வெந்து தணிந்த இதயம்-32

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்-32

 

வீட்டிற்கு வந்த ரத்னவேல் பாண்டியனுக்கோ எல்லாம் ஒரே புதிராகவே இருந்தது.

 

“பத்ரி ஏன் என்னை அந்த ஹெச்.எம். ரூமுக்குள்ள தனியா அனுப்பினான்? இந்த ஜெயந்தி என்கிட்ட சொல்லாம கொள்ளாம அவ புருஷன் ஊருக்குப் போயிட்டா. இந்த தெய்வானை கோவில்ல என் மூஞ்சில கரியைப் பூசினா. நேத்துப் பொறந்த இந்த சின்னக் கழுதை காதம்பரி மொத்தமா என்னை மண்ணை கவ்வ வச்சிருச்சி. அப்ப எல்லாரும் எனக்கு எதிரா திரும்பிட்டாங்களா? என்னை மதிக்கவே இல்லையா? எல்லாருக்கும் நான் யாருனு காட்டறேன். இதெல்லாம் நடந்தது அந்த யாழினி இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்ச பின்னாடி தானே? அவளை மொத ஒழிச்சிக் கட்டனும்.” என்றவர் குரோதத்துடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, அவரின் தலையில் இன்னொரு இடி‌வந்து விழுந்தது.

 

முன்பு மாவட்ட ஆட்சியரிடம் அவர் அலைபேசியில் திமிராக பேசிய ஒலிப்பதிவு தான் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பானது. அவரின் அலைபேசிக்கோ அழைப்பிற்கு மேல் அழைப்பு வந்தது. 

 

இன்னொரு திருப்பமாக அவரின் தோட்டத்து வீட்டில் எரிந்து போன பெண்ணின் காதலன் தனது காதலியை ரத்னவேல் பாண்டியன் தான் தனது தோட்டத்து வீட்டில் அடைத்துவைத்து எரித்துக் கொன்றுவிட்டார் என்று காவல்நிலையத்தில் சரணடைந்திருந்தான்.

 

ராகுவும் கேதுவும் தன்னை சூழ்ந்தது போன்ற நிலையிலிருந்தார் ரத்னவேல் பாண்டியன்.

 

அவர் பத்ரியை தனது அறைக்கு அழைத்து, முதலமைச்சரிடம் தனக்கு உதவச்சொல்லி கேட்கச் சொல்ல, பத்ரி தயங்கினான்.

 

“அப்பா இந்த பிரச்சனைகளையெல்லாம் நாமளே சமாளிச்சிக்கறது தான் நல்லது. அவர்கிட்ட போய் உதவி கேட்டோம்னா நம்ம மதிப்பு குறைஞ்சு போயிடும். அப்பறம் அவர் நம்மளை தவறா நினைக்கவும் வாய்ப்பிருக்கு.” என்று நுரை ததும்பும் சவரக்கட்டியாய் நழுவினான்.

 

அவர் காவலர்கள் எந்நேரமும் தன்னிடம் விசாரணைக்கு வரலாம் என்று பயந்து கொண்டிருந்த போது, சமூக ஊடகங்களில் அவரின் சமூகசேவைக்கான பத்மஸ்ரீ விருது திரும்பப் பெறப்படுவதாக பத்மஸ்ரீ விருது அமைப்பினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இவ்விசயத்தைக் கேள்விபட்டதும் தான் கருவுற்றிருப்பதையும் மறந்து குத்தாட்டம் போட்ட யாழினி, சமையலறை சென்று தன் கையால் பால் பாயாசம் செய்தாள்.

 

அதை அவள் குடித்துக்கொண்டே தனது அறைக்குள் நுழைய, எனக்கு என்று அவளின் இதழின் வழியாகவே பாயாசம் அருந்திய பத்ரி, “என்ன திடீருனு பாயாசம்?” என்று புருவங்களை இடுக்கினான்.

 

அவள் விழித்த திருட்டு விழி அவனை உற்றுநோக்க வைத்தது. 

 

“உனக்கேன் என் அப்பாவோட பத்மஸ்ரீ விருது வாபஸ் வாங்கப்பட்டதுக்கு அவ்வளவு சந்தோசம்?” என்றதும் அவள் பதில் சொல்லாமல் திணறியது இன்னும் அவனுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியது.

