இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 6

அத்தியாயம் – 6

 

​ஜானுவை அன்று பிரிந்து தனது ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற அபிக்கு, எந்நேரமும் ஜானுவின் நினைவுதான். அவளை மீண்டும் எப்போதுடா பார்ப்போம் என்ற தவிப்புடனே நாட்களைக் கடத்தினான்…

 

​ஒருநாள், தனது அத்தை திலகாவிடம் போன் பேசிய நேரம், “ஜானு எப்படி இருக்கா அத்த? அவகிட்ட என்னைப் பேச வைக்கிறீங்களா?” என்று கேட்டான்..

 

​அபி ஜானுவுடன் விளையாடுவதை அவரும் பார்த்துத் தானே இருக்கிறார், சிறு வயதில் சிறு பிள்ளைகள் சேர்ந்து விளையாடுவதெல்லாம் சாதாரணம் என்று நினைத்துத்தான்  ஜானுவுடன் அபி சேர்ந்து விளையாடும்போது தடுக்கவில்லை…

 

​ஆனால் இப்போது அபி ஜானுவிடம் பேச வேண்டும் என்று சொல்லவும், சிறு எரிச்சல் வந்தது உண்மைதான். என்ன இருந்தாலும் ஜானு மிகவும் வசதி குறைவான வீட்டுப் பெண் இல்லையா? தாங்கள் வசதியானவர் என்ற எண்ணம் திலகாவின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது….

 

அவள், தங்கள் பிள்ளையுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருப்பதை அவர் விரும்பவில்லை. கண்டிப்புடன் அவனிடம் ஏதோ சொல்ல நினைத்தவர், அபியின் ஆர்வத்தைக் கண்டதும் வார்த்தைகளைச் சற்றே மாற்றி ஏதோ காரணத்தைச் சொல்லி அவனை சமாளித்துவிட்டார்…

 

​அதன் பிறகுதான், ஜானுவின் தந்தையின் இறப்பும் அதோடு அவள் அந்த ஊரை விட்டும் சென்றிருந்தாள். ​மீண்டும் ஒருநாள் அபி ஜானுவைப் பற்றிக் கேட்டிருக்க, நடந்ததைச் சொல்லலாமா? வேண்டாமா? என்ற தயக்கம் அவருக்கு. பிறகு, நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறிச் சிறு பையனின் மனதை வருத்தப்படுத்த விரும்பாமல், “நீ ஊருக்கு வரும்போது பேசிக்கோ கண்ணா,” என்பதோடு முடித்துக் கொண்டார்….

 

​மாதங்கள் கழிந்தது.. அபியின் காலாண்டு விடுமுறையும் வந்தது, தன் தாய் தந்தையிடம் கெஞ்சிக் கூத்தாடித் தன் அத்தையின் ஊருக்குப் புறப்பட்டான், அப்போது வாசுதேவன் வேலை விஷயமாக வெளிநாடு போயிருந்ததால், இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வரலாம் என்று அவன் தாய் தெய்வானையும் அவனோடு கிளம்பினார்…

 

வரும் வழி முழுக்க ஜானுவைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வமும், சந்தோஷமும் தான் அபியின் முகத்தில் தெரிந்தது. அவன் தாய் தெய்வானை கூட மகனை ஆச்சரியமாகப் பார்த்தார்…

 

ஜானுவின் ஊருக்கு வந்து சேர்ந்த கணம் அவன் ஜானுவின் வீட்டை நோக்கித்தான் ஓடினான்…

 

​வாசலில் அவர்களை வரவேற்க நின்ற திலகா, அபி ஓடும் வேகத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இத்தனை மாதங்கள் கழித்தும், அவன் இவ்வளவு பெரிய ஆசையுடன் ஜானுவைப் பார்க்கச் செல்கிறானா? அந்தச் சிறுமியின் மீது இவனுக்கு இவ்வளவு பெரிய பாசமா? என்று திகைத்தவர், அவனருகே சென்றபடி, “அபி கண்ணா, இங்கே ஏன்ப்பா வந்த?” என்றார்…

 

​”ஜானுவைப் பார்க்கத்தான் அத்த… அவ இல்லையா? வீடு பூட்டி இருக்கு” என்று கேட்டவனோ, “ஜானு!” என்று உரக்க அழைத்தான் அருகில் எங்காவது விளையாடிக் கொண்டிருக்கிறாளோ என்ற எண்ணத்தில்…

