வெந்து தணிந்த இதயம்-இறுதி அத்தியாயம்

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்- இறுதி அத்தியாயம்

 

ஒரு மாதத்திற்கு பின்பு..

 

வீட்டில் அனைவரும் பரபரப்பாக முத்தூர் முருகன் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 

 

அன்று தான் காதம்பரிக்கும் தர்மதுரைக்கும் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

 

காதம்பரிக்கு தெய்வானையும் யாழினியும் பார்த்து பார்த்து அலங்காரம் செய்தார்கள். 

 

கவிதாம்பரியோ காதம்பரி தன்னிடம் அவளின் காதலை மறைத்திருந்தாலும் பிணக்கு விட்டு  அவளை ரசித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

 

திடீரென அவளின் மன்மத அம்புகள்  விம்மி தாழ, “என்னடி பெருமூச்சு விடற?” என்று கண்களை உருட்டினாள் தெய்வானை.

 

அவளோ, “பின்ன என்னக்கா? ஆளாளுக்கு ஒரு மாமாவை கரெக்ட் பண்ணி செட்டிலாகிட்டீங்க. நான் பாருங்க ‘மாமனே உன்ன காங்காம, வட்டியில் சோறும் உங்காம, பாவி நான் பருத்தி நாறாப்போனேனே!’னு புலம்பிட்டு கெடக்கேன். தெய்வாக்கா நீ நாப்பது நாள், யாழினிக்கா நீங்க ரெண்டரை மாசம், இதோ இந்த காது மூனு மாசம். நான் மட்டும் தத்தியா வெறும் வயிறா இருக்கேனே அதை நினைச்சி‌ தான் பெருமூச்சு விட்டேன்.” என்றதும்,

 

அவ்வறைக்குள் நுழைந்த பொன்னி, “வெறும் வயிறா கிடக்கியா? நான் காதுவுக்கு மட்டும் தான் தட்டுல  பொங்கல் வச்சு கொண்டு வந்தேன். நீ கீழப் போய் வயித்தை நிரப்பிக்கோ” என்றதும், கர்ப்பிணிகள் மூவரும் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

 

டீசல் ரயில் எஞ்சின் போல் அங்கிருந்து கிளம்பினாள் கவிதாம்பரி.

 

வெளியே செல்லப்போனவளை கையைப் பிடித்து தடுத்த யாழினி, “ஒரு நிமிசம் நில்லு கவி.” என்று சற்றுமுன் தான் கொண்டு வந்திருந்த நகைப்பெட்டியை திறந்தாள். 

 

அதனுள் இருந்தது அனைத்தும் அவர்களின் பரம்பரை நகைகள்.

 

அதில் கால்வாசியை எடுத்து தெய்வானைக்கு கொடுத்தவள், கால்வாசியை காதம்பரிக்கு கொடுத்தாள். இன்னொரு கால்வாசியை கவியிடம் கொடுத்து விட்டு எஞ்சிய கால்வாசி நகைகளை தான் வைத்துக்கொண்டாள்.

 

மூத்த தாரத்தின் மகன் என்பதால் அனைத்தும் பத்ரிக்கு மட்டுமே உரிமையென்று இருந்ததை அனைவருக்கும் சமமாக யாழினி பங்கிட்டதை அவளை சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

 

யாழினியின் தன்னலமற்ற குணம் அவர்கள் அனைவரையும் அவளுக்கு ரசிகர்களாக்கியது.

 

தன் பெயர்த்தியின் மணக்கோலத்தை ரசிக்க வந்த சாவித்ரி யாழினியின் உன்னத செயலை கண்டு உச்சி குளிர்ந்துபோனார்.

 

அச்சமயம் வசந்தி தன் மகளுக்கு தட்டில் இட்டிலிகள் எடுத்துக்கொண்டு வர, பார்வதி தன் மருமகள் தெய்வானைக்காக தோசை எடுத்து வந்தார்.

 

வசந்தி, “ம்! வயித்துப்புள்ளக்காரிக சாப்பிட்டு அவளை அலங்கரிங்கடி” என்று அதட்டல் போடவும், மூவரும் மறுக்காமல் அவர்களிடம் ‘ஆ’ வாங்கிக்கொண்டனர்.

