வலியை சூடிய காதலே – 22

உறவின் நிழல் அருகில் இருந்தும்   உலகம் புரியவில்லையே…!

உறவைக் கோர உரிமை இருந்தும் உதவி கேட்கத் துணிவில்லையே…!

புரியாத புதிராய் தெரிந்த நீ தொடர்கதையாய் நீள்கிறயே…!

வலியை சூடிய காதலே  –  22

மருத்துவமனை வரவேற்பறையில் அந்த நர்ஸ் கேட்ட கேள்விக்கு நிஷா சொன்ன “தெரியாது” என்ற பதில் ஆரியனை நிலைகுலையச் செய்தது,

​”நிஷா என்ன விளையாடுறீங்களா, ஒரு சாதாரண அட்ரஸ் கூட தெரியாமலா இருப்பாங்க” என்று வியப்பாக கேட்டான் ஆரியன்,

​”நிஜமாவே எனக்குத் தெரியாது ஆரி, நாங்க ஒரு வாரம் முன்னாடிதான் வெளிநாட்டுல இருந்து வந்தோம், அப்பா மட்டும்தான் எல்லாம் பார்த்துப்பாரு, 

எனக்கு இந்த ஊர், இங்க இருக்கிற மனுஷங்க யாரையுமே தெரியாது, என்னை நம்புங்க ஆரி, ப்ளீஸ் என்னை தனியா விட்டுட்டுப் போயிடாதீங்க” என்று கண்ணீரோடு கேட்டாள் நிஷா,

​நிஷாவின் இந்தச் சூழ்நிலை ஆரியனை ஒரு தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது, 

“சரி நீங்க போங்க, உங்க டாக்டர்கிட்ட நான் பேசிக்கறேன்” என்று கூறி நர்ஸை அனுப்பி வைத்தான், 

“ஓகே அட்ரஸ் தெரியாது, உங்க பேமிலி ப்ரண்ஸ் ரிலேடிவ்ஸ் யாராவது இருந்தா சொல்லுங்க, அவங்களை காண்டெக்ட் பண்ணி வரவழைக்கலாம்” என்று ஆரி கேட்க,

“எனக்கு பேமிலி ப்ரண்ஸ் ரிலேடிவ்ஸ் எல்லாம் என் அப்பா மட்டும் தான், அவருக்கு நான் மட்டும் தான் எல்லாமே, எங்களுக்குன்னு யாருமே இல்ல ஆரி” என்றாள் நிஷா,

கேட்கவே மனதிற்கு வலித்தது, யாருமற்ற சூழலில் அவளை தனியே விட்டுச் செல்ல முடியாமல் தவித்தான், 

“உங்க அப்பா கண் திறக்கிற வரைக்கும் உங்க கூட நான் இருக்கேன், சரியா உங்க தலையிலும் அடிபட்டு ரத்தம் வருது வாங்க மருந்து போடலாம்” என்று அழைத்துச் சென்றான்,

“நர்ஸ் இவங்க ஹெட் இன்சூரி ஆகியிருக்கு பேண்டெய்ட் போட்டு விட்டு ஆண்டிபயாடிக் இன்ஜெக்ஷன் பண்ணிடுங்க” என்று கூற, 

நர்ஸ் அவனின் வார்த்தைகளைக் கேட்டதும் ஆரியனை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தாள், அப்போது அவனை டாக்டர் அழைப்பதாக நர்ஸ் வந்து சொல்லவும் வெளியே சென்றான், 

“என்ன மேடம், சாரை பார்த்தா மெடிக்கல் ஃபீல்டுல இருக்கிற மாதிரித் தெரியுது, கரெக்டா சொல்றாரே” என்று நர்ஸ் கேட்க, எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள் நிஷாலினி,

விஸ்வநாதனைப் பரிசோதித்த அந்த மருத்துவமனை மருத்துவர்  ஆரியனைத் அழைத்தார்,

​”டாக்டர் ஆரி,  நான் உங்ககிட்ட எதையும் மறைக்க விரும்பல, விஸ்வநாதன் சார் கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு, அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்திருக்குன்னு அவரோட ரிப்போர்ட்ஸ் சொல்லுது, 

இப்போ உடனே ஒரு ஆப்ரேஷன் பண்ணியாகணும், இல்லைன்னா ரொம்ப கஷ்டம்” என்ற டாக்டர் ரிப்போர்ட்டை ​ஆரியனிடம் கட்டினார் அதை வாங்கிப் பார்த்த ஆரியன்,

