காதல் இதுதானா ? – காதல் 28

காதலாகும் 28:

விஸ்வேஷ்வரனின் போலீஸ் ஜீப் அந்த சிக்னலில் நின்றிருந்தது.சாலையைக் கடந்து பக்கவாட்டில் தெரிந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு இளம்பெண்ணும் ஆணும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கொண்டிருந்தனர். அந்தப் பெண் எதற்கோ  மறுக்க..அந்த ஆண் விடாமல் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

ஏனோ அவனைப் பார்ப்பதற்கே விஷ்வாவிற்கு வித்தியாசமாக இருந்தது.காதில் கடுக்கன்.. பரட்டைத் தலை. பேஷன் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ்.அந்தப் பெண்ணிற்கும் அவனுக்கு சம்பந்தம் இல்லாதது போலொரு தோற்றம்.

‘இவங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸா…?’, மனதில் ஏதோ சந்தேகம் முளைவிட விஷ்வா அவர்களையே கவனித்திருந்தான்.

அந்த ஆண் விடாமல் அந்தப் பெண்ணிடம் எதையோ கூறி அவளை சம்மதிக்க வைக்க முயன்று கொண்டிருந்தான்.

விஷ்வாவின் மனதில் சந்தேகம் வேரூன்ற அவர்களைத் தொடர முடிவு செய்துவிட்டான்.அவனது ஜீப்பில் எப்பொழுதுமே காக்கி உடை இல்லாமல் வேறொரு டீ ஷர்ட் இருக்கும்.அமர்ந்த வாக்கிலே சட்டையை கழட்டி டீ ஷர்ட்டை அணிந்தவன், “துரை..நீங்க ஸ்டேஷனுக்கு போங்க…!”,அவரிடம் உரைத்துவிட்டு கீழே இறங்கி விட்டான்.

அவனது குணத்தைப் பற்றி அறிந்தவராதலால் அவரும் அமைதியாய் ஜீப்பை கிளப்பிச் சென்றார்.

அந்த ஆண் பேசிக் கொண்டே அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறினான்.

கீழே இறங்கியவன் அங்கு பைக்கில் சாய்ந்து நின்ற ஒரு இளைஞனிடம் சென்று,”நாளைக்கு நைட் ஸ்டேஷனுக்கு வந்து உன் பைக்கை வாங்கிக்கோ…!”, விஸ்வேஷ்வரனைப் பற்றி அந்த இளைஞனுக்கும் தெரிந்திருந்தது.ஏ.சி.பி வந்து தன்னிடம் பைக் கேட்கவும் அவன் அமைதியாய் ஒதுங்கிக் கொண்டான்.

பைக்கை கிளப்பியவன் அந்த ஆட்டோவைப் பின் தொடர்ந்தான்.கடற்கரைக்குச் சென்று நின்றது அந்த ஆட்டோ.

நட்ட நடு மதியத்தில் உச்சி வெயில் பிளக்கும் சமயத்தில் யாரும் கடற்கரைக்கு வர மாட்டார்கள். சந்தேகத்துடன் பைக்கை நிறுத்திவிட்டு இடைவெளி விட்டு அவர்களைத் தொடர்ந்தான்.

இவர்களுக்காக காத்திருப்பது போல் ஒரு படகு நின்று எண்டிருந்தது.அந்தப் பெண் அப்பொழுதும் தயங்க அவன் ஏதேதோ பேசி

அவளை படகில் ஏற்றப் போன சமயம்.. விஸ்வேஷ்வரன் வந்து தடுத்து விட்டான்.

“யாருடா நீ…?”,எடுத்த எடுப்பிலேயே அவன் அந்த ஆணின் சட்டையை பிடித்து விட,

முகத்தைப் பார்த்த உடனேயே அவனுக்குத் தெரிந்து விட்டது விஸ்வேஷ்வரன் என்று.

“சார்..நாங்க லவ்வர்ஸ்…!”,அவசரமாக அவன் கூற விஷ்வா திரும்பி அந்தப் பெண்ணை பார்த்தான்.

“ஆமா சார்…!”,அந்தப் பெண் தயங்கியபடி தலையாட்டினாள்.

“லவ்வர்ஸா இருந்துட்டுப் போங்க..இந்த நட்ட நடு மத்தியானத்துல எதுக்கு போட்ல போகணும்…?”,

“சும்மா சுத்திப் பார்க்கலாமேன்னு தான் சார்…”,அவன் மென்று விழுங்கினான்.

