வேனலின் வெண்பூவே!
அத்தியாயம் 11
காதல் இப்படி இருக்கும்! அப்படி இருக்கும்! பட்டர்ஃபிளை பறக்கும்! ஆனால் காதல் ஒவ்வொருத்தருக்கும் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதுதான் உண்மை. ஆனால் நிச்சயம் கண்டிப்பாக உங்க காதலுக்குரியவங்களை அடிக்கடி நினைக்க வைக்கும். என்ன செய்யறாங்கன்னு யோசிக்க வைக்கும். உங்க லைஃபை அவங்களுக்கு தகுந்த மாதிரி மாத்திக்க வைக்கும். சந்திக்க நேரம் இல்லாமல் கிடைக்கும் சொற்ப நிமிடங்களும் பொக்கிஷம்தான். ஒரு நாள் முடியும்போது, அன்று முழுக்க நடந்த அத்தனையும் அவங்ககிட்ட சொல்லத் தோணும். ரொம்ப கஷ்டமான நாளில் ஒரு ஹக். அது போதுமே! நமக்காக ஒருத்தங்க இருக்காங்கன்னு சொல்ல! கைப்பிடிச்சு நம்மைத் தட்டிக் கொடுக்குமே அதுதான் காதல், அன்பு.
-பத்மமுகி.
மகிழுந்து மெல்லிய இசையுடன் சென்று கொண்டிருந்தது.
“முகி மேடமுக்கு இரண்டு வாரம் எப்படி இருந்தது?”
“அஸ்யூஸ்வல். ஹெவி வொர்க். அதோட ஸ்டடீஸ்.” என அவள் பதிலளிக்க ஆதி மனதுக்குள் ஒரு ஏமாற்றம் வியாபித்தது.
“என்னை நினைக்கவே இல்லையா? எனக்கு எவ்வளவு வொர்க் இருந்தாலும் உன்னோட நினைவு இருந்துட்டே இருந்துச்சு.”
“ஓ…” என விழிகளை விரித்துப் பார்த்தவள் அமைதியாகிவிட்டாள்.
அவளுக்கு இதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. ஆதிக்கும் தான் காதலைக் கூறியவுடன் முகிக்கும் அதே அளவு உணர்வுகள் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அதிகமாகத் தோன்றியது. ஆனால் தன்னை அவள் அந்த அளவு நினைக்கவில்லையோ என்று யோசித்தால் இதயம் வலிக்கவும் செய்தது. சுகமான இம்சையெனச் சிந்தித்துக் கொண்டான்.
“எங்க போறோம்?”
“எனக்கு உன் கூட நிறைய இடத்துக்குப் போக ஆசை. ஆனால் முதலில் இந்த இடத்துக்குக் கூட்டிட்டுப் போயிட்டு பின்னாடி மத்த இடத்துக்குப் போலாம்னு யோசிக்கறேன்.”
“ஹ்ம்ம்.” எனத் தலையசைத்தாள்.
முகியின் மனதிலும் தான் ஏதோ தவறாகச் சொல்லிவிட்டோமோ என்ற பதற்றம் எழுந்தது. அதுமட்டுமின்றி இப்படியொரு ஆடவனுடன் வெளியே செல்வது இதுதான் முதல் முறை. இரு கைகளையும் கோர்த்துப் பிசைந்து கொண்டே வந்தாள்.
அவன் நேரடியாகத் தன் உணர்வுகளை வெளிப்படுத்த முகிக்கு அந்த அளவு உணர்வுகளில்லை என்பதைக் கூறினால் அவன் வருத்தப்படுவான் என்று புரிந்திருந்தது. அதனால் மௌனம் காத்தாள். ஒருவன் காதலைச் சொன்ன உடனேயே எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எப்படி நம்பி வாழ்க்கையை ஒப்படைக்க முடியும்? அவன் திருமணமே என்று பேசி இருந்தாலும் ஜாக்கிரதை உணர்வு அவளை நம்பவிடவில்லை.
