அத்தியாயம் 1
ஆதவனின் பொற்கரங்கள் சுகமாய் தழுவிய அந்தக் காலை வேளையில் மலையூர் (கற்பனை ஊர்) கிராமமே பசுமையாய் காணப்பட்டது. மலைகள் சுற்றியும் உள்ளதாலோ என்னவோ இயற்கை அன்னை தன் விருப்பம்போல் பசுமையை தன் ஆடையாய் உடுத்தியிருந்தாள்.
அரண்மனை போன்ற அந்த வீடு காலையிலே பதட்டமாய் காணப்பட்டது.
“அப்பத்தா, எல்லாம் நீ பண்ண வேலை… எதுக்காக அவனை இங்கே கூட்டிட்டு வந்து எங்களை அவமானப்படுத்துற?” என்று தன் எதிரே நின்றவனை முறைத்தபடி பார்த்துக் கத்தினான் பதினைந்து வயது துருவன்.
“துருவா, எதுக்கு இப்போ இப்படி கத்துற? உங்களுக்கு எல்லாம் எப்படி இந்த வீட்டுல உரிமை இருக்கோ அதே போலத்தான் அவனுக்கும் இந்த வீட்டுல உரிமை இருக்கு. இந்த வீட்டுல இன்னும் முடிவெடுக்கற உரிமை எனக்கு இருக்குன்னு நான் நினைக்கிறேன். உங்களைப் போல் அவனும் என்னோட பேரன் தான்.” என்று கற்பகநாயகி அழுத்தமான குரலில் முடிக்கும்போது,
“யாருக்கு யாரும்மா பேரன்? எங்கேயோ போக வேண்டிய அனாதையை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து சொந்தம் கொண்டாடிட்டு இருக்கீங்களோ?” என்றபடி வந்தார் மாணிக்கம்.
“மாணிக்கம் பார்த்துப் பேசு! ஆத்திரத்துல வார்த்தையை விடாத… அவன் யாரோ அனாதை கிடையாது. உன்னோட சொந்த தங்கச்சி பையன். அதை மறந்துடாத…” என்றார் கம்பீரமான குரலில்.
“எது என் தங்கச்சியா? அவளை என் தங்கச்சின்னு இன்னொரு முறை சொல்லாதீங்கம்மா… அவ பண்ணிட்டு போனதை மறந்துட்டீங்களா? நம்ம குடும்ப மானத்தை கப்பலேத்திட்டு அந்தக் கீழ் ஜாதிக்காரனோட ஓடிப் போனவ என் தங்கச்சி கிடையாது. எனக்கு இருக்கிறது ஒரே ஒரு தங்கச்சின்னா அது பரிமளம் தான்.” என்ற மாணிக்கத்திற்கு அப்போதும் ஆத்திரம் சற்றும் குறையவில்லை.
“இதோ பாரு மாணிக்கம், நடந்து முடிஞ்சதைப் பத்திப் பேசுறதால இப்போ எதுவும் மாறிட போறது கிடையாது. இப்போ அவ இந்த உலகத்துலேயே இல்லை. அவ பண்ண தப்புக்கு இவனுக்குத் தண்டனை தர்றது கொஞ்சமும் நியாயம் இல்லை. அவனும் இந்த வீட்ல இருக்கட்டும். இந்தக் குடும்பத்தோட தலைவி நான் தான்னு நினைக்கிறேன்.” என்றார் அழுத்தமாக.
அதற்கு மேலும் தாயின் வார்த்தையை மீற முடியாமல் தன் முன்னே இருந்தவனை முறைத்தபடி தன் மகன் துருவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
இவ்வளவு நேரம் அமைதியாக அங்கே நடப்பதை நின்று வேடிக்கை பார்த்தபடி இருந்த மாணிக்கத்தின் மனைவி சகுந்தலாவும் அங்கிருந்தவனை முறைத்தபடி தன் கணவனின் பின்னே சென்றுவிட்டார்.
