அத்தியாயம் 7
எந்த விஷயத்திலும் இதுவரை எதற்காகவும் தடுமாறாத தீரன் முதல் முறையாக மித்ரா முன்பு தடுமாற்றத்தோடு நின்றிருந்தான் …!!
அவளுடைய பார்வை வீச்சை தாங்க முடியாமல் அறையை விட்டு வெளியேறினான் அவன்.
தெரிஞ்சுதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கோம் அதனால இவனுடைய செயல்களை தடுக்கவும் முடியாது எதிர்க்கவும் முடியாது..
அதையும் மீறி என்னால் முடியாதுன்னு சொன்னா அடுத்த நிமிஷமே கொடுத்த பணத்தை எடுத்து வச்சிட்டு உன் வேலையை பார்த்துட்டு இங்கிருந்து கிளம்பி போடி என்று அவன் சொல்வதற்கு ரொம்ப நேரமாகாது..
வேற வழி இல்லாமல் இங்கே இப்படி இருக்க வேண்டிய கட்டாயம் ..
அதுவும் இல்லாமல் தன்னுடைய சூழ்நிலை அப்படி இருக்கு.. எங்கேயும் போக முடியாது யாரையும் தெரியாது.. தெரிஞ்ச ஒரே நபர் என்று இவங்ககிட்ட உதவி கேட்டு வந்ததற்கு கடைசியில் எனக்கு இப்படி ஒரு நிலைமை.. என்று தன் நிலையை எண்ணி கண்ணீர் வடித்தவள்.. மெதுவாக எழுந்து அமர முயற்சித்தாள்..
உடலில் உள்ள சக்தி எல்லாம் வற்றி போனது போல உணர்ந்தாள்..
இப்படியே படுக்கையில் கிடந்தால் கடைசி வரைக்கும் இப்படியே இருக்க வேண்டியதுதான்.. மெதுவாக முயற்சி செய்து எழுந்து நடமாடுவோம் என்று நினைத்துக் கொண்டு எழுந்தவள் கீழே இறங்கி சென்றாள்..
அங்கே அடுப்படியில் வேலையாக இருந்த தன் மாமியாரை நோக்கி வந்தாள்.. சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றியப்படி.
ஒருவேளை எங்காவது தன் கணவன் அமர்ந்து கொண்டு தன்னை பார்க்கிறானோ என்கிற அச்சம் மனதிற்குள் இருந்தது, ஆனால் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் கண்களில் மட்டும் பயத்தை தேக்கிக்கொண்டு சுற்றிலும் அவனைத் தேடினாள்..
எங்கும் அவனை காணவில்லை.. ஒரு வேளை கோவத்தில் வெளியே சென்று விட்டானோ என்று தோன்றியது..
எங்கையோ போகட்டும் கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு தன் மாமியாரை நெருங்கி அவரின் தோளை தொட்டாள்.
” அம்மாடி மித்ரா.. நீ என்ன இந்த பக்கம்?? உனக்கு உடம்பு நல்லாகிடிச்சா?? இப்ப எப்படி இருக்கு?? முகம் எல்லாம் சோர்வா இருக்கு நீ எதுக்கு கீழே இறங்கி வந்த?? ஏதாவது வேணும்னா ஒரு போன் பண்ணி இருக்கலாமே இல்ல சத்தம் போட்டிருந்தா நானே மாடிக்கு வந்து உனக்கு என்ன வேணும்னு கேட்டு செஞ்சு கொடுத்திருப்பேனே.. நீ ஏன் மா அலையுற?? “, என்று கூறினார் அக்கறையோடு அவளின் கன்னங்களை வருடிக் கொண்டே.
“ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அத்தை.. நான் நல்லா தான் இருக்கேன்.. ரொம்ப தாகமா இருந்தது அதான் சுடுதண்ணீர் குடிச்சிட்டு போகலாம்னு வந்தேன்..”
” அப்படியா ஒரு நிமிஷம் இருமா எடுத்துட்டு வரேன்.. நீ போய் ஹாலில் உட்காரு..”, என்றவர் அடுத்த நிமிடமே தண்ணீரை சூடு செய்து அவளுக்கு எடுத்து வந்து கொடுத்தார்.
அன்னையின் அன்பை அறியாதவள் இப்பொழுது மாமியாரின் உருவத்தில் அன்னையின் அன்பை அனுபவிக்கிறாள்..
அவருடைய அக்கறையான பேச்சும் அன்பான பார்வையும் அவள் மனதை கரைத்தது..
கண்களில் கண்ணீரை சுரக்க செய்தது..
