வலியை சூடிய காதலே – 23

காதல் மொழி என்றே அவன் வேட்கைச் சொற்களை வீசுகிறானே…!

கண்ணாடிப் பொம்மை என்று  என்னை விலைக்கு வாங்கத் துடிக்கிறானே…!

வலியை சூடிய காதலே  –  23

காலை பொழுதை தொடங்கி வைக்க சூரிய ஒளி தன் ஒளிக்கதிர்களால் ஊடுருவியது, ஆரியனின் கண்கள் உறக்கமின்றி சிவந்திருந்தன, விடியும் வரை அவனால் கண்கள் மூடவே முடியவில்லை, மனமோ நெருப்புக் குமிழிக்குள் சிக்கி எரிந்து கொண்டிருந்தது,

அவன் யோசனை எல்லாம் இத்தனை வருடங்கள் கழித்து மகளோடு அவன் இங்கு வந்திருப்பதன் நோக்கம் என்ன?

வெளிநாட்டில் ஒழிந்து மறைந்து வாழ்ந்தவன் திடீரென திரும்பி எதற்க்காக வந்திருப்பான், என்ற கேள்வியோடு விடையைத் தேடி கீழே ஹாலுக்கு வந்த ஆரியனை, விஸ்வநாதன் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார்,

அவர் முகத்தில் இப்போது பழைய தெம்பு ஓரளவுக்கு வந்திருந்தது,

​”நேத்து தூக்கம் சரியா துங்கலையா கண்ணு இரண்டும் இப்படி சிவந்திருக்கே, அது ஒன்னு இல்ல இந்த இடம் புதுசா இருந்திருக்கும்” என்று விஸ்வநாதன் கேள்வியும் கேட்டு பதிலும் சொல்ல,

ஆரியன் தன் கோபத்தை மறைத்துக் கொண்டு, புன்னகை ஒன்றை வழிய வரவழைத்தான்,

“ஆமாம் சார், புது இடம் அதான் துக்கம் வரல” என்றான், மேற்கொண்டு இருவரும் பரஸ்பர உரையாடலில் இருந்தபோது, வெளியே கார்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது,

ஒன்றுக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்கள் அணிவகுத்து வந்தன,

​விஸ்வநாதனின் முகத்தில் ஒரு பெரிய பிரகாசம் தொற்றிக்கொண்டது, சில நிமிடங்களில் உள்ளே வந்தவர்களை வரவேற்றார் விஸ்வநாதன்,

“வாங்க, வாங்க வீரராகவன், நான் உங்களைத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்” என்று உற்சாகமாக  சொன்னதும்

வீரராகவன் தன் மனைவி மற்றும் மகன் தீரணுடன் நுழைந்தார், தீரண் திமிரான தோரணையில் இருந்தான்,

​”சம்பந்தி எப்படி இருக்கீங்க, உங்களுக்கு ஹார்ட் அட்டாக்குன்னு விஷயத்தைக் கேட்டு நான் பதறியே போயிட்டேன், அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்” என்றார் வீரராகவன்,

​’சம்பந்தி’ என்ற வார்த்தையைக் கேட்டதும் ஆரியனின் கண்கள் கழுகைப் போலத் தீரணையும் அவன் குடும்பத்தையும் அளவெடுத்தது, விஸ்வநாதன் நிஷாவை அருகில் அழைத்தார்,

வீட்டின் ஹால் பூக்களாலும் விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களாலும் நிரப்பப்பட்டிருந்தது, நிஷா மெல்ல படியிறங்கி நடந்து வந்தாள்,

அவள் அணிந்திருந்தது ஒரு மெல்லிய வெள்ளை நிற லேஸ் வேலைப்பாடுகள் கொண்ட அனார்கலி உடை, அந்த உடையில் அவள் ஒரு பனிச்சிகரத்தின் தேவதையைப் போலக் காட்சியளித்தாள்,

அவளது அடர்த்தியான கருங்கூந்தல் எவ்வித அலங்காரமும் இன்றித் தளர்வாக விடப்பட்டிருந்தது, அது அவளது முதுகின் அலைகளில் கருமேகமாய் தவழ்ந்தது, 

முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லை, பயம் மட்டுமே குடிகொண்டு இருக்க அது கூட அவளுக்கு  அழகை தான் கொடுத்திருந்தது, கைகள் பதற்றத்தில் தன் உடையின் ஓரத்தை இறுகப் பற்றிக் கொண்டிருந்தது, 

