அந்தப் பிரம்மாண்டமான CEO நாற்காலியில் ஹாயாகச் சாய்ந்துகொண்டு, கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பால் பெய்து கொண்டிருந்த மழையை ரசித்தபடி காபி அருந்திக் கொண்டிருந்தான், சித்தார்த்.
‘தடதட’ என யாரோ கதவை உடைப்பது போலத் திறந்து கொண்டு உள்ளே பாய, சித்தார்த் தன் நாற்காலியில் இருந்து ஒரு நிமிடம் நிலைதடுமாறிப் போனான்.
வந்தது ஆகாஷ் என்று தெரிந்ததும், சிதறிய காபியைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்து அமர்ந்தான்.
“டேய் ஆகாஷ்! ஏன்டா இப்படி மூச்சிரைக்க ஓடி வர்ற? ஏதோ வானமே இடிஞ்சு விழுந்த மாதிரி உன் முகம் இருக்கே… என்னாச்சு?” எனச் சித்தார்த் பதற்றத்துடன் கேட்க…
ஆகாஷ் தன் சட்டையைச் சரி செய்துகொண்டே, “சொல்றேன்… சொல்றேன்! நீ முதல்ல அப்படியே உட்காரு,” என்றபடி, ஒரு நாற்காலியை விறுவிறுவென இழுத்துப் போட்டு அவனுக்கு மிக அருகில் அமர்ந்தான்.
“டேய் சித்தா… ஏர்போர்ட்ல இருந்து நாம காலையில வந்தப்போ, கேப் என்னை எந்த இடத்துல பிக்கப் பண்ணுச்சு?
சித்தார்த் குழப்பத்துடன், “தெரியலையே டா… நான் பாட்டுக்கு மொபைல்ல இருந்து லொகேஷனை மட்டும் அனுப்பி வச்சேன். ஏன், அதுல என்ன விஷயம்?” என்றான்.
“உன் மொபைலை எடுத்துப் பாரு… அது என்ன லொகேஷன்னு இப்பவே செக் பண்ணு!” என ஆகாஷ் அவசரப்படுத்த, சித்தார்த் வேகமாகத் தன் போனை எடுத்துப் பார்த்துவிட்டு, “இது மவுண்ட் மெட்ரோ டா… ஏன், இதுக்கு ஏன் இவ்வளவு பதறுற?” என்றான்.
“சரி… இப்பவே உடனே டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட்க்கு போன் பண்ணு. அந்த மெட்ரோ ரூட்ல தினமும் எத்தனை கேப் போச்சு? அதுல எத்தனை மெம்பர்ஸ் பிக்கப்-டிராப் ஆகுறாங்க லிஸ்ட்டை உடனே கேளு!”
“டேய் டேய்! கொஞ்சம் நிதானமா இருடா. எதுக்கு இந்த லிஸ்ட்? என்ன விஷயம்னு பொறுமையாச் சொல்லு,” என அவன் கேட்க,
ஆகாஷ் பிடிவாதமாக, “அதெல்லாம் அப்புறம் சொல்றேன், முதல்ல நீ போன் பண்ணிக் கேளு!” என்றான்.
“டேய்… நான் இப்போ இந்த கம்பெனியோட CEO டா! நான் போயிட்டு சாதாரண ஒரு கேப் லிஸ்ட்டை எப்படிக் கேட்க முடியும்? அது சரி இல்லையே,” எனச் சித்தார்த் சொல்ல
தன் தலையிலேயே கை வைத்துக்கொண்ட ஆகாஷ்… “அட ஆமாள்ள! நீ CEO… நான் உன் PA! இந்த ஆர்வத்துல அந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாரு,” எனச் சிரித்தான்.
சித்தார்த் ஒரு கிண்டலான புன்னகையுடன், “இப்போதாவது ஞாபகம் வந்ததே! நீதான் என் PA. இதோ ஆபீஸ் போன் இருக்கு… நீயே டிரான்ஸ்போர்ட் செக்ஷனுக்குப் போன் பண்ணி உன் அதிகாரத்தைக் காட்டாம விவரம் வாங்கு,” என்றான்.
“இல்ல இல்ல… இந்த விஷயத்தை நான் நேரடியா கேட்டா சரியா இருக்காது. சித்தா, நீ இப்பவே மேனேஜர் மனோஜ்க்கு போன் பண்ணு. அவனை உடனே ரூமுக்கு வரச் சொல்லு. நான் சொல்ற விபரத்தை அவன் மூலமா டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட்ல கேக்கச் சொல்லு… ப்ளீஸ்டா!” எனக் கெஞ்சினான்.
