அத்தியாயம் 6

அத்தியாயம் 6

பானுவுக்கு அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்கள் கடந்திருந்தன.

கால்களில் பேண்டேஜ் கட்டப்பட்ட நிலையில் வீல் சேரில் அமர்விக்கப்பட்டு இருந்தாம் பானுமதி.

இனி அவளால் முழு சுதந்திரமாக தன் கால்களை நிலத்தில் ஊன்றி நின்று, தனக்கு வேண்டிய வேலைகளை, வேண்டிய பொழுதுகளில் எல்லாம் செய்துக் கொள்ள முடியாது.

தோன்றும் பொழுதில் எல்லாம் எழுந்து நடந்திடவும் முடியாது. எல்லாம் அளவு தான். அதுவும் தேவைக்கும் மிக குறைந்தளவில். 

என்ன கெட்டதிலும் நல்லது என்றால் அவள் முற்றிலும் முடங்கிடவில்லை.

இதே சபாபதி பொறுப்பு என்று வர்மா கையை விரித்திருந்தால், அவர் இவளுக்கு மருத்துவம் பார்த்த பணத்தில் பாதியை வைத்தே விடயத்தை திரித்தோ, மறைத்தோ என கைக்கழுவி இருக்கக்கூடும்.

ஏதோ வர்மா பொறுப்பேற்றதால் இன்று அவள் இந்த நிலையிலாவது உள்ளோமே என நினைத்தாள்‌.

பானுவை பொறுத்த வரையில் சுற்றியுள்ள உறவுகள் என்ன கூறினாலும், இவர்களும் தன் விடயத்தில் சுயநலவாதிகள் தானே என கசப்பான எண்ணம்.

ஓடிக் கொண்டே இருந்தவளை ஒரே இடத்தில் வாழ்க்கை முடிக்கி வைத்திட்ட போது அனைவரின் சுயரூபமும், ஏற்கனவே அறிந்தது தான் எனினும் இன்னும் நன்று விலங்கிப்போனது.

இன்னமும் தன்னை வைத்து என்ன ஆதாயாம் அடையலாம் என்றும், தன் சுமை தங்கள் தலையில் வந்து விழுந்திடுமோ என்றும் சகோதரிகள் இருவரும் இரு விதமாக சிந்திப்பதாக உணர்ந்தாள்.

பெற்றவளை பார்க்கும் போது தான் வலித்தது. இத்தனை நாள் காட்டாத பாசத்தை எல்லாம் தனக்காக கவலையாக கொட்டிக் கொண்டிருக்கிறாரே. இவர் பாசத்தை காண தனக்கு இந்நிலை வர வேண்டுமா? என்ற கேள்வி தான் இறைவனிடத்தில்.

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க. இன்றோடு அவளை டிஸ்சார்ஜ் செய்தாக வேண்டும் என மருத்துவர் கூறியிருக்க. வர்மாவின் உதவியாளன் தீபக்கும் வந்து நின்று விட்டான்.

அவனிடத்தில் கணேசன் ஒரே சண்டை. 

“என்னயா உங்க முதலாளி அப்புறம் பேசிக்கலாம். அப்புறம் பேசிக்கலாம்னாரு. ஆனா ஆப்ரேஷன் முடிஞ்சு ஒரு தடவை வந்து பார்த்ததோட சரி. இந்த பக்கமே வரலை. அந்த பெரியவரும் நேத்து இன்னிக்கு ஆளை காணலை. இத்தோட கழிச்சு கட்டிடலாம் பார்க்கிறாங்களா? எங்களுக்கு தேவையானது கிடைக்கும் வரை சும்மா விட மாட்டோம்!” என்றான்.

நீ கேட்கிறது அந்த பொண்ணுக்காக போல இல்லையே! என்பதை போல பானுவை பார்த்து விட்டு, இவனை ஒரு பார்வை பார்த்தான்‌ தீபக்.

பின், “இதோ பாருங்க. சர்ருக்கு என்ன வேற வேலையா இருக்காதா? இன்னிக்கு அவருக்கு முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு. ஏற்கனவே பானுமதி இஷ்யூவ்ல எங்க நிறுவனம் பெயர் தான் கெட்டு கிடக்கு. அவர்‌ தானே எல்லாமே பார்க்கணும். கூட்டிட்டு வீட்டுக்கு போங்க. பெரிய சர்ரோட வந்து இவங்களுக்கு என்ன செய்யனுமோ செய்வார்!” என்றான் திட்டவட்டமாக‌.