“நீ சுத்திப் பார்க்கிற லட்சணம் எனக்குத் தெரியாதா…?”,அவன் கன்னத்திலேயே ஓங்கி ஒரு அறை விட்டவன். படகைப் பிடித்துக் கொண்டிருந்தவனிடம் பார்வையை செலுத்த,அவன் அரண்டு விட்டான்.

“சார்…எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை சார்… கடலுக்குள்ள போகணும்ன்னு இவன் கூப்பிட்டான்..அதனாலதான் வந்தேன்…”அவசர அவசரமா அந்தப் படகை கரையேற்றி கட்டினான் அந்தப் படகுக்காரன்.

“ஏம்மா..கொஞ்சமாவது உங்களுக்கெல்லாம் அறிவு இருக்குதா…?காதலிக்கலாம் தப்பில்லை..ஆனால்.. கல்யாணத்துக்கு முன்னாடி ஊர் சுத்தும் போது கொஞ்சம் கவனமா இருக்கலாமே…?இவன் எதுக்கு கடலுக்குள்ள கூட்டிட்டுப் போறான்னு தெளிவா நான் சொல்லணுமா…?” அமைதியாக என்றாலும் கண்டிப்புடன் வந்த அவனது வார்த்தைகளில் அந்தப் பெண் தலைகுனிந்தாள்.

“காதலிக்கிறானாம்.. போடா இங்கிருந்து…”அவனுக்கு மீண்டும் ஒரு உதையை கொடுத்து அனுப்பி வைத்தவன் ஒரு ஆட்டோவைப் பிடித்து அந்தப் பெண்ணை ஏற்றி வைத்தான்.

“வீட்டுக்குப் போம்மா…அவனைப் பார்த்தால் நல்லவன் மாதிரி எனக்குத் தோணல…”அறிவுரையோடுதான் அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தான்.

ஏதோ பைல் எடுப்பதற்காக வீட்டுக்கு வந்த வேத வர்ஷன் தனது அலுவலக அறையில் அதை தேடிக் கொண்டிருந்தான்.

மதிய நேரத்தில் பொதுவாக அவன் வீட்டுக்கு வர மாட்டான். அன்று வரவும் காபி போட்டு எடுத்துக் கொண்டு அலுவலக அறைக்கு விரைந்தாள் கண்மணி.

பொதுவாக அவள் அவனது அலுவலக அறைக்குள் செல்ல மாட்டாள்.அது அவனுக்குப் பிடிக்காது என்று அறிந்திருந்தவள் உள்ளே செல்வதை தவிர்த்து விடுவாள்.

அன்றும் அந்த தயக்கம் தோன்ற, ‘போகலாமா.. வேண்டாமா…?’,என்று தயங்கிக் கொண்டு பாதி திறந்திருந்த கதவுக்கருகிலேயே நின்றிருந்தாள்.

சரியாக வேத வர்ஷனின் மொபைலும் அலற..அவன் அதை எடுத்து காதில் வைத்தான்.

“வாட்…?ஒரு பொண்ணு மிஸ்ஸாகிடுச்சா… இவ்வளவு அசால்ட்டா சொல்ற…? ஒரு பொண்ணு அதுவும் காலேஜ் படிக்கிற கன்னி பொண்ணோட விலை என்னன்னு தெரியுமா…? இடியட்…!”,மறுமுனையில் கூறியதை கேட்டு சரமாரியாய் திட்ட ஆரம்பித்தான்.

திரும்பிச் செல்ல நினைத்தவள் கணவனது பேச்சில் ஆணியடித்தது போல் அப்படியே நின்று விட்டாள்.

‘கடவுளே…இவர் என்ன பேசறார்…?’, மனம் பதை பதைத்தது.

அன்று இரவு பெண்களை ஏற்றிய கண்டெய்னர் ஒன்று கோவாவிற்கு செல்வதாக இருந்தது.வழக்கமாக இந்த வேலையில் ஈடுபடும் சாஹல் ஷர்மா வேத வர்ஷன் அனுப்பி வைக்கும் பத்து பெண்களை சுளையாக நூறு கோடி கொடுத்து வாங்கியிருந்தான்.அங்கிருந்து அந்தப் பெண்கள் வெவ்வேறு நாட்டிற்கு புரோக்கர் மூலம் வெவ்வேறு நபர்களுக்கு விற்கப்படுவர்.

