அந்திச் சூரியனின் கதிர்கள் கண்ணாடிகளில் தெறித்து ஊடுருவி, அழகிய பொன் மஞ்சள் நிறத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தன.
அந்த மஞ்சள் கதிர்களைப் பார்த்தபடியே சோம்பல் முறித்த பிரேமகிருஷ்ணா, மெல்ல எழுந்து தன்னுடைய அறையினுள் செல்ல வேண்டி, அறைக்கதவைத் திறந்தான்.
அவன் கதவைத் திறந்ததும் பொன் மஞ்சள் நிறக் கதிர்கள், அறை வாசல் வழியே உள்ளே பட்டுத் தெறிக்க, உள்ளே தெரிந்த காட்சியில் ஒரு கணம் திகைத்துப் போய் அப்படியே நின்று விட்டான் அவன்.
பொன் மஞ்சள் நிறக் கதிர்கள் முகத்தில் விழ, சாய்ந்து அமர்ந்த வாக்கிலேயே தூங்கிக் கொண்டிருந்தாள் விஷ்ணுவர்தனி.
வர்தனி மாநிறம் என்பதால், மஞ்சள் பூசிக் குளித்தது போல அந்திச் சூரியனின் மஞ்சள் நிறம் அவள் முகத்திற்கு இன்னும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது.
அறையின் வாசலில் சாய்ந்து நின்றபடியே, இமைக்காமல் அவள் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் பிரேமகிருஷ்ணா.
ஏனோ தெரியவில்லை அயர்ந்து தூங்குபவளை எழுப்ப மனமில்லை அவனுக்கு, கைக்கடிகாரத்தைத் திருப்பி நேரத்தைப் பார்த்தவனுக்கு அது ஐந்து முப்பது என்று காட்டியது.
வழமையாகப் பல் சிகிச்சை பெறுவோரின் வருகை அதிகமாக இல்லாது போனால், அவன் ஐந்து முப்பதுக்கு எல்லாம் வெளியே போய் விடுவான்.
ஆனால் இன்று அப்படிப் போக நினைக்காமல், மெல்லப் போய் வர்தனிக்கு நேர் எதிரே கிடந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்து விட்டான் அவன்.
அவளை விட்டுப் பார்வையை அப்படி இப்படி அவனால் அசைக்க முடியவில்லை என்பது தான் உண்மை.
தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு பெண் வர்க்கத்தையே அடியேடு வெறுத்தவன், இதோ இப்போது ஒருத்தியை இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால், நிச்சயமாக அந்தப் பெண் ஏதோ ஒரு வகையில் அவனுடைய இதயத்தைத் தொட்டிருக்க வேண்டும் என்று தானே அர்த்தம்.
நேரம் அது பாட்டில் ஓடிக் கொண்டிருக்க, மெல்ல அசைந்து கொடுத்த வர்தனி, விழி மலர்களை மலர்த்திச் சுற்றுப் புறத்தைப் பார்த்தாள்.
தான் எங்கே இருக்கிறேன் என்பதை உணரவே அவளுக்குச் சில நொடிகள் பிடித்தன.
தன் முன்னால் இருந்தவனைப் பார்த்ததும் தான், தான் எதற்கு வந்தோம் எங்கே இருக்கிறோம் என்பதே அவளுக்குப் புரிந்தது.
‘என்ர முருகா.. என்ன இது லூசு மாதிரி இங்கயே நித்திரை ஆயிட்டனோ.. உந்த மனுஷன் என்னைப் பத்தி என்ன நினைச்சிருக்கும்.. சரியான தூங்கு மூஞ்சி போற போற இடத்துல விழுந்து படுத்திடும் எண்டு நினைச்சிருப்பாரோ..’
என நினைத்துக் கொண்டே வேகமாக எழுந்தவளுக்குக் கால் பிரண்டு போகவே, முன் பக்கமாக விழப் போனவளை, ஒரு எட்டில் தாங்கிப் பிடித்திருந்தான் பிரேமகிருஷ்ணா.