பெருமூச்சு விட்ட சித்தார்த். “சரிடா மங்காத்தா! உன் ஆசைப்படியே செய்றேன். ஆனா அந்த மங்கூஸ் மண்டையன் மனோஜ்கிட்ட என்ன சொல்லி இந்த லிஸ்ட்டை வாங்குறதுன்னு தான் தெரியல,” என முணுமுணுத்தபடி போனை எடுத்த சித்தார்த் ஆகாஷின் முகத்தையே கூர்ந்து பார்த்தான்.
அவன் கண்களில் தெரிந்த அந்தத் தீவிரம், இது வெறும் விளையாட்டு அல்ல என்பதை உணர்த்த, “டேய் .. இப்போ உன் பிளான் என்னன்னு சொல்லு. நான் எதை மனோஜ்கிட்ட கேட்கணும்?” என சித்தார்த் வினவ.
“சித்தா… இன்னைக்கு காலையில என்னை பிக்கப் பண்ண அதே கேப்லதான் அகல்யாவையும் தினமும் பிக்கப் பண்றாங்க. அதனால, இனிமேல் நானும் அகல்யாவும் தினமும் அதே கேப்லதான் ஆபீஸ்க்கு வரணும், போகணும். முக்கியமா… எங்க ரெண்டு பேரைத் தவிர அந்த கேப்ல வேற எந்த ஸ்டாஃப்பும் இருக்கக் கூடாது. இது ஃபர்ஸ்ட் பாயிண்ட்!”
சித்தார்த் அப்படியே வாய் பிளந்து நின்றான். “என்னடா சொல்ற? ஆபீஸ் கேப்பையே பிரைவேட் கார் மாதிரி மாத்தப் பார்க்கிறியா?”
ஆகாஷ் விடவில்லை, “அதுமட்டும் இல்ல… இன்னைக்கு எந்த இடத்துல என்னை பிக்கப் பண்ணுச்சோ, அதே இடத்துலதான் தினமும் என்னைப் பிக்கப் பண்ணி, அங்கேயே டிராப் பண்ணனும். இதுக்கு டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட்ல பெர்மிஷன் வாங்கிடு.”
சித்தார்த் தன் நாற்காலியை முன்னால் இழுத்துப்போட்டு, “டேய்! என்னடா டிராமா இது? ஒரு நாள் மழைக்காக கேப்ல வந்தேன்னு பார்த்தா… இப்போ என்னடான்னா வாழ்க்கை பூரா கேப்லயே போயிட்டு வரப் பிளான் பண்ற? உனக்குன்னு தனியா கார் இருக்கு, டிரைவர் இருக்காரு… அதையெல்லாம் விட்டுட்டு ஏன்டா இந்த லோக்கல் டிராவல்?” எனக் குழப்பத்துடன் கேட்டான்.
ஆகாஷ், சித்தார்த்தின் தோளை இறுகப் பற்றிக்கொண்டு, கண்களில் காதலோடு, “டேய் புரிஞ்சுக்கோடா! இந்த கேப் டிராவல் நேரம்தான் எங்களுக்கான தனிமையான நேரம். அந்த ஒரு மணி நேரத்துலதான் நான் அகல்யா கூட மனம் விட்டுப் பேச முடியும். அவளைப் பத்தி இன்னும் நிறையத் தெரிஞ்சுக்கறதுக்கும், அவளுக்கு என் மேல எவ்வளவு பிரியம் இருக்குன்னு புரிஞ்சுக்கறதுக்கும் இதுதான் ஒரே வழி!”
“டேய்… அதுக்காக ஒரு PAவா நடிக்கிறதே அதிகம், இதுல தினமும் இப்படி கேப்ல அலைஞ்சுட்டு இருப்பியா?” எனச் சித்தார்த் கேட்க,
ஆகாஷோ சளைக்காமல், “ஆமாம்! எனக்கு அதுல எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்புறம்… அந்த ஒரு இடம் சொன்னியே… என்னது அது?”
“மவுண்ட் மெட்ரோ!” எனச் சித்தார்த் முறைத்துக் கொண்டே சொல்ல,
“ஹான்… அதேதான்! அந்த மவுண்ட் மெட்ரோ இடத்துல நம்ம கார் ஒண்ணு நிப்பாட்டி வை. நான் கேப்ல இருந்து அங்க இறங்குனதும், நம்ம கார்ல ஏறி வீட்டுக்கு வந்துடுவேன். இது யாருக்கும் தெரியக்கூடாது!” எனத் தன் பிளான்-க்கு ஸ்கெட்ச் போட்டு முடித்தான் ஆகாஷ்.