 

“உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க வேற காரணம் ஏதாவது இருந்ததா யாழினி? அன்னைக்கு வெக்காளியம்மன் கோவில்ல வச்சே சந்தேகப்பட்டேன். அந்த பாரிஜாதத்துக்கும் உனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு தானே? கல்யாணத்துக்கு முன்னாடி நான் அவ்வளவு எச்சரிக்கை செஞ்சும் நீ ஏன் திரும்பி வந்த சொல்லு? நானும் ஒவ்வொரு தடவையும் உன்னை கவனிச்சிட்டு தான் வர்றேன். நீ ஏதோ பெருசா என்கிட்டயிருந்து மறைக்கற மாதிரி இருக்கு. அது என்ன யாழினி?” என்று கேட்கவும், அவளது அலைபேசி இசைத்தது.

 

அவள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கையிலெடுத்துப் பார்க்கவும், ஆத்திரத்தில் அதனை பிடுங்கி எறிந்தான் பத்ரி.

 

அது சுவற்றில் மோதி சுக்குநூறானது. 

 

“உங்களுக்கென்ன பைத்தியமா?” என்று கத்தினாள் யாழினி. 

 

அவளுக்கும் அவனிடம் தன் அன்னை பற்றிய ரகசியங்களை எல்லாம் சொல்ல வேண்டும் என்று ஆசை தான். ஆனால், காதம்பரியின் திருமணத்திற்கு பின்பு தான் அதனை வெளிப்படுத்த வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.

 

அவள் தனது கணவனை காதலிக்கிறாள் தான். ஆனால், நூற்றில் பூஜ்ஜியம் புள்ளி ஒரு சதவீதம் தனது கணவன் எக்கணமும் தனது தந்தையின் பக்கம் சாய்ந்துவிடுவானோ என்ற பயம் இருந்தது அவளுக்கு. அந்த எச்சரிக்கை உணர்வு தான் அவளை சொல்லவிடாமல் தடுத்தது. 

 

அவன் தற்போது அன்பாக கேட்காமல், ஆக்ரோசமாகக் கேட்டது வேறு ஹார்மோன்களின் பிடியில் சிக்கியிருந்தவளுக்கு கடுப்பை கிளப்பியது.‌ அவனிடம் எதுவும் பேசாமல் சிலிப்பிக்கொண்டு அவ்வறையை விட்டு வெளியேறினாள்.

 

ஆனால், இரவு அவள் தங்களது அறைக்கு தூங்குவதற்காக திரும்பியபோது பத்ரியால் வெகுநேரத்திற்கு கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. 

 

கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவளின் மடியில் தலை‌ வைத்து‌ப் படுத்தான். அவனை புரட்டிவிட அவள் முயல, தன்‌ முகத்தை‌‌ அவள் வயிற்றுக்குள் புதைத்து அழிச்சாட்டியம் செய்தான்.

 

அவள் கோபத்தில் அவன் முகத்தை திருப்பி ஒரு மீசை முடியை‌ பல்லால் பிடுங்கி எடுத்தாள்.

 

அவனோ வலியில் முகத்தை சுருக்கி, “ராட்சசி வலிக்குதுடி” என்றான்.

 

“எனக்கும் தான்‌ அது வயித்துல குத்தி வலி கொடுத்துச்சி.” என்றவள் முறுக்கிக் கொள்ளவும், 

 

“உன் க்ரைம் ரேட் கூடிட்டே போகுதுடி. முதல்ல என் கழுத்துல கீறி வச்ச, மிளகாத்தூள் போட்டு டீ கொடுத்த, வெக்காளியம்மன் கோவில்ல என் காலை நசுக்கின, காது ஜவ்வு கிழியுற அளவுக்கு பளார்னு என் கன்னத்துல அறைஞ்ச, அப்பறம் படுக்கையில என் காதைக் கடிச்சி வச்ச, இப்ப மீசை முடிய பிடுங்கற. சரியான மோகினிப்பிசாசுடி நீ” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தாலும் கிறக்கமாகவே வாசித்தான்.