இன்று முழுக்கத் தான் கால் தடுக்கி விழுவதும், இவன் தன்னைப் பிடிப்பதுமாக இருக்கிறதே, தன்னைப் பற்றி என்ன நினைப்பான் இவன், என்று நினைத்தாளோ தெரியவில்லை, சட்டென்று சுதாரித்துக் கொண்டு விலகியும் விட்டாள்.
‘ஐயையோ நான் உடனயே போய் இருக்க வேணும்.. இப்புடித் தூங்கி வழிஞ்சதும் இல்லாமல் இப்ப மேல போய் விழுந்து கிடக்கிறனே..’
என்ற எண்ணத்தோடு
“சொறி.. நான் வேணுமெண்டு வந்து விழேல்ல..”
என்றவளது குரல் அவளுக்கே கேட்கவில்லை என்பது தான் உண்மை.
தன்னிடம் இருந்து விலகியவளையே அழுத்தமாகப் பார்த்தபடி
“நான் ஒண்டுமே சொல்லேலையே..”
என்றவனை அவளால் நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை.
இங்கே இருந்து போனாலே போதும் என்பது போல மட்டும் தான் அப்போது அவளுக்கு இருந்தது.
அதோடு அங்கேயே ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகத் தூங்கி விட்டேனே என்பது அவளுக்கு உள்ளூர ஒரு மாதிரி ஆகி விட்டிருந்தது.
மீண்டும் அவனுடைய முகத்தைப் பாராமலேயே
“திரும்பவும் சொறி.. கொஞ்சம் அசதியில அப்புடியே தூங்கீட்டன்..”
என்று வர்தனி சொல்ல
“நான் தான் ஒண்டுமே கேக்கவே இல்லையே..”
என்றவன் மேசையில் கிடந்த கார் சாவியை எடுத்தபடி அவளைத் தான் பார்த்தான்.
அவனுடைய பார்வையை எதிர் கொள்ளும் திராணி இல்லாதவளாகி, வேகமாக வெளியே வந்து விட்டவளுக்கு, அப்போது தான் ஒரு விசயம் பொறி தட்டியது.
தான் அவனுக்கு நன்றி சொல்லவில்லை என்பது.
அது மனதில் தோன்றியவுடனேயே சுற்றுப்புறத்தை மறந்து வேகமாகத் திரும்பியவளை, அதி வேகமாக வந்த வாகனம் ஒன்று இடிப்பதற்குள் சட்டென்று சுதாரித்துக் கொண்டவள், தள்ளிப் போய் மீண்டும் கீழே விழுந்து போனாள்.
அந்த வாகனம் வந்த வேகத்துக்கு மோதியிருந்தால், அந்த நேரமே வர்தனியின் பூலோகப் பயணம் முடிந்து கைலாச பயணம் ஆரம்பித்திருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் அவளுடைய பூலோக வாழ்க்கை இன்னும் நீண்டு கிடந்ததாலோ, அவள் மீது அக்கறை கொண்டவர்களின் ஆசிர்வாதமோ ஏதோ ஒன்று அவளை அந்த நொடி அந்தப் பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றி விட்டிருந்தது.
அதே நேரத்தில் வர வேண்டிக் காரில் ஏறி அமர்ந்த பிரேமகிருஷ்ணாவின் பார்வை முழுவதும் அவள் மேல் தான் இருந்தது என்பதால், நடந்த அத்தனையையும் அவனது விழிகள் குறிப்பெடுத்து விட்டன.
அதற்குள் கீழே விழுந்தவளை நோக்கி அவனும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து விட்டான்.
வேகமாக வந்த வாகனம் கடந்து போனதும், அந்தப் பதட்டத்தில் தள்ளிப் போய் விழுந்த வர்தனிக்கு எழுந்து கொள்ள முடியாமல் கால்கள் லேசாக நடுங்கத் தொடங்கி விட்டிருந்தன.
ஓடி வந்தவன் அவளது கைப் பிடித்துத் தூக்க முயலவும், அவளுடைய கால்கள் நிலை கொள்ளாமல் நடுங்குவதைப் பார்த்து விட்டான்.
அதற்கு மேல் கொஞ்சம் கூட யோசியாமல், அவளை அவன் அப்படியே கைகளில் தூக்கி விட்டிருக்க, பதட்டம் கொஞ்சம் கூடக் குறையாமல் இருந்தவளுக்கு எதுவுமே புரியவில்லை.