​தீரண் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தான், நிஷாலினிக்கு தீரணை கண்டதும் பிடிக்கவில்லை, 

​”என் பொண்ணு அப்ராட்ல வளர்ந்தாலும், ரொம்ப அடக்கமானவ வீரராகவன், யாருமே அவளை நேர்ல பார்த்தது இல்ல, முதல் முறையா இப்போ வெளியவே வந்திருக்கா” என்றார்,

“அதான் தெரியுமே சம்பந்தி” என்றவர்,

“பொண்ணை நல்லா பார்த்துக்க தீரண், அப்புறம் மேரேஜ் அன்னிக்கு தான் பார்க்க முடியும்” என்றார் வீரராகவன்,

“மேரேஜ்க்கு அப்புறம் இரண்டு பேருமே காலத்துக்கும் பார்த்துட்டு தானே இருக்கப் போறாங்க, என் மருமகளுக்கு என்ன தங்கத்துல செஞ்சு வச்ச விக்ரஹம் மாதிரி இருக்கா” என்று கூறி வீரராகவன் மனைவி வனஜா,

தன் கைப்பையில் இருந்த பெட்டியை எடுத்து திறந்தாள், அதில் வைரக்கல் பதித்த நெக்லஸ் இருந்தது, அதை எடுத்து நிஷாவின் கழுத்தில் அணிவித்து விட்டாள்,

“என் தங்க மருமக கழுத்துல இந்த வைர நெக்லஸ் இன்னும் அழகா இருக்கு பாத்தீங்களா” என்று வனஜா கேட்க,

“இதெல்லாம் எதுக்கு ராகவன்” என்று விஸ்வநாதன் ஏதோ சொல்ல வர, 

“என்ன சம்பந்தி இப்படி சொல்லிட்டீங்க, நிஷா யாரு எங்க வீட்டுக்கு மருமக, எங்க மருமகளுக்கு நாங்க செய்யாம எப்படி, வனஜாவுக்கு பொம்பள புள்ளை இல்லையேன்னு எப்பப்பாரு பொலம்பிட்டே இருப்பா, 

அவளுக்கு நிஷாவை போட்டோல பார்த்ததும் பிடிச்சு போச்சு, உடனே இந்த நெக்லஸை செய்ய சொல்லி ஆர்டர் குடுத்துட்டா, இனிமே பாருங்க வனஜா நிஷாவை எப்படி பார்த்துக்க போறான்னு” என்று  வீரராகவன் பெருமையாக சொல்லிச் சிரிக்க,

அப்போது தான் நிஷாவுக்கு இவர்கள் தன்னை பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற விஷயமே புரிந்தது, அவளின் மனக்கலவரம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது,

ஆரியன் ஒரு ஷோபாவில் சாய்ந்து அமர்ந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான், நிஷாவின் அந்த அப்பாவித்தனமான முகமும், தீரணின் வக்கிரமான சிரிப்பும் அவனுக்குள் பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது,

​”அங்கிள் நிஷா கொஞ்சம் பயந்த சுபாவம் போல, ஏன் அங்கிள் நாங்க வர்ற விஷயத்தை நீங்க அவகிட்ட சொல்லலையா” என்று தீரண் கேட்க,

“ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு தான் சொல்லல, மத்தபடி என் பொண்ணு என் பேச்சை மீறி ஒன்னும் சொல்ல மாட்டா, அவளுக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் தான்” என்று விஸ்வநாதன் மழுப்பினார், ​நிஷா அப்படியே சிலையென உறைந்து நின்றாள்,

“நிஷா, இவர் தான் தீரண் அப்பா உனக்காக பார்த்த மாப்பிள்ளை” என்று விஸ்வநாதன் அறிமுகப்படுத்த, தீரண் நிஷாவை ஒரு மாதிரியான வக்கிரப் பார்வையால் பார்த்து,

“ஹாய் டார்லிங்” என்றான்,

​அந்தப் பார்வை நிஷாவிற்குள் அருவருப்பை உண்டாக்கியது, அவள் பயத்துடன் ஆரியனின் பக்கம் திரும்பி நின்றாள்.

