அத்தியாயம் 12

வைஷாலி நதியாவை எழுப்பி ஜூஸ் குடிக்க வைத்தாள். அவள் அரை மயக்கத்தில் இருந்தாலும் வைஷு அவளுக்காக அழுவதும் செய்வதும் எல்லாம் தெரிந்தது. வயிற்று வலி, உடல்நிலை சரியில்லாத போது நதியாவின் அம்மா, அவளை எப்படி பார்த்துக் கொள்வாரோ அப்படி அரவணைத்துக் கொண்டாள் வைஷு.

பாட்டி அவ்வப்போது வந்து அவளைப் பார்த்துவிட்டுச் சென்றார். மிதுன் இரவு தான் வீட்டிற்கு வந்தான். அறைக்குள் வந்ததும் தங்கையைப் பார்த்து திகைத்தவன், “வைஷு.. உனக்கு எப்போ காலேஜ் ஓபன் ஆகுது?” என்றவாறு அவளுக்கு அருகே சென்றான். அவள் பதிலேதும் பேசாமல் இருந்திட, “என்னடா சாப்பிட்டியா?” என அவள் தலையை வருடினான்.

“நான் உங்களுக்கு மதியத்திலருந்து கால் பண்ணேன். ஏன் அட்டென்ட் பண்ணல?” அண்ணனை நிமிர்ந்து பார்த்து அவள் கேட்க, “இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருந்தது. அதான் நான் இன்னும் போனே பார்க்கல. எனிதிங் இம்பார்டன்ட்?” குழப்பமாய் அவளை வினவினான்.

“அண்ணிக்கு உடம்பு சரியில்ல”

“ஏன் அவளுக்கு என்னாச்சு?”

“அவங்க மென்சஸ் ஆகியிருக்காங்க” 

“ஆமா சொன்னா..”

“அண்ணி மதியம் நான் வந்து பார்க்கும் போது மயக்கமாகி விழுந்துட்டாங்க. நான் தான் டாக்டருக்கு போன் பண்ணி வர வச்சேன். அவங்க வந்து செக் பண்ணிப் பார்த்துட்டு இந்த மாதிரி டைம்ல நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கக்கூடாதுன்னு சொன்னாங்க” அவள் பேசியதைக் கேட்டதும் அவன் அதிர்ந்து போனான்.

“எனக்குத் தெரியாதுடா. அவ சொல்லல” தங்கை தன்னைத் தவறாகப் புரிந்துகொள்வாளோ என்ற எண்ணத்தில் அவளிடம் தன்னை நிரூபிக்க முயற்சித்தான்.

“நீங்க நிஜமாவே அவங்களை லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா? நானும் அவங்க நம்ம வீட்டுக்கு வந்ததுல இருந்து பார்க்குறேன். அன்னைக்கு அவங்க பண்ணாத தப்புக்காக ரூபி கிட்ட மன்னிப்பு கேட்கச் சொன்னீங்க, எங்க எல்லார் முன்னாடியும் அவங்களை அடிச்சுட்டீங்க, அம்மா அவங்களை திட்டும் போது கூட பேசாம இருக்கீங்க. ரூமை விட்டு வெளில வர விடாம வச்சிருக்கீங்க. இன்னைக்கு இப்படி, எனக்கு சொல்லவே கஷ்டமா இருக்கு” அவள் கண்களில் கண்ணீர் வழிய, அவனோ பதற்றமடைந்தான்.

“வைஷு எதுக்கு அழற? அவளுக்கு ஒண்ணும் இல்ல தான. அப்புறம் என்ன?” 

“ஒண்ணும் இல்லையா? அவங்க காலைல இருந்து சாப்பிடவே இல்ல. எப்படி மயங்கி விழுந்தாங்க தெரியுமா? இன்னும் சரியா மயக்கம் தெளியல. லவ் பண்ணவங்கள இப்படித்தான் பார்த்துப்பாங்களா? என் மித்து அண்ணாவா இப்படிப் பண்ணாங்கன்னு நினைக்கும் போது, எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஏன் அண்ணா இப்படிப் பண்றீங்க?அவங்க இடத்துல நான் இருந்து எனக்கு இந்த மாதிரி நடந்திருந்தா நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க?” தங்கையின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான். 

