை திருடியிருக்கா.” என்றதும், ரத்தப்பசையற்றுப் போனது ரத்னவேல் பாண்டியனின் முகம்.

 

“அப்பறம் அந்தப்பொண்ணு காதம்பரி மூனு மாசம் முழுகாம இருக்கா. அது என்னையும் துரையையும் தவிர வேற யாருக்கும் தெரியாது. அதை கலைக்க முடியாத நிலைக்கு கொண்டு வந்து என்னை மாதிரியே அவளுக்கும் தாலி யோகம் இல்லாம செஞ்சு ஊரு முன்னாடி உங்க குடும்பத்தை தலை குனிய வைக்கிறது தான்‌ அவனோட திட்டம். ஆனா ஒரு பொண்ணா இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட சம்மதம் இல்லாத காரியம். இப்ப என்னவோ காதம்பரிக்காக கொஞ்சம் இறங்கி வந்து வேட்புமனுவை வாபஸ் வாங்கியிருக்கான். ஆனா அவ மட்டும் அவனுக்கு கிடைக்கல? அவன் என்ன‌ செய்வானோ தெரியாது. அவனை மனுசனா மாத்தின காதல் மிருகமாவும் மாத்திரும். நீங்க‌ தாங்க அவனை மிருகமா மாறாம காப்பாத்தனும்.” என்று காலைப் பிடித்து கெஞ்சியதும் ரத்னவேல் பாண்டியனின் கல் மனதும் ஒரு நொடி கரைந்தது. 

 

அவரின் தலையில் கை வைத்து அழுத்தினார். 

 

“நீ கவலைப்படாம வீட்டுக்குப் போ லக்ஷ்மி. சீக்கிரமே நான் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்.” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

 

தொடரும்…

 

இன்னும் 2 அத்தியாயங்களில் கதை நிறைவு பெற்றுவிடும் தங்கோம்ஸ். 

ஹார்ட்டீன் அழுத்தவும், லாகின் பண்ணி கமெண்ட் பண்ணவும் மறந்துடாதீங்க தங்கோம்ஸ்:) அது தான் என் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்;)

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,866 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page