கற்பகநாயகியோ தன் முன்னே நின்ற பத்து வயது பாலகனை பார்த்து முகத்தில் சிறிதும் புன்னகையை காட்டாமல்,
“உள்ளே வா…” என்று ஒற்றை வார்த்தையில் அழைத்தவர் உள்ளே திரும்பி,
“அமுதா…” என்று கம்பீரமாய் அழைத்தார். அவரின் குரலுக்கு அடுத்த நொடியே உள்ளிருந்து வந்தவள் தன் கைகளைக் கட்டியபடி,
“அம்மா, சொல்லுங்கம்மா…” என்றாள் பவ்யமாய்.
அமுதா அந்தக் குடும்பத்தில் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து வருபவள். இந்தக் குடும்பத்தைத் தவிர வெளி உலகம் அறியாதவள்.
“இவனோட பேரு விவேகன். இனி இங்கே தான் தங்கப் போறான். கீழே இருக்குற ரூம்ல ஒரு ரூமை ஒதுக்கிக்கொடு.” என்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவர் சென்றதும் தன் முன்னே நின்றவனை தன் கூரிய விழிகளால் அளவிட்டவள் அவனின் அந்த மழலை முகம் அவளுக்கு யாரையோ நினைவுபடுத்தத் தன் நினைவுகளில் அந்த முகத்துக்குச் சொந்தமான உருவத்தைத் தேடியவளுக்கு விடையாய் கிடைத்த வதனம் அவளின் முகத்தில் புன்னகையை தோற்றுவித்தது.
அவனின் அருகில் சென்று பாசமாய் அவனின் தலையை வருடிக் கொடுத்தவள் கண்களில் கண்ணீர்த் துளி திரண்டது.
தன் சிரசின் மேல் பாசமாய்ப் படிந்த கரத்தின் கருணையில் விவேகன் சற்று நிம்மதி கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும். அவனுக்கு நன்றாகத் தெரியும் இங்கே யாரும் தன்னை அன்புடன் வரவேற்க போவதில்லை என்று.
நன்றாக விவரம் தெரிந்த வயதில் இருந்தே தாயின் போதனைகளையும் அறிவுரைகளையும் கற்று வளர்ந்தவனுக்கு வயதுக்கு மீறிய பக்குவமும் இருந்தது.
அதனாலேயே மற்றவர்களின் ஒட்டாத பேச்சையும் அவர்களின் கோபத்தையும் கடந்து போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
ஆனால் அவனின் வாழ்வில் முதல் முறையாக அவனின் அன்னை தந்தைக்குப் பின்பு ஒரு பாசமான வருடல் அது அமுதாவிடம் கிடைக்க ஏனோ அந்த நொடியே அவனுக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது.
“நீ வசுவோட பையனா?” என்றார் பாசமாய்.
அவரின் கேள்விக்கு ஆமாம் என்று தலையாட்டியவனைக் கண்டு அமுதாவிற்கு உள்ளமெல்லாம் வலித்தது.
யாருமில்லாத அனாதையாய் தான் இந்த வீட்டிற்கு வந்தபோது தனக்கு அடைக்கலம் தந்தவள் வசுந்தரா. வசுந்தராவிற்கு அமுதாவை தோழியாய் ஏற்றுக் கொள்வதில் எந்த விதமான பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால் அமுதாவால் அப்படி ஏற்க முடியவில்லை. காரணம் பெரிதாய் ஒன்றும் கிடையாது, வசுந்தராவின் வசதி தான்.
காதலில்தான் வசதி பார்க்க வேண்டுமா என்ன? நட்பிலும் சில நேரங்களில் வசதியைப் பார்க்க நேரிடுகிறது. அதுவும் இக்கட்டான நேரத்தில் தான் தங்குவதற்கு பாதுகாப்பை ஏற்படுத்திய குடும்பத்தின் மரியாதைக்கு தன்னால் எந்தப் பங்கமும் வந்துவிடக் கூடாது என்று தன் தோழமையை மறைத்து வசுவை, “வசும்மா…” என்று அழைத்தாள்.
தோழியின் உள்ளம் புரிந்ததனால் அதற்கு மேலும் அவளை வற்புறுத்தாமல் அப்படியே அதனை ஏற்றுக் கொண்ட வசுந்தரா அமுதாவை எப்போதும் தள்ளி நிறுத்தியதில்லை.
அப்படி சிறுவயதில் இருந்தே ஒன்றாகவே இருந்த வசுந்தரா பருவ வயதில் காதல் என்று வந்து நின்றதைதான் இக்குடும்பத்தால் ஏற்க முடியவில்லை.
