தூவானம் -18

திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பயணத்தில், அகல்யாவின் மனது ஒரு ஊஞ்சலைப் போல இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையில் ஆடிக்கொண்டிருந்தது.

ஜன்னல் வழியே மின்னல் வேகத்தில் கடந்து செல்லும் சாலையோர விளக்குகளைப் பார்த்தபடி, தன் மடியில் இருந்த பையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். அதில் இருந்த அந்த 20,000 ரூபாய் பணம், கோவையில் உயிருக்குப் போராடும் அந்தப் பிஞ்சு உயிருக்கு ஒரு சிறு நம்பிக்கையாகத் தெரிந்தது. “எப்படியோ… அந்த மலையைத் தகர்க்க இந்தச் சிறு கல் உதவியாக இருக்கும்,” என நினைக்கும்போது அவளுக்குள் ஒரு நிம்மதி. ஆனால்,

அதே சமயம் “இன்று இரவு முழுவதும் ஆகாஷ் உடன்…!” என்ற எண்ணம் வந்ததும், அவளது இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன.

இருப்பினும், அவளது ஆழ்மனதில் ஒரு பயம் வேர் விடத் தொடங்கியது. “ஆகாஷ் உண்மையிலேயே வருவானா? ஒரு CEOவின் PA, இந்த நள்ளிரவில் வருவானா? அல்ல ஒரு பேச்சுக்காகச் சொன்னானா?”

அவளது எதிர்மறை எண்ணங்கள் அவளைச் சூழ, “ஒருவேளை வராவிட்டால்? பரவாயில்லை… வாழ்க்கையில் ஏமாற்றங்கள் எனக்குப் புதியதா என்ன? இதுவரை எத்தனையோ இழப்புகளைப் பார்த்த இதயம், இதையும் ஒரு ஓரத்தில் சேர்த்துக்கொள்ளும்,” எனத் தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள். ஆனால், அவளது கண்கள் மட்டும் கார் கிளாம்பாக்கத்தை நெருங்க நெருங்க வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடைந்தது. வார இறுதி விடுமுறை என்பதால், அந்த இடமே மனிதக் கடலாகக் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் தலைகள்… மூட்டை முடிச்சுகளுடன் ஓடும் மக்கள். “இந்தக் கூட்டத்தில் நான் எங்கே போய் கோவை பஸ்சை தேடுவது?” என்ற குழப்பம் ஒருபுறம் இருக்க, அவளது கண்கள் மட்டும் வாசலில் நுழையும் ஒவ்வொரு உருவத்திலும் ஆகாஷைத் தேடியது.

நிமிடங்கள் நகர நகர, அவளது தவிப்பு அதிகமானது. “சரி… ஒரு முறை போன் செய்து தான் பார்ப்போமே?” என்ற எண்ணத்தில் நடுங்கும் விரல்களால் ஆகாஷின் எண்ணிற்கு அழைத்தாள்.

“The number you are calling is currently switched off…”  அந்தக் குரல் அவளது காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருக்க, அப்படியே நிலைகுலைந்து போனாள் அகல்யா.

காலையிலேயே அவன் தன்னைத் திரும்பிப் பார்க்காமல் சென்றபோது ஒருமுறை உடைந்த இதயம், இப்போது மீண்டும் சுக்குநூறாக உடைந்தது. “வரப்போவதில்லை என்று முன்பே தெரிந்திருந்தும், ஏன் இந்த இதயம் அவனுக்காகத் துடித்தது? கூட வருகிறேன் என்று சொல்லிவிட்டு, இப்படித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு கைவிட்டுவிட்டானே!”

வாடிய ரோஜா மலரைப் போல அவள் முகம் தொங்க, கண்கள் லேசாகக் கலங்கின. அந்தப் பெரும் கூட்டத்தில் தான் ஒரு அனாதை என்பதை அந்த நொடி அவள் ஆழமாக உணர்ந்தாள். தலை குனிந்து, தன் கண்ணீரை மறைக்க முயன்று நின்றிருந்த அந்த விநாடி…

திடீரென்று, அவளது மென்மையான தோளில் ஒரு கை விழுந்தது.

