அத்தியாயம் – 1
ஓட்டுக்கூரை வேயப்பட்டிருந்த வீட்டைச் சுற்றி போடப்பட்டிருந்த ஒலைப்பந்தலுக்குள் ஒரே சலசலப்பு. ஆளாளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து கொண்டும், ஏவிக்கொண்டும் இருந்தனர். அந்த வீட்டின் மூத்த உறுப்பினர் திரு. சிவசாமி அய்யா இறந்ததையொட்டி, முப்பதாவது நாள் விசேஷத்திற்காக விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.
சமையலுக்கு மட்டும் ஆளை வைத்து விட்டு, மற்ற காரியங்களுக்கு மூன்று மகன்களுமே குடும்பத்தோடு களம் இறங்கி விட்டனர். தொன்னூற்றைத் தாண்டிய பின்னும் திடமாக இருந்ததோடு, தூக்கத்திலேயே மூச்சை நிறுத்திக் கொண்ட அப்பாவிற்கு எல்லாவற்றையும் நிறைவாகச் செய்து வழியனுப்ப வேண்டும் என்பதே மூவரின் எண்ணம்.
“மசமசன்னு நிக்காம சீக்கிரமா தேங்காய உரிச்சு போடுங்க. எல்லாத்தையும் துருவி எடுத்துட்டா, சமையக்காரங்களுக்கு பாத்திரத்தைப் பார்த்து எடுத்து குடுத்துரலாம் பாருங்க,” என கவிதா, தன் வீட்டுக்காரரும் அவ்வீட்டின் இளைய மகனுமான உதயக்குமாரை ஏவிக்கொண்டிருக்க, அவரோ வழியில் சென்ற மகனைப் பிடித்து, “சத்யா… ஏய் இவனே… தண்ணி கேன் வந்தா பின்னாடி இறக்கி வைக்க சொல்லு,” என மற்றொரு வேலையைச் சொன்னார்.
“ஆன்… சித்தப்பாவும் கூட தான் போயிருக்காருன்னு நினைக்கிறேன். எதுக்கும் நானும் போன் பண்ணி சொல்லிடுறேன் சித்தப்பா,” என பாக்கெட்டில் கிடந்த போனை சத்யன் எடுக்க, “என்னன்னு சொல்லுவ? நீ என்ன சொன்னாலும் அவன் ஒருத்தனாவே எல்லாத்தையும் இறக்கி வச்சிட்டு கிடப்பான். சொன்னாலும் கேக்க மாட்டான். தோள் பட்டையில பிளேட்டை வச்சு நாலு மாசம் தான் ஆகுது. கொஞ்ச நாளைக்கு சும்மா இருன்னு ஒரு இடத்துல உட்கார வைக்க முடியல,” என்று குறைப்பட்டுக் கொண்டவர், “அவனை தூக்க விட்டுட்டு நீ இங்க என்ன வேலை பார்த்து சரிய போற? போ… போய் நீயே கூட நின்னு எல்லாத்தையும் இறக்கி வை,” என்று விரட்டினார்.
சரியென்று செல்ல எத்தனித்தவனை, “ஆமா, முகிலனை எங்க? காலையிலிருந்து அவனைப் பாக்கவே இல்ல. இவ்வளோ வேலையை வச்சுட்டு எங்க போனான்?” என கவிதா கேட்கவும், “இங்க தான் மா… எங்கேயாவது நிப்பான். பாத்தா வரச் சொல்லுறேன்,” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் சத்யன்.
நகர்ந்த கால்கள் மட்டும் முன்னே போனாலும், மனம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. ‘நேத்து நடந்தது வெளியில் வந்துடுமோ?’ என்ற தாத்தாவின் காரிய நாளில் தேவையற்ற குழப்பம் வந்து விடுமோ என்ற பதற்றம் இரண்டும் சேர்ந்து அவனை உள்ளுக்குள் இறுக்கின.