எத்தனையோ அழகான பெண்கள் இருக்கும்போது ஏன் என்னைத் தேடி வர வேண்டும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை. இவ்வளவு பணமும், வசதியும் படைத்தவன் என்னைப் போல் சதாரணப் பெண்ணைத் தேடி வர வேண்டிய அவசியம் என்ன? ஆசிரமத்தில் வளர்ந்தபோது மற்ற பெண்கள், ஆசிரியர்கள் ஆண்களைப் பற்றிக் கூறியவை, செய்தித்தாள்களில் படிப்பவை எல்லாம் அவள் மனதை பயமுறுத்தவே செய்தன. அனைவரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டியதாக இருக்கிறது பெண்களின் நிலைமை.
அப்போது போக்குவரத்தில் சிவப்பு நிற விளக்கு பளிச்சிட மகிழுந்தை நிறுத்தியவன் முகியைப் பார்த்தான்.
“இட்ஸ் ஓகே முகி. நான் எதுவும் நினைச்சுக்கல. சட்டுன்னு யாரையும் நம்ப முடியாதுதான். பரவாயில்லை.” என அவள் யோசனையை அப்படியே கூற முகி மேலும் விழிகளை விரித்தாள்.
ஆதியின் குரல் மென்மையாக மாறியது.
“முகிம்மா, அப்படி எல்லாம் ஆளை விழுங்கற மாதிரி பார்க்கக் கூடாது. ஹார்ட் பங்க்சர் ஆகிடும்.” என்றான்.
இதைக் கேட்ட முகியின் முகத்தில் புன்னகை ஒன்று உதயமானது. அரை மணி நேர பயணத்திற்குப் பின் வாகனம் ஒரு கோவிலின் முன் நின்றது.
“கோயிலா?” என்றாள்.
“உன்னை முதன் முதலில் ஒரு கோயிலுக்குக் கூட்டிட்டுப் போகணும்னு தோணுச்சு. அதான் கூட்டிட்டு வந்தேன். சாமி கும்பிட்டு வேற எங்காவது போலாம்.”
முகி கோவில் என்றதும் நிம்மதியாக இறங்கி வந்தாள்.
“நான் டைம் கிடைக்கறப்ப வருவேன். மனசு அமைதியாக இருக்கும்.”
இருவரும் மகிழுந்தை விட்டு இறங்க, ஆதி கோயிலின் முன் இருந்த பூக்கடையில் பூ, தேங்காய், பழம் என வாங்கிவிட்டான்.
முகியும் வாங்க முயல, “இதையே நீ எடுத்துட்டுப் போ முகி.” என்று தடுத்து விட்டான்.
கோயிலைச் சுற்றி மெதுவாக வலம் வர ஆரம்பித்தார்கள்.
“முகி, உன்னை ஏன் நான் கோயிலுக்குக் கூட்டிட்டு வந்தேன் தெரியுமா?”
ஏன் என்று முகத்தில் மட்டும் கேள்வியைக் காட்ட, “வீட்டில் பொண்ணு பார்த்திருந்தாலும் பெரும்பாலும் கோயிலில்தான் மீட் பண்ணுவோம். அதனால் கூட்டிட்டு வந்தேன்.”
அவன் பதிலில் முகியின் மனதில் சிறிதாக மொட்டுவிட்டப் பிரியம் மேலும் அதிகரித்தது. அவன் விழிகளில் தெரிந்த அன்பும், உண்மையுமே அதற்கு முக்கியக் காரணம்.
அமைதியாகக் கோவிலைச் சுற்றியவர்கள் சாமி சன்னதியிலும் வேண்டிக் கொண்டனர். ஆதி தங்கள் வாழ்க்கை செழிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.
முகியோ, “சாமி, இப்ப நான் இவர் கூட என்ன பண்ணிட்டு இருக்கேன்னே தெரியலை. பார்த்தால் நல்லவர் மாதிரிதான் இருக்கார். நீதான் என்னோட வாழ்க்கை நல்லாயிருக்க ஆசிர்வதிக்கணும்.” எனத் தன் வேண்டுகோளை வைத்தாள்.