அதிர்ச்சியில் துடித்துப் போய் அவள் திரும்பிப் பார்க்க, அங்கே… ஒரு சாதாரண டி-சர்ட், தோளில் ஒரு டிராவல் பேக், கலைந்த தலைமுடி, ஆனால் முகத்தில் அதே காந்தப் புன்னகையுடன் ஆகாஷ் நின்று கொண்டிருந்தான்!

“என்ன அகல்யா… நான் வரமாட்டேன்னு முடிவு பண்ணிட்டியா? இங்க பாரு… உன் பாஸ் On-time வந்துட்டேன்!” என்றான் அவன் மூச்சிரைக்க.

அவன் முகத்தைப் பார்த்த அந்த நொடி, திருவிழாவில் திடீரென ஒளிரும் வண்ண விளக்குகள் போல அவளின் வாடிய முகத்தில் அத்தனை வெளிச்சம்! இத்தனை நேரம் மனதுக்குள் சூழ்ந்திருந்த இருள் அத்தனையும் அவன் புன்னகையில் காணாமல் போக சிலையாக நின்றிருந்தாள்.

“ஹேய் அகல்யா! வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சோ?” எனக் குறும்பு மின்ன ஆகாஷ் கேட்க, அவளுக்குப் பதிலளிக்கவேத் தெரியவில்லை. அவனது வருகை தந்த நிம்மதியில் அவளது வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டன.

அவளின் மௌனத்தைக் கவனித்த ஆகாஷ், “ஹலோ மேடம்… உங்களைத்தான் கேட்டேன்!” என்று அவள் முகத்திற்கு நேராகத் தன் கைகளைச் சொடுக்கி ஆட்டினான். அப்போதுதான் கனவுலகில் இருந்து நிஜத்திற்குத் திரும்பினாள் அகல்யா.

“ம்ம்… என்ன கேட்ட?” என்று அவையறியாமல், ஒருமையில் அவனிடம் கேட்டுவிட்டாள். 

சிறிது நேரத்தில் உணர்ந்தவள் நாக்கைக் கடித்துக் கொள்ள, ஆனால் ஆகாஷிற்கோ, அவளது அந்த உரிமையான ஒருமை பேச்சு காதில் தேனாகப் பாய்ந்தது.

“வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சான்னு கேட்டேன்?” எனத் தன் புன்னகை மாறாமல் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான் ஆகாஷ்.

அகல்யாவுக்குப் பேச்சே வரவில்லை. அவளது கலங்கிய கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. “பாஸ்… நீங்க… உங்க போன் சுவிட்ச் ஆஃப்… நான் நினைச்சேன்…” என அவள் தடுமாறினாள். 

அப்போதுதான் ஆகாஷிற்குத் தன் மொபைலின் விசித்திரம் நினைவுக்கு வந்தது. அவனது மொபைல் எண் ஒரு ஹை-செக்யூரிட்டி பிரைவேட் நம்பர். குறிப்பிட்ட சில எண்களைத் தவிர மற்றவர்கள் அழைத்தால், அது தானாகவே சுவிட்ச் ஆஃப் அல்லது அவுட் ஆஃப் ரீச் என்று காட்டும் வசதி கொண்டது.

“அது… என் மொபைல் டவர் கொஞ்சம் சரியில்லை அகல்யா. அதான் உனக்கு அப்படித் தெரிஞ்சிருக்கும்,” என அந்தத் தொழில்நுட்ப ரகசியத்தை மறைத்துச் சாதுர்யமாகச் சமாளித்தான்.

“என்னமோ… நீ வரமாட்டேன்னுதான் கொஞ்சம் நினைச்சுக்கிட்டு இருந்தேன்,” எனத் தன் மனக்குறையை மெதுவாக வெளிப்படுத்தினாள் அகல்யா.

“ஆனா, நான் கண்டிப்பா வரணும்னு உன் மனசு ஆசைப்பட்டதை விட, உன் கண்கள் ரொம்பத் தெளிவாச் சொல்லுது அகல்யா…” என்றபடி அவன் அவள் கண்களை ஊடுருவிப் பார்க்க, அகல்யா நிலைதடுமாறிப் போனாள்.

