அத்தியாயம் 10

ஒருவழியாகப் பூஜைக்கு எல்லாம் தயாராகியிருக்க , வரவேண்டிய ஆட்களும் வந்துவிட, அங்கு வந்திருந்த ஐயர் பூஜையைத் தொடங்கினார். “வீட்டோட மூத்த மருமக வாங்கோ” என ஐயர் அழைத்திட, ருக்மணி திரும்பி நதியாவைப் பார்க்க, அவள் எழுந்து முன்னே வர, ராதா அவளை கோபத்தோடு முறைத்தார்.

“முறையா வந்த என்னோட மருமக இருக்கும் போது, முறையில்லாம எங்கேயோ தாலி கட்டிக்கிட்டு வந்தவ எல்லாம் பூஜை பண்ணக் கூடாது” ராதா கோபமாய் சொல்லிட, “என்னதான் இருந்தாலும் அவ நம்ம மித்துவோட பொண்டாட்டி. அப்போ அவ மூத்த மருமக தான” மருமகளின் குணமறிந்து மாமியார் மெதுவாகத் தான் சொன்னார். 

“என் மருமக ரூபிணி தான் பூஜை பண்ணனும். இல்லனா இந்த பூஜையே நடக்காது” ராதா கோபம் குறையாமல் பேசிட, “பாட்டிமா ரூபிணியே பூஜை பண்ணட்டும்” என்று பிரச்சனையை முடித்தான் மிதுன்.

நதியா முகம் இறுகிப் போய் பின்னால் சென்று அமர்ந்தாள். அவளுக்கு மிதுனுக்காக பூஜை செய்வதில் விருப்பமில்லை தான். இருந்தாலும் இத்தனை பேர் முன்னிலையில் ராதா அவளைக் கண்டபடி பேசுவது மனதிற்குள் சுருக்கென்றது. அதற்குக் காரணமானவனோ எந்தவித குற்ற உணர்ச்சியின்றி அமைதியாகத் தன்னுடைய வேலையைக் கவனித்தான். 

ரூபிணி அங்கிருந்த மகாலக்ஷ்மி சிலையை அலங்கரித்தவள், ஐயர் சொன்னபடி மஞ்சளில் விநாயகர் வைத்து, அதற்குப் பூஜை செய்த பின், அவர்களுடைய குலதெய்வத்தை வணங்கிய பின்னர், மகாலட்சுமிக்குப் பூஜை செய்தாள். மற்ற பெண்கள் அனைவரும் தங்களுடைய கணவன்மார்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையில் இருக்க, 

‘நேத்து அவன் என்னை கொல்ல பார்த்தான், இன்னைக்கு அவன் நல்லா இருக்கணும்னு நான் பூஜைல உட்கார்ந்திருக்கேன். கடவுளே உன் சோதனைக்கு அளவே இல்லையா? குழந்தை வேணுங்குற பேர்ல என்னை ஏமாத்தி அக்ரிமெண்ட் போட்டு டார்ச்சர் பண்ற அவன் நல்லாவே இருக்கக் கூடாது. இவன் கிட்ட இருந்து எப்படியாவது என்னையும் என் அம்மாவையும் காப்பாத்திடு’ தீவிரமான பிரார்த்தனையில் இருந்தாள் நதியா.

மிதுன் குடும்பத்தார், நதியா அவனுக்காக பிரார்த்திக்கிறாள் என்று நினைத்திருக்க, அவள் மனதில் இருக்கும் உண்மையை நதியா மட்டுமே அறிவாள். அவள் பிடிக்காமல் இந்த பூஜையில் வந்து அமர்ந்திருக்கிறாள், இப்போது மனதிற்குள் தன்னை வசைபாடிக் கொண்டிருப்பாள் என்பதை மிதுனும் அறிவான். அவள் செய்வதை எல்லாம் பார்த்து, அவளுடைய நிலையை எண்ணி மனதிற்குள் சிரித்தவாறு இருந்தான் மிதுன்.

ஒருநாள் இதே மிதுனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவள் தன்னிடம் மன்றாடப் போவதை எண்ணி கடவுளும் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

பூஜை முடிந்ததும் ரூபிணி எல்லோருக்கும் பிரசாதமும், வளையல், சேலை, பிளவுஸ் துணி, மஞ்சள், குங்குமம், பூ, சீப்பு, கண்ணாடி இதெல்லாம் வைத்த தாம்பூலப் பையையும் தந்தாள். அது முடிந்ததும் ரூபிணியும், நதியாவும், ரேஷ்மியும் சுமங்கலிப் பெண்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். அதன் பிறகு ருக்மணி, ராதா காலில் விழுந்து நதியா வணங்க, ராதா நகர்ந்து கொண்டார். அவளுக்கு ஆசீர்வாதமும் செய்யவில்லை.

