“என்னம்மா சொன்னீங்க.. அவங்க கெட்டுப் போனவங்களா? அன்னைக்கு அவங்க வந்து காப்பாத்தலனா நான் தான் கெட்டுப் போயிருப்பேன். இந்த சக்கரவர்த்தி குடும்பத்தோட மானத்தைக் காப்பாத்தியிருக்காங்க. அன்னைக்கு எனக்கு ஏதாவது ஆகியிருந்தா நீங்களாம் என்ன பண்ணியிருப்பீங்க?”
“தேவ் அண்ணா என்ன சொன்னீங்க.. அவங்களுக்கு இது பழக்கமா? ரூபி அண்ணி அந்த சூழ்நிலைல சிக்கியிருந்தாலும் நீங்க இப்படித்தான் சொல்லியிருப்பீங்களா?”
“மித்து அண்ணா.. அண்ணி மேல நம்பிக்கை இல்லாம தான் இன்னைக்கு பாடிகார்டை எங்க கூட அனுப்புனீங்களா?” வைஷாலி கண்ணீரோடு கேட்டிட, அவன் தலைகுனிந்து நின்றான்.
“அப்போ உண்மைதானா? நான் உங்க கிட்ட இதை எதிர்பார்க்கல. ஹாஸ்பிடல்ல இருந்து வந்த பிறகு அண்ணி இதை யார்கிட்டயும் சொல்ல வேணாம்னு சத்தியம் வாங்குனாங்க. அவங்க நல்ல மனசை நீங்க கூட புரிஞ்சுக்கல தான”
“ச்சே.. இந்த சக்கரவர்த்தி குடும்பத்துல ஏன் பிறந்தேன்னு இப்போ வருத்தப்படுறேன். பரவாயில்ல சூர்யா அண்ணா, பாட்டிமா.. யார் என்ன பேசினாலும் வேடிக்கை பாருங்க. ஒரு பொண்ணை நடு ஹால்ல நிக்க வச்சு அம்மா கேள்வி கேட்கிறாங்க. மனசாட்சி இருந்தா, ‘ஏன் இப்படி பேசுறீங்க?’ அப்படின்னு நீங்களாவது ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல, ஏன்னா அவங்க இந்த குடும்பத்து பொண்ணு இல்லையே. யாரோ வீட்டுப் பொண்ணு தானே”
“சாரி அண்ணி.. எல்லாமே என்னால தான். அன்னைக்கு அஜாக்கிரதையா இருந்துட்டேன். இப்படி கெட்ட எண்ணங்களோட இருக்கிறவங்க கூட, ஒண்ணா இருக்கிறதுக்கு எனக்கு இஷ்டமே இல்ல. நான் ஹாஸ்டலுக்குப் போறேன். அங்கிருந்து வரவே மாட்டேன். வீட்ல மாப்பிள்ளையைப் பார்த்து சொன்னாங்கன்னா அங்கிருந்து அப்படியே கல்யாணம் பண்ணிட்டுப் போயிடுவேன்.
“நீங்களும் என்கூட ஹாஸ்டலுக்கு வந்திடுங்க. இல்லனா உங்களோட காதல் கணவர் அவங்க அம்மா, தம்பி, தம்பி ஒய்ஃப் எல்லாரையும் பேச விட்டு வேடிக்கைப் பார்ப்பார்” கோபத்தில் தொடங்கி ஆதங்கமாகப் பேசி, கண்ணீரோடு பேச்சை முடித்தாள் அந்த வளர்ந்த குழந்தை வைஷாலி.
எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருக்க, “அழாதடா வைஷு.. அவங்களுக்கு உண்மை தெரியாம தான பேசினாங்க. வா நாம ரூமுக்குப் போகலாம்” என்ற நதியா வைஷாலியை மேலே அழைத்துச் சென்றாள்.