ஆனால் வாழ்வு இனிமையாக அவ்வளவு எளிதில் அமைந்து விடாது என்பது போல் சிவப்புப் புடவை மற்றும் சிவப்பு மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அம்மன் அமைதியாக அருள்பாலித்தார். பார்வதி தேவியே சிவனை அடைய அத்தனைக் கடினப்பட்டார் எனும்போது சாதாரண மானுடப் பெண்ணின் வாழ்வு அவ்வளவு சுலபமா என்ன?
இருவரும் பிரசாதத்தை வாங்கிக் கொள்ள, பூசை செய்பவர் அவள் கையில் ஒரு துண்டு மல்லிகையும், ரோஜாவையும் கொடுக்க அதைப் பெற்றுக் கொண்டாள். நெற்றியில் சிறு கீற்றாய் வைக்கப்பட்டிருந்த திருநீற்றின் மீது சந்தனமும், குங்குமமும் வைத்துக் கொண்டவள் திரும்பி ஆதியைப் பார்க்க, ஆதியின் மூக்கில் திருநீறு இலேசாகப் பட்டிருந்தது.
“ஆதி சார், மூக்கில் திருநீறு கொட்டிருச்சு.”
உடனே அவன் கைக்குட்டையை எடுத்து நுனி மூக்கைத் துடைத்தான்.
“அங்கில்லை ஆதி சார். இங்க கொடுங்க.”
அவன் கையிலிருந்து கைக்குட்டையை வாங்கியவள், மூக்கின் மேலே துடைத்துவிட்டு நெற்றியில் இருந்த திருநீற்றையும் ஒழுங்குபடுத்தினாள்.
ஆதிக்கு அவளின் செயலில் மனம் நிறைந்துவிட்டது. அவள் நினைக்காமல் இருந்தால் என்ன? தன்னைப் பார்க்கிறாளே! அது போதும் என்று தோன்றியது.
கோவிலில் தெப்பக் குளம் இருக்க அதன் படிக்கட்டில் இருவரும் அமர்ந்து கொண்டனர். ஆதி அவளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். தண்ணீரில் அவர்கள் இருவரின் பிரதிபிம்பம் அலையாய் அசைந்து கொண்டிருந்தது. முகியின் மனதிலும் அவன் பார்வை அன்பின் சிதறல்களைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.
நேராக அமர்ந்து நீரைப் பார்த்துக் கொண்டிருந்த முகி நிமிர்ந்து பக்கவாட்டில் அவனைப் பார்த்தாள்.
“ஹப்பா! என்னைப் பார்த்துட்ட. ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?”
“போட்டாவா?”
“உன்னோட போனிலேயே எடு.”
“ஹ்ம்ம். இரண்டு பேரோட போனிலும் எடுக்கலாம்.” எனக் கூறியவள் தன் கைப்பேசியை எடுத்து ஒரு நிழற்படம் எடுத்துக் கொண்டாள். ஆதியும் தன் கைப்பேசியில் இருவரையும் எடுத்தவன், நீரில் தெரிந்த அவர்களது பிம்பத்தையும் நீரில் அலையில்லாத சமயத்தில் எடுத்துக் கொண்டான்.
“தேங்க்ஸ் முகி!”
“தேங்க் யூ! இங்க ரொம்ப அமைதியாக இருக்கு. நான் இங்க வந்ததே இல்லை.” என்று அவனிடம் நன்றி தெரிவிக்க அவன் முகத்தில் புன்னகை விரிந்தது.
“சரி கிளம்புவோமா? நெக்ஸ்ட் பீச் சைட் ரெஸ்டாரண்ட் போயிட்டு அப்படியே லஞ்சு சாப்பிடலாம்னு யோசிக்கிறேன். நீ என்ன சொல்ற?”
“ஓகே.” என்றவுடன் அவன் முகம் மேலும் மலர இருவரும் மீண்டும் மகிழுந்தில் ஏறிப் பயணத்தை ஆரம்பித்தனர்.
அடுத்த அரை மணி நேரத்தில் கடற்கரையைப் பார்த்தபடி அமைந்த உணவு விடுதிக்கு வந்தவர்கள் இருவர் மட்டும் அமரக்கூடிய இடத்தில் அமர்ந்து கொண்டனர். சற்று தள்ளித் தள்ளிப் போடப்பட்டிருந்த அழகிய குடில்கள் அவர்களுக்குத் தனிமையை வழங்கத் தூரத்தில் தெரிந்த அலையை ரசித்தாள் பத்மமுகி.
