அத்தியாயம் – 5
”குட் மார்னிங்மா,” என்றான் சித்தார்த்… எவ்வளவு வொர்க் பிரஷர், கோபம், டென்ஷன் இருந்தாலும் தாயிடம் மட்டும் அதனை காட்டிக் கொள்ளவே மாட்டான், அவன் சிரித்துப் பேசும் ஒரே ஜீவன் என்றால் அது அவனது தாய் தெய்வானை மட்டுமே, ஆரம்பத்தில் எல்லாம் அவன் இப்படி இல்லை, ஜாலியான டைப்தான், எப்போது தன் படிப்பை முடித்து பிசினஸில் காலடி எடுத்து வைத்தானோ, அப்போதிலிருந்துதான் அவனிடம் இந்த மாற்றம்…
அவனது தந்தை வாசுதேவன் கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸில் கொடிகட்டிப் பறப்பவர், தந்தையின் வற்புறுத்தலின் பெயரில் அவனும் கன்ஸ்ட்ரக்ஷன் சம்பந்தப்பட்ட படிப்புதான் படித்தான், படிப்பு முடிந்ததும் தனக்கு அனுபவம் வேண்டும் என்பதற்காகவே தந்தையிடம் கடன் வாங்கி தனியாக கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் ஒன்றை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறான்…
அவன் தந்தையின் நிழலாக இல்லாமல் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் காட்ட வேண்டும் என்ற வெறி அவனது நிஜமான கனிவான சுபாவத்தை இறுக்கமாக மாற்றியிருந்தது….
அதேபோல், இந்த நான்கு வருடத்தில் அவன் அசுர வளர்ச்சி கண்டிருந்தான், இளம் வயதிலேயே கட்டுமானத் துறையில் அவனைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை எனும் அளவுக்கு தனது கடும் உழைப்பினாலும் கூர்மையான மூளையினாலும், தந்தையின் சாம்ராஜ்யத்தையும் விஞ்சும் அளவிற்க்கு ஒரு புதிய சாம்ராஜ்யத்தை அவன் தனக்கென உருவாக்கி வைத்திருந்தான்…
வெற்றி என்பது அவனுக்கு ஒரு பழக்கமாகவும், தோல்வி என்பது அகராதியில் இல்லாத வார்த்தையாகவும் மாறியிருந்தது, அவனுடைய நிறுவனத்தின் ஒவ்வொரு திட்டமும், தரத்திலும், துல்லியத்திலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலும் புதிய மைல்கல்லாக அமைந்தது.
இத்தனை விரைவான வளர்ச்சியைக் கண்டிராத போட்டியாளர்கள் அவனை ஒரு வியக்கத்தக்க புதிராகவே பார்த்தனர், வெறும் நான்கு வருடங்களுக்குள் பல பன்னாட்டு நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்று சர்வதேச ஒப்பந்தங்களைப் பேசும் உயரத்திற்கு அவன் வளர்ந்து நின்றான். பணம், புகழ், அதிகாரம் இவை அனைத்தும் அவனது கால் தூசிக்குச் சமம்….