 

அவள் கொஞ்சமும் பரிதாபப்படவில்லை. 

 

“அய்யே! ரொம்பத்தான். நீங்கனாப்பல எங்களை கொஞ்சிட்டே இருந்தீங்களாக்கும்? என் லிப்ஸ்ல பல் பதிச்சு, கையை முறுக்கி, காலை, மத்தியானம், ராத்திரினு மூனு வேளையும் என்னை குளிக்க வச்சி, போதாததுக்கு இன்னும் எட்டு மாசத்துல பிரசவ வலிக்கு வேற ஏற்பாடு பண்ணியிருக்கீங்க” என்று பொரிந்து தள்ளவும், தனது தோல்வியை ஒப்புக்கொண்டான்‌ பத்ரவேல் பாண்டியன்.

 

“சரி! சரி! என் தப்பையெல்லாம் இப்பவே நேர் பண்றேன்” என்று அவளின் மேனியில் முத்த ஆராய்ச்சியைத் துவங்கினான். 

 

அவள் கிறங்கி நின்ற போது பத்ரி திடீரென ஒரு ஒப்பந்தம் போட்டான்.

 

“உன்கிட்ட ஒரு ரகசியம் இருக்கற மாதிரியே என்கிட்டயும் ஒரு ரகசியம் இருக்கு யாழினி. அதனால நான் இப்ப உன்னை மன்னிச்சு விடுறேன். ஆனா என் ரகசியம் வெளியாகறப்ப உன் ரகசியமும் எனக்கு தெரிஞ்சே ஆகனும்.” என்றான்.

 

உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தவளும், “ம்” என்றபடியே அவன் கைகளில் சரிந்தாள்.

 

மறுநாள் காலை ஆதவன் சோம்பலாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது ரத்னவேல் பாண்டியனை காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

 

அது தெரிந்ததும் கேசரி செய்துவந்து தன் கணவனிடம் நீட்டினாள் யாழினி.

 

“அவன் என்னடி கொழுப்பா?” என்று அவளை தன் இரும்புக்கரத்தால் வளைத்த போது, கதவை தட்டியது கரடி.

 

“அடச்சை!” என்று சலித்து இருவரும் கதவை திறக்க, ரத்னவேல் பாண்டியன் ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தார்.

 

அவர் யாழினியைக் கண்டதும், “இவ‌ சொல்லித்தான் நீ என் முதுகுல குத்துனியா பத்ரி? இவ தானே உனக்கு மாஸ்டர் மைன்ட்? இவளை…” என்று யாழினியின் கழுத்தைப் பிடித்து நெரிக்கப்போனார். 

 

இருவருக்கும் குறுக்கேப் புகுந்து அவரை தடுத்து நிறுத்திய பத்ரி, “அப்பா உங்க பிரச்சனை தான்‌ என்ன? ஏன் அவளை குற்றவாளி ஆக்குறீங்க?” என்று இரைந்தான்.

 

“ஓ! என்னை எதிர்த்து‌ப் பேசறல்ல நீ? இப்ப எல்லாரும் எனக்கு எதிரா ஒன்னு சேர்ந்துட்டீங்கல்ல? போங்க! எல்லாரும் போங்க! ஆனா, இது என் சாம்ராஜ்ஜியம். நான் இருக்கறவரை இங்க நான் வைக்கிறது தான் சட்டம். என்னை எவனாலயும், எதாலயும் வீழ்த்த முடியாது. எந்த புயல் காத்தும் அசைக்க முடியாத ஆலமரம் நான். பூக்கள் விழுந்தா விருட்சமும் விழுந்திருமா?” என்று கர்ஜித்ததும், பத்ரி விசயம் புரியாமலே நின்றிருந்தான்.

 

ரத்னவேல் பாண்டியனே அவனுக்கு நையாண்டியுடன் விசயத்தை சொன்னார்.