ஊர் தலைவர் சிவசாமி அய்யாவின் வம்சத்திற்கே வாய்த்த வரமென்று சொல்லலாம். மூன்று மகன்களும் சொல்லி வைத்தாற் போல மூன்று பேரன்களையே பெற்றெடுக்க, “சிவசாமி அய்யா வீட்டுல விளைஞ்சது மூணும் முத்தா இருக்கே,” என்று ஊரே மெச்சிக் கொள்ளும். காரணம் பெரிதாய் ஒன்றுமில்லை. மகன்களிடமோ, பேரன்களிடமோ எந்தக் கெட்ட பழக்கத்தையும் பார்க்க முடியாது. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும், மற்றவருக்கு பிரச்சனையோ உதவியோ என்றால் முதல் ஆளாய் நின்று விடுவர். மூன்று தலைமுறைகளாய் கூட்டு குடும்பமாய் கூடியிருப்பதும் ஒரு காரணம் தான்.
அப்பாவிடம் சரியென்று தலையாட்டிவிட்டு, தண்ணீர் கேனை இறக்கி வைத்துக் கொண்டிருந்த சித்தப்பாவைத் தடுத்து ஓரமாய் உட்கார வைப்பதற்குள்ளே பாதி சோர்ந்து போனான். அடுத்தடுத்து வந்த வேலை மிகுதியில், முகிலனைப் பற்றி மறந்தே போனான் சத்யன். அதன் பிறகே தான் நினைவிற்கு வந்தது—நேற்று இரவு அடித்த கூத்து எல்லாம்.
உடனே வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த அர்ச்சனாவை கையோடு தனியே அழைத்துக் கொண்டு வந்தான். அவளிடம் பேசும் முன்பே, ‘எப்படியும் திட்டப்போறா’ என்று தெரிந்திருந்தாலும், முகிலனின் நிலை நினைத்ததும் சத்யனின் குரல் தானாகவே தாழ்ந்தது. “நான் சொல்றதை கொஞ்சம் கத்தாம கேளு. நேத்து அண்ணன் வந்தான்ற சந்தோசத்துல, நீங்க எல்லாரும் தூங்குனதுக்கு பிறகு ஒரு பெட்டியை இறக்குனோம்,” என கூறிக் கொண்டிருக்கும் போதே, “முகி முன்னாடி குடிக்காதீங்கன்னு எத்தன தடவ சொல்றது? உங்கள பார்த்து தான் வளருறான் அவனும். அண்ணன் வந்த சந்தோசத்துல சுத்தி நடக்குறது ஏதாவது கண்ணுக்குத் தெரிஞ்சா தானே,” என்று கடிந்தாள் அவள்.
“ஏய்… எப்போதும் பக்கத்துல உக்காந்து சைடிஸு மட்டும் தான் சாப்பிட்டுட்டு இருப்பான். நேத்து என்ன நெனப்புல இருந்தான்னு தெரியல. ஒரு பாட்டிலை எடுத்து கபக் கபக்னு அடிச்சிட்டான். நாங்க தடுக்குறதுக்குள்ள மொத்தமும் உள்ள போயிடுச்சு. வாயப் பொளக்காத. முதல் தடவைன்னதும் ஒத்துக்கல. வாந்தி எடுத்துக்கிட்டு கிடந்தான். தூங்குறதுக்கே ரெண்டு மணி ஆய்டுச்சு. அந்த கடைசி ரூம்ல தான் தூங்கிட்டு இருந்தான். யாரும் பாக்குறதுக்கு முன்ன, நீயே எழுப்பி கூட்டிட்டு வந்துடேன்,” என காதோடு கிசுகிசுத்தான்.
“சரி… போறேன். ஆனா இது தான் கடைசி. இன்னொரு தடவை ரெண்டு அண்ணனும் சேர்ந்து என் புள்ள முன்னாடி குடிக்குறதைப் பாத்தேன்னா, நேரா மாமா கிட்ட தான் சொல்லுவேன். கேண்டீன் போறப்போ நீங்களும் கூட போங்க மாமா. இல்லன்னா ஆர்மி கேண்டீன்ல சீப்பா கிடைக்குதுன்னு உங்க புள்ளைங்க ஊத்தி குடிக்குதுங்கன்னு,” என வார்த்தையில் கடுமையை காட்டினாலும், தன்மையாகவே திட்டினாள் அர்ச்சனா. அவளுக்கு முகிலன் எப்போதும் முதல் குழந்தை தான்.