அதுவும் தங்களுக்கு கீழே உள்ள இனப்பிரிவில் இருக்கும் ஒருவனை தன் இணையாக ஏற்றுக் கொள்ள துடித்த வசுந்தராவிற்கு அவசர அவசரமாய் திருமண ஏற்பாட்டினை செய்ய அவளோ தன் காதல் பெரிது என்று தன் காதலனுடன் சென்றுவிட்டாள்.
அன்றோடு அவளைத் தலைமுழுகிய குடும்பம் இத்தனை வருடங்கள் கழித்து அவளின் மகனை அழைத்து வந்ததன் காரணம் தான் என்னவோ? விடை காலத்தின் கையில்!
தன் வசுவின் மகனைத் தன் கரங்களில் பிடித்துக் கொண்டவள்,
“வா ராஜா, போலாம்.” என்றபடி வீட்டின் உள்ளே அழைத்து வரும்போது விவேகனின் கரத்தை மற்றொரு பிஞ்சுக் கரமும் பற்றிக்கொண்டது பற்றுக் கொடியாய்.
அந்தக் கரத்தின் மென்மையில் யாரென்று திரும்பிப் பார்த்தவனின் கண்களுக்குப் பஞ்சு பொதிகையாய் சற்று பூசினாற்போல் பஞ்சு மிட்டாய் கன்னத்தில் குழி விழச் சிரித்தபடி அழகிய தேவதையாய் நின்றிருந்தாள் அவள்.
அவளைக் கண்ட அமுதா சிரித்தபடி, “ஹேய் அரு குட்டி! இது யாருன்னு தெரியுமா?” என்றாள் அவளையும் பிடித்தபடி.
அமுதாவின் கேள்விக்குத் தன் பெருவிரலை தாடையில் வைத்து யோசித்தபடி தன் குலோப் ஜாமூன் உதட்டைப் பிதுக்கியபடி தெரியவில்லை என்றாள் அரு என்ற அருந்ததி.
“ஓ! என் அரு குட்டிக்குத் தெரியலையா… அமுதா சொல்லவா யாருன்னு?” என்றாள் அவளின் உயரத்திற்கு குனிந்தபடி.
“ம்ம்…” என்று ஓசை எழுப்பியபடி சந்தோஷமாய் தலையசைத்தாள் அருந்ததி.
“இது வந்து அரு பாப்பாவோட அத்தான். அதாவது கோகுல் அத்தான் இருக்காங்க இல்லை… அவங்களைப் போல!” என்று சொல்லி முடிக்கும் நேரம் அவளின் கன்னத்தில் பளீரென்று அறை விழுந்தது.
அந்த அறையில் சற்றே சித்தம் கலங்கியவள் கன்னத்தில் கைவைத்தபடி எதிரே நிமிர்ந்து பார்க்க அங்கே ஆக்ரோஷத்தில் நின்றிருந்தார் மாணிக்கம்.
“யாருக்கு யாருடி அத்தான்? என்ன உறவு சொல்லித் தர்றியா? நீயே ஒரு அனாதை நாயி… என் வீட்ல எச்ச சோறு திங்கறவ… நீ என் பொண்ணுக்கு உறவு முறையைச் சொல்லித் தர்றியா? உன் இடம் எதுவோ அப்படியே இருந்துக்கோ, அதிகமா எதிலாவது தலையிட்ட கொன்னு புதைச்சிடுவேன். ஜாக்கிரதை!” என்று அவளை மிரட்டியபடி தன் மகளை அங்கிருந்து தூக்கிக்கொண்டு சென்றார்.
போகும் அவரைக் கலங்கிய விழிகளுடன் பார்த்தவள் சற்று நேரத்தில் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு விவேகனிடம் திரும்பியவள்,
“நீ வா ராஜா, போலாம்.” என்றபடி அவனின் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.
அவளின் கரத்தோடு தன் பிஞ்சுக் கரத்தைச் சேர்த்தவன்,
“என் பேரு ராஜா இல்லை விவேகன்.” என்றான் விவேகமாய்.
