மொழி – 7

“சொல்லுடா..”.

“எப்படி விருப்பம் இல்லாம இருக்கும். இப்படியெல்லாம் எனக்கே எனக்குன்னு ஒரு வாழ்க்கை.. எனக்கே எனக்குன்னு ஒரு குடும்பம்னு நான் நினைச்சு கூட பார்த்ததில்ல. வாழ்க்கை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிஞ்சு போச்சுன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். ஒரே நாள்ல மொத்தத்தையும் மாத்தி என் வாழ்க்கையவே அழகாக்கி என்கிட்ட கொடுத்து இருக்கீங்க. இதுல எப்படி விருப்பம் இல்லைன்னு என்னால சொல்ல முடியும். ஆனாலும், மத்தவங்க கஷ்டப்படுறதை பார்க்கும் பொழுது எனக்கும் ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு”.

“எப்படியும் எங்க வீட்ல எனக்கு ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க தான.. அந்த பொண்ணு நீயா இருக்குறதுல என்ன பிரச்சனை வந்துட போகுது”.

“ஆனா, எல்லா விஷயமும் உங்க வீட்டுக்கு தெரிய வந்தா?” என்றாள் தயக்கத்தோடு.

“எந்த விஷயத்தை பத்தி சொல்ற பவி?” என்றான் தன் குரலில் சற்று கடுமையை கூட்டி.

“அது.. அது.. என்னை பத்தி..”. 

“ஷெட் அப் பவி! இந்த மாதிரி எதுவும் பேசக்கூடாதுன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே நான் உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல. நீ என்னோட பவி.. இந்த யஷ்வந்தோட பவித்திர பாரிஜாதம். இது மட்டும் தான் உன்னுடைய ஐடென்டிட்டி. உன்னோட பாஸ்ட் பத்தி திரும்ப என்கிட்ட ஒரு வார்த்தை பேசாத”. 

அவனின் திடீர் கடுமையில் இவளின் முகம் சுணங்கி விட. அவளின் கன்னத்தை தன் கைகளில் தாங்கிக் கொண்டவன், “ம்ம்ச்ச்.. இங்க பாரு நீ தான் எனக்கு எல்லாமே.. உன்னைத் தவிர வேற எதுவுமே எனக்கு முக்கியம் கிடையாது. இந்த உலகமே எனக்கு நீ தான்.. என் வாழ்க்கையே நீ தான்.. உன்ன நான் உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். என் குடும்பத்தை விட நீ தான் எனக்கு முக்கியம்.. இப்படின்னு கலர் கலரா எல்லாம் எனக்கு உருட்ட தெரியாது. உன்ன பார்த்த உடனே கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் முடிவு பண்ணல.. உன்னோட ஒரு நைட் ஸ்பென்ட் பண்ணி இருக்கேன். உன்னை நிறையவே புரிஞ்சிருக்கேன். கல்யாணம் பண்ணிக்க அந்த புரிதல் போதும்னு நான் நினைக்கிறேன். நீ எனக்கு சரியானவன்னு என் மனசும், மூளையும் சொன்ன பிறகு தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிற முடிவையே நான் எடுத்தேன். மத்தபடி, உனக்காக பாவம் பார்த்து வாழ்க்கை கொடுக்கிற அளவுக்கு எல்லாம் எனக்கு ஒன்னும் பெரிய மனசு இல்லம்மா” என்றான் அவளை சீராக்கும் பொருட்டு விளையாட்டாக கூறுவது போல்.

அவனின் வார்த்தையில் அவளின் முகம் தெளிந்து பழைய நிலைக்கு வரவும்.