அர்ச்சனா திருமணமாகி வந்த பொழுது முகிலன் பள்ளி மாணவன். அன்றிலிருந்து இன்று வரை அவன் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் அருகில் இருந்து பார்த்தவள். அவனின் முதல் வெற்றி, முதல் தோல்வி, முதல் தடுமாற்றம்—எல்லாவற்றிலும் தன் பங்கு இருப்பதாகவே அவள் மனம் நம்பியது. பாட சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக அடிக்கடி அண்ணன் வீட்டிற்கு வந்தவன், அங்கேயே தங்கியும் விடுவான். அர்ச்சனா பள்ளி ஆசிரியை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், திருமணமாகி ஆறு வருடங்களில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை என்பதே உண்மையான காரணம்.
முதலில் வருத்தம் இருந்தாலும், “கடவுள் எப்ப குடுக்கணும்னு இருக்குறாரோ, அப்ப குடுத்துட்டு போகட்டும். அதான் எனக்கு பையனா முகி இருக்குறானே,” என்று தன்னையே தேற்றிக் கொண்ட அர்ச்சனா, அப்படியே பழகியும் விட்டாள்.
“சரி அச்சு… இதெல்லாம் வீட்டுக்குப் போனதும் நம்ம பேசிக்கலாம். இப்போ அவனை எழுப்பு. பெரியப்பா பார்த்தா கந்தலாயிடும்,” என அவசரப்படுத்திய சத்யனை, உள்ளுக்குள் ‘அவனுக்கு இப்போ தேவையானது கோபம் இல்ல… கொஞ்சம் புரிதல் தான்’ என்று நினைத்துக் கொண்டே அர்ச்சனா பார்த்தாள். “பெரியப்பான்னா வர்ற பயம் நேத்து குடிக்கும் போது இருந்திருக்கணும். வேலை ஆகணும்னா பயப்படுற மாதிரி ஒரு ஆக்டிங்கை போட்டுடுவீங்களே. வீட்டுக்கு வாங்க… உங்களுக்கு இருக்கு,” என்று பழிப்பு காட்டிவிட்டு நகர்ந்தாள் அவள்.
மறுபுறத்தில்,
“தம்பி, புது துணியெல்லாம் பீரோவுல இருக்கு. அதை எடுத்துட்டு வந்து தாத்தா போட்டோ முன்னாடி வை. பம்பு செட்டுக்கு போயி தலைய நனைச்சிட்டு வர்றதுக்குள்ள, காரியத்துக்கு தேவையான எல்லாம் பண்ணி வச்சிருவாங்கல்ல. உங்க அம்மா எல்லாரும் கிளம்பிட்டாங்களான்னு பாரு. இல்லன்னா ஒரு சத்தம் குடுத்து கிளம்ப சொல்லு,” என்ற கதிரேசன், துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வண்டியை அழைக்க சென்று விட்டார்.
வேட்டியை மடித்துக் கட்டியபடி, மர பீரோவில் இருந்த துணிமணிகளை எடுத்து வரிசையாய் அடுக்கி வைத்துவிட்டு, மகள் முறைக்கு கொடுக்க வேண்டிய அரிசிப் பெட்டியை சரிபார்த்துக் கொண்டிருந்த சங்கர், சந்தனம் கரைத்துக் கொண்டிருந்த சரஸ்வதியிடம்,
“தம்பிக்கு துணி எடுக்கலையா ம்மா?” என்று கேட்டான்.