அடுத்து ருக்மணி பாட்டி மிதுன், தேவ், அரவிந்த் மூவரையும் அழைத்து மனைவிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கச் சொன்னார். ரூபிணி, தேவ் காலில் விழுந்து வணங்க, அவன் அவள் அணிந்திருந்த தாலியிலும், நெற்றி வகுட்டிலும் குங்குமம் வைத்து, நெற்றியில் சந்தன குங்குமம் வைத்து அட்சதை தூவி அவளை ஆசீர்வாதம் செய்தான். “ரூபிணி.. நீயும் அவனுக்குப் பொட்டு வச்சு விடு” பாட்டி சொல்ல, அவள் தேவ் நெற்றியில் குங்குமம் வைத்து, அவன் கண்களைப் பார்த்து சிரித்தாள். 

அடுத்து அரவிந்த் தும் ரேஷ்மியை ஆசீர்வாதம் செய்து முடிக்க, பட்டு வேஷ்டி சட்டையில் கச்சிதமான கட்டழகுடன் வந்து நின்றான் அந்த ஆறடி ஆணழகன். நதியா அவனுக்கருகில் தயங்கியவாறே வந்து நின்றாள்.

‘அய்யோ இவன் கால்ல நான் விழனுமா?’ மனதிற்குள் முணுமுணுத்தபடி அவன் காலில் விழுந்து எழுந்தவள், அவன் முகத்தைப் பார்த்திட, அவனுடைய பழுப்பு நிற விழிகளில் ஒளி வீசியது. அவன் அணிந்திருந்த பட்டின் ஜொலிப்பில் அவனது முகம் பிரகாசிக்க, அவள் நிலையை நினைத்து மனதிற்குள் சிரித்திருந்தவனின் மந்தகாசப் புன்னகையில் மனம் மயங்கிப் போனாள் பேதை.

அவள் தாலியை நீட்ட அதில் குங்குமம் வைத்தவன், அவள் நெற்றி வகுட்டிலும் குங்குமம் வைத்து, நெற்றியில் சந்தன குங்குமம் வைத்து, அட்சதை தூவி அவளை ஆசீர்வதித்தான். மனதிற்குள் என்ன நினைத்து ஆசீர்வதித்தானோ அது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சம்.

“நதியா.. அவனுக்கு பொட்டு வச்சு விடு” என பாட்டி சொல்ல, நதியா அசைவின்றி அவன் விழிகளைப் பார்த்து ரசித்தவாறு நின்றிருந்தாள். பாட்டி அவளுடைய தோளில் தட்ட, நினைவுக்கு வந்தவள், ‘நதியா.. இவன் உனக்கு வேணாம், உனக்காக அழகான எதிர்காலம் வெளிய காத்துகிட்டு இருக்கு. குழந்தையை பெத்துக் குடுத்திட்டு இங்கிருந்து ஓடிடு’ என நினைத்து தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

அவள் மிதுனுக்கு பொட்டு வைக்க குங்குமத்தை எடுக்க, அவன் ‘வேண்டாம்..’ என்பதுபோல் அவளை அனல் பார்வை பார்த்தான். அவள் நடுங்கிக் கொண்டே கையைத் தூக்க, அதற்குள் மற்றவர்கள் அழைக்க பாட்டி திரும்பிவிட, மிதுன் நகர்ந்து சென்றான். ‘அப்பாடா தப்பிச்சோம்..’ என்று நதியாவோ பெருமூச்சு விட்டாள்.

வேலையாட்கள் பரிமாற, பூஜைக்கு வந்தவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க, நதியா அறைக்குச் சென்றாள். “அவனே தாலி கட்டல. இந்த தாலிக்கு ஒரு பூஜை வேற” கடுங்கோபத்தோடு புலம்பியவள் தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு மெத்தையில் விழுந்தாள்.

சிறிது நேரத்தில் அங்கு மிதுன் வர, “உங்க அக்ரிமெண்ட்ல குழந்தை மட்டும் தான பெத்துக் குடுக்க சொன்னீங்க. பட்டினியா கிடக்கணும், உங்களுக்கு பொண்டாட்டியா பூஜை பண்ணனும், கால்ல விழனும் இப்படி எதும் போட்டதா ஞாபகம் இல்லையே” நதியா கேலியாய் கேட்டிட, மிதுன் அவள் கழுத்தில் தாலியின்றி இருப்பதைப் பார்த்தான்.