 

வசந்தி சுலேக்காவின் ஞாபகம் வந்தவராக, அவருக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுத்தும் வரவில்லையே என்று வருத்தப்பட, யாழினி அவரின் வருத்தத்தைப் போக்கினாள்.

 

“ம்மா நானும் எவ்வளவோ சொல்லியாச்சி. ஆனா எனக்கு டிராமா கம்பெனி தான்டி செட் ஆகும். இப்படி வீட்டுக்குள்ள அடைஞ்சுக் கிடக்கறது, நோய் வந்து கிடக்கறது மாதிரி இருக்குதுனா யார் என்ன செய்ய முடியும்? அவங்களுக்கு முடியுற வரை நாடகத்துல நடிக்கட்டும். அதுக்கப்பறம் நாம இங்க நம்ம வீட்டுல வச்சி பார்த்துக்கலாம்.” என்றதும், சமாதானமாய் தலையசைத்தார் வசந்தி.

 

யாழினி சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் திடீரென இட்டிலி புரையேறி இரும்பவும், தன் கையிலிருந்த சொம்பை உடனே அவளிடம் நீட்டினார் பார்வதி. 

 

ஆம், அவரையும் தன் வசப்படுத்திவிட்டாள் யாழினி. 

 

ரத்னவேல் பாண்டியன் மனநலகாப்பகம் சென்ற பிறகு, தன் மகன் அருகில் இல்லாமல் பித்துபிடித்துவிட்டார் பார்வதி. 

 

சரியான சாப்பாடு இல்லாமல் அவர் உடல் நலிவுறுவதைக் கண்டு பரிதாபப்பட்ட யாழினி, சஷ்டியையும் தெய்வானையையும் பத்ரவேல் பாண்டியனுடன் நேரில் சென்று சந்தித்து பார்வதியின் நிலையை எடுத்துக்கூறி அவர்களை கையுடனே பெரிய வீட்டில் வந்து தங்கும்படி செய்து விட்டாள். 

 

அதிலிருந்து தான் பார்வதி யாழினியின் அனுதாபி.

 

தெய்வானை என்ன தான் பார்வதி தன்னை தாய் போல் தாங்கினாலும் தன் தாய் ஜெயந்தியை காணாத குறை அவளுக்கு இருக்கத்தான் செய்தது.

 

ஜெயந்தியோ குற்றவுணர்வில் யார் முகத்திலும் விழிக்காமல் இருந்தவர், இன்று தன் கணவரின் வற்புறுத்தலில் திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

 

அவர் பெண்கள் அனைவரும் காதம்பரியின் அறையில் நிற்பதை கண்டு, “வசந்தி!” என்று ஓடிவந்து தங்கையை கட்டியணைத்துக் கொண்டார்.

 

அருகில் நின்ற தெய்வானை முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு, “வாயும் வயிறுமா நீங்கப் பெத்தப் பொண்ணு நான் நிற்கறேன். நீங்க வசந்தி சித்தியை கட்டிப் பிடிக்கறீங்களா? போங்க நானும், என் பிள்ளையும் உங்க மேல கோபமா இருக்கோம்” என்று திரும்பி நின்றுகொண்டாள்.

 

“ஹே! ஹே! என் செல்லப்பொண்ணில்ல? தங்கப்பொண்ணில்ல?” என்று கெஞ்சி கொஞ்சி அவளை சமாதானப்படுத்தினார் ஜெயந்தி.

 

அவர் அருகிலிருந்தாலும் யாழினியின் முகத்தில் கூட விழிக்க அவமானப்பட்டுக்கொண்டு அவள்புறம் திரும்பும் போதெல்லாம் தலை குனிய, “பெரியம்மா இந்த பூவை எனக்கு கொஞ்சம் வச்சி விடுங்க” என்று வலிய வந்து பேசி, தான் அவரை மன்னித்து விட்டதை குறிப்பால் உணர்த்தினாள் யாழினி.

 

அவள் அப்படித்தான்! கடல் என்றைக்கு வெயிலடித்து வற்றிப்போயிருக்கிறது?