அவன் பார்வையின் வீரியத்தில் அவளது கன்னங்கள் செந்நிறமாக மாற, தன் முகத்தில் தோன்றிய அந்த வெட்கத்தை மறைக்க முயன்று, தலையைக் குனிந்து மெலிதாகச் சிரித்தாள். ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “சரி, சரி… அதுதான் இப்போ வந்துட்டல்ல! கிளம்பலாமா?” எனப் பேச்சை மாற்றியவள்.

தன் தோளில் இருந்த பேக்கைச் சரிசெய்தபடி, “பாஸ்… இப்போ இருக்கிற கூட்டத்தைப் பார்த்தா எங்க போய் டிக்கெட் எடுக்கிறது, எப்படிச் சீட்டு பிடிக்கிறதுன்னே புரியல. என்னை நம்பி நீ வேற வந்துட்டீங்க… உங்களையும் நான் பத்திரமா கூட்டிட்டுப் போகணுமே!” என அக்கறையுடன் படபடத்தாள்.

ஆகாஷ் அவளது அந்தப் பதற்றத்தை ரசித்தபடி, “அதான் நான் ஏற்கனவே பஸ் வாங்கிட்டேனே…” எனத் தற்பெருமையாகச் சொல்ல,

அதிர்ந்து போன அகல்யா, “என்னது… பஸ் வாங்கிட்டீங்களா?!” என அவள் கண்கள் விரியக் கேட்க, ஆகாஷ் தான் செய்த உளறலைச் சட்டென உணர்ந்தவன். 

“அது… அது வந்து… நம்ம ரெண்டு பேருக்கும் பஸ் டிக்கெட்’ வாங்கிட்டேன்னு சொல்ல வந்தேன் அகல்யா,” என அசட்டுச் சிரிப்புடன் சமாளித்தான்.

“ஓ… வாங்கிட்டீங்களா? சூப்பர் பாஸ்! நானும் எப்படிப் போகப்போறோம்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். சரி வாங்க, உள்ள போய் பஸ்ஸைத் தேடலாம்,” என அவள் அரசுப் பேருந்துகள் நிற்கும் பகுதிக்கு நடக்க முயன்றாள்.

ஆகாஷ் அவளைத் தடுத்து நிறுத்தி, “அகல்யா, கவர்மெண்ட் பஸ் எல்லாம் இன்னைக்கு ரொம்ப பிஸியா இருக்குமே. அதான் நான் ஆன்லைன்ல ஒரு பிரைவேட் பஸ்ல டிக்கெட் புக் பண்ணிட்டேன். அந்த பஸ் காம்பவுண்டுக்கு வெளிய நிக்குது… நாம அங்க போய் ஏறலாம்,” என்றான்.

அவள் “சரி பாஸ், வாங்க!” என அவள் அழைக்க, “இப்போ நான் உன் பாஸ் இல்ல அகல்யா, உன் Travel Partner!” எனச் சொல்லிவிட்டு அவள் கையைப் பற்றத் துடித்தவன், நாகரீகம் கருதி அவளது பேக்கை மட்டும் வாங்கிக் கொண்டான்.

அவள் முன்னால் நடக்க, அவளது பின்னால் மெதுவாக நடந்த ஆகாஷிற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு நடந்த அந்தச் நிகழ்வு நினைவுக்கு வந்தது.

அடையாறு கெஸ்ட் ஹவுஸில் சித்தார்த் லேப்டாப்பில் ஏதோ ஒரு டீல் பற்றித் தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“டேய் சித்தா! நான் இன்னைக்கு நைட் கோயம்புத்தூர் போறேன்டா!” என ஆகாஷ் அதிரடியாகச் சொல்ல, சித்தார்த் ஆச்சரியத்துடன் நிமிர்ந்தான்.

“என்னடா திடீர்னு? ஏதாவது முக்கியமான கிளையண்ட் மீட்டிங்கா? இரு… இப்போவே பிளைட் டிக்கெட் செக் பண்றேன்,” எனச் சித்தார்த் பதறினான்.

அவனைத் தடுத்த ஆகாஷ், “இல்லடா… நான் இன்னைக்குப் பஸ்ல போகப்போறேன்,” என்றான் மிகவும் நிதானமாக.