பதிலுக்கு கேலிப்புன்னகை ஒன்றை உதிர்த்தவன், அமைதியாக மெத்தையில் காலை நீட்டி சாய்ந்தவாறு அமர்ந்திட, “சார்.. இன்னும் என்னெல்லாம் பண்ண சொல்லுவீங்க. நானும் உங்களுக்காக இதெல்லாம் பண்றேன். ஒருநாள் என் அம்மா முகத்தை பார்க்கக் கூட விடமாட்டேங்குறீங்க” மனதிற்குள் இருந்த ஆதங்கத்தைக் கேட்டே விட்டாள்.

அவளை அலட்சியப் பார்வை பார்த்தவன், “என் முன்னாடி வாய்ஸ ரைஸ் பண்ணதன்னு சொல்லியிருக்கேன்ல. நேத்து வாங்கினது போதலையா? இன்னைக்கும் உனக்கு வேணுமா?” கேலியாகத் தான் கேட்டான். 

நதியா அவனிடம் ஏதோ சொல்லவர, அதற்குள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு, இருவரும் அமைதியாகினர். நதியா கழுத்தில் தாலி இல்லாததால், சேலை முந்தானையை தோளோடு போர்த்தி கழுத்தையும் மூடிக் கொண்டாள்.

மிதுனின் நண்பர்கள் வந்து, அவனோடு மெத்தையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ரேஷ்மி வந்து, “பாட்டி உன்னை கீழ கூப்பிடுறாங்க நதியா” என்று சொல்ல, வெளியே செல்ல முற்பட்டவள் ‘அய்யோ தாலியை போடணும்’ என்று நினைத்தவாறு கீழே குனிந்து அதைத் தேட ஆரம்பித்தாள். 

“என்னம்மா தேடுற? சொல்லு நாங்களும் தேடி எடுத்து தர்றோம்” என்று அரவிந்த், சத்யா, ரேஷ்மி சொல்ல, “என்னோட மோதிரம் விழுந்திடுச்சு, வேணாம் நானே தேடிக்கிறேன்” என்று அறை முழுக்க தேடிக் கொண்டிருந்தாள். மிதுன் அந்த தாலியை எடுத்து சட்டைப் பாக்கெட்டுக்குள் ஒளித்து வைத்தவன், அவளை தேட விட்டு சிரித்தவாறு ரசித்துக் கொண்டிருந்தான். 

அவர்களும் நதியாவுடன் சிறிது நேரம் தேடிவிட்டு கீழே சென்றனர். மெத்தைக்கு அடியில் நுழைந்து தேடிக் கொண்டிருந்தவள், கீழே இருந்து வெளியே வர, அவளை குனிந்து வேடிக்கை பார்த்திருந்தவனின் நெற்றியில் முட்டினாள்.

“ஹே ஸ்டுபிட்.. உன் கண்ணு என்ன பொடணியிலையா இருக்கு. இப்படி வந்து முட்டுற” கடுப்பாய் அவன் கேட்க, ‘உன் இரும்பு மண்டை முட்டி எனக்குத் தான் வலிக்குது ரோபோ. நீ எதுக்கு கத்துற?’ தனக்குள்ளே அவனை அர்ச்சித்து தாலியை தேடிக் கொண்டேயிருந்தாள். 

பாட்டி இண்டர்காமில் அழைக்க, பதற்றத்தோடு தேடிக் கொண்டிருந்தாள். அங்கே அவள் போகவில்லை என்றாலும், டிரெஸ்ஸிங் அறைக்குள் சென்று அவள் தேடிக் கொண்டிருக்க, அறைக் கதவை தட்டிய மிதுன் நதியா திறந்ததும் தாலியை அவள் முகத்தில் விட்டெறிந்து அங்கிருந்து சென்றுவிட, தன் நிலைமையை நினைத்து அவளுக்கே கழிவிரக்கம் தோன்றியது. ஏனோ அவள் இப்போதெல்லாம் அழுவதில்லை. அழுது அழுது கண்ணீரும் வற்றியே போனது. 

இறுகிப் போன முகத்துடன் தாலியை அணிந்து கொண்டு கீழே சென்றாள். மேலே அறைக்குச் சென்ற போது மிதுன் நெற்றியில் இல்லாத குங்குமம் இப்போதிருப்பதைக் கண்டு, அவன் தம்பிகளும், தங்கையும் குறும்பாய் சிரித்திட, அவன் நண்பர்களோ குழப்பமாய் அவனைப் பார்த்தார்கள். 