காரில் அவளை அமர வைத்தவன், அவளது கையையும் காலையும் ஆராய, நிறைய இடங்களில் சிராய்ப்புக் காயங்கள் என்பது புரிந்து போனது.
வர்தனிக்கும் மெல்ல மெல்லக் காயங்களின் வலி அதிகரிக்க, அவளுடைய கண்களும் கலங்கிப் போய் விட்டது.
உடனே காரை வைத்தியசாலைக்கு விட்டவன், அவளை உள்ளே அழைத்துச் சென்று, காயங்களுக்கு மருந்து கட்டும் வரை கூடவே இருந்தான்.
“இப்ப எப்புடி இருக்குது..”
“ம்ம்.. அப்புடியே தான் இருக்குது.. முடியல..”
“அப்போ இங்கேயே டொக்டேர்ஸ்ட கண்காணிப்பில இருப்பமா..”
“ஐயோ வேண்டாம் வேண்டாம்..”
“ஏன்..”
“எனக்கு வீட்ட போக வேணும்..”
“இப்ப தெரியாது.. நைட் தான் வேதனை அதிகமா இருக்கும்..”
“வலிக்குக் குழுச தந்திருக்கினம்..”
“சொன்னாக் கேட்டால் தானே..”
“நான் வீட்ட போய்க் கொஞ்ச நேரம் படுத்தாலே சரி ஆகீடுவன்..”
என்று வர்தனி பாவமாகச் சொல்லவும், அவளுடைய முகத்தைப் பார்த்தவனும் என்ன நினைத்தானோ தெரியவில்லை அதற்கு பிறகு வாய் திறக்கவில்லை.
பின்னர் ஆட்டோ பிடிப்பதற்காக வெளியே பார்த்தவளை, அவன் பார்த்த பார்வையில் சட்டென்று அவனுடைய காரிலேயே ஏறி அமர்ந்து விட்டிருந்தாள்.
இடையிடையே அவளைப் பார்ப்பதும் பின்னர் சாலையைப் பார்ப்பதுமாகக் காரைச் செலுத்தியவன், ஒரு நல்ல உணவகத்தில் காரை நிறுத்தி, இரண்டு உணவுப் பொதிகளை வாங்கி வந்தான்.
வர்தனியை அவளுடைய வீட்டில் இறக்கி விட்டு, அவளிடம் வாங்கி வந்த உணவுப் பொட்டலங்களைக் கொடுக்க, அவளோ கேள்வியாகப் பார்த்தாள்.
“உடம்புக்கு முடியாம இருக்கிற நேரம் சமைக்க முடியாதே.. அது தான் கையோட வாங்கி வந்தன்..”
“ஓ.. நன்றி..”
“ம்ம்.. எதுக்கு சாப்பாடு வாங்கிக் குடுத்ததுக்கா..”
“இல்ல.. எல்லாத்துக்குமே ரொம்ப நன்றி..”
“பரவால்ல இருக்கட்டும்.. நேரமாச் சாப்பிட்டிட்டு டப்லட்ட போடுறது நல்லம்..”
“ம்ம்.. அது வந்து..”
“என்ன ஏதாவது சொல்லணுமோ..”
“ஓம்..”
“என்ன..”
“உள்ள வந்திட்டுப் போங்கோவன்..”
“இப்போவா.. நேரம் எட்டு ஆயிட்டுதே..”
“பிளீஸ்..”
“ஓகே ஓகே.. வாறன்..”
என்றவன் உடனேயே காரை விட்டு இறங்கி விட்டுருந்தான்.
அவன் உள்ளே வரச் சம்மதித்துக் கீழே இறங்கியதுமே வர்தனியின் முகம் பிரகாசமாகி விட்டிருந்தது.
“இந்த நேரம் வந்தா.. தாத்தா என்ன நினைப்பார் எண்டு தான் நான் வர யோசிச்சன்..”
“ம்ம் எனக்கும் விளங்கீட்டுது.. ஆனா அவரு ஒண்டுமே நினைக்க மாட்டார்.. சந்தோசம் தான் படுவார்..”