சித்தார்த் தலையில் கை வைத்துக்கொண்டான். “சரிடா மகாராஜா! உன் காதலுக்காக இதையும் செய்றேன். மொத்தத்துல உனக்கும் உன் ஆளுக்கும் ஸ்பெஷல் கேப் வேணும்… அவ்ளோதானே? பண்ணிடுவோம். இப்போ அந்த மனோஜை நீயே வரச் சொல்லு,” என்றான்.
ஆகாஷ் துரிதமாக மேஜை மேலிருந்த போனை எடுத்து, மேனேஜர் மனோஜிற்கு டயல் செய்தான். போன் எடுத்ததுமே, “சார்! பாஸ் உங்களை உடனே உள்ள கூப்பிடுறாரு… சீக்கிரம் வாங்க!” என அவசர தோரணையில் சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.
ஊருக்கு அவசரமாக தன் அறையில் கிளம்பிக் கொண்டிருந்த மனோஜ், “பாஸ் கூப்பிடுறாரா? இப்போ என்ன தப்பு பண்ணோம்?” என்ற பயத்தில் அரக்கப்பறக்க மனோஜ் ஓடிக்கொண்டிருந்த வேகம், ஒரு நூறு மீட்டர் பந்தயத்தில் ஓடும் வீரனை நினைவுபடுத்தியது.
கையில் ஒரு கோப்புகளுடன், நெற்றியில் வழிந்த வியர்வை, கலைந்த தலைமுடி என அவனது தோற்றம் கெத்து காட்டிய பழைய மனோஜை எங்கோ தொலைத்திருந்தது.
இதைப் பார்த்தபடி, தன் கையில் இருந்த மக்கில் காபியை ரசித்து உறிஞ்சினாள் ஹேமா. பக்கத்தில் இருந்த அகல்யாவின் தோளைத் தட்டி, “அகல்யா! அங்கே பாரேன்… நம்ம புயல் மனோஜ் இப்போ ஈசல் மாதிரி எப்படித் துடிச்சுக்கிட்டு இருக்காருன்னு! இந்த புது CEO சரியான ஆளு தாண்டி இவருக்கு…” என நையாண்டியாகச் சொல்ல.
அகல்யா புரியாமல், “ஏன் டி அப்படிச் சொல்ற?” என வினவினாள்.
ஹேமா ஒரு மர்மப் புன்னகையுடன், “பின்ன என்னடி? வந்த முதல் நாளிலேயே அவனை வச்சு நல்லாச் செய்றாரு புது பாஸ். இவ்வளவு நாள் நம்மளை ஒரு அஞ்சு நிமிஷம் காபி கூட நிம்மதியா குடிக்க விடாம, அந்த ஃபைல் எங்கே? இந்த ரிப்போர்ட் எங்கே? ன்னு ஆட்டிப் படைச்சான்ல… இப்போ பாரு, அவன் டேபிள்ல வச்ச காபி ஆறிப் போய் ஆடை படிஞ்சு நிக்குது. ஆனா, நம்ம மேனேஜர் சார் CEO ரூமுக்கும் இங்கேயுமா அலைஞ்சு, ரத்த அழுத்தத்தை ஏத்திக்கிட்டு இருக்காரு!”
அகல்யா மெல்லச் சிரித்தபடி, “நிஜம்தான் ஹேமா, அந்த ஆளு முகத்துல இருந்த அந்த அதிகாரம் இப்போ காணாமப் போயே போச்சு!.. மனுஷனுக்கு கேரளா டூர் போர சந்தோஷம் எல்லாம் மொத்தமா வடிஞ்சுடும். இனிமே கேரளா போகாமலே இருந்திருக்கலாம்னு சாருக்குத் தோணும் போல. அந்த அளவுக்கு CEO இவரை எடுபிடி ரேஞ்சுக்கு மாத்திட்டாரு!” என்றாள்.
மனோஜ் அறைக்குள் நுழைந்ததும், சித்தார்த் மேஜை மீது இருந்த பேனாவைச் சுழற்றியபடியே …
“மனோஜ்… என்னுடைய PAக்கு முறையான கேப் வசதி செஞ்சு தரணும். அவருக்கு இந்த ஊர் ரூட் எல்லாம் புதுசு. அவரோட பாதுகாப்பு எனக்கு ரொம்ப முக்கியம். அதனால உடனே டிரான்ஸ்போர்ட் மேனேஜரை வரச் சொல்லுங்க. வரும்போது எந்தெந்த ரூட்ல என்னென்ன கேப் போகுதுன்ற லிஸ்ட்டையும் கையோட எடுத்துட்டு வரச் சொல்லுங்க!” எனச் சித்தார்த் உத்தரவிட, மனோஜ் அடுத்த நொடியே போனை எடுத்து டிரான்ஸ்போர்ட் மேனேஜரை வரவழைத்தான்.