 

உணர்ச்சிப்பெருக்கில் திண்டாடியவரோ அவளுக்கு பூவை வைத்துவிட்டு அவளை பின்னிருந்து கட்டிக்கொண்டார். 

 

அச்சமயம் அனைவரின் முகத்திலிருந்த மகிழ்ச்சி, யாழினியின் உள்ளத்தை நிறைத்தது. 

 

இறுதியாக அவ்வறைக்குள் நுழைந்தது தர்மதுரையின் தாய் லக்ஷ்மி.

 

அவர் தனது மருமகளின் அழகில் மயங்கிப்போய், அவளின் முகத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.

 

மணப்பெண்ணே தயாராகியதும், அவ்வீட்டின் ஆண்களை கிளப்பிவிடச் சென்றனர் அவர்களின் மனைவிமார்கள்.

 

யாழினி தன்னறைக்குள் நுழைந்தவுடன் கண்ணாடியின் முன் நிற்கும் தன் கணவனை வாயைப் பிளந்து பார்த்தாள்.

 

எப்போதும் வெள்ளை சட்டையும், கறுப்பு, நீலப் பேண்ட்டுமே அணியும் அவளது கணவன் எப்போதாவது தான் இப்படி வெள்ளை வேஷ்டி, சட்டை அணிவான். 

 

அன்றெல்லாம் அவனில் அழகில் சொக்கி விழுங்குவது போல் பார்ப்பாள் யாழினி. இன்றும் அதுபோலவே கைக்கடிகாரம் கட்டிக்கொண்டிருந்தவனை மெய் மறந்து பார்த்தாள்.

 

திரும்பி அவளை பார்த்தவனோ, “ஹேய் வேணாம்டி. இன்னைக்கு கோவிலுக்கு வேற போகனும். அப்பறம் இசகுபிசகா ஏதாவது ஆச்சினா என்னை சொல்லக்கூடாது.” என்று லாவகமாக அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து எச்சரித்தான்.

 

ஆனால், யாழினி அடங்கவில்லை. அவன் கன்னத்தை ஆசையாக கடித்தாள். பதிலுக்கு அவளின் இதழில் செய்யுள் எழுதினான் பத்ரி. 

 

அவள் கிறக்கமாக நின்றபோது இடையில் கைக்கொடுத்து தூக்கி அவள் கழுத்தில் முகம் புதைத்தான். அவள் வாசம் அவனை மேலும் கிறங்கடித்தது. 

 

முந்தானையை அவிழ்க்கப் பார்த்தவனை தலையில் குட்டியவள், “கோவிலுக்கு போகனும்” என்று கிசுகிசுத்தாள்.

 

“இதெல்லாம் அநியாயம்டி. சிவனேனு இருந்தவனை கண்ணுல மருந்து வச்சி மயக்கி, இப்ப தரமாட்டேனு நழுவிப்போறது ரொம்ப தப்பு சொல்லிட்டேன்.” எ‌ன்று புலம்பியதும்,

 

“ஹலோ கூட்டுறவுத்துறை அமைச்சரே! இதான் உங்க உறவை கூட்டுற வேலையா? மொத வயித்துல இருக்க உங்கப்புள்ளை பொறந்து வெளிய வரட்டும், அதுக்கப்பறம் பாருங்க நீங்களே வேணாம் வேணாம் சொன்னாலும் வருசா வருசம் ரெட்டைப்புள்ளை பெத்து உங்கக் கையில கொடுத்துற மாட்டேன்?” என்று அவனுக்கும் மேல் காதல்வெறியேறி யிருந்தாள்.

 

“அந்த விருந்துக்கு முன்னாடி எனக்கு அடிக்கடி ஸ்னாக்ஸ் மாதிரியாவது ஏதாவது கொடுடி” என்றதும்,

 

“ஒன்னுமே தராத மாதிரி நடிக்காதீங்க. நேத்து நைட் கூட என்னன்ன செய்ய முடியுமோ எல்லாம் செஞ்சு தானே விட்டீங்க? இப்ப நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க?” என்று அவனின் மீசையை இருகைகளாலும் பற்றி ஆட்டினாள்.