பொதுவாக இந்த மாதிரி பெண்களை அனுப்பும் போது முரண்டு பிடிக்கும் பெண்களை மயக்க மருந்து மூலம் சுயநினைவை இழக்கச் செய்து விற்றுவிடுவர்.இன்னும் சில பெண்கள் வேத வர்ஷனால் அமர்த்தப்படும் ஆண்களால் காதல் வார்த்தைகள் கூறி நாடகமாடி அந்தப் பெண்களை மயக்கி கப்பலில் ஏற்றி விடுவார்.

மதியம் கடற்கரையில் விஸ்வேஷ்வரனால் கண்டிக்கப்பட்டு அனுப்பப்பட்ட அந்த ஆண் வேத வர்ஷனால் அமர்த்தப்பட்டவன்தான்.அந்தப் பெண்ணை காதலிப்பது போல் நாடகமாடி எப்படி எப்படியோ பேசி கடற்கரை வரைக்கும் அழைத்து வந்து விட்டான். இடையில் விஸ்வேஷ்வரன் வந்து அனைத்தையும் கெடுத்து விட்டான்.

மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ,”வாட்…? விஸ்வேஸ்வரனா…?”,வேத வர்ஷனுக்கு அதிர்ச்சி.

“நாம பண்ற பிசினெஸ் பத்தி அவனுக்கு ஏதாவது தெரிஞ்சிடுச்சா…?”,

“இல்ல சார்…!அவரு எதேச்சையாகத்தான் அந்தப் பொண்ணை கண்டிச்சு அனுப்பியிருக்கிறார்…! நம்ம பிசினெஸ் பத்தி அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை…”,மறுமுனையில் பேசிக் கொண்டிருந்தவன் கூறியது கண்மணியின் காதிலும் விழுந்தது.

“விஷ்வா.…”,பல்லைக் கடித்தவன்,”ரைட் மதன்…!எனக்கும் அந்த விஸ்வேஷ்வரனுக்கும் தீர்க்க வேண்டிய கணக்கு ஒண்ணு பாக்கி இருக்குது… இது மூலமா தீர்த்துக்க வேண்டியதுதான்…!சிங்கம் தானா வந்து வலையில விழுந்திருக்கு.. வேட்டையாடாம இருந்தால் அந்த சிங்கத்துக்குத்தான் என்ன மதிப்பு..இல்ல இந்த வேடனுக்குத்தான் என்ன மதிப்பு…!நீ நான் சொல்ற மாதிரி செய்…!அந்த ஏ.சி.பி பொண்டாட்டி வேலை முடிச்சிட்டு தனியா ஸ்கூட்டில தான் வருவாள்…!அவளைத் தூக்கிடு…!”,குரூரமாய் சிரித்தபடி கூறிய தன் கணவனை வெறித்தாள் கண்மணி.

அவள் இதயம் துடிப்பதையே நிறுத்தி விட்டது. ‘தன் கணவனா இப்படி…?’, ஒவ்வொரு அணுவிலும் வலி உயிர் போனது.

“சார்…!ஏ.சி.பி பொண்டாட்டியையா…?எதுக்கும் கொஞ்சம் யோசிக்கலாமே… நாமளே ஏன் போய் வலையில விழணும்…”, மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த மதன் என்பவன் தயங்குவது தெரிந்தது.

“டூ வாட் ஐ சே…!அவளைக் கடத்திக் கொண்டு போய் நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல வை…இருட்டினதுக்குப் பிறகு அவளை அந்தக் கண்டெய்னர்ல ஏத்திடலாம்…!”,உத்தரவிட்டு விட்டு அவன் போனை அணைத்து விட..கேட்டுக் கொண்டிருந்த அவனது மனையாளுக்கு காலடியில் பூமி நழுவியது.

சத்தமில்லாமல் திரும்பி வந்தவள் சமையலறையில் தஞ்சம் புகுந்தாள்.அவள் கண்களில் இருந்து கண்ணீர் கூட வர மறுத்தது.உச்சக்கட்ட அதிர்ச்சி தாக்கும் போது மூளையும் மனமும் செயலிழந்து விடுமாம்.அந்த நிலையில்தான் அவள் இருந்தாள்.

பெண்கள்..விலை..கண்டெய்னர்.. ஏ.சி.பி மனைவி அவன் பேசிய வார்த்தைகளே திரும்பத் திரும்ப மூளையில் ஒலிக்க..அவளுக்கு எதுவோ புரிவது போல் இருந்தது. மிக மிக மா பாதக செயலை தன் கணவன் செய்கிறான்..அவளுக்குப் புரிய ஆரம்பித்தது.ஆனால்,மனம்தான் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

எப்படி ஏற்றுக்கொள்ள முடியுமாம்…?அவளிடம் கட்டிய கணவனாய் இந்த நொடி வரை காதலை மட்டுமே அல்லவா பொழிந்து கொண்டிருக்கிறான்…அவன் அதிர்ந்து அவளை அதட்டி கூட அவள் பார்த்ததில்லை.அப்படிப்பட்ட தன் கணவனா பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறான்…?