 

​”அவ இங்க இல்லப்பா” திலகா சொல்ல… “இல்லையா?” என்று கேட்டவனோ, “இங்கே இல்லைனா அப்போ எங்கே போயிட்டா அத்த?” என்றான்…

 

​”அவ அப்பா இறந்து போயிட்டாரு. அவளைப் பார்த்துக்க யாரும் இல்லை. அதனால அவளோட சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டா”  என்று திலகா மெதுவாகச் சொல்ல… “அ… அவ அப்பா இறந்துட்டாரா?” என்று அதிர்ந்தவனோ, “ஜா… ஜானுவோட சொந்தக்காரங்க வீடு எங்கே இருக்கு?” என்றான் இப்போதே அவளைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில்.…

 

​”அதெல்லாம் எனக்குத் தெரியலப்பா” திலகா சொல்ல, அபியின் முகத்தில் இருந்த மொத்த சந்தோஷமும் ஒரே நொடியில் காணாமல் போனது. இவ்வளவு நாள் மனதிற்குள் வளர்த்து வைத்திருந்த ஆசைகள் அனைத்தும் அந்த ஒரு பதிலில் நொறுங்கிப் போயின…

 

சிலையாய் நின்றிருந்தவனின் தோளில் “அபி” என்று அவர் கரம் வைக்க… ​”இதைப் பற்றி என்கிட்ட நீங்க ஏன் முன்னாடியே சொல்லல அத்த?” என்றான் வருத்தம் நிறைந்த குரலில்.…

 

​”நீ சின்னப் பையன்டா. சொன்னா வருத்தப்படுவேனு தான் சொல்லல,” என்றார் திலகா…

 

​”எனக்கு இப்போ ஜானுவைப் பார்க்கணும்,” என்றான் அபி கண்களில் நீர் கோர்க்க.

 

அவனது பிடிவாதமான குரலில் அத்தனை ஏக்கமும் வலியும் தெரிந்தன. ஜானுவை பார்க்க வேண்டும் என்ற வெறி அவனுக்குள் தோன்றியது…

 

அந்த நேரம் அவர்களினருகில் வந்த தெய்வானை, “என்னாச்சு கண்ணா?” மகனின் கலங்கிய கண்களைக் கண்டு பதட்டத்துடன் கேட்டுவிட்டு, “திலகா, என்னாச்சு?” என்று திலகாவிடமும் கேட்க… “அண்ணி,” என்றவரோ நடந்ததைச் சுருக்கமாகக் கூறினார்.

 

​ஜானுவின் தந்தை இறந்ததையும், அவள் அந்த ஊரை விட்டே சென்றதையும் கேட்ட தெய்வானை மனம் வருந்தினார், அந்த சிறுமியை பார்த்தது இல்லையென்றாலும் மெல்லிய மனம் கொண்டவருக்கு கவலையாக தான் இருந்தது.…

 

​”அம்மா… ஜானுவை நான் பார்க்கணும்மா,” என்று அழுகுரலில் கேட்ட மகனிடம்… என்ன சொல்வதென்று தெரியாமல் அவனை அப்படியே கட்டி அணைத்துக்கொண்டார் தெய்வானை. மகனின் இந்தத் தவிப்பு, சாதாரண சிறுவன் விளையாட்டில் காட்டும் ஆர்வம் இல்லை என்பதைத் தாயாக அவர் உணர்ந்தார்…

 

தன் மகன் எதற்கும் இவ்வளவு உணர்ச்சிவசப் பட மாட்டானே என்று அதிர்ச்சியாகவும் இருந்தது.
​அதே சமயம், அவன் கேட்கிறான் என்று ஜானுவைத் தேடி அலைய முடியாதே? அவன் சிறுவன் இந்த வயதில் பிடிவாதம் என்பது இயல்பானதுதான் என்று அவனைச் சமாதானம் செய்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

 

​ஆனால், அவன் மகனோ மீண்டும் மீண்டும் ஜானுவைப் பற்றியே தான் கேட்டான். அங்கே இருப்பது சரியில்லை என்பதை உணர்ந்தவர் அடுத்த நாளே மகனை அழைத்துக் கொண்டு தங்கள் ஊருக்கு வந்துவிட்டார்…

 

​அதன் பிறகு வெகு நாட்கள் அவன் சோகமான முகத்துடன் தான் திரிந்தான். ஜானுவை மீண்டும் பார்ப்போம் அவள் நிச்சயம் தன்னை பார்க்க வருவாள் என்ற நம்பிக்கையுடன் அரையாண்டு விடுமுறைக்கு மீண்டும் அத்தையின் ஊருக்குச் சென்றான்.