அவன் தந்தை வாசுதேவனுக்கோ இதனால் அவனின் மீது சிறு கோபம் இருந்தது, மகன் சொந்த உழைப்பில் உயர்ந்து நிற்பது பெருமையாக இருந்தாலும், யாரோ போல் கடன் வாங்கி நிறுவனத்தை ஆரம்பித்தது போதாது என்று அந்தக் கடனைத் திருப்பி வேறு தந்தது அவருக்குள் ஒரு பெரிய உறுத்தலை உருவாக்கியது…
வாசுதேவன், தன்னுடைய மகனின் வெற்றிக்குத் தான் தான் அடித்தளம் அமைத்தேன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் வாய்ப்பை சித்தார்த் வேண்டுமென்றே தடுத்துவிட்டதாக நினைத்தார், சித்தார்த்தின் இந்தச் செயல் தன் தந்தையை ஒரு முதலீட்டாளராகவோ அல்லது உதவியாளராகவோ கருதவில்லை என்பதையும், தனக்கெனத் தனி அடையாளம் வேண்டும் என்பதையும் அழுத்தமாக உணர்த்தியது, ஒரு தந்தையாக மகனின் சுதந்திரப் பிரியத்தைக் கண்டாலும், தொழிலில் தன்னுடைய ஆதிக்கம் சிதைக்கப்பட்டதாக வாசுதேவன் மனதில் ஒரு முரண் இருந்தது…
ஆனாலும், அதே சமயம் அவன் தன் ரத்தம் ஆகிவிட்டானே! தனக்கு இருக்கும் அதே திறமை, வேகம், முடிவெடுக்கும் துணிச்சல் ஆகிய அனைத்தும் சித்தார்த்திடமும் இருப்பதைப் பார்த்தபோது வாசுதேவனால் முழுமையாகக் கோபப்பட முடியவில்லை, தன் மகன் தன்னுடைய பிஸ்னஸ் சாம்ராஜ்யத்தை வலுவாகத் தாங்கிப் பிடிக்கப் பிறந்தவன் என்ற பெருமிதம், அந்தக் கோபத்தின் மீது ஒரு மெல்லிய திரையைப் போட்டது, அவன் தன்னுடைய போட்டித் தனத்தை எதிர்த்து நின்றாலும்கூட அவனது வெற்றியில் வாசுதேவனுக்கு ஒருவித மறைமுக திருப்தியும் இருந்தது…
வாசுதேவன் கண்டிப்பான தந்தை தான், சித்தார்த் ஒற்றை வாரிசு என்றாலும் அவனைச் செல்லம் கொடுத்துக் கெடுக்கவில்லை, தாய் தெய்வானை பாசத்தை வெளிப்படையாகக் கொடுப்பவராக இருந்தார், ஆனால் வாசுதேவன் அதற்கு நேர்மாறாக, மறைமுகமாகக் கொடுப்பவராக இருந்தார்.
அவனது வாழ்வில், தந்தையிடமிருந்து அன்பைக் காட்டிலும் கண்டிப்புதான் அதிகமாக இருந்தது, அந்த கண்டிப்பின் நிழலில்தான் சித்தார்த், இவ்வளவு இளம் வயதிலேயே இவ்வளவு உறுதியுடன் வளர முடிந்தது…
இத்தனை வருடங்கள் உறுத்தாத இந்த விஷயம் சமீப நாட்களாக உறுத்த ஆரம்பித்தது வாசுதேவனுக்கு, மகன் அடைந்திருக்கும் அசுர வளர்ச்சியும், தன்னைச் சாராமல் அவன் பெற்றிருக்கும் அதிகாரமும், தந்தையிடம் ஒருவித வெறுமையைத் தோற்றுவித்தது.
’ஆரம்பத்திலேயே தானும் மகனுடன் நெருங்கிப் பழகி இருக்க வேண்டுமோ?’ என்ற எண்ணம் இவ்வளவு கால கண்டிப்பிற்க்குப் பிறகு இப்போது அவருக்குள் ஒரு மெல்லிய குற்றவுணர்வை உருவாக்கியது, மகனின் வெற்றியைத் தொழிலதிபராகப் பெருமை கொண்டாலும், தந்தையாக அவனுடன் ஏற்பட்ட இடைவெளி வாசுதேவனின் தனிமையில் ஒரு கசப்பை ஊட்டியது….