இத்தனை அன்பான அன்னைக்கு இவன் எப்படி மகனானான் ?? என்று எண்ண தோன்றியது அவளுக்கு..
கண் கலங்க அவர் தந்த சுடு நீரை பருகியவள்.. அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னம்மா?? என்ன வேணும்?? பசிக்குதா?? சாப்பிடுறியா ஏதாவது?? சூடா ரச சாதம் எடுத்துட்டு வரவா??”
“ ஐயோ அதெல்லாம் ஒன்னும் வேண்டாமா.. உங்களுக்கு நான் ஏதாவது உதவி செய்யட்டுமா?? வந்த நாளிலிருந்து என்னை எந்த வேலையும் செய்ய விடுவதில்லை எல்லாமே நீங்கதான் செய்றீங்க.. இப்பவாவது நான் ஏதாவது வேலை செய்றேன்.. சும்மா இருக்க ஒரு மாதிரியா இருக்கு”
” அதெல்லாம் பொறுமையா செஞ்சுக்கலாம் கல்யாணமாகி கொஞ்ச நாள் தானே ஆகுது அதுக்குள்ள நீ வேலை செய்யணும்னு எந்த அவசியமும் இல்லை அதுவும் இல்லாமல் இந்த வீட்டில் பெருசா ஒரு வேலையும் கிடையாது.. சமையல் வேலை மட்டும் தான்.. அதனால அதை நானே பார்த்துக்கொள்கிறேன் தேவைப்பட்டால் உன்னுடைய உதவி கேட்கிறேன்.. அதையும் மீறி செய்யணும்னு ஆசையா இருந்தா மெதுவா செய்யலாம் முதலில் உடம்பு நல்லப்படியா தேறட்டும்..”, என்றார் அவளின் உடல்நில குறைவை கருத்தில் கொண்டு.
பழகியதோஷத்திற்காக என் மீது எத்தனை அன்பை காட்டுகிறார்கள், இவருக்கு எவ்வளவு நல்ல குணம்??
உதவி என்று கேட்டு வந்தவளுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு பாவம் இவரும் தவறாக ஒரு முடிவை எடுத்துவிட்டார்.
அதனால் ஒரு வகையில் என்னுடைய பிரச்சனை தீர்ந்தது, ஆனால் நிம்மதி?? அது எங்கே போனது என்று தெரியவில்லையே என்று மனதிற்குள் புலம்பி கொண்டவள்.. தன் கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை துடைத்து கொண்டு அருகில் அமர்ந்திருந்த வசுந்தராவின் மடியில் படுத்துக்கொண்டாள்..
சிறு புன்னகையுடன் அவளின் தலை முடியை வருடி கொடுத்தவருக்கும் கண்கள் கரித்து கொண்டு வந்தது.
‘நான் பெற்ற மகன் இந்த பெண்ணை என்ன பாடுபடுத்தினானோ தெரியவில்லையே முகம் எல்லாம் வாடி கிடக்கு பாவம்.. மனசுல இருக்குறத வெளிய சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் படாதபாடு படுது இந்த பொண்ணு.. தெரியாமல் அவனுக்கு இவளை திருமணம் செய்து வைத்து விட்டேனோ ??’, என்று பலதையும் எண்ணி கவலையுற்றார் அவர்..
வசுந்தராவின் அன்பும் அரவணைப்பும் இல்லாவிட்டால் அந்த வீட்டில் அவளால் இருக்கவே முடியாது என்று இந்த நிமிடம் அவள் உணர்ந்து கொண்டாள்..
இப்படிப்பட்ட தேவதைக்கு பிறந்த அரக்கனா அவன்??!!
சத்தியமாக இருவரின் குணத்திற்கும் எந்த வித பொருத்தமும் இல்லையே..
எப்படி இவன் மட்டும் இப்படி இருக்கிறான் ??எதனால் இவர் அவனை கண்டிப்பதில்லை??
கண்டித்தாலும் மட்டும் கேட்கும் ரகமா அவன்??
அவனிடம் மனுஷனால் பேச முடியுமா??
அவனுடைய கோபப்பார்வையும் முரட்டுத்தனமான அணுகுமுறையும் யோசித்துப் பார்த்தாலே இப்பொழுது கூட உடல் எல்லாம் நடுங்குகிறது!!
அவனைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது தான் நலம்.. குறைந்த பட்சமாக அவன் இல்லாத நேரத்திலாவது சற்று நிம்மதியாக இருந்து கொள்ளலாம் என்று எண்ணினாள் அவள்.
அடுத்த நாள் காலை ஐந்து மணி..