“வைஷு உன்னோட அண்ணனுக்கு நிஜமாவே தெரியாது. அவரை ஏன் திட்டுற? நான் தான் சொல்லல. தப்பு என் மேல தான்” நதியா மெல்ல எழுந்து அமர்ந்து பதில் சொன்னாள்.

“அண்ணி நீங்க சும்மா சொல்லாதீங்க. பழைய காலம் மாதிரி புருஷன் கொடுமை பண்ணாலும் தாங்கிட்டு வாழணும்னு நினைச்சுடாதீங்க. மித்து அண்ணா எங்ககிட்ட அன்பா இருக்கிற மாதிரியே, உங்க மேலயும் அன்பா இருக்கார்னு தான் நான் நினைக்கிறேன். அப்படி இல்லைன்னா யாரைப்பத்தியும் யோசிக்காதீங்க. உங்க சந்தோஷம் தான் முக்கியம்னு டிவோர்ஸ் கூட வாங்கிட்டு போயிடுங்க” அவளின் பேச்சில் மிதுன் மட்டுமல்ல நதியாவும் ஆடித்தான் போனாள். 

“நீங்க என்னோட ரூம்ல போய் தூங்குங்க. நான் அண்ணி பக்கத்துல இருக்கேன். அவங்களைப் பார்த்துக்கிறேன். அவங்க சரியான பிறகு உங்க ரூமுக்கு வாங்க” இத்தனை நாள் அவளை குழந்தை என அவன் நினைத்திருக்க, பெரிய மனுஷத்தனமாய் அவள் பேசிய பேச்சில் வியந்தான்.

தவறென்றால் அண்ணனையும் தட்டிக் கேட்கிறாள் என்னுடைய தங்கை. என்னுடைய வளர்ப்பு சரிதான் என்ற மகிழ்ச்சி ஒருபுறம், அவளிடம் குற்றவாளியாய் நிற்க வேண்டிய நிலை வந்ததே என்ற வேதனை மறுபுறம் என குழப்பமான மனநிலையில் இருந்தான் மிதுன். 

“சரி உன்னோட அண்ணி பக்கத்திலேயே இரு. அழக்கூடாது சாப்பிட்டுத் தூங்கணும்” தங்கையின் கண்ணீரைத் துடைத்து, அவள் கன்னம் தட்டிச் சொன்னான்.

அவன் உடை மாற்ற டிரெஸ்ஸிங் அறைக்குள் சென்றிருக்க, நதியா வைஷாலியை அணைத்துக் கொண்டு அழுதாள். கொஞ்ச நாட்களாக மிதுன் எவ்வளவு வலி தந்த போதிலும் அழாதவள், வைஷாலியின் அன்பில் கரைந்து போனாள், உடைந்து அழுதாள். அவளது அழுகை மிதுனின் இரும்பு மனதையும் லேசாக அசைத்துப் பார்த்தது.

உடை மாற்றி வெளியே வந்தவன் “ஏதாவது வேணும்னா அண்ணனுக்கு கால் பண்ணுடா வைஷு” தங்கையிடம் சொல்லிவிட்டு வெளியேறினான். மனம் கனத்துப் போயிருக்க, காரில் ஏறி ஆபீஸுக்குச் சென்றான். அவனுடைய கேபினில் லேப் டாப்பை திறந்தவன், வேலையில் மூழ்க நினைத்து, பழைய நினைவுகளில் மூழ்கினான்.