ஆனால் கணேசன் கேட்பானா என்ன?

தீபக் அப்படி நகர்ந்ததும், “இதை சும்மா விடக்கூடாது அத்தை. ஏதோ சில லட்சத்தை தூக்கி போட்டு பானுவுக்கு ஒரு வீல் சேரை வாங்கி தந்து நம்ம பிரச்சனையை முடிக்க பார்க்கிறாங்க. இனி அவங்க இடத்துக்கு நாம போனா அதே நாய்க்கு கிடைச்ச மரியாதை தான்!” என்றான்.

“இப்போ என்ன மாப்பிள்ளை பண்றது?” என கேட்ட விசாலத்திற்கு வேறு வழியும் தெரியவில்லை‌. மகளின் வாழ்வை சீர் செய்ய வேண்டுமே.

“அன்னிக்கு போல எங்க உட்கார்ந்து பேசினா நியாயம் கிடைக்குமோ உட்கார்ந்திட வேண்டியது தான்!” என்றான்.

“போதும் மாமா வேண்டாம்! தீபக் சர் தான் வர்மா சர்ரும், பெரிய சர்ரும் வருவாங்கனு சொல்லிட்டு போறாரே. பின்ன எதுக்கு வீணா பிரச்சனை செய்யனும்? 

அதோட இது என் சுய பிரச்சனை. என்னால மட்டுமே வந்த பிரச்சனை. கூட கொஞ்சும் பணம் தர்றாங்கனவும் கால் கடுக்க நின்னு வேலைக்கு போனது என் சுய விருப்பத்தோடு தானே. அவங்க கட்டாயம் ஒன்னும் பண்ணிடலையே.

நான் என்ன யோசிச்சு இருக்கணும்! எல்லாரையும் யோசிச்ச நான் என் வலியை முன்னவே உணர்ந்து எனக்காக மருத்துவம் பார்த்து இருக்கணும்!” என்றவள் குரலுக்கு பின் தனக்காக ஒன்றும் செய்து கொள்ளாத வலியை விட, தன்னை இந்நிலையில் தானே கொண்டு வந்து நிறுத்திக் கொண்ட வலி தான் அதிகம் இருந்தது.

உண்மை தானே வீட்டில், வேலையில் என்று நான் சொல்லி இருக்க வேண்டும். என்னால் இவ்வளவு தான் முடியும். எனக்கும் வாழ்க்கை என்ற ஒன்றுள்ளது என சொல்லி இருக்க வேண்டும்.

அக்காவை, தங்கையை என விரும்பிய வாழ்வை தேடிக் கொண்ட போது  கேள்வி கேளாத அம்மா தன்னை மட்டும் என்ன செய்திருக்க முடியும்?

நாலு அடி அல்லது சில திட்டு? அதை ஏற்றுக் கொண்டு தனக்கான வாழ்வை பார்த்துக் கொண்டு போயிருக்கலாமே! போகாதது யார் தப்பு? என தன் மீதே சுயக்கோபம் அவளுக்கு.

அவளின் பேச்சும், உடைத்து கேட்கப்பட்டாத கேள்விகளும் விசாலத்திற்கு புரிந்தது.

“பானு… நமக்கு இதை விட்டா வேற என்ன வழி இருக்கு சொல்லு? உன் வாழ்க்கைடி…” என்றவர் சொல்லும் போதே உடைந்து அழுக‌.

“இனி அவ்ளோ தான்மா. கொஞ்ச நேரம் என் தேவையை பார்த்துக்க. மிச்ச நேரம் வீல் சேர்லனு இப்படியே என் காலம் முடிஞ்சிடும் போல. என் கவலை எல்லாம் இந்த நிலையும் இல்லாம போயிடக்கூடாதுனு தான்மா. உனக்கு சுமையா இருந்திடுவேனாம்மா?” 

