அத்தியாயம் 3
“எத்தன காஸ்ட்லி காஃபி ஷாப் வந்தாலும், இந்த நாயர் கடை சாயவ போல டேஸ்ட் வருமா?” என்று தேநீரை உறிஞ்சியபடி குடித்த ரஞ்சனை கண்டு, “எதோ, எதையோ குடிக்கிற போல இருக்கு. கொஞ்சம் அடக்கி வாசி நாயே!” என்றான் அதிரதன்.
“என் நாயோட சுத்திட்டிருந்தவன தானடா இழுத்துட்டு வந்த?” என்று ரஞ்சன் கேட்க, அதிரதன் அதை கண்டுகொள்ளாமல் சாலையை வெறித்து கொண்டிருந்தான்.
அந்நேரம், ரதனின் தோளில் வாகாய் வந்து சாய்ந்தது ஓர் மென்மையான தேகம்.
ஒற்றைத் தீண்டலிலேயே அது யாரென இனம் கண்டு கொண்ட ரதன், தன் உடலை உலுக்கி அந்த தேகத்தை தன்னிடமிருந்து பிரித்துக்கொண்டான்.
ரதனின் திடமான அசைவில், அவன் சட்டென விலகவே, தடுமாறி கீழே விழ சென்றாள் அவன் மேல் சாய்ந்திருந்த, அப்சரா.
“அப்சி!” என்று ரஞ்சன் அவளை தாங்கிக்கொள்ள, உதடு பிதுக்கி ரஞ்சனை கண்டவள், நிஜத்திலும் இந்திரலோகத்து அப்சரை தானோ என்ற எண்ணம் எழுகிறதே!
“இவன் ஏன் ரஞ்சு இப்படி பண்றான்? இந்நேரம் கீழே விழுந்திருப்பேன்” என கொஞ்சல் மொழி பேசியவளின் குரல்வலையை நசுக்கிவிடும் கோபம்தான் ரதனுக்கு.
“ரதன் இப்படித்தான் அவள புடிச்சு தள்ளுவியா? எங்கையாவது அடிப்பட்டா என்னடா செய்யறது?” என்று சண்டையிட வந்த ரஞ்சனை தடுத்த ரதன், “ இவகிட்ட நான் எத்தன தடவ சொல்லி இருக்கேன்?
எது பேசுறதா இருந்தாலும், ரெண்டு ஸ்டெப் டிஸ்டன்ஸ் விட்டு தான் பேசணும்னு.
சும்மா எப்ப பாரு இருக்க இடம், சூழல்னு எதையும் கண்டுக்காம வந்து ஒட்டிகிட்டே நின்னா, இப்படித்தான் பண்ண முடியும்” என்று கூறி ரஞ்சனை அடக்கினான்.
“உங்க ரெண்டு பேருக்கும் என்னைக்கு தான் ஒத்துப்போய் இருக்கு?” என ரஞ்சன் முணுமுணுத்தான்.
அப்சரா! அதிரதன் மற்றும் ரஞ்சனுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவள். அவளுக்கு ரதன் மீது பலமாகவே ஒரு கண் இருப்பதை புதிதாக இவர்களைக் காண்போரும் எளிதில் கண்டறியலாம்.
அவளுக்கு ரதன் மேல் ஒருவித ஈர்ப்பென்பதை தாண்டிய வெறி…
ஆனால் அதை ரதன் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை. அவனை பொருத்தமட்டில் அவள் ஒரு தோழிக்கும் கீழ் தான். தங்களை எந்நேரமும் சுற்றி வரும் தொல்லையை போல் தான் அப்சரா, ரதனின் பார்வையில்..
“டேய் அரை ட்ரௌசர். எனக்கு ஒரு டீ சொல்லுடா” என்றவளுக்காக ரஞ்சன் தேநீரை வாங்க கடையினுள் செல்ல, அங்கு ரதனும் அப்சராவும் மட்டும்தான் இருந்தனர்.