“ம்ம்.. வீட்டுல ரெண்டு பேரும் மட்டும் தானா..”
“இல்லையே..”
“இல்லையா ரெண்டு பேரு எண்டு தானே ரகு சொன்னான்..”
“அது மற்றவைக்கு..”
“புரியல..”
“எங்கட வீட்டுல மூண்டு பேரு இருக்கிறம்.. ஒண்டு நான் ரெண்டாவது தாத்தா மூண்டாவது..”
என வர்தனி சொல்லிக் கொண்டே வெளிக் கதவைத் திறக்கவும், தன் எஜமானியின் வருகையை உணர்ந்து துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடி வந்தது ஒரு நாய்க்குட்டி.
“மூண்டாவது யாரு..”
“அந்தா ஓடி வாறானே அவன் தான் வீரன்..”
“நாயா..”
“அச்சோ அவன்ட பேரு வீரன்..”
“ஓ..”
“எங்கட வீட்டுச் செல்லக் குட்டி..”
“ஓ..”
“இருங்கோ புது ஆளைப் பாத்ததும் கத்திக் கலாட்டா செஞ்சிடுவான்.. நான் பிடிக்கிறன்..”
“கடிக்காதோ..”
“சேச்சே.. நல்ல பிள்ளை கடிக்க மாட்டான்..”
“பிள்ளையா..”
என்ற பிரேமகிருஷ்ணா, நாய்க்குட்டியிடம் செல்லங் கொஞ்சிய வர்தனியை வேற்றுக்கிரகவாசியைப் பார்ப்பது போலப் பார்த்து வைத்தான்.
பிரேமகிருஷ்ணாவுக்கு இந்த நாய் பூனை என்றால் பிடிக்காது, அதிலும் அவற்றுடன் செல்லங் கொஞ்சுவது என்றால் சுத்தமாகப் பிடிக்காது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் இங்கே இவளோ குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது போல, செல்லக் கதை பேசுவது போல நாய்க்குட்டியோடு பேசிக் கொண்டே நடக்க, அவனுக்கு ஒரு பக்கம் அது பிடிக்கவில்லை என்றாலும் விசித்திரமாகத் தான் இருந்தது.
அதற்குள் அந்தக் குட்டி நாயிடம் அவள் என்ன சொன்னாளோ தெரியவில்லை, அது அவனைக் குறுகுறுவெனப் பார்த்து வைத்தது.
“இதுல இருங்கோ.. நான் போய்த் தாத்தாவைக் கூட்டிக் கொண்டு வாறன்..”
என்று கொண்டே நாய்க்குட்டியை அங்கேயே விட்டு, உள்ளே செல்லப் போனாள் அவள்.
“வர்தனீ..”
எனக் கிட்டத்தட்ட சத்தமாக அவளை அழைத்து விட்டிருந்தான் அவன்.
அப்படி அவன் அழைத்ததும் என்னவோ ஏதோ என அவனுக்கு அருகில் ஓடி வந்தவளுக்கு அவன் சொன்ன விசியமும் சொன்ன விதமும் சிரிப்பை மூட்டி விட்டிருந்தது.
“என்னங்கோ.. ஏதாவது வேணுமோ..”
“இல்ல.. வீரனையும் கூட்டிக் கொண்டு போகலாமே..”
“எங்க..”
“தாத்தாவைக் கூட்டிக் கொண்டு வரத் தான்..”
“ஓ ஆனா ஏன் உங்களுக்குப் பயமாக் கிடக்குதோ..”
“பயம் எல்லாம் இல்ல.. எனக்கு நாய் எண்டால் பிடிக்காது..”
“ஓ..”
“ஒரு மாதிரி அலர்ஜி ஆகீடும்..”
“ஓ.. ஆனா எங்கட வீரன் சுத்தமான பையன் தான்.. இவனை நான் தினமுமே குளிக்க வைச்சிருவன்..”
“ஓ.. நல்லது தான்.. ஆனா தூக்கீட்டே போயிடும்மா..”
என்றவனைப் பார்த்துப் பக்கென்று சிரித்து விட்டாள் வர்தனி.