“ஓகே டாக்டர் நீங்க உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று கூறி விட்டு வெளியே வந்தான்,

ஒரு மருத்துவனாகத் தன் மாநாட்டை விட, இங்கே ஒரு உயிரைக் காப்பதும், அந்த உயிரை நம்பி நிற்கும் ஒரு பெண்ணுக்குத் துணையாக இருப்பதும் தான் பெரிய கடமையாக அவனுக்குப் பட்டது,

மெல்லத் திரும்பி நிஷாவைப் பார்த்தான், ரத்தம் தோய்ந்த ஆடைகளுடன், நம்பிக்கையற்று மருத்துவமனை இருக்கையில் அமர்ந்திருந்தாள், 

​அவள் அருகில் சென்று  அமர்ந்தான் ஆரியன், அவனது வருகையை உணர்ந்தவள், சட்டென அவன் கையைப் பற்றிக் கொண்டாள்,

​”ஆரி… அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுல்ல, எல்லாரும் என்னையே ஒரு மாதிரியா பாக்குறாங்க எனக்குப் பயமா இருக்கு ஆரி,” என்று சிறுபிள்ளைபோல் விம்மினாள்,

​ஆரியன் அவளது கையை அழுத்திப் பிடித்துக் கொண்டான்,

“ஒன்னும் ஆகாது நிஷா, நான் இருக்கேன்ல, உன் அப்பாவுக்கு ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ணனும், அது முடிஞ்சா அவர் சீக்கிரம் குணமாயிடுவாரு, அதுவரைக்கும் நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்று உறுதியளித்தான் ஆரி,

​அந்த ஒரு வார்த்தை நிஷாவிற்குள் மலையளவு தைரியத்தைக் கொடுத்தது, ஆரியன் அவளது நிழலாய் மாறத் தொடங்கிய அந்த முதல் நொடி அதுதான், 

ஆபரேஷன் தியேட்டரின் வாசலில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாக நகர்ந்தது, பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகுவெளியே வந்த டாக்டர், 

“ஆபரேஷன் சக்சஸ் ஆரி நீங்க சரியான நேரத்துல அவரை இங்கே கொண்டு வந்திருக்கீங்க, இன்னும் சில மணிநேரத்துல நினைவு வந்துடும்” என்று கூறிச் சென்றார்,

​நிஷா மகிழ்ச்சியில் ஆரியனை அப்படியே கட்டிக்கொண்டாள், அவளது கண்ணீர் ஆரியனின் சட்டையை நனைத்தது, வார்த்தைகளால் பிரிக்க முடியாத ஒரு தருணம் அது,

​மறுநாள் காலை விஸ்வநாதன் மெல்லக் கண்களைத் திறந்தார், அவருக்கு அருகே ஒரு சிலையாக அமர்ந்திருந்தான் ஆரியன்,

​”சார், மெல்லக் கண்ணைத் திறங்க நீங்க இப்போ நல்லா இருக்கீங்க” என்றான் ஆரியன்,

​விஸ்வநாதன் தன் மகளையும், அருகில் இருந்த அந்நியன் ஆரியனையும் பார்த்தார், நிஷா அழுதுகொண்டே பயத்துடன் நடந்தவற்றைச் சொன்னாள், விஸ்வநாதனின் கண்களில் நன்றியும் ஆச்சரியமும் கலந்தது,

​”ஆபத்து காலத்துல என் மகளையும் என்னையும் நீதான் காப்பாத்தியிருக்க, பதிலுக்கு நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல” என்றார் விஸ்வநாதன்.

​”அதெல்லாம் எதுக்கு சார், மனுஷனுக்கு மனுஷன் ஒரு சின்ன உதவி அவ்ளோ தானே” என்றான் ஆரி,

“நீ பண்ண உதவிக்கு பதிலுக்கு நானும் ஏதாவது செய்யனும், சரி எங்கூட என் வீட்டுக்கு வர்ற அங்க உனக்கு நான் ஒரெ பெரிய விருந்தே கொடுக்கறேன்” என்று விடாப்பிடியாக கூறினார் விஸ்வநாதன்,

​மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும், ஆரியனை விஸ்வநாதன்  காரிலேயே அழைத்துச் சென்றார், கார் அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு பிரம்மாண்டமான வீட்டின் முன் நின்றது,