அவன் தன்னைக் கீழே தள்ளிவிட்டும் கூட, அடங்காமல் அப்சராவின் பார்வை பாரபட்சமின்றி ரதனின் முகத்தில் தொடங்கி உடலில் அலை பாய்ந்தது.
அவளும் இதுவரை மறைமுகமாக தன்னுடைய ஈர்ப்பை எத்தனையோ முறை ரதனிடம் கூறிவிட்டாள்.
ஆனால் தன்னை தோழியாய் கூட ஏற்க மறுப்பவனிடம் வழிய சென்று ‘என் காதலை ஏற்றுக் கொள்’ என்று கூறினால், அவனுக்கு எப்படி அவள் மீது பிடிப்பு வரும்? என்பதை அங்கு அந்த அழகியும் மறந்து தான் போனாள்.
செல்வ செழிப்போடு வளர்ந்தவள், அவள் ஆசை கொண்டு இதுவரை கிடைக்கவில்லை என்றால் அது ரதன் மட்டுமே!
அவன் எத்தனை முறை முகத்தில் அடித்ததை போல் அவளை தவிர்த்தாலும், ரதனின் மேல் அப்சரா கொண்ட பித்து, அவளை விடாமல் அவனைத் தொடர வைக்கிறது.
இதோ இப்போதும், தன் விழி வழி எதிரில் இருப்பவனை மயக்கும் வித்தையை கையாண்டு கொண்டிருக்கும் பெண்ணை, கண்டுகொள்ளாமல் இருந்த ரதனின் கண்கள், சட்டென மாறிய வானிலையை ஏறிட்டது.
மிதமான வெயிலில் இருந்து, கும்மிருட்டாக இருட்டி வரும் மாயத்தின் முன், அப்சராவின் மாயம் ரதனிடம் தோற்றுதான் போனது.
சாலையோர தேநீர் கடையில் நின்றிருந்த ரதனின் மனம், அந்த சூழலை ஆழ்ந்து ரசித்தது.
திடீரென எங்கிருந்தோ வந்த மண்வாசனை அவன் நாசியை தீண்டி, நுரையீரலை நிரப்பும் வேளை, தேர்வு முடிந்து அந்த தெருவில் இருக்கும் பள்ளி மாணவர்கள் உற்சாகமாய் துள்ளி குதித்து ஓடி வந்தனர்.
கள்ளமற்ற அவர்கள் முகத்தில் தெரியும் உற்சாகத்தை, கண்களால் அளந்து கொண்டிருந்தவனின் பார்வை, ஒற்றை நொடி, ஒரே இடத்தில் கொக்கியிட்டு நின்றது.
அந்த பள்ளி மாணவர்கள் கூட்டத்தின் மத்தியில், வெள்ளை நிற அனார்கலி அணிந்து, தன் கையிலிருக்கும் பூக்கள் நசுங்காத வண்ணம் தூக்கிப்பிடித்து, இதழ்களில் உறைந்த புன்னகையுடன் தோன்றினாள் வேதிகா.
குழந்தைகள் அவள் கையில் இருக்கும் ரோஜாக்களை எட்டிப் பிடிக்க முயல, அதில் முகம் சுணங்காமல், அவர்கள் உயரத்திற்கு மேல் தூக்கி கொண்டு நடந்தாள்.
அவளின் நொடி நேர தரிசனம், அதிரதனின் மனதை அதிவேகத்தில் துடிக்க வைத்தது.
அந்த மழலைகளின் நடுவில், வெள்ளை ரோஜா பூக்களோடு நின்றிருந்தவள் முகத்தில் இருந்த புண்ணகை, அதிரதனை ஈர்த்தது.
‘அவள் கைகளில் குடி கொண்டிருக்கும் மலர்கள் அழகா?..
இல்லை கை கால் முளைத்து வந்து நிற்கும் பெண்மலர் அழகா?…’ என்ற கேள்வி ரதனின் மனதில் எழ, அவள் அருகில் செல்லுமாறு அவன் மனமும் கால்களும் உந்தித் தள்ளியது.