நதியாவின் அழுகை குறைந்திருக்க, “தேங்க்ஸ் டா வைஷு. எனக்கு நீ ஒரு ஏஞ்சல் மாதிரி. இன்னைக்கு நீ இல்லனா நான் என்ன ஆகியிருப்பேன்னு எனக்கே தெரியல” உளமார நன்றி சொன்னாள். இருவரும் சாப்பிட்டு முடித்து அருகருகே அமர்ந்து பேசினர்.

“உங்களுக்கு கொரியன் டிராமா பிடிக்குமா அண்ணி? எந்த நடிகர் பிடிக்கும்?”

“எனக்கு கொரியன் டிராமா ரொம்பப் பிடிக்கும். எனக்குப் பிடிச்சது நா இன் வூ (Naa In Woo). உனக்கு?”

“எனக்கு எப்பவும் என் டார்லிங் லீ மின் ஹோ (Lee Min Ho) தான் பிடிக்கும். நா இன் வூ, மேரி மை ஹஸ்பன்ட் டிராமால நடிச்சவர் தான. அவருக்கு மீசை வச்சா எங்க மித்து அண்ணன் மாதிரி இருப்பாங்கள. நல்ல ஹைட் அண்ட் வெயிட்டா சப்பியா இருப்பாரு” 

“அவங்களாம் மேக்கப் போட்டு அழகா இருக்காங்கடா. உங்க அண்ணன் நேச்சரா அழகா இருக்காங்க” சொல்லியபின்தான் ‘நானா இதைச் சொன்னேன்’ என யோசித்தாள் நதியா.

“ஹே அண்ணி.. அண்ணன் மேல அவளோ லவ்வா?” வைஷு சிரித்தபடி கேட்க, அவளும் பதிலுக்குச் சிரித்து வைத்தாள்.

இருவரும் ஏதாவது டிராமா பார்க்கலாம் என்று டிவியில் வைஃபை கனெக்ட் செய்து, The King of Eternal Monarch டிராமா பார்த்தார்கள். விடிய விடிய இருவரும் சுவாரசியமாக டிராமாவை பார்த்துக் கொண்டே டிவியை ஆஃப் செய்யாமல் தூங்கிப் போனார்கள். காலையில் அறைக்கு வந்த மிதுன் டிவியை ஆஃப் செய்தபின் குளித்து ஆபீஸுக்கு கிளம்பிச் சென்றான். 

மூன்று வேளையும் இருவருக்கும் சாப்பாட்டை அறைக்கே எடுத்து வரச்சொல்லி, அங்கேயே சாப்பிட்டு கொரியன் டிராமா, தமிழ்த் திரைப்படம், பாடல்கள் என எல்லாமே பார்த்தனர். நல்லவேளை ராதாவிற்கு தன்னுடைய மகள் நதியாவுடன் மிதுன் அறையில் இருப்பது தெரியாது. ‘அவளுடைய அறையில் இருக்கிறாள், அங்கேயே சாப்பிட்டு ஓய்வெடுக்கிறாள்’ என்று நினைத்துக் கொண்டார்.

மறுநாள் காலை மிதுன் அறைக்குள் நுழைந்தால், கீழே எல்லாம் குப்பை. லேஸ் சிப்ஸ் பாக்கெட், பிஸ்கட், ஸ்நாக்ஸ், நட்ஸ், ஐஸ்கிரீம், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் கவர்கள் தான் தரையெங்கும் கிடந்தன. காலி கூல்ட்ரிங் பாட்டில்கள் உருண்டன. இதையெல்லாம் பார்த்தவன் இதழ்கள் நீண்டு விரிந்தன, சிரித்துக் கொண்டான். இருவரும் மெத்தையின் மேல் ஒருவரையொருவர் அணைத்தபடி உறங்கியிருந்தனர்.

அவன் குளிக்கும் போது அவர்கள் படுத்திருந்த தோற்றம் தான் அவனுடைய நினைவுக்கு வந்தது. ‘ஷி இஸ் சம்திங்’ நண்பன் சொன்னதும் நினைவில் வந்தது. ‘தங்கைக்கு எப்படி நதியா மீது இவ்வளவு பிடித்தம்!’ ஆச்சரியத்தில் இருந்தான் மிதுன்.