அவளால் நம்பவே முடியவில்லை.ஆனால்,காதில் கேட்ட விஷயங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என அவளை உந்தித் தள்ளின.

பைலை எடுத்துக் கொண்டு கணவன் கிளம்பும் கார் சத்தம் கேட்க..இவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு அவசரமாக அலுவலக அறைக்கு ஓடினாள்.

மனைவி உள்ளே வரமாட்டாள் என்ற தைரியத்தில் அவன் அந்த அறையை பூட்டுவதில்லை.அன்றும் திறந்துதான் இருந்தது. உள்ளே நுழைந்தவள் அலமாரியில் இருக்கும் பைல்களை எடுத்து ஆராய..அனைத்தும் ‘வேதா பாட சாலை’ பற்றிய விபரங்கள்தான்.

சுற்றும் முற்றும் துளாவியவளின் கண்ணில் இன்னொரு பெரிய கப்போர்ட விழ.. ஒருமுறை அதன் சாவியை கணினிக்கு அடியில் இருந்து கணவன் எடுத்தது அவளுக்கு நினைவில் இருந்தது.

கணினி அடியில் இருந்து சாவியை எடுத்து அதைத் திறந்தவளுக்கு பல கோப்புகள் கிடைத்தன.

வேத வர்ஷனுக்கு ஒரு பழக்கம் உண்டு.அவன் செய்யும் செயல்கள்..நடத்தும் தொழில்கள் என அனைத்தையும் பற்றிய அறிக்கையை மிகத் தெளிவாக தயார் செய்து வைத்திருப்பான்.

பொதுவாக தவறை ஆதாரம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பார்கள்.ஆனால்,இவனுக்கு இருக்கும் பழக்கத்தின் காரணமாக தான் செய்யும் சட்டத்துக்கு புறம்பான பாதக செயலை பற்றிய விபரங்களை கூட முறையாக பதிந்து வைத்திருந்தான்.

அதைப் படித்து பார்த்தவளின் கரங்கள் நடுங்கின.அனுப்பிய பெண்களை பற்றிய விபரம்..டீலர் பற்றிய விபரங்கள்..அதன் மூலம் அடைந்த லாபம் என அனைத்தையும் பட்டியலிட்டு வைத்திருந்தான்.

கையிலிருந்த கோப்பு நழுவி கீழே விழுந்தது. கண்களோ பொல பொலவென்று கண்ணீரைப் பொழிய..அந்த இடத்திலேயே மடிந்து அமர்ந்தாள் கண்மணி. முன்னால் கிடந்த கோப்புகள் அனைத்தும் அவளை பார்த்து ஏளனமாய் சிரிப்பதை போல் தோன்றின.

‘உன் காதல் கணவனின் லட்சணத்தை பார்த்தாயா…?’,அவை காறித் துப்பின.

‘ஓ’வென்று வாய்விட்டு கதறி அழ ஆரம்பித்தாள் அந்தப் பேதை.இரு கைகளாலும் தரையை ஓங்கி ஓங்கி அடித்தவள் கதறித் தீர்த்தாள்.மனம் முழுவதும் ரணமாய் வலித்தது.

குத்தி குத்தி இதயத்தைப் பிடுங்கி வெளியே எறிந்ததைப் போல அவ்வளவு வலித்தது.

வெகுநேரம் அழுது தீர்த்தவள் பிறகு ஒரு முடிவுடன் எழுந்தாள்.

‘இல்லை.. இந்த அத்தனை பாவ செயல்களுக்கும் அவன் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்…! இவ்வளவு நாட்கள் இது எதுவும் தெரியாமல் அப்பாவியா வாழ்ந்துட்டேன்.. இனி நான் அமைதியா இருக்க மாட்டேன்..அத்தனை பெண்களுடைய சார்பாகவும் நான் உனக்குத் தண்டனை கொடுக்கிறேன்…!எனக்கு நீ பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்…’,உறுதியுடன் நிமிர்ந்தவளின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.

அலுவலகத்தில் அமர்ந்திருந்த விஸ்வேஷ்வரனின் முகம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.அவன் மனம் முழுவதும் மதியம் கடற்கரையில் நடந்த சம்பவத்தையே எண்ணிக் கொண்டிருந்தது.