 

“அன்னைக்கு அந்த ஓடுகாலிங்க ரெண்டுபேரையும் காப்பாத்தி எங்கேயோ தலைமறைவா இருக்க வச்சிட்டு, தோட்டத்து வீடு எரிஞ்சு போன மாதிரியும், அந்த அருணாச்சலம் மகன் காவல்ல இருந்து தப்பிச்சி ஓடிப்போன மாதிரியும் நாடகம் ஆடியிருக்கல்ல நீ? நான் ஊருல உள்ள புத்துக்களையெல்லாம் இடிச்சிட்டு இருந்தா நல்லபாம்பு நீ என் காலைச் சுத்தியே வளர்ந்துட்டு இருந்திருக்க. ஒன்னு தெரிஞ்சிக்கோ பத்ரி என்னைக்கும் நல்லபாம்பு ராஜநாகமாகாது. என்னை‌ எதிர்க்க ஒருத்தன் பிறந்து தான்டா வரனும்” என்று ஆணவத்தின் உச்சத்தில் நின்று கர்ஜித்தார்.

 

யாழினியோ தன் காதுகளையே நம்ப முடியாமல் நின்றிருந்தாள். தன் கணவன் தன் தாத்தாவின் சித்தாந்தங்களுக்கு எதிரானவனா? அவன் என்றுமே நேர்மையின் பக்கத்தில் தானா? என்று பூரித்து நின்றிருந்தாள்.

 

இத்தனை நாள் வெந்து கொண்டிருந்த அவளின் இதயம் இப்போது முற்றிலுமாய் தணிந்தது. 

 

ஆனால், அச்சமயம், “யாழினி!” என்றொரு குரல் வந்து அவளின் அடிவயிற்றை கலக்கியது.

 

அது அவளின் அன்னை வசந்தியின் குரல் என்று தெரிந்த மறுகணமே வெளியே ஓடிப்போய் அவரை கட்டியணைத்துக் கொண்டாள் யாழினி.

 

வெகுநாட்களுக்குப் பிறகு தனது மகளை பார்ப்பவரும் அவளை கட்டியணைத்து கண்ணீரில் கரைந்தார்.

 

யாழினியை பின் தொடர்ந்திருந்த பத்ரியும் ரத்னவேல் பாண்டியனும் வசந்தியைக் கண்டு பேயறைந்தது போலானார்கள். 

 

அவர்களின் கூடவே அக்குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்.

 

யாழினி தன் தாயை விட்டு விலகியதும் அருகில் கவலையுடன் நின்றிருந்த சுலேக்காவைப் பார்த்தாள். 

 

அவரின் மூலம் தான் எல்லா உண்மைகளையும் தெரிந்துகொண்டு தனது அன்னை வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், “உங்களுக்கு எப்பம்மா நினைவு திரும்புச்சி?” என்றாள்.

 

அவர் அவளை முறைத்துப் பார்க்க, அருகில் நின்றிருந்த சுலேக்கா நேற்று தொலைக்காட்சிகளில் ‘ரத்னவேல் பாண்டியனின் பத்மஸ்ரீ விருது திரும்பப் பெறப்பட்டது.’ என்று ஒளிபரப்பப்பட்ட அவரின் புகைப்படத்தை பார்த்து ‌தான் வசந்தி சுயநினைவு பெற்றார் என்று, மனநலகாப்பகத்தில் நடந்ததை விளக்கினார்.

 

அதைக்கேட்டு மகிழ‌ வேண்டிய யாழினியோ, தனது கணவனின் நினைவு வந்து திரும்பிப் பார்த்தாள்.

 

அனைவரின் கண்களும் வயதின் முதிர்ச்சியால் லேசாக முகத்தோல்கள் சுருங்கி, நரைமுடிகள்‌‌ எட்டிப் பார்க்கும் கோலத்திலிருந்த வசந்தியை தான் உற்றுநோக்கிக் கொண்டிருந்தன.

 

பத்ரிக்கு இப்போது தான் யாழினியின் கண்கள் எங்கிருந்து பிரதியெடுக்கப்பட்டது என்ற உண்மை விளங்கியது.

 

சாவித்ரியும் பொன்னியும் தங்கள் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு வசந்தியின் இருகைகளையும் ஆளுக்கொருவராய் பற்றிக்கொண்டு அவரை உள்ளே வரச்சொல்ல, அவர்களின் கைகளை வெடுக்கென்று உதறித் தள்ளிய வசந்தி மிக அழுத்தமாய், “யாழினி வா போகலாம். இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுயில்ல. இது ஒரு நரகம். நான் ஏற்கனவே உன்னை எச்சரிச்சிருந்தும் நீ இங்க வந்திருக்கது அறிவீனத்தோட உச்சம். உடனே இங்கயிருந்து கிளம்பு” என்று அவளின் கைப்பிடித்து இழுத்துச் சென்றார்.