 

ஆனால் அவனுக்கோ ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஜானு எங்கே சென்றாள் எப்படி இருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியாத அந்தத் தேடல் அவனது மனதில் ஆழமான வலியையும் ஏக்கத்தையும் நிரப்பியது…

 

​காலங்கள் வேகமாக கடந்தது ஆனால் ஜானுவின் நினைவு மட்டும் அவனை விட்டுப் போகவில்லை. இந்த ஏமாற்றம் அவனது குழந்தை மனதை இறுகச் செய்தது…

 

​இதற்கிடையில், அவனின் அத்தையும் மாமாவும் வேறு அந்த ஊரில் உள்ள வீட்டை விற்றுவிட்டு, வெளிநாட்டில் குடிபெயர்ந்தனர். ஜானுவைக் கண்டுபிடிக்க இருந்த ஒரே ஒரு இணைப்பும் அற்றுப் போனது…

 

​அவனது அத்தையும் மாமாவும் மட்டுமே அவனை அபி என்று அழைப்பார்கள். அவன் தாய், தந்தை, நண்பர்கள் எல்லாம் சித்து என்றுதான் அழைப்பார்கள். எனவே, ஜானு ஆசையாக அழைக்கும் அபி என்ற பெயர்கூட அவனுடைய அன்றாட வாழ்க்கையில் இருந்து வெகுவாக விலகியிருந்தது, அந்தப் பெயர் அவனது கடந்த காலத்தின் ஒரு ரகசியமாக அவனது இதயத்தின் ஆழத்தில் மட்டுமே பதிந்திருந்தது…

 

அவன் தன் பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கல்லூரி படிப்பை தந்தையின் கண்டிப்பின் பெயரில் வெளிநாட்டில் படிக்க வேண்டிய கட்டாயம்.

 

​அவன் தன் ஊரை விட்டுப் பிரிய இருந்த நேரம், ஒரு முறை ஜானுவுடன் நாட்களைக் கழித்த ஊருக்குச் சென்று பார்க்க நினைத்தான். இப்போதாவது அவள் தன் கண்ணில் பட மாட்டாளா எனும் நப்பாசை அவனுக்கு. ஆனால், அப்போதும் அவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

 

யாருமற்ற அந்தத் தெருக்களும், காலியான வீடுகளும் அவனது காயங்களை மீண்டும் கீறின. அந்த ஏமாற்றத்துடன், தனது படிப்பிற்காக வெளிநாட்டை நோக்கிப் பயணப்பட்டான்.

 

​வெளிநாட்டில் படிப்பில் மூழ்கினாலும், அவன் மனதின் ஒரு மூலையில் ஜானுவின் நினைவு எப்போதும் ஒரு மெல்லிய வலியைப் போல் இருந்துகொண்டே இருந்தது…

 

படிப்பு முடிந்து ஊருக்கு வந்தவன், தொழிலில் மொத்தமாக இறங்கி விட்டான். ஆனாலும், அவன் மனதில் ஜானு மீதான தேடலும், அவளைக் கண்டறிய வேண்டும் என்ற உறுதியும் சற்றும் குறையாமல் இருந்தது. அவன் பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட போதும், தனது நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்குப் பின்னால் ஓடிய போதும், அவன் கனிவான இதயம் ஒரு சிறுமியின் பழைய நினைவுகளால் நிரப்பப்பட்டிருந்தது…

 

அவனுக்கு நன்கு தெரியும், இப்போது ஜானு அவன் முன்னிலையில் வந்து நின்றாலும் அவனால் அடையாளம் காண முடியாது என்று. இத்தனை வருடங்களின் பின் அவளாலும் அவனை அடையாளம் காண முடியாது. ஆனால், அவனுக்குள் இருந்த நம்பிக்கை மட்டும், காலத்தால் அழியாத உறுதி கொண்டிருந்தது…