‘தவறான நோக்கத்துக்காக அழைச்சிட்டு போறான்னா..எதாவது லாட்ஜ்ஜூக்குத்தான் அழைச்சிட்டு போயிருக்கணும்…அதை விட்டுட்டு கடலுக்குள்ள எதுக்கு ஒரு பொண்ணை கூட்டிட்டு போறான்..! அவன் முகத்தை பார்த்தாலும் பக்கா கிரிமினல் மாதிரிதான் தெரியறான்…’,அவன் மனதிற்குள் இதே யோசனைதான்.

‘வேற ஏதோ நடக்குது…பொண்ணுங்க காணாம போனதுக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ…?’அவன் யோசித்துக் கொண்டிருக்க..துரை உள்ளே வந்தார்.

“சார்…மணி பத்தாகப் போகுது…கிளம்பலாமா…?”,

“ம்…”,ஜீப்பில் ஏறி அமர்ந்தவனின் முகம் தெளிவடையாமல்தான் இருந்தது.

வீட்டிற்குள் ஜீப் நுழைய..வீடு பூட்டப்பட்டிருந்தது.

“இன்னும் யாழ்வி வரலையா…?”,வாய்விட்டுக் கேட்டபடியே அவளது மொபைலுக்கு முயற்சித்தான்.

அது எடுக்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்க பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.

‘லேட் ஆகும்ன்னா எனக்கு இன்பார்ம் பண்ணிடுவாளே…’அவளது அலுவலக மேனேஜருக்கு போன் செய்து விசாரிக்க,

“யாழ்வி வழக்கம் போல் நாலு மணிக்கே கிளம்பிட்டாங்களே சார்…!”,என்ற பதில்தான் வந்தது.

விஸ்வேஷ்வரனின் மனதில் முதன் முதலாக ஒரு நடுக்கம் பரவியது.இது போன்ற பல சூழ்நிலைகளை அநாயசமாக சமாளித்தவனுக்கு இப்போதைய நிலையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.

‘ஏதாவது ஆகியிருக்குமோ…?’,மனம் படபடவென்று அடித்துக் கொள்ள..பிரம்மை பிடித்தவன் போல் நின்றிருந்தவனை பார்த்துவிட்டு அவனருகே வந்தார் துரை.

“சார்…ஆபிஸ்ல என்ன சொல்றாங்க…?”,

“நாலு மணிக்கே கிளம்பிட்டாளாம் துரை… “அவன் குரல் நடுங்கியது.

எந்த நிலையிலும் கலங்காத மனிதன் அப்பொழுது என்ன செய்வதென்று தெரியாமல் திக்கற்று விழித்துக் கொண்டிருப்பதை பார்த்தவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது.

அனைத்தும் சில கணம்தான்.மறுகணமே ஒரு காவல் துறை அதிகாரியாய் செயல்பட ஆரம்பித்தான்.கபிலனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தவன் யாழ்வி வரும் வழியில் இருக்கும் கடைகளின் சிசிடிவி கேமராவை பரிசோதிக்க சொன்னான்.

இவனும் தாமதிக்காமல் மற்ற பக்கங்களில் தேடச் செல்ல.. சிசிடிவி கேமராவை ஆராய்ந்த கபிலனுக்கு யாழ்வி ஸ்கூட்டியில் செல்வது தெரிந்தது.ஆனால்,கடைகள் இல்லாத அந்த ஆளரவமற்ற சாலையில் வண்டி நுழைந்த பிறகு கண்காணிப்பதற்கு அங்கு எந்த சிசிடிவி கேமராக்களும் இல்லை.

அங்குதான் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாக அந்த இடத்தையும் சுற்றியிருக்கும் இடங்களையும் சல்லடை போட்டுத் தேடினர் காவல்துறை அதிகாரிகள்.பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.

நேரம் வேறு நள்ளிரவைத் தாண்டியது. வீட்டிலாவது ஏதாவது க்ளூ கிடைக்குமா என்ற நப்பாசையில் விஷ்வா வீட்டிற்கு வந்தான். துரைதான் வண்டியை ஓட்டி வந்திருந்தார்.அவருக்கும் யாழ்வியின் நிலை குறித்து கவலையாகத்தான் இருந்தது.

ஜீப் வந்து வீட்டில் நிற்கவும் விஷ்வாவின் போன் அலறவும் சரியை இருந்தது.புது நம்பரில் இருந்து அழைப்பு வர சந்தேகத்துடனேயே ஆன் செய்து காதில் வைத்தான்.