“ஓ! உங்க பேரு விவேகனா! நீங்க ஊருக்கு விவேகனா இருந்துட்டு போங்க, ஆனா எனக்கு ராஜா தான்! நான் உன்னை ராஜாவாத்தான் பாக்குறேன்.” என்றாள் வெகுளியாய் சிரித்தபடி.
சற்று முன்பு தனக்காக அறை வாங்கிக்கொண்டு இப்போது சிரிக்கும் அவளைப் பார்த்தவனுக்கு தன் தாய்தான் நினைவுக்கு வந்தாள்.
ஏனோ எந்தவிதமான பாசாங்கும் இல்லாத அந்தப் பெண்மணியை அவனுக்கு நிரம்பவே பிடித்திருந்தது.
தன் தாய்க்கு அடுத்து பிடிக்கும் பெண்ணாய் அமுதா மாறிப்போனாள் விவேகனுக்கு.
“ஆமா ராஜா, நீ என்ன படிக்குற?” என்று பேசியபடி அவனை அழைத்து வந்தவள் தன் அறைக்குப் பக்கத்து அறையை அவனுக்குச் சுத்தம் செய்து கொடுத்து அதில் தங்கிக்கொள்ளச் சொன்னாள்.
“நானு அஞ்சாவது படிக்குறேன். இனிமே ஆறாவது போணும்.” என்றான் பெரிய மனிதனாய்.
“ஓ… அப்படியா! இனி ராஜா இங்கிருந்தே ஸ்கூலுக்கு போலாம் சரியா?” என்றபடி அவனின் தலையைக் கலைத்துவிட்டாள்.
அவள் கலைத்து விட்ட தலையைச் சீராக்கிக் கொண்டவன்,
“தலையைக் கலைக்காதீங்க எனக்குப் பிடிக்காது.” என்றான் சற்றே பொய்யான கோபத்துடன்.
“ஓஹோ! என் ராஜாவுக்குத் தலையைக் கலைச்சா பிடிக்காதா? ஆனா என்ன செய்ய எனக்கு இப்போ தானே தலையைக் கலைக்கப் பிடிச்சிருக்கு.” என்றபடி மீண்டும் தலையைக் கலைத்து அவனை வம்பிக்கிழுத்தாள்.
அவனை அந்த வீட்டிற்கு அழைத்து வந்ததுடன் தன் கடமை முடிந்ததென ஒதுங்கிக் கொண்டார் கற்பகநாயகி. ஏனோ மகளின் மீது கொண்ட கோபம் இன்னும் மனதோரம் மிச்சமிருந்தது.
கற்பகநாயகி ராஜவேலு தம்பதியருக்கு மாணிக்கம், பரிமளம், வசுந்தரா என்று மூன்று பிள்ளைகள். வீட்டிற்கு மூத்தவன் மாணிக்கம் இரண்டாவது பரிமளம் மூன்றாவது கடைக்குட்டியாய் அனைவருக்கும் இளவரசியாய் பிறந்தவள்தான் வசுந்தரா.
வீட்டின் கடைசிப் பெண் குழந்தை என்பதாலேயே அனைவருக்கும் செல்லமாகி போனவளுக்கு சுதந்திரமும் அதிகம். அதுபோலத் தனக்கு வேண்டும் என்பதை அடைந்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் அதிகம்.
அதுதான் அமுதாவையும் இங்கே தங்க வைத்து அவளுக்குப் பாதுகாப்பான கூட்டைத் தந்தது. அந்தப் பிடிவாதம்தான் தன் காதல் கைகூட உயிரையே வைத்திருந்த குடும்பத்தை எதிர்க்க வைத்தது.
இப்படி வசுந்தராவின் நினைவில் விவேகனுக்கு உணவைக் கொடுத்தாள்.
அவனோ அதை வாங்கி ஒரு கவளம் உணவைத் தன் வாயில் கொண்டு சேரும் நேரம்,
“த்தான் எக்கு…” என்றபடி வந்து நின்றது வெண் பிஞ்சு விரல்கள்.
ஏனோ அந்த மழலை மொழியில் அத்தான் என்ற வார்த்தை முழுமை பெறாவிட்டாலும் கூட அவனுக்கு அது அழகாய்தான் தெரிந்தது.
அடுத்த பாகத்துல பாக்கலாம் செல்லம்ஸ்!
மாலை வரும்…✍️
***