மிதுனுக்கும் நதியாவுக்கும் இடையில் நடப்பது அவர்களுக்குத் தெரியுமல்லவா? அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்தால் இருவரும் நெருக்கமாக இருப்பதை போலத்தான் அங்கிருக்கும் அனைவருக்கும் தோன்றும்.

அவர்கள் முட்டிக் கொள்ளும் போது, நதியா நெற்றியில் இருந்த குங்குமம் அவன் நெற்றிக்கு கொஞ்சம் தாவி விட்டது. இதெல்லாம் தெய்வ சங்கல்பம். யாராலும் இதைத் தடுத்திட முடியாது. மிதுனும் நதியாவும் நினைத்தாலும் தடுத்திட முடியாது.  

இப்படியே சில நாட்கள் செல்ல.. தலைமை அலுவலகத்தில் சந்தித்துக் கொண்ட நண்பர்கள் மூவரும், பொதுவாக பிசினஸ் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு அரவிந்த் மெல்ல மிதுன் பற்றிய பேச்சை ஆரம்பித்தான்.

“உன்னோட அக்ரிமெண்ட் கல்யாணம் எவ்வளவு தூரம் போயிருக்கு?” அரவிந்த் சூசகமாக கேட்க, “என்னடா கேட்குற?” புரிந்தும் புரியாதது போல் நடித்தான் மிதுன்.

“ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டீங்களா அப்படின்னு கேட்கிறான்” சத்யா அரவிந்த் பேசியதை விளக்கிட, “ஹ்ம்ம்..” என்றான் மிதுன்.

“அவனவன் கல்யாணம் பண்ணி, பொண்டாடியைத் தங்கமா தாங்கி, காதல் பண்ணி, ஏதேதோ மெத்தட் லாம் டிரை பண்ணி பார்த்தும் இன்னும் குழந்தை உண்டாகலையாம். இவர் செக்ஸ் வச்சுக்கிட்டதும் குழந்தை வந்திடுமாம்” அரவிந்த் மனதில் நினைத்ததைச் சொல்ல, “என்ன மச்சான் நீ உன்னோட கதையை சொல்ற போல?” சிரித்தபடி கேட்டான்  சத்யா.

“நீ கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு சும்மா இரு” என்று சத்யாவை முறைத்த அரவிந்த், மிதுனிடம் திரும்பி, “இங்க பாரு மித்து.. உனக்கென்ன வயசில்லையா? அழகில்லையா? திறமையில்லையா? இவ்வளவு இருந்தும் எதுக்கு இந்த அக்ரிமெண்ட், பொய் கல்யாணம், குழந்தை எல்லாம். இதெல்லாம் நமக்குத் தேவையா? எனக் கேட்டான்.

“இப்போ என்னை என்ன பண்ண சொல்றீங்க?” மிதுன் எரிச்சலுடன் கேட்க, “நாளைக்கு அக்ரிமெண்ட் மூலமா பிறக்கிற அந்த குழந்தையோட எதிர்காலத்தை நினைச்சுப் பாரு. நதியா பார்க்க, பழக நல்ல பொண்ணா தான் இருக்கா, பேசாம அவளையே கல்யாணம் பண்ணிக்கோ” சிரிப்பை ஒதுக்கி நியாயமாய் பேசினான் சத்யா.

மிதுன் பதிலேதும் பேசாமல் இருக்க, நதியா உனக்கு வேண்டாம்னு நீ நினைச்சா அவளை அனுப்பிட்டு, உன் அழகுக்கும் தகுதிக்கும் ஏத்த பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ” நண்பன் மனதில் இருப்பதை அறிய இருவரும் ஏதேதோ பேசினர். 

“அப்போ செக்ஸ் ஒர்க்கர்ஸ் க்கு குழந்தை பிறக்குறதில்லையா?” மிதுன் கேட்ட கேள்வியில் நண்பர்கள் அதிர்ந்து போனார்கள். மிதுன் அவனுக்கும் நதியாவுக்கும் இடையே நடப்பதை வெறும் வேலை என்ற அர்த்தத்தில்தான் இதைக் கேட்டான். 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விஷ்ணுவோ, நதியாவை மிதுன் வேறு மாதிரி பார்க்கிறான் என்ற அர்த்தத்தில் தவறாகப் புரிந்து கொண்டு கோபத்தில் அவனை மனதிற்குள் அர்ச்சித்தான்.

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page