 

ஆனால், யாழினி மேலும் நகர முடியாதபடி அவளின் இன்னொரு கையைப் பற்றி தடுத்திருந்தான் பத்ரி. 

 

வசந்தி அதில் கடுப்பாகி, “என் பொண்ணு கையைத்தொட உனக்கு இனி எந்த உரிமையும் இல்ல பத்ரி. அவ‌ என்னைக்கும் என் பொண்ணு” என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல,  தன் தாயின்‌ பிடியிலிருந்த கையை மெதுவாக உருவினாள் யாழினி.

 

“ம்மா நான்‌ பத்ரி மாமாவை மனப்பூர்வமா விரும்பறேன். நீங்க அப்பா மேல எந்தளவுக்கு காதல் வச்சிருந்தீங்களோ அதே அளவுக்கு நான் இப்ப மாமா மேல வச்சிருக்கேன். அவர் தான் என் உலகம் இனி.” என்றதும்,

 

“போடி பைத்தியக்காரி! எதை வச்சிடி நீ இவனை லவ் பண்றனு சொல்ற? அதுக்கெல்லாம் இந்த குடும்பத்து ஆம்பளைங்க தகுதி இல்லாதவங்க” என்று வெறுப்பை உமிழ்ந்தார் வசந்தி.

 

“ம்மா மாமாவை என்னால மறக்க முடியாது. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க” என்றதும்,

 

“இத்தனை வருசம் உன்னை பெத்து வளர்த்த இந்த அம்மா பேச்சைக் கேட்க மாட்டியா யாழினி? அம்மா என்னைக்கும் உனக்கு நல்லதை தான்‌ செய்வேன். உனக்கு தெரியுமில்ல? இவன் உனக்கு வேணாம். என் கூட வா.” என்றார் விடாமல்.

 

“ம்மா ப்ளீஸ். இருபத்திரண்டு வருசத்துக்கு முன்னாடி அப்பா உங்களை விரும்பறாரா இல்லையான்னே தெரியாம உங்க குடும்பத்துக்கிட்ட நீங்க செத்துப்போயிட்டதா டிராமா பண்ணி மும்பைக்கு போனீங்க. ஆனா நான் மாமா என்னை உயிருக்குயிரா லவ் பண்றாருங்கறதை தெரிஞ்ச பின்னாடி தான் அவரை விட்டு வரமாட்டேன் சொல்றேன். நீங்க சொன்ன ஆம்பளைங்க உங்க தலைமுறையிலேயே முடிஞ்சு போயிட்டாங்கம்மா. இப்ப பத்ரி மாமாவும், சஷ்டி மாமாவும் புதிய தலைமுறைங்க. அவங்க இந்த குடும்பத்து மேல படிஞ்சிருக்க பாவக்கறையை துடைக்க அவதாரம் எடுத்தவங்க.” என்று பெருமையாக சொன்னாள்.

 

ஆனால், அவளின் கூற்று எதையும் ஏற்கத் தயாராகயில்லை வசந்தி. பிடித்தப்பிடியில் நின்றார்.

 

இறுதியில் பத்ரி‌ அவரின் காலைப் பிடித்து கெஞ்சினான். 

 

