தூவானம் -14

CEO அறைக்குள் ஆகாஷ் நுழைந்தபோதும் அவனது மனம் மட்டும் இன்னும் அந்த லிஃப்ட் வாசலிலேயே சுற்றிக்கொண்டிருந்தது. அகல்யா தன்னை அணைத்த அந்த ஒரு நொடி… அவளது கைகளின் கதகதப்பு, அந்த எதிர்பாராத நெருக்கம் என எல்லாமே அவன் காதுக்குள் ஒரு மெல்லிய இசையை மீட்டின. அவன் வயிற்றில் ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் ஒரே நேரத்தில் சிறகடிப்பது போன்ற ஒரு உணர்வு!

சித்தார்த் தன் மேஜையில் சாய்ந்தபடி இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான். ஆகாஷ் வந்த வேகத்தில் சோபாவில் அப்படியே சரிந்து விழுந்து, அங்கிருந்த ஒரு தலையணையை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டான். அவன் முகம் முழுக்க ஒரு கள்ளச்சிரிப்பு தாண்டவமாடியது.

சித்தார்த் சிரித்துக்கொண்டே அவன் அருகே வந்து, “டேய்! என்னடா ஆச்சு? லிஃப்ட்ல எதாவது மேஜிக் நடந்துச்சா? ஏன் இப்படித் தனியா சிரிச்சுக்கிட்டு, தலையணையைத் தழுவிட்டு இருக்க?” என வம்புக்கு இழுத்தான்.

ஆகாஷ் பதில் சொல்லாமல், கண்களைச் சிமிட்டி ஒரு மர்மப் புன்னகையை மட்டும் உதிர்த்தான். “அதெல்லாம் ஒரு சீக்ரெட் டா, சித்தா… அதைச் சொன்னா உனக்கு புரியாது!” எனச் சொல்லிவிட்டு, மீண்டும் அந்தத் தலையணையை இறுக அணைத்துக்கொண்டான்.

சித்தார்த் அவனது சட்டையைப் பிடித்துத் தூக்கி, “போதும்டா உன் கனவு உலகம்! மரியாதையா வந்து உட்காரு,” என அவனை அமர வைத்தவன், அவன் பக்கத்திலே அமர்ந்து, நண்பனாக ஒரு அக்கறையுடன் பேசத் தொடங்கினான்.

“ஆகாஷ்… விளையாட்டு ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா விஷயம் ரொம்பத் தீவிரமா போயிட்டு இருக்குன்னு எனக்குத் தெரியுது. நீ உண்மையாவே அந்தப் பொண்ணு மேல இவ்வளவு கிரேஸியா இருப்பேன்னு நான் எதிர்பார்க்கல. ஆனா ஒன்னு… உனக்கு அகல்யாவை பத்தி முழுசாத் தெரியுமா? அவளோட Background என்னன்னு எதாவது கேட்டயா? இல்ல, நான் வேணா நம்ம கம்பெனி ரெக்கார்ட்ஸ்ல செக் பண்ணி சொல்லட்டுமா?” என கேட்டான்.

சித்தார்த் கேட்ட அந்த பேக்ரவுண்ட் கேள்விக்கு ஆகாஷ் உடனே பதில் சொல்லவில்லை. ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த வானத்தையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது அமைதியே ஏதோ ஒரு பாரமான உண்மையைச் சொல்லப் போகிறது என்பதை சித்தார்த் உணர்ந்தான்.

“அவளுக்கு யாரும் இல்லைடா சித்தா… அவ ஒரு அனாதை,” என ஆகாஷ் மிகவும் மெதுவான, ஆனால் கனமான குரலில் சொன்னான்.

சித்தார்த் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனான். எப்போதும் கலகலவெனப் பேசும், துறுதுறுப்பாக ஓடித் திரியும் அந்த அகல்யாவிற்குப் பின்னால் இப்படி ஒரு சோகமான தனிமை இருக்கும் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை. சில நிமிடங்கள் அந்த அறையில் நிசப்தம் நிலவியது.

சட்டென தன் அதிர்ச்சியிலிருந்து மீண்ட சித்தார்த், ஆகாஷின் கைகளைத் தாராள மனதுடன் பற்றிக் கொண்டவன். “டேய் மச்சான்… வருத்தப்படாதடா. அவளுக்கு யாரும் இல்லைனா என்ன? இன்னையில இருந்து அவ என் தங்கைடா! அவ ஒரு அனாதைன்னு நீ நினைக்காத. இனிமே அவளுக்குப் பின்னாடி இந்த நிறுவனமும், இந்தச் சித்தார்த்தும் ஒரு அண்ணனா இருப்பேன்,” என உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.

