மொழி – 6

வந்திருந்தோர் அனைவருக்கும் காபியை கொண்டு வந்து கொடுத்தாள் நித்யா. கமலேஷிடம் காபியை அவள் நீட்டும் பொழுது தன் கண்களை மூடி திறந்து அவளுக்கு ஏதோ சைகையில் கூறியிருந்தான் கமலேஷ்.

அவனின் செயலிலே அவளின் முகத்திலும் புன்முறுவல் மலர்ந்தது. 

“எங்க சொந்தத்துல கூட ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க சம்பந்தி. உங்களுக்கு சொல்லலாம்ன்னு நினைச்சுட்டே இருந்தேன். அதுக்குள்ள இப்படி நடந்துடுச்சு” என்றார் லதா.

திருதிருத்த விழிகளோடு ஏதோ திசை தெரியா காட்டுக்குள் சிக்கிக் கொண்டதை போல் விழித்துக் கொண்டே நின்றிருந்த பவித்ராவிற்கு, இந்த இடத்தில் பற்றுக்கோளாய் இருந்தது என்னவோ யஷ்வந்த் மட்டும் தான்.

அனைவரின் வருகையிலும், பேச்சிலும் அவளுக்குள் படபடப்பு தொற்றிக் கொள்ள. அங்கிருந்து செல்லவும் முடியாமல், அங்கேயே நிற்கவும் முடியாமல் தவிப்பாக நின்று கொண்டிருந்தாள்.

மேலும், சற்று நேரம் பேச்சு தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

“சரி விடு லதா. திரும்பத் திரும்ப இதை பத்தியே பேசி என்ன ஆகப்போகுது. அதான் எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சே. மேலும் மேலும் இதை பத்தியே பேசி அவங்கள சங்கட படுத்தாத” என்று தன் மனைவியை அதட்டியிருந்தார் சத்யன்.

இந்துவின் பார்வை பவித்ராவில் ஆராய்ச்சியாய் படிய.

“அம்மாடி இந்து புள்ள சிணுங்குறா பாரு, பால் கொடுத்துட்டு வாம்மா” என்றவாறு அத்தனை நேரம் ஆசையாக தன் கையில் அள்ளி அணைத்திருந்த தன் பேத்தியை இந்துவிடம் கொடுத்து அனுப்பினார்.

அவளும் குழந்தையுடன் அறைக்குள் செல்ல. 

“என்னடி சொல்லாம கொள்ளாம இப்படி கிளம்பி வந்துட்ட” என்றான் அவளின் பின்னோடு அறைக்குள் நுழைந்த சேரன்.

“நைட்டெல்லாம் தூக்கமே இல்லைங்க. நீங்க இப்படி ஒரு விஷயம்னு சொன்ன பிறகு என்னால அங்க இருக்கவே முடியல. இங்க என்ன நடக்கும்னு மண்டைக்குள்ள அதுவே தான் ஓடிட்டு இருந்துச்சு. எல்லாம் ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டு இருப்பாங்க இல்ல. அதான் யாஷிகா இங்க இருந்தா அவங்களுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்குமேனு கிளம்பி வந்துட்டேன்”.

“அதுவும் சரி தான். யாஷிகாவ பார்த்த பிறகு அவங்க முகமே கொஞ்சம் நார்மல் ஆன போல தான் தெரியுது. நேத்து எல்லாம் ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாங்க” என்றான் தன் தம்பியின் செய்கையால் ஏற்பட்ட சலிப்பான பெருமூச்சோடு.

“என்னால நம்பவே முடியல நம்ம யஷ்வந்தா இப்படின்னு.. நீங்க சொன்னதும் விளையாட்டுக்கு சொல்றீங்கன்னு தான் நினைச்சேன். இங்க வந்து பார்த்ததும் தான் உண்மைன்னு புரியுது. அந்த பொண்ண பார்த்தாலும் நல்ல பொண்ணு மாதிரி தான் தெரியுது. இதை யஷ்வந்த் வீட்டிலேயே சொல்லி கல்யாணம் செஞ்சு இருக்கலாமே.. எதுக்கு தெரியாம பண்ணனும்?” என்றாள் தன் குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டே.