“திரும்ப இப்படி குற்ற உணர்ச்சியா இருக்கு அது இதுன்னு ரொம்ப ஓவர் திங்க் பண்ணாதடா.. இது நம்ம லைஃப்.. நீ நான் மட்டும் தான். அம்மா, அப்பா, குடும்பம் எல்லாமே முக்கியம் தான். ஆனா, அதையும் தாண்டி நமக்குன்னு ஒரு குடும்பம்.. நாளைக்கு நமக்குன்னு பசங்க பிறப்பாங்க.. நமக்குன்னு ஒரு குடும்பம் அமையும். இப்படி ஒரு குடும்பத்தை உன்னோட அமைச்சுக்கனும்னு எனக்கு தோணுச்சு. அதான் உன்னோட அமைச்சுக்கிட்டேன். உனக்கு இதுல விருப்பம் இல்லனா மட்டும் சொல்லு.. அதை விட்டுட்டு குற்ற உணர்ச்சி, மன கஷ்டம்னு பேசிட்டு இருக்காத”. 

“ம்ம்”.

“என்ன ம்ம்.. நான் சொன்னது புரிஞ்சுதில்ல.. திரும்ப இந்த மாதிரி வார்த்தை உன் வாயிலிருந்து வரவே கூடாது. நேத்துல இருந்து தான் உன் வாழ்க்கையே ஆரம்பிச்சிருக்கு. இது தான் உன்னுடைய வாழ்க்கை.. நாங்க தான் உன்னுடைய குடும்பம்.. நான் தான் உனக்கு எல்லாமே!” என்றான் தன் கடைசி வாக்கியத்தில் சற்று அழுத்தத்தை கொடுத்து.

மொத்த உணர்வையும் ஒன்று திரட்டி அவளுக்குள் திணித்தது போல் அப்படி ஒரு உணர்ச்சி பெருக்கு. 

கண்கள் எல்லாம் கலங்கி போக. நீர் திரண்ட விழிகளும் புன்னகையில் மின்ன.. அவனுக்கு ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

அவள் சுதாரிப்பதற்குள்ளாக அவளின் வாயில் ஒரு பிரெட் துண்டை திணித்தவன். அவள் புரியாமல் விழிக்கவும், “பசிக்குதுடி இப்படி புருஷனை பார்க்க வச்சு சாப்பிடுறியே” என்று கூறிக் கொண்டே அவள் இதழை தன் இதழ் கொண்டு அடைத்து இருந்தான்.

தன் பசியையும் ஆற்றிக் கொண்டான். 

அவனின் பசிக்கு இறையாகி போகியது என்னவோ அந்த பிரெட் துண்டும் அத்துடன் சேர்ந்து அவளும்..

இருவரும் எத்தனை நேரம் அறைக்குள்ளேயே செலவழித்தனரோ அவர்களே அறியவில்லை. கதவு தட்டப்படும் ஓசையில் தான் இருவருமே நிதானத்திற்கு வர.

அவளின் முகமோ அவள் நெற்றியில் வைத்திருந்த குங்குமத்தோடு போட்டி போடும் விதமாக கண்டமேனிக்கு சிவந்து போய் கிடந்தது.

அவளின் முகத்தை கண்டவனுக்கோ உணர்ச்சிகள் எரிமலையாய் வெடித்து சிதற தயாராய் இருக்க.

“என்னை ரொம்ப சோதிக்கிற டி” என்றிருந்தான்.

அதற்குள் மீண்டும் வேகமாய் கதவு தட்டப்படவும். அவன் மடியில் இருந்து வேகமாக எழுந்து நின்றவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

தன் முகத்தை அழுந்த தேய்த்து, தலையை கோதி என கொஞ்சம் கொஞ்சமாக மீட்டவன் கதவை திறக்கவும். 

“என்னடா எவ்வளவு நேரமா கதவை தட்டிட்டு இருக்கேன். அத்தை, மாமா எல்லாம் கிளம்புறாங்க” என்றார் பரமேஸ்வரி.

“ஏன் அத்தை இருந்து சாப்பிட்டு போகலாம்ல”. 

“இல்ல பரவாயில்ல இருக்கட்டும் பா. இந்துவை விட்டுட்டு போகலாம்னு தான் நாங்க வந்தோம். இன்னொரு நாள் சேர்த்து கல்யாண விருந்து சாப்பிட்டுக்குறோம்” என்று லதா கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, தன் முகத்தை கழுவி விட்டு துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள் பவித்ரா.