தெய்வானை மகனிடம்.. “சாப்பாடு ரெடியா இருக்குப்பா. இன்னைக்கு உனக்குப் பிடிச்ச பொங்கல் நிறைய முந்திரிப் பருப்பு போட்டுச் செய்திருக்கேன்,” என்று மகன் மீது கொண்ட அன்புடன் கூற…
தாயின் அன்பில் வழக்கம் போல் நெகிழ்ந்தவன், “வாங்க போலாம்,” என்று அவரைத் தோளோடு அணைத்தபடி டைனிங் அறையை நோக்கிச் செல்ல இருந்த நேரம்… ”குட் மார்னிங் கண்ணா,” என்ற தந்தையின் குரலில் திரும்பினான் சித்தார்த்…
தந்தையை கண்டவன்,.. ”குட் மார்னிங்ப்பா,” என்பதோடு நிறுத்திக் கொண்டவன், ஒரு வார்த்தைகூடக் கூடுதலாகப் பேசாமல் தாயோடு முன்னே நடந்தான்… வாசுதேவன் மகனின் விலகலைக் கண்டு ஒரு பெருமூச்சுடன் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தார் டைனிங் அறைக்கு…
டைனிங் மேஜையில் அமர்ந்ததும், “எத்தனை தடவைமா சொல்றது இதெல்லாம் நீங்க செய்ய வேண்டாம்னு? எனக்குப் பரிமாறிக்கத் தெரியும்மா, உட்காருங்க, சாப்பிடலாம்,” என்ற மகனிடம்… ”இன்னும் எத்தனை நாளைக்கு நான் பரிமாறப் போறேன்? நாளைக்கு நீ கல்யாணம் பண்ணிட்டா, உன் பொண்டாட்டிகிட்ட இந்த பொறுப்பைக் கொடுத்துட்டு நான் நகர்ந்திடப் போறேன், என் மருமகள் வரும் வரைக்கும் பண்ணிட்டுப் போறேனே,” என்ற தாயிடம் எதுவும் பேசத் தோன்றாமல், அவர் பரிமாறியதைச் சாப்பிடத் தொடங்கி இருந்தான்….
வாசுதேவனோ… ‘இங்கே நானும் ஒருத்தன் இருக்கேன்’ எனும் விதமாய் மனைவியைப் பார்த்து வைக்க, அவர் பார்வையின் அர்த்தம் புரிந்த அவர் மனைவி, மெல்லிய புன்னகையுடன் அவருக்கும் பரிமாற ஆரம்பித்தார்…
”நீங்களும் உட்காருங்மா,” சித்தார்த் கூற… “நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன் சித்து,” என்றார் அவர்…
”ப்ச்…” என்றவன், தன் தட்டில் இருந்த உணவை எடுத்துத் தாய்க்கு ஊட்டி விட, நெகிழ்ச்சியுடன் மறுக்காமல் வாங்கிச் சாப்பிட்டார் தெய்வானை…
வாசுதேவனோ… ‘இப்படி ஒரு தடவை எனக்கு ஊட்டி இருப்பானா?’ என்று முணுமுணுத்துவிட்டுச் சாப்பிடத் தொடங்கினார்….