 

அவளை திருப்பி நிறுத்தி கட்டிக்கொண்டவன் கழுத்தில் முகம் புதைத்து, “நீ வேணும் வேணும்னே இருக்குடி” என்று சிறுபிள்ளையாய் சிணுங்கினான்.

 

“வீட்டுல இப்படி என்கிட்ட மட்டும் சின்னப்பிள்ளையா சினுங்கறீங்க. ஆனா வெளில பெரிய பெரிய காரியம் இல்ல பண்றீங்க? ரொம்ப பெருமையா இருக்குங்க உங்களை நினைச்சு.” என்றதும், அவள் எதை குறிப்பிடுகிறாள் என்பது புரியாமல் விழித்தான் பத்ரி.

 

“ஐயா பஞ்சாயத்து தலைவரே! ஒன்னும் புரியாத மாதிரி நடிக்காதீங்க. நீங்க வயல்ல வேலைப் பார்க்கறவங்களுக்கு கூலியை உசத்தி கொடுத்தது, ஊருக்குள்ள எல்லாருக்கும் பொதுவான இடுகாடு கட்ட கலெட்டருக்கு துணையா நிற்கறது, ஊருக்குள்ள எல்லா கோவிலுக்கும் எல்லா தெருவைச் சேர்ந்தவங்களும் வரலாம் போகலாம்னு பஞ்சாயத்துல பேசி பெரிய மனுசங்க சம்மதம் வாங்கினது, எல்லாமே.. எல்லாமே என் மாமாவை ஊருக்குள்ள ஹீரோவாக்கிடுச்சி தெரியுமா? இன்னைக்கு கலப்பு திருமணத்தை ஊக்கப்படுத்தற விதமா இருபத்தஞ்சு காதல் ஜோடிகளுக்கு உங்க தலைமைல கல்யாணம் செஞ்சு வச்சி அவங்களுக்கு தாலிக்கு தங்கமும், சீர் வரிசையும் கொடுக்க முடிவெடுத்திருக்கீங்களே இதென்ன சாதாரண விசயமா? குறிஞ்சிகுளம் உங்களால முக்தியடைஞ்சிருச்சி மாமா.” என்றதும், அவளின் நெற்றியில் முட்டிய பத்ரி இல்லையென்று மறுத்தான்.

 

“என்னால முக்தியடையல யாழினி. பரிசுத்தமான மனசு கொண்ட உன்னால தான் இந்த குறிஞ்சிகுளம் முக்தியடைஞ்சிருக்கு. நீ மட்டும் என் வாழ்க்கையில வரலைனா என்னால இவ்வளவு தூரம் சாதிச்சிருக்க முடியுமா தெரியாது. நீ எனக்கு கிடைச்ச மிகப்பெரிய வரம்.” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான். 

 

அவள் எல்லையற்ற மகிழ்ச்சியில் அவன் மார்பில் சரண் புகுந்தாள்.

 

மற்றொரு அறையில் தெய்வானை தனது கணவன் சஷ்டியை வேகமாக கிளம்புமாறு துரிதப்படுத்திக் கொண்டிருந்தாள். அவன் தனது அரிசி ஆலையை இன்னும் இரண்டு நாட்களில் திறக்கவிருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை அலைபேசி வழியாகவே கவனித்துக் கொண்டிருந்தான். 

 

தெய்வானை ஒரு கட்டத்தில் அவனின் அலைபேசியை பிடிங்கி தனக்கு பின்னால் மறைத்து வைத்துக் கொண்டவள், கட்டிலில் இருந்த அவனது உடைகளை அணியச் சொன்னாள்.

 

அவனும் அவளுடன் மல்லுக்கட்ட விரும்பாது நல்ல பிள்ளையாக ஆடைகளை அணிந்தான். 

 

இப்போது அவன் அருகில் வந்து தலைமுடியை விரல்களால் சரி செய்தவள், “என் முத்தா, தங்கா” என்று உதட்டைக் குவித்து கொஞ்ச, அவளின் செவ்விதழை அவள் அசந்த நேரத்தில் தனதாக்கினான் சஷ்டி.

 

முதலில் முரண்டியவள் பின்பு, “ம்ம்ம்” என்ற முனகலோடு ஒத்துழைத்தாள்.