அவளின் முகத்தை கண்டே உள்ளே என்ன நடந்தது என்பதை யூகித்த லதா தன் குரலை செறுமி கொண்டு, “அண்ணி சீக்கிரம் ரிசப்ஷன் வச்சிடுங்க. இல்லனா, உங்க சின்ன மகனும் மருமகளும் நேரா வளைகாப்பு செய்ய வச்சிட போறாங்க” என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு கிளம்பி விட்டார்.

அவரின் வார்த்தையில் இருவருக்கும் எப்படி செயலாற்றுவது என்றே தெரியவில்லை. 

பவித்ரா அனைவரின் முன்பும் தன் முகத்தை மறைத்துக் கொள்ளவும் முடியாமல் கைகளை இறுக்கமாக மூடியவாறு தலைகுனிந்து நின்றாள்.

அவரின் வார்த்தையில் யஷ்வந்திற்கே அங்கே யாரின் முன்பும் நிற்க முடியவில்லை என்னும் பொழுது, பவித்ராவை பற்றி கேட்கவும் வேண்டுமா.. 

அனைவரும் அவர்களை வழி அனுப்ப செல்லவும் தான் இருவருக்கும் மூச்சே வெளிவந்தது.

அனைவரும் நகர்ந்ததும் அவள் புறம் சரிந்தவன், “அவங்க சொல்றதும் சரி தான் இல்ல.. நீ ரொம்ப பேட் கேர்ள் பவி.. என்னை என்னெல்லாம் பண்ண வைக்கிற.. சீக்கிரமா ரிசப்ஷனை வைக்கணும்” என்றான் ரகசியம் போல்.

ஏற்கனவே, சிவந்திருந்தவளை மேலும் பேசி பேசியே சிவக்க வைத்துக் கொண்டு இருந்தான்.

“என்னம்மா அண்ணனுக்கு ரிசப்ஷனா?” என்று ஆவலாக கேட்டாள் நித்யா.

“ம்ம்.. வேற வழி” என்ற பரமேஸ்வரி யஷ்வந்தை பார்த்து, “இங்க பாருடா உன் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்ததும் நாங்க ஏத்துக்கிட்டோம்னு உன் இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு நினைக்காத. ஒரே போல எப்பயும் இருக்க மாட்டோம். பார்த்து நடந்துக்கோ.. அப்படியே உன் பொண்டாட்டிக்கும் சொல்லு” என்று கோபமாக கூறிவிட்டு சமையலறைக்கு சென்று விட்டார்.

திருமூர்த்தி எதுவும் பேசவில்லை. திருமணத்தை ஏற்றுக் கொண்டதாக கூறி விட்டார்கள் தான். ஆனாலும், யஷ்வந்திடம் பேச அவருக்கு மனம் முன் வரவில்லை. தன் நம்பிக்கையை பொய்யாக்கி விட்டானே என்ற ஆதங்கம் அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது. 

அடுத்த ஒரு வார காலமும் அத்தனை வேகத்தில் பறந்து விட்டது. 

பரமேஸ்வரி அவ்வப்பொழுது திட்டுவதற்காகவாவது யஷ்வந்திடமும், யஷ்வந்தின் மூலமாக பவித்ராவிடமும் பேசிக்கொண்டு இருந்தார்.

ஆம், இன்னும் நேரடியாக பவித்ரா உடனான உரையாடல் அவருக்கு துவங்கவில்லை. அனைத்துமே யஷ்வந்தை தான் கொண்டிருந்தது.

ஆனால், திருமூர்த்தி திட்டுவதற்காக கூட தன் வாயை திறக்கவில்லை. அவரின் மனநிலை யஷ்வந்திற்கும் புரிய. சற்று காலம் போனால் அவரின் மனம் மாறும் என்று அமைதி காத்தான்.

இந்த ஒருவார காலமும் அனைவரும் வேலைக்கு சென்றுவிட. தனித்து இருப்பது என்னவோ இந்துவும், பவித்ராவும் மட்டும் தான் என்பதால் அவர்களுக்கு இடையே ஒரு மெல்லிய பிணைப்பு உருவாகியது.