​வீட்டின் அமைப்பு ஆரியனை வியப்பில் ஆழ்த்தியது, இவ்ளோ பெரிய செல்வந்தனா விஸ்வநாதன் என்று வியந்து நிற்க,

“அட என்னப்பா வாசல்லயே நின்னுட்ட உள்ள போலாம் வா” என்று உள்ளே அழைத்துச் சென்றார், 

அன்று இரவு விஸ்வநாதன் வீட்டில் அந்தப் பிரம்மாண்டமான டைனிங் டேபிளில் வகைவகையான உணவுகள் அணிவகுத்திருந்தன, விஸ்வநாதன் ஆரியனைத் தன் அருகில் அமர வைத்து உபசரித்தார், 

நிஷா தன் காயத்தையும் மறந்து, ஆரியன் ஒவ்வொன்றையும் ருசித்துப் பார்ப்பதை ஒருவிதப் பூரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்,

​சாப்பிட்டு முடித்ததும் விஸ்வநாதன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு ஆரியனைப் பார்த்தார்,

​”இந்த விஸ்வநாதன் யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் கடன் வைக்க மாட்டான், அது நன்றியா இருந்தாலும் சரி, பகையா இருந்தாலும் சரி, இன்னைக்கு என் பொண்ணையும் என்னையும் காப்பாத்தி, 

இந்த வீடு வரைக்கும் கொண்டு வந்து சேர்த்திருக்க, உனக்கு என்ன வேணும்னு கேளு நீ கேட்குறது எதா இருந்தாலும் தர நான் தயாரா இருக்கேன்” என்றார் கம்பீரமான குரலில்,

​ஆரியன் மெல்ல நிமிர்ந்து விஸ்வநாதனைப் பார்த்தான், 

​”சார் நானும் செஞ்ச உதவி கைமாறு எதிர்பார்க்குற ஆள் இல்லை, எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, நான் கிளம்புறேன்” என்றான் ஆரி நிதானமாக,

​”அவசரப்படாதீங்க தம்பி இன்னைக்கு ஒரு நாள் இங்க தங்கிட்டு நாளைக்கு போலாமே, நீ கூட இருந்தா எனக்கு ஒரு தைரியமா இருக்கும்” என்று விஸ்வநாதன் வேண்டுகோள் விடுக்க, 

நிஷாவின் கண்களும் ‘போய்விடாதே’ என்று கெஞ்சினாள்,

​வேறு வழியின்றி ஆரியன் அன்று இரவு அங்கேயே தங்கச் சம்மதித்தான், அன்று இரவு அந்த வீட்டில் ஆரியன் உலாத்திக் கொண்டிருக்கும்போது,

அங்கிருந்த சுவற்றில் மாட்டப்படிருந்த ஓவியங்களை பார்த்துக் கொண்டே வந்தான், அங்கே குடும்ப புகைப்படம் என்பதே இல்லை, ஒரு சில படங்கள் மட்டுமே இருக்க அதுவும் நிஷா இல்லாமல் விஸ்வநாதனின் படங்கள் மட்டுமே இருந்தது,

விஸ்வநாதனின் தற்போதைய உருவமும் பழைய உருவமும் இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தது, அந்த பழைய புகைப்படத்தை கண்ட அவன் மனதில் விஸ்வநாதனின் முகமும் பெயரும் மாறி மாறி வர, 

பூதவிழினியைக் காண ஒரு முறை அவள் வீடு சென்ற போது பார்த்த, தன் தாய்மாமான் விஸ்வநாதனுடைய புகைப்படம் மனதில் தோன்றி இருவரும் ஒருவரே என உறுதி படுத்தியது,

ஆரியனின் கண்கள் சிவந்தன. தான் காப்பாற்றியது ஒரு மனிதனை அல்ல, தன் குடும்பத்தையே வேரோடு சாய்த்த  ஒரு நச்சுப் பாம்பை என்று தெரிந்ததும் அவன் முஷ்டிகள் இறுகின,

​”யோவ் மாமா இத்தனை நாள் உன்னைத் தேடித் தான் என் குடும்பமே அலைஞ்சுட்டு இருந்துச்சு, அப்போ  எல்லாம் கிடைக்கல, ஆனா விதியே உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்கு பாராத்தியா,