“மூணு பேருக்கும் ஒரே மாதிரி வேணும்னு அவன் தானே அரக்கு கலர்ல எடுத்தான். இப்ப வந்து அவனுக்கு எடுக்கலையான்னு கேட்டா என்ன அர்த்தம்? அங்க தான் எங்கேயாவது இருக்கும். ஒழுங்கா தேடு,” என்று சொல்லிவிட்டு,
“அந்த பித்தளை தவளைய முதல்ல எடுத்து வை. நம்ம வீட்டுக்கு முன்ன பின்ன இருந்தாலும், வெளிய குடுக்குறது நல்லதா குடுக்கணும்,” என்று கடைசியில் அறிவுறுத்திவிட்டு சென்றாள்.
வெளியே வந்தவன்,
“சத்யா, பீரோல உனக்கும் எனக்கும் தான் இருக்கு. முகிலனுக்கு எடுத்ததை காணோம்,” என தம்பியை நோக்கினான்.
“இல்லியே… அதுல ரெண்டு இருக்குமே,” என்று தாத்தா போட்டோ முன்னே இருந்த கட்டைப்பையை புரட்டி புரட்டி பார்த்துவிட்டு,
“நான் தானே எடுத்து வச்சேன்… எங்க போச்சு?” என யோசனையானான்.
அதற்குள் எட்டி விளையாடிக் கொண்டிருந்த தன் மகளிடம்,
“கீர்த்தனா பாப்பா, சித்தப்பாவ கூட்டிட்டு வா பாப்போம்,” என்று சங்கர் கூற,
“சித்தப்பா… டூர் டூர் வண்டி… புர்ர்ர்…” என்று ஐந்து வயது மழலை மொழியில் சைகை காட்டினாள்.
“அப்போ அவன் தான் எடுத்து போட்டுட்டு போயிருப்பான். விடுங்க ண்ணே… வருவான். வந்ததும் கழட்டி இது கூடவே வச்சிருவோம். யாருக்கும் தெரியாது,” என்று சத்யன் இயல்பாக்கிட முயன்றான்.
“என்னவோ சொல்ற. நானும் நம்புறேன். ஆனா வர வர அவனும் போற போக்கு சரியில்ல. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதுன்னு தெரியல. இந்த தடவை மட்டும் எக்ஸாம் கிளியர் பண்ணாம போகட்டும். அப்புறம் இருக்கு,” என்று கறாராக கூறினான் சங்கர்.
தவறு செய்தால் நொடியும் யோசிக்காமல் தண்டிப்பவன்; அதே நேரம் தளர்ந்திருக்கும் போது தட்டிக்கொடுக்கவும் தயங்க மாட்டான். தம்பிகளிடம் இந்த அக்கறை அளவுக்கு அதிகமாகவே வெளிப்படும். குடும்பத்தில் அரசாங்க உத்தியோகத்தை அடைந்த முதல் நபர் என்பதாலேயே, சங்கரின் குணத்தில் பெரியவர்களும் தலையிடுவதில்லை.
“அண்ணன் சொல்றான்ல… கேட்டுங்கோங்க,” என்று இரு சித்தப்பாக்களும் ஒருசேர சொல்லிவிட, பாதுகாப்புப் படையில் பணியாற்றும் அண்ணனை மாதிரியாகக் கொண்டு, மத்திய காவல்துறையில் சேர்ந்துவிட்டான் சத்யன். இந்த வரிசையில் முகிலனும் மாநில காவல்துறையின் தேர்விற்கு முயன்று கொண்டிருக்கிறான்.
முகிலனைத் தேடி சென்ற அர்ச்சனா வெறுங்கையோடு திரும்பி வர,
“அவனை எங்க? நீ மட்டும் வர்ற?” என்று சத்யன் கேட்கவும்,
“நான் ஒன்னு சொன்னா ஷாக் ஆகக்கூடாது,” என்று குரலை மெல்லத் தாழ்த்தினாள்.