“அவன் மனசுல என்ன நெனச்சு இதெல்லாம் பண்ணான்னு யாருக்கு தெரியும்”.

அனைவருக்குமே இதை கடந்து வர சற்று கடினமாக தான் இருந்தது. ஆனாலும், நடந்ததை மாற்றி அமைக்க முடியாது. எனவே, மேற்கொண்டு செய்ய வேண்டியதை பற்றி சிந்திக்கலாயினர்.

“சரிங்க சம்பந்தி நம்ம சொந்த பந்தத்தை எல்லாரையும் அழைச்சு ஒரு ரிசப்ஷன் வச்சிடுங்க. இல்ல, அவங்க இஷ்டத்துக்கு கண்ணு காது மூக்குன்னு வச்சு ஆளாளுக்கு புது கதையை உருவாக்கி பேச ஆரம்பிச்சிடுவாங்க” என்று லதா கூறவும் திருமூர்த்தியை பார்த்தார் பரமேஸ்வரி.

அவர் தன் கண்களை மூடி திறந்து ஆமோதிப்பாக தலையசைக்கவும்.

“சரிங்க சம்பந்தி ஜோசியர் கிட்ட பேசிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து ரிசப்ஷன் வச்சிடலாம். ஆனா, என்ன பண்ணாலும் ஊர் வாய மூட முடியாது. பேசுறவங்க பேச தானே செய்வாங்க. இது நாள் வரைக்கும் ஒரு சின்ன பேச்சு கூட கேட்காம வாழ்ந்துட்டோம். இப்போ இப்படி ஒரு விஷயத்தை கடந்து வர கஷ்டமா இருக்கு”. 

எங்கே சுற்றினாலும் பேச்சு அதிலேயே தான் வந்து நின்றது.

அதற்கு மேல் யாரும் பவித்ராவிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அவளுக்கு அங்கே நிற்பதா, இல்லை அறைக்கு செல்வதா என்று புரியாமல் தடுமாறி நின்று இருந்தாள்.

காலை முதல் உண்ணாதது வேறு அவளுக்கு வயிற்றை புரட்டிக் கொண்டு வந்தது.

அவளின் முகமே சரி‌ இல்லாததை கவனித்த யஷ்வந்த் ‘என்ன’ என்றான் தன் புருவங்கள் மேலுயற. 

இத்தகைய சூழ்நிலையிலும் தன் முகம் பார்த்து தன் மனதை படிக்கும் கணவனின் செயலில் அகம் நிறைந்து போக. ‘ஒன்றும் இல்லை’ என்பது போல் அவனுக்கு பதிலுக்கு தலையசைத்து இருந்தாள் பவித்ரா.

“பவித்ரா நீ ரூமுக்கு போ நான் இதோ வரேன்” என்று யஷ்வந்த் கூறவும் அமைதியாக அறைக்கு சென்று விட்டாள். 

பெரியவர்கள் மேற்கொண்டு பேசிக்கொண்டு இருக்க. கூட்டத்தின் நடுவே அமர்ந்திருந்தாலும் செல்பேசியின் வாயிலாக மாற்றி மாற்றி குறுஞ்செய்தியை பறக்க விட்டுக்கொண்டு தனி உலகில் சஞ்சலித்துக் கொண்டிருந்தனர் நித்யாவும், கமலேஷும்.

விழிகளாலேயே ஓராயிரம் கதைகளை பேசிக்கொண்டு, மொழியற்ற சம்பாஷனைகளோடு குறுஞ்செய்திகள் பறந்த வண்ணம் இருந்தது.

சேரன், இந்து திருமணத்தின் பிறகு நட்பாக தொடங்கியது தான் இவர்களின் பழக்கம். கேலிகளோடும், கிண்டல்களோடும் அவ்வபொழுது ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வர். அது எப்போது பிடித்தமாய் உருவெடுத்தது என்று அவர்களே அறியவில்லை. 

“நீங்க பேசிட்டு இருங்க நான் இதோ வந்துடறேன்” என்று பொதுவாக அனைவரிடமும் கூறிவிட்டு சமையலறைக்கு சென்ற யஷ்வந்த், காலை சமைத்த உணவு ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப் பார்க்க எதுவுமே தென்படவில்லை.