சித்தார்த், தனது அதிகாரத் தோரணையிலும், விறைப்பிலும் இருந்து விலகி, தாயிடம் மட்டுமே தனது இயல்பான பாசத்தை வெளிப்படுத்துவதைக் கண்ட வாசுதேவன், தன்னுடைய கண்டிப்பான பிம்பம் உருவாக்கிய இடைவெளியை எண்ணி மீண்டும் உள்ளுக்குள் வருந்தினார்…
அந்த நேரம், சித்தார்த் தனது உணவை முடித்துவிட்டு எழுந்தான், டைனிங் அறையிலேயே இருந்த வாஷ்பேசனில் கை கழுவிக் கொண்டிருந்த மகனிடம், கேட்கலாமா வேண்டாமா எனும் போராட்டத்துடனே, “சித்து கண்ணா… உன்னோட கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கட்டுமா?” என்று தயக்கத்துடன் கேட்க நினைத்ததைக் கேட்டே விட…
அவனோ பதில் எதுவும் பேசாமல், லிக்விட் போட்டு கரத்தை வாஷ் செய்து விட்டு, ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த துண்டில் கையை துடைத்தபடி திரும்பியவன், ஆர்வமாகத் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தாயிடம், “இன்னும் ஒன் இயர் போகட்டும்மா,” என்றான்…
அவருக்கோ அதிர்ச்சி. ‘இன்னும் ஒரு வருடமா!’ என்று யோசித்தவர், “வயசு போயிட்டு இருக்குப்பா,” என்று சொல்ல…
”அப்படி ஒன்னும் எனக்கு வயசு ஆகிடலம்மா, முப்பது வயசாகியும் கல்யாணம் பண்ணாதவங்க கூட இருக்கத்தான் செய்றாங்க, நான் இன்னும் ஒரு வருஷம் தானே டைம் கேட்கிறேன்,” என்றான்…
”அது இல்லப்பா… நம்ம ஜோசியர் இந்த வருஷத்திலேயே உன்னோட கல்யாணத்தைப் பண்ணுறது நல்லதுன்னு சொன்னாருப்பா, இல்லைனா இன்னும் ஏழு வருஷத்துக்கு உனக்குக் கல்யாணமே நடக்காதுன்னு சொல்றாரு,” என்றார் தெய்வானை கலக்கத்துடன்…
”எனக்கு இதுலெல்லாம் நம்பிக்கை இல்லம்மா ப்ளீஸ் இதுக்கு அப்புறம் இதைப் பத்திப் பேசாதீங்க,” கண்டிப்புடன் சொன்னவன், அவர்களிடம் விடைபெற்று அலுவலகம் புறப்பட்டு விட…
வாடிய முகத்துடன் கணவனை நோக்கிய தெய்வானை, “என்னங்க, இப்படி சொல்லிட்டுப் போறான்! நீங்களும் கேட்டுக்கிட்டு அமைதியா இருக்கீங்க,” என்றார் புலம்பலாய்….
”என்னை என்ன பண்ணச் சொல்ற?” வாசுதேவன் வினவ…
”இப்படி கேட்டா எப்படிங்க? அவன்கிட்ட கண்டிப்போடு பேசி சம்மதிக்க வைங்க,” என்றார் தெய்வானை…
”அடிப்போடி… சின்னப் பிள்ளையில இருந்தே அவனை கண்டிங்கனு சொல்லிச் சொல்லி, எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு திரையே உருவாகிடுச்சு,” அவர் சலிப்புடன் சொல்ல…
”நல்லதுக்குத் தானேங்க கண்டிக்கிறீங்க, அதெல்லாம் ஒன்னும் தப்பு இல்ல” என்றார் தெய்வானை…
”அம்மாவும் பையனும் மட்டும் மாறி மாறி அன்பைப் பொழியுறீங்க, இங்க நான் யாரோ மாதிரி இருக்கப் போல இருக்கு, அவன் என்கிட்ட மனம் விட்டுப் பேசிப் பார்த்திருக்கியா? அட்லீஸ்ட் சிரிச்சு பேசியாவது பார்த்திருக்கியா?” என்றார் வாசுதேவன் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியபடி…