​வீரராகவன் ஆரியனை பார்த்து சந்தேகத்தோடு,

“சம்பந்தி இவரு யாரு நம்ம வீட்டு விசேஷத்துல கலந்துக்க வந்தவரக” என்று கேட்டார்,

​விஸ்வநாதன் ஆரியனைத் தட்டிக் கொடுத்தார்,

“இந்த தம்பி பேரு ஆரி, எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்போ கடவுள் மாதிரி வந்து எங்களைக் காப்பாத்துனாரு, நான் இப்ப முழுசா உயிரோட இருக்கேன்னா அதுக்கு இந்த தம்பி தான் காரணம்” என்று வாயாற புகழ்ந்தார் விஸ்வநாதன்,

​தீரண் ஆரியனை மேலிருந்து கீழாகப் பார்த்து ஒரு இளக்காரமான சிரிப்பை உதிர்த்தான்.,

“ஓ… அப்படியா, ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் ஆரி, என் மாமனாரோட உயிரை காப்பாத்தினது, என் உயிரையே காப்பாத்தின மாதிரி, பை த பை, நீ பண்ண ஹெல்ப்க்கு எவ்வளவு வேணாலும் கொடுக்கலாம்” என்றான் தீரண்,

தீரணின் வார்த்தை ஆரியனின் தன்மானத்தைச் சீண்டியது, ஆனால் ஆரியன் அலட்டிக்கொள்ளவில்லை, அவன் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது,

​”எதையும் எதிர்பார்த்து உதவி பண்றவன் நான் இல்லை மிஸ்டர் தீரண், சில உதவிகள் அதுக்கான விலையை அதுவே தான் வசூலிக்கும், நேரம் வருமா போது புரியும்” என்று ஆரி சொன்னது விஸ்வநாதனுக்குப் புரியவில்லை, 

ஆனால் தீரணின் அகந்தையை உரசிச் சென்றது, அந்த சூழ்நிலையை சமாளிக்க, 

“சம்பந்தி, இளசுங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் தனியா பேசி பழகட்டுமே, அப்போதானே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும்” என்று வீரராகவன் சொல்ல, 

விஸ்வநாதன் ஒரு நிமிடம் தயங்கினார், தன் மகளை இத்தனை காலமாய் ஒரு கண்ணாடிப் பேழைக்குள் வைத்துப் பாதுகாத்தவருக்கு, கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது, ஆனாலும்,

“சரி நிஷா, தீரண் கூட  கார்டன் வரைக்கும் போயிட்டு பேசிட்டு வாயேன்” என்று சம்மதித்தார்,

​நிஷா மிரண்ட கண்களோடு ஆரியனைப் பார்த்தாள், அந்தப் பார்வை அவனிடம் ஏதோ கெஞ்சியது, ஆனால் ஆரியன் ஒரு கல்லுச் சிலையாய் மௌனம் காத்தான். அவனது மௌனம் அவளுக்குப் பெரும் வலியைக் கொடுத்தது,

தந்தையின் பேச்சை மீற முடியாது என்பதால் வேறு வழியின்றி, தீரணுடன் சென்றாள், 

கார்டனில் வந்து நின்ற போது ​தீரண் நிஷாவை நெருங்கி வந்தான், அவனது அத்துமீறல் அவளுக்கு அருவருப்பையே தந்தது,

​”என்ன நிஷா, அப்ராட்ல இருந்து வந்தவ, ஒரு ஹக் பண்ணி வெல்கம் பண்ண தெரியாதா, சரி பரவாயில்ல, உன் அழகைப் பத்தி என் டாடி சொன்னப்போ நான் நம்பல, ஆனா நேர்ல பார்த்தா அப்படியே சொக்கிப் போயிட்டேன்” என்று கூறி 

அவளது கையைப் பற்றினான் தீரண், நிஷா சட்டெனத் தன் கைகளைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள், ​தீரண் நக்கலாகச் சிரித்தான்,

“ஏன் நிஷா உன்னை கட்டிக்க போறவன் தானே, உன் கையை பிடிக்கிறதுல என்ன இருக்கு, நாளைக்கு நமக்குள்ள எல்லாமே நடக்கும், அப்பவும் இப்படி ஒதுங்கித் தான் போவியா, ஆனா இப்போ மாதிரி அப்பவும் சாப்ட்டா பேசிட்டு இருப்பேன்னு நினைக்காத” என்று 