விரக்தியில் தொடங்கி எதற்கும் வெறுத்து போகாதவள், இன்று கண்கள் கண்ணீரில் மிதக்க கேட்கும் போது விசாலம் மேலும் உடைந்து விட்டார்.

“இத்தனை காலம் எங்களை எல்லாம் நீ பார்த்துக்கலையாடி. உன்னை நான் பார்க்க மாட்டேனா? ஆனால் உனக்குனு ஒரு வாழ்க்கைய நீ வாழவே இல்லையே பானு…” என்று விசாலம் அழுத போது இவளுக்கு இனி தனக்கென ஒரு வாழ்க்கை எல்லாம் இருப்பதாக துளிக்கூட தோன்றவில்லை.

நன்றாக இருந்ந போதே ஆணில்லாத குடும்பம், பணமில்லாத வர்க்கம் என்று ஒன்றும் அமையவில்லை. இனி எல்லாம் எங்கிருந்து நடக்கும்?

கல்யாணம் தான் இல்லை தன் அக்கா, தங்கை, தோழிகளுக்கு அமைந்த போல காதல்? அப்படி எதுவும் தன் வாழ்வில் வரக்கூட இந்த பானுமதி அனுமதிக்கவில்லையே.

பதினெட்டில் இருந்து இருபத்தி எட்டு‌ வரை தன் மீது ரசனையாக பதிந்த கண்களை கூட‌ புறக்கணித்து அல்லவா நடந்தாள்? எல்லாம் எதற்காக? 

அந்த சில வினாடி பார்வைகளை தன் தரப்பிலும் வளர்த்துக் கொண்டு, பேசி பேசி காதலிக்க அவளிடம் நேரமும் இல்லை.

அதற்கான காலமும் அது இல்லை என நினைத்தவள், வருங்காலத்தில் தனக்கு வரும் கணவன் எப்படி இருந்தாலும் அவனையே காதலிக்க அல்லவா காத்திருந்தாள்.

இனி அவளுக்கு அப்படி ஒரு காலம் வரும் என நம்பிக்கையே தற்சமயம் அவளிடம் இல்லை. எல்லாம் முடிந்து விட்டது என மருத்துவமனையை விட்டு வெளியேற தயாராய் இருந்தாள்.

ஆனால் கணேசன் பேச்சை கேட்டு விசாலம் தான் தயாராய் இல்லை.

“அத்தை அவ சின்ன பொண்ணு புரியாம பேசுறா. உங்களுக்கே வயசாகுது.‌ நீங்க இனி பானுவை பார்ப்பீங்களா இல்லை வெளிய போய் வேலை பார்த்து வீட்டை நடத்துவீங்களா?” என கேட்டான்.

“ஆமாம்மா. உனக்கும் வயசாகுது. நீ இருக்க வரை சரி. ஆனால் உனக்கு எதாவதுனா பானுவை யார் பார்த்துப்பா? அதுவும் அவளோட ஹாஸ்பிடல் செலவு எல்லாம்? எந்த பிடிப்பும் இல்லாம பின்னால வருந்தி என்னாக போகுது. இதே இவர் சொல்ற போல அவங்களை வச்சு காசு பணமாவாது நஷ்டயீடா வாங்கிக்கிட்டா பானுவுக்கு தானே உதவியா இருக்கும். அவ பெயர்ல போட்டு வச்சிடலாம்!” என்றாள் வாசுகி‌.

ஆகமொத்தம் பணம் இல்லை என்றால் உடன் பிறந்தவளை பார்க்க மாட்டேன் என்கிறாள். இவள் தனக்கு என்ன செய்தாள் என பானு மட்டும் அவளுக்கு அத்தனை செய்தாளாம்? இது புரிந்த விசாலத்திற்கு பானுவின் வாழ்வை ஒரு நிலைக்கு கொண்டு வரும் வரை யாரையும் உதறித் தள்ளும் நிலையும் இல்லையே.

அதனால் அவர்கள் பேச்சுக்கு தான் போனார் அவரும். மருத்துவமனையை விட்டு வெளியேற மாட்டேன் என வம்பு எல்லாம் செய்யவில்லை. மீண்டும் வாசலில் சென்று போராட்டம் தான்.

வர்மா வேறு பெங்களூரில் தன் அடுத்த கிளையை திறக்கும் வேலையாக ஊரில் இல்லை. 