தாமரை இதழ்போல் குவிந்த இமைகளையும், அதன் வண்ண இதழ்களையும் கன்னத்தில் கை வைத்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி.
“ஆதி சார், கடல் ரொம்ப அழகாக இருக்கு.”
“கண்டிப்பா அழகுதான். கடலுக்கே அதோட அருமை தெரியலை.”
அவன் குரலில் திரும்பிப் பார்த்தவள் ஆதி தன்னையேப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள்,
“ஆதி சார்?”
“முகி, நீ ரொம்ப அழகாக இருக்க!”
சட்டென்று அவன் கூறியதில் உதடு கடித்தவள், ”தேங்க்ஸ்!” எனப் பதில் கூறிவிட்டு மெனுவைப் புரட்டினாள்.
“என்ன ஆர்டர் கொடுக்கலாம் முகி? போன தடவை மாதிரி இல்லாமல் இந்தத் தடவை என்னோட ட்ரீட்.”
“ஹ்ம்ம் ஓகே.”
தங்களுக்கு வேண்டிய உணவை இருவரும் பணியாளரிடம் சொல்லிவிட மீண்டும் தனிமை. முதல் முறை அவள் பாட்டுக்கு அவன் முன்னே உண்டு விட்டாள். ஆனால் இன்று தயக்கமாக இருந்தது.
“முகி, எங்கிட்ட நீ எப்பவும் போல் இருக்கலாம். நீ முதல் தடவை பார்க்கும்போது சாப்பிட்ட பாரு. அந்த மாதிரி இரு.”
எப்படி அவன் இப்படி பட்டுப் பட்டென்று மனதைப் படிக்கிறான் என்று தெரியாமல் முகி அவனைப் பார்த்துத் தலையசைத்து வைத்தாள். பின் கடலை வேடிக்கைப் பார்க்க அவள் விழிகளில் அந்தக் காட்சி பட்டது. உடனே சட்டென எழுந்து விட்டவள் உணவகத்தின் பாதையைத் தாண்டிச் சென்றாள்.
“முகி, என்னாச்சு? ஏன் போற?”
“ஆதி சார், அங்க பாருங்க. அந்தப் பொண்ணு ஸ்கூல் பொண்ணு. அந்தத் தடிமாடு அந்தப் புள்ளை கையைப் பிடிச்சு இழுக்கறான்.”
முகி சில நிமிடங்களில் கடல் மணலில் புதைய நடந்து அவர்களை அடைந்து விட்டாள்.
“டேய்! கையை விட்றா?”
திடீரென்று இருவர் வந்ததும் அவன் விழித்தான். அந்தப் பெண்ணின் கையை விட்டவன் ஓட ஆரம்பித்தான்.
“தேங்க்ஸ் அக்கா!” என்ற பள்ளிப் பெண் முகத்தில் நிம்மதி தோன்றியது.
“யாருமா அவன்?”
“அக்கா, அவனும் நானும் லவ் பண்ணோம். ஆனால் வீட்டில் கண்டுபிடிச்சதும் விட்டுட்டேன். திரும்பவும் இன்னிக்கு இங்க வரச் சொன்னான். ஆனால்…”
அவள் சொன்ன பதிலில் முகிக்கு கோபம் வந்து விட்டது.
“ஏம்மா, நீ இன்னும் ஸ்கூல்தானே படிக்கிற? அவனைப் பார்த்தால் கிட்டதட்ட நாற்பது வயசு இருக்கும் போல.”
“தெரியாமல் பண்ணிட்டேன்.”
முகியின் விழிகள் கோபத்தில் ஜொலித்தது.
“போம்மா, வீட்டுக்குக் கிளம்பி போ. நீ அவன் கூப்பிட்டான்னு எங்கேயும் வராத. சூழ்நிலை ஒரே மாதிரி இருக்காது.” என ஆதி கூறவும் முகி கோபத்துடன் திரும்பினாள்.
தொடரும்…
