வலியை சூடிய காதலே – 21

பேசாத வார்த்தைகள் நூறு இருந்தாலும், உன் பெயரை என் இதழ்கள் உச்சரிக்கத் தவிக்குதே…!

நானே விலகிச் செல்ல முயன்றாலும், உன் பார்வை மட்டும் என்னைக் கடத்திக் கொண்டு போகுதே…!

​ஊர் மெச்சும் உறவாய் நீ இருக்க, உன் உயிர் மெச்சும் காதலாய் நானில்லையே…!

காயங்கள் ஆறும் காலம் வந்த போதும், என் ரணம் மட்டும் ஆறவில்லையே…!

​விலகி நீ நிற்பது உன் கடமையென்றால், உன்னை

விலகாமல் தொடர்வது என் கர்மவினையே…!

நிசப்தமாய் நீ காட்டும் இந்த மௌனம், என் நிம்மதியைக் கொல்லும் ஒரு கூர்முனையே…!

வலியை சூடிய காதலே  –  21

மமருத்துவனையின் ஆபரேஷன் தியேட்டர் வாசலில் ‘In Progress’ என்கிற சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்க, ரஞ்சிதம் ஒரு ஓரமாக அமர்ந்து கண்ணீரோடு வேண்டிக் கொண்டிருந்தாள், நிஷா அவளது கைகளைப் பற்றியபடி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்,

​அங்கிருந்து சற்று தள்ளி, ஜன்னல் ஓரமாக நின்றிருந்த ஆரியனின் அருகே மெல்ல வந்தாள் பூவிதழினி, ஆரியன் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவனது விலகல் அவளைச் சுட்டது,

​”மச்சா…” என்று மெதுவான குரலில் அழைத்தாள் பூவிதழினி, அவளை திரும்பியும் பாராமல் குற்ற உணர்ச்சியோடு நின்றிருந்தான் ஆரியன்,

“ஏன் மச்சா இப்பிடியே நிக்கிற, அத்தையப் பாரு, அங்கனயே ஒடுங்கிப் போய்க் கிடக்காக, நீ போயி ரெண்டு வார்த்தை பேசுனாத்தான் அவகளுக்கு ஆறுதலா இருக்குமில்ல” என்று கேட்டாள்

“அம்மா கூடத்தான் நிஷா இருக்காளே இதழு, எனக்கு இப்ப யார்கிட்டயும் பேசத் தோணல, அப்பாவுக்கு ஆப்ரேஷன் முடிஞ்சு திரும்பி நல்லபடியா வந்தா போதும் இதழு, அந்த நினைப்பு ஒன்னு தான் உள்ள ஓடிட்டு இருக்கு” என்றான் ஆரியன்,

​”உனக்கு எல்லாரைப் பதாதின நெனப்பும் வருது சரி, ஆனா என் நெனப்பு மட்டும் உனக்கு வர்றதே இல்லையே ஏன் மச்சா, 

இம்புட்டு நாளா நான் உன்னைய சுத்திச் சுத்தி வர்றேனே, எங்கூட பேசக்கூட உனக்கு இஷ்டம் இல்லையா, ஒருத்தரையொருத்தர் முறைச்சுக்கிட்டு இருந்த மாமனும் அத்தையும் கூட இன்னைக்கு ஒன்னா சேர்ந்துட்டாங்க,

ஆனா நாம மட்டும் ஏன் மச்சா இன்னும் எட்ட எட்ட நிக்கிறோம்” என்று கேட்க ஆரியன் அவளை ஏறிட்டுப் பார்த்தான், அவன் கண்களில் ஒருவித தயக்கம் இருந்தது,

​”இதழு, இது அதுக்கான நேரமில்ல, இங்க பாரு, குடும்பமே இப்ப தான் சரியாகிட்டு வருது, அப்பாவுக்கு ஆப்ரேஷன் நடக்குது, இதுல நீ தேவையில்லாம குழப்பிக்காத” என்று ஆரி மழுப்பலாக பதில் சொல்ல,

“நான் குழப்பல மச்சா, நான் தெளிவாத்தான் இருக்கேன், அந்த புள்ள நிஷா மேல உனக்கு இருக்குற அக்காறைல ஒரு பொட்டு கூட என் மேல இல்லையே, அதான் கேக்குறேன்,