ஒரு பிரட் பாக்கெட்டும், ஜாமும், பட்டரையும் எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்று மறைந்தான்.

லதாவும், பரமேஸ்வரியும் அவனின் செயல்களை தான் கவனித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன சம்பந்தி உங்க மகன் ரொம்ப தான் அந்த பொண்ண தாங்குறான். அவளோட முகத்தைப் பார்த்து மனச படிக்கிறான். இவ்வளவு நேரம் இங்க நடந்த கூத்தை எல்லாம் நான் கவனிச்சுக்கிட்டு தான் இருந்தேன். நீங்களும் கவனிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்” 

“ம்ம்.. இனிமே கவனிச்சு மட்டும் என்ன ஆகப்போகுது சம்பந்தி. அதான் கல்யாணமே பண்ணிக்கிட்டு வந்துட்டானே.. அவன் இஷ்டம் போல ஏதாவது செஞ்சுட்டு போகட்டும்” என்றார் விட்டேட்றியாக.

“அதுவும் சரிதான்”. 

இவன் அறைக்குள் நுழைந்ததை கூட உணராமல் பவித்ரா தனக்குள்ளேயே ஏதோ சிந்தனையில் உழன்று கொண்டு அமர்ந்திருந்தாள்.

“ஓய், அப்படி என்ன யோசனை.. நான் வந்து உன் பக்கத்துல உக்காந்தது கூட தெரியாத அளவுக்கு மேடம் எதையோ யோசிச்சுகிட்டு இருக்கீங்களே.. என்ன ஓடுது இந்த மண்டைக்குள்ள” என்றவாறு அவளின் தலையில் தட்டினான்.

“சும்மா தான்” என்றவள் சில்லிட்டிருந்த தன் கரங்களை ஒன்றோடு ஒன்று தேய்த்து கொண்டாள்.

“என்ன இத்தனை பேரை பார்த்ததும் ஜெர்க் ஆகிட்டயா?” என்றான் தன் முத்துப்பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே.

“ம்ம்.. லைட்டா” என்று அவள் தன் இரு விரல்களை தூக்கி காட்டவும். 

தன் தலையை சரித்து அவளை பார்த்தவன், “அப்படியா!” என்றான் ஆச்சரியம் போல்.

அவனின் செயலில் பவித்ராவின் இதயம் தான் நழுவிக் கொண்டு அவனோடு ஓடியது. அதில் இமை சிமிட்டாமல் அவனை அவள் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கவும்.

பிரெட்டில் பட்டரையும், ஜாமையும் தடவிக் கொண்டே, “ஹலோ மேடம் பொறுமையா கனவு காணலாம். இப்போ இத சாப்பிடுங்க” என்றான் அவளின் கைகளில் அதை கொடுத்தவாறு.

“உங்களுக்கு?”.

“எனக்கும் இருக்கு. எவ்வளவு சீக்கிரம் கேட்டுட்ட.. புருஷன் காலையில இருந்து சாப்பிடாமல் இருக்கான்னு கொஞ்சமாவது உனக்கு அக்கறை இருக்கா.. ஏதாவது செஞ்சு கொடுக்கணும்னு தோணுச்சா.. நானா பிரெட் கொண்டு வந்ததால என்னை சாப்பிடலையானு கேக்குற. இல்லனா இதை கூட கேட்டு இருக்க மாட்ட இல்ல நீ” என்றான் கோபம் போல்.

“திடீர்னு எல்லாரும் வரவும் எனக்கு ஒண்ணுமே புரியல. அதான் எதை பத்தியும் யோசிக்காம அப்படியே நின்னுட்டேன்” என்றாள் தன்னிலை விளக்கம் அளிக்கும் பொருட்டு.

“நான் உன் கூட இருக்கும் பொழுது அப்படி என்ன பயம் உனக்கு? நான் உன் பக்கத்துல இருக்கும்பொழுது உன்னை யாரு என்ன செஞ்சுட முடியும்” என்றான் அவளுக்கு அடுத்த துண்டு ரொட்டியை கொடுத்தவாறு.