சித்தார்த் அப்படியே அலறிவிட்டான். “பஸ்லயா?! நீயா?! டேய்… லேட்டஸ்ட் மாடல் கார்ல சுத்துறவன், பிசினஸ் கிளாஸ்ல பிளைட்ல பறக்கிறவன்… இன்னைக்குப் பஸ்ல போறியா? என்னடா ஆச்சு உனக்கு? ஏதாவது லூசுத்தனமா பேசுற?”

ஒரு கள்ளச்சிரிப்புச் சிரித்த ஆகாஷ், “அது பிசினஸ் கிளாஸ் மச்சி… இது காதல் கிளாஸ்! அந்த சொகுசு விமானத்துல கிடைக்காத ஒரு சுகம், அவ கூடப் போற அந்தப் பஸ் பயணத்துல கிடைக்கும்னு என் மனசு சொல்லுதுடா,” என்றான் காதலில் சொக்கிப் போய்.

பிறகு தன் வேலையாட்கள் பக்கம் திரும்பி, “எனக்கு ஒரு சாதாரண டீ-சர்ட், ஜீன்ஸ், அப்புறம் ஒரு சின்ன டிராவல் பேக் மட்டும் ரெடி பண்ணி வைங்க,” என ஆர்டர் போட்டவன், தன் டிரைவர் பக்கம் திரும்பி, “டிரைவர்! காரை ரெடி பண்ணுங்க… கிளாம்பாக்கம் போகணும்!” என அதே அதிகாரத் தோரணையில் சொன்னவன்.

“டேய் சித்தா! அகல்யா இன்னைக்கு நைட் கோவை போறா. அவ கூடவே நானும் போகப் போறேன். அடுத்த ரெண்டு நாளைக்கு என் பிசினஸ், மீட்டிங் எல்லாத்தையும் நீயே பாத்துக்கோ,” என்று ஆகாஷ் படபடவெனச் சொல்ல, சித்தார்த் வாயடைத்துப் போனான்.

“டேய்… என்னடா நடக்குது இங்க? உனக்கு இப்போ என்னதான் வேணும்?” எனச் சித்தார்த் தலையில் கை வைத்துக்கொள்ள,

“கோவைக்கு ரெண்டு பஸ் டிக்கெட்!” என்றான் ஆகாஷ்.

சித்தார்த் ஒரு நக்கலான சிரிப்புடன், “டிக்கெட் எதுக்குடா? பஸ்ஸையே வாங்கிடு! நீங்க ரெண்டு பேர் மட்டும் ஜாலியா, தனியா போயிட்டு வரலாமே,” என்று விளையாட்டாகச் சொன்னான்.

ஆனால் ஆகாஷ் அதை விளையாட்டாக எடுக்கவில்லை. அவன் கண்கள் மின்னின. “அட… இது சூப்பர் ஐடியாவா இருக்கே! மச்சி, இப்போவே ஒரு சொகுசு பஸ்ஸை ரெடி பண்ணு. எங்களுக்குத் தனிமை வேணும், அதே சமயம் பாதுகாப்பு ரொம்ப முக்கியம். நாங்க ரொம்ப ஹேப்பியா டிராவல் பண்ணனும். சீக்கிரம் ஏற்பாடு பண்ணு!” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மாடிப் படி ஏறினான்.

“டேய்… டேய்… நான் சும்மா சொன்னேன்டா! நில்லுடா!” எனச் சித்தார்த் பின்னால் கத்திக்கொண்டே ஓட, மேல் மாடியில் இருந்து திரும்பிப் பார்த்த ஆகாஷ், ஒரு கறாரான குரலில், “Shh… It’s my order! Do it!” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

அந்த அதிரடி உத்தரவின் விளைவாகத்தான், இப்போது கிளாம்பாக்கத்திற்கு வெளியே அந்தப் பிரம்மாண்டமான சொகுசுப் பேருந்து நின்றிருந்தது. வண்டிக்குள் நுழைந்த அகல்யா, உள்ளே இருந்த வசதிகளைப் பார்த்து வியந்தவள், சட்டெனச் சுற்றும் முற்றும் பார்த்தவள் அதிர்ந்து போனாள் ..

🌧️தூறல்கள் தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page