உன்னையும் உன் பொண்ணையும் வச்சு உன்னால உடைஞ்ச என் குடும்பத்தை சரி செய்யல, நான் ஆரி இல்லடா” என்று உள்ளுக்குள் கர்ஜித்தான்,

​அப்போது பின்னாலிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது,

​”ஆரி… இங்க என்ன பண்றீங்க” என்று குரல் கேட்க ஆரியன் சட்டென திரும்பினான், அங்கே நிஷா நின்றிருந்தாள்,

“சும்மா தான் தூக்கம் வரல, அதான் இங்க” என்று தடுமாறினான் ஆரி,

“எனக்கும் தான் தூக்கமே வரல ஆரி” என்றாள் நிஷா,

“ஆமா நீயும் உன் அப்பாவும் இத்தனை வருஷமா எங்க இருந்தீங்க” என்று ஆரி கேட்க,

“நான் பொறந்ததுல இருந்தே அப்ராட்ல தான் இருந்தோம், பிஸினஸ் விஷயமா அப்பா அடிக்கடி வருவார், ஆனா நான் இப்ப தான் பர்ஸ்ட் டைம் இங்க வந்திருக்கேன்” என்றாள் 

“அப்ராட்ல தான் இருந்தீங்களா, சரி ஆனா உங்க அப்பாவோட சொந்த ஊர், அவரோட ரிலேஷன்ஸ் பத்தி அவர் எப்போவாச்சும் சொல்லியிருக்காரா நிஷா” என்று 

ஆரி மிகச் சாதாரணமாகக் கேட்பது போல் வினவினான், நிஷா ஒரு நிமிடம் யோசித்துவிட்டுத் தலையசைத்தாள், 

“இல்ல ஆரி, அப்பா அதைப் பத்திப் பேசவே மாட்டார், யாராவது கேட்டா கூட அவருக்கு ரொம்பக் கோபம் வரும், அவருக்கு நான்தான் உலகம், எனக்கு அவர்தான் உலகம்னு அடிக்கடிச் சொல்லுவார்,

ஒரு தடவை நான் எங்க தாத்தா, பாட்டி பத்திக் கேட்டப்போ அவங்க எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க நிஷா, இனி அந்தப் பேச்சை எடுக்காதேன்னு சொல்லிட்டாரு, அதையும் மீறி கேட்டப்போ அடிச்சுட்டாரா அதுக்கப்புறம் நான் பயந்துட்டு கேட்டகிறே இல்ல” என்றாள் நிஷா

​ஆரியனின் உதடுகளில் ஒரு கசப்பான புன்னகை அரும்பியது, “ஏமாத்திட்டாங்களா இல்ல, நீ எல்லாரையும் ஏமாத்திட்டு, சொத்து சுகத்தோட ஓடி வந்துட்டியா மாமா” உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்,

அடுத்தடுத்து அவன் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் நிஷாவிற்கு பதில் தெரியவில்லை, ஆரியனுக்கு அப்போது தான் புரிந்தது, விஸ்வநாதன் தன் கடந்த காலப் பாவங்கள் எதையும் தன் மகள் அறியக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்,

​”ஏன் ஆரி, இதெல்லாம் இப்போ எதுக்குக் கேக்குற” என்று நிஷா சந்தேகமாகக் கேட்க, 

ஆரியன் சட்டெனத் தன் முகபாவனையை மாற்றிக் கொண்டான்,

​”சும்மா தான் நிஷா, உன்னைப் பத்தித் தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன், சரி, நேரமாச்சு போய் தூங்கு” என்று ஆரி சொல்லி அனுப்பி வைத்தான்,

​அவள் சென்ற பிறகு, ஆரியன் விஸ்வநாதனின் அறை இருக்கும் திசையை ஒருமுறை பார்த்தான்,

​”அயோக்கிய ராஸ்கல், மாமா உன் பொண்ணுக்கே உன்னைப் பத்தித் தெரியல, நீ செஞ்ச துரோகத்தால எங்க குடும்பம் மொத்தமும் திசைக்கு ஒன்னா நிற்குது, 

ஆனா நீ இங்க சொகுசா வாழ்ந்திருக்க, உன் கௌரவம்னு நீ எதை நினைக்கிறியோ, அந்த உன் பொண்ணை வச்சே அழிக்கிறேன்” என்று முணுமுணுத்தபடி தன் அறைக்குச் சென்றான்,

தொடர்ந்து வாசிப்போம் வாங்க

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page