“அது இதுன்னு சொல்லாம, நேரா விஷயத்தை சொல்லு அச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல வண்டி வந்துடும். எல்லாரும் கிளம்ப வேண்டியிருக்கு. குளிச்சுட்டு சீக்கிரமா வந்தா தான் விசேஷம் முடிஞ்சதுக்குப் பிறகு சித்தப்பாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக முடியும்,” என்று அவசரப்படுத்த,
“இல்ல… முகி ரூம்ல இல்லத்தான். சுத்தி எல்லா இடத்துலயும் தேடிட்டேன்,” என்றாள்.
“தோட்டத்துக்கு போயிருப்பானோ?”
“அப்படின்னா பெரிய வண்டிய எடுத்துட்டு போக மாட்டான்ல. வெளிய போகணும்னா தானே எடுப்பான்,” என்றவள், இரண்டு நிமிடங்கள் கழித்து,
“ஒருவேளை அவளைப் பார்க்கப் போயிருப்பானோ?” என்று கேட்டாள்.
அதை கேட்டதும் சத்யனின் முகம் மாறியது.
“அதுக்கு? என் தம்பி அங்க போய் பிரச்சனை பண்ணுவான்னு சொல்ல வர்றியா? இல்ல சொல்லுடி… அவனைப் பாத்தா எப்படி தெரியுது… ஆன்?” என வேட்டியை மடித்துக் கட்ட,
“அவன் போனதுக்கு இவளை ஏன்டா கத்துற?” என்ற சங்கரின் குரல் உயரவும், சத்யன் அமைதியானான்.
“ஆறு மாசத்துக்கு முன்னாடியே பொண்ணோட வந்து நின்னு லவ் பண்றேன்னு தைரியமா சொன்னவன்டா அவன். பொண்ணு பார்க்குற இடத்துல போய் நின்னு, ‘கட்டுனா இவளைத் தான் கட்டுவேன்’னு கையோட கூட்டிட்டு வந்துட்டான்னா யாருக்கு அசிங்கம்?” என்று கணீர் குரலில் கேட்டான்.
“அவன் பண்ணுற ஆளு தான்,” என்று சத்யனுக்கே தோன்றியது. இருப்பினும், அதை வெளியில் சொல்லாமல் நிலைமையை எப்படிச் சமாளிக்கலாம் என்று யோசிக்கலானான்.
“போன தடவையே அவ வீட்ல இருந்து போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்துருவோம்னு மிரட்டிட்டு வேற போயிருக்காங்க. இப்ப தான் எக்ஸாம் பாஸ் பண்ணி பிசிக்கல் எக்சாமுக்குத் தயாரா இருக்குறான். இந்நேரத்துல போய்…” என்று அர்ச்சனா பரிதவிக்க,
“அவங்க ஒன்னும் சும்மா மிரட்டலையே. இவன் பண்ணின வேலை அப்படி. எக்ஸாம் டைம்ல அடக்கி வாசிக்கணும்னு இவனுக்குத் தானே தெரியணும்,” என்ற சங்கரின் கூற்றும் வாஸ்தவம்தான்.
வீட்டில் முடியாதென்று கூறிய பிறகும் கேளாமல் வீட்டின் முன்னே சென்று நின்றால், பெண் வீட்டாரும் என்ன செய்வார்கள்?
“அச்சு, நீ வேற… பயமுறுத்தாத,” என்று மனைவியை அடக்கிவிட்டு,
“ண்ணே… அங்க எல்லாம் போயிருக்க மாட்டான். முன்ன மாதிரி இல்ல. ‘இப்படி ஆயிடுச்சே’ன்னு தான் புலம்பினானே தவிர, அந்தப் பொண்ணைத் திட்டல. என்ன இருந்தாலும் வருத்தம் இருக்கத்தானே செய்யும். இருங்க, நான் கால் பண்ணி பார்க்குறேன். எங்க நின்னாலும் உடனே வரச் சொல்றேன்,” என்று போனை எடுத்து முகிலனின் எண்ணிற்கு அழைக்க “தகவல் தொடர்பு மையத்திற்கு வெளியே உள்ளார்..” என்று கணினி குரல் கூறியது..
தொடரும்..
(தொடரும்…)