“அக்கா ப்ளீஸ்க்கா. என் யாழினியை என்கிட்ட கொடுத்திருக்கா. நான் மோசமானவன் இல்லக்கா. நான் இதுக்கு முன்னாடி செஞ்ச தப்புக்கு கூட யாழினிகிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன். இப்ப யாழினி என் நினைப்பை மனசுலயும், என் குழந்தையை அவ வயித்துலயும் சுமந்திட்டிருக்கா. என் வாழ்க்கையோட அர்த்தம் அவங்க ரெண்டுபேரும் தான். நீ ஏன் எங்களைவிட்டு ஓடிப்போனனு கூட என்னால புரிஞ்சிக்க முடியுதுக்கா. எனக்கும் உன்னை மாதிரி தான் அப்பாவோட அடாவடித்தனம்‌ எதுவும் பிடிக்காது. எனக்கு பதினஞ்சு வயசா இருக்கறப்ப தான் என் கண்ணு முன்னாடி பொன்னியக்கா வீட்டுக்காரரை இந்த ஊர்க்காரங்க அரிவாளால வெட்டிக் கொன்னாங்க. என்னால அதை இன்னும் மறக்க முடியலைக்கா. அன்னைக்கு முடிவு பண்ணேன். அப்பாவுக்கு நிழலா இருந்தே அவரோட அதிகாரத்தையும், ஆணவத்தையும் அழிக்கனும்னு. சஷ்டி எனக்கு நேர் எதிர். ஆனா என் வழி வேறக்கா. ப்ளீஸ்க்கா எல்லாம் கூடி வர்ற நேரத்துல என் சந்தோசத்தை என்னை விட்டு‌ பிரிச்சிடாதக்கா” என்றதும், தான் தூக்கி வளர்த்த தனது தம்பியின் கண்ணீரில் உருகி நின்றார் வசந்தி.  

 

இம்முறை தனது மகளின் கையை பிடித்தவர் பத்ரியின் கையில் அதை ஒப்படைத்தார். பத்ரி யாழினி இருவரும் தம்பதி சமேதராக அவரின் காலில் விழுந்து ஆசிபெற்றனர்.

 

மற்றவர்கள் வசந்தியின் மாற்றத்தில் மனம் குளிர்ந்து நின்றிருக்க, ரத்னவேல் பாண்டியனோ மூளை மறத்துப்போய் நின்றிருந்தார்.

 

அவருக்கு வசந்தியைப் பார்த்த கணத்திலேயே மூளை நரம்புகளில் சில செயலிழந்து விட்டன.

 

அதிலும் யாழினி குறிஞ்சி குளம் நுழைந்தது தான் தன்னுடைய தோல்வியின் முதல்படி என்று எண்ணிக் கொண்டிருந்தவருக்கு அவளின் பிறப்பே அவரின் தோல்வியில் தொடங்கியது தான் என்பதை ஏற்க முடியவில்லை.

 

அவர் சுற்றி பார்த்தபோது அந்த வரவேற்பறை முழுவதும் பூனைகளாய் தெரிந்தன. அதுவும் அன்று அவர் சுட்டுக்கொன்ற சாம்பல் நிறப்பூனைகள்.

 

அனைத்தும் அவரை நோக்கி ‘மியாவ் மியாவ்’ என்று சத்தமிட்டபடி வர, பயத்தில் காதைப் பொத்திக்கொண்டு தனதறைக்கு ஓடினார். அதன்பின் யார் வந்து அழைத்தும் அவர் கதவை திறக்கவேயில்லை. 

 

அவர் தானாக தனியொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது மனநல காப்பகத்தில் அவரை சேர்ப்பதே உத்தமம் என்றுவிட்டனர் மருத்துவர்கள். 

 

வசந்தி குணமானது போல் அவரும் ஒருநாள் ‘குணமாவார்’ என்று நம்பினர் அவரின் குடும்பத்தினர்.

 

தொடரும்…

அடுத்தது இறுதி அத்தியாயம் தான் தங்கம்ஸ்:)

 

 ரத்னவேல் பாண்டியன் மாதிரியான ஆட்கள் திருந்துவது ரொம்பவே கடினம். மற்றவருக்கு தீங்கு விளைவிக்காத வரை எந்த பற்றுமே தவறல்ல. நாட்டுப்பற்று, மொழிப்பற்று மாதிரி சாதிப்பற்றும் ஒரு ஓரமாக இருந்துவிட்டு போகட்டும். ஆனால், அது ஒரு வெறியாக மாறும் போது தான் பிரச்சனை உருவாகிறது என்று நினைக்கிறேன்.

காதலுக்கு நம் நாட்டில் பெரிய பிரச்சனையாக இருப்பதும் அதுதானே?

 

இந்தக்கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணவும், கமெண்ட் பண்ணவும் மறந்துடாதீங்க தங்கோம்ஸ்;)
 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,870 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page