டிரான்ஸ்போர்ட் மேனேஜர் உள்ளே நுழைந்ததும், சித்தார்த் ஒரு பெரிய ‘ஆஸ்கர்’ லெவல் நடிப்பைத் தொடங்கினான். மேஜை மீது இருந்த மேப்பைத் தீவிரமாகப் பார்ப்பது போலப் பாவனை செய்துவிட்டு, ஆகாஷின் பக்கம் திரும்பியவன்.
“ஆமா… நீ எந்த ஏரியாவுல தங்கியிருக்க? உனக்கு எந்தப் பக்கம் பிக்கப்-டிராப் பண்ணா வசதியா இருக்கும்?” எனத் தெரியாதது போல வினவினான் சித்தார்த்.
ஆகாஷ் மிகவும் பவ்யமாக, “சார்… நான் மவுண்ட் மெட்ரோ பக்கம் வர்றதுக்கு வசதியா இருக்கும் சார்,” என்றான்.
உடனே சித்தார்த் டிரான்ஸ்போர்ட் மேனேஜர் பக்கம் திரும்பி, “அந்த மெட்ரோ ரூட்ல இப்போ எத்தனை வண்டி போகுது? எத்தனை பேர் அதுல வர்றாங்க?” எனக் கேட்டான்.
மேனேஜர் தன் கையில் இருந்த டேப்லெட்டைப் பார்த்துவிட்டு, “சார்… அந்த ரூட்ல இப்போதைக்கு ஒரே ஒரு பெண் ஊழியர் மட்டும்தான் வர்றாங்க. அகல்யான்னு பேரு… அவங்களைத் தவிர வேற யாரும் அந்த வண்டியில இப்போதைக்கு இல்லை சார்,” என்றார்.
இதைக் கேட்டதும் ஆகாஷும் சித்தார்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவர் மனதிற்குள்ளும் லட்டு வெடித்தது.
“வெரி குட்! அப்போ ஒரு வேலையைச் செய்யுங்க. இனிமேல் டெய்லி அந்த கேப்ல அகல்யா கூடவே என்னோட PAவும் போயிட்டு வரட்டும். பாதுகாப்பு காரணத்துக்காக அந்த வண்டியில வேற யாரையும் ஏத்த வேண்டாம். அந்த ரூட் இனிமேல் இவங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான்!” எனச் சித்தார்த் கறாராகச் சொல்லி அனுப்பி வைத்தான்.
டிரான்ஸ்போர்ட் மேனேஜரும், மனோஜும் அறையை விட்டு வெளியே சென்றதும், ஆகாஷ் அப்படியே சோபாவில் சாய்ந்து ஒரு பெருமூச்சு விட்டான்.
சித்தார்த் கிண்டலாகச் சிரித்துக்கொண்டே, “என்னடா மங்காத்தா… இப்போ சந்தோஷம் தானே? ஆனா இதெல்லாம் எனக்கு என்னமோ சரியா படலடா. மெட்ரோவுக்குப் பக்கத்துல கேப் வேணும்னு இன்னைக்குச் சொன்ன… நாளைக்கு அந்த மெட்ரோ பக்கமே ஒரு வீடு வாங்கித் தாடான்னு சொல்லுவ போலயே!” என்றான்.
சற்று யோசிப்பது போல பாவனை செய்த ஆகாஷ், ஒரு கள்ளச் சிரிப்புடன், “அதுக்கும் நேரம் வரும் மச்சி! அந்த பக்கமே ஒரு சின்ன வீடு வாங்கிட்டா போச்சு… அதுல என்ன இருக்கு?”
அதிர்ச்சியில் உறைந்து போன சித்தார்த், “டேய்! நான் சும்மா கிண்டலுக்குச் சொன்னா, நீ நிஜமாவே ரியல் எஸ்டேட் பிசினஸ்ல இறங்கிடுவ போலயே? ஒரு பொண்ணுக்காக கம்பெனி ரூல்ஸையே மாத்தினவன், கம்பெனி அட்ரஸையே மாத்தினாலும் மாத்திடுவ!” எனத் தலையில் கை வைத்துக் கொள்ள,
ஆகாஷ் ஜன்னல் வழியே வெளியே பார்த்து, “எல்லாம் அந்த மழையும்… அந்த அகல்யாவும் பண்ற மேஜிக் சித்தா!” எனச் சொல்லிவிட்டுத் தன் கேப் பயணத்திற்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.
🌧️தூறல்கள் தொடரும்…