இரவு அவன் வீட்டிற்கு வருவதேயில்லை. ஆபீஸில் தங்கியிருந்து காலையில் குளித்துச் செல்லத்தான் வீட்டிற்கே வருகிறான். 

அன்று அவன் அறைக்குள் நுழைந்தால் தரை முழுக்க பஞ்சுகளும், காற்றில் அதன் துகள்களும் பறந்திருக்க, 

முந்தைய நாள் இரவில் வைஷு, நதியா இருவரும் தனக்குப் பிடித்த கொரியன் ஹீரோவும் அவர் நடித்த டிராமாக்களும் தான் சரியென்று சண்டை போட்டு வாதாடி, கிழிந்து பஞ்செல்லாம் பறந்து போகுமளவு தலையணையால் அடித்து ஓய்ந்து, நதியா மீது வைஷு படுத்திருக்குமாறு தூங்கிக் கொண்டிருந்தார்கள். மிதுன் இதைப் பார்த்து சத்தமாகவே சிரித்துவிட்டான்.

அவன் சிரிப்பு சத்தம் கேட்டுக்கூட இருவரும் விழிக்கவில்லை. குளித்துக் கிளம்பி வந்தவன் அங்கிருந்த அலமாரியில் ஏதோ தேடிக் கொண்டிருக்க, தூசிப் பட்டு தும்மினான். அவன் கணீரென்ற தும்மல் சத்தத்தில் அதிர்ந்து போய் விழித்தாள் நதியா. 

அவனையும் அறையையும் மாறி மாறிப் பார்த்தவள், ஏதாவது திட்டுவானோ என்று பயந்து போயிருக்க, அவன் தும்மியவாறு தேவையானதை எடுத்தபின் அவளிடம் எதுவும் பேசாமல் கிளம்பினான். மிதுனுக்கு டஸ்ட் அலர்ஜி. சிறு தூசி இருந்தாலும், ஒருநாள் முழுக்க அதன் தொந்தரவு அவனைப் பாடாய்ப் படுத்திவிடும், தும்மியபடியே இருப்பான். கீழே சென்றவன் வேலையாட்களிடம், “என்னோட ரூமை இன்னைக்கு வேக்கம் கிளீனர் வச்சு சுத்தமா க்ளீன் பண்ணச் சொல்லுங்க” தும்மியபடியே சொல்லிவிட்டு கிளம்பினான்.

ஆபீஸுக்குச் சென்ற பிறகும் அவனுக்குத் தும்மல் தொடர்ந்தபடியே இருக்க, மாத்திரையைத் தேடி எடுத்து விழுங்கியபின் அதிலிருந்து விடுதலையானான். இப்படியே ஒரு வாரம் கழிந்தது…. மிதுன் அவளையும் வைஷாலியையும் தொந்தரவு செய்யாமல் இருப்பதும், தங்கையின் பேச்சுக்கு மரியாதை தருவதும் நதியாவுக்கு ஆச்சரியமாக இருந்தன.

தினமும் மிதுன் ஆபீஸில் தான் தங்கியிருக்கிறான் என விஷ்ணு மூலமாகத் தெரிந்து கொண்டாள். “வைஷு.. அதான் எனக்கு சரியாகிடுச்சுல. நீ உன் ரூமுக்கு போ. நான் என்னைப் பார்த்துக்கிறேன்” அவள் மனம் வருத்தப்படுவாளோ என தயங்கி தயங்கிச் சொன்னாள் நதியா.

“அண்ணி எங்க ரெண்டு பேருக்கு இடையில நீ எதுக்கு கரடி மாதிரின்னு கேட்கிறீங்களா?” அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் குறும்பாகத் தான் பேசினாள்.