பகலில் குழந்தையை பார்த்துக் கொள்ள பவித்ரா நிறையவே உதவினாள். இந்து உண்ணும் பொழுதும், குளிக்கும் பொழுதும், தன் தனிப்பட்ட வேலைகளை செய்யும் பொழுதெல்லாம் குழந்தையை பவித்ரா தான் கவனித்துக் கொண்டாள்.

அவளின் குணத்தை பற்றி அறிந்து கொண்ட இந்து தன் கணவனிடமும் அவளைப் பற்றி கூற. அவனுக்குமே பவித்ராவின் மேல் நல்ல ஒரு அபிப்ராயம் தோன்றியது.

நித்யாவும் கொஞ்சம் கொஞ்சம் பவித்ராவுடன் உரையாட தொடங்கியிருந்தாள்.

அங்கே இன்னமும் கோபமாக இருந்தது பெற்றோர்கள் மட்டும் தான். அதையும் காலம் மாற்றும் என்ற நம்பிக்கையோடு இருந்தனர் யஷ்வந்தும், பவித்ர பாரிஜாதமும்.

இந்த ஒரு வாரத்திலேயே யஷ்வந்த் பவித்ரா இடையே அத்தனை அன்யோன்னியமும், புரிதலும் ஏற்பட்டிருந்தது.

ஒருவரை பற்றி மற்றொருவர் நன்கு தெரிந்தும், புரிந்தும் கொண்டனர்.

ஆம், புரிந்து கொண்டு அவர்கள் ஒன்றும் திருமண பந்தத்தில் இணையவில்லையே.. 

இருவரும் காதலித்து மணந்திருந்தால் ஒருவரை பற்றிய புரிதல் மற்றொருவருக்கு இருந்திருக்கும்.

ஆம், காதல் இல்லாமல் தான் மணந்து கொண்டனர். 

புரிதல் பெரிதாக இல்லாமல் தான் மணந்து கொண்டனர். 

ஒரே ஒரு இரவு அவர்களின் மொத்த வாழ்க்கையையுமே புரட்டி போட்டு இருந்தது.

அவளை பிடித்திருந்தது.. 

அவளின் பேச்சு, மாசற்ற மனம், உண்மையை தாங்கிய அவளின் வார்த்தைகள், வலி தாங்கிய அவளின் விழிகள், வருத்தம் இழந்தோடிய கலங்கிய முகம் என ஒவ்வொன்றும் அவளில் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆனால், காதல் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. புரிதல் என்றெல்லாம் சொல்லிவிடவே முடியாது..

ஆனால், பாவம் மொத்த குடும்பத்தினருமே தங்களை ஒதுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை அவர்கள் அந்நொடி அறியவில்லை.

பவித்ராவை பற்றிய உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள போகும் நாளும் வெகு தூரத்தில் இல்லை என்பதை அவர்கள் அறியவில்லை. 

என்ன தான் யஷ்வந்த் பவித்ராவிடம் அவளின் பழைய வாழ்க்கையை பற்றி வாய் திறக்க கூடாது என்று அவளின் வாய்க்கு பூட்டு போட்டு இருந்தாலும், அனைவரின் வாயையும் அப்படி பூட்டி வைத்து விட முடியாதே.

ஆம், அவனின் மாமா அய்யனார் ரூபத்தில் வந்து சேர்ந்தது அவர்களின் குடும்பத்திற்கு மிகப் பெரும் பிளவு.

அவன் எதை யாருக்கும் தெரியப்படுத்த கூடாது என்று ரகசியம் காக்க எண்ணினானோ, அனைத்தையும் அனைவரின் முன்னிலையிலும் போட்டு உடைத்திருந்தார் அய்யனார்.

அதன் விளைவு குடும்பத்திற்குள் பிளவு ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், பவித்ர பாரிஜாதம் யாரின் முகத்தையும் எதிர்நோக்க முடியாமல் கூனிக் குறுகி துடித்துப் போய் நின்றாள்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கொஞ்சல் மொழி பேசாயோ ஊமைக்கிளியே
908 11 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page