”நீங்க ஆரம்பத்துலயே அவன் கூட நெருக்கமா இருந்திருக்கணும்,” தெய்வானை சொல்ல… ”உண்மை தான்… எல்லாம் என் தப்பு” என்று பெருமூச்சு விட்ட வாசுதேவன்,… ”ஆனா… இது வரைக்கும் நம்ம ஜோசியர் சொல்றபடி தான் நடந்திருக்கு. சித்து லைஃப்ல தப்பா எதுவும் நடந்துடக் கூடாது, இது அவன் வாழ்க்கை சம்மந்தம்பட்டது, எத்தனையோ விஷயத்துல கண்டிச்சு தான் சம்மதிக்க வச்சிருக்கேன், இந்த கல்யாண விஷயத்திலேயும் அப்படி தான் பண்ணணும் போல, அவனுக்கு முதல்ல பொண்ணைத் தேடணும், அவன் கல்யாணத்தை பண்ணணும், பொண்ணைப் பார்த்த பிறகு அவன்கிட்ட சொல்லிக்கலாம், இப்போ மறுபடியும் அவன்கிட்ட இதைப் பத்திப் பேசாத,” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்…
சித்தார்த்தின் விருப்பத்தைக் காட்டிலும், அவனது எதிர்காலம் குறித்த பயமும், ஜோசியர் மீதான நம்பிக்கையும் தான் வாசுதேவனை இந்த முடிவை எடுக்கத் தூண்டியது…
சாலையைப் பார்த்து வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் சித்தார்த், வீட்டில் டிரைவர் இருந்தாலும், டிரைவ் செய்வது என்றால் அவனுக்குப் பிரியம் என்பதால், தனக்கான பயணத்திற்கு அவனே தான் ஓட்டுனான்…
அந்த நேரம் அவனது கார் ஒரு சிக்னலில் நின்றது, முன் வரிசையில் அவனது கார் நின்றதால், சிக்னலைக் கடந்து சென்றவர்கள் எல்லாம் அவனது பார்வையில் விழுந்தார்கள், சில பள்ளி குழந்தைகளும் ரோட்டைக் கிராஸ் செய்ய, அந்த நேரத்தில் ஒரு சிறுமி மட்டும் அவனது கவனத்தை ஈர்த்தாள், பார்க்கவே கொழு கொழு கன்னத்துடன் அழகாக இருந்த அந்தச் சிறுமி, அவனுக்கு யாரையோ நினைவுபடுத்த, கண் விலக்காமல் அந்தச் சிறுமியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்…
அந்த நேரத்தில் அந்தச் சிறுமி கால் தடுக்கி விழுந்துவிட இவனுக்கோ மனம் பதறியது, வேகமாக கார் கதவைத் திறந்தவன், அந்தச் சிறுமியை நோக்கித்தான் விரைந்தான், கீழே விழுந்து கிடந்தவளைத் தூக்கி நிறுத்தியவன், “ஆர் யூ ஓகே பேபி?” என்று கனிவான குரலில் வினவ… நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்த சிறுமி, “எஸ் அங்கிள்,” என்றாள்…
அவளுக்கு அடி எதுவும் படவில்லை என்பது அவளது புன்னகையே அவனுக்கு சொல்லிவிட்டது. “தேங்க்ஸ் அங்கிள்,” அவள் கூற, “இட்ஸ் ஓகே,” என்றவன், “வாட்ஸ் யுவர் நேம்?” என்றான்…
”மை நேம் ஜானு,” என்று அந்தச் சிறுமி சொல்ல, அவன் முகத்திலோ அதிர்ச்சியும் ஏக்கமும், புதிய ஆச்சரியமும் கலந்திருந்தன…
கரத்தை உயர்த்தி அவளது கன்னத்தினை மெல்ல வருடியவன், “நைஸ் நேம்,” என்று மெதுவாகச் சொல்ல… கிளிக்கிச் சிரித்தவளோ, “பை அங்கிள்,” என்று அவனுக்கு டாட்டா காட்டிவிட்டு நகர்ந்துவிட்டாள்.
போகும் அந்தச் சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தின் மனம், தன் ஜானுவை எண்ணி நெகிழ்ந்தது. அந்த சிறுமியின் பெயரைப் போலவே, அவளுடைய முகமும் புன்னகையும், அவனது ஜானுவை நினைவுபடுத்தியது, தொலைந்துபோன அந்த நட்பின் நினைவுகள், வலிமையுடன் அவனுக்குள் மீண்டும் எழுந்து, அவனது கடுமையான மனதைக் கனிவிக்க, அவன் நினைவுகளும் கடந்த காலத்தை நோக்கி சென்றது,…