“எனக்கு மனசு சரியில்ல. கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் போல தோணுது. நீ எதையும் நினைக்காம போய் அமைதியா தூங்கு” என்று நதியா சொல்லி அனுப்பிட, வைஷாலி அவளது அறைக்குச் சென்றாள்.
நதியா உடையைக் கூட மாற்றத் தோன்றாமல் மெத்தையில் குத்துக்காலிட்டு அமர்ந்து, கால்களுக்குள் முகம் புதைத்து அழத் தொடங்கினாள். தன்னுடைய வலியை உணராதவர்கள் முன்பு அழுவதும் வீண் தானே. யார் முன்பும் அழாதவள் தனியே வந்து தன் மனக்குமுறலை கண்ணீராகக் கொட்டினாள்.
மிதுன் அறைக்குள் வந்ததும் உடை மாற்றச் சென்றான். அவன் வெளியே வந்ததும் நதியா குளித்து உடையை மாற்றினாள். மிதுனுக்கு அருகில் சென்றவள், “சார்.. இப்போ உங்களுக்கு என்மேல இருந்த சந்தேகம் போயிடுச்சே. அதனால இன்னைக்கு..” என்று எச்சில் விழுங்கினாள்.
“சாரி நதியா..” குழைவான குரலில் அவன் சொல்லிட, “சார்.. நீங்க என் மேல சந்தேகப்படுறது தப்பே இல்ல. நான் இங்க பணத்துக்காகத் தான வந்தேன். நீங்க ஒண்ணும் ஃபீல் பண்ணாதீங்க” அவள் வலிகளை மறைத்து, அவனுடைய குற்ற உணர்ச்சியைப் போக்கிட நினைத்தாள்.
“சார்.. ரெடி ஆகட்டுமா?” அவளுக்கு இருக்கும் மனநிலையில் வேண்டாம் எனத் தோன்றினாலும், அவனுக்காகக் கேட்டாள். “இல்ல.. வேணாம். நீ ரெஸ்ட் எடு” அவன் தந்த பதிலில் நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், “நான் கொஞ்ச நேரம் பால்கனிக்குப் போகட்டுமா? ஐ நீட் டூ பீ அலோன்” கொஞ்சம் தயக்கத்துடனே கேட்டாள்.
அவள் முகத்தைப் பார்த்தவாறே யோசனையில் இருந்தவன், சரியென்பது போல் தலையசைக்க வேகமாக அங்கிருந்து வெளியேறினாள். பால்கனியிலிருந்த சோபாவில் அமர்ந்தவள், மிச்சமிருந்த கண்ணீரையும் சத்தமின்றி அழுது தீர்த்தாள். முழு இருளில் மின்மினி பூச்சிகளின் ஒளியில், வீசுகின்ற குளிர் காற்றில் பூக்களின் வாசமும் ஒருசேர, அவள் மனதை இதமாக்கிக் கொண்டிருந்தன.
அப்பா அம்மாவுடன் வாழ்ந்த வாழ்க்கையும், அந்த சந்தோஷமான நாட்களும் அவளுடைய நினைவுகளில் நிழலாக மாறிடாமல் இருக்க, அதைப் பற்றிக் கொண்டாள். ‘எல்லா வலிகளும் என் அம்மாவுக்காக மட்டும் தான். என் அம்மாவைப் பழைய மாதிரி பார்ப்பதற்காகத் தான்’ தன்னுடைய மனதை சமாதானப்படுத்திக் கொண்டவள், அப்படியே சோபாவில் படுத்து உறங்கினாள்.
நீண்ட நேரமாகியும் அவள் அறைக்குள் வராததால், மிதுன் பால்கனிக்குச் சென்று பார்த்தவன், அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தவளை அப்படியே தூக்கிச் சென்று மெத்தையில் படுக்க வைத்து, அவள் கழுத்து வரை பெட்ஷீட் போர்த்தி விட்டான்.