சித்தார்த்தின் கண்களில் ஒரு உறுதி தெரிந்தது. “நீ அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுடா மச்சான். என் நண்பனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்… நீ அவளைக் கண்ணு கலங்காமப் பார்த்துப்பன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு! லக்ஷிமி கடாட்சம் மாதிரி ஒரு பொண்ணு உனக்குக் கிடைச்சிருக்கா… அவளைத் தவறவிட்டுடாத,” என நெகிழ்ச்சியுடன் கூறினான்.

தன் நண்பனின் இந்த அழகான மாற்றத்தைக் கண்டு ஆகாஷின் மனம் நெகிழ்ந்து போனது. “தேங்க்ஸ் மச்சான்… இந்த வார்த்தைக்காகத்தான் நான் காத்துட்டு இருந்தேன்!” எனச் சொல்லிவிட்டுச் சித்தார்த்தை மீண்டும் ஒருமுறை கட்டி அணைத்துக் கொண்டான்.

சித்தார்த் அவன் தோளில் தட்டி, “ஆனா ஜாக்கிரதை… நீ CEOன்னு தெரிஞ்சா ஒருவேளை அவ பயப்படலாம். அதை எப்போ சொல்லப்போறேன்னு மட்டும் யோசிச்சுக்கோ!” என எச்சரித்தான்.

அவனின் வார்த்தைகள் ஆகாஷிற்கு ஆறுதலைத் தந்தாலும், அவன் ஆழ்மனதில் ஒரு பயம் நிழலாடிக்கொண்டே இருந்தது.

“ஆமாடா சித்தா… எனக்கும் அதே பயம் தான் இருக்கு. நான் தான் இந்த கம்பெனியோட CEOன்னு அவளுக்குத் தெரிய வரும்போது அவ எப்படி உணருவான்னு தெரியல. அதுக்கு முன்னாடி, இந்தச் சாதாரண ஆகாஷ் மேல அவளுக்கு என்ன மாதிரியான ஃபீல் இருக்குன்னு நான் தெரிஞ்சுக்கணும். அவ என்னோட பதவியையோ, பணத்தையோ பார்த்து காதலிக்கக் கூடாது… இந்த ஆகாஷை மட்டும் தான் அவளுக்குப் பிடிக்கணும்,” என ஆகாஷ் தன் ஆதங்கத்தைக் கொட்டினான்.

சித்தார்த் அவன் தோளைத் தட்டி, “கண்டிப்பா நடக்கும்டா… யு டிசர்வ் இட்! நீ நினைக்கிற மாதிரியே அவ உன்னை நேசிப்பா,” என வாழ்த்தினான்.

திடீரெனச் சித்தார்த்திற்கு ஒரு விஷயம் ஞாபகம் வர, “சரிடா… எல்லாம் ஓகே தான். ஆனா அந்த மங்கூஸ் மண்டையன் மனோஜை ஏன் லீவுல போக விட்ட? அவன் இருந்தா இன்னும் கொஞ்சம் வச்சு செஞ்சிருக்கலாமே?” எனச் சிரித்துக்கொண்டே கேட்க

ஆகாஷ் ஒரு குறும்புச் சிரிப்புடன், “அதுதான் வேடிக்கையே சித்தா! அவன் ஊருக்குப் போய் அம்மாவைப் பார்க்கப்போறேன்னு சொன்னதெல்லாம் சுத்தப் பொய். அவன் காலேஜ் ரீ-யூனியன் பங்க்ஷனுக்குத் தான் போறான்!”

சித்தார்த் ஆச்சரியத்துடன், “யாருடா சொன்னது?” என வினவ, “வேற யாரு… எல்லாம் நம்ம அகல்யா கொடுத்த இன்ஃபர்மேஷன் தான்!” என சிரித்தான் ஆகாஷ்.