அதிகாரத்தோரணையில் ​அவன் பேசும் காதல் மொழி, காதலாக இல்லாமல் ஒரு அடிமைத்தனம் போல இருந்தது, நிஷாவால் மறுத்துப் பேசவும் முடியவில்லை, 

அவனைச் சகித்துக் கொள்ளவும் முடியவில்லை, அவள் கண்கள் அனிச்சையாக ஹாலில் இருந்த ஆரியனைத் தேடின,

​அங்கே ஹாலில், ​ஆரியன் எங்கோ பார்ப்பது போல நடித்துக் கொண்டிருந்தாலும், அவனது முழு கவனமும் கார்டனில் இருக்கும் நிஷாவின் மேல் தான் இருந்தது,

​”தம்பி ஆரி என்ன யோசனை?” என்று விஸ்வநாதன் கேட்க,

​”ஒன்னும் இல்ல சார் உங்க பொண்ணுக்கு இந்த மேரேஜ்ல இஷ்டமான்னு கேட்டீங்களா, அவங்க ரொம்ப பயந்து போயிருக்காங்க” என்றான் ஆரி.

​”அவளுக்கு என்னப்பா தெரியும், அவளோட நல்லது கெட்டது எல்லாம் எனக்குத் தெரியும், தீரண் ரொம்ப நல்ல பையன், அவன் தான் என் பிசினஸை அடுத்த லெவலுக்குக் கொண்டு போவான்,

நல்ல கௌரவமான குடும்பம் இதுக்கு மேல என்ன வேணும், எது இருந்தாலும் இல்லைனாலும்

கௌரவம் முக்கியம் தம்பி” என்றார் விஸ்வநாதன்,

​’கௌரவம்’ அந்த வார்த்தை ஆரியனின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது,

​நிஷா வேகமாக வந்து மூச்சிரைக்க நின்றாள், அவள் கண்கள் லேசாக கலங்கியிருந்தது, தலைமுடி கூட கலைந்திருந்தது, அதை கவனித்த ஆரிக்கு என்ன நடந்திருக்கும் என ஓரளவிற்கு அனுமானித்தான், 

“எனக்குத் தலைவலிக்குது, நான் ரூமுக்குப் போறேன்” என்று மட்டும் கூறி விட்டு ஆரியனை ஒருமுறை ஏக்கத்துடன் பார்த்து விட்டு மேலே ஓடினாள்,

​அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த தீரண், இதழ்களில் ஏளனப் புன்னகை படர்ந்தது, 

படிகளில் ஏறும் பொழுதே நிஷாவின் கண்கள் கலங்கி நீரை உதிர்க்க, தன்னறைக்குள் வந்தவள் நேராக பாத்ரூமிற்குள் நுழைந்தாள்,

ஆடைகளைக் கூட கலையாமல் ஷவரைத் திறந்து விட்டு அதனடியில் நின்றாள்,

உடல் முழுவதும் நெருப்பில் எரிவது போல் துடித்தாள், அவளின் சிந்தையில் அங்கு நடந்த காட்சி படமாக ஓடியது, கார்டனில் நின்று பேசிக் கொண்டிருந்த தீரண் சட்டென அவளை இறுக்கமாக அணைத்தான்,

அதை எதிர்பாராத நிஷா அவனிடம் இருந்து விலக எவ்வளவோ போராடியும், அவன் விடுவதாக இல்லை, அவள் கூந்தலை இறுக்கி பிடித்து உதட்டோடு உதடாக முத்தம் கொடுக்க முயல, 

அதற்குள் அவனின் பிடியை விட்டுப் பிரிந்து ஓடி வந்து விட்டாள், அந்த நியாபகம் கண்முன் வந்து இன்னும் இன்னும் வேதனையைக் கூட்டியது,

பார்த்த முதல் பார்வையே அவனிடம் சரியில்லை, முதல் முறையாக தனிமையில் ஒரு வாய்ப்பு கிடைத்ததும், அதை தவறாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறான், 

இவனை எப்படி காலம் முழுவதும் சகித்துக் கொள்ள முடியும், தந்தை எதிர்க்கவும் முடியாது, தீரணை கணவனாக ஏற்கவும் முடியாது, இருதலைக் கொள்ளி எறும்பாய் நொந்து போனாள் நிஷாலினி,

தொடர்ந்து வாசிப்போம் வாங்க

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page