அவன் மனதின் பேச்சைக் கேட்டு, அவள் புறம் கால்கள் எட்டு வைக்கும் முன்பே, இருவருக்கும் இடையில் கடந்த கனரக வாகனத்தின் சதியால் அவள், அவன் கண்ணிலிருந்து மாயமாய் மறைந்திருந்தாளே….
‘இமைக்குள் நுழைந்து, மூளைக்குள் ஏறி, மனதிற்குள் குறுகுறுக்க செய்த அவள் உருவம் எனது பிரமை தானோ?’ என்று அதிரதன் சிந்திக்கும் அளவு குறுகிய நொடியிலான சந்திப்பு அது..
ஆயினும் அவன் மனதில் அவளின் முகம் என்றும் மறக்க முடியாத வண்ணம் பதிந்துவிட்டது தான் விதியோ?
சில மனிதர்களும், சில முகங்களும் காரணங்கள் கூறி மனதிற்குள் நுழைவதில்லையே..
ஒரு பார்வை, ஒரு சிறிய அசைவு, இதழ் விரியா புண்ணகை கூட போதுமே, ஒருவரை நம் மனப்பெட்டகத்தில் சிக்க வைத்துக்கொள்ள…
அப்படி திடீரென தன் கண்ணில் விழுந்து, மறுநொடியே மறைந்து சென்றவளை தேடி எழுந்தவன் “ரதன்!” என்ற அப்சராவின் அழுத்தமான அழைப்பை உதாசீனம் செய்தவனாக சென்றான்.
சாலைக்கு வந்தவன், நாலா புறமும் அவளை சுற்றி முற்றி தேட, அவளோ அந்த குறுகிய நான்கு வழி பிரிவில் எந்த திசையில் சென்றாள் என்றே தெரியவில்லையே….
அந்த சிறுவர் கூட்டத்தோடு கூட்டமாய் அவளும் எங்கோ சென்று விட்டதை கூறி அவன் மனதை சமாதானம் செய்ய முயல, அதுவோ அவளை மீண்டும் காண வேண்டும் என்றல்லவா அடம் பிடித்தது.
ஏமாற்றத்தோடு மீண்டும் தேநீர் கடைக்கே வந்தவன், “டேய் ரஞ்சன் நீ அந்த பொண்ண பாத்தியா?” என்று கேட்டான்.
ரதனின் குரலை கேட்ட படி அப்சராவின் கையில் தேநீரை கொடுத்த ரஞ்சன், “எவள?” என்று எதிர் கேள்வி கேட்டான்.
“அதான்டா. ஒயிட் டிரஸ்ல, ஒயிட் ரோஸ் வச்சிட்டு, ஒயிட் ஏஞ்சல் மாதிரி ஒருத்தி கிராஸ் ஆனாளே!” என்று அவன் கூற “யார்டா மச்சான் அது?” என்று ரஞ்சனும் ஆர்வமாக கேட்டிருந்தான்.
“தெரியல டா ஸ்கூல் பசங்க கூட்டத்துல க்ராஸானா. எந்த பக்கம் போனானே தெரியல” என்று அப்போதும் சாலையில் கண்களை பதித்து கூறியவனை கண்டு அப்சராவிற்கு பற்றிகொண்டு வந்தது.
ரஞ்சன் தான் “அப்சி நீ இவன் சொல்ற அந்த பொண்ண பாத்தியா? இங்க தான இருந்த?” என்று கேட்டான்.
முகத்தில் தோன்றிய எரிச்சலை தெளிவாக மறைத்த அப்சரா, “இல்லையே இங்க எந்த பொண்ணும் வரலையே. ஸ்கூல் பசங்க தான் ஒயிட் யூனிபார்ம்ல போனாங்க. அதை பார்த்து இவன் கன்பியூஸ் ஆயிட்டான்” என்று உறுதியாக கூறினாள்.
“அப்ப நான் பார்த்தது பொய்யா? நீ அவள கவனிச்சிருக்க மாட்ட. பட் நான் அவள தெளிவா பார்த்தேன்.