“ஓஹோ! அப்படியா சங்கதி? இரு… நானும் போய் அவனை ஒரு எட்டு பார்த்துட்டு வர்றேன். லீவு கொடுக்கிறதுக்கு முன்னாடி, இரண்டு மூன்று கேள்விகள் கேக்கணும் போல இருக்கு,” என்றபடி கோட் பொத்தானை சரிசெய்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அந்த நொடியிலேயே, காற்று வேகத்தில் பாய்ந்த ஆகாஷ் அவன் முன்னால் வந்து நின்றவன் …

“ஹலோ… ஹலோ! CEO சார்… நீங்க இப்போ இந்த கம்பெனி CEO, மறந்துட்டிங்களா? இந்த மாதிரி கீழே இறங்கி விசாரணை பண்ணுற வேலை எல்லாம் என் டிபார்ட்மெண்ட். நான் தான் உன் PA.”

“ஆனா…” என சித்தார்த் ஏதோ சொல்ல வர, அதுக்குள் அவனை முழுமையாகத் தடுத்து, ஒரு கையால் அவன் கைப்பிடியை பிடித்து, இன்னொரு கையால் மெதுவாக அவனை திருப்பி, அந்த சேரில் அமர வைத்தவன்

“நீ இப்படியே ஜம்முனு இங்க உட்காரு. வெளியை பார்த்து, காபி குடிச்சுக்கிட்டு, ‘Yes’ ‘No’ சொல்றது தான் உன் வேலை.”

சித்தார்த் சிரிப்பை அடக்க முடியாமல், “டேய்… இப்பவே ரோல்ல முழுசா இறங்கிட்டியா?” என்று கிண்டலாக கேட்டான்.

ஆகாஷ் சிரித்தபடியே ஷர்டை சரிசெய்துக்கொண்டு, “இது rehearsal இல்ல பாஸ்… Live show. Astra Global Group-ன் PA வெளியே போறான். ” என்றவன் கதவை திறந்து அறையை விட்டு வெளியே நகர முயலும்போது,

சித்தார்த் சட்டென அவனைத் தடுத்து நிறுத்தினான். “ஓய் மச்சான்! இப்போ நீ நிஜமாவே மனோஜைப் பார்க்கப் போறியா… இல்ல அந்த கேப்ல அகல்யாவைப் சைட் அடிக்க போறியா?” எனக் கண்ணடித்துக் கேட்க

ஆகாஷ் பதில் சொல்லாமல், ஒரு அர்த்தமுள்ள புன்னகையை மட்டும் சிந்திவிட்டு, விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தான். அவன் கால்கள் இப்போது அகல்யா இருக்கும் திசையை நோக்கித்தான் தானாகவே நடந்தன.

அதே நேரம் மூன்றாம் தளத்தில் … 

“சரி சரி… சொல்லித்தொலையுறேன். அது வந்து… அந்தப் புது PA ஆகாஷ் இருக்கான்ல… அவன் இன்னைக்கு ஈவினிங் என் கூடவே கேப்ல வரதா சொன்னான். ‘உங்க கூடப் பேச வேண்டியது இருக்கு, அதனால நாம ஒன்னாவே போலாம்’னு சொல்லிட்டான். அதான் யோசிச்சிட்டு இருக்கேன்,” எனத் தட்டிவிட்டாள்.

இதைக் கேட்டதும் ஹேமாவுக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்டது. “என்னது! உன் கூட கேப்ல வர்றானா? அவன் ஜாயின் பண்ணி ஒரு நாள் கூட ஆகல, அதுக்குள்ள உன்கூட கேப் வரைக்கும் வந்துட்டானா? அடிப்பாவி… அப்போ நான் இவ்வளவு நேரம் ஜொள்ளு விட்டது எல்லாம் வேஸ்ட்டா?” என ஹேமா அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள்.

அகல்யா மனதுக்குள் சிரித்துக் கொண்டே. “உனக்கு வேணும்டி! அவனைப் பத்திப் பேசி என்னைப் பொறாமைப்பட வச்சல… இப்போ நீயும் கொஞ்சம் பொறாமைப்படு!”

ஆனால், இந்தப் பொய் அவளுக்கே வினையாகப் போகிறது என்பது அவளுக்குத் தெரியாது. சரியாக அந்த நேரம், ஆகாஷ் எதேச்சையாக அந்தத் தளத்திற்கு வர, ஹேமா உற்சாகமாக, “ஹலோ ஆகாஷ்! என்ன… இன்னைக்கு ஈவினிங் நம்ம அகல்யா கூட கேப்ல தான் போறீங்களாமே? செம ஸ்பீட் தான் நீங்க!” எனப் போட்டு உடைத்தாள்.