“எல்லாம் உங்களால தான்” என்றாள் முணுமுணுப்பாக.

“நேத்து நைட் நடந்ததை பத்தி சொல்றியா?” என்றான் அவளை சீண்டும் விதமாக.

“ஐயோ! உங்களை..” என்று சிணுங்கவளை அவனின் பார்வை அதற்கு மேல் பேச விடாமல் அவளின் வார்த்தைகளுக்கு தடா போட்டது.

“எல்லாம் என்னால இல்ல பவி. எல்லாம் உன்னால.. நான் எவ்வளவு நல்ல பையன் தெரியுமா.. எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. நேத்து நீ தான் என்னென்னவோ பேசி என்னை அப்படி எல்லாம் மாத்திட்ட” என்று நல்ல பிள்ளை போல் கூறுபவனை முறைக்கவும் முடியாமல் முகம் சிவந்து அமர்ந்திருந்தாள்.

“ஐயோ போதும்.. அதை விடுங்களேன்” என்றவளின் தவிப்பு அவனுக்குள் தாபமாக மாற.

அவளை நகர்த்தி தன் மடியில் அமர்த்தி இருந்தான்.

அவளை சுற்றி இருந்த அவனின் கரம் அழுத்தத்தை கொடுக்க. சுகமான அவஸ்தையில் சிக்கி தவித்துக் கொண்டு இருந்தாள் பவித்திர பாரிஜாதம். 

“இப்ப சொல்லு என்ன சொல்லிட்டு இருந்த?” என்று அவன் சாவகாசமாக கேட்கவும் தான், தான் கேட்க வந்தது அவளுக்கு நினைவே வந்தது.

“நீங்க கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்கும் பொழுது விளையாட்டுக்கு கேக்குறீங்கன்னு நினைச்சேன். ஆனா, உண்மையிலேயே இப்படி எல்லாம் நடந்துப்பிங்கனு நான் நினைச்சு கூட பாக்கல. அதுவும் உங்களுக்குனு இப்படி ஒரு குடும்பம் இருக்கும் பொழுது நாம அப்படி நடந்தது தப்பு தான. பாவம், எல்லாரும் ரொம்ப மனசு கஷ்டப்படுறாங்க” என்றாள் பாவமாய்.

“அப்போ உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா” என்றான் அவளுக்குள் ஊடுருவும் பார்வை பார்த்துக் கொண்டே.

எப்படி இல்லை என்று அவளால் கூற முடியும். தனக்கெல்லாம் திருமணமே நடக்காது என்று பலமுறை சிந்தித்து இருக்கிறாள். நடக்காது என்று நினைத்ததை இப்படி சாத்தியமாக்கி கொடுத்திருக்கிறானே.. தனக்காக இத்தனை செய்தவனிடம் எப்படி விருப்பமில்லை என்று கூற முடியும்.

அமைதியாக தலை குனிந்து அமர்ந்து இருந்தாள். அவளின் தாடையை பற்றி தன்னை பார்க்கச் செய்தவன், “சொல்லு பவி, இந்த கல்யாணத்துல.. ம்கூம்.. என்னை கல்யாணம் பண்ணதுல உனக்கு விருப்பம் இல்லையா? எல்லாம் உன்ன கேட்டு தான செஞ்சேன்”.

ஆம், கேட்டான் தான். ஒவ்வொன்றுக்கும் இவளை கேட்டு தானே முடிவெடுத்தான். இவளும் அப்பொழுது இதெல்லாம் சரி வருமா என்று சிந்தித்தாலும், சரி என்று ஒப்புக் கொண்டாள் தானே.

ஆனால், இப்பொழுது அவனின் குடும்பம் படும் பாட்டை காணும் பொழுது அவளுக்குள் மலையளவு குற்ற உணர்வு மண்டி போனது.

அதன் வெளிப்பாடே இத்தகைய வார்த்தைகள்.. அதை அவனுமே உணர்ந்திருந்தான். அதனாலேயே அவளை அத்தனை மென்மையாய் கையாண்டான்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கொஞ்சல் மொழி பேசாயோ ஊமைக்கிளியே
912 11 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page