உடல்நலம் இப்பொழுது நன்றாக தேறி விட.. இன்று சற்று சீக்கிரமாகவே எழுந்து விட்டாள்..
அருகில் தன் கணவன் இருக்கிறானோ என்ற பயத்தில் திரும்பிப் பார்க்க படுக்கை வெறுமையாக இருந்தது..!!
இரவு கோபமாகவும் சற்றே தடுமாற்றத்துடனும் வேகமாக வெளியே சென்றவன் தான்.. அதன் பிறகு வீட்டிற்கு வரவே இல்லை..
சரி நடு இரவில் ஏதும் வந்திருப்பானோ என்று நினைத்து திரும்பி பார்த்தால் அப்பொழுதும் அவனை காணவில்லை.. அப்படி என்றால் வீட்டிற்கு அவன் வரவே இல்லையா ??எங்கே சென்றிருப்பான்?? ஒருவேளை கோபத்தில் எங்காவது போய்விட்டானோ??
அல்லது??………
கண்டதையும் மனம் யோசித்துக் குழம்பியது அவளுக்கு..
வேறு எது பற்றியும் யோசிக்காமல் இப்போதைக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தால் அதுவே போதும் என்று நினைத்துக் கொண்டவள் எழுந்து குளிக்க சென்றாள்.
குளித்துவிட்டு வெளியே வந்தவள் புடவையை கட்டலாமா என்று யோசித்து விட்டு அடுத்த நிமிடமே வேண்டாம் என்று முடிவு செய்து அருகில் இருந்த சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டாள்.
குளிர் காற்று வீசி கொண்டிருக்க.. புடவை கட்டினால் அதற்கு தோதாக இருக்காது அதனால் இறுக்கமாக இருக்கும் இந்த முழுக்கை சுடிதார் அணிந்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு அந்த அரக்கு நிற சுடிதாரை அணிந்து கொண்டாள்..
அவளுடைய நிறத்திற்கு அந்த சுடிதார் எடுப்பாக இருந்தது..
அவளுடைய நிறத்தை மட்டுமல்ல அவளின் உடல் அங்கங்களையும் எடுப்பாக எடுத்துக்காட்டியது அந்த சுடிதார்..!!
தளர்வாக ஜடை பின்னி ரப்பர் பேண்ட் போட்டவள் வேகமாக கீழே இறங்கி வந்தாள்..
சுவரில் இருந்த கடிகாரம் காலை ஆறு மணி என்று காட்டியது..
வேகமாக வாசலுக்கு ஓடியவள் வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு உள்ளே அடுப்படிக்குள் நுழைந்து தனக்கும் தன் மாமியாருக்கும் காபி தயாரித்தாள்..
நேரத்திலேயே மணமணக்கும் சாம்பாரையும் மல்லிகை பூ போன்ற இட்லியையும் தயாரித்தாள்..
என்னவோ தெரியவில்லை காலையிலிருந்து உடல் எல்லாம் உற்சாகம் ஊற்றெடுத்து கொண்டது அவளுக்கு..
உடல் நலம் சரியாகி விட்டதால் வந்த தெம்பா??, அல்லது தன் கணவன் வீட்டில் இல்லை என்கிற குஷியா?? என்று அவளுக்கே சரியாக தெரியவில்லை..
அதனால் முணுமுணுப்பாக “பொன் வானம் பன்னீர் தூவுது”, என்ற பாடலையும் மெதுவாக பாடிக்கொண்டே வேலையை பார்த்தாள்..
வழக்கமாக ஆறரை மணிக்கு தான் வசுந்தரா எழுந்திருப்பார்..
அதனால் சீக்கிரமே எழுந்து வீட்டின் வேலைகள் அனைத்தையும் செய்து முடித்து விட்டாள் அகமித்ரா.
எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அப்படியே அடுப்படியை சுத்தம் செய்தவள் நெற்றியில் வழியும் வியர்வை துளிகளை துடைத்து எறிந்து விட்டு சற்றே பெருமூச்செரிந்தாள்.
பளிங்கு போல மின்னி கொண்டிருந்த அடுக்களையை பார்த்து பிரமித்து போனாள்..!!
பரவாயில்லை மித்ரா.. நீயும் நன்றாகத் தான் வேலை செய்திருக்கிறாய் என்று தனக்குத்தானே பாராட்டிக் கொண்டு சிறு புன்னகை உதிர்த்தாள் அவள்.
” அம்மாடி மித்ரா எப்போ எழுந்து வந்த இப்போ உனக்கு உடம்பு பரவாயில்லையா?? “, என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவர் அடுப்படி இருக்கும் நிலையை பார்த்துவிட்டு பிரமித்து போனார்.