அவனுக்கு குற்ற உணர்ச்சியில் தூக்கம் வரவில்லை. பணத்திற்காக எந்த கொலைப் பாதகமும் செய்பவர்களைத் தான் இத்தனை வருடங்களாகப் பார்த்திருக்கிறான். விஷ்ணுவும், நதியாவும் இப்படியெல்லாம் செய்ததற்கு மற்றவர்கள் விசுவாசம் எனப் பெயர் வைக்கலாம். ஆனால் அவர்கள், அவன் மீது கொண்ட அளப்பரிய அன்பு மட்டுமே இதற்கான காரணம் என்பதை மிதுன் அறிவான்.
இவ்வளவு நடந்ததற்குப் பிறகு உண்மையில் மனம் வருந்தியவர்கள் சூர்யாவும், ருக்மணியும் தான். ராதாவுக்கு இது பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.
அவருக்கு தன்னுடைய மகன், தம்பியின் மகளைத் திருமணம் செய்து கொள்ளாமல், தன்னை மீறி வேறொருவளைத் திருமணம் செய்துகொண்டான் என்ற ஈகோவே பெரிதாகத் தெரிகிறது.
‘அண்ணியை மரியாதைக் குறைவாகப் பேசி விட்டோமோ?’ என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தான் தேவ். “உண்மையை சொல்லியிருந்தா நீங்க ஏன் தப்பா நினைக்கப் போறீங்க?” அவன் செய்ததை சரியென்று ஏற்க வைத்தாள் அவனுடைய காதல் மனைவி ரூபிணி.
மறுநாள் காலை தூக்கத்திலிருந்து விழித்த நதியா, ‘நான் சோபால தான தூங்கினேன். இங்க வந்து எப்போ படுத்தேன்?’ என யோசித்தவாறு எழுந்து குளிக்கச் சென்றாள். அவள் குளித்து முடித்து வெளியே டிரெஸ்ஸிங் ரூமிற்குள் வர, அங்கே நின்றிருந்த மிதுன் கப்போர்டில் ஏதோ தேடிக் கொண்டிருந்தான்.
மெதுவாகத் திரும்பியவன், பாத்ரோப் மட்டும் அணிந்திருந்தவளைப் பார்த்திட, வேகமாக மீண்டும் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். சிரித்தவாறு அங்கிருந்து வெளியே சென்றவன், அவள் அறைக்குள் வந்ததும், “நீ குளிக்கப் போனா டிரெஸ்ஸிங் ரூமையும் லாக் பண்ணிக்கோ” எங்கே தான் செய்ததைத் தவறாக நினைத்து விடுவாளோ என்று சொன்னான்.
நதியாவும் வைஷாலியும் நடந்த பிரச்சனைகளை மறந்து ஒன்று சேர்ந்து, கொரியன் டிராமாக்களில் மூழ்கினர். தங்கள் கவலைகளை மறந்து அதில் வரும் செகண்ட் ஹீரோக்கள், ஹீரோயின்களுக்காக கண்ணீர் சிந்தினர். இப்படியே சில நாட்கள் கழிய..
அந்த வார இறுதியில் நண்பர்களோடு பிக்னிக் பிளான் செய்தான் மிதுன். விஷ்ணு, நதியா இருவருக்கும் நன்றி சொல்லும் விதமாக அவர்களையும் அழைத்துக் கொண்டு தீம் பார்க் கிளம்பினான்.
விஷ்ணு நதியாவிற்கு போன் செய்து, “எதுக்கு தேவையில்லாம அன்னைக்கு நடந்ததை சொன்னீங்க” கொஞ்சம் கடுப்பான குரலில்தான் கேட்டான்.
“உனக்கென்னப்பா நீ பேசுவ. இங்க திட்டு வாங்கினது நான் தான”
“மிதுன் சார் உன்னை சந்தோஷப்படுத்தத் தான் தீம் பார்க் கூப்பிட்டுப் போறாராம்”
“ஏது, அந்த ரோபோ கூட சேர்ந்து போய் நாம சந்தோஷமா இருக்கிறதா? ஆமா தங்கச்சியை நினைச்சு ரோபோ ஓவரா ஃபீல் பண்ணினாரோ?”