 

பின், கோவிலுக்கு செல்ல நேரமாவதை உணர்ந்து, அவனைவிட்டு வம்படியாக பிரிந்தாள். 

 

“கீழப்போகனும் மாமா” என்று சிணுங்கினாள். 

 

அவன் தான் அவளுக்காக தருவித்திருந்த தாமரைப்பூக்களை அவளிடம் நீட்டினான். அதைப் பார்த்ததும் கண்களிரண்டும் தாமரைகளைப் போலவே மலர்ந்தன அவளுக்கு.

 

ஒருமுறை வெக்காளியம்மான் கோவிலுக்கு பத்ரியின் ஜீப்பில் செல்லும் போது அவனிடம் தாமரைப்பூ வேண்டுமென்று கேட்டாள் தெய்வானை. அப்போது அது மறுக்கப்பட்டது. ஆனால்‌, சஷ்டி தற்போது அதை நினைவு வைத்து தனக்கு வாங்கிக் கொடுத்தது அவன்பால் அவளை மையலின் உச்சத்திற்கே இட்டுச் சென்றது. 

 

அதில் ஒன்றை‌ எடுத்து அவளின் தலையில் சூட்டி‌ அழகு பார்த்தவன், அவளின் காதல்பார்வையில்‌ இது சரிபடாது என்று தனது வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, அவளை தனது இரு கைகளிலும் ஏந்திக்கொண்டான்.

 

இது அவள் கருவுற்ற செய்தி தெரிந்த முதல்நாளிலிருந்தே இருவரும் கீழே செல்லும் சமயங்களில் அவன் செய்யும் வேலை தான் என்பதால், அவன் கைகளில் அங்கவஸ்திரமாகி, அவன் மார்பை அலங்கரித்தாள் தெய்வானை.

 

ஒருவாறு அனைவரும் வரவேற்பறையில் கூடியபோது பத்ரவேல் பாண்டியன், சஷ்டிவேல் பாண்டியன், தர்மதுரை என்ற வெற்றிவேல் பாண்டியன் ஆகிய மூவரையும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் கவிதாம்பரி.

 

ஆண்மகன்களின் இணையரோ அவளின் சிரிப்பிற்கு காரணம் புரிந்து வெட்கப்பட்டுக்கொண்டு நிற்க, பொன்னியின் அதட்டலில் தானே உண்மை விளம்பியானாள் கவிதாம்பரி.

 

“அதுவந்துமா நான், காது, தெய்வாக்கா, யாழினிக்கா எல்லாரும் சேர்ந்து நேத்து மருதாணி வச்சோமா? நான் இன்னைக்கு இவங்க யார் கையையுமே எவ்வளவு சிவந்திருக்குனு பார்க்கல. ஏன்னா அவங்கவங்க புருஷன்மாருக மூஞ்சிகளை பார்த்தாலே தெரிஞ்சிருமே அவங்க கையெல்லாம் எந்தளவுக்கு சிவந்திருக்கும்னு. அதான் இப்ப இவங்களை பார்த்ததும் சிரிப்பு வந்துருச்சி” என்றதும், 

 

“உனக்கு நல்ல சேட்டைடி” என்று அவளின் முதுகில் ஒரு அடி போட்டார் பொன்னி. 

 

அனைவரும் கோரசாக நகைத்தனர்.

 

ஆண்கள் மூவரில் தர்மதுரையிடம் தான் ரத்னவேல் பாண்டியனின் முகச்சாயல் அதிகம் இருந்தது. அவனையும், காதம்பரியையும் பூஜையறைக்குள் சென்று வணங்கிவிட்டு வரச்சொன்னான் பத்ரி.

 

அவர்கள் வணங்கியதும் அனைவரும் கோவில் நோக்கி பயணமாகினர்.

 

அவர்கள் குடும்பம் மணமேடையை நோக்கி வந்தபோது அனைவரும்‌ பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் பத்ரியை கையெடுத்துக் கும்பிட்டனர்.