” என்னம்மா இது ?? உன்னை யார் இந்த வேலையெல்லாம் செய்ய சொன்னது ??நீ தான் சமைச்சு வச்சியா??”, என்று கேட்டுக் கொண்டே அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹாட் பாக்ஸ்களை திறந்து பார்த்தார்..
” ஆமா அத்தை நான் தான் செஞ்சேன் சாப்பிட்டு பாருங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க”, என்றாள் கண்களில் மின்னும் ஆர்வத்தோடு.
“ இன்னும் கொஞ்சம் உடம்பு நல்லபடியாக தேறட்டுமா.. அதுக்குள்ள உன்ன யாரு இந்த வேலை எல்லாம் செய்ய சொன்னது??”
“ வீட்டில் சும்மா இருக்க ரொம்ப போர் அடிக்குது அத்தை.. அதனாலதான் வேலை எல்லாம் செஞ்சேன் அதுவும் இல்லாம எதுவும் பெரிய வேலை எல்லாம் இல்லையே.. சாதாரண சமையல் வேலை தானே இதில் என்ன இருக்கு??”
” அது சரி நீ என்ன இப்படி சொல்லிட்ட சாதாரண சமையல் வேலை அப்படின்னு..?? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் ருசியா சமைக்கணும் விதவிதமா சமைக்கணும் ஆரோக்கியமாவும் சமைக்கணும் இப்படி மூன்று விஷயங்களையும் ஒரே நேரத்தில் நாம தான் தரணும் சாப்பாட்டு மூலமா.. அது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லையே.. ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து சமைக்கிற நமக்கு தானே அதோட அருமை தெரியும்.. சாப்பிட்டுவிட்டு உப்பு இல்லை காரமில்லை என்று சொல்லிவிட்டு போகும் ஆண்களுக்கு என்ன தெரியும்?? வீட்டில் ஒருத்தருக்கு பிடிச்சது இன்னொருத்தருக்கு பிடிக்காது பார்த்து பார்த்து ஒவ்வொரு விதமாக எல்லா சாப்பாடும் சமைத்து அவங்க வயிறார உண்டு மகிழ்ச்சியோடு வேலைக்கு கிளம்பி போற அழகை பார்த்து மனம் எல்லாம் பூரித்து போய் வேர்வை ஒழுக நிற்கிறவ தானே இல்லத்தரசி..?? அப்படிப்பட்ட இல்லத்தரசிகள் செய்யற வேலை சாதாரண வேலையில்லையே..”, என்றார் அவர் தன் மருமகளின் கன்னத்தைப் பிடித்து கிள்ளியப்படி.
” நீங்க சொல்றது நிஜம்தான் அம்மா பார்த்து பார்த்து சமைக்கிற பெண்களைப் பற்றி ஒரே நிமிஷத்தில் வீட்டில் சும்மா தானே இருக்க??, அப்படின்னு சொல்லிட்டு போயிடுறாங்க.. அதுக்கு பின்னாடி இருக்கிற நம்முடைய வேதனை யாருக்கும் தெரியாது.. உடம்பு சரியில்ல என்றாலும் நாம தான் சமைக்கணும் வீட்டுக்கு தூரமானாலும் நாம தான் சமைக்கணும்.. அடுத்தவங்களுக்கு உடம்பு முடியலனாலும் நாமதான் அவங்களை பார்த்துக்கணும் நமக்கே உடம்பு சரியில்லை என்றால் கூட நாம தான் நம்மள பார்த்துக்கணும் நமக்கு நாம்தான் உதவி அடுத்தவர்களுக்கும் நாம் தான் உதவி.. நிச்சயமா இதை நான் ஒத்துக்குறேன்.. ஆனா இப்போதைக்கு இதைப்பற்றி பட்டிமன்றம் எல்லாம் நம்மளால நடத்த முடியாது அதற்கு நேரம் இல்ல வாங்க நம்ம சாப்பிடுவோம் பசிக்குது எனக்கு”, என்று சிரித்தபடி கூறி தன் மாமியாரை அழைத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்கு வந்தாள்.
பெண்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டு நட்போடு இருவரும் பல விஷயங்களை அலசி ஆராய்ந்து கொண்டு உணவருந்தினர்..
அப்போது..
வரிசையாக முத்துப்பற்கள் மின்ன சிரித்துக்கொண்டு , காதில் இருக்கும் ஜிமிக்கி குலுங்கும் வண்ணம் பேசி கொண்டிருந்த மித்ராவை , கண்களில் ஜொலிக்கும் கோபத்தோடு வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்..!!
– தொடரும்..