‘மிதுன் என்ன மனநிலையில் இருக்கிறானோ? ஏற்கனவே குழந்தை இன்னும் உருவாகவில்லை என்ற வருத்தத்தில் தான் அன்று அறைந்தான்’ என்பதை உணர்ந்திருந்த நதியா, அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாற, 

“ஓகே பா.. நீங்க உங்க லவ்வர் கூடவே இன்னைக்குத் தூங்கலாம். ஆனா அதுக்கு லஞ்சமா எனக்கு நீங்க என்னோட அசைமண்ட் எல்லாம் முடிக்க ஹெல்ப் பண்ணனும். ஒரு பெரிய செமினார் இருக்கு இன்டர் காலேஜ் கம்பெடிஷன்ல. அதுல நான் வின் பண்ணா அடுத்து டைரக்ட்டா ஃபேஷன் ஷோல கலந்துக்க முடியும்” என்று அவள் சொல்ல, “டீல் ஓகே” என்றாள் நதியா.

அன்று முழுக்க இருவரும் அந்த அசைன்மெண்டைத் தயார் செய்தனர். ஒரு புதிய வகையான ஆடையை வடிவமைக்க வேண்டும், அதற்கான காரணத்தை செமினாரில் விளக்க வேண்டும். வைஷாலி ஆடையை வடிவமைக்க, நதியா அவள் செமினாரில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான உரையைத் தயார் செய்தாள். 

விஷ்ணுவிடம் போன் செய்து மிதுனை வீட்டிற்கு வரச் சொன்னாள் நதியா. அவனும் வந்து பேசாமல் படுத்துக் கொண்டான். “சார்..” நதியா எழுப்பிட, ‘என்ன..’ என்பதுபோல் விழித்துப் பார்த்தான். 

“சார்.. ஏற்கனவே ஒன் வீக் டைம் வேஸ்ட் ஆகிடுச்சு. நான் உங்களோட சூழ்நிலையைப் புரிஞ்சுக்கிறேன். எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. உங்களை அவாய்ட் பண்ணனும்னு நினைக்கல” அவள் மனதில் இருப்பதைச் சொல்லிட, மிதுன் தன் வேலையை ஆரம்பித்தான்.

வழக்கமாக எங்கேயோ பார்வையை செலுத்துபவன், இன்று அவள் முகத்தையே பார்த்தான். கண்களை இறுக்கமாக மூடியிருந்தவளின் முகத்தில் கொஞ்சம் வேதனையும் வலியும் மட்டும் தான் தெரிந்தன. எல்லாம் முடிந்து எழுந்து அருகில் படுத்தவனின் எண்ணத்தில், அரவிந்த் சொன்னது நினைவு வந்தது. 

‘லவ் மேக்கிங் காதலோடு கூடிய கலவியில் மட்டுமே குழந்தை பிறப்பு சாத்தியம்’ குழப்பத்தோடு யோசித்தான். அடுத்தடுத்து அவளுடன் கூடுகையில் அவள் முகம் சோர்வாகிக் கொண்டேயிருக்க, ‘அவள் உணர்வுகளுடன் விளையாடுகிறோமோ?’ என மனதிற்குள் முதன்முறையாக ஒரு உறுத்தல். அவன் விலகிப் படுத்திட, அவள் உறங்கியே போனாள்.

‘பேசாம லவ் மேக்கிங் பண்ணிப் பார்த்துடலாமா?’ நினைத்தவனின் மனம் பதறியது. ‘என் மனதில் வேறொருத்தியை வைத்துக்கொண்டு இவளுடன் காதலும், கலவியுமா? தப்பில்லையா? குழந்தைக்காக இன்னும் என்னெல்லாம் தப்பு செய்வ மிதுன்?’ தன்னையே கேட்டுக் கொண்டான்.

காலை எழுந்ததும் முதல் வேலையாக டிடெக்டிவ் ராகுலுக்கு போன் செய்தவன், “அந்த பொண்ணோட அட்ரஸை கண்டுபிடிக்க உனக்கு இன்னும் எவ்ளோ நாள் தான் ஆகும்?” கோபமாய் வினவினான்.

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page