“அவர் என்கிட்ட எதுவும் கேட்கவும் இல்ல, நான் சொல்லவும் இல்ல. தேங்க்ஸ்னு சொன்னார், எதுக்குன்னு கேட்டதுக்கு வைஷாலியை அன்னைக்கு காப்பாத்துனதுக்குனு சொன்னார். சரிதான் விஷயம் தெரிஞ்சுருச்சு போல அப்படின்னு புரிஞ்சுகிட்டேன்”
“உன் கிரெய்ன் ரொம்ப வேலை பார்க்குது. உன்கிட்ட ரொம்ப நாளா ஒண்ணு கேட்கணும்னு நினைச்சுட்டே இருந்தேன் விச்சு”
“கேளும்.. கேட்டுத் தொலையும்..”
“நீ மிதுன் சார் கூட தான இருக்க. வைஷாலிக்கு பிரச்சனைன்னு உனக்கு எப்படி முன்னாடியே தெரியும்?”
“நல்ல கேள்வி”
“சமாளிக்காம பதில் சொல்லு பிரதர்”
“ஹலோ எனக்கு உளவுத்துறைல இருந்து ரிப்போர்ட் வந்தது. எப்படியோ வைஷாலி சேஃப் தான. அப்புறம் என்ன?”
“மவனே எனக்கு ரொம்ப நாளா உன் மேல ஒரு டவுட் இருக்கு. அது மட்டும் கன்பார்ம் ஆகட்டும். அப்புறம் இருக்கு உனக்கு”
“தங்கச்சி நீ என்னோட விஷயத்தை கிளறுனா நான் உன்னோட விஷயத்தை கிளற வேண்டியதா இருக்கும்”
இதையெல்லாம் அவர்களுடைய மிதுன் சார், அவனுடைய போனில் கேட்டுக் கொண்டிருந்தான். நதியா மிதுன் வீட்டிற்குச் சென்ற நாளிலிருந்து அவளுக்கு தோழன், சகோதரன் எல்லாமே விஷ்ணு தான். போன், வாட்ஸ்அப் சாட்டிங் என இருவருக்குள்ளும் இந்த குறுகிய காலத்தில் நீண்ட நாள் பழகின மாதிரியான நட்பு இருந்தது. ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இன்று இருவரும் பேசியதைக் கேட்டு மிதுனே ஆச்சரியப்பட்டான்.
மிதுனும் நதியாவும் மறுநாள் கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து, குளித்துக் கிளம்பியவர்கள், அரவிந்த், ரேஷ்மி, சத்யா, விஷ்ணு இவர்களுடன் வைஷாலியையும் தீம் பார்க்கிற்கு அழைத்துச் சென்றனர்.
தீம் பார்க்கில் அங்கு விளையாடுவதற்காகத் தரப்படும் உடையை வாங்கி அணிந்தபின், பெண்கள் ஒரு அணி, ஆண்கள் ஒரு அணி எனப் பிரிந்து அங்கிருந்த ரைடுகளில் ஏறியவர்கள், வயதை மறந்து சிறு குழந்தைகளாக மாறிப் போயினர்.
நேரமாக ஆக, கொஞ்சம் கூட்டம் அதிகமானதால் பெண்களின் பாதுகாப்புக் கருதி, விஷ்ணு மெல்ல நகர்ந்து பெண்கள் அணியுடன் சேர்ந்துக்கொண்டான். அவர்களுடன் பேசியவாறு அடுத்தடுத்த ரைடுகளுக்குச் சென்றான்.
“இந்த விச்சுவ பார்த்தியா நம்ம கூட இருந்துக்கிட்டே அவங்களோட போய் சேர்ந்துகிட்டான்” அரவிந்த் சொன்னதும், விளையாட்டில் இருந்த மிதுன், அப்போதுதான் அவர்களைத் திரும்பிப் பார்த்தான். விஷ்ணு அவர்களுக்கு பாதுகாப்பாய் செல்வதையும் கவனித்தான். நண்பர்கள் மூவரும் அவர்களோடு இணைந்து கொண்டனர்.