ராஜேந்திரன் அவருக்கு தன் மனைவியின் நினைவு நாள் அதுவுமாக, சபபாதியிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு மனவுளைச்சல் அதிகமாகி விட்டிருந்தது. அதன் விளைவாக பீபி எகிறி அவரே இப்போது ஓய்வில் உள்ளார். வர்மா வந்து பானு வீட்டிற்கு அழைத்து போவதாக சொல்லியிருக்க. அவள் விடயத்தில் ஒரு முடிவை எடுத்திட தான் ஓய்வு வேளையிலும் அவர் சிந்தை எல்லாம்.  

அந்நேரம் பார்த்து எதிர்பாராத விதமாக பானு குடும்பம் ஏற்படுத்திய சிக்கலை தவிர்க்க முடியாது போராடிக் கொண்டிருந்தான் தீபக்‌.

“அம்மா… மாமா… வேண்டாம். சொன்னா கேளுங்க!” என்ற பானுவின் பேச்சிற்கு எல்லாம் அவள் குடும்பம் செவி சாய்க்கவில்லை.

“உனக்காக நான் எதுவுமே செய்யலை. இது உனக்கு கிடைக்க வேண்டிய நியாயம். ஒத்துக்கிறேன் சுயநலம் தான். ஆனால் இந்த முறை என் பொண்ணு உனக்காக மட்டுமே யோசிக்கும் சுயநலம். அதனால நீ வாயே திறக்க கூடாது பானு. இது எம்மேல சத்தியம்!” என்று விட்டார் விசாலம்.

பேசி பேசி வெறுத்துப்போய் விட்டது பானுவுக்கு.

அடுத்த சொர்ப்ப நிமிடங்களில் விடயம் மீடியாவை அடைந்து, கூட்டம் கூடிவிட்டது.  

“என் பொண்ணுக்கு ஆப்ரேஷன் எல்லாம் வர்மா சார் தயவால, ராஜேந்திரன் ஐயா தயவால நல்ல படியா ஆச்சுங்க. ஆனா அவ காலு… அவளால இனி ரொம்ப நேரம் நிற்க முடியாதாம். அப்படி நின்னா மொத்தமா கால் செயலிழந்து முடங்கிடுவா சொல்றாங்க!” என்றார் விசாலம்.

“இப்போ உங்க எதிர்பார்ப்பு தான் என்ன? நீங்க சட்டரீதயா அவங்க நிறுவனத்து மேல புகார் தந்தா நியாயம் கிடைக்க போகுது. இதுல சபாபதி சார் வேற அப்படி எல்லாம் நாங்க வேலை வாங்கவே இல்லை. வேணும்னா எங்க மத்த ஊழியர்களை விசாரிச்சுக்கோங்கனு சொல்லி இருக்காரே. நீங்களும் அதுக்கு ஏத்த போல ஒரு புகாரும் தரலை!” 

இப்படி எல்லாம் கேள்விகள் வரும் போது பணத்தை வைத்து சபாபதி விடயத்தை முடிக்க பார்ப்பதும் இவர்களுக்கு புரிந்தது‌.

பானு இனி என்ன செய்வாய்? என்பதை போல பெற்றவளை பார்க்க.

“எங்களுக்கு பிரச்சனை பண்ண வேணாம் தம்பி. அவங்க உதவிக்கு எல்லாம் நன்றி. ஆனால் இனி என் பொண்ணு வாழ்க்கை? அதுக்கு தான் நான் பதில் கேட்கிறேன். அவளை இனி யாரு கட்டிப்பா?” என கேட்டார் விசாலம்.

“அப்போ வேலை வாய்ப்பு, பணம்னு இப்படி எதும் இல்லையா உங்க எதிர்பார்ப்பு?” கேள்வி எழவும் கணேசன் மாமியார் காதை கடித்தான். பலனில்லை.

அவனே பேசும் முன் விசாலம் முந்திக் கொண்டு, “அவ காலை இல்லை வாழ்க்கையை இழந்து நிக்குறா. எல்லாம் அவங்க கடைக்காக தானே. பணத்தை கொடுத்து அவங்க கணக்கை முடிக்கலாம். ஆனா அவளோட எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? 