சின்ன வயசுல இருந்தே எனக்கு நீதான் உனக்கு நான் தான்னு பேசி பழகிட்டு, இப்ப மட்டும் ஏனோ தானோன்னு நீ பாக்குறது எனக்கு எப்பிடி வலிக்கும்னு உனக்குத் தெரியுமா, முடியல மச்சா என்னால முடியல ஓ… ன்னு கத்தி அழனும்னு தோணுது, ஆனாலும் முடியலையே” என்று தன் மனக்குமுறல்களை வெளிப்படையாக கூறினாள் இதழு,

“நீ தப்பா புரிஞ்சுக்கிற இதழு, நான் உன்னை ஒதுக்கி வைக்கல, என்னோட சூழ்நிலைய எப்படி உங்கிட்ட சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியல இதழு” என்றான் ஆரி

​”எங்கூட நீ பேசவே தயாரா இல்லாதப்போ எப்படி மச்சா நீ பேசி எனக்கு புரிய வைக்க முடியும், முதல்ல உன் மனசுல எனக்கு எடமிருக்கா, என்னைய கட்டிக்க விருப்பம் இருக்கா, அதுக்கு பதில் சொல்லு, 

இல்லையா இல்ல எனக்கு உன்ன புடிக்கல நான் உன்னைக் கட்டிக்க மாட்டேன் இதழுன்னு சொல்லு, ஆனா அப்பிடியும் சொல்ல மாட்டேங்குற, கிட்டயும் சேர்த்துக்க மாட்டேங்குற நீ இப்படியே இருந்து என்னைக் கொள்ளாத மச்சா” என்றாள் இதழு

​ஆரியன் பதில் சொல்ல முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டான்,

“இரண்டுல ஒன்னை சொல்லு மச்சா, உன் மனசில என்ன இருக்குன்னு தெரிஞ்சுட்டாலாவது என் மனசு ஆறும்” என்றாள் விடாப்பிடியாக,

“இதழு… ப்ளீஸ்… இப்ப வேணாம். அப்பா வெளியே வரட்டும், எல்லாம் சரியாகும், அப்போ பேசிக்கலாம்” என்றான், ​பூவிதழினி கண்களில் நீர் முட்டியது,

“எல்லாரும் சரியாவாக மச்சா, ஆனா நான் இப்படியேதான் தவிச்சுக்கிட்டு இருக்கனுமா, இதுல இருந்தே உன் மனசுல நான் இல்லன்னு புரியுது மச்சா, இனிமே உன்ன தொல்ல பண்ண மாட்டேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென நகர்ந்தாள்,

அவளை இவ்வளவு நாளும் தவிக்க விட்டு விட்டோமே என்ற குற்ற உணர்வு மேலோங்க, இனியும் அவளிடம் எதையும் மறைக்க கூடாது என்று அவள் பின்னே சென்றான் ஆரியன், 

அவளை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருக்கும் கோவிலுக்கு அழைத்துச் சென்றான் ஆரி,

“நான் தான் உன்ன தொல்ல பண்ணா மாட்டேன்னு சொல்லிட்டேனில்ல அப்புறமும் ஏன் மச்சா, என்னைய இங்கண கூட்டியாந்த, உன் மனசுல இடம் இல்லாத ஒருத்திய எந்த உரிமையில தனியா கூப்பிட்டு வந்த” என்று கேட்டாள் இதழு,

“உரிமை இல்லாமலா உன்னை இங்க கூட்டிட்டு வருவேன் இதழு, உன் மனசுல இருக்குற அதே பாரம் தான் என் மனசுலயும் இருக்கு, ஆனா, அதை இறக்கி வைக்கத்தான் எனக்கு பயமா இருந்துச்சு” என்றான் ஆரியன்

​”பயமா, அதுவும் என் மாச்சானுக்கு பயமா, நான் பிறந்ததுல இருந்து இந்த மண்ணைப் பாத்து நடந்தத விட உன்ன பாத்து நடந்தது தான் மச்சா அதிகம், அப்படி இருக்கையில என் மச்சா யாருன்னு எனக்கு மட்டுந்தான் தெரியும்” என்றாள் இதழூ