ரேஷ்மிக்கு அருகில் சென்றதும், அவள் கையைப் பிடித்துக் கொண்டு, அவளுடன் சேர்ந்து கொண்டான் அரவிந்த். “பார்த்தியா டா இவனை. பொண்டாட்டி பக்கத்துல போனதும் நம்மள மறந்துட்டான்” சத்யா கிண்டலாகப் பேசிக் கொண்டிருக்க, மிதுனோ நதியாவை ஏதோ யோசனையோடு பார்த்தவாறு இருக்க, அவன் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டான்.
நட்பென்றாலும் நதியாவுடன் விஷ்ணு நெருக்கமாகப் பழகுவது, அவள் மீது அக்கறை எடுத்துக் கொள்வது மிதுனுக்கு எரிச்சலைத் தந்தது. இங்கு வைஷாலிக்கும் அதே நிலை தான். ‘எங்க நதியா அண்ணி கூட ஜாலியா இருக்கலாம்னு பார்த்தா, இந்த விச்சு லூசு வேற கூடவே ஒட்டிக்கிச்சு’ பொறாமையில் பொங்கினாள் சின்னப் பெண்.
அதன்பிறகு மிதுன் நதியாவிற்கு அருகிலேயே இருந்தான். அவள் முன்னால் நடக்க அவளுக்குப் பின்னே நடந்தவன், ஒரு இடத்தில் கால் வழுக்கி விழுந்திடப் போனவளை வேகமாக கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான். “ஒழுங்கா பார்த்து நடக்க மாட்டியா?” மிதுன் எரிச்சலோடு பற்களைக் கடிக்க, “நதியாவை எதுக்கு இப்போ திட்டுற? சும்மா கோபப்படாத மித்து” நண்பர்கள் அவனைக் கண்டித்தனர்.
அந்த நிகழ்வைப் பற்றித் தெரிந்த பிறகு மிதுனின் நண்பர்களுக்கு நதியாவின் மீது மதிப்பும் மரியாதையும் கூடியிருந்தது. அடுத்து ஒரு பிரைவேட் ஸ்விம்மிங் பூல் போன்ற இடத்திற்குச் சென்றனர். நதியா அதன் கரையில் நடந்து வர, எதிரில் மிதுன் வந்தான்.
நதியா இடப்பக்கம் விலகி நிற்க, அவனும் இடப்பக்கம் நகர்ந்தான். அவள் வலப்பக்கம் நிற்க, அவனும் அதே பக்கம் நகர்ந்தான். இருவரும் இப்படியே மாறி மாறி நகராமல் அங்கேயே நிற்க, மிதுன் கடுப்புடன் அவளை அந்த நீரில் தள்ளிவிட்டுச் சிரித்தான்.
அவன் தள்ளி விடுவான் என்பதை எதிர்பாராதவள், மூச்சுவிடத் திணறியபடி, நிறைய தண்ணீர் குடித்து நீருக்குள் மூழ்கிட, மிதுனும் வேகமாக நீரில் குதித்து, அவளைத் தூக்கி வந்தவன், மயங்கியிருந்தவளைக் கரையில் மெல்லக் கிடத்தினான்.
பதற்றமாக நதியாவிற்கு அருகில் வந்த விஷ்ணுவை, மிதுன் தனது ஒற்றைப் பார்வையாலேயே தள்ளி நிறுத்தினான். அவளை ஒருபுறமாகச் சாய்த்துப் படுக்க வைத்தவன், அவளது வயிற்றில் மெதுவாக அழுத்தித் தண்ணீரை வெளியேற்றிட, அப்போதும் அவள் மயக்கத்தில் தான் இருந்தாள்.
❤️🔥 மோகம் தீர்ப்பாள் ❤️🔥