ஒருவேளை அவங்க வீட்டுப் பொண்ணா இருந்தா இப்படி விட்டுடுவாங்களா? மனிதாபிமானத்தோட அவங்க எங்க பொண்ணுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும்!” என்றார்.

“இங்க பார்த்திங்களா அண்ணி. ஏதோ ஐந்தோ பத்தோ தந்தா வாழ்ந்துட்டு போறாங்கனு பார்த்தா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனுமாமே. நமக்கு வேற வேலை இல்லை!” இந்த நேரடி ஒளிபரப்பை கால் மீது கால் போட்டு பார்த்துக் கொண்டிருந்த வினோதினி ரோணுகாவிடம் சொன்னாள்.

“அதானே இருக்க இடம் தந்தா படுக்க பாய் போடும் கூட்டம் வினோ இது. உங்க பெரிய அண்ணன் சரியா தான் இவங்களை பத்தி சொன்னார். உங்க அப்பா தான் கேட்கலை. இப்போ பாரு விட்டா நம்ம வர்மாவையே கட்டிக்க சொல்லுவாங்க போல!” கிண்டலும் இகழ்ச்சியுமாக சொல்லி வைத்திருந்தார் ரேணுகாவும்.

“அட நீங்க வேற. வர்மா அண்ணா பார்க்காத மாடல் அழகியா? நடிகையா? யாரையுமே எல்லையோடு அனுப்பிடுறவர் போயும் போயும் இவளையா? ஆளை பாருங்க டிரஸ்ஸூம், மூஞ்சியும்…” பரிதாபமற்று பானுவின் உருவத்தை கேலி பேசிக் கொண்டிருந்தாள் வினோதினி.

அவளோடு இது போன்ற விடயத்தில் கூடி சிரிக்க மட்டும் அவள் அண்ணியாரும் கூட்டு.

இவர்கள் பேச்சு வார்த்தையை எல்லாம் கேட்டபடி வர்மா வரும் முன்பே கிளம்பிய பிரச்சனையை தீர்க்க எண்ணி கிளம்பி வந்த ராஜேந்திரன் காதில் வாங்கியிருத்தார்.

அவரை கண்டதும் இருவரும் எழுந்து நிற்க. அவரோ டிரைவரை காரை எடுக்குமாறு சொல்லி அங்கே புறப்பட்டு சென்று விட்டார்.

போனவர் செய்தியாளர்கள் தன் முன் படையெடுத்து நின்ற போது பானுவை ஒரு பார்வை பார்த்தார்.

அவளோ மன்னிப்பு இறைஞ்சுவதாக அவர் முன் கைகளை கூப்பினாள்‌.

அவளை கண்டு மறுப்பாக தலையசைத்தவர், “அவங்க கேட்கிறதும் நியாயம் தான். பானுவுக்கு வேலை வாய்ப்போ, வாழ்வாதார உதவியோ கொடுத்தா மட்டும் அவ வாழ்க்கைக்கு போதாது. அவளுக்குனு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு தரணும்னு கேட்கிறாங்க. அவளை என் வீட்டுப் பெண்ணா யோசிக்க சொல்றாங்க. இப்போ நான் சொல்றேன்‌ இனி பானு என் வீட்டு பொண்ணு தான். அவளை என் பையன் வர்மாவுக்கு மனைவியா, என் இளைய மருமகளா ஏத்துக்கிறேன். இது என் வாக்கு!” 

என்ன நினைத்து இப்படி ஒரு முடிவை எடுத்தாரோ ஆனால் உறுதியாக மீடியா முன்னிலையில் வர்மாவைக்கூட கேட்காது உரைத்து விட்டார்.

பானு அதிர்ச்சியின் உச்சியில் இருக்க. அவள் குடும்பத்தாருக்கோ அவர் கூறியதை கிரகிக்கவே நேரம் தேவைப்பட்டிருக்க.

மறுபுறம் இந்த செய்தியை கேட்ட வர்மாவோ தாடை இறுகிட, திரையில் தெரியும் பானுவையே அழுத்தப் பார்வை பார்த்திருக்க. இனி நடக்கப்போவது என்னவோ நிச்சயம் வர்மா பானுவின் இரு மனம் இணையா திருமணமே!

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page