அவள் கைகளை மெல்லப் பற்றினான் ஆரி 

“இந்த உலகத்துலயே என்னைப் பத்தி முழுசா புரிஞ்சுக்கிட்டவ நீ மட்டும் தான் இதழு, அதான் உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்னு நினைச்சேன் இதழு, அதுகான சந்தர்ப்பமே அமையல, இன்னைக்கி எல்லாத்தையும் சொல்றேன்” என்றான் ஆரியன்

​”எதுவா இருந்தாலும் எனக்கு புரியுற மாறி சொல்லு மச்சா, நீ என்ன சொன்னாலும் நான் ஏத்துக்கறேன், ஆனா என்னைய மட்டும் புடிக்கலன்னு சொல்லிடாத மச்சா, அப்புறம் நான் உசிரோட இருக்க மாட்டேன்” என்று அவள் சொன்னதும்,

ஆரியனின் கண்கள் கலங்கியது, அதைக் கண்ட பூவிதழினி அப்படியே உறைந்து போனாள், அவன் ஏதோ ஒரு பெரிய ரகசியத்தைப் புதைத்து வைத்திருப்பது அவளுக்குப் புரிந்தது,

வெறிச்சோடிப் கிடந்த அந்தத் தேசிய நெடுஞ்சாலையில், தனக்காக புக் செய்யபட்ட காரில் சீறிப்பாயும் வேகத்தில் சென்று கொண்டிருந்தான் ஆரியன்,

அன்று ஒரு மருத்துவ மாநாட்டிற்காக சென்றவன், அவன் வந்த விமானம் ஒருமணிநேரம் தாமதமாக வந்ததால் நேரமாகி விட்டது அதன் காரணமாக வேகமாக சென்று கொண்டிருந்தான்,

​திடீரென, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கார் சாலையில் தடம் புரண்டு, பக்கவாட்டின் புதர்களுக்குள் பாய்ந்து எங்கேயோ முட்டிக் கொண்டு நின்றது, டிரைவர் அதிர்ச்சியுடன் பிரேக் போட்டான், 

ஆரியன் வேகமாக காரிலிருந்து இறங்கி ஓடினான், டிரைவரும் காரை ஓரமாக ஒதுக்கி நிறுத்தி விட்டு வர இருவரும் வந்து பார்த்தனர், 

காரின் பின் இருக்கையில் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில், ஒரு பெண் அலறிக் கொண்டிருந்தாள்,

​”ப்பா… கண்ணைத் திறங்கப்பா, ப்ளீஸ்ப்பா எனக்கு பயமா இருக்குப்பா” என்று அழுதாள்,

​ஆரியன் விரைந்து சென்று கதவைத் திறந்தான், பதற்றத்தில் அப்பெண் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்,

காரின் டிரைவர் சீட்டில் ஒரு பெரியவர் சீட் பெல்ட் போட்ட நிலையிலேயே சரிந்து கிடந்தார், அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தார்,

​”இங்க பாருங்க, பதட்டப்படாதீங்க. இவருக்கு மூச்சு விட கஷ்டமா இருக்கு, முதல்ல இவரை வெளியே படுக்க வைக்கணும்” என்ற ஆரியன் டிரைவரின் உதவியோடு அவரை காரிலிருந்து இறக்கி கீழே படுக்க வைத்தான்,

​விடாமல் அழுது கொண்டே இருந்த அப்பெண் அழுகையினூடே,

“யார் நீங்க, என் அப்பாவைக் காப்பாத்திருவீங்களா,  ப்ளீஸ் எதாவது பண்ணுங்க” என்று அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்,

அவளது கண்களில் இருந்த அந்தத் தவிப்பும், பயமும் ஆரியனின் மனதை என்னவோ செய்தது,

​ஆரியன் சாதுர்யமாக அவருக்குத் தேவையான முதலுதவிகளைச் செய்தான், பின்பு அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது, பெரியவரை உள்ளே படுக்க வைத்து விட்டு அதே ஆம்புலன்சில் அந்தப் பெண்ணை ஏற்றும் போது ஆரியனின் கைகளைப் பற்றிக் கொண்டாள்,

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு, எங்கூட வாங்க ப்ளீஸ்” என்று பேச முடியாமல் விம்மினாள்,

​”நீங்க பயப்படத் தேவையில்ல, உங்க அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது,  எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு” என்றான் ஆரி,