 

​ஜானுவின் வீடு இருந்த ஊருக்கு அவன் மீண்டும் சென்றபோது, அவள் தந்தையின் மரணம் மற்றும் அவள் அங்கிருந்து சென்றது குறித்து ஒருசில துண்டுக் குறிப்புகளை மட்டுமே அவனால் சேகரிக்க முடிந்தது. அவை அனைத்தும், அவள் இனிமேல் அந்த ஊருக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்பதையே உணர்த்தின. இருந்தும், அவன் ஒருபோதும் தேடுவதை நிறுத்தவில்லை. ‘எங்கோ ஒரு மூலையில், அவள் நலமாக இருக்கிறாள்’ என்ற நம்பிக்கையும், ‘ஒருநாள் அவள் தன்னைத் தேடி வருவாள்’ என்ற அசைக்க முடியாத எதிர்பார்ப்பும்தான் அவனது இரும்புப் போன்ற வெற்றிப் பாதையில் அவனுக்கான ஒரே மெல்லிய ஆறுதலாக இருந்தது…

 

இப்போது அவன் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பது கூட அவளுக்காக மட்டுமே! அந்தச் சிறு வயதில், காதல், கல்யாணம் என்பதையெல்லாம் அவன் யோசிக்கவில்லை. ஆனால், அவன் வயதுக்கு வந்த பிறகு, காதலைப் பற்றியும் திருமணத்தைப் பற்றியும் தெரிந்து கொண்ட பிறகு, அதனைத் தன் ஜானுவினுடனே வாழ வேண்டும் என்ற தெளிவான முடிவுக்கு வந்தான். அவனுக்கென ஒரு துணை என்றால், அது தன் சிறு வயது தோழியாக, ஆழமாகப் பதிந்துபோன ஜானுவாகத்தான் இருக்க வேண்டும் என்று அவன் உறுதியாக நம்பினான். அவளைத் தேடிக் கண்டுபிடிக்கும் வரை, வேறொரு பெண்ணை மணக்க அவன் மனம் தயாராக இல்லை…

 

அவளை எங்கே, எப்படி சந்திக்கப் போகிறான் என்று தெரியவில்லை. ஆனால், சந்திப்பேன் என்ற நம்பிக்கை மட்டும் ஆழமாக இருந்தது. அந்த நம்பிக்கையுடன் தான் இப்போது வரை இருக்கிறான். அவனது ஒவ்வொரு வெற்றிப் படியிலும், ஒரு நாள் அவள் தன்னைக் கண்டறிவாள் அல்லது தான் அவளைக் கண்டறிவோம் என்ற எண்ணம் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது…

 

தன் கடந்த காலத்திலிருந்து வெளிவந்தவனுக்கு, தான் எப்போது அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம் என்று கூட நினைவில் இல்லை..

 

தனது ஆடி காரைத் தனக்கே உரிய இடத்தில் நிறுத்திவிட்டு, கண்ணாடிச் சாளரங்களால் உயர்ந்து நின்ற தனது பிரம்மாண்டமான கட்டிடத்தினுள் நுழைந்தான் சித்தார்த்.…

 

​அலுவலகத்தின் வரவேற்புப் பகுதியில் இருந்த பணியாளர்கள் அனைவரும், அவனைப் பார்த்ததும் எழுந்து நின்று மரியாதையுடன் காலை வணக்கத்தை சொல்லினர், எப்போதும் கண்டிப்பும், இலக்கின் மீதான கவனமும் மட்டுமே அவனிடம் இருக்கும்..

 

ஆனால், இன்று அவனது முகத்தில் ஒருவித சலிப்பும், ஆழ்ந்த சிந்தனையும் குடிகொண்டிருந்தன. அவன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், சிறு தலையசைப்புடன் மட்டுமே தனது பிரைவேட் லிஃப்ட்டை நோக்கி விரைந்தான்.
​அவன் நடந்து செல்லும் வேகம், சுற்றியிருப்பவர்களுக்கு எப்போதும் ஒருவித பதற்றத்தைத் தரும். இவ்வளவு விரைவான வளர்ச்சியைக் கண்ட இந்த இளம் தொழிலதிபன் எந்நேரமும் ஓடிக் கொண்டே இருப்பவன் என்பதை அது காட்டியது…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page