ஆகாஷ் ஒரு நிமிடம் திகைத்துப் போய் அகல்யாவைப் பார்க்க, அகல்யா “ஐயோ… இவ இப்படிப் பண்ணுவான்னு நினைக்கலையே!” எனத் தலையில் அடித்துக் கொண்டவள் அவனை பார்த்து திருதிருவென விழித்துக்கொண்டிருந்தாள்

ஹேமா ஆவலோடு, “என்ன ஆகாஷ்… அமைதியா இருக்க? இன்னைக்கு ஈவினிங் நம்ம அகல்யா கூட கேப்ல தான் போறீயாமே? அவளே சொல்லிட்டா!” என மீண்டும் ஒரு போடு போட்டாள்.

அகல்யாவுக்குத் தொண்டை வறண்டது. ‘ஐயோ! இப்போ இவன் இல்லைன்னு சொல்லிட்டா, ஹேமா முன்னாடி என் மானம் கப்பல் ஏறிடுமே’ என நினைத்தவள், ஆகாஷைப் பார்த்து “வேண்டாம்… இல்லைன்னு சொல்லிடாத” என்பது போலக் கண்களால் கெஞ்சினாள்.

ஆகாஷ் ஒரு நொடி அகல்யாவின் முகத்தைப் பார்த்தான். அவளது கண்கள் சொல்லும் கதையைப் புரிந்துகொண்டவன், உதட்டில் ஒரு குறும்புச் சிரிப்பைத் தேங்கவிட்டபடி, 

“ஆமா ஹேமா… நான் தான் அகல்யாகிட்ட கேட்டேன். இன்னைக்கு அவங்க பர்த்டே இல்லையா? அவங்க கூடப் பேசிக்கிட்டே போனா நல்லா இருக்கும்னு தோணுச்சு. சோ, இன்னைக்கு ஈவினிங் நாங்க ரெண்டு பேரும் ஒரே கேப்ல தான் போறோம்,”

“அதுமட்டும் இல்லை என்னுடைய லொகேஷன் அந்த பக்கம் தான், இன்னைக்கு ஈவினிங் மட்டும் இல்லை இனிமேல் டெய்லியும்” என எதார்த்தமாகச் சொல்லி ஒரு அதிர்ச்சியை (இல்லையில்லை… இன்ப அதிர்ச்சியை)க் கொடுத்தான்.

அகல்யா அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். ‘என்னது… இவன் ஆமான்னு சொல்றானே அதும் இனிமேல் டெய்லியா?’ என அவள் இதயம் மின்னல் வேகத்தில் துடித்தது. ஒரு பொய்யைச் சமாளிக்க அவன் கொடுத்த அந்த ஆதரவு, அதற்கும் மேல் அவன் கொடுத்த அடுத்த தகவல் இன்னும் அதிர்ச்சியை தந்தது அவளுக்கு.

ஹேமா வாய் பிளந்து நின்றாள். “வாவ்! செம ஆகாஷ்… நீ ரொம்பக் கொடுத்து வச்சவ அகல்யா!” எனச் சொல்லிவிட்டு, பொறாமையுடன் நகர்ந்தாள்.

ஹேமா சென்றதும், ஆகாஷ் மெதுவாக அகல்யாவின் அருகில் வந்தான். குனிந்து அவள் காதருகே, “என்ன அகல்யா… நான் எப்போ உங்ககிட்ட கேப்ல வர்றேன்னு சொன்னேன்?” என மெல்லிய குரலில் வினவினான்.

அகல்யா தலைகுனிந்து, “அது… அது வந்து… ஹேமா ரொம்ப நச்சரிச்சா பாஸ், அதான் ஏதோ ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன். நீங்க ‘இல்லை’ன்னு சொல்லி என்னைத் தர்மசங்கடப் படுத்தாததுக்கு ரொம்ப தேங்க்ஸ்,” என்றாள் வெட்கத்துடன்.

“பரவாயில்லை… ஆனா சொன்னது சொன்னதுதான். இனிமேல் உங்க கூடத்தான் வரபோறேன்… ” என்றவன், அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தபடி, ஒரு கண்ணசைவு கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ஆகாஷ்.

தன் இருக்கையில் அமர்ந்த அகல்யா, அப்படியே மெய்மறந்து போனாள். தன் பிறந்தநாள் இவ்வளவு அழகாக மாறும் என்று அவள் நினைத்தே பார்க்கவில்லை.

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page