“ப்ளீஸ் முடியாதுன்னு சொல்லிடாதீங்க, எனக்கு ரொம்ப பயமா இருக்கு, நீங்களும் கூட வாங்க” என்று விடாப்பிடியாக நிற்க,

அந்தப் பெண்ணின் பிடிவாதமும், அவள் கண்களில் தெரிந்த பயமும் ஆரியனை யோசிக்க வைத்தது, ஒரு மருத்துவனாக அந்த இக்கட்டான சூழலில் அவளைத் தனியே விட அவன் மனது ஒப்புக் கொள்ளவில்லை,

​”சரிஅழாதீங்க, நான் கூட வர்றேன்” என்ற ஆரியன், கார் டிரைவரிடம் காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டு, ஆம்புலன்ஸில் ஏறினான்,

​ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்தோடு சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது, உள்ளே, ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டிருந்த பெரியவரின் நாடித் துடிப்பைக் கவனித்துக் கொண்டிருந்தான் ஆரி,

​நிஷா ரத்தம் வழிந்த தன் நெற்றியைத் துடைக்கக் கூடத் தோன்றாமல், ஆரியனையே பார்த்துக் கொண்டிருந்தாள், 

முன்பின் தெரியாத ஒருவன், தனக்காகத் தன் வேலையை விட்டுவிட்டு ஆம்புலன்ஸில் ஏறி வந்தது அவளுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது,

​”என் பேரு நிஷா, உங்க பேரு என்ன” என்று நிஷா மெதுவான குரலில் கேட்டாள்,

​”ஆரி… ஆரியன்” என்றான் 

​”ரொம்ப நன்றி ஆரி, நீங்க மட்டும் இன்னைக்கு அங்க வரலன்னா, நினைக்கவே பயமா இருக்கு,” என்று கூறி விம்மினாள்,

​”பரவாயில்லை இப்போதைக்கு உங்க அப்பா பிழைக்கணும், அதுதான் முக்கியம், மாரடைப்பு வந்த முதல் ஒரு மணிநேரம் ரொம்ப முக்கியமானது, அதை கோல்டன் ஹவர்ன்னு சொல்லுவோம், அந்த நேரதாதுல நாம சரியான நேரத்துல முதலுதவி செஞ்சிருக்கோம், பயப்படாதீங்க” என்றான் ஆரி,

​மருத்துவமனை வந்தடைந்ததும், விஸ்வநாதன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார், ஆரியன் அங்கே இருந்த மருத்துவர்களிடம் மிகத் துல்லியமாக விஸ்வநாதனின் நிலைமையைப் பற்றியும், 

தான் செய்த முதலுதவிகளைப் பற்றியும் விளக்கினான், அங்கிருந்த மருத்துவர்கள் ஆரியனின் நிதானத்தையும், மருத்துவ அறிவையும் கண்டு வியந்தனர்,

எல்லா நடைமுறைகளும் முடிந்த பின், ஆரியன் கிளம்பத் தயாரானான், அப்போது நிஷா அவன் முன்னால் வந்து நின்றாள்,

​”உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல ஆரி, என் லைஃப்ல உங்கள மறக்கவே மாட்டேன்” என்றாள் அவள், அந்நேரம் நர்ஸ் ஒருவள் வந்து,

“பேஷண்டோட நேம் சொல்லுங்க, அவர் உங்களுக்கு என்ன வேணும்” என்று கேட்க, 

“அவர் என்னோட அப்பா, அவர் பெயர் விஸ்வநாதன்” என்று சொல்ல,

“உங்க வீட்டு அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் சொல்லுங்க” என்று கேட்க பதில் சொல்லாமல் விழித்துக் கொண்டிருந்தாள்,

“என்னம்மா எதுவும் சொல்லாம நிற்கறீங்க, பேஷண்டோட டீடெல்ஸ் வேணும் இல்ல, அவரோட பொண்ணு ன்னு சொல்றீங்க, வீட்டு அட்ரஸ் கூடவா தெரியாது” என்று கேட்டாள் நர்ஸ், 

அதற்கு “தெரியாது” என்று பதில் சொல்ல, நர்ஸ் மட்டுமல்ல ஆரியனும் அதிர்ந்து தான் பார்த்தான்,

தொடர்ந்து வாசிப்போம் வாங்க

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page