 

பத்ரி சட்டமன்ற உறுப்பினரானால் தான் குறிஞ்சிகுளத்தை கொஞ்சமாவது தனது கட்டிப்பாட்டில் வைக்க முடியும், நினைத்த மாற்றங்களை செயல்படுத்தமுடியும், குறிப்பாக தனது தந்தையை‌ நேரடியாக எதிர்க்க வலு கிடைக்கும் என்று அந்த அதிகாரத்திற்காக இரவு பகலாக உழைத்திருக்க, கூடுதல் போனசாக பஞ்சாயத்து தலைவர் பதவியும் கிடைத்தது அவனை ஊருக்குள் கதாநாயனாக்கியது.  

 

அர்ச்சகர் பத்ரியின் கையில் தாலியெடுத்துக் கொடுத்து முதலில் தர்மதுரையிடம் கொடுக்கச் சொன்னபோது, யாழினியை தனதருகில் அழைத்தான் பத்ரி.

 

அருகில் வந்ததும் அவன் நோக்கம் புரிந்து தன்னவனை காதலாக நோக்கிக்கொண்டே அவனுடன் இணைந்து தாலியெடுத்துக் கொடுத்தாள் யாழினி. 

 

அதன்பின் ஐந்து ஜோடிகளுக்கு அவளுடன் இணைந்து தாலியெடுத்து கொடுத்தவன் ஆறாம் ஜோடிக்கு கொடுக்க சஷ்டியையும், தெய்வானையையும் அழைத்தான்.

 

அவர்கள் ஒரு பத்து இணைகளுக்கு தாலியெடுத்து கொடுத்தப் பின்னால் கழுத்தில் மணமாலையுடன் நிற்கும் தர்மதுரையையும், காதம்பரியையும் தாலியெடுத்துக் கொடுக்கச் சொன்னான்.

 

இதுவரை தனக்கும் தன் அன்னைக்கும் ஊர் மத்தியில் எந்தவொரு அங்கீகாரமுமே பெரிய வீட்டினரால் வழக்கப்படவில்லையே என்று‌ ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த தர்மதுரை, பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசிப்பெற்ற அடுத்தகணம் பத்ரியின் கால்களில் விழுந்தான்.

 

அவனை உடனே எழுப்பி கட்டியணைத்துக்கொண்டான் பத்ரி.

 

யாழினியோ தன் கணவனை ஊர்மக்கள் அனைவரும் மெச்சிப்புகழ்வது கண்டு, அவன் மனைவியாய் கர்வம் கொண்டாள்.

 

இப்பிறவியில் மட்டுமல்ல இனி வரும் எப்பிறவியிலும் உன் காதலும், உனை சேரும் பாக்கியமும் எனை மட்டுமே சேர வேண்டும்‌ என்று மனதிற்குள் அவள் உருப்போட்ட வேளை, வானத்தில் பறந்து சென்ற தேவதைகள் ‘ததாஸ்து’ சொன்னனர். 

 

அதே நொடி முருகன் கோவில் மணியோசையும் ‘கணீர்’ ‘கணீர்’ என்று ஒலித்தது.

 

முற்றும்!

ஆகச்சிறந்த நாவல் போட்டியை அறிவித்து எழுத்தாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அட்மின்ஸ் ரியாமூர்த்தி அவர்களுக்கும், தீக்‌ஷிதா லக்‌ஷ்மி அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்:)

இந்த நாவல் உங்களுக்குப் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும், லாகின் பண்ணி கமெண்ட் செய்யவும் மறந்துடாதீங்க தங்கோம்ஸ்:)

300 வார்த்தைகளுக்கு மிகாமல் ரீவீவ் கொடுக்கும் வாசகர் 5 பேருக்கு 500 ரூபாய் பரிசு இருக்கு தங்கோம்ஸ். மிஸ் பண்ணிடாதீங்க‌.

உங்க ரிவீவை பேஸ்புக்கில் பதியும் போது ‘யாழினி பத்ரவேல்பாண்டியன்’ எனும் எனது ஐடியையும் டேக் செய்தால் மகிழ்வேன்.

யாழினியையும் பத்ரியையும் நிச்சயம் நான் மிஸ் செய்வேன் தங்கோம்ஸ். நீங்க?

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,883 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page