“என்ன ஏ.சி.பி சார்… பொண்டாட்டியை காணோம்ன்னு ஊர் முழுக்கத் தேடிட்டு இருக்கீங்களா…? அவள்தான் இந்த ஊர் ஊர்லயே இல்லையே..அப்புறம் எப்படி உங்களுக்கு கிடைப்பாள்…?”,மறுமுனையில் குரல் கேட்க,

“டேய்..யாருடா நீ…? பொறுக்கி…தைரியம் இருந்தால் நேருக்கு நேர் வந்து மோது டா…”ஆக்ரோஷமாய் கர்ஜித்தவனைக் கண்ட துரைக்கே பயமாய் இருந்தது.

“இன்னுமா யாருன்னு தெரியல..என் அப்பாவை அவமானப்படுத்தி ஜெயிலுக்கு அனுப்பினாயே..அந்த சக்ரவர்த்தியோட மகன் வேத வர்ஷன்…!அப்புறம் உன் பொண்டாட்டி இந்நேரம் போக வேண்டியவங்களுடைய கைகளுக்கு போய் சேர்ந்திருப்பாள்…எத்தனை பேருடைய காம பசியை தீர்த்துட்டு இருக்களோ.. ஹ்ம்ம்…”,

“டேய்ய்ய்…”,விஸ்வேஷ்வரனுக்கு இரத்தம் கொதித்தது.அவன் மட்டும் முன்னால் நின்றிருந்தால் கொன்று புதைத்திருப்பான்.

“ஷ்..எதுக்கு ஏ.சி.பி இப்படி கத்தற…?அப்புறம் எனக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லு.. உன் பொண்டாட்டி இன்னும் கைப்படாத ரோஜா தானா… இல்லை…ஏன் கேட்கிறேனா கன்னி கழியலைன்னா எனக்கு பணம் அதிகம் கிடைக்கும்…!”,வக்கிரமாய் கேட்டபடி அவன் இழுக்க,

“பொறுக்கி நாயே… உன் சாவு என் கையாலதான் டா…”,

“அதை சாகறப்போ பார்த்துக்கலாம்… ”,அசால்ட்டாய் உரைத்த வேத வர்ஷன் அணைப்பைத் துண்டித்து விட்டான்.

அணைந்த மொபைலை வெறித்துக் கொண்டு நின்ற விஷ்வாவின் மனம் எங்கும் நடுக்கம்.மொபைலை பிடித்திருந்த அவன் கரங்கள் நடுங்கின.பயம்..முதல் முறையாக பயம் என்ற உணர்வை வாழ்க்கையில் உணர்கிறான்.அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மூளை மறுத்துப் போன நிலை.

போனை ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் துரையும் அனைத்தையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.

“சார்.. உடனே வாங்க.. அந்த பொறுக்கியை அரெஸ்ட் பண்ணி விசாரிக்கற விதத்துல விசாரிச்சா அத்தனை உண்மையையும் சொல்லிடுவான்..”துரை அவனை கிளப்ப முயன்று கொண்டிருக்க,

வாசலில் நிற்கும் செக்யூரிட்டி கையில் ஒரு கடிதத்துடன் உள் நுழைந்தான்.

“சார்… நீங்க வந்த உடனே இதை கொடுக்க சொல்லி ஒரு பொண்ணு வந்து கொடுத்துட்டு போச்சு…!” அவன் நீட்ட,

“இதை முதலிலேயே கொடுப்பதற்கு என்ன…?” கடிந்து கொண்டார் துரை.

“இல்ல சார்.. முதல்ல நீங்க வந்த போது நான் சாப்பிட போயிருந்தேன்…!”,

விஸ்வேஷ்வரன் அவசரமாக வாங்கி அந்தக் கடிதத்தைப் படித்தான்.

“உங்கள் மனைவி கீழே குறிப்பிட பட்டிருக்கும் முகவரியில் பத்திரமாக இருக்கிறார்.”என்று இருந்தது.

விஷ்வா நொடியும் தாமதிக்கவில்லை.துரை ஜீப்பை கிளப்ப புயல் வேகத்தில் அந்த முகவரியை நோக்கி வண்டி விரைந்தது.

பெரிய பங்களாதான். வாசலில் செக்யூரிட்டி என்று யாரும் இல்லை.பங்களாவின் கதவுகள் கூட பூட்டப்படவில்லை. தொட்டவுடன் திறந்து கொண்டது. துரை தேடி விளக்குகளை போட. இருவரும் ஒவ்வொரு அறையாகத் தேட ஆரம்பித்தானர்.