கொஞ்சம் குட்டியா, நீளமான முடிய விரிச்சுவிட்டு, வெள்ளை துப்பட்டா காத்துல பறக்க, கைல நிறையா ரோஜாவோட போனாவள நான் பார்த்தனே!” என்று கூறிய ரதனை எதைக் கூறி சமாளிக்க என்று புரியா நிலையில் அப்சரா.
மேலும் அவன் தன்னை விடுத்து ஒரு பெண்ணை வர்ணிக்கிறான் என்பதை அவள் அசுர காதலை சுமந்த மனமும் ஏற்க மறுத்தது.
“டேய் விடுடா ரோடுனா நாலு பொண்ணு வரும் போகும். போற வர பொண்ணுங்கள எல்லாம் பாக்குறது தான் நம்ம வேலையா?” என்று ரஞ்சன் இருவரையும் சமாதானம் செய்யும் பொருட்டு கூறி வைத்தான்.
“இல்ல மச்சி. அவ சம்திங் டிஃப்ரண்ட். அத எப்படி சொல்றதுன்னு கூட எனக்கு தெரியல. பட் அவள பாக்கணும்னு இங்க சொல்லிகிட்டே இருக்கு” என்று ஆள்காட்டி விரலை இதயத்தின் மேல் வைத்து அழுத்தி கூறினான் ரதன்.
“மச்சி நீ இந்த மாதிரி எல்லாம் பேசுற ஆள் கிடையாதே!” என்று ரஞ்சன் குதூகலிக்க, இருவரையும் முறைத்து பார்த்துக் கொண்டிருந்த அப்சராவின் மூக்கிலும் காதிலும் புகை வராத குறைதான்.
ரஞ்சனின் கூற்றில் வசீகரமாய் புன்னகைத்த அதிரதன், “எங்க? கைல புடிக்கறதுக்கு முன்னாடி தான் பட்டாம்பூச்சி மாதிரி பறந்து போயிட்டாளே!” என்றவனின் தோளில் கையை போட்ட ரஞ்சன், “கவலைப்படாத மச்சான். அந்த பட்டாம்பூச்சிய பிடிச்சு பாக்ஸ்ல அடச்சிடலாம்” என்று கூறி சிரித்தான்.
நண்பர்கள் இருவரின் கேலிப்பேச்சை எல்லாம் காதில் வாங்காமல், அதிரதனின் முகத்தில் ‘எவளோ ஒருவளை பற்றி கூறும்போது இருக்கும் ரசனை கூட, ஏன் தன்னை இவ்வளவு நெருக்கத்தில் காணும் போது அவனுக்கு வருவதில்லை?’ என்ற ஆலோசனையில் இருந்தாள்.
அதேநேரம், கோயம்புத்தூர் ஆர் எஸ் புரம் சாலையில் இருந்த ஒரு கடையின் முன் ரோஜாக்களோடு வந்து நின்றாள் வேதிகா.
அவளுக்காக பதற்றத்துடன் காத்திருந்த அவள் தோழி இசை, “ஏன்டி இவ்ளோ லேட்? இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு” என்று கத்தினாள்.
“15 நிமிஷம் இருக்கு. சீக்கிரம் முடிச்சிடலாம்” என்று அவளை இழுத்துக் கொண்டு அந்த அழகியல் பூங்கொத்து கடையினுள் சென்றாள்.
வேகவேகமாக வெள்ளை ரோஜாக்களை பாங்காய் பிரித்து, அதனுள் அழகிற்காக ஜெருசலம் பூக்களையும் சேர்த்து, பூங்கொத்துகளாக்கினாள் வேதிகா.
15 நிமிடத்தில் 30 பூங்கொத்துகளை தயாரித்து அவள் நிமிர, அவற்றை கேட்டிருந்த நபரும் வந்து விட்டார்.
பூக்களை கொடுத்து விட்டதும், இசையின் தோளில் கையை போட்டு, “ரோஜாவும் வாழ்க்கையும் ரொம்ப ரொம்ப ஈஸி டி. அத எப்படி ஹேண்டில் பண்ணனும்னு தெரிஞ்சுட்டா போதும்” என்று கூறி அழகாக புன்னகைத்தாள் வேதிகா.
காரிகை 🤍