“யாழ்வி…யாழ்வி…!”,குரல் கொடுத்தபடியே விஷ்வா மாடியேற..அங்கு ஒரு அறை இருந்தது. கதவைத் திறந்தால் அவள் அங்கு இல்லை.கீழே முழுவதும் தேடிவிட்டு துரையும் மேலே வந்தார்.

“கீழே எங்கேயும் இல்லை சார்…!” அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே விஷ்வாவின் பார்வை அந்த அறையிலிருக்கும் மற்றொரு கதவில் படிய..ஓடிச் சென்று அதை திறக்க முயற்சித்தான். பூட்டப்பட்டிருந்தது.

அருகிலிருந்த கனமான பூச்சாடியை வைத்து ஓங்கி அடிக்க.. தாழ்ப்பாள் சிறிது உடைந்தது.தன் தோளில் பலம் கொண்ட மட்டும் இடித்து அந்தக் கதவைத் திறந்து விட்டான்.

உள்ளே படுக்கையில் வாடிய கொடியாய் மயக்கமுற்றிருந்தாள் யாழ்வி.

அவனது உயிர் அப்பொழுதுதான் அவனிடம் வந்து சேர்ந்த உணர்வு.

“யாழ்வி…”அவளைத் தூக்கி மடியில் கிடத்தியவன் அவளது கன்னத்தில் தட்டி அவளை எழுப்ப முயல..அவள் கண் திறக்கவேயில்லை.

“யாழ்வி…ஏய்..கண்ணைத் திற டி…!எனக்குப் பயமாயிருக்குது பேபி…”,வெறி பிடித்தவன் போல் அவளை உலுக்கியவனை துரைதான் ஆசுவாசப்படுத்தினார்.

“சார்….சார்…!யாழ்வி அம்மாக்கு ஒண்ணும் இல்லை…மயக்கம் போட்டுட்டாங்க போல.. ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டுப் போகலாம். தூக்கிட்டு வாங்க…!”அவர் உரைக்கவும்தான் நிலைமை புரிபட அவளை அள்ளிக் கொண்டு ஜீப்பை நோக்கி விரைந்தான்.

இங்கு கடலில் மிதந்து கொண்டிருந்த பெரிய கப்பலின் கன்டெய்னருக்குள் கும்மிருட்டு சூழ்ந்திருந்தது.சுற்றியிருந்த பெண்களின் மெல்லிய விசும்பல் ஒலி எதுவும் அவளை பாதிக்கவில்லை.இருளையே வெறித்தபடி இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தாள் கண்மணி.

எந்தக் கன்டெய்னரில் யாழ்வியை அனுப்ப வேண்டும் என்று வேத வர்ஷன் நினைத்தானோ அதே கன்டெய்னரில் அவனது காதல் கண்மணி சென்று கொண்டிருந்தாள்.

வேத வர்ஷனின் வீட்டில் இருந்து வெளியேறியவள் நேரே விஷ்வாவின் வீட்டிற்குத்தான் சென்றாள்.கடிதத்தை அந்த செக்யூரிட்டியிடம் கொடுத்தவள் அடுத்து அவர்களது கெஸ்ட் ஹவுஸிற்கு சென்றாள்.

மாலை மங்கி இருள் சூழ ஆரம்பித்திருந்த நேரம் அது. கெஸ்ட் ஹவுசில் ஆட்கள் யாரும் இல்லை.கடத்தி வரப்பட்டு மயக்க நிலையிலிருந்த யாழ்விக்குத் துணையாக ஒருவன் மட்டும்தான் இருந்தான்.

‘எப்படி உள்ளே செல்வது…?’,நோட்டமிட்டபடி மரத்தின் மறைவில் இவள் நின்றிருக்க..வாசலில் இருந்து இன்னொருவன் வந்தான்.

“நீ கிளம்பு…!இருட்டினதுக்குப் பிறகு இந்தப் பொண்ணை கண்டெய்னர்ல ஏத்திட்டு நான் வர்றேன்…! நிறைய பேர் இருந்தால் சந்தேகம் வந்திடும்…!”,வந்த ஆள் கூற,

“ஜாக்கிரதை…”,எச்சரித்து விட்டு காவலுக்கு இருந்த ஆள் அகன்று விட்டான்.

வந்தவன் பங்களாவின் கதவைப் பூட்டாமல் மெயின் கேட்டை பூட்டி விட்டு வெளியே எங்கோ சென்றான்.

கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி கண்மணி உள்ளே சென்று விட்டாள்.எல்லா பக்கமும் தேடியவள் மாடியறையில் யாழ்வி கிடத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்து விட்டாள்.

எப்படியோ அவளை இழுத்துச் சென்று அந்த அறையின் வழியாகச் செல்லும் மற்றொரு அறையில் கிடத்தியவள் கதவை அறைந்து சாத்தினாள். அந்தக் கதவு அறைந்து சாத்தானால் பூட்டிக் கொள்ளும்.அதன் பிறகு சாவி போட்டுத்தான் திறக்க முடியும்.சாவி அங்கில்லை என்பது கண்மணிக்குத் தெரியும். உள்ளே யாழ்வி இருப்பதுதான் அந்தப் பெண்ணிற்கு பாதுகாப்பு என்று எண்ணியவள் கதவை சாத்தி விட்டாள்.

‘அதுதான் ஏ.சி.பி க்கு இன்பார்ம் பண்ணிட்டோமே.. எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கட்டும்…’,எண்ணியவள் படுக்கையில் சென்று மயக்கமுற்றது போல் படுத்துக் கொண்டாள்.

புதிதாக வந்த ஆளிற்கு கடத்தின பெண்ணை பற்றியெல்லாம் தெரியாது.எனவே,ஆள் மாறாட்டம் நடந்ததும் அவனுக்குத் தெரியவில்லை.இரவு ஆகவும் கண்மணியை தூக்கிச் சென்று கன்டெய்னரில் ஏற்றி விட்டான்.

அனைத்தும் தெரிந்தாலும் அசைவின்றி இருந்தாள் கண்மணி.

தற்போது கன்டெய்னரில் சென்று கொண்டிருந்தவளின் மனம் முழுவதும் ரணம் மட்டுமே.வெறும் உயிரற்ற கூடுதான் கடலில் சென்று கொண்டிருந்தது.தன் காதல் கணவன் பொய்த்து போன நிமிடமே அவள் உயிர் அவளை விட்டு சென்றிருந்தது.

போகுமிடத்தில் என்ன மாதிரியான துன்பங்களை அனுபவிக்கப் போகிறோம் என்று அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது.இருந்தாலும் அவள் பயப்படவில்லை. அவளது உணர்வுகளும் மனதும் இறுகிப் போய் கல்லாய் கிடந்தது.

‘எத்தனை பெண்களுக்கு இந்த வாழ்க்கையைத்தானே பரிசளித்திருப்பான்.. இப்பொழுது அவனது காதல் மனைவி படும் துன்பத்தைக் கண்டு மனம் வெதும்பி போகட்டும்…,

அவள் நினைத்திருந்தால் அப்பொழுதே காவல் துறையினருக்கு தெரியப்படுத்தி மற்ற பெண்களை காப்பாற்றியிருக்கலாம் தான்.ஆனால்,அவள் அதை செய்யவில்லை.

அவளுக்குத் தெரியும்..எப்படியாக இருந்தாலும் தன் கணவன் தன்னைத் தேடி வருவான் என்று..இந்த சமுதாயத்தில் ஒரு மனிதனாக அவன் தோற்றிருக்கலாம்.. ஆனால்.. ஒரு கணவனாக ஒரு காதலனாக அவன் ஜெயித்திருந்தானே…!

அவள் மேல் அவன் கொண்ட காதல் சத்தியமானது.இது அவளுக்கும் தெரியும்.தன் நிலையை அறிந்த பிறகு ஒரு நொடி கூட அவன் தாமதிக்க மாட்டான் என்றும் அவளுக்குத் தெரியும்.எப்படியாக இருந்தாலும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்துப் பெண்களும் காப்பாற்றப்பட்டு விடுவர் என்று அவள் எண்ணினாள்.

தன் மனைவியும் அந்தக் கன்டெய்னரில் இருக்கிறாள் என்று தெரிந்த பிறகு துடித்துக் கதறுவானே அந்த துடிப்பை..அந்த வேதனையை அவனுக்கு உணர்த்த வேண்டும் என்றுதான் அவள் நினைத்தாள்.

ஆனால்..கடவுள் அந்த மா பாதகனின் பாவ செயல்களுக்கு அவளைக் கருவியாய் உபயோகப்படுத்தித்தான் அவனைத் தண்டிக்க போகிறார் என்பதை அந்தப் பேதை அறியாமல் விட்டுவிட்டாள்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page